ஏனோ நாம் ஆங்கிலத்திற்கோ இந்திக்கோ தரும் மரியாதையை நமது தாய்மொழி யான தமிழுக்குத் தருவதற்கு மறுக்கிறோம். தமிழர்களாகப் பிறந்தும், நமக்குள் ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம், இந்திக்காரனோ வடநாட்டுக்காரனோ வந்தால் விழுந்துவிழுந்து அரைகுறை இந்தியிலாவது பதில் சொல்கிறோம். ஆங்கிலத்தைக் கற்பதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்குகூடத் தமிழுக்குச் செலவிடுவதில்லை.
பலசமயங்களில் நமது பேச்சிலும் எழுத்திலும் கையாளும் சொற்களும் தொடர் களும் ஆங்கிலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. மேலும் சிற்றிதழ்கள் பெருகியபிறகு, அவரவர் இஷ்டத்துக்கு-மரபு கொஞ்சமும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யாமல்-சொற்களை உருவாக்கும் தன்மையும் வந்து விட்டது. ஆங்கிலத்தை இலக்கணபூர்வமாகக் கையாளுவதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்கையும் தமிழைச் சரிவர அறிந்துகொள்வதற்குச் செலவிட மனம்வராத அலட்சிய மனப்பான்மை. பல ஆங்கிலப் பத்திரிகைகள் know your English மாதிரியான தொடர்களை வெளியிட்டு வருகின்றன. (“your” இங்கிலீஷாம், அது ஏதோ நமது தாய்மொழி போல! It is always, and ever will be, Englishman’s English only.) அதனால் தமிழைக் கையாளுகின்ற முறை பற்றிச் சற்றே தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. இன்றைக்கு இரண்டு சொற்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
புரிதல்-புரிந்துகொள்ளுதல்
பலபேர் இப்போதெல்லாம் அவன் புரிந்துகொண்டான் என்பதைப் புரிந்தான் என்றே எழுதுகிறார்கள். இது தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பதற்கு பதிலாக தவறான புரிதல் என்கிறார்கள். இம்மாதிரிக் கையாளுவது பிழை.
புரிதல் என்றால் செய்தல். அதனால்தான் “ஆட்சிபுரிந்தான்”, “தவறு புரிந்தான்” போன்று அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நான் சொன்னதை “அவன் புரிந்தான்” என்றால் அது நான் சொன்னதை அறிந்துகொண்டான் என்ற அர்த்தத்தைத் தராது, நான் சொன்னதைச் செய்தான் என்ற பொருளையே தரும்.
புரிந்துகொள்ளுதல் என்றால் ஒன்றை மனத்திற்குள் சரியான தன்மையில் வாங்கிக்கொள்ளுதல். கொள்ளுதல் என்ற சொல் மிகை என்று கருதி இப்படிப் புரிதல் என்றே கையாளுகிறார்கள் போலும்!
பழையகாலத்தொடர் ஒன்று-நலம்புரி கொள்கை நான்மறையாளர்….இங்கே நலம்புரிகொள்கை என்பதற்கு நல்லதைச் செய்கின்ற கொள்கை உடைய என்று தான் பொருள்.
உன்னுடைய புரிதல் தவறு என்றால் அர்த்தம்-your doing is not correct.
உன்னுடைய புரிந்துகொள்ளுதல் தவறு என்றால் அர்த்தம்- your understanding is not correct.
ஆங்கிலத்திலும் understanding என்ற சொல் இருக்கிறது. புரிந்துகொள்ளுதலில், கொள்ளுதலை விட்டுவிட்டதுபோல, understanding-இல் under-ஐ விட்டுவிடுவார் களா? (வெறும் ஸ்டேண்டிங் வேறு, அண்டர்ஸ்டேண்டிங் வேறு என்பது உங்க ளுக்கு நன்றாகவே தெரியும். அதுபோலத்தான் புரிதல் வேறு, புரிந்துகொள்ளுதல் வேறு.)
எதிர்மறை-நேர்மறை
உடன்படுதல் என்ற அர்த்தத்தில் இக்காலத்தில் நேர்மறை என்ற சொல்லைக் கையாளுகிறார்கள். “இது நேர்மறைக் கூற்று” என்கிறார்கள். “அவன் நேர்மறையாகப் பேசினான்” என்கிறார்கள். இவை “இது உடன்பாட்டுக்கூற்று”, “அவன் உடன்பட்டு (அல்லது ஒப்புதலோடு) பேசினான்” என்று வரவேண்டும்.
பாசிடிவ்-நெகடிவ் போலத் தமிழிலும் இருக்கவேண்டும் என்று கருதி எதிர்மறைக்கு எதிராக நேர்மறை என்ற சொல்லை உருவாக்கி விட்டார்கள் போலும்! தமிழ் மரபு உடன்பாடு, எதிர்மறை என்பதுதான். அவன் உடன்பட்டுப் பேசினான், எதிர்மறையாகப் பேசினான். அவன் நேர்மறையாகப் பேசினான் என்றால் தவறு.
எதிர்மறை-என்பது எதிராக மறுத்துரைப்பது என்ற தொடரிலிருந்து உருவாகிறது.
மறுப்பது என்பது இங்கே “மறை” என்றாகிறது. மறை என்றால் கூற்று என்றோ, வேதம் என்றோ அர்த்தமில்லை. (“மறைவாக வை”, “மறைத்துக்கொள்” என்று ஓர் அர்த்தம் இருக்கிறது.) அதனால் ‘நேர்மறை’ என்றால், “(ஓர் ஆளை) நேராக மறுப்பது”, ‘எதிர்மறை’ என்றால் “(ஓர் ஆளை) எதிராக மறுப்பது” என்றுதான் பொருள்கொள்ளமுடியும். (துரதிருஷ்டவசமாக, இரண்டுமே ஒன்றுதான்!)