இது ஒரு அயல்நாட்டுக்கதை.
ஒரு பையன் ஒரு கடைக்குச் சென்றான். அங்கு தொலைபேசி வசதி இருந்தது. தொலைபேசியின் சில எண்களைத் தட்டிப் பேச ஆரம்பித்தான். பேசுபவன் சிறு பையன் ஆனதால் கடைக்காரர் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கலானார்.
பையன்: அம்மா, உங்கள் தோட்டத்தில் புல்லை வெட்டி சீர்ப்படுத்தும் வேலையை எனக்குத் தருகிறீர்களா?
பெண் (அடுத்த முனையிலிருந்து): தம்பி, என்னிடம் அதற்கு ஆள் இருக்கிறது.
பையன்: அம்மா, இப்போது நீங்கள் அந்த ஆளுக்குத் தரும் கூலியைவிடக் குறைத்துக் கொடுங்கள். பாதி கொடுத்தாலும் போதும்.
பெண்: இப்போது வேலை செய்யும் பையனே நன்றாகச் செய்கிறான்.
பையன்: (விடாமுயற்சியோடு) உங்கள் தோட்டத்தின் நடைபாதை, பக்கத்திலுள்ள இடங்கள் எல்லாவற்றையும் நான் சுத்தம் செய்வேன் அம்மா. மற்றவீடுகளைவிட உங்கள் வீடு பார்க்க சுத்தமாக அழகாக இருக்கும்.
பெண்: இல்லைப்பா, வேண்டாம்.
பையன் தொலைபேசி ரிசீவரை வைத்தான். கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக வந்தான். அவர் சொன்னார்: தம்பி, உன் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நான் வேண்டுமானால் உனக்கு வேலை தருகிறேன்.
பையன்: வேண்டாம் சார்.
கடைக்காரர்: ஆனால் வேலை வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தாயே.
பையன்: இல்லை சார், என் வேலை எப்படி இருக்கிறது என்று செக் பண்ணிப் பார்த்தேன். நான் பேசிக்கொண்டிருந்தேனே, அந்தப் பெண்மணிக்குத் தோட்டவேலை செய்யும் பையன் நான்தான்.