டிராகுலா

இன்றைய இலக்கிய நூல்கள் வரிசையில் எனது கல்லூரிக்காலத்தில் படித்த ஒரு நாவலை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பயங்கர நாவல், காதிக் நாவல், வேம்பயர் நாவல் என்றெல்லாம் சொல்லப்படும் ஒரு இலக்கிய வகையை உருவாக்கிய கதை அது. டிராகுலா என்று பெயர். பேய்க்கதை. நான் 1967இல் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ஒரு டிராகுலா கதை திரைப்படமாக வந்தது. அதைப் பார்த்துவிட்டு (வேலூரில் தினகரன் என்ற தியேட்டர். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.) இரவெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்னாலேயே அந்தக் கதையை நான் படித்திருந்தேன். எழுதியவர் பெயர் பிராம் ஸ்டோகர். இலக்கிய அறிஞர்கள் இம்மாதிரிக் கதைகளை இலக்கியம் என்ற வகைக்குள் சேர்க்க மாட்டார்கள். ஆயினும் என்னைப் பொறுத்தவரை இதுவும் இலக்கியம்தான்.

கதை, கடிதங்கள், டயரிக்குறிப்புகள், கப்பல் குறிப்புகள் வாயிலாகப் பெரும் பாலும் சொல்லப்படுகிறது. கதை நிகழுமிடங்கள் டிரான்சில்வேனியாவும் இங்கிலாந்தும். கதை ஓராண்டில் மே 3ஆம் நாள் தொடங்கி நவம்பர் 6இல் முடிகிறது. இந்த நாவல் 1897இல் வெளிவந்தது.

ஜானதன் ஹார்க்கர் ஒரு வழக்கறிஞன். அவன் கார்ப்பேதிய மலையிலுள்ள டிராகுலா என்ற பிரபுவின் மாளிகைக்குச் செல்கிறான். டிராகுலா பிரபு லண்டனில் ஒரு மாளிகை வாங்க உதவுவது அவன் வேலை. டிராகுலா ஒரு வேம்பயர். வேம்பயர் என்றால் இறந்தபிறகும் உயிருடன் மற்றொரு உடலில் உலவும் ஒரு பேய். கூர்மையான கடைவாய்ப் பற்கள். இரத்தம்தான் அவன் உணவு. உள்ளங்கையில் மயிர் இருக்கும். வேறு உருவில் இருந்தாலும் கண்ணாடியில் அவன் உண்மை வடிவம் தென்படும்…இத்தகைய பேய்க்கதைகளை நீங்களும் படித்திருப்பீர்கள்.

டிராகுலாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஹார்க்கர் அவன் மாளிகையில் சுற்றுகிறான். இரண்டு வேம்பயர் பெண்களைச் சந்திக்கிறான். டிராகுலா முதலில் அவனைக் காப்பாற்றினாலும் பிறகு அந்தப் பெண்களுக்கு ஹார்க்கரை இரையாக விட்டுவிட்டு வெளியே செல்கிறான். ஹார்க்கர் தப்பிக்கும் காட்சிகள் மயிர்க்கூச்செறிய வைப்பவை. எப்படியோ தப்பித்து புடாபெஸ்டில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.

டிராகுலா ஒருசில மண்பெட்டிகளுடன் தன் மாளிகையிலிருந்து லண்டனுக்குக் கப்பலில் வருகிறான். கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிடுகின்றனர். கேப்டன் மட்டுமே அதை ஓட்டவேண்டி உயிருடன் விடப்படுகிறான். லண்டன் துறைமுகத்தை அடையும் முன்பே, ஒரு தரைப்பகுதியில் நாய்போன்ற ஒரு மிருகம் கப்பலில் இருந்து வெளியேறுகிறது.

லண்டனில் வசிக்கும் மீனா மரே என்பவள், ஹார்க்கருக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவளது தோழி லூசிக்கும் ஹோம்வுட் என்பவனுக்கும் திருமணம் நிகழஇருக்கிறது. அவனது நண்பர்கள் டாக்டர் செவார்ட், குவின்சி மாரிஸ் என்போர். லூசியைக் காண வருகிறாள் மீனா. அவளுக்கு ஹார்க்கர் பற்றிக் கடிதம் வந்ததால் புடாபெஸ்ட் சென்று சாகும் தருவாயில் இருந்த அவனைக் காப்பாற்றி அழைத்துவருகிறாள்.

லண்டனில் லூசி நோய்வாய்ப்படுகிறாள். தூக்கத்தில் நடக்கிறாள். அவளது நோயைக் கண்டுபிடிக்க வந்த பேராசிரியர் வான் ஹெல்சிங், அவளுக்கு அளவுக்கதிகமான இரத்தசோகை இருப்பதைக் காண்கிறார். இது பேயின்வேலை என்று கணிக்கும் அவர் பூண்டுகளை அவள் அறையில் போட்டு அவள் கழுத்திலும் மாலையாக அணிவிக்கிறார். ஆனால் அவள் தாய் அவற்றை அகற்றிவிடுகிறாள். செவார்டும் ஹெல்சிங்கும் இல்லாத போது ஓநாய் ஒன்று வீட்டுக்குள் புகுகிறது. அதிர்ச்சியால் தாய் இறக்கிறாள். பிற்பாடு லூசியும் இறந்துபோகிறாள்.

லண்டன் செய்தித்தாள்களில் ஓர் அழகிய பெண் உருவம் இரவில் பிள்ளைகளை எடுத்துச்செல்வதாகச் செய்தி வருகிறது. லூசி வேம்பயராக மாறிவிட்டதை அறிந்த வான் ஹெல்சிங், நண்பர்களுடன் சவப்பெட்டியைத் திறந்து பார்க்கும்போது அவள் உயிருடன் இருப்பதுபோல் காணப்படுகிறது. வாயில் இரத்தம். அவள் தலையை வெட்டி, இதயத்தில் சிலுவையைப் பாய்ச்சி, வாயில் பூண்டு திணித்து சவப்பெட்டிக்குள் இடுகிறார் பேராசிரியர். திருமணம் செய்துகொண்ட ஹார்க்கரும் மீனாவும் இவர்களுடன் இணைகின்றனர்.

இடையில் டிராகுலா டாக்டர் செவார்டின் பைத்தியக்கார நோயாளி ரென்ஃபீல்டுடன் தொடர்புகொள்கிறான். அவன் மூலமாக செவார்டு குழுவினரின் திட்டங்களை அறியும் டிராகுலா, மூன்று முறை மீனாவைத் தாக்குகிறான். அவன் மீனாவைத் தன் இரத்தத்தையும் குடிக்க வைக்கிறான். அதனால் அவளும் ஒரு வேம்பயராக மாறுகிறாள். வேம்பயர்கள் மண்ணில் மட்டுமே ஓய்வெடுக்க முடியும் என்பதால் அவனது வீட்டைத் தாக்கும் செவார்டு குழுவினர் அவன் கொண்டுவந்த மண் பெட்டிகளை புனிதப் படுத்தி, அவனுக்குப் பயன்படாமல் செய்கின்றனர். டிராகுலாவை அவனது இருப்பிடத்தில் சிறைப்படுத்த முயலுகின்றனர். ஆனால் அவன் மீதியிருக்கும் ஒரு மண்பெட்டியுடன் தன் டிரான்சில்வேனியா வீட்டுக்கு தப்பித்துச் செல்கிறான்.

மீனாவுக்கும் அவனுக்கும் மனத்தொடர்பு இருப்பதால், அவளை ஹிப்னடைஸ் செய்து அவள் மூலமாக அவன் செல்லும் வழியை அறிகின்றனர் செவார்டு குழுவினர். ருமேனியாவில் செவார்டு குழு இரண்டாகப் பிரிகிறது. பேராசிரியரும் மீனாவும் டிராகுலாவின் மாளிகைக்கு முன்னதாகவே சென்று வேம்பயர் பெண்களைக் கொல்கின்றனர். ஹார்க்கரும் ஹோம்வுட்டும் படகில் டிராகுலாவைத் துரத்துகின்றனர். குவின்சியும் செவார்டும் அவனைத் தரைமார்க்கமாகப் பின்தொடர்கின்றனர். இறுதியில் தன் பெட்டியை தன்தோழர்கள் உதவியால் ஒரு வேகனில் டிராகுலா ஏற்றும்போது நேரடியாகத் தாக்கி ஹார்க்கர் அவன் கழுத்தை வெட்டுகிறான், குவின்சி அவன் மார்பின் சிலுவையைப் பாய்ச்சுகிறான். டிராகுலா தூள்தூளாக உதிர்ந்து அழிகிறான். ஆனால் குவின்சி இறந்துபோகிறான். மீனா வேம்பயர் நிலையிலிருந்து மீள்கிறாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் ஹார்க்கருக்கும் பிறக்கும் ஆண்குழந்தைக்கு குவின்சி எனப் பெயர் இட்டதாகத் தெரியவருகிறது.

ப்ராம் ஸ்டோக்கர் ஏழாண்டுகள் மத்திய ஐரோப்பாவில் நிலவிய வேம்பயர் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் படித்து இந்த நாவலை எழுதியதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 1885 அளவிலேயே ரைடர் ஹேகார்டு, ருட்யார்ட் கிப்லிங், ஆர் எல் ஸ்டீவன்சன், கானன் டாயில், எச் ஜி வெல்ஸ் போன்ற ஆசிரியர்கள் தங்கள் இயற்கைமீறிய கதைகள் வாயிலாக இந்தக் கதையின் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் மனநிலையைத் தயார் செய்து வைத்திருந்தனர். எனவே முதலில் ஒரு வீரசாகசக் கதையாகவே இது வாசிக்கப்பட்டது. ஆனால் இது திரைப்படமாக வந்தபிறகு சிறந்த ஒரு பேய்க்கதையாக வாசிக்கப் படலாயிற்று. 1922இல் நுஸ்ஃபெராட்டு என்ற பெயரில் ஆசிரியர் அனுமதி பெறாமலே நாடகமாக அரங்கேற்றப்பட்டு பெரும் வெற்றி யடைந்தது.

வெளிவந்தவுடனே விமரிசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல் இது. ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்தை உருவாக்கிய கானன் டாயில், “பல ஆண்டுகளில் நான் மிகவும் சுவைத்த பேய்க்கதை இது” என்று ஸ்டோக்கருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவ்வளவு விறுவிறுப்பு. இரத்தத்தை உறைய வைக்கும் சித்திரிப்புகள். எனினும் இந்த நாவலின் வாயிலாகப் பெரும்பணம் ஒன்றும் ஸ்டோக்கருக்குக் கிடைக்க வில்லை. ஏழையாகவே இறந்தார்.

இக்கதை இன்றுவரை பலமுறை பல வடிவங்களில் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தும் பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 125 ஆண்டுகள் கழித்தும் இதற்கு இணையான பேய்க்கதை எதுவும் இன்றுவரை தோன்றவில்லை என்பது வியப்புக்குரிய செய்தி. நம் நாட்டுப் பேய்க்கதைகள் எல்லாமே வெறும் தமாஷ்தான்.

இலக்கியம்