திருக்குறளின் சிறப்பைப் பழங்காலத்தில் பலவிதமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் முக்கியமான ஒரு முறை, திருக்குறளைக் கையாண்டு நீதிநூல் எழுதுவதாகும். ஒரு பெரிய கவிஞரோ, மதத்தலைவரோ திருக்குறளை வைத்து நூல் எழுதும் போது அவரைப் பின்பற்றுவோர்க்குத் திருக்குறளைத் தாமும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இரண்டாவது, திருக்குறளை நேரடியாகப் பயிலாமல், அக்கவிஞருடைய நூலையே பயிலும்போதும், அவர் தேர்ந்தெடுத்துக் கையாண்ட குறட்பாக்களை அவற்றிற்குரிய உதாரணக் கதைகளோடு நன்கு புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படு கிறது. ஆனால் இதில் ஒரு குறையும் உண்டு-திருக்குறளை வைத்து நூல் எழுதியவரின் சார்பும் அதில் கலந்துவிடுகிறது.
சில சதக நூல்களிலும் குறள் அப்படியே எடுத்தாளப் பெற்றுள்ளது. பல வெண்பா நூல்கள் பழங்காலத்தில் திருக்குறளை ஈற்றடிகளாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. குமரேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, சினேந்திர வெண்பா, தினகர வெண்பா, முதுமொழி மேல்வைப்பு போன்ற நூல்கள் இப்படிப் பட்டவை. இவற்றில் சோமேசர் முதுமொழி வெண்பா பற்றிச் சிறிது காணலாம்.
சோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவரால் இயற்றப் பெற்றது. காப்புச் செய்யுள் நீங்கலாக திருக்குறளின் அதிகாரத்துக்கு ஒரு வெண்பா வீதம் 133 வெண்பாக்கள் உள்ளன. அதிகாரத்துக்கு ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளாக அமைக்கிறார். அக்குறட்பாவின் பொருளுக்கேற்ற ஒரு கதையினை முன்னிரண்டு அடியில் அமைக்கிறார். ஒவ்வொரு பாவிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் சோமேசா என்ற விளியைக் கொண்டுள்ளது.
சோமேசர் என்பது குளத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர். சோமேசர் என்பதற்கு நிலவின் (சந்திரனின்) தலைவன் என்று அர்த்தம். முதுமொழி என்ற சொல் திருக்குறளைக் குறிக்கிறது.
திருக்குறளுக்குரிய கதைகளைப் பெரியபுராணம், இராமாயணம், கந்த புராணம், பாரதம், திருவிளையாடற்புராணம் போன்ற பல புராண நூல்களி லிருந்து எடுத்துக் கையாளுகிறார். மேலும் இறையனார் அகப்பொருள் கதை, விசுவாமித்திரன் கதை, போஜராஜன் கதை, கரிகாற்சோழன் இமயத் தில் புலிபொறித்த செய்தி போன்றவையும் எடுத்தாளப்பட்டுள்ளன. எவ்வி தம் கதையும் பொருளும் பொருந்துகின்றன என்பதைச் சில வெண்பாக்களால் இங்குக் காணலாம்.
அன்புடைமை (8): நளவெண்பாவிலிருந்து ஒரு நிகழ்ச்சி இங்கு உவமை யாக்கப்படுகிறது. ரிதுபர்ணனுக்குப் பாகனாக இருந்த நளனை அடையாளம் கண்டறிய தமயந்தி தன் இரு மக்களையும் அவன்முன் விளையாட விட் டாள். தன் மக்களைக் கண்ட நளன் மனமுருகி, அன்பினால் கண்ணீர் பெருக்குகின்றான். இதனை
தோன்றா வகை கரந்தும் தோன்றலைக் கண்டு உள்நெகிழ்ந்து
தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா – தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
செய்ந்நன்றியறிதல் (11): இதற்கு ஒளவையார் பற்றிய ஒரு நிகழ்ச்சி சான் றாக அமைகிறது. காட்டு வழியில் ஒளவையார் சென்றுகொண்டிருந்தபோது மிகவும் பசியால் வருநதி, இடையன் ஒருவனைக் கண்டு உணவு கேட்டார். அவன் தனக்கென வைத்திருந்த ஆட்டுப்பால் கலந்த கூழை அவருக்குக் கொடுத்தான். உண்டு பசிநீங்கிய ஒளவை அவன் பெயரை வினவினார். அவன் ‘அசதி’ என்று கூறினான். ‘அசதிக்கோவை’ என்று அவன் பெயரால் ஒரு நூல் பாடினார் ஒளவை.
பன்னும் அசதி நன்றி பாராட்டிக் கோவை நூல்
சொன்னாளே ஒளவை முன்பு சோமேசா – மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வர் பயன்தெரிவார்.
என்று அசதிக்கோவை தோன்றிய நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறார் சிவஞான முனிவர்.
கள்ளாமை (29): இதற்கு காதி என்பவன் மகனான விசுவாமித்திரன் கதை எடுத்துக் காட்டாகத் தரப்படுகிறது. விசுவாமித்திர முனிவன் நீண்டநாள் தவமிருந்தான். கண் விழித்தபோது உண்பதற்கு ஒன்றுமின்றிப் பசியால் வாடி வருந்தினான். வேடன் ஒருவன் மனையில் நாய் இறைச்சி இருக்கக் கண்டு அதன் வால்பகுதியைக் களவாடி உண்ண முயன்றான். அதறகுள் வேடன் வந்துவிடவே முனிவன் நடந்தது கூறிப் பிழை பொறுக்குமாறு வேடனிடம் வேண்டினான்.
நாய்வாற் களவினால் ஞாலம் இகழபபட்டான்
தூயனாம் காதிமகன் சோமேசா – வாயதனால்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு.
இந்தக் கதையை மணிமேகலையும் கூறுகிறது.
அரசுதலை நீங்கிய அருமறை அந்தனணன்
இருநில மருங்கில் யாங்கணும் திரிவோன்
அரும்பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாயூன் தின்னுதல் உறுவோன் (மணிமேகலை, 11: 84-87)
வெகுளாமை (31): திருநாவுக்கரசரின் செயலை வெகுளாமைக்கு எடுத்துக் காட்டாகத் தருகின்றார் முனிவர். சமணர்கள் அவருக்குப் பல தீங்குகள் செய்தபோதும் நாவுக்கர சர் சிறிதும் சினம் கொள்ளவில்லை. பல்லவ மன்னன் அதனால் தானாகவே சைவனாக மாறினான்.
பல்லவர்கோன் வந்து பணியக் கருணை செய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா – கொல்ல
இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
துறவு (35): கோவணத்தை விரும்பியதால் பற்றுகள் யாவும் ஒரு துறவிக்கு வந்து சேர்ந்தன என்னும் கதை ஒன்றை எடுததுக்காட்டுகிறார் சிவஞான முனிவர். துறவி ஒருவர் கோவணத்தை எலிகடித்துவிட்டதால் அதைப் பிடிக்கப் பூனை ஒன்றை வளர்த்தார். அந்தப் பூனைக்குப் பால் தருவதற்கு ஒரு பசுவை வளர்க்கவேண்டி வந்தது. பசுவை வளர்க்க ஒரு பணிப்பெண் ணை அமர்த்தினார். அப்பெண்ணை ஏவல்செய்ய ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இப்படித் துறவி குடும்பியாகவேண்டி வந்தது.
கோவணம் ஒன்று இச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாம்
தூவணஞ் சேர் மேனியாய் சோமேசா – மேவில்
இயல்பாகும் நோன்பிற்கொள் தன்மை யுடைமை
அயலாகும் மற்றும் பெயர்த்து.
மடியின்மை (61): இவ்வெண்பாவில் பயின்று வரும் திருக்குறளுக்கு உதாரணமாகக் கரிகால் வளவன் இமயமலை சென்று புலி பொறித்த செய்தி கூறப்படுகிறது.
பொன்மலையின் வேங்கை பொறித்து மீண்டான் சென்னி
தொன்மை வலி ஆண்மையினால் சோமேசா – பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
மூவடியால் உலகையெல்லாம் அளந்த மாயவன் தான் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பலற்ற மன்னவன் அடைவான் என்பது இத் திருக் குறள் கருத்து.
புலவி நுணுக்கம் (132): இவ்வெண்பாவுக்கான திருக்குறளுக்கு சீவக சிந்தாமணிக் கதை சான்றாகத் தரப்படுகிறது. சீவகன் சுரமஞ்சரியை மணந்து திரும்பியபின் குணமாலையைக் கண்டு அவளைப் புகழ்ந்து கூறி அவளிடத்தில் அன்போடு வாழ்ந்துவரலானான். அப்போது குணமாலை அவனிடம் ஊடல் கொண்டாள். ‘உன்னைப் பிரிந்த நாள் ஒவ்வொன்றும் ஓர் ஊழிக்காலமாக எனக்கு இருந்தது’ என்று அவளிடம் கூறி அவளை ஆற்றினான் சீவகன்.
சீவகன் மஞ்சரியைத் தாழ்த்துரைப்பச் சீறினளே
தூவாய் குணமாலை சோமேசா – வாவகையே
தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்கு நீ
இந்நீரர் ஆகுதிர் என்று.
முன்பு கூறியதுபோல, நூல் படைப்பவரின் கருத்துகளும் புகுந்துவிடும் என்பதற்குச் சான்றாக ஒன்றைக் காணலாம். சிவஞான முனிவர் சைவப் பற்றாளர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே எடுத்துக்காட்டப் பெறும் கதைகள் பெரும்பாலும் சைவச் சார்புடையனவாகவே உள்ளன. அதிலும் பெரியபுராணக் கதைகளே மிகுதி. பிற மதங்களைக் குறைத்து உரைத்தல் என்னும் குறை அவரிடம் இருக்கிறது. சான்றாக,
அடக்கமுடைமை (13): காசிக்காண்டத்திலிருந்து ஒரு கதையை எடுக்கிறார் சிவஞான முனிவர். வியாசமுனிவர் கங்கைக் கரையில் பிற முனிவர்க ளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும்போது, கையெடுத்துக் கும் பிட்டு, ‘நாரணனே பரன்’ என்கிறார். அப்போது அவர் கையும் நாக்கும் எழாமல் நின்றுபோகின்றன. திருமால் அப்போது அங்குத் தோன்றி, “யாவர்க்கும் மேலாம் அளவிலான சீருடையான் சிவனே என்று அறிதி” எனக் கூறினார் என்பது கதை. வைணவத்தினும் சைவம் மேலானது என்பது செய்தி.
எல்லா முணர்ந்தும் வியாதன் இயம்பிய அச்
சொல்லாலே நா அயர்ந்தான் சோமேசா – வல்லமையால்
யாகாவா ராயினும் நாகாப்ப காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
இதேபோல மற்றொரு பாட்டில் சமண சமயத்தைக் குறைத்துக் கூறுவ தையும் காணலாம்.
பயனில சொல்லாமை (20): சேக்கிழார் குலோத்துங்க சோழனுக்குச் சிந்தா மணியைப் படிக்கவேண்டாம் என்று கூறிய செய்தி இதில் எடுத்துக் காட்டப்படுகிறது. சிந்தாமணி சமண நூல். அதைப் படிக்கின்றவர்கள் பதடிகள் என்று சாடுகின்றார் முனிவர்.
சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீதெனவே
தூக்கி உபதேசித்தார் சோமேசா – நோக்கிற்
பயனிற்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
சிவஞான முனிவர், ஒரு திருக்குறளுக்கு ஒரு கதை எனக் கையாள வில்லை. பல குறட்பாக்களுக்கும் ஒரே கதையைச் சிலசமயங்களில் எடுத்துக்காட்டாகத் தருகின்றார். 17, 32, 43, 46 எண்கள் கொண்ட வெண்பாக்களுக்குத் திருஞான சம்பந்தரின் கதையையே சான்றாக அமைக் கிறார். இதுபோல ஒரே இராமாயணக் கதை மூன்று குறட்பாக்களுக்கும், ஒரே கந்தபுராணக் கதை இரு குறட்பாக்களுக்கும், ஒரே பாகவதக் கதை இரு குறட்பாக்களுக்கும், ஒரே லிங்கபுராணக்கதை இரு குறட்பாக்க ளுக்கும் சான்றுகளாகத் தரப்பட்டுள்ளன. அரிதாக, ஒரே குறட்பாவுக்கு இரண்டு கதைகளையும் சான்றாகத் தந்துள்ளார். 110ஆம் அதிகாரத்துக் குறளாகிய “உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும்” என்பதற்கு ஒரு தணிகைப் புராணக்கதையும், கந்தபுராணக் கதையும் தரப்பட்டுள்ளன.
ஐந்து குறட்பாக்களுக்கு எந்தக் கதையுமே சான்று காட்டப்படவில்லை. விளக்கம் மட்டுமே அமைந்துள்ளது. சில குறட்பாக்களுக்கு எடுத்துக்காட்டப் பெறும் கதைகள் அவ்வளவாகப் பொருத்தமுடையனவாகத் தெரியவில்லை. குறிப்பாகக் காமத்துப்பால் சார்ந்த குறட்பாக்களுக்குக் காட்டப் பெறும் கதைகள் இவ்வாறு உள்ளன. முக்கியமாக இந்நூல், சிவஞான முனிவரின் பன்னூற் பயிற்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இம்மாதிரிக் குறட்பாக்களுக்கேற்பக் கதைகளை அல்லது கருத்துகளைச் சேர்த்து வெண்பாக்களை உருவாக்குவதிலுள்ள முக்கிய இடர்ப்பாட்டையும் இந்த நூலில் நாம் காண்கிறோம். பின்னிரண்டு அடிகள் திருக்குறள், அதில் எவ்வித மாற்றமும் இல்லை, செய்யவும் இயலாது. முன்னிரண்டு அடிகள், ஆசிரியரின் கதைக்கேற்பவோ கருத்துக்கேற்பவோ முதல் ஆறுசீர்களில் அமைகின்றன. (ஏழாம் சீர், சோமேசா என்று தவறாமல் வருகிறது அல்லவா?) பிரச்சினைக்குரியது எட்டாம் சீராகிய தனிச்சொல்தான். அது பெரும்பாலும் தேவையற்ற ஒரு சேர்க்கையாகப் போய்விடுகிறது. எனவே ஏதோ ஒருவகையில் இட்டு நிரப்பவேண்டுமே என்பதற்காகத் தனிச் சொல் பயனற்று அமைக்கப்படுவதை இம்மாதிரி நூல்களில் காண்கிறோம். இது கவிதைத்தன்மைக்குப் பெரியதொரு குறையை உண்டாக்கிவிடுகிறது. சான்றாக, இறுதியாக நோக்கிய வெண்பாவையே காணலாம்.
சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீதெனவே
தூக்கி உபதேசித்தார் சோமேசா – நோக்கின்
பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
கடைசி இரண்டடிகள், திருக்குறள். அதுவும் சிறப்பாக வள்ளுவர் மிகக் கடிந்துரைக்கும் திருக்குறள் இது. முதல் ஆறு சீர்கள்-சிந்தாமணிப் பயிற்சி தீது என சேக்கிழார் தூக்கி (வலியுறுத்தி) உபதேசித்தார் என்பது கதை. சோமேசா என்பது பாட்டுடைத் தலைவருக்குரிய விளி. ‘நோக்கின்’ என்ற எட்டாம் சீர்-தனிச்சொல்தான் இடிக்கிறது. கூர்ந்து நோக்கினால், உற்று நோக்கினால் என்று பொருளா? சாதாரணமாக நோக்கினாலே போதும் என்று அர்த்தமா? எதற்கு இந்தத் திருக்குறளுக்கு இந்த அடை?
பெரும்பாலும் இந்த எட்டாம்சீர்ச் சொற்கள், முதலிரு அடிகளின் முதல் சீர்களுடன் எதுகையில் ஒத்து நடக்கவேண்டும் என்பதால் ஓசையில் ஒத்து வருகின்ற, அவ்வளவாகப் பொருளற்ற சொற்களாகவே அமைந்துவிடு கின்றன. ‘சேக்கி’ழார், ‘தூக்கி’ என்பவற்றுக்கு முக்கியமாக எதுகையில் ஒத்து ‘நோக்கி’ என்பது இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதே அன்றி, அது எவ்வகையில் பிறகுவரும் திருக்குறளுக்குச் சிறப்புத் தரும் என்பது நோக்கப் படுவதில்லை. எல்லாவகையிலும் கற்றுப் புலமை மிக்கவராகிய சிவஞான முனிவருக்கே இது குறையாகிறது என்றால், பிற நூல்கள் இயற் றிய புலவர்களைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. சான்றாக, சினேந்திர வெண்பாவில் ஒன்றை நோக்கலாம்.
நீக்கிப் புலால் உணவு நீடுபுகழ் கொண்டவர்
ஆக்கமிகு தானியேல் காவலனே – நோக்குவழி
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
இங்கும் ‘நோக்குவழி’ என்ற சொல், தேவையற்று, பெரிய அர்த்தம் எதுவும் அற்று, ஆளப்படுவதைக் காணலாம். இம்மாதிரி வெண்பா நூல்களின் பொதுக் குறைபாடு இது.