நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 9

Vaalum-parichayum

கேள்வி: பழைய பாட்டு ஒன்று-சித்திரமும் கைப்பழக்கம் என்று வருகிறது. அதில் பழக்கம், பிறவிகுணம் என்று சொல்லப்படுகிறது. அதன் பொருள் என்ன?
நீங்கள் குறிப்பிட்டது அவ்வையார் எழுதிய தனிப்பாட்டு.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என்பது அந்தப்பாட்டு. இது வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்கின்ற கலைகள், தொழில்கள், நடத்தைகள் போன்றவற்றையும், பிறவியிலேயே வருகின்ற (இப்போதெல்லாம் உயிர்வேதியியலில் பாரம்பரியம், மரபணுக்களால் ஏற்படுகிறது என்கிறார்களே அதுபோல) குணங்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சித்திரம் பழகுவதால் வருவது; செந்தமிழ், நல்ல தமிழைப் பேசப்பேச வருவது; கல்வி மனப்பழக்கத்தினால் வருவது; நடை (அவரவருடைய பாணி-ஸ்டைல் என்று சொல்கி றோமே, அது)யும் கூடப் பழக்கத்தினால் வருவதுதான்; ஆனால் நட்பு, தயை (கருணை அல்லது பரிவு காட்டுகின்ற பண்பு), கொடை (பிறருக்குக் கொடுக்கின்ற குணம்) ஆகிய குணங்களெல்லாம் பாரம்பரியத்தினால் வருகின்றவை என்று இந்தப் பாட்டு சொல்கிறது.

பொதுமைப்படுத்திச் சொன்னால், பண்புகள் மரபினால் வருகின்றவை, கலைகள், தொழில்கள் போன்றவை எல்லாம் பழக்கத்தினால் வருகின்றவை என்பது அவ்வை யாரின் கருத்து. இன்றைக்கு நாம் நினைவில் இருத்தவேண்டிய மிகச் சிறந்த கருத்து இது.

காரணம், கலைஞர்கள் கருவிலே திருவுடையவர்கள், பிறவியிலேயே வருவதுதான் கலை, எல்லோருக்கும் அது வந்துவிடாது என்றெல்லாம் இன்று கதைகட்டுகிறார்கள். குறிப்பாக, சில ஜாதியிலே பிறந்தவர்களுக்குத்தான் சில கலைகள் வரும், மற்றவர்க ளுக்கு வராது என்று தங்களை உயர்த்திக்கொள்ளவும், பிறரைத் தாழ்த்தவும் இம்மாதி ரிக் கூற்றுகளைப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு என்கிறார் அவ்வையார். எல்லாக் கலைகளையும் எவரும் பழக முடியும் என்பது அவர் கருத்து. விளையாட்டுகளும் அப்படித்தான். உதாரணமாக செஸ் விளையாட்டு என்பது சிலருக்குத்தான் வரும், புத்திக்கூர்மை உடையவர்கள் சில குறிப்பிட்டவர்கள்தான் என்று பேசுகிறார் கள். அதுவும்கூட பழக்கம்தான்;

பண்புதான் பிறவியில் வருவது என்பது அவ்வை கருத்து. குறிப்பாக இது சாதிமுறைக்கு எதிரான ஒரு பாட்டு.
ஆனால், இன்று நாம் சில பண்புகள்கூட, பழக்கத்தினால் வருவது என்று நிரூ பிக்கமுடியும். உதாரணமாக திருடுதல் என்பது ஒரு பண்பா, தொழிலா? அது பண்பு, பிறவியினால் வருவது என்று கருதித்தான் முன்பு ஆங்கிலேயர்கள் ஒரு தனித்த பிரி வையே உருவாக்கினார்கள். அது பழக்கத்தினால் வருவது என்பதால்தான் இன்று சீர்திருத்தப்பள்ளி வைத்தோ, உளவியல் மருத்துவரிடம் அனுப்பியோ அதைக் களைய முற்படுகிறோம்.
தமிழ்நாட்டில் பல அவ்வையார்கள் இருந்திருக்கிறார்கள். இன்று சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி என்பதுபோல அன்றைக்கு அவ்வை என்பதும் புழக்கத்திலிருந்த ஒரு சிறப்புப் பெயர் (ப்ராபர் நௌன்). இந்தத் தனிப்பாட்டை எழுதிய அவ்வையார் பிற்காலத்தியவர். இவர் சங்க காலத்து அவ்வையார் அல்ல.

கேள்வி: செவ்வியல் என்ற சொல்லை (உதாரணமாக செவ்வியல் தமிழ்) அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதற்கு என்ன அர்த்தம்? 
செவ்வியல் என்ற சொல் இரண்டு தனித்த அர்த்தங்களில் கையாளப்படுகிறது.
ஒன்று, காலத்தினால் பழமையானது, முற்பட்டது என்பது. இதை ஆங்கிலத்தில் கிளாசிகல் என்ற சொல்லால் குறிப்பார்கள். தமிழ் ஒரு கிளாசிகல் (செவ்வியல்) மொழி, செம்மொழி. காலப்பழமைதான் இங்கு முக்கியம் என்றாலும், தனித்து இயங்கு கின்ற தன்மை, இலக்கிய-இலக்கண வளத்தைப் பெற்றிருக்கின்ற தன்மை, சிறந்த பண்பாட்டைப் பெற்றிருக்கின்ற தன்மை ஆகியவையும் இந்தப் பொருளில் அடக்கம்.

முன்பெல்லாம் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளை மட்டுமே செவ்வியல் மொழிகள் என்றார்கள். பிறகு இதில் அராபிய மொழியும் சேர்ந்தது. இவற்றில் சேர்த்துச் சொல்லப்படாவிட்டாலும் இவற்றுக்கு இணையான வளம்கொண்ட செம்மொழி தமிழ்.

செவ்வியல் என்ற சொல்லின் அடிச்சொல், செம்மை (சிறப்பானது). எனவே செவ்- என்ற அடைமொழி சிறப்பான எந்தப் பொருளுக்கும்/தன்மைக்கும் பொருந்தும். அதனால்தான் தமிழில் கடவுளைக்கூட செவ் + வேள் ‘செவ்வேள்’ என்றார்கள். பழங் கால நூல்களே அன்றி, சிறந்த நூல்கள் எல்லாம் ‘கிளாசிக்’(ஸ்)-செவ்வியல் நூல்கள் எனப்படுகின்றன. ஆங்கிலம் தமிழைப்போல அவ்வளவு பழமை உடையது அல்ல என்றாலும், இன்றும் எழுதப்படுகின்ற சிறந்த நூல்கள் எல்லாம் செவ்வியல் நூல்கள் என்றே கருதப்படுகின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மட்டும் கிளாசிக்ஸ் அல்ல, ஜாய்ஸ் எழுதிய டப்ளினர்ஸ் கதைகளும் கிளாசிக்ஸ்தான்.

தமிழுக்குச் செம்மொழித்தன்மை பெற்ற முறைதான் வருந்தத்தக்கது. இதில் நம் அரசி யல்வாதிகளும் அறிஞர்களும் கோட்டை விட்டுவிட்டார்கள். தமிழ் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடைய மொழி என்பது (வெறும்) அந்தஸ்து அளிப்பதைவிட முக்கியமானது. ஆனால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தபோது அது ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த மொழி என்று கூறியே இந்திய அரசாங்கம் அளித்தி ருக்கிறது. இது மிகவும் கேவலமானது என்பதோடு, தமிழை சமஸ்கிருதத்திற்கு பிற்படுத்தியும், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளையும் தமிழோடு காலத்தினால் ஒப்பவைத்து நோக்குவதாகவுமே அமைகிறது.

கேள்வி பதில்