சூளாமணி

சூளாமணி என்பது தமிழிலுள்ள காப்பியங்களில் ஒன்று. இதைச் சிறுகாப்பியம் என்று வழக்கமாகக் கூறிவந்தாலும், இது சீவக சிந்தாமணி போன்ற பெருங்காப்பியமே என்று இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் கூறுவார். இது ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டிருக்கலாம். சீவக சிந்தாமணியைப் போன்ற காப்பியம் ஒன்று எழுத சமண மதத்திற்கென எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் இதை எழுதியிருக்கலாம். மதம் சார்ந்த கதைகள் எல்லாம் (இன்றைய திரைப்பட பக்திப் படங்கள் போல) வெறும் அற்புதச் செயல் புனைவும் இறுதியாக இறைவனை அடைதலும் என்ற பண்புகளை மட்டுமே கொண்டவை. அற்புதச் செயல்களைப் போற்றுவது எந்த மதத்திற்கும் நன்மை தருவதன்று. மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  

சீவக சிந்தாமணிக்குப் பிற்பட்ட தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் இன்றைய திரைப்படக் கதைப் பாணியைக் கொண்டவைதான். அதாவது எல்லாரையும் வெல்லக்கூடிய ஒரு தலைவன் (கதாநாயகன்). அவன் அநீதியை எதிர்த்துச் (!) செய்யக்கூடிய வீரச்செயல்கள். அவனுக்கேற்ற ஓர் அழகான கதாநாயகி. பிறகென்ன? திருமணம். அவ்வளவுதான். ஆனால் சமணக் காப்பியங்கள் இத்துடன் நிற்காமல் அந்த அரசனோ அவனைப் பெற்றவனோ துறவு கொள்வதையும் சம்பிரதாயமாகச் சொல்லுபவை. இருந்தாலும், இந்தக் கதையைச் சற்றே காண்போம்.

சுரமை என்று ஒரு கற்பனை நாடு. அதன் தலைநகர் போதனம் என்ற நகரம். அதை பயாபதி என்ற அரசன் ஆண்டு வருகிறான். அவனுக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவியர். இவர்களுக்கு விசயன், திவிட்டன் என்ற குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருந்தே விசயனை பலராமனுடனும், திவிட்டனை கண்ணனுடனும் ஒப்பிடும் ஒரு மோசமான போக்கினை தொடங்கிவைத்துவிடுகிறார் ஆசிரியர். நல்ல வேளை, இவன் கண்ணனைப் போல கீதை உரைக்கத் தொடங்கிவிடவில்லை. ஆனால் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கியது போலவே இவனும் ஒரு மலையைத் தூக்குகிறான், கண்ணனைப் போலவே ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடைகளைக் கவர்ந்து இரசிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது இந்தியக் காப்பியங்களை! (இதுவும் வடமொழிக் காப்பியத்தின் தழுவல்தான்). அப்புறம் இன்று நித்தியானந்தாக்கள் உருவாகாமல் வான்மீகிகளா வருவார்கள்? புராண கால பலராமனைப் போலவே இந்த விசயனும் எதுவும் செய்வதில்லை.

இது இவ்வாறிருக்க, வித்யாதர நாட்டின் ஒரு பகுதியில் சுவலன சடி என்ற அரசன் ஆண்டுவருகிறான். அவனுக்கு அருக்க கீர்த்தி என்ற மகனும் சுயம்பிரபை என்ற மகளும் உள்ளனர். சுயம்பிரபை பிறந்தபோதே அவள் ஒரு மானிடனை (நம் கதாநாயகனைத்தான்) திருமணம் செய்வாள் என்று ஜோசியன் கூறிவிட்டான். அதற்குச் சான்றாக, திவிட்டன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சிங்கத்தைக் கொல்வான் என்கிறான்.

சடி, தன் ஒற்றர்களை வைத்து திவிட்டன் சிங்கத்தைக் கொல்கிறானா எனக் கண்காணிக்கிறான். இதற்கிடையில் வித்தியாதர நாட்டு வடக்குப் பகுதியில் ஆளும் அச்சுத கண்டன் என்ற அரசன், சுவலன சடி வித்தியாதர மகளை ஒரு மானிடனுக்கு மணமுடித்துத் தருகிறானே என்ற முடிவால் கோபமுற்று, திவிட்டன் நாட்டின்மீது படைகளை ஏவுகிறான். அவற்றை எளிதாக திவிட்டன் வெல்லவே, அவனது அமைச்சன் ஒரு தூதனைச் சிங்க வடிவத்தில் சென்று மக்களைக் கொல்லுமாறு கூற, அவனை திவிட்டன் விரட்ட, அவன் பயந்துபோய் உண்மையான சிங்கம் இருந்த ஒரு குகைக்குள் புகுந்து ஓடிப்போகிறான். குகையிலிருந்து உண்மையான சிங்கம் வெளிவரவும், திவிட்டன் அதன் வாயைப் பிளந்து கொல்கிறான்.

சுவலனசடி ஜோசியன் கூறியது உண்மையே என உணர்ந்து, போதனமாபுரம் வந்து, தன் மகளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்கிறான். இப்போது அச்சுவ கண்டன் தன் முழுப் படைகளோடு வந்து தாக்க, போர் நடக்கிறது. போரில் திவிட்டனுக்கு சங்கும் சக்கரமும் (திருமாலின் ஆயுதங்கள்) வந்து தாங்களாகவே பொருந்துகின்றன. கருடன் வந்து வாகனமாக அமைகிறது. கம்சனைக் கண்ணன் அழித்தது போல அச்சுவ கண்டனை திவிட்டன் அழிக்கிறான்.

காலப்போக்கில், சுயம்பிரபைக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். சுவலனசடியின் மைந்தனான அருக்க கீர்த்திக்கும் ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். உரிய காலத்தில் இவர்களுக்கும் திருமணம் நடக்கிறது.

பயாபதி மன்னனுக்கு வயது மிகுதியாக ஆகிறது. துறவு மேற்கொள்ள வேண்டிய அவன், தன் அமைச்சர்களைக் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளன. கூற்றுவன் (எமன்) எதற்காக வருகிறான்? எதை எடுக்கப் போகிறான்? அவனிடமிருந்து எப்படித் தப்பலாம்? என்றெல்லாம் கேட்கிறான். அவன் அமைச்சர்களோ, “அரசே, எமனிடமிருந்து தப்பும் வித்தையை நாங்கள் கற்கவில்லையே” என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அரை மனதாக பயாபதி தன் மனைவியரோடு (!) துறவு மேற்கொண்டு உரிய காலத்தில் அருகன் அடி அடைகிறான். விஜயனும் திவிட்டனும் சிறப்பாகத் தங்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர்.

எவ்விதத் திருப்பமும் அற்ற, நேரான கதை. திவிட்டன் பிறந்தான் – வளர்ந்தான் – பகைவரை வென்றான் – திருமணம் செய்தான் – அரசாட்சி பெற்றான், அவ்வளவுதான்.

இந்தக் காப்பியம் மகாபுராணம் என்ற வடமொழிச் சமணக் காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது என்பர். சமணக் காப்பியங்கள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிச் சுயமான படைப்பில் இறங்கியிருந்தால் நல்ல தமிழ்ப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். புலமை சிறப்பாக இருந்தும் என்ன காரணமோ, இம்மாதிரிப் புலவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட மேருமந்தர புராணம், சாந்தி புராணம், நாரத சரிதை போன்ற எண்ணற்ற புராணங்களிலிருந்து தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டனர். சுயதூண்டலின்றி, உந்துதல் இன்றி, பார்த்துச் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு மோசமாக அமைந்துவிடும் என்பதற்கு இந்தச் சமணப் புராணங்களைக் கண்டாலே போதுமானது.

இதற்குப்பின் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்ற நூலும் இதே கதையைச் சொல்கிறது. இது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. சமணர்களும், இராமானுஜர் வழிவந்த ஸ்ரீவைணவர்களுமே தமிழில் மணிப்பிரவாளம் என்ற போக்கினை உருவாக்கியவர்கள். மதத்தால் மொழிக்கு நேர்ந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் வருகை வரை தமிழ்ப் புராணப் படைப்புகள் இருந்தன. விஜயநகரப் பேரரசு வந்த பிறகு அவர்கள் தெலுங்கிற்கு மட்டுமே ஆதரவளித்ததால் புராணங்களும் மறைந்து தமிழில் சிற்றிலக்கியங்கள் மட்டுமே தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாறு.

இலக்கியம்