ஜேன் அயர் என்பது சார்லட் பிராண்ட் என்ற பெண் எழுத்தாளரால் எழுதப் பட்ட நாவல். வெளிவந்த ஆண்டு 1847. ஒரு பெண்ணின் வளர்ச்சி குறித்த நாவலாகவும், ஆங்கிலச் சமூகத்தின் ஒழுக்கம் -பழக்கவழக்கங்கள் -நெறிமுறைகள் குறித்த நாவலாகவும் இது உள்ளது என்ற காரணத்தால் ஜேன் ஆஸ்டினின் பிரைட் அண்ட் பிரெஜுடிஸ் என்ற நாவலுடன் இதுவும் இன்றுவரை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜேன் அயர் என்ற அநாதைப் பெண் திருமதி ரீட் என்ற செல்வமிக்க, கொடுமைக்காரியான அத்தையினால் வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு வேண்டிய சிறுசிறு உதவிகளை பெஸ்ஸீ என்ற வேலைக்காரி செய்கிறாள். ஒரு நாள் தன் அத்தை மகனுடன் ஜேன் சண்டையிட்டாள் என்று சொல்லி, அவளை அவள் மாமா இறந்த அறையில் அ்டைக்கிறார்கள். அங்கு பேயைப் பார்த்ததாக பயந்துபோன ஜேனை லாயிட் என்ற மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லோவுட் என்ற ஒரு பள்ளியில் சேர்க்கிறார்கள்.
அந்தப் பள்ளியின் தலைமையாசிரியன் பிராக்கிள்ஹஸ்ட் ஒரு போலித்தனமான, கொடிய, வதைக்கின்ற மனிதன். அந்தப் பள்ளியில் ஜேனுக்கு ஹெலன் பர்ன்ஸ் என்ற ஒரு நல்ல தோழி கிடைக்கிறாள். ஆனாலும் அவள் ஒரு கொள்ளை நோயில் இறந்துபோகிறாள். பிறகு பள்ளியின் தலைமை மாறும்போது ஜேனின் நிலையும் மாறுகிறது. அப் பள்ளியிலே படித்த பிறகு அங்கேயே ஆசிரியையாகவும் ஆகிறாள். பிறகு வேறிடங்களுக்கு விண்ணப்பிக்கிறாள்.
தார்ன்ஃபீல்டு என்ற பண்ணைவீட்டில் அடீல் என்ற பெண்ணுக்கு ஆசிரியை மற்றும் பாதுகாப்பாளியாக இருக்கும் பணி கிடைக்கிறது. அந்த எஸ்டேட் டின் மேற்பார்வை திருமதி ஃபேர்பாக்ஸ் என்ற நல்ல பெண்மணியிடம் இருக்கிறது. அதன் உரிமையாளர் ரோசஸ்டர் என்ற உணர்ச்சிமிக்க வாலிபர். அவர்மீது ஜேனுக்கு ஈடுபாடு ஏற்படுகிறது.
ரோசஸ்டரை ஒருமுறை தீயிலிருந்து ஜேன் காப்பாற்றுகிறாள். அந்தத் தீ விபத்துக்குக் காரணம் கிரேஸ்பூல் என்ற வேலைக்காரி என்கிறார் ரோசஸ்டர். ஆனால் அதை ஜேன் நம்ப இயலவில்லை. அது ஒரு மர்ம மாளிகையாக உள்ளது.
ஒருசமயம் ரோசஸ்டரின் உறவினளான பிளாஞ்ச் இன்கிராம என்பவள் அந்த மாளிகைக்கு வருகிறாள். ரோசஸ்டருக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கும் என்று ஜேன் எதிர்பார்க்கிறாள். ஆனால் ரோசஸ்டர் ஜேன்மீது தன் காதலை வெளிப்படுத்துகிறார். அவளும் ஒப்புக் கொள்கிறாள்.
திருமண நாளன்று இருவரும் மணம்புரிய இருக்கும் நிலையில், மேசன் என்பவன் ரோசஸ்டருக்கு ஏற்கெனவே பெர்த்தா என்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவள் பைத்தியம் என்று ரோசஸ்டர் கூறினாலும், ஒரு மனைவி ஏற்கெனவே இருப்பதனால் இரண்டாவது மணம் புரிய அவரால் இயலவில்லை. ரோசஸ்டர் அனைவரையும் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று பைத்தியமான பெர்த்தாவைக் காட்டுகிறார். அவளைக் கட்டுக்குள் வைத்திருப்பதே கிரேஸ்பூல் என்ற வேலைக்காரியின் பணி. மனமுடைந்த ஜேன் தார்ன்ஃபீல்டை விட்டுச் செல்கிறாள்.
ஏறத்தாழ பிச்சைக்காரி நிலைக்கு வந்துவிட்ட ஜேனை மேரி, டயானா, செயின்ட் ஜான் ரிவர்ஸ் என்ற உடன்பிறந்தோர் மூவர் காப்பாற்றுகின்றனர். செயின்ட் ஜான் மூலமாக ஜேனுக்கு ஆசிரியை வேலையும் கிடைக்கிறது. ஒருநாள் ஜேனின் தாய்மாமன் ஜான் அயர் அவளுக்குப் பெரும் சொத்தினை விட்டு இறந்துவிட்டார் என்று செய்தி கிடைக்கிறது. மேலும் இந்த உடன்பிறந்தோர் மூவரும் ஜேனின் கஸின்கள் என்ற செய்தியும் தெரிய வருகிறது. ஜேன் தன் சொத்தினை இந்த மூவருடனும் சமமாகப் பகிர்ந்து கொள்கிறாள்.
செயின்ட்ஜான் ஜேனைத் திருமணம் செய்துகொண்டு இந்தியா போக நினைக்கிறார். ஆனால் ஜேனை ரோசஸ்டரின் குரல் அழைப்பது போலத் தோன்றுகிறது. உடனே ஜேன் தார்ன்ஃபீல்டுக்கு ஓடுகிறாள். தார்ன்ஃபீல்டு மாளிகை எரிந்து கரியாகக் கிடக்கிறது. பெர்த்தா அதை எரித்துவிட்டாள் என்றும், அப்போது அவளும் இ்றந்து விட்டாள் என்றும் தெரியவருகிறது. பணியாளர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ரோசஸ்டரின் கண்களும் ஒரு கையும் போய்விட்டன. அவர் இப்போது ஃபெர்ன்டீன் என்ற இடத்தில் வசிக்கிறார். இருவரும் இப்போது திருமணம் செய்துகொள்ளத் தடையில்லை. எனவே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஏறத்தாழ இரண்டாண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ரோசஸ்டருக்கும் ஒரு கண் பார்வை திரும்புகிறது. அவரால் தன் குழந்தையைப் பார்க்க முடிகிறது என்று ஜேன் தெரிவிப்பதுடன் இக் கதை நிறைவுபெறுகிறது.
நாவலில் உண்மையான துன்பம் என்பது எந்நிலையிலும் ஜேனுக்கு ஏற்படுவதில்லை. சிறுசிறு இடர்கள் வந்தாலும் அவை உடனடியாக நீங்கி விடுகின்றன, அவற்றுக்கு மாற்றாகப் பெரிய நன்மைகளும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட கதைகளைத்தான் காலங்காலமாக தமிழ் இரசிகர்கள் விரும்பி வந்திருக்கிறார்கள். கூடவே இனிய பாடல்களும் இருந்தால் யதேஷ்டம். ஏறத்தாழ எம்ஜிஆர் கதைகள் எல்லாவற்றின் ஃபார்முலாவும் இப்படியே இருப்பதைக் காணலாம்.
இந்த நாவலின் கதையும் தமிழில் சிற்சில மாற்றங்களுடன் சாந்தி நிலையம் என்ற திரைப்படமாக ஆக்கிக் கொள்ளப்பட்டது. இனிய கருத்துள்ள பாடல்களும் அதில் அமைந்திருந்தன. மேலும் ரோசஸ்டர் கண்பார்வை இழந்தது போன்ற பின்னிகழ்வுகள் படத்தில் இடம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டுப் பார்வையாளர்களுக்குப் பிடித்தமான ஒரு திரைப்படமாக சாந்தி நிலையம் அமைந்ததில் வியப்பில்லை.