தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும்
1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை
2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை
3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல்
4. செம்மொழிப் பிரச்சினை
5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும்
என்ற பொருள்களில் அடங்குகின்றன.
சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற கவலை காணப்படுகிறது. ஆனால் அவர்களிடம் ஒருசில தவறான புரிந்துகொள்ளல்களும் கட்சிச் சார்புகளும் இருக்கின்றன. உதாரணமாக இன்றைய ஆட்சிக்கு முந்திய ஆட்சி தமிழகத்தில் அமைந்தபோது, ஒருவர், தமிழ்ப்பகைவர்களின் கையிலிருந்து ‘கேள்‘ (நண்பர்)களின் கைகளுக்கு ஆட்சி மாறியிருக்கிறது என்றார். தமிழ்ப்பகைவர், கேளிர் என்பதை மிகவும் சுருக்கிப் பார்க்கும் தன்மை இது. இக் ‘கேள்‘களின் ஆட்சியில்தான் என்றைக் குமே தமிழை வீழ்த்தி ஆங்கிலம் மேன்மைபெற வழிவகுக்கப்பட்டது என்பதையும், உலகமயமாக்கல் தமிழகத்தில் விரிவுபெறப் பாதைகள் திறந்துவிடப்பட்டன என்பதையும் மறந்துவிடுகிறார்கள் இவர்கள். அழிக்கும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி பெரியது என்ற ஆராய்ச்சி தேவையில்லை.
என்னைப் பொறுத்தவரை இத்தனை கேள்விகள் தேவையில்லை. அடிப்படைப் பிரச்சினைகள் மூன்றுதான்.
1. தமிழனின் இனவுணர்வின்மையும் தனது நாகரிகம் பற்றி அறியாமையும்.
2. இன்றைய தமிழ்க் கல்வித்துறை, இலக்கியத் துறைகளின் போக்கு.
3. அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கும், அதற்குக் கருவியாக இருக்கின்ற உலகமயமாக்கமும் அதன் விளைவுகளும். இவற்றைச் சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
தமிழனின் இனவுணர்வின்மை வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர். அவர் குறிப்பிடும் தமிழனின் தனிக்குணம்,என்றைக்குமே அவனுக்கு இனவுணர்வு கிடையாது என்பதுதான்! மனிதனிடம் “இயல்பாகக் காணப் படவேண்டிய இனப்பற்று” அல்லது மற்ற மாநிலத்தவர்களிடம் காணப்படும் இனப் பற்று என்பது இன்றைக்குத் தமிழர்களிடம் இல்லை. இயல்பாக வரவேண்டியதை எப்படிக் கற்றுக்கொடுப்பது? ஏன் தமிழர்களிடம் இயல்பாகவே தமிழின்மீது அக்கறை இல்லை?
தமிழ்நாடு ஏறத்தாழ கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமுதலாக அந்நியக் கலாச்சாரத்தின் ஆட்சிக்குட்பட்டு அதன் ஆற்றல்கள் மங்கி விட்டன. தெலுங்கும் மராட்டியும் கன்னடமும் சமசுகிருதமும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழிகளாகி அதை மயக்கி விட்டன. இனவுணர்வின்மையின் அடிப்படைக் காரணம் இதுதான்.
ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளாக அடிமையாக இருக்கும் ஓரினம் எப்படி ஐயா இனவுணர்வோடு இருக்க முடியும்?முதலில் துருக்கர் ஆட்சி, பிறகு விஜயநகர ஆட்சி, பிறகு தெலுங்கு, கன்னட நாயக்கர் ஆட்சி, ஒரு சில பகுதிகளில் மராட்டியர் ஆட்சி, பிறகு டச்சுக்கார, போர்ச்சுகீசிய, பிரெஞ்சுக்கார ஆட்சி, பிறகு ஆங்கிலேயர் ஆட்சி என எழுநூறு ஆண்டுகளாக அடிமையாக இருந்தவன் தமிழன்.
அண்டையிலுள்ள கன்னடநாடோ ஆந்திரமோ கேரளமோ இவ்வளவுநாள் அடிமைப்பட்டிருந்ததில்லை. அவை தமிழகத்தை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாகவே பலகாலம் இருந்துள்ளன. 1947இல் விடுதலை பெற்ற பிறகாவது தமிழ் இன அக்கறை ஏற்பட்டிருக்கவேண்டும். அது ஏற்படாதவாறு “தேசிய” நலனில் அக்கறை காட்டிய காங்கிரஸ் பார்த்துக்கொண்டது. அதற்குப்பிறகு வந்த திராவிடக் கட்சிகள் சொந்த நலத்தையும் சொத்தையும் பெருக்குவதற்குக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கு கூடத் தமிழரைப் பற்றியோ தமிழைப் பற்றியோ காட்டியதில்லை. இப்போது சொல்லவே தேவையில்லை, சொந்தநலத்தைப் பெருக்கிக்கொள்வதற்குத்தான் பன்னாட்டுக் குழுமங்களுக்குப் பாவாடை விரிக்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை, அவர்களுக் காகத் தமிழகத்தின் விலைமதிப்பற்ற இயற்கையைச் சுரண்டி (கிரானைட் முதல் தண்ணீர் வரை) விற்றுவிடுகிறார்கள்.
இந்தநிலையில் இன்று இருக்கும் தமிழுணர்வு என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப்படுவது மிகை என்றும் தோன்றுகிறது.
வரலாறு என்பது ஆதிக்கத்திலுள்ளவர்கள் புனையும் கட்டுக்கதை என்பார்கள். விடுதலை பெற்ற பிறகு இன்றுவரை பள்ளிகளில் நடத்தப்படும் வரலாறு என்பது உலக நாகரிகத்திற்கோ இந்தியப் பண்பாட்டிற்கோ தமிழனின் கலாச்சாரப் பங்களிப்பை உணர்த்துவதாக அமையவில்லை. வெறும் கேலிக்கூத்தாக இருக்கிறது அது.
இருந்தாலும் தமிழுக்கும் ஒரு தனிக்குணம் இருக்கிறது. எவ்வளவு மோதல்கள், அழிவுக்காரணிகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தன்மை. இந்தத் தன்மையால்தான் தமிழ் இன்னும் பிழைத்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் முயற்சியால் அல்ல. தமிழனுக்குப் பொது நலனில் என்றுமே அக்கறை கிடையாது. பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் காரணமாக அவனுக்கு எப்போதும் மாற்று நாகரிகம்,மாற்று மொழி, மாற்றார் மேல் ஒரு வாய்பிளந்த தாழ்வுணர்ச்சி. அந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அன்றுமுதல் இன்றுவரை பிறருக்கு வாழ வழியமைத்துக் கொடுத்தும், தன்னையும் தன் இனத்தையும் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான். ஆகவே ஒரு கன்னடனின், அல்லது இந்திக்காரனின் இன வுணர்வு அவனுக்கு எங்கே வரப்போகிறது? ஆனால் இதனால் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அதன் “தக்க வைத்துக்கொள்ளும் சக்தி”அதைக் காப்பாற்றும்.
அல்லது இப்படிப்பட்ட இனவுணர்வற்ற மக்களின் மொழி அவர்களுடைய சிந்தனையின்மையால்,உணர்வின்மையால் அழிந்துபோகுமானால் அதை எப்படித் தான் காப்பாற்றுவது? ஒரு மொழியைக் காப்பாற்றுவது தனிமனித வேலையல்ல. போகட்டுமே! உலகில் எத்தனையோ நாகரிகங்கள் இருந்து காலப்போக்கில் அழிந்து போயிருக்கின்றன. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களிடையே வெற்று உலகாயதப்போக்கு சார்ந்த கேளிக்கை மனப்பான்மையும் வெற்றுப் பிழைப்புவாதமும் தோன்றிவிடும் போது அந்த நாகரிகம் அழிந்துதான் தீரும் என்பதை வரலாறு பலமுறை காட்டியிருக் கிறது. இன்று தமிழர்களிடையே இத்தகைய மனப்பான்மைதான் காணப்படுகிறது.
தமிழர்களின் இனவுணர்வின்மைக்குக் காரணமாக நாம் அடுத்த பிரச்சினை யாகிய தமிழ் இலக்கிய உலகு,கல்வித்துறை இரண்டிலும் காணப்படும் நடுத்தரத் தன்மையைப் பற்றி விவாதிக்கலாம். இந்த நடுத்தரத்தன்மை நம்மை மிகவும் அச்சுறுத் துகின்ற ஒன்று. எல்லாநிலைகளிலும் ஆழமான அறிவற்றவர்களும், பிழைப்புவாதி களுமே புகுந்து உயர் தரத்தினை எதிர்க்கவும், மோசமான தரத்திலுள்ள (சிறந்தவை என்ற மகுடம் சூட்டி அவர்களால் பாராட்டப்படுகின்ற) விஷயங்களைப் புகுத்தவும் செய்கிறார்கள். அவர்களுடைய பாசிசம் நம்மைப் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றது. இன்றைய கல்வி தனியார் மயமாகி, கண்டவரெல்லாம் பல கல்வி நிறுவனங்களை நடத்தத் தொடங்கிய நிலை, கல்வியின் தரத்தை மிகவும் மோசமாக்கிவிட்டது. உதாரணமாக நான் ஆராய்ச்சித் துறையின் மோசமான நிலை பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை படித்தபோது (அது தமிழ் நேயத்தில் வெளிவந்தது) அதற்குக் கிடைத்த எதிர்வினைகள் அச்சமூட்டுவனவாக இருந்தன.
பிறமொழிகளில் தரப்படுத்தும் நிறுவனங்கள் நன்கு செயல்படுகின்றன. சான்றாக அலியாஸ் ஃப்ராங்காய் நிறுவனம் வகுத்துள்ள ஃபிரெஞ்சினைத்தான் கற்பிக்க, பேசமுடியும். அதன் தரத்தினை நிர்ணயப்படுத்திஇருக்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழைத் தரப்படுத்த எந்த நிறுவனம் இருக்கிறது? என்னவிதமான தமிழ் தொலைக்காட்சிகளில் (“கேள்” களின் தொலைக்காட்சிகள் உட்பட) பயன்படுத்தப் படு கிறது? ஏன் இப்படித் தமிழைக் கடித்துத்துப்புகிறார்கள்? (இந்திமொழியையோ, உருது வையோ பயன்படுத்தும் தொலைக்காட்சிகளில் இப்படியில்லை என்பது எனக்கு நன்றாகத்தெரியும். இந்தி நான் அறிந்த மொழி என்பதால் இதனை அனுபவபூர்வ மாகச் சொல்லமுடியும்). தமிழைத் தரப்படுத்துவதற்காக ஏற்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவை வெறும் கற்பிக்கும் நிறுவனங் கள் ஆகிவிட்டன.
தூய தமிழ்வாதிகளும் அவர்களால் இயன்ற அளவு தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொலை நோக்கற்று வெறும்வார்த்தை அளவிலேயே நின்று சொல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்களைவிடக் கருத்து முக்கியம் என்பதையும், மொழியின் அமைப்பு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு யார் உணர்த்துவது?
கல்விநிறுவனங்கள் மோசமான வியாபார நிறுவனங்கள் ஆகிவிட்டன. சான்றாகத் தமிழை ஒழுங்காகக் கற்பிக்கும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கற்கும் மாணவர்களும் பெரும்பாலும் இன்று இல்லை. முன்பெல்லாம் இருந்ததைவிட இன்று பி.லிட், எம்.ஏ(தமிழ்) படிக்கும் மாணவர்கள் (தொலைக்கல்வி, அஞ்சல்வழிக்கல்வி உட்பட) மிக அதிகம். ஆனால் எல்லாரும் எப்படியாவது ஒரு “ஓலை” வாங்கிவிட்டால் “வேலை” கிடைத்துவிடும் என்ற நோக்கில் வருகிறார்களே அன்றி ஆர்வத்தோடும் பற்றோடும் தமிழ் கற்பதற்கு அல்ல. அதனால் பிஎச்.டி படித்தவனுக்குக்கூட பிழை யின்றித் தமிழ் எழுதத் தெரியாது என்று சொல்லும் நிலை இன்றைக்கு.
அடுத்தபடியாக, இன்னொரு பிரச்சினையையும் இங்கு ஆராயலாம். கடந்த ஐம்பதாண்டுகளாக-இன்றுவரை தமிழ் ஆசிரியர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒருநிலையில் பார்ப்பனர்களை எதிர்கொள்ளவேண்டி வந்திருக்கும் என்ப தில் சந்தேக மில்லை.
நான் யோசித்துப்பார்ப்பதுண்டு: பார்ப்பனர்களுக்கு (பார்ப்பன மனப்பான்மை கொண்ட பிற சாதியினருக்கும்தான்) ஏன் தமிழின்பேரில் இவ்வளவு பகைமையுணர்ச்சி? வேறு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியக் காரணம் அவர்களுடைய பிழைப்புவாதம் என்று தோன்றுகிறது. “பிழைப்புக்காக நான் எல்.கே.ஜி. முதலாகவே ஆங்கிலமோ,பிரெஞ்சோ, என்ன மொழியாவது படித்து அமெரிக்காவுக்குப் போவேன், நீ ஏன் அதை எதிர்க்கிறாய்” என்று கேட்கிறது பிழைப்புவாதம். முன்பு சமசுகிருதம் படித்தால் பிழைப்பு, அப்போது சமசுகிருதம் தேவபாசை. இப்போது ஆங்கிலம் படித்தால் பிழைப்பு. ஏனென்றால் அது பன் னாட்டு நிறுவனங்களுடைய “உலக” பாசை. “அதைப் படிப்பதை விட்டுத் தமிழ் தமிழ் என்று பேசி என்ன லாபம்? முதலில் வயிற்றுப் பிழைப்பைப் பார். பிறகுதான் கலாச் சாரம், மண்ணாங்கட்டி எல்லாம்.”
இன்னொரு காரணம் ஆதிக்கம். முன்பு சமசுகிருதம் என்ற பேரைச்சொல்லி, கடவுளின் பேரைச் சொல்லி ஆதிக்கம் செய்ய முடிந்தது. இப்போது அது முடிய வில்லை. ஆகவே ஆதிக்கத்திற்கு உகந்த ஆங்கிலத்தைக் கையிலெடுத்துக் கொண்டார் கள். மேலும் முட்டாள்கள் இருக்கும் வரைதானே ஆதிக்கம் செய்யமுடியும்?இவ்வளவு நூற்றாண்டுகளாகத் தமிழர் அடிமைப்பட்டுக் கிடந்தபோது பார்ப்பனர்களின் நிலை என்ன? யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குக் குடைபிடித்து வாழ்த்துப்பாடித் தங்களை உயர்த்திக் கொண்டது ஒன்றுதான். இப்படித் துதிபாடியே பிழைப்புநடத்திப் பிறர்மீது ஆதிக்கம் செலுத்திவந்த கூட்டத்தை “இப்போது உன் ஆதிக்கத்தை விட்டுவிடு” என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுமா? இன்றைக்கு அதன் பிழைப்புக்கு ஏற்றமாதிரியாகப் பன்னாட்டுக் குழுமங்கள் இருக்கின்றன. “இங்கே இடஒதுக்கீட்டை நீ அமுல்படுத்தினால் என்ன?நாங்கள் அமெரிக்கா போவோம், ஜெர்மனிக்குப் போவோம், ஜப்பானுக்குப் போவோம். அப்படிப் போவதற்கு வாய்ப்பாக உதவுகின்ற அகில இந்திய மேலாண்மைநிறுவனங்கள் (ஐஐஎம்கள்), இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள்(ஐஐடிகள்) போன்றவற்றில் நீ இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் எதிர்ப் போம். சாதாரண பஞ்சாயத்துப் பள்ளியில் படிப்பவனுக்கு நீ இட ஒதுக்கீடு தந்தால் எங்களுக்குக் கவலையில்லை. அதில் படிப்பவன் எவனும் எங்களுக்குப் போட்டியாக வரப்போவதில்லை. ஆனால் உயர்நிறுவனங்களுக்கு வராதே.”
முட்டாள்களாக மக்களை வைத்திருப்பதற்கு என்ன என்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையையும் கையாளத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பார்ப்பன அறிவுஜீவிகள். உதாரணமாக தலித்துகளோடு சேர்ந்துகொண்டு “நாங்கள் ஒன்றும் தப்பு செய்யவில்லை, எல்லாம் பார்ப்பனர்அல்லாத மேல்சாதிக்காரர்கள்தான் உங்களை ஒடுக்குகிறார்கள்” என்பது போன்ற வாதங்களைச்சொல்லித் தங்கள் நிலை யைத் தக்க வைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
தமிழ் நாகரிகம் இருக்கட்டும். கொஞ்சம் உலகத்தைப் பற்றியும் கவலைப்பட்டாக வேண்டும். உலகத்தில்தானே தமிழ்நாடு இருக்கிறது? உலகத்தை இன்று மிகவும் அச்சுறுத்துகின்ற விஷயங்கள் இரண்டு. ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு. இன்னொன்று மாற்று ஆற்றலுக்கு வழிவகுக்காமல்/ வழியற்ற நிலையில் அணுக்கூடங்களைப் பெருக் கிச்செல்வது. அறிவுஜீவிகள் உட்பட எவரும் இவையிரண்டையும் தீவிரமான பிரச்சி னைகளாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு தனிப்போராட்டம் கூடங்குளத்தில் தொடர்ந்து ஓராண்டுக்குமேல் நிகழ்ந்துவந்தபோதும் தமிழக அறிவுஜீவிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்திய அளவில் அதன் செல்வாக்கு பரவவில்லை. கட்சிகளோ அவதூறு செய்தன. இம்மாதிரிச் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இன்னும் ஐம்பது வருடங்களேனும் உலகமே பிழைத்திருக்குமா, அல்லது அழிந்துவிடுமா என்னும் கேள்விகள் எழுந்துள்ளன. முதலில் உலகத்தைக் காப்பாற்றுங்கள், பிறகு தமிழ் நாகரிகத்தைப் பிறர் ஏற்றுக்கொள்வதைப் பற்றிக் கவலைப்படலாம்.
அமெரிக்காவின் ஆதிக்கத்தை,
அதற்குச் சார்பான பன்னாட்டுக்குழுமங்களின் ஆதிக்கத்தை,
அதற்குச் சார்பான உலகமயமாக்கல் கொள்கையை,
அதற்குச் சார்பான பார்ப்பனியத்தை,
அதற்குச் சார்பான இன்றைய இந்திய-தமிழக அரசியல்வாதிகளை,
அவர்களது சாதி, பண அடிப்படையிலான அரசியலை,
எதைவேண்டுமானாலும் “இனாமாக” அல்லது “மலிவுவிலையில்” வழங்கி ஆட்சியைப் பிடிக்கும் அவர்களது பேர அரசியலை-
இவற்றையெல்லாம் முதலில் எப்படி எதிர்த்து வீழ்த்துவது என்று யோசியுங்கள். பின்னால் தன்னால் நல்லது நடக்கும்.