சிலப்பதிகாரத்தில் உருவகமும் சினையெச்சமும்
இக்கட்டுரை, 2012இல் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவ னம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்டது.)
சிலப்பதிகாரம் ஓர் அருமையான புனைகதை. உள் நுழைந்து காணும் தோறும் அதன் கட்டமைப்பு வியப்பை அளிக்கிறது. புனைகதை என்பதைவிடக் கடவுள் உருவாக்கக் கதை என்று அதைச் சொல்வது பொருந்தும். இன்னொருவகையில் அது ஒரு முற்றுருவகம். அதன் முதல் பகுதி புகார், மதுரைக் காண்டங்கள். இரண்டாவது பகுதி வஞ்சிக் காண்டம். முதல்பகுதி கண்ணகியை தெய்வமாக்குகிறது என்றால் இரண்டாவது பகுதி தமிழர்களை வடவர்களினும் விஞ்சிய வீரர்களாக்குகிறது. ஒரு புனைகதை என்ற முறையில் அது ஒரு சினையெச்சமாகவும் இருக்கிறது.
இந்த இரண்டுமே பழங்காலத்திலிருந்து தமிழகத்தில் நிலவும் கனவுகள். குறிப்பாக, எல்லாத்துறைகளிலும் சமஸ்கிருதம் ஆதிக் கம் பெற்று, வடக்கின் கலாச்சாரம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நிலையில் பழமைக்கானதோர் ஏக்கம் தமிழர் மனத்தில் எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவே தமிழ் முதன்மை, தமிழர் முதன்மை இலக்கியங்கள் அமைகின் றன. இவற்றில் மிக முதலாவது சிலப்பதிகாரம். தமிழ்த் தேசியம் பேசிய முதற்காப்பியம் அது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வடக்கிற்கு ஓலை அனுப்புவதாகச் சொல்லும்போது செங்குட்டு வனிடம் “தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற் புலி…” இலச் சினைகளைப் பொறித்தனுப்பச் சொல்கிறான் அமைச்சன். செங்குட் டுவன் இங்கே தமிழகத்தின் சார்பாக நிற்கிறானே அல்லாமல், சேரனாக அல்ல. அதனால்தான் கனகவிசயர் தலைமீது கல்லேற் றியது பற்றிச் சோழனும் பாண்டியனும் விமரிசனம் செய்யும் போதும் அவனுக்குக் கோபம் வருகிறது. “மொத்தத் தமிழர்கள் சார்பாகவும் நான் வடக்கு மன்னர்களைத் தோற்கடிக்க, என்னைக் குறை சொல்கிறார்களே இவர்கள்” என்ற கோபம்.
சேரன் படையெடுப்போ, இமயமலையில் சோழன் புலி பொறித் ததோ, பாண்டியன் கயல் எழுதியதோ நிகழ்ந்தவை அல்ல. தமிழ்மன ஏக்கத்தின் உருவகங்கள் அவை.
இன்னொரு பார்வையிலும், சிலப்பதிகாரம் இரண்டு பகுதிக ளாக அமைந்துள்ளது. அதில் அமைந்துள்ள பாடல்கள்-குறிப்பாக, வரிப்பாடல்கள் நான்கும் தனி. பிற எடுத்துரைப்புப் பகுதிகள் (கதை சொல்லும் பகுதிகள்) தனி. ஒன்றிற்கொன்று மிக அனுசர ணையாக இவை அமைந்து காப்பியச் சுவையை மிகுதிப்படுத்துகின்றன. பொருளை மிக மேம்படச் செய்கின்றன. உண்மையில் இத்தகைய அமைப்பு இந்தியாவின் பிற காப்பியங்கள் எதிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பிற வரிப்பாடல்களும் (உதாரணமாக காப்பியத்தின் இறுதியில் வாழ்த்துக்காதையில் வருவன போன்றும் துன்பமாலையில் இருப் பன போன்றும்) இருப்பினும், மையமான நான்கு வரிப்பாடல்கள் தான் சிலப்பதிகாரத்தின் அடிப்படை இருப்பைக் கட்டமைப்பவை. கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியவைதான் அவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவை ஒரே சமயத்தில் உருவகங்களாகவும் சினையெச்சங்களாக வும் அமைந்து காப்பியப் பொருளை விரிவுபடுத்துகின்றன.
உருவகங்கள் சினையெச்சங்கள் என்ற சொற்கள் சிலருக்கு வியப்பேற்படுத்தக்கூடும். உருவகம் என்றால் என்ன என்பது தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்ததுதான். சினையெச்சம் என்றால் என்ன? சினையாகுபெயர் என்பதைத்தான் சினையெச்சம் என்கிறோம். ஏன் என்பது சிறிதுநேரத்தில் விளங்கக்கூடும்.
இந்த இரு சொற்களும் விரிந்த பொருளில் இங்கு ஆளப்படு கின்றன. இந்திய இலக்கணக்காரர்கள் – தமிழகத்தின் தொல்காப்பி யர் உட்பட-உவமையைத் தலையாய அணியாகக் கொண்டு உருவகத்தை அதன் மாற்றாகவோ குறுக்கமாகவோ கண்டதால் கொள்கை விரிவு ஏற்படாமல் போய்விட்டது. உருவகம்தான் அடிப்படை அணி. பேச்சிலும் எழுத்திலும் உருவகங்கள் பயின்று வரும் அளவுக்கு உவமைகள் வருவதே இல்லை.
உருவகம் என்பது ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றை பதிலீடு செய்யும் செயல். இது பெயர்ச்சொற்களில் மட்டும்தான் வரவேண் டும் என்ற அவசியம் இல்லை. வினைச்சொற்களிலும் மிகுதியாக உருவகம் இடம்பெறுகிறது. சம்பவங்களிலும் இடம் பெறுகிறது. உருவகம் என்ற சொல், பெயர் என்ற ஈற்றுச் சொல்லைப் பெறா மல் இருந்து விட்டதால் வினைக்கும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. சிந்தனை குறித்த தமிழ்ச் சொற்கள் அனைத் தும் வினை யுருவகங்கள் தான். நாம் ஒரு பிரச்சினையை ‘நோக்குகிறோம்’, அதை ‘அலசுகிறோம்’, தீர்வை ‘அடைகிறோம்’ – இங்கே குறித்த வினைச் சொற்கள் அனைத்தும் வினை உருவகங்கள். யாரும் பிரச்சினையைக் கண்ணால் பார்ப்பதில்லை, சோப்புப்போட்டு அலசுவதில்லை, பஸ்ஸில் ஏறி அடைவதில்லை. தங்களுக்கென்று உள்ள நேர்ப்பொருள் மாறி அவை பதிலீடாக அமைந்திருக்கின்றன.
சினையெச்சத்தை ஆங்கிலத்தில் Synochdochy என்பார்கள். ஆகு பெயரை Metonymy என்பார்கள். தமிழில் சினையாகுபெயரைவிட இடவாகுபெயர் மிகுதி. இவை இரண்டையும் குறிக்குமுகமாக, மெடானிமி என்ற சொல்லுக்கு இணையாக இங்கு சினையெச்சம் என்ற சொல் ஆளப்படுகிறது. சினையாகுபெயர் என்பதில் உள்ள சினைதான் சொல்லின் தலைப் பகுதி. பொருள் எஞ்சி நிற்பதால் எச்சம்.
உருவகம் என்ற சொல் போலவே பெயருக்கும் வினைக்கும் நிகழ்வுகளுக்கும் பொதுவாக ஒரே சொல் இருந்திருந்தால் இந்தச் சொல்லை உருவாக்கவேண்டிய அவசியம் இராது. ஏனென்றால் வினையாக வரும்போதும் ஒரு கதையின் பகுதியாக வரும் போதும் அது ஆகுபெயர் அல்லது சினையாகுபெயர் என்றால் பொருந்துவதில்லை. எனவே சினையெச்சம் என்ற சொல் இங்கு ஆளப்படுகிறது.
உருவகம் பதிலீடு. சினையெச்சம் தொடர்ச்சி, சேர்க்கை, முழு மைப் படுத்தல். உதாரணமாக, கவிதை ஒன்றைச் சொல்லுவதற்கு பதிலாக வேறொன்றைச் சொல்கிறது. அதனால் அதில் உருவகத் தன்மை மிகுதியாக இருக்கிறது. உரைநடையில் ஒருபகுதியைச் சொல்கிறோம், முழுமையை நம் மனம் தானாகத் தேடிச்செல் கிறது, ஆக்கிக்கொள்கிறது. ஆகவே அதில் சினையெச்சத்தன்மை மிகுதியாக இருக்கிறது.
இனி மீண்டும் சிலப்பதிகாரக் கட்டமைப்புக்கு வருவோம். சிலப்பதிகாரத்தில் இணை அமைப்பு சிறப்பான இடம் பெறுகிறது. இரு கடிதங்கள், இரு கனவுகள் போன்ற இணையான அமைப்புக ளிலிருந்து இது தெளிவாகிறது. இதைவிட முதன்மையானது, வரிப்பாடல்களின் அமைப்பு. நான்கு வரிப்பாடல்களும் ஒரேசமயத் தில் உருவகமாகவும் சினையெச்சமாகவும் அமைந்து வெவ்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன.
சான்றாகக் கானல்வரி: கானல்வரியைப் படிப்பவர்கள் அதன் ஆற்று வரி ஒருவிதமாகவும் பின் தொடர்ந்து வருகின்ற சார்த்து வரி, முகமில்வரி போன்றவை இன்னொரு விதமாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். உண்மையில் இவை இருவேறு திணைகளின் வெளிப்பாடுகள். சிலப்பதிகார வரிப்பாடல்கள் திணைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன என்பது அரிச்சுவடி. கானல்வரிதான் இவற்றில் சிறப்புப் பெற்றது. ஏனென்றால் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளை உள்ளடக்கியதாக அது அமைந்துள்ளது. பிற வெளிப்படையானவை. வேட்டுவ வரி பாலைக்கும், ஆய்ச்சியர் குரவை முல்லைக்கும், குன்றக்குரவை குறிஞ்சிக்கும் களங்கள்.
கானல்வரியில் இடம் பெறும் இரண்டு அடிப்படையான திணை கள் மருதமும், நெய்தலும். இவற்றிலும் மருதம் குறைவு, நெய்தல் மிகுதி. பூம்புகாரும் மருதப்பகுதியிலும் (ஆற்றங்கரையி லும்), நெய்தற்பகுதியிலும் (கடற்கரையிலும்) அமைந்துள்ளது தானே. அதற்கேற்பவே அதன் இருபகுதிகள்-மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகியவை அமைந்துள்ளன.
சிலப்பதிகாரக்கதைப்படி, கோவலனுக்கு ஊடல் (மருதத்தின் உரிப்பொருள்) பிடிப்பதில்லை. கண்ணகி ஊடவே இல்லை. மாதவி கூட முதலில் கூடலும், பிறகுதான் ஊடலும் அளிக்கிறாள். அந்த ஊடலைக் கொஞ்சம் மிகுதியாக (ஆற்றுவரியில்) வெளிப் படுத்தும்போது பிரிவு ஏற்பட்டுவிடுகிறது. நெய்தலின் உரிப் பொருள் புலம்பல் என்றால் அதற்குக் காரணம் நீண்ட பிரிவு, நிரந்தரப் பிரிவு, புலம்பலை உண்டாக்கும் ஐயப் பிரிவு. முதலில் கண்ணகிக்கு நீண்ட பிரிவு நிகழ்கிறது; பின்னர் கோவலன் மதுரை செல்வதால் மாதவிக்கும் பிரிவு நிகழ்கிறது. எனவே மருதம் குறைவு, நெய்தல் மிகுதி.
ஆற்றுவரியில், “சோழன் உன்னைவிட்டு கங்கையைப் புணர்ந் தாலும் புலவாய் வாழி காவேரி” என்று புலவாமல் இருப்பதைப் பெண்களின் சிறப்பாக்குகிறான் கோவலன். மாதவிக்கு இதனைப் பொறுக்க முடியவில்லை. “செங்கோல் வளையாமையே காவிரி யின் சிறப்புக்குக் காரணம்” என்று பாடுகிறாள் அவள். இங்கு கங்கையும் காவிரியும் உருவகங்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மற்ற கானல்வரிப்பாடல்களிலும் உருவகங்கள் மிகுதி. குறிப்பாகக் குருகு, மாலை, ஓதம் போன்ற சொற்கள் பெண்ணைக் குறிப்பனவாகவும் அலை என்பது ஆணைக் குறிப்பதாகவும் அமைகின்றன. இவை கோவலனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் காட்டுவனவாக அமைகின் றன. இதுதான் மாதவி ஊடலுக்குக் காரணம்.
உண்மையில் மாதவி ஒரு மனைவியாக ஊடல்கொள்ளத் தக்க வள்தான். அவளுக்கு மணிமேகலை என்ற குழந்தை பிறந்திருக் கிறது. குழந்தை பிறந்த வைபவத்தை மிகச் சிறப்பாக நடத்திய வன் கோவலன். சங்க இலக்கியத்தில் தலைவிக்குத்தான் குழந்தைப்பேறு உண்டு. பரத்தைக்குக் குழந்தைப்பேறு கிடையாது. சிலப்பதிகாரத்தில் இந்த மரபினை இளங்கோவடிகள் மாற்றுகிறார். பரத்தைக்குக் குழந்தைப் பேற்றினைத் தருவதன் வாயிலாக அவளைப் பரத்தை என்ற அந்தஸ்திலிருந்து மீட்டு உயர்த்தி மனைவி என்ற அந்தஸ்தினைத் தருகிறார். காப்பியத் தலைவி யான கண்ணகியை தெய்வமாக்க வேண்டி அவளுக்குக் குழந்தை இல்லாமல் செய்கிறார்.
மாங்காட்டு மறையோன் வழி கூறியபின், யாவரும் தளர்ச்சி யுற்றிருக்க, கோவலன் நீர் கொணரச் செல்லும்போது வயந்த மாலை வடிவில் வனசாரிணி தோன்றுகின்ற நிகழ்வுதான் இந்தக் கருத்தை நாம் கொள்ளக் காரணமாகிறது. ஏன் வனசாரிணி வயந்தமாலை வடிவைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? அவள் கோவ லனிடம் பிழைமொழி பேசியதாக மாதவி கருத வேண்டிய தேவை என்ன? ஏன் அவளை மாதவி துறந்தாள்? துறந்தபின் வயந்த மாலை ஏன் கோவலனை நாடி வரவேண்டும் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு அனுசரணையான பகுதிகள் கானல்வரியில் உள்ளன. சான்றாக “மாலை (வசந்தமாலை என்ற குறிப்பு) நீ ஆயின் மணந்தார் அவராயின் ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மருள்மாலை” என்ற நேரடியான கூற்றைக் காணுங்கள்.
ஆக, கானல்வரி ஒன்றைச் சொல்வதுபோல இன்னொன்றைச் சொல்கிறது, அதாவது ஒன்றிற்கு பதிலீடாக இன்னொன்றை வைக்கிறது என்பது உருவக அமைப்பு. இதை நாம், ஒரு குறியின் குறிப்பீடு, இன்னொரு குறியின் குறிப்பீட்டிற்கான குறிப்பானை ஏற்பது என்று விளக்கலாம்.
“பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாஅர் ஆயினும் நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர்” என்று புகார்க்காண்டம் தொடங்குகிறது. ஆனால் அதன் இறுதி நிகழ்ச்சியாக வருவது கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டு அகன்றான் என்பது. இதேபோல மதுரைக் காண்டமும் மதுரையைப் ‘பதியெழு அறியா மூதூர்’ என வருணித்துத் தொடங்குகிறது. ஆனால் அதிலிருந்தும் எல்லோ ருமே பெயர்கிறார்கள் இறுதியில் – கண்ணகி உள்படத்தான். இம் மாதிரி இணைமுரண்கள் சிலப்பதிகாரத்தின் கட்டமைப்புக்குச் சிறப்புச் செய்கின்றன.
சிலப்பதிகாரத்தில் எத்தனையோ இயற்கை இறந்த நிகழ்வுகள் வருகின்றன. அவற்றின் காரணமும் உருவகப் பாங்கும் தனித் தனியே விரிவாக ஆராயத்தக்கது. காடுகாண் காதையில் நீர் கிடைக்காத மயக்கத்தினால் கோவலனின் கண்களுக்கு வன சாரிணி என்றதோர் உருவம்-அதுவும் மாங்காட்டு மறையோன் கூறியதால்-தென்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது கோவல னின் மனமயக்கம் என்றாலும் அவனுக்கு வயந்தமாலையின் உருவம் தோன்றத்தான் காரணம் என்ன? மாதவியின் வடிவமே தோன்றி யிருக்கலாமே? இம்மாதிரிக் கேள்விகள் ஒரு குறித்த முடிவை நோக்கிச் செலுத்துகின்றன.
ஆக, கானல் வரியின் சினையெச்ச அமைப்பு திணைப் பார்வை நோக்கிச் செலுத்துகிறது. உருவக அமைப்பு இன்னொரு பெண் ணுடன் கோவலன் தொடர்பு கொண்டான், அதனால்தான் மாதவி ஊடல் கொண்டாள், “எழுதும்” என்று பன்மையில்-மாதவியையும் உள்ளடக்கி-கோவலன் கூறிய பிறகும் மாதவி எழாமல் – கோவல னுடன் செல்லாமல் இருந்தாள் என்ற முடிவுக்குச் செலுத்து கின்றது.
சிலப்பதிகாரத்தில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் சில வருகின்றன. கோவலன் வனசாரிணியைக் காணுதல், அதைப் பாய்கலைப் பாவை மந்திரத்தால் கட்டுதல், கண்ணகி “கள்வனோ என் கணவன்” என்று கேட்கும்போது சூரியன் பதிலளித்தல், கோவலன் வெட்டுண்டபிறகு கண்ணகியைத் தழுவி “இருந் தைக்க” எனச் சொல்லிச் செல்லுதல், கண்ணகி தன் இடப்பக்க முலையைத் திருகி எறிதல், கண்ணகியின்முன் அக்கினித் தேவனும் மதுராபதி தெய்வமும் வந்து தோன்றுதல், கண்ணகி மலைமீது குறவர்கள் நோக்க, கணவனுடன் வானுலகு செல்லுதல், கடைசியில் செங்குட்டுவன் காண மின்னல்வடிவில் கண்ணகி தோன்றுதல், மூன்றுகுழந்தைகள் தங்கள் பழம்பிறப்பு உணர்த்தல் ஆகியன இப்படிப்பட்ட மீயியற்கைச் செய்திகள். இவை யாவும் உருவகங்களே. கானல்வரியைத் தவிர பிற வரிப் பாடல்களும் மன மயக்கத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகள்-அதாவது ஆசிரியரின் கற்பித உருவகங்கள் என்றே கொள்ள ஏது இருக் கிறது.
உருவகம் என்பது பதிலீடு. கனவில் இது எப்படிச் செயல்படு கிறது என்பதை ஃப்ராய்டு விளக்கியிருக்கிறார். உருவகம், சினை யெச்சம் ஆகிய இரண்டு செயல்முறை களாலும் கனவுத்தோற்ற விளைவு ஏற்படுகிறது. கனவில், உருவகம் செறிவாக்கம் (காண்டென்சேஷன்) என்பதைக் கட்டமைக்கிறது. சினையெச்சம் இடப்பெயர்ச்சி (டிஸ்ப்ளேஸ்மெண்ட்) என்பதை ஆக்குகிறது. ஒருவனுக்குப் பகைவன் தீங்கு செய்துவிடுவான் என்ற பயம். அவன் ஒரு குள்ளநரி தன்னைத் தாக்குவதைப் போலவும் தனக்கு அதனால் காயம் ஏற்படுவதைப் போலவும் கனவு காண்கிறான். இங்கே பகைவனைக் குள்ளநரி ஆக்குவது உருவகச் செயல், செறிவாக்கம். பதிலீடு. அவன் தாக்குகின்ற செயலின் பின்னணி, விளைவு என்பன இடப்பெயர்ச்சி. அதாவது கனவின் மீதிப் பகுதியைக் கனவு காண்பவன் பூர்த்திசெய்து கொள்கிறான். அந்தக் கனவுக்கு ஒரு பின்னணியை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் அது தன் பகைவனைக் குறித்தது என்பதை அவன் அறிவதில்லை. கனவு என்பதே இவ்விதமாக செறிவாக்கத்தினாலும் (உருவகத்தி னாலும்) இடப்பெயர்ச்சியினாலும் (சினையெச்சத்தாலும்) உருவா குவது என்று ஃப்ராய்டு கண்டார்.
சோழன் இமயத்தில் புலிபொறித்தது, பாண்டியன் மீன் இலச்சி னை பொறித்தது, சேரன் இமயத்தை வென்றது போன்றவை ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவுகள். அதனால்தான் அவை மீட்பு இயக் கங்கள் தோன்றக் காரணமாக அமைகின்றன. சிலப்பதிகாரத்தில் சேரன் படையெடுப்பும் ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவுதான். கண்ணகியை தெய்வமாக்குவதும் ஒரு கூட்டுக்கனவுதான். பாலிய லில் அதிக ஈடுபாடு காட்டுகின்ற உணர்ச்சி வயப்பட்டதொரு சமூகம், பெண்ணை ஒருபுறம் தனக்குப் பாலியல் அடிமையாகவும் இன்னொருபுறம் தாய் வடிவத்தில் வழிபாட்டுக்குரியவளாகவும் கட்டமைக்கிறது. தாய்ப்படிமத்தில் கட்டமைக்கப்படும் வடிவங்க ளில் ஒன்றே தாய்த் தெய்வம் பெண்தெய்வம் என்னும் கருத் துருவங்கள். இதற்கு இன்றைய தமிழ்நாட்டு அரசியல் படிமங்களே நல்ல சான்று.
புகார்க்காண்டம் முழுவதும், மதுரைக்காண்டத்தில் சில இடங்க ளிலும் ‘மகரவெல்கொடி மைந்தனின்’இருப்பும் செயலும் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. மகரவெல்கொடி மைந்தன் மன்மதன். பாலியல் சேர்க்கையின் கடவுள். (சிலப்பதிகாரம் ஏராள மான வடமொழிப் புராணக்கதைகளை எடுத்தாள்கிறது. அவற்றில் ஒன்று இது.) மகரவெல்கொடி மைந்தன் நகர மெங்கும் சுற்றித் திரிவதாகக் காட்டும் இளங்கோ, அவன் மனைவி ரதியைப் பற்றிய குறிப்பேதும் தரவேயில்லை. மாறாக அவனுடன் இள வேனில், தென்றல் காற்று ஆகியவை சுற்றுவதாகவே அமைக் கிறார். பாலியலுக்கான கடவுளேயானாலும் ரதி, பெண். எங்கோ ஒடுங்கி இருக்கவேண்டியவள். கணவனைப் போலச் சுற்றித்திரிய அவளால் இயலாது. சிலப்பதிகாரம், பாலியல் ஆசை, தமிழ்இன உணர்வு என்ற இரண்டு அடிக்கட்டுமானங்களால் ஆகியிருக்கிறது.
மிகுஉணர்ச்சியின்போது ஏற்படும் மயக்கநிலையும் கனவு போன்றதே. கண்ணகி அழுது அரற்றிக் “காய்கதிர்ச்செல்வனே கள்வனோ என் கணவன்” என்று கேட்பது யதார்த்தமானதே. நமக்குத் தீங்கு ஏற்படும்போது “கடவுளே உனக்குக் கண்ணில் லையா” என்று கேட்பது போன்றது அது. நமக்கு எந்தக்கடவுளும் விடைகூறுவதில்லை. கண்ணகியின் மனமயக்கத்தில், அவளுக் குக் கதிரவனே விடையளிப்பதுபோல ஒரு காட்சி ஏற்படுகிறது என்று நாம் விளக்கலாம். (இதில் இளங்கோவடிகளின் பங்கு சிறப் பானது. எல்லாவித மனமயக்கங்களும் “இவ்வூர் எரியுண்ணும்” என்ற ஒரே இலக்கை நோக்கிச் செலுத்துவதாக அவர் படைக் கிறார்.) கண்ணகிக்கு இவ்வித மயக்கக்காட்சி ஏற்படுவது உருவகம்.
இதுபோன்றே இரவின் இருண்ட போதில் ஏற்படும் அவள் மனமயக்கமே தன் கணவன் தன்னிடம் “இருந்தைக்க” எனக்கூறி விடைபெற்றுச் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அக்கினித்தேவன் தன்னிடம் ஏவல் கேட்பது போலவும் மதுராபதி காரணம் கூறி விளக்குவது போலவும் தோன்றச் செய்கிறது. இவை யாவும் உருவகங்கள்.
“ஒருமுலை இழந்த திருமாபத்தினி” என்று கண்ணகி குறிக்கப் பட்டாலும் ‘முலை முகம் திருகி’ என்ற தொடரை நோக்குவது அதன் மெய்யான பொருளை வெளிப்படுத்தக் கூடியது. அவ்வாறா யின் அது இயற்கை இறந்த நிகழ்ச்சி ஆகாது. இதை உண்மை என்றே கொண்டால், கண்ணகி கணவனை இழந்ததால் தன் பாலியல் சுகத்தினை இழந்தமைக்கு உருவகமாகிறது என்று கொள்ளலாம். பாலியல் சுகத்தினை இழப்பது அல்லது கட்டுப்படுத் துவது என்பது இந்திய மரபில் அருஞ் செயல்களை ஆற்றக்கூடிய – அட்டமாசித்திகளைப் பெறக்கூடிய – குண்டலியை எழுப்பக்கூடிய ஆற்றலைத் தரும் என்ற நம்பிக்கையைக் காட்டும். இது ஒரு சிறந்த உருவகம் என்பதில் ஐயமில்லை.
இந்த உருவகங்களின் அடியில் ஒரு கருத்துருவம் செயல்படு கிறது. அது தமிழ் வெற்றி என்ற கூட்டு நனவிலிக்கு எதிராகவும் இயங்குகிறது. சான்றாக, அக்கினி தேவனுக்கு விடையிறுக்கும் கண்ணகி, “பசு, பார்ப்பார், அறவோர், பத்தினிப் பெண்டிர் முதலி யவர் களை விட்டு தீத்திறத்தோர் பக்கமே சேர்க” என்கிறாள். பசு இன்றைக்கும் ஒரு அரசியல் பின்னணியாக இயங்கும் படிமம். தீத்திறத்தோர் யார்? தீமை செய்பவர்களா? உடலுழைப்பில் ஈடுபடு பவர்களா? உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக் குமே – குயவர், கம்மியர், சலவையாளர் போன்ற எவராக இருப்பி னும் – தீ தேவையானது. எனவே தீத்திறத்தோர், அதாவது தீயைப் பயன்படுத்துபவர், உழைக்கும் மக்கள் என்று கொள்ளத் தகும். இங்கு வரும் பார்ப்பார் பற்றிய குறிப்பு இப்படி நோக்கச் செய்கிறது.
சிலப்பதிகாரத்தில் எடுத்துக்காட்டாக வரும் கதைகள் அனைத் தும் (பொய்ச்சான்று கூறி பூதத்தின் வாய்ப்பட்ட ஒருவன் தவிர) பார்ப்பனர் பற்றியவை. கோவலன் கண்ணகி திருமணமே “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” நடக்கிறது, பார்ப்பனச் சடங்கில் தான் தொடங்குகிறது காப்பியம். அதில்தான் முடிவும் அடைகி றது. “கோவலன் கண்ணகி தீவலம் செய்வதைக் காண்பார்கள் கண் என்னை” என்ற வருணனையை, சினையெச்சமாக்கி, இறுதியில் “செங்குட்டுவன் யாகம் செய்ததைக் காண்பார்கள் கண் என்னை” என்று கூட்டிக் கொள்ளவேண்டும்.
மதுரைக்கு வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். மாதவியின் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுப்பவன் கோசிகமாணி. கோவலனின் நண்பன் மாடலன். அவனுடைய கூற்றின்படி, கோவ லன் யானையிலிருந்து காப்பது ஓர் முதிய பார்ப்பனனை, கீரிப் பிள்ளை காரணமாகக் கைவிடப்பட்டவளையும் கோவலன் காக்கி றான். மதுராபதி சொல்லும் கதைகளில் வரும் கீரந்தை, பராசரன் உட்பட அனைவரும் பார்ப்பனர்கள். மாடலன் இறுதியாகச் செங்குட்டுவனைத் தூண்டுவது பார்ப்பன வேள்வி செய்யச் சொல்லி. சிலப்பதிகார இறுதியில் கண்ணகியின் கோயிலுக்கும் அவள் வழிபாட்டுக்கும் இருந்த முக்கியத்துவம் குறைந்து போய், “வேள்வி செய்து அரசர்களை வழியனுப்பிவிட்டு செங்குட்டுவன் சென்றான்” என்று கதை முடிகிறது. கண்ணகியின் தோழியும் ஒரு பார்ப்பனியே. ‘அரசன் பின்னோர்’ என்ற சிறப்புப் பெற்ற செல்வ வளம் மிக்க வணிகர்கள் பார்ப்பனியத்தை ஆதரித்ததில் ஆச்சரிய மில்லை. ஆனால் ஒரு முரண்பாடு: அவர்கள் சமணர்களாக இருக்கிறார்கள், பார்ப்பனச் சடங்குகளின்படி நடக்கிறார்கள். எனவே ஒருவிதத்தில், வைதிகர்களான வேளாளருக்கும் சமணர் களான வணிகருக்கும் ஏற்பட்ட முரண்பாடுதான் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் தெளிவாகிறது என்ற கருத்து கேள்விக் குள்ளாகிறது.
தமிழ்க் கருத்தியலும் வடஆரியர் கருத்தியலும் விரவிய காப்பி யம் என்று சிலப்பதிகாரத்தை நோக்க இந்த நிகழ்வுகள் இடமளிக் கின்றன. தமிழ்க்கருத்தியலையும் ஆரியர் கருத்தியலையும் விரவு வதுதான் இளங்கோவடிகளின் நோக்கம் என்று நமக்குப் புலனா கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் பார்ப்பனியத்துக்குத் தரப்படுவதால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்றோ, சமணக்காப்பியம் என்றோ சொல்லக்கூடவில்லை. இளங்கோவடிகளையும் சமணத் துறவி என்று சொல்ல முடியவில்லை. சேரன் செங்குட்டுவனைப் போல அவரும் ஒரு சைவராகவே இருந்திருக்கக் கூடும்.
கவுந்தியடிகள் என்னும் முக்கியப் பாத்திரத்தையும், கோவலன் கண்ணகி சாவக நோன்பிகளாக இருப்பதையும் வைத்துத்தான் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் எனப்படுகிறது. அக்கால வணிகர் கள் தாங்கள் கடல்மேற் செல்வதற்கு இடங்கொடாத வைதிக சமயத்திலிருந்து விலகிச் சமணர்களாக இருந்ததில் ஆச்சரிய மில்லை. இன்றும் பெருவணிகர்கள் பலர் (வடநாட்டிலும்) சமணர் களே. தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் எத்தனை ஜெயின்களை நாம் அறிவோம்? இதனால் எல்லாம் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் ஆகிவிடாது.
கோவலனைக் கவுந்தியடிகள் மதுரைப் பயணத்துக்கு முன்பே அறிந்தவராதல் கூடும். அவர்களுக்கிடையில் பரிச்சயமான பேச்சு இடம் பெறுகிறது. மதுரைக்குச்செல்லும் காரணத்தை கவுந்தியடி கள் வினவும்போது “உரையாட்டில்லை உறுதவத்தீர்” என்று முரட்டுத்தனமாக பதிலுரைக்கிறான்.
மதுரைப் பயணத்தின்போது கவுந்தி, கண்ணகியின்மீது அள வற்ற பாசத்தை வளர்த்துக் கொள்கிறார். தனது அறச்சாலையில் தான் கண்ணகியை முதன்முதலாகக் காண்பவர், உறையூர் மதிற்புறம் செல்வதற்குள் “எள்ளுநர் போலும் இவர் என் பூங் கோதையை” என்று தன் மகளாக நினைக்குமளவுக்கு மாறுகிறார், மதுரைப் புறஞ்சேரி செல்வதற்குள் “கற்புடை இத்தெய்வம் அல்லது வேறு பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” என்று சான்றிதழ் தருமளவுக்குச் சென்றுவிடுகிறார். அவருடைய இத்தன் மையை உணரும் சாரணர்கள் “பவந்தரு பாசம் கவுந்தி கெடுக” என்று கூறியதில் ஆச்சரியமில்லை. பாசத்தைக் கடவாமல் கண்ணகிக்காக உயிர் நீத்தவரல்லவா கவுந்தி?
காப்பிய அமைப்பை நோக்கும்போது இயற்கை இறந்த நிகழ்ச்சி களை இளங்கோவடிகள் நம்புவதுபோல்தான் தோன்றுகிறது. இன் றும் “தெய்வம் ஏறுகிறது, எதிர்காலத்தைச் சொல்கிறது” என்பது முதலாக சாதாரண குறிகேட்பவர்கள், ஜோசியம் கேட்பவர்கள் வரையிலான கருத்தியல் அது. எனவே கண்ணகியை தெய்வமாக் கும் அவருடைய எண்ணத்திற்கேற்றவாறு காட்சிகளைப் படைத் துக்கொள்கிறார். ஆனால், இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் அனைத் தும் கண்ணகிக்கு மட்டும் தெரிகின்றனவே அன்றி உடனிருந்த மக்கள் யாருக்கும் அவை புலப்படவில்லை. எனவே அவற்றின் புறவயமதிப்பு கேள்விக்குரியதாகிறது. கண்ணகி வானுலகம் சென் றதாகக் குறவர்கள் கூறுவது ஒன்றே புறவய நிகழ்வு. அதுவும் பொது நம்பிக்கை, பொதுக்கருத்துருவ அடிப்படையில் படைக்கப் பட்டதாகலாம்.
கானல்வரியின் அமைப்புப் பற்றிப் பார்த்தோம். அடுத்தது வேட்டுவ வரி. வேட்டுவ வரியிலும் தெய்வமேறிய சாலினியின் மனமயக்கமே கண்ணகியை தெய்வமாக நோக்கியது. ஆனால் இளங்கோவடிகள் இங்கு மட்டும், “பேதுறவு மொழிந்தனள் மூதாட்டி” என்று கண்ணகி புன்முறுவல் கொள்வதாகப் படைக் கிறார். (தர்க்கவிளக்கம் அளிக்க முற்படுகிறார்.)
கண்ணகியை தெய்வமாகக் காண்பது வருவதுரைத்தல் என் னும் உத்தி. வருவதுரைத்தல் உத்திகள் யாவும் (இவை மட்டு மல்ல, பின்னோக்கு உத்திகளும்தான்) சினையெச்சங்களே. எச்சத் தன்மை அவற்றில் இருக்கிறது. பின்னால் நிகழப் போவதையோ முன்வந்ததையோ வாசகர்கள் இட்டு நிரப்பிக்கொள்ள வைக்கின் றன அவை.
வேட்டுவ வரியின் உருவகப் பாங்கும், அதன் திணையமைப் பில் வெளிப்படுகிறது. “முல்லை குறிஞ்சி ஆகியவை வேனிற் காலத்தில் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று வரு ணித்ததற்கேற்ப, வேட்டுவ வரி நிகழுமிடம் முல்லைப்பாலை. (குறிஞ்சி மழை பெறும் மலைப்புறமாதலின் அது பாலையாகும் வாய்ப்பு குறைவு). எயினர் பற்றிய பார்வை இதில் வருகிறது. முல்லை திரிந்து பாலையானதுபோல, இந்த எயினர்கள் தங்கள் இயல்பு திரிந்து அறவோராக மாறிவிட்டார்கள் என்கிறாள் சாலினி. பாலையின் உரிப்பொருள் பிரிவு. தலைவனும் தலைவி யும் சேர்ந்து இடம்பெயர்ந்தாலும் தொல்காப்பிய நோக்கில் பாலை யாகவே கருதப்படும். எனவே கோவலன் கண்ணகி பயணமும் பாலையாகிறது. மேலும் எதிர்வரப்போகும் பெரும்பிரிவின் உருவ கமாகவும் அது அமைகிறது.
மதுரையை நோக்கிய பயணத்தில் தீயசகுனங்கள் எதிர்ப்படு கின்றன. இவை வரப் போவதை முன்னறிவிப்பவை என்ற முறை யில் சினையெச்சங்களே. முக்கியமாக அடைக்கலக் காதையின் தொடர்கள் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன. மாதரியிடம் கவுந்தி, “இம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர்….கருந்தடங்கண்ணியடு கடிமனைப் படுத்துவர்” என்று அறிமுகப்படுத்துகிறார். மதுரையைக் காணச் சென்ற கோவலன் தன்குலவாணரைக் காணாது வந்தது ஏன் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
பிறகு “தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிகப் பேரின்பம் தருமது கேளாய்” என்கிறார். இங்கு மிகப்பேரின்பம் என்ற சொல் குறிப்பு முரணாகவும் சிலேடையாகவும் அமைகிறது. ஏனென்றால் கவுந்தி எடுத்துக்காட்டும் எட்டி சாயலன் கதையில் கடைசியாக அவனும் அவன் மனைவியும் “முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்” என்று கூறப்படுகிறது. இவ்விதக் குறிப்பு முரண்களை மிகுதியாகக் காண இயலும்.
ஆய்ச்சியர் குரவையும் வரும் அவலத்தை முன்னுரைக்கும் உருவகமே. இளங்கோவடிகளின் பெயர்உருவகத்தன்மை (name symbolism) இங்கே மிகப் பொருத்தமாகிறது. கோவலன் என்ற பெயர் கோபாலன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவம். கோபாலன்-அதாவது பசுக்களை மேய்ப்பவன் என்று பெயர்பெறும் கண்ணன், யமுனையில் ஆடி வளர்ந்தவன், அவன் காதலி நப் பின்னை. கோவலன் கண்ணகியை மெய்யாகவே கண்ணன் – நப்பின்னை வடிவமாகக் காண்கிறாள் மாதரி.
இந்த ஒப்புமை ஒரு பொருந்தாமையை உட்கொண்டது. பாகவ தக் கதைப்படி கண்ணனின் தோழியாகிய நப்பின்னை ஏற்கெனவே திருமணமானவள்.
ஒரு வேடிக்கையான செய்தி, யமுனையில் கண்ணன் கோபிய ரின் கூறை கொண்டான் என்றால் இங்கு இந்தக் கண்ணன் தன் “கூறைகோட்பட்டுக் கோட்டுமா ஊர்வதாகக்” கனவு கண்டவன். கூறை கோட்பட்டுக் கோட்டுமா ஊர்தல் என்பது இந்தப் பூவுலக உடலைத் துறந்து வானுலகு எய்துவதை உருவகமாக்குகிறது.
முல்லை நிலத்தின் உரிப்பொருள் ஆற்றிஇருத்தல். கணவனின் வருகைக்காக ஆறுதலோடு காத்திருத்தல், தன் இல்லறக் கடமை களை ஆற்றிஇருத்தல் என்றெல்லாம் இச்சொல் பொருள்படும். இந்தப் பின்னணியில், கோவலன் இறந்தபிறகு வானுலகு செல் கையில் கண்ணகியிடம் “இருந்தைக்க” என உரைப்பது பொருள் பொதிந்ததாகிறது. முல்லைத் திணையில் தலைவன் தலைவி யிடம் “ஆற்றியிரு” எனக்கூறிவிட்டுச் சிறிதுகாலம் கழித்துக் கார் காலத் தொடக்கத்தில் விரைந்து திரும்பிவருவான். அதுபோல இங்கும் இவளை “ஆற்றி இரு” என்றவன், சிறிதுகாலத்தில் வானு லகத் தேர்ப்பாகரொடு கண்ணகியை ஏற்றுக்கொள்ள வருகிறான் போலும்.
கண்ணகி தன் இல்லறக் கடமையாற்றுவது – ஆற்றியிருப்பது முதலில் சொல்லப்பட்டாலும் பிரிவு பிரிவுதானே? இங்கு கோவலன் முதல்நாள் மதுரையைக் காணச் சென்ற நிகழ்வோடு சிலம்பை விற்கச் செல்லும்போது நிகழும் நிகழ்ச்சிகளை ஒப்பிட் டுக் காண்பது பயனளிக்கும். கோவலன் கொலைக்களப் பட்டபின் தீச்சகுனங்கள் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து ஆவினத்தை மட்டு மல்ல, கண்ணகியையும் காக்குமாறுதான் (அவள் காண) ஆய்ச் சியர் குரவை நிகழ்கிறது. முல்லைநிலமும் முல்லைக் கருப் பொருளும் உரிப்பொருளும் முற்றிலும் ஆய்ச்சியர் குரவையில் பொருந்தியிருக்கின்றன.
குன்றக்குரவை உண்மையில் மதுரைக்காண்டத்தின் இறுதிப் பகுதியாக இருக்கவேண்டியது. அதனுடன் கண்ணகியை தெய்வ மாக்கும் கதை முடிவுறுகிறது. கண்ணகியைக் கண்டு “இவளை தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே” என்று குறவர்கள் ஏற்ற போதே அவள் சாதாரண, எளிய மக்களின் தெய்வமாகிவிட்டாள். அவளைப் பெருமக்களின் பெருந்தெய்வமாக்கும் முயற்சிதான் செங்குட்டுவனின் கல் கொணரும் செயல். பெருந் தெய்வங்களுக் குத் தான் கற்கோயில் கட்டுதல், நீர்முழுக்கு (கும்பாபிஷேகம்)ச் செய்தல், பார்ப்பனர்களின் ஆசீர்வாதம் எல்லாம் தேவை. “வையங் காவல் பூண்ட நின் நல்யாண்டு ஐயைந்திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாதியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை. எனவே நான்மறை மருங்கின் வேள்விப்பார்ப்பான் அருமறை மரபின் அரசர்க்கு ஓக்கிய பெருநல் வேள்விநீ செய்தல் வேண்டும்” என்கிறான் மாடலன். அதைத்தான் செங்குட்டுவன் தென்தமிழாற்றல் உணர்த் திய பின் வடக்கிலிருந்து திரும்பிவந்து செய்கிறான் என்பது சிறந்த சூழல்முரண். அதுமட்டுமல்ல, “பத்தினிக் கோட்டத்து வேள் வியும் விழாவும் நாடொறும் வகுத்து ….ஏகினான்” வடதிசை வணக்கிய மன்னவர் ஏறான செங்குட்டுவன் என்கிறார்.
மாடலன் கற்பிக்கும் வைதிக வேள்வி நெறிமுறை தமிழகம் முழுதும் பரவுகிறது. பகுதியின் வெற்றி – பார்ப்பனரின் வெற்றி – தமிழ்ச் சமூக வெற்றி ஆகிறது.
கண்ணகிக்குக் கோயில் எடுத்தாலும் கொண்டாடினாலும் அவள் குறவர் தெய்வமாகவே இன்றுவரை நிற்கிறாள். மாடல னின், மாங்காட்டு மறையோனின் பெருந்தெய்வ வழிபாடுதான் பொதுவழிபாடாக எஞ்சிநிற்கிறது.
இளங்கோவடிகளின் காப்பியத்தில் காணப்படும் அளவுக்குத் தமிழ் உணர்வு நேராகப் பிற காப்பியங்களில் காணக்கூடியதாக இல்லை என்பது அனைவர்க்கும் தெரிந்தது. வில்லவன் கோதை சேரனிடம் சொல்கிறான்- “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக் கிய நீ”. வடக்கு-தெற்கு என்ற முரண்சொற்கள் வஞ்சிக்காண்டம் முழுவதும் பலமுறை ஆளப்படுகின்றன. வடதிசை மருங்கின் மன்னர், தென்தமிழ் ஆற்றல் என்ற சொற்கள் பலமுறை இடம் பெறுகின்றன.
சிலப்பதிகாரம்-சிலம்பு + அதிகாரம் என்பது அனைவரும் அறிந் தது. ஆனால் சிலம்பு என்பது இங்கு கண்ணகியின் சிலம்பைக் குறிக்கவில்லை. சிலம்பு என்றால் மலை. மலைக்குரிய சேரனின் வெற்றி, தமிழின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி ஆக்கப்படுகிறது. பகுதி முழுமைக்கு ஆகிறது. சேரநாடு (கேரளம் ஆனபிறகும்தான்) வடக்கின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டது. அதுவே தமிழ்நாட் டுக்கும் ஆகிறது. வடக்கின் பண்பாடு வெற்றி பெறுகிறது, உண் மையில் தமிழகத்தின் பண்பாடு தாழ்கிறது என்பதே சிலப்பதிகாரம் காட்டும் செய்தி.
குறவர்களின் குரவை நடப்பது மலையொன்றின் மீது. அங்குதான் கண்ணகி வானுலகு ஏறினாள். இவ்விதம் வானுலகு ஏறவும் தெய்வங்கள் வானிலிருந்து இறங்கவுமான இடத்தை Axis Mundi என்பார்கள். குறவரின் செவ்வேள் குன்றம் இவ்விதப் பொதுமை அச்சாகிறது. இதுவரை நிகழ்ந்தது ஒரு பயணம். கண்ணகி நெய்தல் நிலத்திலிருந்து தொடங்கி மருதம், பாலை, முல்லை வழியாக நடந்து கடைசியாகக் குறிஞ்சியை அடைந்த நிகழ்வு. கீழிடத்திலிருந்து மேலிடத்திற்கு உயர்வதற்கான உருவ கம் இந்தப் பயணம்.
கோவலன் முல்லை நிலத்தோடு நின்று விட்டான். அவனால் கண்ணகியளவு உயர முடியவில்லை. உடன்வந்த கவுந்தியடிக ளும் அவ்வாறே. மற்றவர்களின் பயணங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் அவை புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்பவை. சுழல்வட்டப் பாதைகள். சேரன் செங்குட்டு வனும் மாடலமறையோனும் இமயத்திற்குச் சென்றுவிட்டுப் பிறகு தத்தம் இடங்களுக்கே திரும்பிவிடுபவர்கள்.
கண்ணகியும் மலையை நோக்கிச் செல்கிறாள், சேரனும் இமய மலையை நோக்கிச் செல்கிறான். கண்ணகியின் நோக்கம் கணவ னோடு மதுரை அடைதல், இடையில் வையையாறு குறுக்கி டுகிறது. வையையாற்றைக் கடந்து பாண்டியனைப் பழிதீர்த்து மேற்கு மலைக்குக் கணவனைக் காணச் செல்கிறாள் கண்ணகி.
சேரனின் நோக்கம் இமயத்திலிருந்து கல் கொணர்வது. இடை யில் கங்கை குறுக்கிடுகிறது. அதைக் கடந்து கனகவிசயரை வென்று கல்கொணர்ந்து கோயிலமைக்கப் போகிறான் செங்குட்டு வன். இவன் இலக்கு-கோயில் அமைப்பது. கண்ணகியைத் தெய்வமாகக் காணல் என்பதாக அமைகிறது.
கணவன் மானத்தைக் காக்கப் போராடும் கண்ணகிபோல், கனகவிசயர் இழிவாகப் பேசிவிட்டதால் தமிழர் மானத்தைக் காக்கச் சேரன் போகிறான். மானத்தைக்காத்தல் என்பது தமிழர்க்கு உகந்த செயலாகக் காட்டப்படுகிறது. மீட்பு வாதம், பழம்பெருமை பேசுதல் போன்றவற்றிற்கும் இந்த நோக்கு அடிப்படையாகிறது. பழந்தமிழ்ப் பெருமை பேசுவதற்கு அடிப்படையாக அமைவன கற்பும் வீரமும். பாலைநிலச் சாலினி கண்ணகி கற்பின் தெய்வ மாகப் போவதை முன்-உரைக்கிறாள் என்றால், செங்குட்டுவன் தமிழ் வீரத்தைக் காக்கவும் கண்ணகிக்குக் கோயில் சமைக்கவும் வடநாட்டுக்கு எழுவதை எழுச்சிப்-பாலை என்கிறார் இளங்கோ வடிகள்.
இனி வேறுசில முக்கியமான சினையெச்சங்கள் பற்றிச் சிறிது காணலாகும். மங்கல வாழ்த்துப் பாடலாக ஞாயிறு, திங் கள், மழை ஆகியவற்றைப் போற்றுவது சினையெச்ச அமைப்பு. கதாபாத்திர வருணனையிலிருந்து மனிதர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதும் சினையெச்ச அமைப்புதான்.
கோவலன் செவ்வேளுக்கும் கண்ணகி அருந்ததிக்கும் ஒப்பிடப் படுகின்றனர். செவ்வேள் என்று கோவலனைக் குறித்த நோக்கம் கண்ணகி-மாதவி இருமாதரை ஏற்பதால் தெளிவாகிறது. கோவல னைச் செவ்வேளுக்கு ஒப்பிட்டால் வடமொழி மரபுப்படி என்றால் தேவசேனைக்கும் தமிழ் மரபுப்படி என்றால் வள்ளிக்கும் கண்ணகி யை ஒப்பிடலாம். ஆனால் அருந்ததி என்ற பெயர்க்குறியீடு பெரிய முரண்பாட்டை உருவாக்குகிறது.
சப்தரிஷிமண்டலம் என்னும் ஏழுநட்சத்திர மண்டலத்திலுள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர்களாம். அவர்களில் வசிட்டரு டைய மனைவி அருந்ததி மட்டும் செவ்வேளுக்குத் தாய்ப்பால் புகட்டச் செல்லவில்லை. பிற அறுவரும் அறுமுகச் செவ்வேளுக் குப் பாலருத்தி அவன் தாய்மார் ஆகிவிட்டனர். அருந்ததி ஒருத்திதான் அவ்வாறு கறைபடாதவள், தூய கற்புடையவள். இதெல்லாம் தெரிந்துதான் அருந்ததியைக் கண்ணகிக்கு உருவக மாக்குகிறார் இளங்கோவடிகள். ஆனால், பாவம் இந்தச் சேர்க் கைதான் (செவ்வேள்-அருந்ததி, கோவலன்-கண்ணகி) பொருந்தா மல் போகிறது.
குறிப்புமுரண் (ஐரனி) என்பது சினையெச்சத்தின் வெளிப்பாடு களில் ஒன்று. (அது போல அங்கதம் (சடையர்) என்பது உருவகத் தின் வெளிப்பாடுகளில் ஒன்று என்பார்கள்.) நாடக முரணாகக் “கவவுக்கை நெகிழாமல் தீது அறுக” என்ற குறிப்பை வைத்ததைப் பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
கண்ணகியின் கதை விரிவாக ஐந்து நிலங்களுக்கான பாடல்க ளையும் தருகிறது என்றால் வஞ்சியிலேயே சேரமாதேவி ஐந்து நிலப்பாடல்களையும் கேட்கிறாள் என்ற குறிப்பு வருகிறது. இது வும் சேரன் செங்குட்டுவனின் கதை கண்ணகி கதையின் உருவகச் சேர்க்கை என்பதைக் காட்டுகிறது.
கண்ணகி கதை சினையெச்சமாக அமைவதை நன்கு உணர்ந் தவன் மாடல மறையோன். அவன் சேரன்
செங்குட்டுவனிடம் கூறும் “மாதவி மடந்தை கானற்பாணி, கனகவிசயர்தம் முடித் தலை நெரித்தது” என்ற சொற்கள் இதனைத் தெளிவுபடுத்து கின்றன. அவனுடைய காரணகாரிய அறிவாற்றலையும் ஒரு நிகழ்வின் அடிப்படைத் திருப்பத்தை உணர்ந்துகொண்ட முறை யையும் இவை காட்டுகின்றன. பெண்டிர் கற்புதான் அரசர் முறை செய்வதற்கு அடிப்படையாக அமைகிறது என்று மதுரைக் காண்டத்தில் கூறும் இளங்கோவடிகள், “அருந்திறலரசர் முறை செயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது” எனப் ‘பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை’ என்று வஞ்சிக்காண்டத்தில் சொல்வது முரணாக இருக்கிறது.
மாலதியின் வரலாறு இருமுறை இடம் பெறுகிறது. வலியுறுத் தலுக்கென என்று நோக்கினால், எதற்கு வலியுறுத்தல்? சேரநாட் டின் சின்னமான சாஸ்தா அல்லது சாத்தனைப் (இன்றைய வழக்கில் ஐயனார்) போற்றி மனத்தில் பதியவைக்கவே எனத் தோன்றுகிறது. ஒரு வேறுபாடு, இன்றைய சாஸ்தா பிரம்மசாரி. அன்றைய சாஸ்தாவோ மானிட உருவம் கொண்டு தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறான்.
இதுவரை நோக்கியவற்றால் சிலப்பதிகாரத்தில் உருவகம் சினையெச்சம் எவ்விதம் செயல்பட்டு அதன் கருத்தியலை உருவாக்குகின்றன, எவ்விதக் காப்பியமாகக் கட்டமைக்கின்றன என்பது தெளிவாகிறது.