சிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)

சிறுவர் கதை – சிறிய சிவப்பு இறகு

குழந்தைகளே! நம் நாட்டில் வழங்கிவருகின்ற பொன்முட்டை யிட்ட வாத்து கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டை இட்டு வந்ததாம். அதை வைத்திருந்த பெண்மணி, அதை ஒரேயடியாக அறுத்துவிட்டால் எல்லா முட்டைகளும் கிடைக்குமே என்று எண்ணி அதைக் கொன்று விட்டாளாம். “பேராசை பெருநஷ்டம்” என்பது அதன் நீதி.
இதேபோன்ற கதை ஒன்று அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) மத்தியில் வழங்கி வருகிறது. இதோ அதைப் படித்துப் பாருங்கள்.
ஒருசமயம் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தான். அவர்கள் மிக ஏழைகள். அடிக்கடி பசியால் வாடினர். அந்த ஆடவன் அவ்வப்போது காட்டுக்குச் சென்றான், ஆனால் அவனுக்கு நன்றாக வேட்டையாடத் தெரியாது. அதனால் சில சமயங்களில் ஒரு சிறிய பறவை-இப்படி ஏதாவது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும்.
ஒருநாள் அவன் காட்டுக்குச் சென்றான். அது அவனுக்கு மோசமான நாள். ஒரு சிறிய பறவையும்கூட அன்று கிடைக்கவில்லை. களைத்துச் சோகமாக இருந்த அவன், ஓய்வெடுக்க ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தான். ஒரு பறவையின் இனிமையான பாடலை அப்போது கேட்டான்.
மேல்நோக்கிப் பார்த்தான். சிவப்புநிற இறகுகளைக் கொண்ட ஒரு சிறிய பறவை இருந்தது. “நீ ஏழையாகவும் பசியோடும் இருப் பதைப் பார்க்கிறேன். உனக்கு உதவி செய்கிறேன். என் இறகு ஒன்றை உனக்குத் தருகிறேன். அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமையல் செய். நல்ல விருந்து உனக்குக் கிடைக்கும். நாளைக்கு மறுபடியும் வா. இன்னொரு இறகைத் தருகிறேன்.”
பறவைக்கு நன்றி கூறி, வீட்டுக்குச் சென்றான். ஒரு பானையில் இறகை வைத்து, எல்லாவற்றையும் தன் மனைவிக்குச் சொன் னான்.
“முட்டாளே, இறகு எப்படி உணவாக மாறும்? நீ அந்தப் பறவை யைப் பிடித்துக் கொல்லவேண்டும். பிறகு அதைச் சமைத்து உண்ணலாம்” என்றாள் அவள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. பானையைப் பார்த்தால் அதில் நிறைய உணவு இருந்தது.
தினமும் அவன் காட்டுக்குச் சென்றான். தினமும் அந்தப் பறவை தன் இறகு ஒன்றை அவனுக்குத் தந்தது. அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் போதுமான உணவை அளித்தது.
ஆனால் அவன் மனைவி பேராசை பிடித்தவள். ஒவ்வொரு நாளும் அவள் கணவனிடம், “நமக்கு ஒரு சிறிய இறகு மட்டும் போதாது. பறவை நமக்கு வேண்டும். அப்புறம் 2, 3, 4 எத்தனை இறகை வேண்டுமானாலும் நாம் சமைக்கலாம், நமக்கு விருப்ப மான அளவு போதிய உணவு கிடைக்கும்” என்று சொல்லி வந்தாள்.
“ஆனால் அந்தப் பறவை என் நண்பன். நான் அதைக் கொல்ல மாட்டேன்”.
ஒருநாள் அவன் மனைவி காட்டுக்குள் கணவனைப் பின் தொடர்ந்து சென்றாள். அவளை அவன் பார்க்கவில்லை. பறவையின் இனிய பாட்டை அவள் கேட்டாள். அதன்மீது குறி பார்த்துக் கல்லை எறிந்தாள். அது மரத்திலிருந்து விழுந்து இறந்து போயிற்று.
கணவன் மிகவும் வருத்தப்பட்டான். ஆனால் மனைவி, “இப்போது தினமும் நமக்கு வேண்டிய உணவு கிடைக்கும்” என்றாள்.
வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டில் அவன் மனைவி ஒரு சிவப்பு இறகைப் பிடுங்கி வெந்நீரில் இட்டாள். சமைத்தாள். ஆனால் இறகு இறகாகவே இருந்தது.
அன்றுமுதல் அவர்கள் எப்போதும் பசியாகவே இருக்கலானார்கள்.

மொழிபெயர்த்த_சிறுகதை