என் இளமைக் காலம்-4

பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம், அன்றைக்கும் இன்றைக்குமான சமூக மாறுபாடுகளைப் பதிவசெய்வதற்காகத்தான். காலத்திற்குக் காலம் எல்லாம் மாறுகிறது. மாற்றத்தைத் தவிர மாறாதது ஒன்றில்லை. சமூகத்தின் புறத் தோற்றம் மாறும்போது அதன் அகமும் முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. அந்த மாற்றங்களைப் பதிவுசெய்தாக வேண்டும். எங்கள் தலைமுறையைப் போல ஒன்று உலகில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எங்களுக்கு முந்திய தலைமுறை வரை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துவந்த காலம். 1900களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டைப் பார்க்கும்போது ஒரு மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தோற்றத்தில்தான் காட்சியளித்திருக்கக்கூடும். ஆனால் இப்போது பூமியே சுற்றுச்சூழல் மாறுபாட்டினால் அழிந்து விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு மாற்றங்கள். எங்கள் தலைமுறை மின்சாரமே இல்லாத இளமையையும் கண்டது, முதுமையில் இப்போது இதோ இண்டர்நெட்டில் இணையதளத்தில் பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இனிவரும் காலம் தொழில்நுட்பக் காலம். எனது பேரன்மார்கள் மூன்று வயதிலேயே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாற்றங்களில், எங்கள் வாழக்கையில் நான் கண்டவற்றில் ஒருசிலவற்றைப் பதிவு செய்வதுதான் இந்த எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. (இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் வேறு, அவை நன்றாக ஆராயப்பட வேண்டியவை. அவை சமூகவாதிகளின், பொருளாதாரவாதிகளின் வேலை).
என் வாழ்க்கையின் இளமைக் காட்சிகளில் ஒன்று இங்கே.

1950களின் தொடக்கத்தில் இன்று உள்ளதுபோன்ற காசு (பணம்) கிடையாது. அப்போது தம்பிடி (பைசா), அணா போன்றவை வழக்கில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 16 அணா. ஒரு அணாவுக்கு 12 பைசா (தமிழில் தம்பிடி). ஆக ஒரு ரூபாயில் 192இல் ஒரு பங்கு ஒரு தம்பிடி. இன்று பத்துரூபாய்க்குக் கூட மதிப்பில்லை. அந்தக் காலத்தில ஒரு தம்பிடிக்கும் சாமான்கள் கிடைத்தன என்பது இன்று நினைக்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்று ஒரு காலணாவுக்குக் கிடைத்த பொருள்களை இன்று பத்து-பதினைந்து ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. (காலணாவுக்கு ஒரு வீசை (அப்போதெல்லாம் கிலோ கிடையாது, ஒரு வீசை என்பது ஏறத்தாழ இரண்டு கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்) காய்கறி வாங்கலாம். இன்று அதன் விலை ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய். 2400 காலணா ஐம்பது ரூபாய்க்குச் சமம் என்றால், இன்று ஊதியத்தில், வசதிகளில் அன்றைய வாழ்க்கையைப் போல 2400 மடங்கு முன்னேறியிருக்கிறதா? குறிப்பாக, கீழ்மட்ட வேலைகளில்?)

1960 அளவில் மேல்வகுப்பு (9 முதல் 11 கிளாஸ்) வாத்தியாருக்கு 100 ரூபாய் மொத்தச் சம்பளம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். இன்று பணத்தின் மதிப்பு அன்றைக்கிருந்ததைப் போல தோராயமாக 2500 முதல் 3000 வரை உயர்ந்திருக்கிறது என்றால், இன்று 100 X 3000 = 300000 ரூபாய் சம்பளமா தருகிறார்கள்? (என் தாய்வழிப் பாட்டன் குமாரசாமிப் பிள்ளை 1950 அளவில் ‘எலிமெண்டரி ஸ்கூல்’ வாத்தியார் வேலையிலிருந்து ‘ரிடையர்’ ஆனார். அவரது சம்பளம் கடைசியாக 14 ரூபாய் என்று சொன்னதாக ஞாபகம்.)

மூன்று தம்பிடி காலணா. ஆறு தம்பிடி அரையணா. பன்னிரண்டு தம்பிடி ஓரணா. தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா இவற்றுக் கெல்லாம் காசுகள் (நல்ல செப்புக்காசுகள்தான், அப்போது நிக்கல் காசு வழக்கில் வரவில்லை) இருந்தன என்றால் இன்றைக்கு நம்புவீர்களா? இரண்டணாவுக்குப் பித்தளைக் காசும் இருந்தது.

காலணாவிலேயே சாதாரண காலணா, ஓட்டை (தொண்டி)க் காலணா என்று இரண்டுவகை. நான் தொண்டிக்காலணாவைத் தான் நிறையப் பயன்படுத்தியிருக்கிறேன். சிறிய செப்பு வட்டக் காசு. மத்தியில் வட்டமான துளை. சுற்றிலும் பழைய ஜார்ஜ் ராஜாத் தலை, காசின் மதிப்பு, ஆண்டு ஆகியவை அச்சாகியிருக்கும். 1954 வாக்கில் இவைதான் புழக்கத்தில் இருந்தன. 1956இல்தான் புதிய பைசா (அபபோது நயாபைசா என்று அழைக்கப்பட்டது) புழக்கத்துக்கு வந்து தம்பிடி, காலணா, அரையணா கணக்கை எல்லாம் அழித்துவிடத் தொடங்கியது. இந்தியா மெட்ரிக் முறைக்கு மாறியது. மைல் கிலோமீட்டர் ஆகியது, வீசை கிலோகிராம் ஆகியது, உழக்கு, ஆழாக்கு எல்லாம் போய் லிட்டர் வழக்கிற்கு வந்தது…
ஆனாலும் இந்த மாற்றங்கள் முறறிலும் ஏற்றுக்கொள்ளப்பட சில ஆண்டுகள் ஆயின.

1950கள்தான் காப்பிக்கடைகள் பெருகி, காலையில காப்பி குடிப்பது என்பது மத்தியதர வர்க்கத்தில் பழகத்தொடங்கிய காலம். என் அம்மா அக்காலத்தில் ஒரு காலணாவைக் கையில் கொடுத்து கடையில்போய் ‘காப்பி வில்லை’ வாங்கிவரச் சொல்வார். (அப்போதெல்லாம் ப்ரூ போன்ற பெயர்களெல்லாம் கிடையாது, ஒருவேளை நரசுஸ் மாதிரி காப்பித் தூள்கள் இருந்தனவோ என்னவோ தெரியாது). கருப்பாக ஒரு சிறிய சதுர வடிவத்தில் ஒரு காப்பி வில்லை கிடைக்கும். அதைக் கொண்டுவந்து கொதிநீரில் இட்டால் காப்பி டிகாக்-ஷன். அதில் பாலை ஊற்றி சர்க்கரை போட்டுக் குடிக்க வேண்டும். அவ்வளவுதான். (சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரை அல்ல. வெல்லத்தூள் போல மஞ்சள் முதல் பழுப்பு நிறம் வரை பல நிறங்களில் ஒன்று இருக்கும். அதுதான் சர்க்கரை. நாட்டுச் சர்க்கரை என்பது இன்றைய வழக்கு). ஆனால் அந்தக் காப்பியும் நன்றாகத்தான் இருந்தது.
டீக்கடைகளைப் பார்க்க முடியாது. எனக்குத் தெரிந்து 1950களில் அதிகமாக இல்லை. 1960 வாக்கில்தான் திமிரியில் இருந்தபோது எங்களுக்கு டீ அறிமுகம் ஆயிற்று. லிப்டன் என்ற கம்பெனி வீடுவீடாக வந்து டீத்தூளை அறிமுகப் படுத்தியது. அதன் விளைவாக காப்பிக்கு பதிலாக டீ போட ஆரம்பித்தோம். ஆனால் எந்தக் காரணத்தினாலோ குழந்தைகளுக்கு நிறைய உடம்புக்கு வர ஆரம்பிக்க, அது டீயினால்தான் என்று முடிவு செய்து அதை ஒதுக்கிவிட்டு பழையபடியே காப்பியில் சரணம். ஆனால் ஏறத்தாழ 1960 வாக்கில் காப்பி வில்லைகள் மறைந்து காப்பித்தூள் வகைகள் மிகுதியாக வரத் தொடங்கிவிட்டன.

ஏறத்தாழ காப்பிக் கடைகளும் (கிளப்புகள், கபேக்கள்) 1950களில் அதிகமாயின. டீக்கடைகளும் தோன்ற ஆரம்பித்தன. “பிறாமணாள் காப்பி கிளப்புகள்” ஊருக்கு ஊர் பெருகிய காலம். அரையணாவுக்கு நல்ல “டிகிரி” காப்பி அந்தக் கடைகளில் கிடைக்கும். கடைகள்தான் “பிறாமணாள்” கடைகளே தவிர பிராமணர்கள் பெரும்பாலும் எச்சில் தீட்டு கருதி அந்தக் கடைகளுக்கு வருவதில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகியது.

திரைப்படங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்ட காலம் ஐம்பதுகளின் பிற்பகுதிதான். அதற்குமுன்பு புராணப்படங்கள்தான் மிகுதி (பராசக்தி விதிவிலக்கு. வாழ்க்கை, பெண் மாதிரி சில குடும்பக் கதைகளும், தேவதாஸ் போன்ற காதல் கதைகளும் முன்பே வந்துவிட்டன என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழில் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது பராசக்திக்குப் பிறகுதான்.) அதனாலோ என்னவோ என்எஸ்கே ஐம்பத்தொண்ணுக்கும் அறுபத்தொண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு திரைப்படப் பாட்டாகவே பாடிவிட்டார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் போன்றவர்கள் நடித்த ஏழைபடும் பாடு, பணம், செந்தாமரை…இப்படி எத்தனையோ “சமூகப்”படங்கள். ஐம்பதுகளின் இறுதியில் எம்ஜிஆர் ‘தானா’வரிசைப் படங்களிலும், சிவாஜி ‘பானா’ வரிசைப் படங்களிலும் நடிக்க, சினிமாவின் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது.

1965இல் நான் கல்லூரியில் பியூசி சேர்ந்த காலத்தில், வேலூர் ஊரிஸ் காலேஜுக்கு எதிரில் இருந்த தாஜ் சினிமாக் கொட்டகையில் மத்திய வகுப்பு டிக்கட் 25 பைசா (நாலணா). (மத்திய வகுப்பு என்றால், உயர்ந்த வகுப்பும் அல்ல, தரை டிக்கட்டும் அல்ல, ஓரளவு பின்னாலிருந்து பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கலாம். தரை டிக்கட் என்றால் பெஞ்சு கிடையாது. திரைக்கு மிக அருகில் இருக்கும்.)
அதில்தான் அந்த ஆண்டு வெளிவந்த எங்கவீட்டுப் பிள்ளை, படகோட்டி ஆகிய இரு திரைப்படங்களையும் பார்த்தேன்.
ஊரிசுக்கல்லூரியில் பியூசியில் படிக்க நான் கட்டிய மொத்த ஃபீஸ் 64 ரூபாய் என்று ஞாபகம்.

சமூகம்