இது இத்தொடரின் 26ஆம் பகுதி. அதாவது இத்தொடரைத் தொடங்கி ஆறுமாதங்கள் – அரை ஆண்டு நிறைவடைந்துவிட்டது. ஏறத்தாழத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையின் நீரிலும் வெள்ளத்திலும் மக்கள் துன்பப்படும்போது இந்தக் கால நிறைவைக் கண்டு மகிழ்ச்சி கிடைப்பது இயலாது என்றாலும் தீர்வு நம்மிடம் இல்லை என்பதால் இயற்கையின் கருணையை வேண்டி நம் கடமையைத் தொடர்வோம்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் எதுவுமே வைதிகம் சார்ந்தவை அல்ல என்பது எண்ணத்தக்கது. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மூன்று மட்டுமே முழுதாகக் காப்பாற்றப்பட்டு விட்டன. குண்டலகேசி, வளையாபதி இவற்றில் சிற்சில பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அடுத்து வந்த சைவ வைணவ பக்திக் காலத்தின் ஊடாக இவற்றை எவ்விதமோ காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவ்விரண்டில் குண்டலகேசி பெளத்தக் காப்பியம். வளையாபதி சமணக் காப்பியம். குண்டலகேசியின் தொடர்ச்சியாக ஏற்பட்டது நீலகேசி என்னும் சமணக் காப்பியம்.
குண்டலகேசியின் வரலாறாக நீலகேசி உரையாசிரியர் சமயதிவாகரர் கூறும் கதை இது:
இராசகிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். (அவன் பெயர் காளன் என்று சில கதைகள் கூறுகின்றன) அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்புக் காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் அல்லவா’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்” என்கிறாள். பின் அவனைச் சுற்றி வலம் வருபவளைப் போல, பின்பக்கம் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.
பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள். சமண சமயத்துறவி ஆகும்போது தலைமயிரை மழித்துக் கொள்ளுதல் முறை ஆதலின் அவ்விதமே செய்கிறாள். ஆனால் அவளுக்குச் சுருண்ட கூந்தல் வளர்கிறது. அதனால் அவள் குண்டலகேசி எனப்படுகிறாள். (குண்டலம் = சுருண்டு வளைந்தது, கேசி = கேசத்தை, அதாவது தலைமுடியை உடைய பெண்). சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின் பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத் தேர்கிறாள். ஒருநாள் கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர், வாதம் செய்வதற்கென பத்திரைநட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது. வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி அவள் பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியை பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.
இக்கதையின் தொடக்கப்பகுதியை மந்திரி குமாரி என்னும் திரைப்படமாக , அதற்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மந்திரி குமாரி 1950இல் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்தது.
[முல்லை நாட்டில் ராஜ குருவின் சொல்படி நடப்பவர் அந்நாட்டரசர். ஆயினும், அவர் கருத்துக்கு மாறாக, வீரமோகனை தளபதியாக நியமனம் செய்கிறார். அதில் கோபமடைகிறார் ராஜ குரு. அவர் மகன் பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோகனை விரும்புகிறாள். பார்த்திபன் ஜீவரேகாவிற்கு அனுப்பிய தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை சென்றடைந்து அவள் பார்த்திபனைப் பார்க்கச்செல்கிறாள். இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.
இந்நிலையில், வழிப்பறிக் கொள்ளையர்களை பிடிக்க அரசர் வீர மோகனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். ராஜ குரு தன் மகனைக் காப்பாற்ற நாடகம் ஆடி, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோகனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.] பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான்.
பார்த்திபனைத் திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது அவன் வழிப்பறியில் ஈடுபடுகிறான். அமுதவல்லியைக் கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்குப் பார்த்திபன் அழைத்து செல்கிறான். மாறாக, அமுதவல்லி அவனைத் தள்ளிக் கொன்று, தான் ஒரு புத்தமதத் துறவியாகிறாள்.
இது திரைப்படத்தின் முழுக்கதையன்று. கலைஞர் குண்டலகேசி கதையைப் பயன்படுத்திக் கொண்ட பகுதி மட்டுமே.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற “வாராய், நீ வாராய்” என்ற பாடலை திருச்சி லோகநாதன்-ஜிக்கி பாடியிருந்தனர். இன்றுவரை கேட்கப்படும் இனிமையான புகழ்பெற்ற பாடலாக அது அமைந்துள்ளது. பார்த்திபன் மலையுச்சிக்கு அமுதவல்லியை அழைத்துச் செல்லப் பாடும் பகுதிகள் சிலேடையாக அமைந்துள்ளன. “உலவும் தென்றல் காற்றினிலே” என்னும் மற்றொரு பாடலும் இனிமையாக அமைந்துள்ளது.