“எல்லாமே வயித்துக்குத் தாண்டா” என்று பாடினான் ஒரு சினிமாப் பாட்டுக்காரன். இன்று எல்லாமே நாங்கள் கொள்ளையடிப்பதற்குத்தான் என்கிறார்கள் வியாபாரிகள். கணினி மென்பொருள்கள் பரவியபோது தாங்களாகவே வைரசுகளையும், ட்ராஜன்களையும், வோம்களையும் உருவாக்கினார்கள். பிறகு அதற்கு ஆண்டிவைரஸ், ஆண்டிமால்வேர் என்று சொல்லிப் பணம் குவித்தார்கள். நோய்களை உருவாக்கினார்கள். பிறகு அவற்றுக்கு மருந்துகளை உருவாக்கி விற்கிறோம் என்று சொல்லிக் கொள்ளையடித்தார்கள்.
நம் ஊர் வியாரிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு, கோதுமை மாவில் கலப்படம், மைதாமாவில் வேதிப்பொருள் என்று இன்றுவரை எல்லா இணைய தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம். மாற்று? கிராமப்புறங்களில் சாப்பிடுவதுபோல கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, சிறுதானியங்கள், பருப்புவகைகள் சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் சிறு தானிய மோகம். ஆனால் விலைதான் உச்சாணிக்கொம்பில். தினை 120 ரூபாய் கிலோ, கேழ்வரகு 100 ரூபாய் கிலோ, சாமை 110 ரூபாய் கிலோ, எல்லாம் பாலிஷ் செய்யப்பட்டவை (அரிசி போலத்தான்) பருப்புகள் எதுவும் 100ரூபாய்க்குக் குறைவில்லை. ஆனால் அரிசியே 50 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எந்த கிராமத்தானும் மலைவாழ்குடியினனும் கேழ்வரகை, தினையைக் கிலோ 100 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட முடியும்?