கவிதையில் உருவகம்

Tapan-Ghosh
ஒன்றைப் போல் ஒன்று இல்லாத இரண்டு பொருள்களை ஒப்பிடப் பலசமயங்களில் உருவகமும் உவமையும் பயன்படுத்தப்படுகின்றன. உவமையில் போல, போன்று, மாதிரி என்றவாறு ஏதேனும் ஒரு சொல்லினால் (உவம உருபு) ஒப்புமை உணர்த்தப்படுகிறது. உருவகத்தில் ஒப்புமை உட்குறிப்பாக உள்ளது அல்லது உட்பொதிந் துள்ளது. உருவகச் சொல் நேர்ச் சொல்லுக்குப் பதிலாகப் பதிலீடு (substitution) செய்யப்படுகிறது.
உருவகம்தான் ஆதி அணி. தமிழிலும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் உவமைதான் பிற எல்லா அணிகளுக்கும் ஆதி அணி (தாய்) என்று தவறாகக் கருதிவிட்டார்கள். சான்றாக, “உவமை என்னும் தவலரும் கூத்தி….பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து நீப்பறுமகிழ்ச்சி பூப்ப நடிக்குமே” என்னும் தொனியலங்காரச் சூத்திரத்தைக் கூறலாம். அதாவது உவமை என்னும் கூத்தி, பலவேறு அணிகளாக வேடமிட்டு வருகிறாளாம். (இதுவே உருவகம்தான். உவமை என்பதைக் கூத்தி என்று பெண்ணாக உருவகித்து விட்டார் இந்த இலக்கணக்காரர். ஆனால் உவமைதான் அடிப்படை அணி என்கிறார்.)
மேற்கண்ட நூற்பாக் கருத்து தவறு. உருவகம்தான் உவமைக்கும் முந்திய அணி. கவிதையில் மட்டுமல்ல, பேச்சிலும்கூட நாம் உருவகங்களைத்தான் மிகுதியாகக் கையாளுகிறோம். சான்றாக, காக்காய் பிடிப்பவனைப் பார்த்து, “அவன் காக்காயைப் போன்றவன்” என்று யாரும் சொல்வதில்லை. “அவன் ஒரு காக்கா” என்போம். வீரமிக்கவனைப் பார்த்துச் “சிங்கம் போன்றவன் அவன்” என்று சொல்வதில்லை. “அவன் ஒரு சிங்கம்” என்றுதான் சொல்வோம். புத்திகுறைந்தவனை அல்லது அசட்டுத்தனமாக மிகுதியாக உழைப்பவனைப் பார்த்துக் கழுதை என்று சொல்வோம். இப்படியே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில் நாம் உருவகங்களைத்தான் மிகுதியாகப் பயன்படுத்துகிறோமே ஒழிய உவமைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்துகிறோம். காதலன் காதலியைப் பார்த்துக் “கண்மணி” என்கிறான். இதுவும் உருவகம்தான். தாய் குழந்தையைப் பார்த்து “என் கிளி, என் மைனா, என் சின்ன நாய்க்குட்டி” என்று கொஞ்சுகிறாள். இவையும் உருவகமே. யாரும் “என் குழந்தை சிறிய நாய்க்குட்டியைப் போன்றவள்(ன்)” என்று உவமையாகச் சொல்லி நாம் பார்த்ததில்லை. பேச்சிலேயே உவமை வரவில்லை என்றால், கவிதையிலா வந்துவிடப்போகிறது?
செத்தவரை மறைந்தார், இறந்தார், துஞ்சினார் என்று கூறுவதும் உருவகங்கள் தான். (இறத்தல் என்றால் எல்லையைக் கடந்து சென்றுவிடுதல், துஞ்சுதல் என்றால் தூங்குதல்). இத்துடன் நில்லாமல் வைகுந்தபதவி அடைந்தார், சிவலோகம் சேர்ந்தார், இறைவனடி சேர்ந்தார் என்று இறந்தவருக்கு உருவகமாகப் பலவித பதவிகளையும் வழங்குகிறோம்.
உருவகம் என்பது ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லைப் போடு கின்ற பதிலீடுதான். இப்படி அதை பதிலீடாகப் பார்க்காமல், உவமையின் குறுக்கமாகக் கருதியதால் நிறைய தவறுகள் நிகழ்ந்துவிட்டன. பழைய இலக்கணங்களில் உருவகம் என்பது உவமையின் குறுக்கவடிவம். “மதிபோன்ற முகம்” என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் மதிமுகம் என்று ஆகும். அதைத் திருப்பிப்போட்டால் முகமதி என்று வரும். பழங்கால மரபுப்படி அதுதான் உருவகம். உருவகத்தைப் பண்புத்தொகையின் இன் னொரு வடிவமாகப் பார்த்தார்கள். ‘முகம் ஆகிய மதி’ என்று இதை விரிப்பார்கள்.
இதனால் உருவகம் என்பது பதிலீடு என்பது பலருக்கும் விளங்காமற்போய் விட்டது. உதாரணமாக சுதந்திரம் என்பதற்கு பதிலாக ‘விடியல்’ என்கிறார் ஒருவர். அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை ‘பூபாளம்’ என்கிறார் ஒருவர். ஒருவர் எழுச்சி என்பதற்கு பதிலாக ‘அக்கினி’ என்கிறார். இப்படிக் கவிதைகளில் நாம் உருவகங்களை மட்டுமே பயன்படுத்துகிறோமே தவிர உவமைகள் எவ்வளவு என்று எண்ணிக்கூடப் பாருங்கள், மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
உவமையிலிருந்து உருவகம் வந்தது என்ற நோக்கினால் ஏற்பட்ட இன்னொரு குறை, வினைச் சொற்களிலும் உருவகம் வரும் என்பதை மறந்துவிட்டோம். உதாரணமாக, திருடினான் என்பதற்கு பதிலாக சுட்டுவிட்டான் என்கிறோம். இது உருவகம்தான். ஆனால் வினைச் சொல்லில் வரக்கூடிய உருவகம். ஏமாற்றினான் என்பதற்கு பதிலாக நாமம் போட்டான் என்கிறோம். ஓடிப்போனான் என்பதற்கு பதிலாகக் கம்பிநீட்டிவிட்டான் என்கிறோம். இவை அனைத்தையும் மரபுத்தொடர்கள் என்பதில் அடக்கமுடியாது. ஏற்கெனவே வழக்கில் உள்ள ஒருசிலவற்றை மரபுத்தொடர்கள் (இடியம்) எனலாம். இன்று புதுக்கவிதைகளில் பயன்படும் பல வினைச் சொற்கள் உருவகங்கள்தான்.
சாதாரணப் பேச்சிலும் பெரும்பான்மைச் சொற்கள் உருவகங்களே. உதாரணமாகப் பிடித்தல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். பிடித்தல் என்றால் பற்றுதல், கையில் கொள்ளுதல் (catch) என்பது நேர்ப்பொருள். ஆனால் எனக்கு காப்பி பிடிக்கும், தேநீர் பிடிக்காது என்றால் வேறு செய்கைக்கு பதிலாக-உணர்வுக்கு பதிலாக அச்சொல் நிற்கிறதே ஒழிய, தன் நேர்ப்பொருளில் நிற்பதில்லை. அதேபோல, “இவனுக்கு ஒருமுறை சொன்னால் போதும் பிடித்துக்கொள்ளுவான்” என்கிறோம். இங்கும் அது உருவகமாகவே வருகிறது. இப்படி சாதாரணமாக நாம் பேசும் எல்லாச் சொற்களிலும் உருவகம் ஊடுருவி நிற்கிறது. நீங்களே மேலதிகமாக உதாரணங்களை யோசித்துப் பாருங்கள். “இந்த நூலை வாசித்தேன்” என்கிறோம். நூல் என்பது உருவகம் அல்லாமல் வேறென்ன? பா என்கிறோம். இதுவும் உருவகச்சொல்லே.
சினிமாப்பாட்டுகளின் உயிரே உருவகம்தான். உருவகம் இல்லையென்றால் நமது பாடலாசிரியர்களால் ஒருவரிகூட எழுதமுடியாது. பெண்ணை ஃபிகர் என்பார்கள், நாட்டுக் கட்டை என்பார்கள், இவை எல்லாம் உருவகம் அல்லாமல் வேறென்ன? பழைய பாட்டொன்றில் வாலி, “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்கிறார். “புத்தகம் போன்ற பெண்ணே, நான் உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் போன்றவன்” என்று உவமையாக இதை எழுதினால் நன்றாகத்தான் இருக்குமா? யோசித்துப்பாருங்கள்.
கவிதையில் எங்கும் வியாபகம் பெறுவது உருவகம்தான். பாரதியார், “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” என்னும்போது, வீணை, புழுதி ஆகியவை மிகச் சரியான உருவகங்கள் என்பது தானாகவே மனத்திற்குப் புலப்படுகிறது. “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்” என்னும் போது அக்கினிக் குஞ்சு என்பதும் (மிக பத்திரமாக) அதை ஒரு பொந்தில் ஒளித்து வைத்தேன் என்பதும் உருவகங்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பக்தி இலக்கியத்தில் உருவகங்களின் பெருக்கம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சான்றாக சுந்தரமூர்த்திப் பெருமான், இறைவனை “மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே” என்று பாடும்போது வருபவை எல்லாம் உருவகங்களே அல்லவா?
உலகத்தைக் “கம்பிகளில்லாச் சிறைச்சாலை” என்று வருணிக்கும்போது அது உருவகம்தான். “கப்பல் நீரைக் கிழித்துச் சென்றது” என்றால், கிழித்தல் என்ற வினைச்சொல் லும் உருவகம்தான். உண்மையில் நீர் கிழிபடுகிறதா என்ன? “இரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற அடிகள் இன்று எல்லோருக்கும் தெரியும். இரவு, விடிதல் என்பவை உருவகங்கள் அல்லாமல் வேறென்ன? வேறு விஷயங்களுக்கு அவை பதிலீடாக நிற்கின்றன அல்லவா? இந்த இதழாசிரியர் சரவணனே தனது பத்திரிகைக்குக் ‘கருப்பை’ என்றுதான் பெயர்வைத்திருக்கிறார். இது உருவகம் அல்லாமல் வேறு என்ன? இது படைப்புத் திறனைக் குறிப்பதற்கு பதிலீடாக நிற்கும் சொல் அல்லவா?
இப்படி எங்கும்-பேச்சில், பாட்டில், கவிதையில், உரைநடையில், ஏன் சாதாரண தினசரி பத்திரிகை ஏடுகளிலும்கூட-நீக்கமற நிறைந்திருக்கும் உருவகத்தை அடிப்படை அணியாகவும் அதன் சிறிய ஒருவகை மாற்றத்தை உவமை அணியாகவும் காணாமல், உவமையை அடிப்படை அணியாகக் கொண்டது நம் பழைய அலங்கார நூலாசிரியர்கள் (தொல்காப்பியர் உட்பட) செய்த தவறு. இதனால் தமிழில் கொள்கை விரிவு ஏற்படாமல் தேங்கிவிட்டது.

இலக்கியம்