இப்போதெல்லாம் மக்களின், ஊடகங்களின் பேச்சுச் சுதந்திரமும் வெளிப்பாட்டுரிமையும் நசுக்கப்படுகின்றது. காத்திரமான கருத்துத் தெரிவிக்கக்கூடிய அறிஞர்கள் காரணமின்றிச் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.
இந்தப் போக்கு புதிதல்ல. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்த ஒன்று. பின்னர் நமது சொந்த அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட பிறகும் (1950) அது மாறவில்லை. அம்பேத்கர் போன்றவர்கள் ஒரே இந்தியா என்ற சூத்திரத்தை வலியுறுத்தியதன் வாயிலாக மாநிலங்களின் கருத்துரிமைக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். கே. எம். முன்ஷி போன்றோர் கருத்துரிமையை வலியுறுத்திய அளவுக்கு அம்பேத்கர் பேச்சுச் சுதந்திரத்தை மிகுதியாக ஆதரித்ததில்லை என்பது வியப்பளிக்கலாம்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதற்கு எதிரில் இங்கிலாந்து போன்ற ஒற்றை அரசாவதா, அமெரிக்கா போன்ற கூட்டரசாவதா என்ற இரு வாய்ப்புகள் இருந்தன. இங்கிலாந்தை முழுமூச்சாகப் பின்பற்றிய நேரு, பட்டேல், அம்பேத்கர் போன்ற பெரியோர்களுக்கு அமெரிக்கக் கூட்டாட்சி மாதிரி ஏன் கண்ணில் படவில்லை என்று நான் யோசித்திருக்கிறேன். பல இனங்களும் மொழியினரும் வாழும் இந்த நாட்டில் அந்த முன்மாதிரியைப் பின்பற்றியிருந்தால் எத்தனையோ பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அம்பேத்கர் போன்றவர்களும்கூட ஒற்றை இந்தியா என்ற ஒடுக்குதல் அமைப்பையே தேர்ந்தெடுத்தார்கள். அதிலிருந்து எந்த மாநிலமும் (பஞ்சாப், நாகாலாந்து, தமிழ்நாடு போன்ற) எந்த மாநிலமும் விலகிவிடக்கூடாது, அவர்கள் உரிமைகளை ஒடுக்கியேனும், அடிமையாக வைத்திருந்தேனும் ஒற்றை மைய அமைப்பு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார்கள்.
1962இல் சீனப் படையெடுப்புக்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்தது. 1963இல் பிரிவினை எதிர்ப்பு மசோதா என்ற ஒன்று நமது பாராளுமன்றத் தில் கொண்டுவரப் பட்டது. அதைப் பெரும்பான்மையினராக இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவரும் எதிர்க்கவில்லை என்பதில் வியப்பில்லை. நேரு அறிந்தே அந்த மசோதாவைக் கொண்டுவந்தார். மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது அது என்பதைப் பிறமாநிலத்தவரும் உணரவில்லை. திமுக மட்டுமே அதை எதிர்த்த நிலையில் அதைச் சட்டமாக்குதல் பற்றி விவாதித்த குழுவில் திமுகவைச் சேர்க்கவில்லை. ஏனெனில் திமுகவை ஒடுக்குகின்ற ‘திமுக எதிர்ப்பு மசோதா’ என்றுதான் அது அழைக்கப்பட்டது. மசோதாவைக் கொண்டு வந்த நேருவை நோக்கி
எங்களோடு தயவுசெய்து வாதிடுங்கள், மோதுங்கள், உங்கள் கருத்தை ஏற்கச் செய்யுங்கள். நாங்கள் திருத்தமுடியாதவர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் செல்லுங்கள், அவர்களை அதை நம்பச் செய்யுங்கள். நீங்கள் இப்படிச் செய்தால்தான் அது நிஜமான ஜனநாயகம். பிற விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல, வேறு ஏதோ ஒன்று.
என்று பாராளுமன்றத்தில் பேசினார் திரு. செழியன். இந்திய ஜனநாயகத்தில் “இந்தியா என்பது கூட்டாட்சி, ஒற்றை அரசு அன்று” என்பதை வலியுறுத்திப் பாராளுமன்றத்தில் எழுந்த முதல் குரல் என்று இதைக் கூறலாம். இதேபோல இந்திரா காந்தியும் தமிழகத்தின் உரிமையை மதிக்காமல் கச்சத் தீவினை ஸ்ரீலங்காவுக்குக் கொடையளித்ததைப் பார்த்திருக்கிறோம். பின்னர் ராஜீவ் காந்தியின் காலத்தில் இலங்கைத் தமிழர்களை ஒடுக்க ‘ஐபிகேஎஃப்’ என்ற பெயரால் படை அனுப்பப்பட்ட வரலாறு இங்குள்ள நடுத்தர வயதினர்க்கேனும் தெரியும் என்று கருதுகிறேன். அதன்பின் இந்திய வரலாறு என்பதே தமிழகத்தை ஒடுக்குகின்ற வரலாறு என ஆகிவிட்டது. மாநில அரசின் உரிமைகள் எதையும் மத்திய அரசு மதியாமை என்பதை எழுபதாண்டுகளாகவே கண்டுதான் வருகிறோம். இன்று அதன் உச்சநிலையை அடைந்திருக்கிறோம். வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள முரண்பாடு பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமூகநீதி எய்துதல், மதச் சகிப்புத்தன்மை, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல நிலைகளில் செயல்படுகிறது. குறிப்பாக சித்தர், சிந்தனையாளர் மரபில் வந்த பன்முகச் சிந்தனையை ஆதரிக்கும் நமது பண்பாடு வேறு, மதத்திலும் அதிகாரத்திலும் ஒற்றைத் தன்மைதான் வேண்டும், அதற்கு சமஸ்கிருதம் மட்டுமே பயன்படும் என்ற வடநாட்டுச் சிந்தனை மரபு வேறு.