இது புறநானூறு 243ஆம் பாட்டில் வரும் தொடர். அக்கவிதையை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி” என்று பாடலில் வரும் தொடரினால் அவருக்கு இந்தப் பெயரை அளித்து விட்டிருக்கிறார்கள். பாட்டு இதோ:
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவு வழி தழீஇ, தூங்குவழி தூங்கி,
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே – யாண்டு உண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே!
இது கவிதை. இதன் பொருள்:
இனி நினைந்து – இப்போது நினைக்கும்போது,
இரக்கம் ஆகின்று – பச்சாத்தாபமாக உள்ளது
திணிமணல் செய்வுறு பாவைக்கு – மணலில் செய்த பெண் உருவத்துக்கு அல்லது பொம்மைக்கு
கொய்பூத் தைஇ – பூக்களால் அலங்காரம் செய்து
தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – குளிர்ந்த மடுவில் குளிக்கும் பெண்களோடு கைகோத்து விளையாடி
தழுவு வழி தழீஇ – தழுவும் நேரத்தில் தழுவி
தூங்குவழி தூங்கி – ஓய்வெடுக்கும் நேரத்தில் ஓய்வெடுத்து
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு – கள்ளம் கபடறியாத இரகசியமற்ற கரவற்ற இளைஞர் கூட்டத்தில் கலந்து
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து – உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரங்களைக் கொண்ட துறைக்குச் சென்று
நீர் நணிப் படிகோடு ஏறி – நீரை நோக்கித் தாழ்ந்த மரக்கிளைகளில் ஏறி
சீர்மிக – எல்லாரும் பாராட்டும் படியாக, கரையவர் மருள – கரைகளில் இருப்பவர் வியந்து பார்க்கும்படியாக, திரையகம் பிதிர – நீர்ப்பரப்பு அலையடித்துத் திவலைகளை உதிர்க்க,
நெடுநீர்க் குட்டத்து – ஆழமான நீரையுடைய மடுவில்
துடுமெனப் பாய்ந்து – தடாலென்று குதித்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை – மூழ்கி மண்ணெடுத்து வந்த அறியாப் பருவத்து இளமைக் காலம்
அளிதோ தானே யாண்டு உண்டுகொல்லோ – இப்போது அரியதாகிவிட்டதே, அது எங்கே சென்றது?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி – பூண் போட்ட கெட்டியான தடியை ஊன்றிக் கொண்டு
இரும் இடை மிடைந்த சில சொல் – இருமலுக்கு இடையே தடுமாறித் தடுமாறிப் பேசுகின்ற சொற்கள் சிலவற்றுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – மிகவும் முதியவர்களாகிவிட்ட நமக்கு (அல்லது எங்களுக்கு).
பெருமூதாளரேம் ஆகிய எமக்கு இளமைப் பருவம் யாண்டு உண்டு கொல் என்று முடிக்கவும்.
(உரை, எனது சொந்த உரை)
எனது மட்டுமல்ல, என்னைப்போல எழுபதுகளில் (அல்லது அறுபது வயதுக்கு மேல்) இருப்பவர்கள் அவ்வப்போது இளமைப் பருவத்து நினைவுகளில் வாழ்வதுண்டு. அதற்கான புறநானூற்று எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. இப்போது 82 வயதாகும் ஆல்பர்ட் அண்ணாச்சி கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கவிதையை எடுத்தேன். அதன் பொருளையும் எழுதினேன்.