தேர்தல்கள் முடிந்துவிட்டன. இனி தமிழ்நாட்டின் கட்சிகள் பற்றிக் கொஞ்சம் தைரியமாகப்பேச முடியும்.முதன் முதலில் நான் பெங்களூர் சென்றது 1964இல். நான் பி.யூ.சி. படித்தபோது ஓர் அறிவியல் கருத்தரங்கத்திற்காக அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை, ஆனாலும் அந்தப் பெயரைச் சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தையைச் சொல்வதுபோலப் பார்த்தார்கள் பெங்களூரில். குறிப்பாகக் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கன்னடர்கள். ஆனால் கல்லூரிகளில் அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. அலை வீசிக்கொண்டிருந்தது. அதனால்தான் 1967இல் மிக எளிதாக தி.மு.க. காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தது.
முழு இந்தியாவிலும் தமிழ்நாட்டில்தான் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிகள் இருக்கின்றன. ஆந்திரத்தில் இல்லை, கேரளத்தில் இல்லை, கருநாடகத்திலும் இல்லை. திராவிடம் என்ற பெயரைக்கூட அங்கெல்லாம் உச்சரிக்க முடியாது, அவ்வளவு வெறுக்கிறார்கள். (உடனே யாரும் தயவுசெய்து திராவிடர் என்ற குடும்பப் பெயரை எடுத்துக்காட்ட வேண்டாம், அதற்கெல்லாம் தனி வரலாறு இருக்கிறது.)
ஒருகாலத்தில், கால்டுவெல் ஆய்வுசெய்து நூல் வெளியிட்ட காலத்தில், இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் நிகழ்ந்த காலத்தில், உருவான கருத்துதான் திராவிடம் என்பது. அது ஒரு தனி மொழியினத்தைக் குறிக்கப் பயன்பட்டது. எந்தக் காலத்திலும் அச்சொல் ஓர் இனத்தையோ, நாட்டையோ, நாட்டு மக்களையோ குறிக்கப் பயன்பட்டதில்லை.
பழங்காலத்தில், தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க முடியாத வடநாட்டவர்கள், சமஸ்கிருத மொழியைக் கையாண்டவர்கள், தமிழை திராவிடம் என்ற சொல்லால் குறித்தார்கள். ஆங்கிலேயன் குமரி என்று உச்சரிக்க முடியாமல் காமரூன் என்று ஆக்கியமாதிரி. உதாரணமாக, தமிழ்க்குழந்தை என்று ஞானசம்பந்தரைக் குறிக்க வந்த காலடி ஆதி சங்கராச்சாரியார், திராவிட சிசு என்றார். ஆக தமிழனுக்கு சமஸ்கிருத மொழிக்காரன் வைத்த பெயர் திராவிடன்.
இராமசாமிப் பெரியார், காங்கிரஸிலிருந்து வெளிவந்து 1925இல் திராவிடக் கட்சியைத் தொடங்கினார். ஏறத்தாழ அது நீதிக்கட்சிதான். நீதிக்கட்சி, சாதிக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்க மட்டுமே வந்த கட்சி. அதற்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் முன்னேற்றத்திலும் அதற்கு அக்கறை இல்லை. அதில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத பெருந்தனக் காரர்கள்.
திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டைத்தான் குறிக்கும், திராவிடன் என்ற சொல் தமிழனைத்தான் குறிக்கும் என்றால் பெரியார் ஏன் திராவிடக் கட்சி தொடங்கவேண்டும்? தமிழன் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமே?அண்ணாதுரை ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கவேண்டும், தமிழன் முன்னேற்றக் கழகமே தொடங்கியிருக்கலாமே? (பின்னால் திராவிடம் என்ற பெயரைப் போட்டுக் கொண்ட கட்சிகளை விட்டுவிடுங்கள். பழக்கதோஷம் என்றே இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.) அல்லது பெரியாருக்கு மிகப் பிடித்தமான சுயமரியாதை என்ற சொல்லை வைத்து சுயமரியாதைக் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமே? ஐம்பதுகள் அறுபதுகளில்கூட பெரியார்-அண்ணா கட்சிக்காரர்களை சு.ம. ஆட்கள் என்றுதான் காங்கிரஸ்காரர்கள் குறிப்பிடுவது வழக்கம்.
அதனால்தான் “திண்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம்” என்று சொன்ன அண்ணாதுரையால் அந்தக் கோரிக்கையை எந்த வருத்தமும இன்றி உடனே கைவிடமுடிந்தது. திராவிடநாடு என்பது தமிழ்நாடுதான் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அதைத்தான் 1956இல் வாங்கியாயிற்றே? இன்னும் எந்த திராவிட நாட்டைப் போய் வாங்குவது? பெங்களூரைக் கொடு என்றால் கன்னடர்கள் விடு வார்களா? அல்லது தமிழகத்தின் ஒருபகுதியாகவே சங்ககாலம் முதல் இருந்த திருப் பதியைக் கொடு என்றால் ஆந்திரர்கள்தான் விட்டுவிடுவார்களா? அண்ணாதுரையின் முக்கியமான ஏமாற்று வேலை, திராவிட நாடு என்ற கட்டுக்கதை.
பெரியார், மிகவும் சூட்சுமமாகத்தான் பெயர் வைத்தார். அவருக்குத் தமிழ் மீதோ, பிற திராவிட மொழிகள்மீதோ பெரிய அபிமானம் ஒன்றும் இல்லை. தமிழ்க்கட்சி, அல்லது தமிழன் கட்சி என்று பெயர் வைத்தால், ஏ.டி. பன்னீர் செல்வம் வேண்டுமானால் அதில் சேருவார், அவர் பச்சையான தமிழர். பிட்டி தியாகராசரோ, பனகல் ராஜாவோ,டி.எம். நாயரோ அதில் சேருவார்களா? அந்தக் காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டதில் இன்றுள்ள கேரளத்தின் சில பகுதிகள், கன்னட நாட்டின் மைசூர் வரையிலான பகுதிகள், ஆந்திரத்தின் சில பகுதிகள் எல்லாம் அடங்கியிருந்தன. ஆக, அங்கெல்லாம் இருந்தவர்களை ஒன்று சேர்க்கத்தான் என்று வைத்துக்கொள்வோமே, திராவிட என்ற சொல்லைக் கையாளவேண்டிய அவசியம் பெரியாருக்கு ஏற்பட்டது.
சரி, வைத்தது வைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மொழிவாரி மாநிலங்கள் பிரியும் நிலை ஏற்பட்ட பிறகு, மொழியுணர்வு இந்தியாவில் எங்கும் அடிநீரோட்டமாக ஆனபோதாவது திராவிட என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கவேண்டாமா?
அங்குதான் அண்ணாதுரையின் புத்தி மட்டுமல்ல, ம.தி.மு.க., தே.மு.தி.க. என இன்றுள்ள கட்சிகள் வரையிலும் குயுக்தி ஆட்சி செய்கிறது. தமிழகத்தில், வீட்டுக்கு வெளியே தமிழ் பேசிக்கொண்டு, ஆனால் வீட்டுக்குள் தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ பேசிக்கொண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தவந்தாலும் தங்களைக் கன்னடர், தெலுங்கர், மலையாளி என்றே குறிப்பிட்டுக்கொண்டு வாழும் சாதிகள் அநேகம். தமிழ்நாட்டின் அசலான சாதிகளைவிட, இவர்களுக்குத்தான் பிற்பட்ட வகுப்பினருக்கான, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான சலுகைகளும் மிகுதியா கக் கிடைக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவேடுகளைப் பார்ப்பவர்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.
தமிழன் கட்சி என்றால் இவர்கள் யாரும் அதில் சேர மாட்டார்கள். இவர்களை ஒதுக்கவும் முடியாது. இன்றும் ஒக்கலிகர்களும், பலிஜாக்களும், நாயுடுக்களும். ஊர்த்தலைவர்களாகவும் பெரும்பான்மையாகவும் இருக்கும் கிராமங்கள் ஏராளம். அதனால்தான் தமிழன் முன்னேற்றத்தைக் கைவிட்டு, இவர்கள் எல்லோரையும் திராவிடராக ஒன்றுசேர்த்து முன்னேற்ற வேண்டிய கட்டாயம் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் ஏற்பட்டது. இவர்களுக்குப் பின்னால் அண்ணா பெயரை வைத்துத் திராவிடக்கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆருக்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் இராமச்சந்திர மேனோன். பால நாடக சபாக்களில் நடிக்க வந்து பிறகு திரைப்படத்தின் மூலமாகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். அவருக்குப்பின் கட்சித்தலைவராக வந்தவர் தம்மைச் சட்டசபையிலேயே ஓர் உயர்ந்த சாதி என்று அறிவித்துக்கொண்டவர். பிற திராவிட என்று பெயர் சூடும் கட்சிகளின் தலைவர்களையே பாருங்கள், யார் அவர்கள், எந்தெந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரியும்.
ஆக, திராவிட என்ற கட்சிச்சொல்லின் வரலாற்றைப் பார்த்தால், தமிழர்களை மேம்படுத்தாமல், தமிழ்நாட்டில் வசிக்கும், குறிப்பாக ஆதிக்கம் செய்யும், தெலுங்கு, கன்னட, மலையாள சாதிக்காரர்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சொல் என்பது நன்றாகப் புரிகிறது. இது பிடிக்காததனால்தான் ம.பொ.சியோ, ஆதித்த னாரோ, ஏன் ஈவெராவின் உறவினரான ஈவெகி சம்பத்தோ கூட திராவிட என்ற சொல்லைத் தங்கள் கட்சிகளுக்கு வைக்காமல் தமிழ் அல்லது தமிழர் என்ற சொல்லைச் சேர்த்துக் கட்சிப்பெயர் வைத்தார்கள். ஆனால் இன்று யாருக்கும் அந்தத் துணிச்சல் இல்லாமல் போனது தமிழனின் இளிச்சவாய்த்தனம். தமிழர்கள் தமிழ் நாட்டில் என்றைக்குமே சிறுபான்மையினராகத்தான் ஆக்கப்படுவார்கள், மதிக்கப் படுவார்கள் என்பதற்கும் அடையாளம்.