காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட்

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான சுவாரசியமான தொடக்கத்தில் அமைகிறது. உதாரணமாக, கலிவரின் பயணங்களில், லிலிபுட் தீவை அவன் அடைவதும் அங்கு நிகழும் செயல்களும் ஒருவித கவர்ச்சியை அந்நாவலுக்கு ஊட்டி, அந் நாவலுக்குள் நம்மை இழுக்கின்றன. அதுபோலவே ஒரு வீரன், காற்றாலைகளை அரக்கர்களாக எண்ணி அவற்றுடன் ஈட்டியால் சண்டையிடுகின்ற ஒரு காட்சி என்னைப் பள்ளி வயதில் அந்தக் கதையைப் படிக்குமாறு தூண்டியது. அந்தக் கதைதான் டான் குவிக்சோட். (இதை டான் க்விஜோட்டே என்று படிக்க வேண்டும் என்பார்கள் இங்குள்ள ஸ்பானிய அறிஞர்கள். நமக்கு ஆங்கில உச்சரிப்புதான் சரிவரும்.)

இந்தக் கதையை எழுதியவர் ஸ்பெயின் நாட்டவர். மிகெல் டி செர்வாண்டிஸ் என்பது அவர்  பெயர். இதுதான் ஐரோப்பிய மொழிகளில் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. 1605இல் இதன் முதல் பாகமும் 1615இல் இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தன.   

நைட் (knight) எனப்பட்டவர்கள் (இன்றைய திரைப்படங்களில் இருபத்தைந்து பேரை ஒரே வீச்சில் அடிக்கும் ஹீரோ போன்ற) அக்காலப் போர்வீரர்கள். இவர்கள் பற்றிய கற்பனைச் சாகசக் கதைகள் ஸ்பெயினில் பதினாறாம் நூற்றாண்டில் மிகுதியாக உலவி வந்தன. அவற்றை மிகுதியாகப் படித்துத் தன்னை இழந்த (கட்அவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யும் இக்காலப் பைத்தியங்கள் (FANaticS) போன்ற) ஒருவன் தான் நம் டான் குவிக்சோட். அவன் பெயர் அலான்சோ. ஸ்பெயின் நாட்டின் லா மாஞ்சா பகுதியில் வசித்த ஒரு நடுவயது ஆள். (டான் என்றதுமே இன்றைய திரைப்பட “அட்டைக்கத்தி” நாயகர்களில் பலர் திரையில் வைத்துக் கொள்ளும் பெயர் அது என்பது ஞாபகம் வரவில்லையா?)

அத்தகைய “நைட்”டுகளில் தானும் ஒருவன் என்று எண்ணிக் கொள்ளும் அவன் வாள், ஈட்டியுடன் சாகசங்கள் புரியப் புறப்பட்டு விடுகிறான். “நைட்”-டுகளுக்கு ஒரு குதிரை, காதலி (இளவரசி), ஏவலாள் ஆகியோர் கட்டாயம் வேண்டும். இவனுக்கு ஒரு நலிந்த பெண் குதிரை, ரோசினான்டே, கிடைக்கிறது. காதலியாக ஒரு ஏழை விவசாயப் பெண்ணை (டுல்சீனியா) இளவரசி எனக் கற்பனை செய்துகொள்கிறான். அதன்பின் அவன் சண்டைகள் யாவும் டுல்சீனியாவை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. உதாரணமாக இவனது முதல் பயணத்தில் ஒரு சத்திரத்தில் தங்குகி றான். அதை அரண்மனை என்று நினைத்துக்கொள்கிறான். ஒரு திருடனைக் காப்பாற்றுகிறான். சில வணிகர்கள் டுல்சீனியாவை ஏளனம் செய்தார்கள் என்று சண்டைக்குப் போய் அடிவாங்குகிறான். அவனது நண்பர்கள் சிலர் அவனை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அவன் படித்த புத்தகங்கள்தான் அவனது நிலைக்குக் காரணம் என்று பல புத்தகங்களைக் கொளுத்தியும் விடுகிறார்கள்.

ஆனால் டான் அவ்வளவு எளிதாகத் தளர்பவன் அல்ல. அவனது ஏவலாளாகச் சற்றே தெளிவான, ‘பொதுக்’கான ஆள் ஒருவன் (சாங்கோ பாஞ்சா) வாய்க்கிறான். அவனுடன் ஏற்படும் முதல் அனுபவம்தான் மேற்சொன்ன காற்றாலைத் தகடு களை அரக்கர்கள் என்று கருதிச் சண்டை புரிந்த கதை. இப்படி அவன் பயணத்தில் பல அனுபவங்கள். முடிவெட்டுபவன் கிண்ணத்தைத் தன் தலைக்கவசம் என்று பறித்துக் கொள்கிறான். வீரர்களின் கற்பனை ஒழுக்கவிதிகளைக் கடைப்பிடிப்பதா கக் கருதிக் காதலர்களை ஒன்று சேர்க்கிறான், பலவிதத் தொல்லைகளில் மாட்டிக் கொள்கிறான். ஏறத்தாழ அவனுக்குக் கிடைக்க வேண்டிய பல தண்டனைகளைப் பாவம், சாங்கோ ஏற்றுக் கொள்ள நேர்கிறது. டான் குவிக்சோட்டின் இரண்டு நண்பர்கள்- ஒரு மதகுருவும், மயிர்மழிப்பவனும்- அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்பவர்கள்.

பத்தாண்டுகள் பிறகு வெளியான நாவலின் இரண்டாம் பகுதியில் வரும் நபர்கள் அனைவரும் டான் குவிக்சோட்டின் செயல்களைப் பற்றி முன்பே படித்து அறிந்தி ருக்கிறார்கள். அதனால் அவன் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் புகழ்(!) அவனுக்கு முன்னே செல்கிறது. இடையில் கதாசிரியர் (செர்வாண்டிஸ்) வேறு கதைக்குள் நுழைந்து, இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட உண்மைக்கதை, ஹமீட் பெனென்கேலி என்ற மூர் இனத்து ஆசிரியர் எழுதியது, என்று ‘உதார்’ விடுகிறார்!

ஒரு தீய நகரத்தலைவன் (ட்யூக்)- நகரத் தலைவி (டச்சஸ்) ஆகியோரிடம் டானும் சாங்கோவும் மாட்டிக் கொண்டு தொல்லைப்படுகிறார்கள். டுல்சீனியாவை விவசாயப் பெண்ணாக ஒரு மந்திரவாதி மாயமாக மாற்றிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். அந்த மாயத்திலிருந்து அவளை மீட்க சாங்கோ தன்னைச் சாட்டையால் ஆயிரக் கணக்கான முறை அடித்துக்கொள்ள நேர்கிறது. பிறகு ஒரு இளவரசியையும் அவள் காதலனையும் சிறைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு கற்பனை அரக்கனுடன் சண்டையிட மரக்குதிரைமீது ஏறி இருவரும் செல்கிறார்கள்.

கதையின் ஒரே ஒரு ஆறுதலான அம்சமாக, சாங்கோவுக்கு ஒரு நகரத்தை ஆளும் வாய்ப்பு கிடைக்கிறது. மிக நன்றாகவே பத்து நாட்கள் ஆட்சி செய்யும் அவன், பணம் இன்றித் திரும்பி வந்து அவமானப்படுகிறான். ஒரு வறுமை வாய்ப்பட்ட ஆட்சியாளனாக இருப்பதைவிட மகிழ்ச்சியான ஏவலாளனாக இருப்பதே சிறந்தது என்று முடிவு செய்கிறான்.

நகரத்தலைவி வீட்டில் ஒரு இளம்பெண் சாங்கோவின்மீது காதல் கொள்கிறாள். ஆனால் அவன் அவள் காதலை மறுக்கிறான். இந்த ஜோடியின் சந்திப்புகள் பார்ப்போர்க்கு மிகுந்த நகைச்சுவைக் காட்சிகளாக அமைகின்றன.

மறுபடி தன் பயணத்தைத் தொடர்கிறான் டான். பார்சிலோனாவில், மாறுவேடத் தில் அவன் நண்பன் ஒருவனே “வெண்ணிலவின் வீரன்” என்ற பெயர் பூண்டு அவனுடன் போர் செய்து அவனைத் தோற்கடிக்கிறான். தோற்ற டான் தன் இல்லத்துக்குத் திரும்பி வருகிறான்.

நோய்வாய்ப்பட்ட அவன், தான் இதுவரை ஈடுபட்ட செயல்கள் யாவும் மடத்தனம் என்பதை உணர்ந்து, தன்னிலை அறிந்து, தன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு இறக்கிறான். அவனது இறப்போடு “நைட்”டுகளின் கதையும் முடிவுக்கு வருகிறது.

இறுதியாகக் கதைக்குள் நுழையும் பெனென்கேலி, டான் குவிக்சோட்டின் வரலாற்றைத் தான் எழுதியதற்கு வீரசாகசக் கதாநாயகர்களின் (“நைட்”டுகளின்) மறைவை அறிவிப்பதே முக்கியக் காரணம் என்று கூறுகிறார்.

இறுதியாக இந்த நாவல் நமக்குச் சொல்ல வருவதுதான் என்ன? “தமிழ் இளைஞர் இளைஞிகளே, வெறும் கதைகளில், கவர்ச்சிகளில், நடிகர்-நடிகையர் ஆட்டங்களில் மயங்கி வாழ்க்கையை இழக்காதீர்கள். உண்மையை நேருக்கு நேராகப் பார்த்து உங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.” அவ்வளவுதான்.

இலக்கியம்