சிரிப்பும் பெயர்ப்பும்

sirippum2

தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. காரணம், ஆங்கிலத்தில் humour, joke என்றெல்லாம் வழங்கப்படும் சொற்களுக்குத் தமிழில் ஏற்றதாக எதுவும் கிடையாது. அவனுக்கு அழுகை வருகிறது, இவனுக்கு அச்சம் தோன்றுகிறது, அவருக்குப் பெருமிதம் அதிகம் என்றெல்லாம் சொல்கிறாற் போல், இவனுக்கு நகை தோன்றுகிறது என்று சொல்லமுடியாது. குறைந்த பட்சம், இன்றைய தமிழில் சொல்லமுடியாது. சொன்னால் எங்கே நகை என்று ஓடுவார்கள். நகைப்பு என்று சொல்லலாமே என்கிறீர்களா? அது நகைக்கும் செயலைக் குறிக்குமே (தொழிற்பெயர்) தவிர, நகைப்பை ஏற்படுத்தும் ஒரு செயலையோ சொற்கூட்டத் தையோ குறிக்காது. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழ்க்கவிதையைப்பார்த்தால் நகைச்சுவையை மட்டும் அதிகம் காணமுடியவில்லை. காளமேகப் புலவர் ஒருவர்தான் கவனத்திற்கு வருகிறார். அதற்குப்பின் கவிமணி தேசிகவிநாயகம்தான். மொழியியலாளர்களின் கருத்துப்படி ஓர் இனம் எந்த எந்தப் பொருள்களை அல்லது சிந்தனைகளைப் பயன்படுத்துகிறதோ அதற்கு நிறைய சொற்கள் மொழியில் காணப்படும். எது அந்த இனத்தின் பயன்பாட்டில் இல்லையோ அதற்கான சொற்களும் இருக்காது. அந்த அடிப்படையில், தமிழினத்திற்கு நகைச்சுவைத்துறையில் சொற்பஞ்சம். அப்படியானால் மொழியாளர்கள் கருத்துப்படி தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்று தானே அர்த்தம்?

மரபில் வந்துவிட்ட சொற்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழில் விதிஇருப்பதால், தக்கசொற்கள் கிடைக்கும் வரை humour என்பதற்கு ஹாஸ்யம் என்றும், joke என்பதற்கு நகை(ச்சுவைத்)துணுக்கு என்றும் வைத்துக்கொள்வோம். நகைச்சுவைத்துணுக்கு என்பதில் இடையில் சுவை என்பது வேறு சுவைக்கேடாகக் குறுக்கிடுகிறது. நகைத்துணுக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நகை என்றால் தமிழர்களுக்குத் தங்கநகைதான் ஞாபகத்திற்கு வரும். நகைத்துணுக்கு என்றால் யாராவது துண்டாகிப்போன நகை என்றுநினைப்பார்கள். நகைத்துணுக்கு என்பதைவிட சிரிப்புத்துணுக்கு என்பது பொருத்தமாகஇருக்கும் என்று தோன்றுகிறது. நகை என்பது அத்தியாவசியமான சொல்லாக இல்லாமல் ஆபரணம், சிரிப்பு என்ற இரண்டையும் குறிக்கும்போதே மொழியியலாளர் கருத்து சரி என்று படவில்லையா?

ஆங்கிலத்தில் நகைச்சுவை சம்பந்தமான பேச்சு அல்லது எழுத்துச் சொற் கோவையைக் குறிக்கப் பலசொற்கள் இருக்கின்றன. wit என்பது அறிவுத்திறன் வாய்ந்த நகைச்சுவை எழுத்து அல்லது பேச்சு. humour என்பதும் உயர்ந்தவகையில் சிரிப்பினை உண்டாக்க வல்லதே. joke என்பது மட்டமானது. ஹாஸ்யம் என்பது உலகளாவியது, ஜோக் என்பது மாறுவது” என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. Repartee (சாதுரியமான பதில்) என்பது ஒருவருடைய தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை செய்து மட்டம் தட்டுமாறும் சிரிப்புவருமாறும் பேசுதல். இவற்றிற்குச்சான்றுகள் தரலாம்.

ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்: “Lead me not into temptation. I can find the way myself”. இது wit எனப்படுவதில் அடங்கும்.

“மகளே, உன் வீட்டுக்காரர் மிகவும் லேட்டாக இரவில் வீட்டுக்கு வருகிறாரே. உங்கம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையா?”

“சொன்னாங்கப்பா. ஆம்பிளைங்க எந்தக் காலத்திலும் மாறுகிறதே இல்லைன்னாங்க”

இது ஹாஸ்யம் அல்லது humour என்ற வகையைச் சேர்ந்தது.

“அடுத்தவீட்டுக்காரர் அவர் வேலைக்குச் செல்லும் முன்னால் அவருடைய மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். நீங்களும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது?”

“எனக்கு விருப்பந்தான். ஆனால் எனக்கு அந்தம்மா யாரென்றே தெரியாதே”

இது joke அல்லது சிரிப்புத்துணுக்கு என்ற வகை.

Repartee என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்: அறிஞர் அண்ணாதுரையிடம் சட்டசபையில் (அவரை இழிவுபடுத்துவதற்காக) “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?” என்று கேட்டார்கள். அவர் சொன்னார்: “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவர் படி தாண்டாப் பத்தினியும் அல்ல”.

சிரிப்புத்துணுக்குகளை பன்னிரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன்.

1. குறிப்பிட்ட இனத்தை அல்லது குழுவைப்பற்றிய துணுக்குகள். சர்தார்ஜி ஜோக்குகள் இப்படிப்பட்டவை. கருமிகள், ஊமைகள், அசுத்தமானவர்கள், குருட்டுத்தனமான விசுவாசத்தைக் காட்டுபவர்கள், மொழியைச் சிதைத்துப் பேசுபவர் கள், தந்திரசாலிகள் போன்றவர்களைப் பற்றிய துணுக்குகளையும் இதில் சேர்க்கலாம். இந்திப் படங்களில் தமிழர்களைக் கேலிசெய்ய பட்டையாக விபூதி தரித்த, குடுமி வைத்த ஒருவனைக்காட்டி, அவன் வாக்கியத்திற்கு வாக்கியம் ஐயோ என்று கூறி இந்தியைக் கொச்சையாகப் பேசுவதாகக் காட்டுவார்கள். இது போன்றவை. (“ஐயோ, மை க்யா கரூம்? ஐயோ, முஜே மாலும் ஹீ நஹீந் த்தா யா இஸ் தரஃப் ஹோகா”). இதேபோல தமிழில் வடநாட்டவரை – குறிப்பாகப் பட்டாணியரை அடையாளப் படுத்த, “நம்பள் சொல்றான், நிம்பள் கேக்கிறானில்ல. ஜல்தி பத்தாய்ரம் தர்றான்” என்பதுபோல உரையாடல் அமைப்பார்கள்.

2. அரசியல் துணுக்குகள். அரசியல் சூழல்கள், அரசாங்க நடைமுறைகள், தேசிய குணங்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏ-எம்.பிக்கள் போன்றவர்களை எள்ளி நகையாடுதல் போன்றவை இப்படிப்பட்டவை. அரசியல் தேசமுழுவதற்கும் பொதுவா னதால் இவை ஜனரஞ்சகமான பிரபலமான சிரிப்புத்துணுக்குகளாக இருக்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகளில் இவற்றை மிகுதியாகக் காணலாம்.

3. பாலியல் சிரிப்புத்துணுக்குகள்-விபசாரம், ஆபாசம், பாலியல் அறியாமை, பாலியல் திறன்,  கவர்ச்சி, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சிரிப்புத்துணுக்குகள் இவ்விதம். உதாரணத்திற்கு ஒன்று:

முதலிரவுப் படுக்கையில் கணவன் மனைவியிடம்:: “டார்லிங், உன் வாழ்க்கையில் நான்தான் முதல் ஆண்மகன் என்று சொல்வாயா?”

மனைவி (கூர்ந்து பார்க்கிறாள்): “இருக்கலாம்.. உங்கள் முகம் பரிச்சயமாகத்தான் தெரிகிறது”

4. மதசம்பந்தமான சிரிப்புத்துணுக்குகள். சமயசம்பந்தமான விஷயங்கள், மூட நம்பிக்கைகள், சாமியார்கள், கடவுளர்கள் போன்ற விஷயங்களைப் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

5. பொருளாதார நிலை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். பற்றாக்குறை, ஏழ்மை, பிச்சைக் காரத்தனம் போன்றவை பற்றிய துணுக்குகள் இவ்வகை. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரப் பழக்கவழக்கங்களும் இவற்றில் கேலிக்குள்ளாகும். உதாரணத்திற்கு ஒன்று:

துயர்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி காலியாக இருக்கிறது”.

மகிழ்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி நிரம்பியிருக்கிறது”.

பன்னாட்டுக்கம்பெனி வேலைக்குறைப்பு ஆலோசகன்: “தேவைக்கு அதிகமாக ஒரு டம்ளர் இருக்கிறது”.

6. முட்டாள்தனம் பற்றிய, அல்லது வயதானதால் ஏற்படும் மறதி போன்றவை பற்றிய சிரிப்புத் துணுக்குகள்.

7. ரிபார்ட்டி எனப்படும் சாதுரியமான பதிலடிகள். (முன்பே உதாரணம் தரப்பட்டது. என்றாலும் இன்னொன்று பார்க்கலாம்):

பெர்னாட்ஷாவிடம் ஒரு நடிகை கூறினாள்: “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் அறிவும், என் அழகும் சேர்ந்த குழந்தைகள் பிறப்பார்கள் இல்லையா?” அவர் சொன்னார்:”அம்மணி, மாறிப் பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதை quickwit என்று சொல்பவர்கள் உண்டு.

8. சமூகத்திற்கு எதிரான குடி, திருட்டு, பயங்கரவாதம் போன்ற குற்றங்கள் பற்றிய சிரிப்புத் துணுக்குகள். இவையும் தமிழ் இதழ்களில் மிகுதியாகவே வருகின்றன.

9. சீருடை நகைச்சுவை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். போலீஸ், இராணுவம், முதலானவர்கள் முதல், சீருடை அணிந்த ஹோட்டல் சர்வர்கள் வரை இது செல்லும். உதாரணம் ஒன்று:

என்நண்பன் நேவி(கடற்படை)யில் சேர்வதற்காக மருத்துவச்சோதனைக்கு உட்பட வேண்டியிருந்தது. அவன் தோள்பட்டை சரியாக இல்லாததால் முழுதும் உயரமாகக் கையைத்தூக்க இயலவில்லை. “என்ன செய்யலாம்” என்று கீழ்நிலை மருத்துவர் கேட்டார். “ஒன்றும் பாதகமில்லை. பாசாக்கிவிடுங்கள். சரணடையும் போது தவிர அவனுக்கு ஒன்றும் பிரச்சினை ஏற்படாது” என்றார் உயர்மருத்துவர்.

10. வேலைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள். இதில் ஆசிரியர்-மாணவர், கல்விநிறுவனங்கள், மாணவர்களுக்குள்ளான நகைச்சுவை, வக்கீல்கள், மருத்துவர்கள், தொழில்செய்வோர், வணிகர்கள், எழுத்தர்கள், அதிகாரிகள் போன்றோர்பற்றிய நகைத்துணுக்குகள் அடங்கும். சான்று,

என் மகன் எல்கேஜி வகுப்பிலிருந்து மாறி யுகேஜி வகுப்புக்கு வந்தான். வகுப்பு மாறியது ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை. அவன் பாஸாகிவிட்டதால் அந்த வகுப்புக்கு மாறியிருப்பதாக நான் விளக்கினேன். “பாவம் மம்மி, அப்ப எங்க மிஸ் ஃபெயிலாயிட்டாங்க” என்றான். “அவங்க அதே கிளாஸ்ல தானே இருக்காங்க”.

11. குடும்பத்துணுக்குகள். தாத்தா, பாட்டி, பெற்றோர், பிள்ளைகள், மாமன், மைத்துனன் போன்ற உறவு முறைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

12. மொழியியல் சார்ந்த துணுக்குகள். சொற்பிழைகள், அச்சுப்பிழைகள், சிலேடைகள், கேலிகள், நையாண்டிகள், உச்சரிப்பு, சொல் அல்லது வாக்கியம் சார்ந்த தவறுகள் யாவும் இவ்வகையில் அடங்கும்.

இவற்றுடன் இப்போது பிரபலமாயிருக்கிற ‘கடி’களையும் ஒருவகையாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒன்று:

“காதைப் பொத்திக்கொண்டிருக்கும் கொரில்லாவை(மனிதக் குரங்கை) என்னவென்று அழைக்கலாம்?”

“எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். நீ என்ன அழைத்தாலும் அதற்குக் கேட்கப் போவதில்லை”.

மொழியியல்சார்ந்த சிரிப்புத்துணுக்குகளை மொழிபெயர்ப்பதுதான் மிகவும் கடினம். பிற எல்லாவகைத்துணுக்குகளையும் ஒருவாறு எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஆனால் ஒரேமாதிரி உச்சரிப்புகொண்ட சொற்கள்(homonyms), பல அர்த்தங்கொண்ட சொற்கள்(polysemy), பொருள்மயக்கம், சிலேடை, உருவகம் போன்ற வை அமைந்த சிரிப்புத்துணுக்குகளை எளிதில் மொழிபெயர்க்க முடியாது. உதாரணத் திற்கு ஒன்று-

Boy: Here, honey. Sweets to the sweet.

Girl: Oh, thank you. Won’t you have some of these nuts?

இங்கு nuts என்றசொல்லில் அமைந்திருக்கும் சிலேடையை மொழிபெயர்க்கமுடியாது. நட்ஸ் என்ற சொல்லுக்கு கடலை, பட்டாணி போன்ற முழுப்பருப்புகள் என்ற அர்த்தம் மட்டுமல்ல, பைத்தியம் என்ற பொருளும் உண்டு. மொழிபெயர்ப்பில் இந்த அர்த்தத்தைக் கொண்டுவர முடியாததால் அது தோல்வியடைகிறது.

மொழிபெயர்க்கும்போது மூல(இங்கு ஆங்கில)ப் பிரதியில் உண்டான அதே விளைவு உண்டாக வேண்டுமானால் இரட்டை அர்த்தம், கேலி, நையாண்டி, ஒரேவடிவம் கொண்ட சொல், பலபொருள் கொண்ட சொல், உருவகப்பாங்கான சொல் போன்றவற்றை எழுத்துமாற்றம்தான் (transliteration) செய்யவேண்டும். அதாவது அந்த ஆங்கில வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதிவிட வேண்டும். உதார ணமாக, பின்வரும் துணுக்கினைப் பாருங்கள்,

பில்கேட்ஸ் இறந்து சொர்க்கத்திற்குப்போகிறார். அவருக்குச் சிறிய வீடொன்று மட்டும்தான் அளிக்கப்படுகிறது. காலை வாக்கிங் போகும்போது அழகான சூட் அணிந்த ஒருவனைச் சந்திக்கிறார். அந்த சூட் அவரை மிகவும் கவர்கிறது. எங்கே கிடைத்தது என்று விசாரிக்கிறார். அவன் சொர்க்கத்தில் தனக்கு அந்தமாதிரி சூட்டுகள் ஐம்பது, இரண்டு மாளிகைகள், படகுகள், கார் போன்றவசதிகள் கிடைத்திருப்பதாகக் கூறுகிறான். இவையெல்லாம் கிடைக்க, அப்படி நீ என்ன செய்தாய் என்றுஅவனை விசாரிக்கிறார். அவன் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக இருந்ததாகக் கூறுகிறான். உடனே எரிச்சலோடு செயிண்ட் பீட்டரை (சொர்க்கத்தின் வாயிற்காவலர்)ப் பார்க்க ஓடுகிறார் பில்கேட்ஸ்.

“இதென்ன அநியாயம்? டைட்டானிக் கப்பல் தலைவனுக்கு இவ்வளவு வசதி, விண்டோஸ் கண்டுபிடித்த எனக்கு ஒரு சிறிய இடம்தானா?”

“நாங்களும் விண்டோஸைப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் பீட்டர். “டைட்டானிக் ஒரு முறைதானே கிராஷ் ஆகியது?”

இதில் எத்தனை சொற்கள் அப்படியே எழுத்துப் பெயர்ப்புசெய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கவும். குறிப்பாக punch line ஆகிய கிராஷ் என்பது மிக முக்கிய மானது. இதற்குப் பதிலாக உடைதல், நொறுங்குதல், போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் இதன் நகைச்சுவை போய்விடும்.

சிலேடையும் மேற்கூறியது போலத்தான். உதாரணமாக,

Why did the Pope cross the road?

Why, he crosses everything…

இங்கு கிராஸ் எனப்படும் சொல்லின் சிலேடைதான் முக்கியம். he crosses everything என்பது முக்கியவரி(punch line).

மிக அதிகமாகக் கலாச்சாரத்தன்மை கொண்ட துணுக்குகளையும் மொழி பெயர்க்க ஆவதில்லை. உதாரணமாகக் கீழ்வரும் ஆங்கிலத் துணுக்கைப் பாருங்கள்:

As I was hugging my teenage son goodnight, he said, “you are my favourite mum in the whole world”. “I am your only mum, silly” I replied smiling. “OK” he said matter-of-factly. “You are my most favourite woman”.

“What’ll happen when you get a girlfriend?” I teased.

“Then there’ll be a tie”, he decided.

இத்துணுக்கில் வரும் சொற்கள், பழக்கவழக்கங்கள் யாவும் ஆங்கிலக் கலாச்சாரத்திற்கே உகப்பானவையாக இருப்பதால், இதனை அவ்வளவு எளிதில் தமிழில் மொழி பெயர்த்துவிடமுடியாது. பெயர்த்தால் ஒருவித அருவருப்புதான் ஏற்படும். சான்றாக, அதன் மொழிபெயர்ப்பைத்தான் பாருங்களேன்.

குட்நைட் சொல்வதற்காக என் டீனேஜ் மகனைத் தழுவியபோது அவன் சொன்னான்: “இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்தமான அம்மா நீ ஒருத்திதான்”. “உன் ஒரே அம்மா நான்தான்” சிரித்துக்கொண்டே திருத்தினேன். “சரிதான்” என்று யதார்த்தமாகச் சொன்னவன், பிறகு

“நீதான் எனக்கு மிகவும் பிடித்தமான பெண்” என்றான்.

“உனக்கு ஒரு கேர்ல்-பிரண்ட் கிடைத்தால் என்ன சொல்வாய்?” என்று விளையாட்டாகக் கேட்டேன். “அப்படியானால் ஒரு டை (tie – சம எண்கள் பெற்ற இரு விளையாட்டுக் குழுக்களிடையே ஏற்படும் போட்டி) ஏற்படும்” என்று முடித்தான்.

சில சமயங்களில் பழமொழிகள்கூட சிரிப்பூட்டுவதாக அமையலாம். இது ஆங்கில வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சீனப் பழமொழி. “விளக்குச் செலவைக் குறைக்க சீக்கிரம் படுத்தால், இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாம்”.

மேற்கண்ட துணுக்குகள் எல்லாமே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளிலிருந்து (ஆங்கிலத்திலிருந்து) தமிழுக்குப் பெயர்க்கப்பட்டவை. இம்மாதிரி நிறைய ஜோக்குகளை மொழிபெயர்த்த அனுபவத்திலிருந்து வெளிப்படும் சில கருத்துகளைத் தொகுத்துப்பார்க்கலாம்.

1. எல்லாவகையான சிரிப்புத்துணுக்குகளையும் மொழிபெயர்க்க இயலும். ஆனால் சிலவகைத் துணுக்குகளை மொழிபெயர்க்கும்போதுதான் மூலமொழியில் உண்டானது போன்ற  நகைச்சுவை விளைவு ஏற்படுகிறது.

2. இவ்வகை மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது மொழிபெயர்ப்பாளர்கள் சுதந்திரமான மொழிபெயர்ப்பு முறையையோ, அல்லது மிக விசுவாசமான சொல்லுக் குச் சொல் முறையையோ கையாளுவதில்லை. இயங்கியல் நிகர்மை (dynamic equivalence) காணும் முறையே கையாளப்படுகிறது.

3. ஒரே ஜோக்கை வெவ்வேறு ஆட்கள் மொழிபெயர்க்கும்போது அவை வெவ்வேறு வகையாக, இருவேறு வடிவங்களாக மாறிவிடுகின்றன.

4. துணுக்குகளை மொழிபெயர்க்கும்போது பஞ்ச்லைன் எனப்படும் நகைச்சுவை விளைவை உண்டாக்கக்கூடிய வாக்கியம்தான் முக்கியம். அதனை வெற்றிகரமாக மொழிபெயர்ப்பதில் தான் ஜோக்கின் வெற்றி அடங்கியிருக்கிறது. அப்படி பஞ்ச் லைனை மொழிபெயர்க்கும்போது, மூலமொழியில் என்ன விளைவு ஏற்பட்டதோ அதேபோன்ற விளைவு இலக்குமொழியிலும் ஏற்படுமாறு பெயர்க்கவேண்டும்.

5. பிரச்சினைக்குரிய சிரிப்புத்துணுக்குகள் எனப்படுபவை, மொழியியல் ரீதியான சிரிப்புத் துணுக்குகள்தான். இவற்றை மொழிபெயர்க்கும்போது பலவகை உத்திகள் தேவைப்படுகின்றன. அப்படியும் சரியான விளைவு ஏற்படும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் விரிவாக மொழிபெயர்ப்பதும் பயன்தரும்.

6. உருவகங்கள், மரபுத்தொடர்கள்போன்றவை துணுக்கில் இருந்தால் அவற்றின் பொருளைத்தான் மொழிபெயர்க்கவேண்டும்.

7. எந்த வகை இரசிகர்களுக்குரியது, எந்தச் சூழலுக்குரியது என்பது துணுக்கின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதே விளங்கவேண்டும். அந்தமுறையில் மொழி பெயர்ப்பு அமைய வேண்டும்.

sirippum1

8. சிரிப்புத்துணுக்குகளின் மொழிபெயர்ப்புகளை நாம்எளிதில் மதிப்பிடலாம். அப்படி மதிப்பிடும்போது பொதுவாக மூலமொழியில் அதன் விளைவை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடவேண்டும். அப்படித்தான் மதிப்பிடுகிறார்கள். வேறுவகையில் சொன்னால், எந்த அளவு நகைச்சுவை உண்டாக்கும் திறன் மூலமொழித்துணுக்கிற்கு இருக்கிறதோ அந்தத் தன்மையே இலக்குமொழியிலும் அளவுகோலாகச் செயல்படு கிறது. ஏனெனில் துணுக்குகள் பெயர்ப்புகளாக இருந்தாலும் மூலமொழியில் படிப்பதைப் போன்ற விளைவுக்காகவே வாசிக்கப்படுகின்றன. ஆகவே துணுக்குகளின் மொழிபெயர்ப்பு, அவைசரியான விளைவைஅல்லது நகைச்சுவையை உண்டாக்குவத னால்தான் நியாயம்செய்யப்படும். பிற மொழிபெயர்ப்புகள் பொதுவாக மூலமொழிக் குள்ள விசுவாசத்தை வைத்து மதிப்பிடப்படும். ஆனால் சிரிப்புத் துணுக்குகளை மதிப்பிடுவது அப்படி அல்ல.

நகைச்சுவைத் துணுக்குகளையும் ஒருவித நாட்டுப்புற இலக்கிய வகையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக, முன்னேற்பாடின்றி, இலகுவாகத் தோன்றுகின்ற தன்மை அவற்றிற்கு இருக்கிறது. ஏற்பாட்டோடு செய்யப்படும் இலக்கிய வகை அல்ல இது. ஏற்பாட்டோடு எழுதும்போது சுவை காணாமற்போய்விடுகிறது. அயல்நாட்டு அல்லது அயல் கலாச்சாரத்தைச் சேர்ந்த துணுக்குகளை மொழிபெயர்ப்பது, அவர்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள- குறிப்பாக அவர்கள் வைத்திருக்கும் நல்ல/மோசமான பழக்கவழக்கங்கள், சமூக விலக்கங்கள்(taboos) போன்றவற்றையெல்லாம் எளிதில் அறிந்துகொள்ள உதவுகின்றது. குறிப்பாக, மொழிரீதியான துணுக்குகளை மொழிபெயர்ப்பது இருமொழிகளிலும் ஆற்றல்பெற உகந்த நல்ல பயிற்சி. பலசமயங்களில் அயல் கலாச்சாரத்தினரின் பேச்சுமொழியை விரைவில் அறிந்துகொள்ளவும் நல்ல பயிற்சியாகும்.

மொழி