அறிவியல் தமிழைப் பற்றி இன்று பேசுவார் இல்லை. ஏதோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்ற ஆட்சிக்காலத்தில் ஒரு செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தப்போய் அதில் அறிவியல் தமிழ் பற்றி ஒருமாதிரி பேசப்பட்டது. அதோடு அதற்கு முற்றுப் புள்ளியும் வைக்கப்பட்டுவிட்டது. இன்றோ தமிழில் அறிவியல் என்பது என்ன என்று விளங்காமலும், அது தேவையா என்று கேட்டுக்கொண்டும் அலைகிறார்கள் தமிழ்மக்கள்.
சிலநாட்களுக்கு முன்பு உலகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேன்மக்களின் கல்விக்கழகங்களான நமது ஐஐடிக்கள் ஐஐஎம்கள் உட்பட எவற்றுக்கும் அதில் முதல் ஒரு நூற்றியிருபது தகுதிகள் வரைகூட இடமில்லை. பிற பல்கலைக்கழகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
உயர்கல்வி இந்த லட்சணத்தில். இதில் வெளிநாட்டுத்தரகர்களுக்கு இதைத் தாரை வார்க்க முயற்சி நடக்கிறது-காட்ஸ் ஒப்பந்தம் போன்றவற்றின் மூலமாக.
இந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தீனியளிக்கும் நமது பள்ளிகளின் நிலை என்ன? பழங்காலத்தில் எல்லாம் இன்ப மயம் என்று ஒரு பாட்டு. அதைப்போல இவற்றில் எல்லாம் துட்டு மயம் என்று சொல்லலாம். ஒவ்வொரு நகரத்திலும் இண்டர்நேஷனல் பள்ளிகள் இருக்கின்றனவே அவை எதைச் சாதித்திருக்கின்றன? சரி, அவையாவது தனியார் பள்ளிகள். சிபிஎஸ்இயின் தரம் என்ன? தமிழ்வழிக் கல்விதரும் பள்ளிக்கூடங்களே அற்றுப்போய், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று ஏராளமாக நடக்கின்றனவே அவற்றின் தரம் என்ன?
இவற்றின் தரமின்மைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. முதலில் கல்வி ஒரு பெருத்த வியாபாரமாகப் போய்விட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இரண்டாவது, சிந்தனைக்கு இடமளிக்கின்ற தாய் மொழிப்பாடத்திற்கும் தாய்மொழி வழிக்கல்விக்கும் இடமில்லாமலே போய்விட்டது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு இரண்டாவது விஷயத்தைப் பற்றி மட்டும் சில சொற்கள்.
தாய்மொழி வழிக் கற்றால்தான் சுய சிந்தனை வளரும், நல்ல அறிவியலாளர்கள் சிந்தனையாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் தோன்றுவர் என்று நாம் கரடியாய்க் கத்தினாலும் இன்று தமிழ்நாட்டில் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மாறாக, மெத்தப்படித்த என் நண்பர், ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், கேட்டார்-“ஆங்கிலத்தையே நாம் தாய்மொழி ஆக்கிக்கொண்டால் போகிறது. எதற்குத் தமிழில் படிக்கவேண்டும்?” எந்த மொழியையும் இவர்கள் தாய்மொழியாக “ஆக்கிக்கொள்வார்கள்” போல் இருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் அதைச் சுற்றியிருப்பவர்கள் பேசத்தொடங்கிவிட்டால் ஆங்கிலம் அதற்குத் தாய்மொழியாகிவிடும் என்பது அவருடைய வாதம். இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்படிச் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் 0.1 சதவீதமாவது தேறுவார்களா?
இன்றைய அறிவு வளர்ச்சியின் வேகம் மிக அதிகம். அறிவு எட்டே ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது என்கிறார்கள் அறிவியலார்.
தமிழ்ச்சமூகம் இந்த அறிவு வளர்ச்சிக்கு எப்படித் தன்னை ஈடுகொடுத்துத் தன் தமிழ்மொழியில் அதனைப் பெற்றுத்தரப்போகிறது? எதிர்காலச் சந்ததிகளுக்கு எவ்விதம் அது வழிகாட்டப்போகிறது?
நம் அரசாங்கங்கள் கல்வியைத் தருவதற்கு பதில் சாராயத்தைத் தருகின்றன. எதை அரசாங்கம் நடத்தவேண்டும் எதை நடத்தக்கூடாது எவ்விதம் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அறிவு சிறிதுமின்றி பணம் வோட்டு விளம்பரம் ஒன்றே குறி என்று மக்களுக்கு அல்வழியைக் காட்டுகின்றன அரசாங்கங்கள். இதற்குமேல் பதினான்காம் வயதுவரை இலவசக் கல்வி தருகிறோம், சட்டத்தில் அது சொல்லப்பட்டி ருக்கிறது என்றெல்லாம் பீற்றிக்கொள்வார்கள். உண்மையில் நடப்பது என்ன என்பது மக்களுக்குத் தெரியும்.