தனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை

தனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை

(இக்கட்டுரை, 1980இல் எழுதப்பட்டது. 1980ஆம் ஆண்டின் – பன்னிரண்டாம் ஆண்டு பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கட்டுரைத் தொகுப்பில் இது இடம் பெற்றுள்ளது. எவ்வித மாற்றமுமின்றி இங்கு வெளியிடப்படுகிறது.)

ஒரு படைப்பின் இலக்கியக் கொள்கை என்பது நான்கு விஷயங்களைச் சார்ந்து நிற்கிறது. படைப்பவனின் இலக்கு, படைப்பவனின் பாடும் நெறி, பாடுகின்ற பொருள், இரசிகர் அல்லது நுகர்வோரின் எதிர் விளைவு என்பன அவை. எந்த இலக்கியத்தின் கொள்கையையும் சுட்டிக்காட்டும்போது இந்நான் கையும் விடாமல் விளக்குவது சிறப்பாகும். ஆனால் இந்நாளைய ஆசிரியர் சிலர் இலக்கியக் கொள்கை என்பதில் அந்த இலக்கியத்தின் புறக்கட்டமைப்பை மட்டும் விரிவாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இந்த நோக்கில், தனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை என்னவாக இருக்கலாம் என்று காண்பது இக் கட்டுரையின் இலக்கு ஆகும்.

தனிப்பாடல் திரட்டு என்பது ஒரே காலத்தில் ஒருவர் பாடிய பாக்களின் திரட்டு அன்று. ஏறத்தாழக் கி.பி. பதினோராம் நூற் றாண்டு முதலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பலவேறு சூழ்நிலைகளில் பாடிய் பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு என வழங்கப்படுகிறது. இதில் ஒளவையார் முருகனைப்பற்றிப் பாடிய பாடலையும் காணலாம்; முதல் நாவலாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம் காளை மாட்டைப் பாடும் பாட்டினையும் காணலாம். இப்படிப் பரந்துபட்ட போக்கினையுடைய, ஒரு நெறிப்படாத பாடல்களின் தொகுப்பிற்கு இலக்கியக் கொள்கை வரையறுப்பது சற்றே கடினமான செயலே ஆகும்.

இதுவரை பல தனிப்பாடல் திரட்டுப் பதிப்புகள் வெளிவந்துள்ளன. புறத்திரட்டு, தமிழ் நாவலர் சரிதை, பன்னூல் திரட்டு போன்றவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை. பெருந்தொகை என்ற பெயரில் மு. இராகவையங்கார் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் ஒரு தொகுப்பினை வெளியிட் டுள்ளார். இவற்றுள் கா.சு. பிள்ளை பதிப்பே பெரும்பாலானவர் திட்டப்பதிப்பாகக் கையாளுவது எனலாம்.

இத்தனிப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அடிப்படையில் உருவானது. ஒரு சிறு நிகழ்ச்சியின் திட்டமான விளக்கம், அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப் பாடு என்பதைப் பெரும்பாலான பாக்களில் காணலாம். இப்படிப் பட்ட பாடல்களில் இன்றைய சிறுகதை இலக்கணம் முழுதும் சிறப்புறப் பொருந்தி வருவதைக் காணலாம்.

பொருள்வகையால் நோக்கும்போது, சில தன்னுணர்ச்சிப்பாடல்களையும் காணலாம்; பிறர் தூண்ட, அதற்கென உணர்ச்சியின்றிப் புலவர் பாடிய பாடல்களையும் காணலாம். சத்திமுற்றப் புலவரின் “நாராய் நாராய் செங்கால் நாராய்” என்ற பாடல் அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்ற பாடல்கள் புலவரின் தன்னுணர்ச்சி வெளிப்பாடாக அமைந்தவை. எனவே தன்னுணர்ச்சிப்பாடலின் இயல்புகளைத் தம்மகத்தே கொண்டவை. தம் ஆழ்ந்த உணர்சசி வெளிப்பாட்டாலும் கற்பனைத் திறத்தாலும் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மிக்கவை. அதேசமயம், “க என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடுக” என்று யாரோ ஒருவர் சொல்ல, அதற்கேற்பப் புலவர்கள் பாடிய பாட்டும் தனிப்பாடல் திரட்டில் உண்டு. இம்மாதிரிப் பாடல்கள் இரண்டாம் வகையின. உணர்ச்சியின்றிப் பாடியவை.

தன்னுணர்ச்சிப் பாக்களை மேலும் பாகுபடுத்திக் காணும்போது,
~-இறைவனின்மீது பாடிய பக்திப் பாட்டுகள்
~-அறக்கருத்துகளை உணர்த்தும் பாட்டுகள்
~-இவையிரண்டிலும் அடங்காத பல்வேறு பொருள்களைப் பற்றிய பாட்டுகள்
என ஒருவாறு பிரிக்கலாம்.

உதாரணமாக, “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு” என்று தொடங்கும் பாட்டு (கம்பர் இயற்றியதாகச் சொல்லப் படுவது), கடவுள்மீது பாடிய பக்திப் பாட்டு. இதுபோன்றவை எண்ணிக்கையில் குறைவு.

அறக்கருத்துகளை உணர்த்தும் பாடல்கள் முதலில் மிகுதியாகக் காணப்படுகின்றன. காலம் செல்லச்செல்ல, அறநோக்கம் அருகிவிடுகிறது, பொருள்நோக்கம் ஒன்றே புலவரை ஆட்டிவைக்கிறது.

பாடாண் பாடல்கள் பல காணப்படுகின்றன. இவை கற்பனை வளம் மிக்கவை. சான்றாக,

என் சிவிகை, என் கவிகை, என் துவசம், என் கவசம்
என் பரிஈது, என் கரி ஈது என்பரே-மன் கவன
மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற
பாவேந்தரை வேந்தர் பார்த்து

போன்ற பாக்கள், கற்பனை வளமிக்கவை, இதே போன்ற கருத்துகளுடைய நந்திக் கலம்பகப் பாக்களோடு ஒப்பிட்டு நோக்கவேண்டியவை. அறக்கருத்துள்ள பாக்கள் இவ்வாறே, நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை போன்ற அறநூற் பாக்களுடன் ஒப்பு நோக்கிப் பயிலப்பட வேண்டியவை. இவற்றில் பயன்வழிக் கொள்கை அல்லது அறவாழ்வியற் கொள்கை (பிராக்மாடிக் தியரி) பயின்றுவருவதைக் காணலாம். பயன் வழிக்கொள்கை, இவ்வுலகினைப் பாடும் நடப்பியற் கொள்கைக்கும், வீரச்செயல்கள், அற்புதச்செயல்கள், காதல் முதலியவற்றைப் பாடும் புனைவு நவிற்சிக்கும் எதிரானது. அறக்கருத்துகளைப் பாடுவது இலக்கியக் குறிக்கோள் என எண்ணுவது. பிற்கால ஒளவையார் தனிப் பாடல்கள் பெரும்பாலும் இப்போக்கின.

சில தன்னுணர்ச்சிப் பாடல்கள், அக்காலப் புலவர் நிலையை மிக அழுத்தமாக உணர்த்துகின்றன. இவை நடப்பியல் கொள்கை சார்ந்தவை. “தமிழை ஏன் படித்தோம்” என்று சில புலவர்கள் வருந்திப் பாடுவதில் அவர்களின் ஏக்கத்தைத் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

புல்லுக்கட்டும் விறகும் சுமந்தபேர் பூர்வகாலத்துப் புண்ய வசத்தினால்
நெல்லுக்கட்டும் பணக்கட்டும் கண்டபின் நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்

என்று அழுத்தமான ‘உம்மை’ வாயிலாக ஏக்கத்தை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. மேலும் தொடர்கிறார் அக்கவிஞர்:

சொல்லுக்கட்டும் புலவரைக் கண்டால் தூறிப்பாய்ந்து கதவை யடைத்தெதிர்
மல்லுக்கட்டும் மடையரைப் பாடவோ மலைச்சாரலில்வாழ் பெரியம்மையே

இதில் துயரமும் ஆற்றாமையும் ஏக்கமும் தமிழருமை தெரியாத மடையர் மீது கோபமும் இரண்டே அடிகளில் ‘தூறிப் பாய்ந்து’ வருவதைக் காண்கிறோம். இராமச் சந்திரக் கவிஞரின் இப்பாடல் நடப்பியல் நெறிக்கு நல்ல உதாரணம்.

இதுவரை புலவர்கள் தம் உள்ள உணர்ச்சிதூண்டப் பாடிய தன்னுணர்ச்சிப் பாக்களைக் கண்டோம். இவை தனிப்பாடல் திரட் டில் மிகக் குறைந்த பங்கினவே. பெரும்பகுதி பிறர் தூண்டல் வழி உருவானவை. இவற்றை இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம்.

1. பிற புலவருடன் போட்டியிட்டு வாதில் வெல்லவேண்டி, அல்லது தம் திறனைக் காட்டப் புலவர்கள் பாடியவை. இப்பாடல்களுக்குப் பிறர் எழுத்து, அசை, சொல், அடி, தொடக்கம், முடிவு, ஒப்புமை, சந்தர்ப்பம் இவற்றை எடுத்துக் கொடுப்பர். இப் புலவர்கள் தமக்குச் சொல்லுக்கட்டும் திறமை உண்டென்று நிரூபிக்க, அந்நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பாடுவர். தம்மைப் பிறர் ஆசுகவி என்று போற்றவேண்டும் என்ற ஆரா விருப்பத்தை இப்பாடல்கள் உணர்த்துகின்றன.

எடுத்துக்காட்டாக, ஐந்து ‘டு’ எழுத்துகள் தொடர்ந்து அமையப் பாடுமாறு கேட்க, காளமேகப் புலவர் பாடுகிறார்:

ஓ கா மா வீ உரைப்பன் டு டு டு டு டு
நாகார்க் குடந்தை நகர்க்கதிபர் – வாகாய்
எடுப்பர், நடமிடுவர், ஏறுவர், அன்பர்க்குக்
கொடுப்பர் அணிக்குக் குழைவர்.

குடந்தை நகர்க்கு அதிபர் சிவபெருமான், எடுப்பர் ஓடு, நடமிடுவர் காடு, ஏறுவர் மாடு, அன்பர்க்குக் கொடுப்பர் வீடு, அணிவர் குழைக்குத் தோடு எனக் கூட்டிப் பொருள்கொள்ள வேண்டும். இதேபோல

~ஒன்று முதல் பதினெட்டு எண் அமையப் பாடியது,
~பன்னிரு இராசிகளும் அமையப் பாடியது,
~பொன் ஆவன இலை காய் பூ என வருமாறு பாடியது,
~கவ் வருக்கத்திலே எழுத்துகள் அமையப் பாடியது,
~தவ் வருக்கப் பாடல்,
~நவ் வருக்கப் பாடல்
-இப்படி எல்லையற்றுச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் எவ்வித நேரிய உணர்வெழுச்சியையும் (ஜெனூயின் இன்ஸ்பிரேஷன்) காணமுடியாது. வெறும் சொல்லடுக்குகளை இலக்கண வரம்புக்கு உட்பட்டு அமைக்கும் முறையையே காணலாம்.

2.தம்மைக் காக்கும் புரவலர்கள் வற்புறுத்தும்போது, அவர்களை மகிழ்விக்கவேண்டிப் புலவர்கள் பாடியவை.
இவற்றில் புரவலர்களை நேர்படப் புகழ்வன பல. அப் புரவலரைப் பெண்கள் பலர் விரும்புவதாகக் கூறிப் பாடுவர். இப்பாடல்களில் காணப்படுவது காதலோ அன்போ அல்ல. வெறுப்பூட்டும் காமச்சுவை அளவு கடந்து செல்வதையே காணமுடியும்.

3. இவையன்றிப் புலவர், எள்ளல், நகைச்சுவை, வேடிக்கை இவற்றிற்காக வேண்டிப் பாடிய பல பாக்களைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கம்பர், தம் இராமாயணத்தில் ஓர் இடத்தில் ‘நாராயணன்’ என்ற சொல்லை ‘நராயணன்’ எனக் குறுக்கி, எதுகை நோக்கி அமைத்திருக்கிறார். அதைக் காளமேகப் புலவர் எள்ளுகிறார்:

நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமற் சொன்ன உறுதியால் – நேராக
‘வார்’ என்றால் ‘வர்’ என்பேன், ‘வாள்’ என்றால் ‘வள்’ என்பேன்
‘நார்’ என்றால் ‘நர்’ என்பேன் நன்.

இதில் ‘நன்’ என்ற சொல் முத்தாய்ப்பாக அமைந்து சுவையைத் தருகிறது. நாராயணனையே நராயணன் என்று குறுக்கிச் சொல்லி விட்டதால் ‘நான்’ என்பதை ‘நன்’ என்றுதான் சொல்லுவேன் என்ற எகத்தாளத்தைக் காணமுடிகிறது. இப்படிப்பட்ட எள்ளல் தனிப் பாடல்களுக்கே உரிய சொத்து. தமிழில் எள்ளல் இலக்கியம் என ஒன்று தனியே இல்லை. அக்குறையை இப்பாடல்கள் நிறைவு செய்கின்றன.

வலிந்து ஒப்புமை கண்டு சிலேடையாக (இரட்டுற மொழிதலாக)ப் பாடுவதும தனிப்பாடலில் மிக அதிகமாகக் காணும் ஒரு நெறி. காளமேகப் புலவர் இத்துறையிலே கரைகண்டவர். ஆமணக்கு-யானை, பாம்பு-எலுமிச்சம்பழம், வைக்கோல்-யானை, பாம்பு-வாழைப்பழம், பாம்பு-எள், திருமால்-முறம், நிலவு-மலை, தேங்காய்-நாய், மீன்-பேன், பனைமரம்-வேசி, தென்னைமரம் – வேசி, கண்ணாடி-அரசன் என இருபத்துநான்கு பாடல்கள் காளமேகப் புலவர் பாடியவை உள்ளன.

இப்பாடல்களில் சில அடிப்படையான வடிவப் பண்புகளைக் காணலாம். இவை செம்மையான அமைப்புக்கு மட்டுமே முதலிடம் தருகின்றன. இதயபூர்வமா உணர்ச்சிக்குச் சிறப்பிட மில்லை. எள்ளல், நையாண்டி, இரட்டுற மொழிதல் போன்ற உத்திகளை மிகைபடக் கையாளுகின்றன. செம்மையான வடிவம் தருதல் என்ற கொள்கையை இவர்கள் கையாளுவதை நோக்கும் போது, உருவவியற் கொள்கை (ஃபார்மலிசம்) என்பதைத் தனிப்பாடலின் இலக்கியக் கொள்கையாக எண்ணலாம். இரட்டுற மொழிதல், உயர்வுநவிற்சி போன்ற பல அணிகளையும் கையாண்டு அழகுபடுத்துவதை இத்தனிப்பாடல் ஆசிரியர்கள் கொள்கை எனலாம். இவற்றில் யமகம், திரிபு போன்ற சொல்லணிகள் சிறப்பிடம் பெறுகின்றன. இவ்விதம் நோக்கும் போது, வெளிப்பாட்டியல் கொள்கை (எக்ஸ்ப்ரெசிவ் தியரி) எனக் கொள்ளவும் இடம் இருக்கிறது.

இலக்கியம்