ஐந்தாம் உலகம்

பூமியின் மீதுள்ள எல்லா உயிர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முக்கியப் பொருளாகச் சூரியனின் முக்கியத்துவத்தை உலகின் பல பழங்காலக் கலாச்சாரங்கள் அறிந்திருந்தன. மனிதர்களைக் காப்பவனாகவும் சூரியன் நோக்கப்பட்டது.

அமெரிக்க இந்தியப் பழங்குடியினரில் ஒன்றான ஹோப்பி இன நாட்டுப்புறக் கதையில், சூரியன் மனிதனுக்குத் தந்தையாக ஏற்கப்பட்டது. பிற பழங்குடிக் கலாச்சாரங்களிலும் இதை ஒத்த நம்பிக்கைகள் உள்ளன.


ஒரு காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து உலகங்களும் ஐந்து சூரியன்களும் படைக்கப்பட்டன. முதல் உலகத்தின் மக்கள் தவறாக நடந்துகொண்டதால் அது அழிக்கப்பட்டது. அத்துடன் முதல் சூரியனும் அழிந்தது.
இரண்டாவது சூரியன், தன் மக்கள் விவேகமற்றுக் குரங்குகளாவதைக் கண்டது.
மூன்றாவது உலகின் மக்கள் தெய்வங்களுக்கு பலியிடாமையால், தீ, பூகம்பம், எரிமலை ஆகியவற்றால் அழிந்துபோவதை அதன் சூரியன் கண்டது.
நான்காம் உலகம் வெள்ளத்தில் சூரியனையும் இழுத்துக்கொண்டு அழிந்தது.
நமது உலகான ஐந்தாம் உலகைப் படைக்கும் முன்பாக, ஐந்தாம் சூரியனைக் கொளுத்தப்போகும் பாக்கியசாலி யார் எனக் கண்டறிய இருளில் கடவுளர்கள் கூடினார்கள்.
ஒரு மனிதன் முன்வந்தான். ஒரு பிரமிடின் உச்சியில் கடவுளர்கள் பெரிய தீயை உண்டாக்கினார்கள். அதில் அந்த மனிதன் குதிக்க வேண்டும்.
அவன் மிகப் பிரகாசமான உடையணிந்திருந்தான். நான்கு முறை தீயில் குதிக்க முயற்சி செய்தான். ஆனால் பயத்தினால் முடியவில்லை.
எல்லாக் கடவுளர்களிலும் கீழான கடவுள் ஒருவர், நாணல்குச்சிகளால் மிக எளிய உடையை அணிந்திருந்தவர், தீயில் குதித்துவிட்டார். மனிதனும் வெட்கமடைந்து, தானும் தீயில் விழுந்துவிட்டான்.
ஐந்தாம் உலகிற்கு ஒளியூட்டியவாறு சூரியன் வானத்தில் எழலாயிற்று.


-அமெரிக்க இந்தியப் பழங்குடியினமான டோல்டெக் நாட்டுப்புறக் கதை.

இலக்கியம்