காரம் சாப்பிடுங்கள்

பெரும்பாலும் காரத்தைத் தவிர்த்துவிடுங்கள் என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டு உணவில் இடத்துக்கு இடம் காரத்தின் அளவு வேறுபடுகிறது. ஆந்திராக்காரர்கள் காரம் சாப்பிடுவதில் பெயர்பெற்றவர்கள். கன்னட உணவில் இனிப்புச் சேர்ப்பது மிகுதி. மலையாளத்தில் காரத்தை மிதமாக்கிவிடும் தேங்காயை மிகுதியாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். (என்றாலும் நம் விஷயத்தில் என்னவோ யாவருமே சம அளவில் காரமாகத்தான் இருக்கிறார்கள்).

மிளகாய் என்பது ஒரு காய் அல்ல, பழம் (பலவிதைகள் கொண்ட ‘பெரி’ வகைக் கனி). பாரதியார் எழுதிய ‘மிளகாய்ப்பழச் சாமியார்’ கதை உங்கள் நினைவுக்கு வரலாம். அவருடைய தினசரி உணவு மிளகாய்தான்!
காரம் சாப்பிடுங்கள் என்று சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இதோ சில.
1. காரம் சாப்பிடுவது, உடல் முழுதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆகவே நீங்கள் அழகாகவும் இளமையாகவும் இருக்க உதவுகிறது.
2. மிளகாயின் முக்கியப் பொருள் கேப்சாய்சின் என்பது. இது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் மிகுதியாக இருக்கும் கலோரிகளை எரிக்கும். ஆகவே எடையைக் குறைக்க உதவுகிறது.
3. மிளகில் லு£டீன், சியோசாந்தின் போன்ற பொருள்கள் இருக்கின்றன. இவை விழித் திரையின் ஆரோக்கியத்திற்கு நல்லவை, கண்பிறை வளராமல் தடுப்பவை என்கிறார்கள்.
4. காரமான உணவு, புற்றுநோயைத் தடுக்கிறது, இதயஇரத்தக்குழாய்களை வலுப்படுத்துகிறது, மூச்சுக்குழல் தொடர்பான நோய்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.
5. காரம், செரோடானின் போன்ற ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. இதனால் சோர்வு (டிப்ரஷன்), மனத்தளர்ச்சி (ஆங்சைட்டி) போன்றவை குறையும். மன ஆசுவாசம் அதிகரிக்கும்.
6. வலியைக் குறைக்கப் பயன்படுகிறது. மிளகாயிலுள்ள கேப்சாய்சின், வலிநிவாரணிகளில் கூடச் சேர்க்கப்படுகிறதாம்.
7. ஓர் ஆட்டத்தைத் தொடங்குவதற்குமுன் ஒன்றாகச்சேர்ந்து கார உணவை உண்பது குழுஇணக்கத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஓர் அறிக்கை சொல்கிறது.
எல்லாம் சரிதான், காரமாக இருக்கிறதே, கண்ணில் நீர்வருகிறதே என்கிறீர்களா? தண்ணீர் குடிப்பது காரத்தைத் தணிப்பதில்லை. மிளகாயிலுள்ள கேப்சாய்சின் நீரில் கரைவதில்லை. ஆனால் பாலில் கரையும். கொஞ்சம் பால் அருந்துங்கள்! காரம் மாயமாகிவிடும்.

தினம்-ஒரு-செய்தி