கேள்வி : அந்தக் காலத்தில் பொதுமக்கள், புலவர், அரசர் எல்லாம் ஒரே தமிழில்தான் பேசினார்களா? அருண்குமார் – நாமக்கல்
பதில்:சாத்தியமே இல்லை. எந்தக் காலத்திலும் பொதுமக்களின் பேச்சுமொழி வேறு, புலவர்களின் செம்மையான இலக்கிய மொழி வேறு. அரசர்கள் புலவர்களிடம் உரையாடும்போது செந்தமிழில்தான் பேசவேண்டும். மக்களிடம் குறைகேட்கும் போது அவர்கள் மொழியிலேயே பேசியாக வேண்டும்.
சமஸ்கிருதத்தில் மிருச்சகடிகம் (மண்ணால் செய்யப்பட்ட சிறிய தேர்) என்ற நாடகம் இருக்கிறது. அதில் புலவர்கள், அரசர்கள், உயர்குலத்தோர் பேசும் வசனங்களில் மட்டும் சமஸ்கிருதமும், பொதுமக்கள் பேசும் வசனங்களில் பிராகி ருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதான் இயல்பான நிலை.
பொதுமக்களின் மொழிதான் உண்மையான மொழி. இயக்கமுள்ள மொழி. மாறு கின்ற மொழி. புலவர்களின் மொழி செம்மொழியாக இருந்தாலும், அது காலத்தில் உறைந்துபோய்விட்ட மொழி. அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது. புலவர்கள்கூட வீட்டில் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் செம் மொழியிலா பேசமுடியும்? அப்போது இயல்பான பேச்சுத் தமிழைத்தான் பயன் படுத்தியிருப்பார்கள்.
கேள்வி :தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சமணத்தைத் தழுவி உள்ளதே? நாகராஜன் – சென்னை
பதில்: அப்படியில்லை. தமிழில் மிகுதியான நூல்களுக்குரிய பெருமை சைவத்திற்குத் தான் உண்டு. அடுத்த நிலையில்தான் சமணம் வரும். மூன்றாம் நிலையில் வைணவமும், நான்காவதாக பௌத்தமும் வரும். அண்மைக்காலத்தில் கிறித்துவ நூல்கள் மிகுதியாக இயற்றப்பட்டுள்ளன. எனவே இப்போது மூன்றாம் நிலையில் கிறித்துவ நூல்களே இருந்தாலும் இருக்கலாம். ஏனோ தெரியவில்லை, முஸ்லிம்கள்தான் இதில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படி நோக்கும்போது இதில் அண்மைக்கால இலக்கியத்தைச் சேர்க்கக்கூடாது. ஏனென் றால் அண்மைக்கால-நவீன இலக்கியத்தின் தன்மை சமயம் சார்ந்தது அல்ல.
சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது, வடநாட்டிலிருந்து வந்த வைதிகக் கருத்துகளும், சமணசமயமும் ஒரே சமயத்தில் தமிழ்நாட்டில் பரவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சமணப்புலவர்கள் பலர்- உலோச்சனார் போன்றவர்கள் சங்க இலக்கியத்தில் கவிதை படைத்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில்
-சங்க காலத்து நூல்களுக்குச் சமயம் இல்லை, கற்பிக்க இயலாது.
-பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மை (திருக்குறள் உட்பட) சமணச் சார்புடையவை.
-தொல்காப்பியம் சமண நூல்.
-ஐம்பெரும் காப்பியங்கள், சமண-பௌத்த நூல்கள் கலந்தவை. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண நு£ல்கள். மணிமேகலை, குண்டல கேசி இரண்டும் பௌத்த நூல்கள்.
ஆபரணங்களைப் பெயர்களாகக் கொண்ட முதல் தொகுப்பான இந்தப் பழந்தமிழ்க் காப்பியங்களில் எவையுமே சைவ, வைணவ நூலாக இல்லை என்பதை நோக்கவேண்டும்.
மிகுதியான இலக்கண நூல்களும், நிகண்டு நூல்களும் சமணப்புலவர்கள் செய்தவையே. தமிழில் தொடக்ககாலத்தில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர்கள் சமணர்கள். ஆனால் வைதிக சமயங்களால் சமணம் அழிந்தபிறகு, அவர்கள் பங்களிப்பு குறைந்துபோயிற்று. ஆனாலும் நூல்களைப் படியெடுத்து வாழ்க்கை வைபவங்களில் தருகின்ற தங்கள் பழக்கம் மூலமாக அவர்கள் சிலப்பதிகாரம் போன்ற நூல்களைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
கேள்வி : தமிழகத்தில் சமணம் எப்பொழுது பரவியது? மீனாட்சி ராஜன் – செய்யாறு
பதில்:முன் கேள்வியிலேயே ஓரளவு பதில் இருக்கிறது. சமணமதத்தை நிறுவிய மகாவீரர் கி.மு. 599இல் பிறந்து கி.மு.527இல் மறைந்ததாகச் சொல்கிறார்கள்-அதாவது கி.மு. ஆறாம் நு£ற்றாண்டு. ஏற்கெனவே ஒரு கேள்வியில் நான் குறிப் பிட்டிருந்ததுபோல, கி.மு. 1500வாக்கில் வடநாட்டுக்கு வந்த ஆரியர்களும் மெதுவாகப் பரவி தெற்கில் வந்துசேர ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே அவர்களில் ஒருபகுதியினர் ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் தமிழகத்துக்கு வந்திருப்பார்கள். சமணர்களும் அவர்களோடு சேர்ந்தே தமிழகத்துக்கு வந்திருக் கலாம். அல்லது ஒரு 25 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் வந்திருக்கலாம். எப்படியானாலும் சமணர்கள் கி.மு. நான்காம் நு£ற்றாண்டு அளவிலேனும் (அதாவது கடைச்சங்கத் தொடக்கக்காலம்) தமிழகத்திற்கு வந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்போதிருந்து சமணம் தமிழகத்தில் பரவியது. ஆனால் வைதிக சமயமோ, சமணமோ எதுவாயினும் அவ்வளவு வேகமாகச் சங்க காலத்தில் பரவவில்லை. ஏறத்தாழ கிறித்துவுக்கு ஓரிரு நு£ற்றாண்டுகள் கழித்துத்தான் இவை வேகமாகப் பரவவும் செய்தன. தங்களுக்குள் போரிடவும் தொடங்கின.
கேள்வி : சங்க இலக்கியத்தில் தலைவன் பரத்தை வீட்டிற்குச் செல்வது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழன் அன்றிலிருந்தே ஆணுக்கான தனிமனித ஒழுக்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையா? – முருகேசன் – மாயவரம்
பதில்: உண்மை அதுதான். உலகத்தில் எந்த நாட்டிலுமே தொடக்கத்தில் தாய்வழிச் சமூகம் என்பது இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்குப் பல ஆதாரங்களும் உண்டு. தாய்வழிச் சமூகம் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூக மாக மாறியது. தந்தைவழிச் சமூகம் என்பது பெண்களை அடக்கியாளுகின்ற ஆண்தலைமைச் சமூகம்தான்.
புராதனப் பொதுவுடைமைச் சமூகம்தான் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்க முடியும். எப்போது சொத்துடைமையும் அடிமை முறையும் உருவானதோ, அப்போதே பெண்களுக்குச் சனியன் பிடித்துவிட்டது. தன் சொத்தைத் தன் மக்களுக்கே தரவேண்டும் என்பதற்காகக் கற்பு என்ற கருத்து உண்டாக்கப்பட்டது. அதன்வாயி£கப் பெண் அடிமையாக்கப் பட்டாள். இதைப்பற்றிப் பெரியார், பெண் ஏன் அடிமையானாள் என்று ஒரு சிறிய நல்ல புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார். காலம் செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் இறுகின.
பரத்தையர் ஒழுக்கத்திற்கு ஒருவித சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. தந்தைவழிச் சமூகம் உருவான காலத்திலிருந்தே எல்லா நாடுகளிலும் பரத்தைமை இருந்துதான் வருகிறது. அக்காலச் சமூகம் போர்ச்சமூகம். ஆண்கள் எல்லாம் போருக்குச் செல்வார்கள். செல்பவர்களில் எத்தனை சதவீதம் திரும்பிவரு வார்கள் என்று தெரியாது. முழுதும் அழிந்துபோகவும் கூடும். எனவே ஆண்க ளின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது, அதனால், பரத்தைமை உருவானது என்று சிலர் சொல்கிறார்கள்.
பழங்காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனுக்கும் அவன் வீரர்களுக்கும் முதல் வேலை எதிரிநாட்டுப் பெண்களைக் கைப்பற்றுவதுதான். பல சமயங்களில் அவர்களை அரண்மனை போன்ற இடங்களில் பணிப்பெண்களாக வும் அடிமைகளாகவும் அமர்த்திக்கொள்வார்கள். வடநாட்டில் பர்தா முறை தோன்றியதற்கு முஸ்லீம்களின் படையெடுப்பு முக்கியக் காரணம்.
சங்க இலக்கியங்கள் ஆணுக்குத் தனி உரிமையே தருகின்றன. அவன்தான் குடும்பத் தலைவன் என்பதால் தலைவி அவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண் டும். அவள் செய்யக்கூடியதெல்லாம் கொஞ்சம் மறுப்பது, கொஞ்சம் ஊடல் கொள்வது அவ்வளவுதான்.