கீழடி நமக்கு அளிப்பது என்ன?

தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிப்பவர்களுக்கு அவை பல காலத் தளங்களில் அமைந்தவை என்பது நன்கு தெரிந்த விஷயம். உதாரணமாக, புறநானூற்றில் கி.மு. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும், கி.பி. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும். தொல்காப்பியத்திலும் அ்வ்வாறே. கி.மு. 500 இல் எழுதப்பட்ட நூற்பாக்களும் உண்டு, கி.பி. 500இல் எழுதிச் சேர்க்கப்பட்ட நூற்பாக்களும் உண்டு. சங்க இலக்கியம் முழுவதும் ஏறத்தாழ அதிகபட்சமாக ஆயிரம் ஆண்டுகள் முதலாகக் குறைந்தபட்சம் ஐநூறு ஆண்டுகள் வரை காலவேறுபாட்டைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு. அதனால் சங்க இலக்கியங்களின் மேல் எல்லை ஏறத்தாழ குறைந்த அளவு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு (அதாவது இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்) என நிர்ணயிக்கலாம். அவற்றில் காணப்படும் நாகரிகமும் பண்பாடும் தமிழர்கள் வாழ்க்கையை இன்னும் குறைந்த அளவு ஓர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாகக் கொண்டு செல்லக்கூடியவை, அதாவது கி.மு. 1500 (இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) என்பதை தமிழர் நாகரிகத்தின் குறைந்தபட்ச எல்லையாகக் கொள்ளலாம் என்பது இன்றுள்ள ஆய்வாளர்கள் யாவருக்கும் தெரியும்.
அப்படியானால் கீழடி ஆய்வின் பயன் என்ன? அதன் காலம் ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கெனவே தமிழர் நாகரிகத்தின் பழமை பற்றி நமக்கிருக்கும் கருத்து மாறுபடப் போகிறதா? தமிழர் நாகரிகத்தின் காலத்தைப் பற்றிப் புதிதாக வெளிச்சம் கிடைக்கிறதா? இல்லை.
ஆனால் வரலாற்றுப் பெருமக்கள் இலக்கியங்களையும், இலக்கியத்திலிருந்து கிடைக்கும் தரவுகளையும் எல்லாம் இரண்டாம் நிலைத் தரவுகள் (செகண்டரி) என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு முதல்நிலைத் தரவுகள் என்பன கல்வெட்டுகள், கட்டட எச்சங்கள், ஆயுதங்கள், பானை ஓட்டு அல்லது கல்லில் பொறித்த எழுத்துகள், நடுகற்கள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் போன்ற தொல்லியல் பொருட்கள்தான். அந்த வகையில் கீழடி நமக்குத் தமிழர் நாகரிகத்துக்கான, சங்ககாலத்துக்குச் சற்று முந்திய காலப்பகுதிக்கான முதல்நிலைத் தரவுகளை அளிக்கிறது. அதுவும் மிகப் பெரிய ஒரு நகர நாகரிக அடிப்படையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. உண்மையில் இத்தகைய நகர அமைப்பை மொகஞ்ச தாரோவிலும் ஹரப்பாவிலும் கண்டுள்ளோம். ஆகவே அதன் தொடர்ச்சி இது என்பதையும் நாம் ஓரளவு உய்த்துணரலாம். கி.மு. 1500 அளவில் வந்த ஆரியர்களுக்கு நகர நாகரிகம், விவசாயம் எல்லாம் கிடையாது. ஆங்காங்கு மிகச் சிறிய குடிசைகளை அமைத்துக் கொண்டு மாடுமேய்த்து வந்தவர்கள் அவர்கள். எனவே தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதற்கான சான்றுகளையும் இது அளிக்கிறது.
ஆனால் ஏறத்தாழ இன்னும் ஆயிரம் ஆண்டு முற்பட்ட இதே போன்ற கட்டடக்கலை சார்பான அகழ்வாய்வுகள் கிடைத்தால் தமிழர் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை அறுதியிட்டே கூற முடியும். அதுதான் இன்று தேவையாக இருக்கிறது. ஒருவேளை மேலும் பல அகழ்வாய்வுகளைச் செய்தால் அப்படிப்பட்ட ஆதாரங்களும் கிடைக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்று காலக்கணிப்புக்கு போராடி வரும் நிலையில் நமது விளம்பரங்கள் மிக எளிதாகக் கருத்தேற்றம் செய்து வடநாட்டவரின் வீண் பெருமையைத் தூண்டி விடுகின்றன. உதாரணமாக இந்தியா முழுவதும் செல்கின்ற ஆயுர்வேதப் பொருள் (சோப்பு…) ஒன்றின் விளம்பரம், ஆயுர்வேதம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூசாமல் சொல்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் யார் வாழ்ந்தார்கள், ஆரியர்கள் அப்போது இந்தியாவில் புகவே இல்லையே, அப்படியானால் அந்தப் பழமையைத்தான் ஆயுர்வேதம் எடுத்துக் கொள்கிறதா போன்ற கேள்விகளுக்கு பதில்கிடையாது. யாரோ ஒரு சாமியார் (முனிவர்!) குழவியில் மருந்தை அரைப்பது போன்ற படத்தைப் போட்டு இது ஆயுர்வேதம், ஐந்தாயிரம், ஏன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லிவிட்டால் நம்புவதற்கு ஏராளமான கூகைகள் உள்ளன. மதத்தை எப்படியெல்லாம் திணிக்கிறார்கள்!

இலக்கியம்