உலக மொழிகளிலேயே தமிழில்தான் பக்தி இலக்கியம் மிகுதியாக இருக்கிறது. ஏறத்தாழத் தமிழ் இலக்கியப் பரப்பில் பாதியளவுக்கும் மேல் பக்தி இலக்கியம்தான். பரிபாடலில் காணும் முருகன், திரு மால் பற்றிய வழிபாட்டுப் பாக்களில் தொடங்கி, காரைக்காலம்மையார் வழியாக, நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஊடே பயணம் செய்து கடைசியாக தாயுமானவர், மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரையிலும் வந்து நிற்கிறோம். அதற்குப் பின்னும் தொடர்ந்து எழுதிவருபவர்கள் உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் புராணங்கள் என்று ஆகிவிடுகின்றன.
இதைப் பெருமையாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள், சிறுமையாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரெஞ்சு காதலின் மொழி என்றால், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால்…. என்று நீட்டிக்கொண்டே போய், தமிழ் பக்தியின் மொழி என்று முடிப்பவர்கள் உண்டு.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இதனை எப்படி எதிர் கொள்வது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் பக்தி இலக்கியம் என்ற ஒன்று இல்லவே இல்லை யாதலின் அவர்கள் இதனை இலக்கியம் என்ற வட்டத்திற்குள் சேர்க்காமலே விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழின் பக்திமணத்தில் அமிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு. உதாரணமாக, திருவாசகத்தை மொழிபெயர்த்த ஜி. யூ. போப், அதற்கு இணையான உருக்கமான இலக்கியம் உலகில் இல்லை என்று பாராட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க, நாம் பாடப்புத்தக கர்த்தாக்களுக்கு பக்தி இலக்கியம் ஒரு தலைவலி. அவர்களுக்கு சைவ இலக்கியத்தில் ஒரு பக்திப் பாடலைப் பாடமாக வைத்தால், வைணவ இலக்கியத்தில் ஒன்று வைக்க வேண்டும்; பிறகு முஸ்லிம் இலக்கியம், கிறித்துவ இலக்கியம் என்று அவ்வவற்றில் ஒவ்வொரு பாடலையாவது பாடமாக வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தம்மை மதச்சார்புள்ளவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம். அதனால் தேவையோ இல்லையோ, மாணவர்கள் ஆண்டாண்டுதோறும் தேவாரத்தில் அல்லது திருவாசகத்தில் சில, ஆழ்வார் பாடலில் சில, சீறாப்புராணத்தில் சில, இரட்சணிய யாத்திரிகத்தில் சில என்று படித்தாக வேண்டும். நல்லவேளையாக சமண பௌத்த இலக்கியங்களுக்கு யாரும் பிரதிநிதித்துவம் கேட்டு வரவில்லை போலும்!
எவ்விதமாயினும், வாழ்க்கைக்காக, வாழ்க்கைக்குள்தான் சமயம், மதம் எல்லாம் இருக்கின்றன. மதத்திற்காக, மதத்திற்குள் வாழ்க்கை இல்லை. எனவே வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லும் அனுபவங்களைக் கொண்ட இலக்கியம் என்றுதான் பக்தி இலக்கியத்தைப் பயில வேண்டும். பக்திக்காக அன்றி இலக்கியமாகப் பயில வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். எத்தனையோ முஸ்லிம்களும் கிறித்துவர்களும் கம்பராமாயணத்தை இலக்கியமாகப் பயிலவில்லையா? எத்தனையோ சைவர்கள் சீறாப்புராணத்தை இலக்கியச் சிறப்பு கருதிப் படிக்க வில்லையா? அதுபோல மதத்தை ஒதுக்கிவிட்டு, இலக்கியமாக நோக்கும் பார்வை வேண்டும்.
பிற இலக்கியங்களைப் பண்பாட்டிற்கெனவும் வரலாற்றுச் சான்றுகளுக்கெனவும் படிப்பதுபோல, பக்தி இலக்கியங்களையும் படிக்கமுடியும். பக்தி இலக்கியத்திலும் அரசு ஆதிக்கமும் வர்க்கப் போராட்டமும் இயங்குவதைக் காணவே முடிகிறது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகள் பக்தியைப் பயன்படுத்துவதால்தான் மக்கள் பிளவுபடுகிறார்கள், மோதுகிறார்கள், சமயச் சண்டைகளில் ஈடுபடுகிறார்கள். எங்குமே வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ ஆதிக்கத்திற்கு மதத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. மதத்திற்கு ஆதிக் கத்தின் பலமும் பணமும் தேவைப்படுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள் சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத் திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?
பக்தி இலக்கியங்களில் இந்த மாதிரி அற்புதச் செயல்கள் இடம் பெறுவது ஒரு பெரிய பிரச்சினைதான். பாடம் நடத்தும் ஆசிரியர் பக்திமானாக இருந்தால் அவை அப்படியே நடந்தன என்று சொல்வார். அதிலும் மதவேறுபாடு உண்டு. கடவுள் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தால் இம்மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்பார். இவை காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் என மோதல்கள் ஏற்படுவதும் உண்டு.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பக்திப்பாக்களில் காணும் அற்புதச் செயல்களை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? கவிதை உள்ளத் தோடு உலகத்தை நோக்குபவனுக்கு ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் அற்புதம்தான். நயாகரா நீர்வீழ்ச்சியும் ஆல்ப்ஸ் மலையும் தான் அற்புதங்கள் என்றில்லை, வானில் காணும் மாறிச் செல்லும் மேகங்களின் பல்வேறு வடிவங்களும், புல்லின் சிரிப்பும், பூவின் தலையாட்டலும் அற்புதங்கள்தான். ஆனால், நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பிற பக்திமான்களுக்கும் பற்பல அற்புதச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இட்டார்களாம், அவர் அதில் உயிர்பிழைத்து வந்தாராம். கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டார்களாம், அதிலும் அவர் உயிர்பிழைத்தாராம். இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா? நடந்தன என்பார்கள் சிலர். நடந்திருக்காது, கட்டுக்கதை என்பார்கள் சிலர்.
நீற்றறையில் இட்டபோது நாவுக்கரசர் பாடிய பாடல் எது?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்பதை எடுத்துக்காட்டுவார்கள். இதில் இறைவனின் இணையடி நிழல் வீணையின் கானம் போலவும் முழுநிலவு போலவும் தென்றல்போலவும் இளவேனிற் காலம் போலவும் பொய்கை போலவும் இனிமையானது என்றிருக்கிறதே தவிர, வேறு என்ன இருக்கிறது? இதே போலத்தான், அவரைக் கடலில் இட்டபோது
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான் துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன் அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? பூம்பாவை இறந்தபோது ஞானசம்பந்தரும் இவ்வுலக இன்பங்களையெல்லாம் இழந்து போகின்றாயே பூம்பாவாய் என்று பாடும் குரல் கேட்கிறதே தவிர, எலும்பைச் சாம்பலைப் பெண்ணாக்கினார் என்று எங்கிருக்கிறது?
கண்ணனைத் தன் காதலனாக, மணாளனாக வரித்த ஆண்டாளும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ என்றெல்லாம் பாடுவது கற்பனை தானே தவிர, இது உண்மையில் அனுபவித்தது என்று சொல்ல முடியுமா?
நல்ல பக்திமான்களின் பாக்கள் யாவும் இம்மாதிரி இறைவன் தரும் இன்பத்தைப் பாடுபவையே தவிர, அவற்றில் அற்புதச் செயல்கள் செய்த குறிப்பிருப்பதாகக் கொண்டது நமது தவறான பார்வை என்றே கருதுகிறேன். ஆனால் சிவபெருமானோ திருமாலோ செய்ததாகப் பல அற்புதச் செயல்கள் இப்பாக்களில் இடம் பெறுகின்றன. இறைவன் எதனையும் செய்ய வல்லவன் என்பதை உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். மாணிக்கவாசகரும் ஓரிடத்தில் இறைவன் கருதினால் நரியைப் பரியாக்க முடியும், பரியை நரியாக்க முடியும் என்று பாடுகிறாரே அன்றி, தம் வாழ்க்கையில் அவ்விதம் இறைவன் நடத்தியதாகக் குறிப்பினைத் தரவில்லை.
இன்னும் கேட்டால், திருமாலின் அவதாரங்களில், கண்ணன் அவதாரத்தில் எத்தனையோ துராக்ருதங்களையும் கூடக் காண்கிறோம். இறைவனின் நோக்கில் நன்மை-தீமை என்பவைகூடச் சார்புள்ளவை தான் என்று உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். ஆகவே இறைவனின் அருளாற்றலை மேம்படுத்திச் சொல்வதற்காகப் புனைந்த கதைகள் என்று இவற்றைக் கொள்ளவேண்டும்.
மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள் தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில் தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர் பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. உண்மையில் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஏற்பட்ட உத்திமுறைகள் என்றே கருதவேண்டும். எவ்வளவு தூரம் இதில் அவை வெற்றி பெற்றிருக்கின்றன என்பதுதான் நாம் நோக்க வேண்டியது.
அற்புதச் செயல்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாற்றில் தான் என்றில்லை. நாம் இன்று நடைமுறையிலும் அவற்றை நம்பவே செய்கிறோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தமது கடையில் முதலில் சிவபெருமான் உருவப்படத்தை மாட்டிவைத்திருந்தார். பிறகு சிலகாலம் கழித்து அதை நீக்கிவிட்டுத் திரு வேங்கடப் பெருமாளின் படத்தை மாட்டினார். “என்னய்யா இது, ஏன் இந்த மாற்றம்? நீர் சைவர்தானே?” என்று அவரைக் கேட்டேன். அவர் சொன்னார்: “சிவபெருமான் படத்தை மாட்டியிருந்தபோது எனக்கு இலாபம் வரவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார்-‘சிவபெருமான் ஆண்டி, பிச்சையெடுப்பவன். அவன் படத்தை மாட்டினால் நீயும் அப்படித்தான் ஆகவேண்டும். சீனிவாசப் பெருமாள்-ஏழுமலையான்தான் உலகத்திலேயே பணக்காரக் கடவுள். அவர் படத்தை மாட்டினால் நீயும் பணக்காரனாகி விடுவாய், இலாபம் வந்து கொட்டும்’ என்றார். அதனால் நான் படத்தை மாற்றிவிட்டேன்” என்றார். அவருக்குப் பணம் வந்து கொட்டியதோ இல்லையோ தெரியாது, இன்றும் அற்புதச் செயல்களை நம்புபவர்கள்-தங்களுக்கேற்ற கதைகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.
பக்தி இலக்கியத்தை அதில் உள்ள அற்புதச் செயல்களுக்காக, கதைகளுக்காகப் படிக்காமல், அது தரும் வாழ்க்கை மதிப்புகளுக்காகப் படித்தால் நம் வாழ்க்கை எவ்வளவோ பயன் பெறும்.