(10) இன்றையக் கல்வி நன்னெறியையோ, நடைமுறை வாழ்க்கையையோ கற்றுத் தராதது ஏன்?
1950, 60களில் உயர்நிலைப் பள்ளிப் பாடங்களில், குடிமைக்கல்வி, அறநெறிக் கல்வி ஆகிய இரண்டும் இடம்பெற்றிருந்தன. அவற்றுடன் கைத்தொழிற்கல்வி, ஓவியப் பாடமும் உண்டு. இவை யாவும் கல்வி என்பது வெறும் பாடத்தை மனப்பாடம் செய்வதல்ல என்பதைச் செயலளவில் உணர்த்தின. முக்கியமான இந்த நான்கு பாடங்களும் எப்போது உயர்நிலைப் பள்ளியில் காணாமல் போயின என்பது எனக்குத் தெரியவில்லை.
இன்று நம் வாழ்க்கை முறையே வணிகரீதியாக உள்ளது. நாமும் பிள்ளைகளை வணிகரீதியாக, பணத்தைத் திரட்டுவதில் வெற்றி பெற்றவர்கள் ஆக்கவே விரும்புகிறோம். அவர்கள் நல்ல மனிதர்களாக சமூகத்திற்கு ஒத்த முறையில் அறநெறியில் வாழவேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. குறைந்தபட்சம் தங்கள் அளவில் சீரான மனத்துடன், மனப் பிரச்சினைகள் இன்றிச் சிறார்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம்கூட நமக்கு இல்லை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்–பல கற்றும் கல்லார், அறிவிலாதார்” என்ற திருக்குறள்தான் ஞாபகம் வருகிறது.
இன்றையக் கல்வி நன்னெறியையோ, நடைமுறை வாழ்க்கையையோ கற்றுத் தராதது மிகப் பெரும் குறைதான். அதற்குத் தக நமது கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டும்.