நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒளி-இருள் என்னும் இருமை எதிர்வு இருக்கவே செய்கிறது, நம் மனங்களில் ஆழமாகப் பதிந்தும் போயிருக்கிறது. பொதுவாக ஒளியிரவு நாட்களை-பவுர்ணமி நாட்களைக் கொண்டாடுவது தமிழர் இயல்பு. தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா (இளவேனில் விழா) எனத் தமிழர் திருநாட்கள் எல்லாம் பவுர்ணமி நாட்களிலேயே வருவதைக் காணலாம். அமாவாசை அல்லது இருளிரவு நாட்களை-ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தீபாவளி எனக் கொண்டாடும் மரபு எப்போதிருந்து நுழைந்தது என்பது தெரியவில்லை.
தீபாவளி என்றால் தீபவரிசை. வடநாட்டில் தீப வரிசை வைத்துத்தான் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நமக்கு உண்மையான தீபாவளி, கார்த்திகைத் திருநாள்தான்! (அதுவும் பவுர்ணமி அன்றே வருவதைக் காணலாம்). சங்க இலக்கியத்திலேயே கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட்ட குறிப்பு இருக்கிறது. அன்றுதான் நாம் வீடுமுழுவதும் தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம். தீபாவளி அன்று நாம் பட்டாசுகள்தான் வெடிக்கிறோம். தீபாவளி என்றால் நினைவுக்கு வருவன மூன்று-பட்டாசு, புத்தாடை, பட்சணம்.
பழங்கதை ஒன்றின்படி, யாரோ ஒரு அரக்கன் (நரகாசுரன்) இறந்ததற்காக நாம் எல்லாரும் (திவசத்திற்குப் போல) எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே தீபாவளிச் சமயத்தில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் (இவர்கள் முறையான தொழிலாளிகள் அல்ல, முறைசாராத, எவ்விதப் பணிப் பாதுகாப்புமற்ற தொழிலாளர்கள்) இறக்கிறார்கள். அவர்களை நினைத்து எண்ணெய் வைத்து நாம் நீராடுவோம். பட்டாசுகளை வெடிக்கும் போதெல்லாம் அவற்றின் பின்னணியில் தங்கள் உயிரைக் கொடுத்த, கொடுக்கின்ற ஆயிரணக்கணக்கான மக்களை நினைத்துக் கொள்வோம். (வேறென்ன செய்வது? இந்தப் பழக்கத்தை விடுங்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்? தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் போவதற்குப் பட்டாசுகள் சிவகாசியில்தான் தயாராகின்றன. சீனாவிலும் வாணவேடிக்கைகள், பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சீனப்பட்டாசுகளும் வெடிகளும் பழங்காலத்திலிருந்தே பெயர்போனவை. ஆனால் அங்கு இந்தத் தொழிலை முறைப்படுத்தி, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் திறம்படச் செய்திருக்கிறார்கள்.)