(9) மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? கல்வி முறையினால் இன்றைய மாணவர்கள் படைப்புத் திறன் குன்றியவர்களாகவும், குழந்தைகளின் விளையாட்டு, சிந்தனை, மனித உறவுகள் என எதற்குமே அவகாசம் தராத வகையில் பளுவான பாடத்திட்டம் அவசியமா?
மனிதனின் ஒருங்கிசைந்த ஆளுமை வளர்ச்சியை உருவாக்குவதே கல்வி. முழுமையான மனிதனை உருவாக்குவதே கல்வி. தனது பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்ல சமூக மனிதன் ஆகவும் கற்றுக் கொடுப்பது கல்வி. பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ வழிசெய்வது கல்வி. அது இல்லாமற் போனதால்தான் இன்று போட்டித் தேர்வுகளில் தோல்வியுறுபவர்கள் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம்.
மொழியைக் கருவியாக நோக்குகின்ற பார்வை இப்போது பெருகிவிட்டது. அதனால் மொழிப்பாடங்கள் பயனற்றவை என்ற நோக்கு ஏற்பட்டுவிட்டது. உண்மையில் மொழியின் வாயிலாகவே மனிதன் சிந்திக்கக் கற்றுக் கொள்கிறான், பண்பாட்டை உணர்கிறான், அறநெறி அவனை அறியாமல் அவன் உள்ளத்தில் குடிகொள்கிறது. எனவே சிறு வயதில் மொழிப்பாடம் மிகவும் அவசியம். அதற்குக் கூடுதலான இடம் தரப்பட வேண்டும்.
வேலை ஒன்றை அடைவது, பணம் சம்பாதிப்பது – இதற்கு மட்டுமே கல்வி என்று நமது நோக்கம் குறுகிப் போனதால், ஆளுமையை வளர்ப்பது கல்வி என்பதை மறந்தோம். ஆளுமை சரியான முறையில் வளர, சிறுவயதிலிருந்தே தக்க விளையாட்டு அவசியம். (போட்டிகள் முக்கியமற்றவை). போட்டித் தேர்வுகளும் தேவையற்றவையே. நல்ல கல்வி முறை மனப்பாடத்தை ஊக்குவிக்காது, சிந்தனைத் திறனையும் படைப்பூக்கத்தையும் தூண்டுவதாக மட்டுமே இருக்கும்.
இன்றைய பார்வையாதிக்கத் தொடர்புமுறை, குழந்தைகளை எப்போதும் கைப் பேசி, இண்டர்நெட், கணினி என்று அலைபவர்களாக, அவற்றின் முன் மணிக் கணக்காக உட்காருபவர்களாக ஆக்கிவிட்டன. இதனால் மனித உறவு குன்றிப் போகிறது, சிதைந்து போகிறது. வணிக நோக்கு மட்டுமே வளர்கிறது. இன்றைய வணிகமுறை வாழ்க்கையில், உலகமயமாக்கலில், வளரும் நாடுகள் பொருளாதார ரீதியாக நசுங்குகின்றன. தேவையற்ற பொருள்கள் திணிக்கப் படுகின்றன. நமது பண்பாட்டிற்கேற்ப நாம் வாழ்ந்து வந்த முறையும் அதற்கு நாம் பயன்படுத்திய தொழில், பண்பாட்டு முறைகளும் அதற்கேற்ப இருந்த கல்விமுறையும் மாறிப் போயுள்ளன.