கல்வித் திருநாள்

இன்று கலைமகள் நாள். (சரஸ்வதி பூசை அல்லது ஆயுத பூசை). கலைமகள் என்பவள் கல்விக்கும் கலைகளுக்கும் (both process and the products) உருவகம். கலைமகள் நாளான இன்று பலரும் தங்கள் நூல்களை பூசையில் வைத்துப் படைக்கின்றனர். அவற்றைப் படிக்கலாகாது என்றும் சொல்கின்றனர். மறுநாள்தான் அவற்றை எடுக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது தவறான கருத்து. கலைமகள் நாளன்றுகூடக் கல்வி பயிலாதவன், நூல்களைப் படிக்காதவன், வேறு என்று படிக்கப் போகிறான்? ஆகவே தவறாமல் இன்றேனும் உங்களுக்குத் தேவையான அல்லது மனத்துக்குப் பிடித்த நூலைப் படியுங்கள்.

தவளத் தாமரை தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.

(சகலகலாவல்லி மாலை)

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந்நாவில் நின்று
காக்கும் கருணைக்கடலே சகலகலா வல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
நாட்டும் வெள்ளோதிமப்பேடே சகலகலா வல்லியே.

சொல்விற்பனமும் அவதானமும் கல்விசொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளினாசனம்சேர்
செல்விக்கரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப்பெருஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்-வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாக வைத்த சரசுவதி தாயே. (கம்பர்)

தினம்-ஒரு-செய்தி