தூது இலக்கியம்

தூது இலக்கியம்

வானொலியில் பழைய பாட்டுகளை ஒலிபரப்புகிறார்கள். “அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ, தேன்அமுதான கவிபாடிச் சேதி சொல்லாயோ” என்ற பல்லவி ஒலிக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் பின்னால் வந்தால் “கைக்குட்டை காதல் கடிதம்” ஆகிறது. இப்படி இந்நாளிலும் காதலர்களுக்குள் ஏதேதோ பொருட்கள் தூது செல்கின்றன. அதேசமயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும், காதலர் களுக்கிடையே தூது நிகழ்ந்த செய்தி தெரிகிறது. இப்படிப் பழங்கால முதல் இன்றுவரை இலக்கிய கௌரவம் பெற்ற ஒன்றுதான் தூது என்பது. இலக்கிய வகைகள் மாறினாலும், இலக்கியப் பொருள் காலந்தோறும் மாறினாலும், இவ்வளவு தொடர்ந்த வீச்சு பிற இலக்கிய உத்திகள் எதற்கேனும் இருக்கிறதா?

தொல்காப்பியர் காலத்தில் காதல் தூதினைக் குறிக்க வாயில் என்ற சொல் பயன்பட்டிருக்கிறது. மேலும், அஃறிணைப் பொருள்களைத் தூதுவிடும் ‘ரொமாண்டிக்’ மரபும் அவர் காலத்தில் இல்லை போலத் தோன்றுகிறது.
தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.
இப்படிப் பன்னிரண்டு பேரைமட்டும் தூது செல்வதற்கு உரியவர்களாகத் தொல்காப்பியர் சொல்கிறார். தூது என்பது தொல்காப்பியர் காலத்தில் அரசியல் அல்லது போர் சார்ந்த விஷயத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. தலைவன் தலைவி பிரிவு என்பது ஓதல் தூது போன்றவை காரணமாக ஏற்படலாம் என்று தொல்காப்பியமே சொல்கிறது.

“மலர், குயில், தென்றல், நிலவு, மேகம் முதலியவற்றை யெல் லாம் ஆண்டவன் எதற்காகப் படைத்திருக்கிறான் தெரியுமா? காதலர்களுக்கிடையே தூதுபோவதற்காகத்தான்” என்று கிண்டலடித் திருக்கிறார் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நாவலாசிரியரான விக்டர் ஹியூகோ.

தூது என்பது சமஸ்கிருதச்சொல்தான். திருக்குறளில் தூது என ஒரு அதிகாரமே இருக்கிறது. தூது என்றால் செய்தி என்று பொருள். செய்தியைச் சொல்பவன் தூதன். பெண்பாலாயின் தூதி. சந்தேசம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் அர்த்தமும் இதுவே. காளிதாஸன் எழுதிய மேகசந்தேசம் பற்றித் தெரியாதவர் உண்டோ? காதலியைப் பிரிந்த காதலன், மேகத்தைத் தூது விடுவதாக அமைந்த சிறுகாப்பியம் இது. வேதாந்த தேசிகர் என்பவர் ஹம்ச சந்தேசம் (அன்னம்விடுதூது) எழுதியிருக்கிறார். தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மயூர சந்தேசம், சுக சந்தேசம், மனஸ் சந்தேசம், பவன தூதம் போன்ற பல தூது நூல்கள் தோன்றியிருக்கின்றன.

தமிழ்போலவே மலையாளத்திலும் தூது நூல்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் உண்ணு நீலி சந்தேசம் என்பது புகழ்பெற்றது. மயூர சந்தேசம் போன்று இன்னும் பிறகு தோன்றிய தூது நூல் களும் இருக்கின்றன. சிங்களமொழியில்கூட சேவல் சந்தேசம், சேலாலிஹினி சந்தேசம் போன்ற சந்தேச (அதாவது, தூது) நூல்கள் இருக்கின்றன. ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் இந்த இலக்கிய வகை அவ்வளவாகப் புகழ்பெறவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

தொல்காப்பியர் அஃறிணைப் பொருள்களை வாயில்களாகக் குறிக் காவிட்டாலும், விடுவார்களா கற்பனைவளம் நிரம்பிய சங்கப் புலவர்கள்? அகநானூற்றில் தலைவி நண்டைத் தூதுவிட்ட செய்தி 170ஆம் பாட்டில் வருகிறது. ஐங்குறுநூறு 317ஆம் பாடலில் நெஞ்சைத் தூதுவிடுதலைப் பார்க்கிறோம். நற்றிணை 70ஆம் பாடல் சிறுவெள்ளாங்குருகினைத் தூது விடுகிறது. பரிபாடலில் இடம்பெறுகின்ற “தூதேய வண்டின் தொழுதி” என்ற தொடரால் வண்டினைத் தூதுவிடும் மரபும் அக்காலத்திலே வந்துவிட்டதைக் காண்கிறோம்.

இம்மாதிரி அகத்திணையில் காணும் தூதினைத் தொல்காப்பியர், ‘காமமிக்க கழிபடர் கிளவி’ என்ற தலைப்பில் அடக்குவார்.
சொல்லாமரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யாமரபின் தொழிற்படுத்து அடக்கியும்
என்பது பொருளியல் நூற்பா.

அகத்தில் மட்டுமின்றிப் புறத்திலும் தூது பயன்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர் பெருமாட்டியான ஒளவையார், அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற செய்தியைப் புறநானூற்றில் காணலாம். வாழ்நாள் முழுதும் கோப்பெருஞ் சோழனைக் காணாத அவனுடைய உயிர்நண்பர் பிசிராந்தையார் அவனிடம் தூது விட்டதை ‘அன்னச் சேவல்’ என்னும் 67ஆம் புறநானூற்றுப்பாட்டில் காண்கிறோம்.

தூது அதிகாரத்தில் தூதனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாப் பண்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார் வள்ளுவர். குறிப்பாகக், கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
என்ற குறள் கவனிக்கத்தக்கது. அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல் வன்மை, பண்பு, அழகிய தோற்றம் போன்ற பண்புகள் பலவும் தூதனிடம் இருக்க வேண்டும். இவை மட்டும் போதாது. தான் ஏற்றுக்கொண்ட கடமையை நன்றாக உணர்ந்து, தகுந்த காலத்தையும், வாய்ப்பான இடத்தையும் தேர்ந்தெடுத்துத் தெளிவாக எண்ணிச் சொல்ல வேண்டும். இந்தக் குறளைப் படிக்கும்போது அக்பர் பாதுஷாவிடம் தூது சென்ற தெனாலி ராமனின் சாதுரியமான செயல் நினைவுக்கு வருகிறது.

பரிமேலழகர் “தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான்” எனத் தூதர் இருவகைப் படுவர் என்கிறார். முதலாமவன் அமைச்ச னுக்கு ஒப்பானவன் என்று பாராட்டுகிறார். வள்ளுவரே தூதினை அமைச்சு என்ற இயலில் அல்லவா வைத்திருக்கிறார்?

தமிழில் திருக்குறளுக்குப் பின் வந்தவை காப்பியங்கள். இவற்றில் தூது நிகழ்வுகள் இல்லாமல் இருக்குமா? தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திலே, கோவலனைப் பிரிந்த மாதவி, முத லில் வயந்தமாலையைத் தூது விடுகிறாள். அவன் அதை மறுத்துவிட்டுக் கண்ணகியோடு மதுரைக்குச் சென்றுவிடுகிறான். இரண்டாவது முறையாக மாதவி கோசிகமாணி என்பவனை தூது விடுக்கிறாள்.

சீவக சிந்தாமணியில், குணமாலை சீவகனுக்குக் கிளியைத் தூதாக விடுக்கும் செய்தியைப் பார்க்கிறோம். பக்திப்பாடல்களில் தூதுக்குப் பஞ்சமேயில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் போட்டிபோட் டுக் கொண்டு தங்களை நாயகிகளாகப் பாவித்து, தங்கள் நாயகர் களான சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் எல்லாவித அஃறி ணைப் பொருள்களையும் தூது விட்டிருக்கிறார்கள்.

தமிழில் பக்திக்காலத்திற்குப் பின் புராண காலம் வருகிறது. புராணங்களில் பல தூதுச் செய்திகள் இடம்பெறுவதை நோக்குகி றோம். இராமாயணத்தில் அனுமன் தூது, அங்கதன் தூது ஆகியவை இடம் பெறுகின்றன. மகாபாரதத்தில் உலூகன் தூது, சஞ்சயன் தூது, கிருட்டினன் தூது போன்றவை இடம்பெறுகின்றன. அதேபோலக் கந்தபுராணத்தில் வீரபாகுதேவர் தூது அமைகிறது. இவை யாவும் போர்த் தூதுகள். போருக்கு முன்னர் சண்டையா, சமாதானமா என்று வினவும் பாங்கில் அமைந்தவை. பெரிய புராணத்தில் ஆரூரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) பொருட்டு, ஐயோ பாவம், சிவபெருமானே தூதுவராக அலைந்த செய்தியைக் காணலாம்.

தனிப்பாடல்களிலும் தூதுப்பாக்கள் காணப்படுகின்றன. மதுரையில் சத்திமுற்றப் புலவர் பசியும் குளிரும் வாட்டும் வேளையிலும், “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்” என்று தன் மனைவிக்குத் தூது விட்ட நிகழ்ச்சியினை நாம் அறிவோம்.

புராண காலத்திற்குப் பிறகு வருவது சிற்றிலக்கியக் காலம். சிற்றிலக்கியங்களில் கோவை என்பது பழமையானது. கோவை நூல்களில் மணமகனின் திருமணப் பொருட்டாகத் தூது விடுதல் என்ற நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். சிற்றிலக்கிய வகைகள் கலம்பகம், உலா என்றெல்லாம் பெருகியபிறகு தூது என்பதும் ஒரு சிற்றிலக்கிய வகை ஆகிறது. இவற்றில் எல்லாம் அஃறி ணைப் பொருட்களே தூதாகச் சிறப்புப் பெறுகின்றன.

அண்மைக் காலத்திலும் தூது நூல்கள் தோன்றியுள்ளன. உதாரண மாக, சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தமது அமைச்சரவை பதவி ஏற்றபோது இந்தியைக் கட்டாய பாடம் ஆக்கினார். அதனை எதிர்த்து இந்திப் போராட்டம் தொடங்கியது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கக்கூடாது என்று வற்புறுத்தும் ஒரு தூது நூல், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வெள்ளை வாரணரால் ‘வெண்கோழி விடுதூது’ என்ற பெயரில் இயற்றப்பட்டது. இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இடையறாது தூதுசார்ந்த தனிப்பாட்டுகளும் நூல்களும் இடம் பெற்று வந்துள்ளன.

ஒருவகையில் தமிழில் தூது இலக்கியம் என்பது, கலம்பகம், உலா என்ற இரண்டின் கலப்பினால் தோன்றிய இலக்கிய வகை என்று சொல்லலாம். கலம்பகம் என்ற சிற்றிலக்கியத்தில், தூது என்பது ஓர் உறுப்பாக மட்டும் வருகிறது. நந்திவர்மனாகிய தலைவன் தன்னைக் கவனிக்காமல் இருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளும் தலைவி,
நந்தி மல்லையங்கானல் முதல்வனுக்குப் பழுதுகண்டாய் இதைப் போய்ப் பகர்வாய் நிறைப் பைங்குருகே
என்று குருகினைத் தூதுவிடுவதாகவும் வருகிறது. இதற்கு மாறாக, கிளவித் தலைவன் தனது காதலிக்குத் தூது விடுவதா கவும் கலம்பகங்களில் வருகிறது.
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறுங்
கூடுவருகுதென்று கூறுங்கோள் – நாடியே
நந்திச் சீராமனுடை நல்நகரில் நன்னுதலைச்
சந்திச் சீராமாகில் தான்.

இந்தக் கலம்பக உறுப்பாகிய தூது என்பதே அளவில் பெருகித் தூது என்னும் தனி இலக்கிய வகையாயிற்று என்று கூறலாம். அதே சமயம், கலிவிருத்தம், வெண்பா போன்ற பா வகைகளில் பாடினால் ஓட்டம் இருக்காதென்று தமிழ்க் கவிஞர் நன்கு அறிவர். தமிழ்க் கவிகளில் ஆசிரியப்பாவும், கலிவெண்பாவுமே ஓட்டத்திற்கு (விரைந்து எண்ணியதைப் பாடிச் செல்வதற்கு) ஏற்றதென்று கற்றோர்க்குத் தெரியும்.

இவற்றுள்ளும் கலிவெண்பா ஓட்டம் மிக்கது. ஆசிரியப்பாவைவிட எளிமையாக இயற்றக்கூடியது. தனிச்சொல்லும், ஈரடிகளின் ஏழு சீர்களும் சேர்ந்து நின்று, ஓர் இடைவெளியை உண்டாக்கிப் பிறகு மீண்டும் செல்லக்கூடியது. எனவே குதிரைப் பாய்ச்சலைப் போல ஒரு தாவுதல், ஒரு நிறுத்தம், மீண்டும் ஒரு தாவல், ஒரு நிறுத்தம் என அழகாகச் செல்வதற்கு இப்பாவகையைக் கவிஞர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். ஏற்கெனவே உலா என்ற இலக்கிய வகை கலிவெண்பா யாப்பில் பாடப்பட்டிருந்தது. எனவே தூது என்ற இலக்கிய வகையும் கலிவெண்பாவால் இயற்றப்படுவது வழக்கமாயிற்று. பிறகு இது 96 வகைப் பிரபந்தம் என்ற பட்டியலிலும் அடக்கப்பட்டுவிட்டது.
பயில்தரும் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூது எனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெரிந்தே.
என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் கூறுகின்றது.
தூது நூலில் முதலில் கடவுள் வணக்கம் அமையும். அது நூலிற்கு ஏற்பவோ, கவிஞரின் சார்பிற்கு ஏற்பவோ அமையலாம்.

தூது என்ற இலக்கிய வகையே ஒரு தலைவனின் பெருமைகளை எடுத்துரைப்பதாக அமைந்ததுதான். அந்தத் தலைவன் ஒரு அரசனாக, சிற்றரசனாக, ஜமீன்தாராகக்கூட இருக்கலாம், இறைவனாகவும் இருக்கலாம். பாட்டுடைத் தலைவனின் பெருமைகள் வெளிப்படையாகவே நூலில் பேசப்படும். பெரும்பாலும் பாட்டுடைத் தலைவன்மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலன் சிறப்புகளை எல்லாம் கூறி, அப்படிப்பட்டவனின் “பிரிவால் நான் வருந்துகிறேன், என் துயர்தீர்க்க அவனது மாலை வாங்கிவா” என்று தூதாகச் செல்லும் பொருளிடம் வேண்டுவதாக இந்த இலக்கிய வகை அமையும். எனவே இதனைக் கைக்கிளை என்ற திணையில் அடக்கலாம். இறைவன்மீது பாடப்படுவதாக இருந்தால் இதனைக் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்று சொல்லுவார்கள். காதல்கொண்ட பெண்ணின் பெயர் கூறப்படுவதில்லை.
“அகலக் கவியில் பயின்று வரும் கலிவெண்பாவினாலே பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணைப் பொருளையும், கேளா மரபினவற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னமும் கிளியும் வண்டும் மயிலும் குயிலும் முதலாயின அஃறிணைப் பொருளையும் இளையகலாம் முதியகலாம் இவற்றின் துனிநீங்கற்கு வாயிலாக விடுத்தல் முன்னர் உடன்படுத்தும் தூது எனப் பாட்டிலக்கணத்தை உணர்ந்த புலவர்கள்ஆராய்ந்து கூறினார்” என்று இலக்கணவிளக்கப் பாட்டியல் உரை சொல்லு கிறது. இளைய கலாம் என்பது அம்பல். முதியகலாம் என்பது அலர். துனி என்பது தொல்லை, துன்பம் என்று பொருள்படும்.

தூது சென்றுவரும் பொருட்கள் பற்றி இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் சொல்கிறது.
இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை.
எகினம் என்றால் அன்னம். கிள்ளை என்பது கிளி. பூவை என்பது நாகணவாய்ப்புள் (மைனா). பாங்கி என்றால் தோழி. பிரமரம் என்பது வண்டு. தூதுரைத்து வாங்கும் தொடை என்றால் தலைவனிடம் சென்று தலைவியின் செய்தியைக் கூறி அவன் மாலையை வாங்கிவரும் என்று பொருள். மேற்கண்ட அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள், தோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்களே தூதுவிடற்கு உரியவை என்று அக்காலத்தார் கருதினர் போலும்.

ஆனால் கவிஞர்களின் கற்பனை இந்தப் பத்துப் பொருட்களோடு நிற்குமா? பிற்காலத்தில் அநேகமாகத் தூதுவிடப்படாத பொருளே இல்லை. வனசவிடுதூது, நெல்விடுதூது, கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, மதுரைச்சொக்கநாதர் தமிழ்விடுதூது, ஸ்ரீபத்மகிரி நாதர் தென்றல்விடுதூது, மான்விடுதூது, அழகர் கிள்ளைவிடுதூது, புகையிலை விடுதூது, சிவஞான பாலைய சுவாமிகள் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நெஞ்சுவிடு தூது என்றெல்லாம் தூது நூல்கள் பல எழுந்துள்ளன. பணம், தந்தி, செருப்பு, கழுதை போன்றவையும் தூதுவிடப்பட்டுள்ளன. இவற்றுள், செருப்பு, கழுதை போன்றவற்றைத் தூது விடுவதை வசைத்தூது என்பார்கள். பணம், கிளி, நெஞ்சு போன்ற பொருள்கள்மீது ஒன்றிற்கு மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.

அநேகமாக தூது நூல்கள் யாவுமே பதினேழாம் நூற்றாண்டுமுதல் பாடப்பட்டவை. அதற்கு முன் தனித் தூதுநூல்கள் கிடையாது.
தமிழில் காணப்படும் தூது நூல்களை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒருவகையைப் புனைவுத்தூதுகள் என்றும், இன்னொரு வகையை யதார்த்தத் தூதுகள் என்றும் சொல்லலாம்.

புனைவுத் தூதுகள் என்பவை ரொமாண்டிக் தன்மை உடையவை. அதாவது வழக்கமான காதல், வீரம் என்பனவற்றை மிகைப் படுத்திச் சொல்பவை. இவற்றில் தலைவனை நினைத்து ஏங்கும் தலைவி, ஏதேனும் ஒரு பொருளைத் தூதாக அவனிடம் செல்லுமாறு வேண்டுவாள். அவனுடைய மாலை வாங்கி வா என்பாள். இம்மாதிரித் தூது நூல்கள்தான் தமிழில் அதிகம். உதாரணத்திற்கு ஒன்றைப் பார்க்கலாம். ஸ்ரீபத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்று ஒரு நூல். இதனை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை என்பவர்.

பத்மகிரி என்பது திண்டுக்கல்லைக் குறிக்கும். அங்குள்ள இறைவன் மீது தென்றலைத் தூது விடுகிறாள் ஒரு தலைவி. “நந்துமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”
என இவள் தென்றலை விளிப்பது சுவையானது. தலைவனின் சிறப்புகளையும் அவனது தசாங்கங்களையும் கூறித் “தாங்குபுயத்தான் தனக்கென் துயர் சொல்லி/ வாங்குகொன்றை மாலைகொண்டு வா” என்று ஆணையிடுகிறாள் அவள். இதுதான் தூது நூலின் வழக்கமான கதையமைப்பு.

தசாங்கங்கள் என்பவை பத்துப் பொருட்கள். தலைவனுடைய மலை, ஆறு, நாடு, நகர், தார் (மாலை), கரி (யானை), பரி (குதிரை), கொடி, முரசம், ஆணை ஆகிய பத்தினையும் பாடுவது தசாங்கம்.

இன்னொரு வகைத் தூது நூல்கள் யதார்த்தத் தன்மை கொண்டவை.. தலைவி தலைவனுக்குத் தூது விடுவதாக இவை அமைவதில்லை. மாறாக, மனைவியைப் பிரிந்து சென்ற கணவன், தன் மனைவியோடு சேர்த்து வை என்று தூதுப் பொருளை அனுப்புவதாக இவை அமைகின்றன. இவை அக்கால நிலையையும் வழக்கங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்ற வரலாற்றுச் சிறப்பு உள்ளனவாக அமைந்துள்ளன. விறலிவிடுதூது, பணவிடுதூது, தந்திவிடு தூது போன்றவை இப்படிப்பட்ட நூல்கள். இவற்றின் முடிவுகள், தூதுப் பொருளினால் “நான் வளமான வாழ்வு பெற்றேன்” என்று கதைத்தலைவன் சொல்வதாக முடியும்.

தந்திவிடுதூது ஏறத்தாழ 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டதாகலாம். இது நகரத்தார் பற்றிய பாராட்டுரையாக அமைந்துள்ளது. தன் கதையமைப்பில் வழக்கமான தூதுகளைப் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டுள்ளது. இதன் ஆசிரியர் ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளை.
சைவஅந்தணர் குலத்தில் தோன்றிய காங்கேயன் என்ற அந்தணன் ஒரு சோடச அவதானி. அதாவது பதினாறு செயல்களை ஒன்றாக நிகழ்த்தக்கூடியவன். அவன் சென்னை நகரைச் சுற்றிப்பார்க்க வருகிறான். அங்கே தனது கலைச் சிறப்பால் புகழ்பெறுகிறான். திருமணமும் நடக்கிறது.
ஒருநாள் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீட்டில் நாடக ஒத்திகை நடக்கும்வீட்டில் நுழைகிறான். தனது அறிவினால் அந்த நாடகக் குழுவுக்கு ஆசிரியராகிறான். நாடகம் யதார்த்தமாக இருக்கவேண் டுமென்பதால் பெண்வேடத்திற்கு வழக்கம்போல ஆண்களை நடிக்க வைக்காமல், ஒரு நடிகையைத் தேடுகிறான். மோகன சிகாமணி என்ற தாசியைக் கண்டுபிடிக்கிறான். அவள்மீது மோகம் கொள்கிறான். மனைவி சண்டையிட்டதால் சென்னையைவிட்டுப் பல ஊர்களில் நாடகம் நடத்திக்கொண்டே சுற்றுகிறான். நாடகத் தால் நஷ்டம் அடைந்த அவன், செல்வம் சேர்க்க தெய்வங்களின் உதவியை நாடுகிறான். பழனியிலுள்ள முருகப் பெருமான் அவதானியைச் செட்டிநாட்டுக்குச் சென்று பணம்பெறச் சொல்லு கிறான். அவ்வாறே பணக்காரனான காங்கேயன், தன் மனைவியுடன் சேர்ந்து வாழத் தந்தி கொடுக்கிறான்-அதாவது “தந்தியைத் தூதாக அனுப்புகிறான்”. இவ்வாறு ஒரு காத்திரமான கதையைக் கொண் டுள்ளது தந்திவிடுதூது என்ற நூல்.

தூதுநூல்களில் தூதாகச் செல்லும் பொருட்களைப் பாராட்டுவது மிகச் சிறப்பாக அமைகின்ற பகுதி. தந்திவிடுதூதிலும்,
மைக்கடல்சூழ்-பார்மன்னர்
வெவ்வேறு பாஷையால் ஆள்வர்-அதை
ஓர் பாஷையால் ஆளும் உத்தமனே
என்று விளிப்பது போன்ற பகுதிகள் சுவையானவை.

புனைவுத் தூதுகள் போலன்றித், தந்திவிடு தூது முடியும் வகை வேறு.
மனையாளைக் கண்டு என் வரலாறு அனைத்தும்-நினைவாய் உரைத்து அவள்தன் நெஞ்சின் சினமாற்றி-என்வருகை கூறில் நினையான் மறவேன் – ஆதலால் மன்னவனே தூதுபோய்வா என்று முடிகிறது.

“தந்திவிடுதூது கவிதாசக்தியிலும், கற்பனைத் திறத்திலும், சொல்லாட்சியிலும், உயர்ந்த இலக்கியத் தரத்தை எட்டிப்பிடிக்கும் வலு இல்லாத நூல்தான். என்றாலும் சென்ற தடத்திலேயே சென்று சிலம்பவித்தை காட்டாமல் விஞ்ஞான சாதனமான ஒரு கருவியைத் தூதுப் பொருளாகக் கொள்ளவும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரில் மேலோங்கிநின்ற மேடைநாடக இயக்கத்தை ஒட்டி எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தமது கதையம்சத்தை அமைத்துக் கொள்ளவும் அவர் முன்வந்து முயன்ற செய்கையே நமது பாராட்டுக்கும் கவனத்துக்கும் உரியதாகும்” என்று இந்நூலைப் பாராட்டி யிருக்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். யதார்த்த இலக்கிய உலகில் நிச்சயமாக ஓரிடம் தந்திவிடு தூது நூலுக்கு உண்டு என்பது அவர் கருத்து.

ஒரு திரைப்படப் பாடலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பணத்தை விளித்து “எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்” என்று பாடுவார். அதில் பணம் எவ்வெவ்வாறு எங்கெங்கு முடங்கிக் கிடக்கிறது என்று இரசமாகச் சொல்வார். இதுபோலப் பணத்தை விளித்து தூது செல்லச் சொல்லும் நூலும் உண்டு. அதன் பெயர் பணவிடுதூது.

ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல் இது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “பணத்தைத் தமது தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு விசேட முக்கியத்துவ மும் அழுத்தம் பாய்ந்த எதார்த்தத் தன்மையும் அடங்கியுள்ளன” என்று இந் நூலைப் பாராட்டுகிறார் ரகுநாதன்.

இந்த நூலிலும் கதைத்தலைவன் ஒரு அந்தணன்தான். திருவேங்கடநாதையன் என்பது அவன் பெயர். இவனும் ஒரு அவதானிதான். பாட்டுடைத்தலைவர் வேங்கடேசன் திருநெல்வேலியின் இராசப்பிரதிநிதி. அவரது பவனியைக் கண்டு, பின் அவரது கொலுவிருக்கைக்குச் சென்று திருவேங்கடத்தையன் தான் பாடிய வண்ணத்தை அரங்கேற்றுகிறான். வேங்கடேசன் மகிழ்ந்து பொருள் தருகிறார். நெல்லைக் கோயிலில் பூங்கோதை என்ற தேவரடியாளின்மேல் அவதானியின் கவனம் சென்றுவிடுகிறது. எனவே அவளைக் கூட்டி வைக்குமாறு பணத்தைத் தூது விடுகிறான். அவ்வளவுதான் கதை. கதையம்சம் என்று பிரதான மாக எதுவுமில்லை.
வேங்கடேசனைப் பாராட்டும்போது
போடுகின்ற வீட்டுவரி எப்பொழுதும் வேண்டாம் என நிறுத்தி, காட்டு வழிச் செல்வாரைக் காப்பாற்றி..
என வரும்பகுதி இராசப் பிரதிநிதியின் ஆட்சிச்சிறப்பைச் சொல்கிறது. பவனியைக் கண்டு அரசன் இருப்பிடத்திற்குச் செல்வது, ஒரு உலா இலக்கியம்போல இருக்கிறது.
இதன் முக்கியமான விஷயம், ஏறத்தாழ முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே பணத்தின் மகிமையை உணர்ந்து பாடியிருப்பது தான். பணத்தின் சிறப்புகள் பலவற்றையும் சொல்லி,
வல்லமைகள் சொல்வதென்ன? மானிடரெல்லாம் உன்னை அல்லது தேடும் பொருள் எது ஆண்டவனே?
என்று பணத்தையே ஆண்டவனாக்குவது வேடிக்கை. பணத்தின் மகிமையைப் பற்றி இத்துணை விரிவாகவும் ஆணித்தரமாகவும் வாழ்க்கை அனுபவத்தையட்டி வருணித்த வேறு எந்த ஒரு நூலையும் தமிழ்இலக்கியத்தில் காண்பதற்கில்லை என்றே சொல்லலாம். இதனால் இந்த நூலுக்குத் தமிழுலகில் தனியிடம் கிடைக்கிறது.

பிற்காலத்தில் எழுதப்பட்ட தூது நூல்கள் அனைத்தும் அஃறிணைப் பொருள்களையே தூது விடுவதாக அமைந்தன. இவற்றில் வேறுபட்ட அமைப்புடையவை விறலிவிடுதூது என்னும் நூல்கள். இரண்டு விறலிவிடுதூதுகள் கிடைக்கின்றன. சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது ஒன்று, கூளப்ப நாயக்கன் காதல் என்பது மற்றொன்று. முதலாவது நூல் மாரிமுத்துப் பிள்ளை என்பார் இயற்றியது. மனைவியைவிட்டு தாசியிடம் அலைந்த ஒருவன், பிறகு மனம்திருந்தித் தன் மனைவியிடம் திரும்பி வரமுயற்சி செய்வது இந்த நூலின் கதை. கோபித்துக் கொண்ட மனைவியிடம் ஒரு விறலியைத் தூதாக அனுப்பி அவள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வது நூலின்இறுதிப்பகுதியாக அமைகிறது. கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது நூலும் ஏறத்தாழ இதே பாணியில் அமைந்ததுதான்.

ஒரு கற்பனை தாசியை உருவாக்கி, அவளுடைய ஜாலங்களை யும் அவள் தாய்க்கிழவியின் சாகசங்களையும் வரிசைப்படுத்திக் காட்டி ஆசிரியர் தாசிவலையில் விழவேண்டாம் என்று எச்சரிக்கி றார் ஆசிரியர். ஒவ்வொரு ஆணும் தன் நிறையைப் பேணிக் கொண்டு தன் கற்புமிக்க மனைவியுடன் இல்லறம் நடத்தி வருவானானால், வேசியர் இருக்கமாட்டார்கள், ஏமாற்ற மாட்டார் கள் என்னும் கருத்தை வலியுறுத்த இந்நூல்கள் எழுதப்பட்டிருக் கலாம். ஆனால் இந்நூல்களைப் பயிலுவோர்க்கு எல்லாக் கோயில் தாசிகளுமே மிகமிகப் பொல்லாத ஈவிரக்கமற்ற பிசாசுகள் என்னும் எண்ணம் ஏற்படுமாறு அமைந்துள்ளன. ஒருவகையில் அக்கால நிலையைக் காட்டுவதாகவும் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
என்பாலில் கூட்டிவைத்த யாழ்விறலிக்கு ஆடைநிதி
அன்பாய்க் கொடுத்து ஊர்க்கு அனுப்பியே- துன்பம் தீர்ந்து
அன்று முதலாய் அளகேசனைப்போல
நன்றிபெற வாழ்ந்திருந்தேன் நான்
என்பது இந்த நூலின் முடிவுப் பகுதி.

புனைவுத்தூதுகளின் அமைப்புக்கு எடுத்துக்காட்டாக பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய அழகர் கிள்ளைவிடு தூது என்ற நூலையும் பார்க்கலாம். தூதுசெல்லும் கிளியின் மாண்பு, பாட்டு டைத் தலைவன்(கள்ளழகர்) பண்பு, தலைவனின் கோடைத் திருவிழாச் சிறப்பு, தலைவி தன்னிலையைக் கிளிக்கு உணர்த்துதல், தூதுக்குத் தகுதியுடையவள் நீயே எனல். தூது செல்வதற்குரிய இடம் சமயம் எடுத்துரைத்தல், பிறகு தலைவனின் மாலை வாங்கி வா என்றல் என இதன் பகுதிகள் அமைகின்றன. இறுதியாக
அருமாலை நீக்கும் அழகன் புயத்து-
மருமாலை நீ வாங்கி வா
என முடிகிறது இந்நூல்.

முற்றிலும் புனைவுத்தூதாகவும் இல்லாமல், யதார்த்தத் தூதாக வும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் தூதுநூல்கள் இரண்டு உள்ளன. ஒன்று தமிழ்விடுதூது. இன்னொன்று புகையிலை விடுதூது.

சீனிச் சர்க்கரைப் புலவர் என்பார் பாடியது புகையிலைவிடு தூது. இதன் காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்த நூலின் பாட்டு டைத் தலைவர் பழனிமலை முருகக்கடவுள். சிறிய நூல்தான். இந்நூலின் 59 கண்ணிகளில் 53 கண்ணிகளில் புகையிலையின் பெருமை பேசப்படுகிறது.
புகையிலைக்கு பிரம்ம பத்ரம் என்று ஒரு பெயருண்டு. பிரம்ம பத்ரம், புகையிலை என்ற பெயர்கள் வந்ததற்குக் காரணங்கள் சொல்லப்படுவது சுவையானது. சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரிடமும் மூன்று இலைகள் பார்த்துக்கொள்வதற்காகத் தரப்பட்டன. முதல் இருவரும் தங்கள் இலைகளைக் கெட்டுப் போக்கிவிட்டனர். ஆனால், “நமது பத்ரம் போகையிலை” என்றானாம் பிரமன். போகயிலை என்பது புகையிலை என்று திரிந்தது. பிரமன் வைத்துக் காப்பாற்றியதால் பிரம்மபத்ரம் என்ற பெயர் வந்தது. இப்படிப் புகையிலை பற்றிப் பலபடப் பேசும் இந்தநூலின் கடைசி 6 கண்ணிகளில்தான் முருகப்பெருமானுக்குச் செய்தி சொல்லப் படுகிறது. “நண்ணிய மாதவத்தோர் நாடோறும் தேடுகின்ற புண்ணியமான புகையிலை” என்றும், “வர்த்தகர்க்கு லாபமும் நம்பு விடர்க்குச் சல்லாபமும் காட்டும் நயக்காரன்” என்றும் புகையிலையைப் பாராட்டும் பகுதிகள் நயமானவை. புகையிலை விளையும் பகுதிகள்-அதன் பெருமைகள் ஆகியவை நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. “மோகப் பயிர் – பூராய மான பொருளை வெளிப்படுத்தும் சாராயந்தான் உனக்குத் தம்பியோ” என்று புகையிலையைச் சொல்வது ரசமானது.

தமிழ்விடுதூதும் இதுபோன்றதுதான். கதையமைப்பில் புனைவுத் தூது வகையைச் சேர்ந்தது இது. ஆனால் தூதுக்குத் தேர்ந்தெடுக்கும் பொருள், தலைவி மாலைவாங்கிவா என்று சொல்லும் கதைப்பகுதியைவிட முக்கியத்துவம் பெற்றுவிடுவதால் இது புனைவுத் தூது வகைக்கும், யதார்த்தத் தூது வகைக்கும் இடையில் நிற்பதாகிறது.

தமிழ்விடுதூதில், மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். “துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா” என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

“அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே” என்று கேட்கும் புலவர்,

“இருந்தமிழே உன்னால் இருந் தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்று தமிழால் மட்டுமே தாம் இருப்பதாகச் சொல்லும் பகுதி போற்றத்தக்கது, சுவையானது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஒவ்வொரு சிற்றிலக்கியத்திலும் ஒரு சுவையான பகுதி, தலைமையான பகுதி உண்டு. உதாரணமாக, பிள்ளைத் தமிழ் என்றால் அம்புலிப் பருவத்தில் சாமபேத தானதண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களையும் பயன்படுத்திக் குழந்தையோடு விளை யாட வருமாறு நிலவை அழைக்கும் பகுதி அமையும். அது போலவே தூதுவிடத் தேர்ந்தெடுத்த பொருள் தவிரப் பிற உயிர்களோ, பொருட்களோ தூது செல்லத் தகுதியற்றவை என விலக்கும் பகுதி எல்லா தூது நூல்களிலும் மிகச் சிறப்பான பகுதி. தமிழ் விடுதூதில் இது எப்படி அமைகிறது என்று காண்போம். தலைவி சிந்திக்கிறாள்.

அன்னத்தைத் தூதாக அனுப்பலாம்.
அன்னந்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னந்தான் கண்டறியாது என்பரே.

இங்கே மேற்சுட்டாக வருவது சிவபெருமானின் அடிமுடிகாணாக் கதை. ஒரு காலத்தில் ஈசன் அனற்பிழம்பாக நின்ற பொழுது, பிரமன் அன்னம் உருவெடுத்து இறைவனின் திருமுடியைத் தேடியும் காணவில்லை என்ற கதையை மனத்தில் வைத்துப் படிக்கும்போது இதன் சுவை புலப்படுகிறது.

சரி, அன்னம் வேண்டாம். வண்டைத் தூது அனுப்பினால் என்ன?
அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே.
வண்டைத் தூதாக அனுப்பினால், தலைவராகிய சிவபெருமான் “காமம் செப்பாதே (காதலைச் சொல்லாதே) என்றால் திகைத்துத் திரும்பிவிடுமே, என்ன செய்வது” என்கிறாள் தலைவி. இங்கு் மேற்சுட்டாக வருவது திருவிளையாடற்புராணக் கதை. தருமிக்குக் “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ” என ஈசன் பாடல் வழங்கிய புராணம் இங்கு நினைவுகூரப்படுகிறது.

வண்டும் வேண்டாம், மானைத் தூது அனுப்பினால் என்ன?
தப்பாது, மானைப் போய்த் தூது சொல்லிவா என்பேன் வல்லியப்பூந் தானைப் பரமர்பால் சாராதே.
மானைத் தூதாக அனுப்பினால் அது இறைவன் இருக்கும் பக்கமே போகாதே. காரணம், இறைவன் புலித்தோல் ஆடை அணிந்தவர். அதைக் கண்டு பயந்து அது ஓடிப்போய்விடும்.

சரி, மானும் வேண்டாம். கிளியைத் தூதனுப்பினால் என்ன?
ஏனைப்பூங் கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம் ஆகி வலியானுக்கு அஞ்சுமே.
இறைவன் வலியான் என்னும் கரிக்குருவியைத் தன்னருகில் வைத்தார் என்பது திருவிளையாடற் புராணக்கதை. கிளி காக்கை யினம் ஆனதால் வலியானுக்கு அஞ்சி இறைவன் அருகில் போகாது.

என்ன செய்வது? மனத்தையே தூது விடுத்தால் என்ன?
இந்த மனத்தைத் தூதாய் ஏகு என்பேன் இம்மனமும்
அந்த மனோதீதர் பால் அண்டாதே.
இறைவன் மனத்தினால் எட்டமுடியாதவர். ஆகையினால் மனத்தைத் தூதாக அனுப்பியும் பயனில்லை.

ஆகவே நீ ஒருவனே இறைவனிடம் தூது செல்ல ஏற்றவன் என்று தமிழைப் பாராட்டி, ஒரு தொடை(மாலை) வாங்கி உதவாயோ என்று வேண்டுகிறாள் தலைவி.

இப்படித் தான் கொண்ட தூதுப் பொருளைத் தவிர வேறு எதுவும் செல்லாது என்பதற்குப் புனைந்து கூறப்படும் காரணங்களால் இப்பகுதி சிறப்படைகிறது. மேலும் ஒவ்வொரு விலக்கலிலும் கூறப்படும் மேற்சுட்டுக்கதைகள் சுவைபயக்கின்றன.

இறுதியாக, தூதுநூல்களின் இலக்கியத் தகுதி என்ன?
புனைவுத் தூது நூல்கள் வெறும் கனவு இலக்கியம், தப்பிப்பு இலக்கியம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. தென்றல் விடுதூது, மான்விடு தூது, கிள்ளைவிடுதூது போன்ற யாவும் இப்படிப்பட் டவைதான். இவை படிப்பதற்கு ரசமாக உள்ளன. ஆனால் வாழ்க் கைக்குப் பெரும்பயன் தருபவையா என்பது கேள்விக்குரியது. மேலும் ஒரு நூலைப் போலவே இன்னொரு நூலும் அமை யும்போது படிப்பவர்க்குச் சோர்வு ஏற்படுகிறது.
மாறாக, யதார்த்தத் தூது இலக்கியங்கள், வரலாற்றின் ஒரு பகுதியை நமக்கு விளக்கும் விதமாக அமைகின்றன. அறிவுரை சொல்கின்றன. அந்த வகையில் புனைவுத் தூது இலக்கிய வகைகளை விட இவை மேம்பட்டவைதான்.

ஆனால் இலக்கியம் என்பது வெறும் அறிவுரைக்காக அல்லவே? படைப்பாற்றல்-Creativity-என்பது இலக்கியத்தின் முக்கியப் பகுதி. தலைவன் தலைவி போன்றோர் தங்கள் ஆற்றாமையைத் தங்கள் தோழன் தோழியரிடம் கூறினார்கள். அவர்கள் அகப்படாத பொழுது? அவற்றையெல்லாம் குயிலோடும் மயிலோடும் நிலவோடும் தென்றலோடும் சொல்லிப் பார்த்தார்கள். இவ்வாறு இயற்கையையே சொந்தம் கொண்டாடுபவர்களாக ஆனார்கள் மனிதர்கள். இயற்கையோடு மனிதன் கொண்ட இடையறா உறவை, பிரிக்கமுடியாத அத்வைதத் தன்மையைத் தூது நூல்கள் உணர்த்துகின்றன என்று கொள்வோமே? தொல்காப்பியப் பொருளியலில்,
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுவலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்
என்றும் தெரியாமலா கூறினார் தொல்காப்பியர்? மானிட இயல்பை நன்கறிந்தவர் அல்லவா அவர்?

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றதுபோல, அறிவியல், தத்துவ உண்மைகளுக்கெல்லாம் அப்பால், உலகின் சேதன அசேதனப் பொருட்களையெல்லாம் தன் உறவாகக் கொள்ளும் இந்த அத்வைதத் தன்மையல்லவா கவிதையுண்மை, வாழ்க்கையுண்மை என்று சொல்லப்படுகிறது? அந்த வகையில் கவிதையுண்மையின் சிறுபொறிகள் என்ற அளவில் தூது இலக்கியங்களும் நல்லிலக்கியமாகவே அமைகின் றன என்று சமாதானப்படுத்திக் கொள்வோமே!

——

இலக்கியம்