(1) அன்றைக்கு இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்தனர். ஆனால் இன்றைக்கு நம் மாணவர்கள் நல்ல கல்வியைத் தேடி அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை ஏன்?
இக்கேள்விக்கு நான்கு தளங்களில் விடைதர வேண்டும்.
ஒன்று, பழங்காலத்தில் கல்வி மதம்சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் இருந்த நலந்தா போன்ற பல்கலைக் கழகங்கள் பௌத்த மதத்தினால் உருவாக்கப் பட்டவை. பௌத்தக் கல்வியைத் தேடி வந்தவர்கள்தான் நலந்தா போன்ற நிலையங்களை அணுகினர். இந்தியாவில் வேறு மதங்கள் பல்கலைக் கழகங்களையோ கல்வி நிலையங்களையோ பெரிதாக உருவாக்கவில்லை. நாலந்தா போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மதச்சார்பற்ற துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறி.
குருகுலக்கல்வி, பிராமண அடிப்படையில் இருந்தது. நலந்தாவைத் தேடி உலகத்தினர் வந்த காலத்திலேயே நம் கோடிக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பௌத்தம் அறிவுசார்ந்த மதமாக இருந்ததாலும், சாதி அடிப்படையைப் பார்க்காததாலும் அதில் மக்கள் சேர்ந்து படிக்க முடிந்தது. பௌத்தத்தில் சேராதவர்களில், அதாவது இந்துக்களில் பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி உண்டு, பிற சாதியினர்க்கு இல்லை–இதுதான் பழங்கால நிலை. இந்தியாவில் ஏதோ எல்லாருமே பல்கலைக் கழகங்களில் கற்றது போலவும், அயல்நாட்டவரும் தேடி வந்ததுபோலவும் பேசுவது அறியாமை.
இரண்டு, இன்று கல்வி அனைவர்க்கும் உரியது என்றாலும் நாம் தரமான கல்வியை அனைவர்க்கும் பொதுமைப் படுத்தவில்லை. இன்றும் எல்லா மாணவர்களும் அயல்நாடு செல்வதில்லை. வசதி உடையவர்கள் செல்கிறார்கள். வசதியற்றவர்கள், வசதியற்ற அரசுப்பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது.
மூன்று, 2000ஆம் ஆண்டுக்குமுன் அயல்நாடு சென்று கல்வி கற்றவர்களை அதிகம் காண முடியாது. மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்விதக் கல்விகற்றனர்.
2000ஆம் ஆண்டுக்குப்பின் உலகமயமாக்கலின் காரணமாக அயல்நாடு சென்று பணிசெய்பவர்கள் அதிகமாயினர். அதற்குமுன் அண்ணாந்து பார்க்கப்பட்ட அயல்நாடு செல்லுதல் என்பது பரவலாக எளிதாயிற்று. அதனாலும் அயல்நாடு சென்று கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கூடியுள்ளது. மேலும், உயர்கல்வி தவிரப் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியில் இன்றும் தரத்தைத் தேடி உணர்வுபூர்வமாகக் கல்விக்காக அயல்நாடு செல்பவர்கள் குறைவு.
நான்கு, அயல்நாட்டுக் கல்விக்கும் நமது கல்விக்கும் இன்று வேறுபாடில்லை. நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தன்மை இழந்து மேற்கத்தியக் கல்வியின் சாரமற்ற போலியையே அளிக்கின்றன.
சான்றாக, ஏரோநாடிக்ஸ் என்பது உலகப் பொதுவான கல்வித்துறை. இதை நமது எம்ஐடியில் படிப்பதைவிட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பது தரமானது என்பது வசதியுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.