எண்பதுகளில் கவிதை – சில எண்ணங்கள்
(இந்தக் கட்டுரை, 1990 ஆகஸ்டுமாத ‘மேலும்’ இதழில் வெளி வந்தது. எவ்வித மாற்றமும் இன்றி இங்கே வெளியிடப் படுகின்றது. ஒரு வரலாற்றுப் பதிவு.)
1
இரக்கமற்ற நூற்றாண்டாகப் போனது இது. ஆக்சிஜன் குடித்து வியாழனையும் சனியையும் தேடும் அசுரக் கழுகுகள். மூடிய குளிர்சாதனச் சிறைகளுக்குள் உயிரியல் அடிப்படைக் கூறுக ளையே பண்புமாற்றம் செய்யும் ஜால வித்தைகள் ஒரு புறம்; தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மானிட விட்டில்கள் மாயும் சோகம். லட்சக்கணக்கில் சோறும் இல்லாமல் எலும்புக்கூடாக மண்ணில் புதையும் அவலம் மறுபுறம். பெட்ரோலைவிட மலிவாகிப் போயின மனித உயிர்கள். மனிதர்களிடையே அன்பு அற்றுப்போனது. பிளேட்டோ, தொல்காப்பியர் காலத்திலிருந்து மனிதர்கள்மேல் செய்யப்பட்டு வந்த அத்தனை கணிப்புகளும் அர்த்தமற்று வீழ்ந்துபோயின. சோற்றுக்கும் கனவுக்குமாகவே மனிதர்கள் இருநது போகிறார்கள். வல்லரசுகளின் வாணிகப் போட்டிகளுக்கிடையே நாடுகளே மிதிபட்டு நசுங்கி அலறுகின்றன. இந்த நிதர்சனங்களினூடே நீட்சே இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டில் சொன்னதுபோலக் “கடவுள் செத்துப்போனார்”.
இன்று இந்த நிலையில் எதை எழுதுவது கவிதையென்று? கடவுளே அற்றுப்போன உலகில் கவிதைக்கு என்ன மதிப்பு? கவிதை செத்துக்கொண்டிருக்கிறது என்று ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல குரல்கள் கேட் கின்றன. என்றாலும் விடாமல் கவிதை சிலரிடம் ஜீவிக்கிறது. கொஞ்சம் ஈரம் நெஞ்சில் இருக்கும்வரை கவிதை சாகாது என்று ஒரு நம்பிக்கை. ஆனால் கவிதையின் தோற்றம் குணம் மாறிவிட்டன. இன்று எதைச் சொல்வது கவிதை? கூடஙகுளங்கள் எதிர்கால நச்சு ராட்சஸக் குடைகளாக உருப்பெறுவதையா? சாராயமும் திரைப் படமும் மனிதர்களை ஆட்சிசெய்வதையா? தொலைக்காட்சி விளம்பரங்கள் மனித மதிப்புளை மலினப்படுத்திவிட்டதையா? அடிப்படைத் தேவைகளுக்கு மனிதர்கள் பரிதவிக்க, நீர்மூழ்கி களும் குண்டுவீசிகளும் நாட்டு வருமானத்தை ஏப்பமிடுவதையா? இதையெல்லாம் சகித்துக்கொண்டு கும்பலென ஒருபுறமும் ஏதும் செய்யக் கையற்று அந்நியமாகிப் புலம்பி மறுபுறமும் மனிதர்கள் வாழ்வதையா?
இதற்கிடையிலும், இன்னும், சுரணையற்றுப் போய் தமிழினத் தின் பொற்காலத்தையும் வாள்விழிகள் நீள்விழிகள் என வரலாற்றுப் பாவியங்களையும் எழுதிக் குவித்துப் பழங்காலத்தில் சஞ்சரிக்கும் ஃபாஸில் பிராணிகள் பிழைப்பு நடத்தாமலில்லை. உளுத்துப்போன சங்கதிகளை உருவேற்றும் இவைகளைக் கவிதை என இங்கே கொள்ளவில்லை. அதேபோல ஆதிக்கத் தலைவர்களை அண்டிக் கும்பிட்டு வாழ்த்துப்பாடிப் பிச்சையேந்திப் பிழைக்கும் சொல் அலங்காரங்களையும் முற்றிலுமாக நாம் மறுக்கிறோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிப் பார்த்தால் கவிதை எங்கே? ஒருவேளை கவிதை செத்துக்கொண்டுதான் இருக்கிறதோ என்ற அவநம்பிக்கை எழாமலில்லை.
2
எப்படியிருப்பினும் பத்தாண்டுக்கு ஒருமுறை கவிதையின் முகம் மாறித்தான் போகிறது. சோனிக்குழந்தை என்றாலும் உயிருள்ளவரை மாற்றம் என்பதுதானே இயற்கை? நாற்பதுகளில் கிடைத்த பாரதிதாசனின் கவிதை ஒருவித பாசிடிவிசத்தோடு கூடிய சோகைபிடித்த ரொமாண்டிசிசக் கவிதையா கக் காட்சியளித்தது. ஐம்பதுகளில் இந்த பாசிடிவிசக் குணமும் அற்றுப்போய், பாரதிதாசன் பாரம்பரியத்தில் வெறும் நீர்த்துப்போன ரொமாண்டிக் குணங்க ளோடு, அர்த்தமற்ற பழமைவாதமும் சேர்ந்துகொண்டது. அறுபதுகளில் எழுத்து பத்திரிகை வாயிலாகச் சோதனை முயற்சிகள், அன்றைய, அதற்கு முந்திய ஆங்கிலக் கவிதைகளிலிருந்து பெறப்பட்ட உத்வேகத்தோடு தோன்றின. இதுதான் தமிழில் புதுக்கவிதையின் தோற்றம். (இனிமேல் புது என்ற சொல்லுக்கு அவசியமில்லை.) எழுபதுகளில் நவீனத்துவத்திற்கு மார்க்சியப் பழமைவாதத் தளங்களில் தோன்றிய எதிர்ப்புகள் வானம்பாடிக் கவிதைகளில் சென்று முடிந்தன. எனினும் ஒரு புதிய வகை அரசியல் கவிதைக்கான தேவை ஆழமாக உணரப்பட்டது. இனி, எண்பதுகளில் கவிதை என்ன ஆகியிருக்கிறது என்று காண்பது நோக்கம். இப்படி ஒவ்வொரு வாக்கியத்தில் மதிப்பிட்டுக் கூறுவது ஒருவகையில் மிக எளிமைப்படுத்துவது என்றாலும் நிலைமையைச் சரியான ஒரு பின்னணியில் வைத்துப் பார்க்க உதவும்.
3
எழுபதுகளின் இறுதிவரை, தமிழில் புதுக்கவிதை என்று இன்றும் அறியப் படும் இலக்கிய வகைக்கு நிறைய தற்காப்புகள் எழுதுவது தேவைப்பட்டது. எண்பதுகளில் தெரியும் ஒரு பெரிய மாற்றம், இன்று அவ்வாறான ‘அபாலஜி’கள் எழுதுவது அவசியமில்லையாகிவிட்டது என்பது. காலம் மாறிவிட்டது. யாப்பற்ற கவிதை பழகிப்போன ஒன்றாகிவிட்டது. எழுபதுகளில் சிறுபத்திரிகைகள் பெருகி வந்ததைப்போல, எண்பதுகளில் இல்லை. என்றாலும், சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன.
வெறும் அலங்காரங்களைப் பயன்படுத்தும் வியாபாரக் கவிதைகள், வணிக இதழ்களைத் தேடிச்சென்றுவிட்டன. இதற்கு முன்னரே பழைய கவிஞர்களின் காதுடைக்கும் சந்(தை)த நயங்கள், பழஞ்சொற்களைக் கையாளும் பாணிகளும் மார்க்கெட்டில் மதிப்பிழந்துபோய்விட்டன. எழுபதுகளில்போல, எழுதப்பட்டும் வறட்டு கோஷங்களும் வணிக இதழ்களை நாடிச்சென்றுவிட்டன. எண்பதுகளில், சிறுபத்திரிகைகளில், பெரும்பாலும் காணக்கிடைப்பன, முற்போக்கோ, பிற்போக்கோ, கவிதை என்னும் உணர்வுக்கேற்ப, கருத்தியலுக் கேற்ப எழுதப்பட்டவையே. இது தமிழ்க்கவிதைக்கு ஒரு பயனுள்ள போக்குதான்.
4
ஒரு புதிய கவிதை படைப்பாகிக் கொண்டிருக்கிறதா? இன்றைய உலகின் தேவைகளை மனதிற்கொண்டு, இன்றுளள பிரச்சினைகள்-குழப்பங்களை எதிர்கொள்ளும் ஒரு நவீன பிரக்ஞையை வளர்த்துக்கொண்டு, இவற்றைத் தாங்கக் கூடிய ஒரு சரியான சொற்கோவையையும் உருவாக்கிக்கொண்டு, இன்றைய தமிழ்க்கவிதை ஒருவாறாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோனிக்குழந்தையாகத்தான் இருக்கிறது. பாரதிக்குப் பின் இன்றுவரை சந்தேகமின்றி ஒரு பெருங்கவிஞன் தோன்றவில்லை. எனினும் எண்பதுகளில்கூட, தமிழில் சில முக்கியக் கவிஞர்களும், சில கவிஞர்களும் உருவாகித்தான் இருக்கிறார்கள். தமிழில் கவிதை தேங்கிப்போய்விடவில்லை.
இன்றைய கவிதை மனிதனின் சிக்கல்கள் முடிச்சுகள் சுருக்கங்கள் நரைதிரைகள் ஆகிய எல்லாவற்றையும் காட்டித்தான் ஆகவேண்டும். தப்பிக்க முடியாது. இப்படிப்பட்ட கவிதை தமிழில் உருவாவதற்கான சாத்தியங்களை அறுபது எழுபதுகளில் அளித்த முக்கியக் கவிஞர்கள் பிருமீள் (தருமு சிவராமு), பசுவய்யா, ஞானக்கூத்தன், நகுலன் போன்றோர். இன்று புதுக்கவிதையில் இவர் கள் பழந்தலைமுறையினர். எனினும் தமிழில் இப்படிப்பட்ட கவிதையும் முற்றி லும் உருவாகிவிட்டது என்று திடத்தோடு சொல்லமுடியவில்லை. காரணம், தமிழில் உருவாகும் நவீனத்துவக் கவிதைகளும்கூட மத்தியதர வர்க்கத்துக் கையறுநிலைகள்தான். பெரும்பாலும் அவற்றில் காணப்படும் வாழ்க்கை ஒரு கைப்பிடியளவுதான். இன்னும் தமிழில் தலித் கவிதையோ, அரசியல் கவிதையோ தோன்றவேயில்லை. பரந்த மானிட அடிப்படையிலான கவிதை தமிழில் மிகக் குறைவு. நாவல் சிறுகதை போன்றவற்றின் அனுபவங்களோடு வைத்துப் பார்க்கும்போது கவிதையின் வறுமை பளிச்சென்று தெரிகிறது.
என்றாலும் அறநெறி சார்ந்த ஒரு பிரக்ஞை, இந்திய கிராமங்களில் வசிக்கும் நிஜ மனிதர்களை ஒளிவுமறைவின்றிக் காட்டுதல், தொழில்நுட்பத் தேர்ச்சி, உயர்ந்த தரத்தை நோக்கிய தேடல், பாஷை நுட்பம் ஆகியவற்றைப் பலவேறு நிலைகளிலும் வெளிப்படுத்தும் முக்கியக் கவிஞர்களாக கலாப்ரியா, ஆத்மாநாம், பிரம்மராஜன் போன்றோரையும், ழ, மீட்சி போன்ற கவிதைச் சிற்றிதழ்களில் எழுதிய இன்னும் பலரையும் குறிப்பிடலாம்.
கலாப்ரியாவும் ஆத்மாநாமும் எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப் பட்டுத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். என்றாலும் அவர்களின் முக்கியப் படைப்புகள் வெளியான காலத்தை நோக்கி அவர்களை எண்பதுகளின் கவிஞர்களாகக் கொள்வதில் தப்பில்லை. எண்பதுகளில் தன்னை வெளிப்படுத்தி நிலைநிறுத்திக்கொண்ட ஒரு முக்கியக் கவிஞர் பிரம்மராஜன். இன்னும் கல்யாண்ஜி, தேவதச்சன், ஆனந்த், தேவதேவன், பாதசாரி, ஜெயபாஸ்கரன், விக்கிரமாதித்யன், சத்யன், சுகுமாரன், சீனிவாசன், பழமலய், பிரேதா – இப்படிப் பலபெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இவர்களை இப்போதைக்குச் சிறு கவிஞர்கள் என்றே கருதத்தகும். இனி இவர்களைப் பற்றி ஒருசில மேலோட்டமான பார்வைகள். இந்த மதிப்பீடுகளில் இலங்கைக் கவிஞர்கள் சேர்க்கப்படவில்லை.
5
முதலில் ஆத்மாநாம்.
எழுபதுகளின் இறுதியில் வெளிப்பட்ட இந்தக் கவிஞர், ‘ழ’ என்னும் கவிதை இதழின் ஆசிரியரும்கூட. எண்பதுகளின் முதற்பாதியின் இறுதிக்குள் இவர் மறைந்தது தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. ‘ழ’ வின் ஒன்பதாம் இதழ் முதலாக எண்பதுகளிலேயே வெளியானதால், இவரை எண்பதுகளின் கவிஞராகவே காணலாம். கொஞ்சம் விடுபட்ட ‘கன்பெஷனல்’ (confessional) கவிதைகள் அவருடையவை. ‘விடுபட்ட’ என்பது அழகியல் தொலைவைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். அவர் கவிதைகளில் அவரது ஆளுமையின் இறுவேறு பகுதிகளின் ஒளிமிக்க பகுதியின் வெளிப்பாடு மட்டுமே காணக்கிடக்கிறது. இருளின் பகுதி (அவரது தற்கொலை போன்ற சிலசெயல்களில் மட்டுமே வெளிப்பட்டது.) கவிஞனாக இருப்பதற்குரிய அர்ப்பணிப்பு, வார்த்தைப் பிரயோகங்களின் சரியான தேர்வு, தொழில்நுட்பத் தேர்ச்சி, மிகையுணர்ச்சியை அறவே புறக்கணித்த பாங்கு ஆகியவை இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். இவரது கவிதைகளில் அறிவுத்துறைகளின் தாக்கத்தைப் பெரிதும் காணமுடியா விட்டாலும், உள்தர்க்கமும் ஒழுங்கும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இவரது கவிதைகளின் முக்கியப் பொருள் மனித சுதந்திரம். இந்தத் தன்மைகள் யாவும் அவரை ஒரு நவீனத்துவப் பாரம்பரியக் கவிஞராக ஆக்கின. ஆனால் செயற்கையான உத்திகளைக் கையாளல் அவரிடம் சிறு அளவும் இல்லை.
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின்பற்றாது
வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன…..
இதுபோன்ற வரிகள் அவரது சுதந்திர ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றன. அவரது கவிதைகளையும் நமக்கு இனங்காட்டுகின்றன. வண்ணாத்திப் பூச்சியின் வழி அதற்கே தெரிந்த ஒன்றாயினும், ஒழுங்கற்றதல்ல. அதேபோலத்தான் ஆத்மா நாமின் எழுத்தும் நிச்சயமான ஒரு மையம் கொண்டதுதான்.
நான் ஒரு வரியை
இயல்பாய்க் கொண்டு செல்கிறேன்
அது நிச்சயமானதொரு திசையைத்
தேர்வு செய்கிறது. (ழ-27)
ஒப்புக்கொள்ளும் தன்மை இருப்பதால், இவரது கவிதைகள் ஒருவித ரொமாண்டிக் தன்மையோடு, ஆனால் ஆரோக்கியமான ரொமாண்டிக் தன்மை யோடு கூடியிருக்கின்றன. அத்துடன், ஒரு அதீதமான எளிமை நம்முடன் இரண்டறக் கலந்து ஈர்க்கின்ற நேசத்தை உண்டாக்கும். சுய அனுபவ வெளிப்பாடு இந்தக் கவிதை இயல்புகள், சில்வியா பிளாத்துடன் இவரை ஒப்பிட வைக்கின்றன. (இவரது வாழ்க்கையும்தான்.) ஆனால் பிளாத்தின் கவிதைகளில் சாவு பற்றிக் காணப்படும் பிரேமை (சாவதும் ஒரு கலை) ஆச்சரியகரமாக இவரது கவிதைகளில் இல்லை. ஆத்மாநாமின் கவிதைகள் எடுத்துரைப் பதெல்லாம் வாழ்க்கையின்மேல் ஓர் இடையறா நேசம்தான்.
அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்ப மரக்கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை
பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம் (அமைதிப் படுகையில்)
இக்கவிதை இவரது வாழ்வின் நம்பிக்கை தொனியையும் அதேசமயம் ஒரு கனவுத் தன்மையான ரொமாண்டிக் குணத்தையும் காட்டுகின்றது. மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும், மனிதனின் குற்றங்களையும் நேசபாவத்தோடு நோக்கும் கவிதை அவருடையது.
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்றே சும்மா இருங்கள் (சும்மாவுக்காக ஒரு கவிதை)
வெள்ளைத் தாளிலும்
நமக்குத் தெரியாமல்
சில கோடுகள்
குறுக்கிலும் நெடுக்கிலும் இருக்கும் (காகிதத்தில் ஒரு கோடு)
மனிதநேயமற்று அதீதமாகத் தேடும் அறிவின் அனர்த்தத்தையும் மனித இயல்பையும் இவை சொல்கின்றன. ஆத்மாநாமிடம் அவரை ஒரு பெருங்கவிஞராகக் கருதக்கூடிய கற்பனை வளமும், ஒழுங்கும், மனிதநேயமும், எளிமையும் இருந்தன. சுமார் நூறு கவிதை அளவிலான படைப்புகளோடு அவரது படைப் பியக்கம் நின்றுவிட்டது.
6
கிராமத்தானுடைய எளிமை போன்றதொரு எளிமை ஆத்மாநாமின் கவிதையில் இருப்பினும், உள்ளடக்கத்தில் அது நகர்சார் மத்தியதர வாழ்க்கையே. உண்மையான கிராமியம் தழுவிய கவிதை கிடைப்பது கலாப்ரியாவின் வாயிலாகத்தான். கிராமத்தின் அடிப்படைக் குணங்கள்-அதன் மண்-அதன் சடங்குகள்-அதன் பாலியல், வன்முறைகள் உட்பட வெளிப்படும் கவிதை. இழந்துவிட்ட அந்த வாழ்க்கைக்கான ஏக்கச்சிந்தனை, அந்த வாழ்க்கையைப் பாழ் படுத்திவிட்ட நகர நாகரிகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான வெறுப்பு ஆகி யவையும், இந்த அவலங்களுக்கிடையிலும் கிராமங்களில் காணப்படும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் தொடரும் வாழ்க்கை மீதான நம்பிக்கை ஆகியவை இவரது கவிதையின் அடிப்படைக் குணங்கள். ‘எட்டயபுரம்’, ‘சுயம்வரம்’ ஆகிய இரு தொகுப்புகளும் இத்தன்மைகளை நன்றாகவே வெளிப்படுத்துகின்றன. கிராமத்தில் நகர வாழ்க்கையின் குறுக்கீடு (கற்பழிப்பு) இவரது மையச் சிந்தனை எனலாம். (இந்த நகரவாழ்க்கையின் குறுக்கீடுகளற்ற ஒரிஜினலான மானிடப் பாத்திரங்கள் பழமலையின் கிராமியக் கவிதைகளில் நிறையக் காணக்கிடக்கின் றனர்.)
கலாப்ரியாவின் கவிதை காட்சிகள் நிரம்பியது. ஆனால் செயற்கையான காட்சிப்படுத்தல்கள், படிமப்படுத்தல்கள் அற்றது. ஒரு லத்தீன் அமெரிக்கத் தன்மை இவர் கவிதைகளில் விரவியிருக்கிறது. (அதே போன்றதொரு மூன்றாம் உலக வாழ்க்கை-போர்க்குணம் நீங்கலாக.) நேரடியான கவிதை இருப்பினும், படிம, உருவகக் குறியீட்டு இடையீடில்லாத நிர்வாண கவித்வம் வேண்டிக் கலாப் ரியா தியானிக்கிறார். இந்த தியானம், அவர் கவிதைகளில் சுயம்வரம் தொகுதியிலும எட்டயபுரம் கவிதைநூலிலும் இடம்பெறுகிறது. வெவ்வேறு வடிவத்தில் அறுபதுகளில் அமெரிக்காவிலும் இப்படி ஓர் இயக்கம் தோன்றியது. நிர்வாணக் கவிதை இயக்கம். ரீத்கே, ரெக்ஸ்ராத், ஜின்ஸ்பெர்க் முதலியோர் ஒன்று சேர்ந்து ஒரு நூலே வெளியிட்டனர். (Naked Poetry – Recent American Poetry in open form) இதன் பாதிப்பாகவே கலாப்ரியா படிம குறியீட்டு இடையீடுகளற்ற கவிதை கேட்பதாகக் கொள்ளலாம். இங்கு திறந்த வடிவம் என்பது முக்கியமானது. நவீனத்துவக் கவிதைகளிலேயே பல திறந்த வடிவக் கவிதைகளே. பிந்திய நவீனத்துவக் கவிதையிலும் இதுவே இயல்பு. கலாப்ரியாவின் மனத்தில் எஸ்ரா பவுண்ட், எலியட் மாதிரியான நவீனத்துவக் கவிதையைக் கடந்து செல்லும் ஆசை இருக்கிறது.
7
எழுபதுகளின் இறுதியில் எழுதத்தொடங்கி, விரைந்த வளர்ச்சி பெற்ற-இன்று தவிர்க்க முடியாத கவிஞர் பிரம்மராஜன். எண்பதுகளின் தொடக்கத்தில் அவரது முதல் கவிதைத் தொகுதி ‘அறிந்த நிரந்தரம்’ வெளிவந்தது. பிறகு அவர் மீட்சி இதழ் ஆசிரியர் ஆனார். நிறையக் கவிதைகளையும், கவிதை பற்றித் தனது மதிப்பீடுகளையும், ஐரோப்பியக் கவிஞர்களின் கோட்பாடுகளையும் தொடர்ந்து வெளியிட்டார். இப்போது ‘வலி உணரும் மனிதர்கள்’, ‘ஞாபகச் சிற்பம்’ என இன்னும் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
‘அறிந்த நிரந்தரம்’ தொகுதிக் கவிதைகள் எல்லாமே படிமக் கவிதைகள்தான். அக்கவிதைகளில் தொடர்பின் இழை உண்டு. வலி உணரும் மனிதர்கள் அடுத்த சோதனைப் படியாகவும், ஞாபகச் சிற்பம் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. ஞாபகச் சிற்பம் தொகுதியில் அவர் முழுமையாக பின் நவீனத்துவப் பாணிக் கவிதைகளில் எந்தவித மையமுமற்ற, தொடர்ச்சி இழை யற்ற பல கவிதைகளை வரைந்துள்ளார்.
பிரம்மராஜனின் ஈடுபாடுகள் பரந்துபட்டவை. அவரது கவிதைகளை இரசிக்க, ஆங்கில இலக்கியப் பின்னணி, சங்கீதம் பற்றிய அடிப்படைகள், அறிவியல் துறைகளின் அடிப்படைகள் போன்ற பலவும் ஒன்றிணைந்தால்தான் முடியும். அவரது கவிதையைக் கடினமாக்கும் தன்மைகள் பல. பிரம்மராஜன் கவிதைகள் புரியவில்லை என்று ஓயாமல் சொல்பவர்களும், அவற்றில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று சொல்பவர்களும் சிறுபத்திரிகை வாசகர்களில் உண்டு. அவரது மேற்கோள்கள், தொடர்புறுத்தல்கள் (அல்யூஷன்ஸ்), புதிய காட்சிப் படிமங்கள் (“காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது”), ஒரு புலனுணர்வு மற்றொரு புலனுணர்வாக மாற்றப்படுதல் (சைனீஸ்தனிஸ்- “காகம், உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல்” என்பது போல), புதிய முரண்கள் (“இரவெனும் கருப்புச் சூரியன்”) சங்கீதத்திலிருந்து இடையறாது ஆளப்படும் கருத்துகளும் சொற்களும் – முழு அளவில் புதியதொரு பார்வை.
முதல் டாடாயிசக் கண்காட்சி காட்டியது
சிறுநீர் சேகரத் தொட்டி
உன் தேசமே அப்படி உனக்கு
(ஆத்மாநாமுக்கு, வலி உணரும் மனிதர்கள்)
என்பதுபோன்ற சமூகச் சாடல்கள்-இவை போன்றவை பிரம்மராஜனின் கவிதைக்கு மிகுந்த வலுக்கூட்டுகின்றன. எலியட் பாணி கொலாஜ் தன்மையுள்ள கவிதைகளைப் படித்தவர்களுக்கு பிரம்மராஜனின் சொல்லும் பாணி அதிர்ச்சி யூட்டாது. தமிழுக்கு இந்தப் பாணி முற்றிலும் புதியதாகையால், பலருக்குப் புரிவ தில்லை. மேலும் இத்தகைய கவிதைகள் புரிந்துகொள்ளப் பலமுறை ஆழ்ந்த வாசிப்பையும் காலம் செலவிடலையும் வேண்டுபவை. எனவே அவசரமாக நோக்கிவிட்டு வாசகர்கள் பிரம்மராஜனை நெருங்கமுடியாது. பிரம்மராஜனின் வலுவே, பன்முக மனநிலைகள், குழப்பம், வேகம், கொந்தளிப்பு போன்றவற்றைச் சித்திரிக்கும் படிம ஆற்றல்தான்.
பிரம்மராஜனின் மூன்று கவிதைத் தொகுதிகளும், நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவப் பாணிக்கு அவர் மாறிச்செல்வதை எடுத்துக்காட்டுகின்றன. பிரம்மராஜனின் சமூக அக்கறைத் தளம் ஓரளவு நிசிம் எசகியேலையும், சோதனை முயற்சிகள் மெஹ்ரோத்ராவையும் நினைவூட்டுகின்றன.
8
பிரம்மராஜனின் கவிதைகளில் குறைகளில்லை என்று சொல்லமுடியாது. தாங்கிவரும் மொழியிலும் படிமங்களிலுமே மனத்தை நிறுத்தி அப்பாற்செல்லாமல் தடுத்துவிடும் கவிதை அவருடையது. ஓர் அர்த்த மையத்தை வைத்தே சிந்தித்துப் பழகிய தமிழ் மனத்துக்கு அவரது கவிதைகள் பரியாமல் போவதில் வியப்பில்லை. இவ்விதக் கவிதைகளுக்கு எவரும் உரையெழுதிப் பொருள் விளக்கும் (பழமலை வேண்டுவதுபோல) வாய்ப்பும் குறைவு. (‘பிரம்மராஜனின் கவிதைகளும் நரிகளும்’, பழமலை, மீட்சி-31). இப்படிப் பொருள் உணர்த்தவேண்டுவதே இந்தக் கவிதைகளின் தன்மையை மாறாகப் புரிந்துகொள்வதாகும். அல்லது நாகார்ஜுனன் செய்வதுபோல அன்வயப்படுத்திக் காட்டுவதாலும் (இதைக் கட்டவிழ்த்தல் அல்லது உடைப்பு, டிகன்ஸ்ட்ரக்ஷன் என்று நாகார்ஜுனன் சொன்னாலும் அவர் செய்வது அன்வயப் படுத்தல்தான்) மிகுந்த பயன் விளையாது.
9
இங்குக் கவிதையின் மொழி பற்றிக் கொஞ்சம். கவிதை ஆன்மாவின் குரல் என்றாலும், அல்லது வெறும் மொழி விளையாட்டு என்றாலும் அது நிகழ்காலத்தின் தகிக்கும் நிதர்சனங்களைவிட்டு இறந்த காலத்தின் இருட்குகைகளுக்குள் சென்று பதுங்கிக்கொள்ள முடியாது. அல்லது எதிர்காலம் ஒளிமயம் என்று கிளிஜோசியம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்றைய பிரச்சினைகள்தான் கவிதைக்குக் களம் என்றால் காலங்காலமாக ஆதிக்கவாதிகளைச் சோற்றுக்காகவும், கடவுளை உலகவாழ்வெனும் மாயப்பிணிக்கு மருந்துக்காகவும் பாடிய பழைய பாஷையைத் தூக்கி எறியத்தான் வேண்டும். “நவீன அறிவுக் களங்களை நாடும்போது நம் பழைய மொழி தத்தளிக்கிறது, உடைகிறது, நொறுங்குகிறது, என்னை விட்டுவிடு என்று கெஞ்சுகிறது” என்கிறார் டி. எஸ். எலியட். இது எந்த பாஷைக்கும் நேர்வதுதான். ஆகவே கவிஞன் தனது மொழியைத் தானே உருவாக்குகிறான். எனவே கவிதை புரிய வில்லை என்று ஒதுக்கிவிடக்கூடாது. என்றாலும், தமிழ்போன்ற, பலவித கலை அறிவியல் இயக்கங்களுக்கு ஆட்படாத மொழியில் கவிஞன் தானாகச் சற்று இறங்கி வந்து (பெரிய சமரசங்கள் செய்துகொள்ளாமல்) வாசகரைச் சேர்வதில் தவறில்லை என்பது என் கருத்து. பிரம்மராஜனின் கவிதைகளை ஊன்றிப் படிக்கும்போதும், சிலசமயம் படிமங்களின் அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு அவரது ஆங்கில பாதிப்பினால் விளைந்த நடையும் ஒரு காரணம். அவருடைய சுய அனுபவத்துக்கு மட்டுமே உட்பட்ட தனித்த படிமங்கள் மற்றொரு காரணம். அவரது கவிதைகளின சிறப்பை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், அவரது கவிதைகள் சில மோசமான ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் போன்று தோற்றம் அளிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இக்குறை நகுலன் ஆத்மாநாம் போன்றவர்களிடம் அறவே இல்லை. தமிழின் தனித்த ‘இடியம்’ பிரம்மராஜனுக்குச் சற்று பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது.
10
நுண்மைக் கவிதை (அப்ஸ்டிராக்ட் பொயட்ரி) தான் என்றாலும் சாதாரண வார்த்தைகளில் அசாதாரண அனுபவங்களைப் பிடித்து நிறுத்தும் ஆற்றல் நகுலனுக்குக் கைவந்திருக்கிறது. பழங்கவிஞரான இவரை இங்கு விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை. ‘மூன்று’, ‘ஐந்து’, ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ போன்றவை எண்பதுகளில் வெளிவந்த இவரது தொகுதிகள். செறிவும் அனுபவமும் இணைவது அபூர்வம்.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
போன்ற கவிதைகள் பன்முறை மேற்கோள் காட்டப்பட்டுப் பாராட்டப்பட்டவை.
விக்ரமாதித்தன் இந்தப் பத்துகளில் வெளிப்பட்ட கவிஞர். அவரது கவிதைகளில் எளிமை இருப்பினும், அது மிக மேலோட்டமானது. தொனிப்பொருள்கள் அற்று வெறும் கமெண்ட் அளவில் நிற்கிற கவிதை. மேலும் அவரது சமூக உணர்வற்ற வெளிப்பாடு பல கவிதைகளில் எரிச்சலைத் தருகிறது.
சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் குறிப்பிடக்கூடிய தொகுதி. வாழ்ககை மிகக் கசப்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. சுயவெளிப்பாட்டுடன் இயங்க இயலாத உலகம். எல்லா மாயத்தோற்றங்ககளையும் தோலுரித்துப் பார்ப்பதன்வழி வாழ்க்கையின் நியதியை உணரத்து£ண்டும் கவிதைகள் இவை. மிகச் சிறப்பான நவீன படிமங்கள் கவிதைகளில் இயங்குகின்றன.
பாதசாரியின் பார்வையிலும் உலகம் பிடிப்பற்றதாகவே இருக்கிறது. சாவின் மேல் ஓர் அதீத கவனம் வெளிப்படுகிறது. கல்யாண்ஜி கவிதைகளிலோ நேர்மாறாக, உலகம் சகிக்கக்கூடிய சிறுசறு அற்புதக் காட்சிகளாகக் கருக்கொள்கிறது. மிக எளிய ஆத்மார்த்தமான தொனி இவருடையது. தமிழ்க்கவிதையில் காலம்-வெளி பற்றிய பிரக்ஞை, ஆனந்த்-தேவதச்சன் கவிதைகளில் உண்டு. (அடுத்ததாக பிரம்மராஜன்). தேவதேவனின் கவிதைகள் ஒரு சமூக அக்கறையைக் காட்டினாலும் (குறிப்பாகச் சுற்றுச்சூழல், மரங்கள்) மிக நேரடியாகவும், வெறும் வசனம் என்று சொல்லத் தக்க அளவிலும் ஆழமற்று நின்றுவிடுகின்றன. (சான்று, நிகழ் 10இல் ‘ஒரு மரத்தைக் கூடக் காணமுடியவில்லை’; கனவு 5இன் நீண்ட கவிதை ‘அகழி’).
11
எண்பதுகளின் இறுதிவாக்கில் வெளிப்பட்ட இரு கவிஞர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் பழமலை; மற்றொருவர்(கள்?) பிரேதா (பிரேம்). பழமலையின் சனங்களின் கதை, கிராமப்புற மனிதர்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, சம்பாஷணைகளும் வர்ணனைகளும் இசைந்து சுகமாக வந்துவிழுவது நல்ல அனுபவம் என்றாலும், பல கவிதைகள் வசனமாகி நிற்கின்றன. மிகையுணர்ச்சி இல்லாமல் இப்படிப்பட்ட பழம்நினைவுக் காட்சிகளை வரைவது கடினம். இந்த வித்தை பழமலைக்கு நன்கு வந்திருக்கிறது. இத்தொகுதிக்குப்பின் அவர் எழுதி வரும் கவிதைகளும் நிமிர்ந்து நிற்கக்கூடிய கவிஞர் ஒருவர் உருவாகியிருக்கிறார் என்ற தெம்பை அளிக்கின்றன.
இதற்கு நேர்மாறானது பிரேமின் கவிதை. ‘கிரணம்’ முதல் இதழில் அவர் கவிதை வெளிப்பட்டபோது முற்றிலும் புதிதாக இருந்தது. அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. ஆனால் ‘கிரணம்’ பின் இதழ்களின் அக்கவிதையின் தொடர்ச்சி வெளிவந்த பின், ஒரே விஷயம் திரும்பத்திரும்ப அனுபவச் செழுமையின்றி பன்னிப்பன்னிப் பேசப்படுவதாக ஆகிவிட்டது. இன்றைய வணிகச் சமூகம் எப்படி தனிமனித ஆளுமையைச் சிதைக்கிறது என்பதை இக்கவிதை நன்றாகவே முதல் இதழில் வெளிப் படுத்தியது. பிளவுபட்ட சுயம்தான் கருப்பொருள். ஆனால் வெறும் அதிர்ச்சி மதிப்பு கள், எதிர்ப்புத்தன்மை அல்லது கலகக்குரல் இருந்தால் மட்டுமே கவிதை உருவாகிவிட முடியாது. இவரிடம் காணப்படும் இத்தகைய அதிர்ச்சித் தளமும் நவீனத்துவக் கவிதைக்குச் சான்று. இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இவரது வெளிப்பாடுகளை.
12
எண்பதுகளில் பெண் கவிஞர்கள் சிலர் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். இலங்கைப் பெண் கவிஞர்களின் தனித் தொகுதியே (‘சொல்லாத சேதிகள்’) வெளிவந்திருக்கிறது. பெண்மையின் தனித்த அனுபவங்களைப் பேசும் கவிதையாக சுகந்தி சுப்பிரமணியன் கவிதை உருக்கொண்டுள்ளது என்றாலும் ஆழமில்லை.
மொழிபெயர்ப்புக் கவிதை முயற்சிகள் எழுபதுகளைவிட இப்பத்தாண்டுகளில் மிகுதி எனலாம். மக்கள் கலாச்சாரக் கழகத்தின் சோசலிசக் கவிதைகள், ஓர் அவசர நிலைக்கால இரவு போன்றவை, பிரம்மராஜனின் உலகக் கவிதை போன்ற முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இன்னும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளும் (டி. எஸ். எலியட்டின் பாழ்நிலம் போன்றவை) கவனிக்கப்பட வேண்டியவை.
பிரம்மராஜன், எஸ்ரா பவுண்ட், டி. எஸ். எலியட் பற்றி நூல்கள் வெளியிட்டார். ஆத்மாநாம் கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டார். இவை போன்றவற்றில் காணப்படும் கவிதைக் கொள்கைகள் முக்கியமாகப் பயிலப்பட வேண்டியவை.
13
இந்தக் கவிதைகளின் பொது இயல்புகள் சில.
எண்பதுகளில் தமிழ்க்கவிதை நவீனத்துவக் கட்டத்திலிருந்து பின்நவீனத்துவக் கட்டத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளது என்று தோன்றுகிறது. எண்பதுகளுக்கு முன், தமிழ்க்கவிதை உலகில் சில ஆங்கில மாதிரிகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன. இப்போதோ உலக இலக்கியத்தின் முக்கியப் பகுதிகளின் (குறிப்பாக, சீன, ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பியக்) கவிதை மாதிரிகளும் அறிமுகமாகியுள்ளன. பல உலகக் கவிஞர்களின் கவிதைக் கோட்பாடுகளும் அறிமுகமாகியுள்ளன. உலகக் கவிதைகளின் பகுதியாகவே இன்று தமிழ்க்கவிதை உணரப்படுகிறது. எழுபதுகளின் கவிஞர்களிடம் அனுபவ வெளிப்பாடே கவிதை, சமூக முழக்கம் செறிவோடும் நுட்பத் தோடும் புதிய வழிகளல் உருப்பெறுவதே கவிதை என்பன போன்ற கொள்கைகள் இருந்தன. இவை மாறிவருகின்றன. தேர்ந்த தொழில்நுட்பம், வார்த்தையில் தேர்ச்சி நுட்பம், சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்தல் போன்றவை நவீனத்துவக் கவிதையின் இயல்புகள். இக்கவிதைகளில் ஓர் ஆசிரியனின் அறிவுச் சட்டகம் இணைப்புச் சங்கிலி யாக நிற்கும். உள்தர்க்கம், கூர்மையான படிமங்கள், ஒழுங்கு ஆகியவை நவீனத்துவக் கவிதைகளில் உண்டு. சருங்கச் சொன்னால் ஒரு மையம் உண்டு.
பின்நவீனத்துவக் கவிதைகளில் மையம் இருப்பதில்லை. பல குரல்களும், பல ‘பெர்சோனா’க்களும் ஒரே கவிதையில் வெளிப்படலாம். ஒரே நிறுவப்பட்ட அர்த்தம் என்பதற்கில்லை. அவரவர் வாசிப்புப் பழக்கத்திற்கும் அனுபவக் களத்திற்கும் ஏற்றாற் போல அர்த்தம் வெவ்வேறாகலாம்.
சில பின்நவீனத்துவவாதிகளிடம் பாப் கலாச்சாரத்தை ஏற்கும் தன்மையும், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றலும் உண்டு. ஆனால் தமிழ்க்கவிஞர்கள் அப்படி இல்லை. இதேபோல ஒரு குறித்த பிரதேசக் கலாச்சாரத்தோடு இணைத்துக்கொண்டு அதில் தன்னை வைத்துப் பார்க்கும் மரபும் சிலரிடம் உண்டு.
பின்நவீனத்துவக் கவிதையில் கவிதை என்பது ஒரு கட்டமைப்பு, ஒரு பிரதி என்றே பார்க்கப்படுகிறது. ஒரே கவிதையில் ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைபாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு. அவ்வளவுதான். அவற்றுக்குள் தொடர்புச் சங்கிலிகள் இருக்கலாம், இல்லா மலும் போகலாம்.
“நவீன கவிதைகளில் வெளிப்பொருளைக் குறித்தல் என்பது இல்லவே இல்லை” என்கிறார் ஆக்டேவியா பாஸ். அதாவது கவிதை, வேறெதையும் குறிக்கவில்லை, தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம், வார்த்தைகளில் உண்டாவ தல்ல; வார்த்தைகளுக்கிடையில் உள்ள இடைவெளிகளில் தோன்றுவது. மொழிக்கும் அனுபவத்திற்கும் பெரும் இடைவெளி இருப்பதால் செத்துப்போன, பழகிப்போன பாஷையின் உடைபாடுகளிலிருந்து வேறொரு புதிய பாஷையைத் தோற்றுவிப்பது அவசியமாகிறது. இதைத்தான் கவிஞன் செய்ய முற்படுகிறான்.
மொழியின் கூறுகள் யாவும் தன்னிச்சையானவை. எனவே அவற்றிற்கும் யதார்த்தத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. இவ்விதப் புதிய கவிதை, எழுத்துப்பிரதிக்கு வெளியே ஒரு சமூகம், கலாச்சாரம், வரலாறு போன்றவற்றைச் சார்வதற்கு பதிலாகத் தன்னையே மையப்படுத்தித், தன்மேலேயே சாரும் கவிதை. எதெல்லாம் கவிதை இல்லையோ, எலை இல்லையோ, அற்றயும், விளம்பரங்கள், ஸ்லோகங்கள் போனறவற்றையும்கூட இக்கவிதை தன் உணர்த்தலுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்கிறது. வழக்கமான அலங்காரப்படுத்தல், படிமமாக்கல், சந்தம் ஆகியவற்றைப் புறக்கணிக்கிறது. இதைத்தான் எதிர்க்கவிதை என்று பிரம்மராஜன் குறிப்பிடுகிறாற்போல் தோன்றுகிறது. கவிதைச் செயல்முறை, அதன் விளைவைவிடப் பிரதானமாகிறது. ஓர் அர்த்தத்தைத் தேடும் நிலையே அர்த்தமற்றதாகவும், இதுவே மனித வாழ்க்கையின் அர்த்தமின்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.
முழுவதும் பின்நவீனத்துவக்கூறுகளை ஏற்றதாகத் தமிழ்க்கவிதை இன்னும் மாறவில்லை. முற்றிலும் மையமிழந்த புதிய மாதிரிக் கவிதையை பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் தொகுதியில்தான் காணமுடிகிறது. அவருடையதும் சமூகச் சார்புடைய கவிதையே. என்றாலும் அந்நியப்பட்ட தன்மை மிகுதி. நம் சமகாலக் கவிதை, வெகுஜனக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை மறுத்தால் தீவிரக் கவிஞன், சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டே ஆகவேண்டும். (பாட்டெழுதுவோர், இதற்கு மாறாக ஆளும் கலாச்சாரத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.) எந்த நல்ல எழுத்தாள னும் இன்று தன் வேர்களுக்குத் திரும்பவியலாது. ஆகவே இன்றைய கவிதைகள் கையாளும் கருப்பொருள்கள் ஒரே ஒரு பொதுநிலையில் அடங்கும். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் செயற்படுதலுக்கும் தனது எழுதுதலுக்கும் இடையிலான இழுவிசையைத் தன் கலைக்கு மூலப்பொருளாக ஒவ்வொரு கவிஞனும் பயன்படுத்துதல் என்ற நிலை. நவீனத்துவக் கலைஞர்கள் வரலாற்றை மறுப்பவர்கள். அது அவர்களுக்கு மீட்கப்பட வேண்டியது. ஆனால் பின்நவீனத்துவக் கவிஞர்கள் வரலாற்றை மதிப்பவர்கள். வரலாறு ஒருவகையில் அர்த்தமற்றது. ஏனெனில் அதுதான் இன்றைய நெருக்கடிக்கும் அவநம்பிக்கைக்கும் மனிதனை ஆளாக்கி யிருக்கிறது. காலனிய எச்சம்தான் வரலாறு. அது களையப்படவேண்டியது.
இருப்பினும் பின்நவீனத்துவக் கவிஞர்கள் சிலர் உலகில் நம்பிக்கை எஞ்சியிருப் பதாகவே காண்கின்றனர். அரசியல் பிரக்ஞையை உயர்த்துவதன் மூலம் இது நடக்கலாம். ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் எற்பட்ட மாற்றங்களைக் கண்டும் இந்த நம்பிக்கை மாறவில்லை. இலங்கைக் கவிதை இந்தத் திசையில்தான் செல்லுகிறது. இலங்கைக் கவிஞர்களும் நவீனத்துவ நடையைக் கையாள்பவரே ஆயினும், அவற்றைத் திறந்த அமைப்புடனோ பின்னமாகிச் சிதைவில் நிறையவோ விடுவதில்லை. சில குறிபபிட்ட படிமங்கள் அல்லது பார்வைக் கோணங்கள் வாயிலாகத் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்திவிடுகின்றன. இதனால் பிரம்மராஜன் போன்றோரது தமிழ்க்கவிதையைக் காட்டிலும் இலங்கைக் கவிதை நமக்கு நெருங்கிய தாகத் தோன்றுகிறது. அந்த மாதிரியைச் சிலர் பின்பற்றவும் தொடங்கியுள்ளனர். இதேபோல் முடியதொரு, ஆனால் நவீனத்துவ அமைப்பில்தான் இன்று பெரும் பாலான மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கிடைக்கின்றன.
தமிழ்க்கவிதை நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்கான பயணத்தில் புகுந்திருக்கிறது. இந்த இயக்கம் தமிழுக்கு எந்த அளவு நன்மை பயக்கும்? மாற்றங்கள் தவிர்க்கமுடியாத உலகு இது. விரும்பாமற்போனாலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனினும் மாற்றங்கள் பற்றிப் பலகருத்துகள் நிலவுவது இயற்கை. இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாணி மாறாத செய்யுளாக்கங்கள், வெறும் அழகுறுத்தல்கள், இவையே பெருமளவு கவிதையென பவனிவரும் தமிழில் பின்நவீனத்துவக் கவிதை எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படும்?
இன்று “வாழ்க்கை என்பது முடியப்படாது தொங்கும் முனைகளைக் கொண்டது” என்றார் நிசிம் எசகியேல். இத்தகைய வாழ்வில், அர்த்தம் அல்லது உணர்ச்சி அல்லது இணைப்பிழைகள் என ஏதுமின்றி, வெறும் பிரதிமேல் கவனம் செலுத்தும் கவிதை பிறப்பதே இயல்பு.
ஆனால் எல்லாவற்றையும் கட்டழித்தாலும் சார்வதற்கு ஏதேனும் ஒன்று இருந்தே தீரவேண்டும். நவீனத்துவக் கவிதை-ஏதேனும் ஒரு மையத்தைக் கொண்டு நிற்பது-தன் இருப்புக்குக் கடவுள், கலாச்சாரம், அறவியல் பிரக்ஞை என ஏதோ ஒன்றை நம்பியிருப்பதே நம்பிக்கையூட்டுவது என்று பலர் கருதலாம். மேலும் நவீனத் துவக் கவிதையை ஏற்பதே இன்று தமிழில் உடனடியாக நிகழவேண்டியது. பல்கலைக் கழகங்களில் இன்று நல்ல கவிதை பெரும்பாலும் உட்புகவில்லை. அதறகுள் மையமற்ற கவிதைகள் பலரை பயமுறுத்தலாம். இன்று ஒரு நல்ல தொகுப்பு வரவேண்டியதற்கான உடனடித் தேவை இருக்கிறது. ஆனால் தரவித்தியாசமற்ற தொகுப்புகள் அந்தத் தொகுப்பின் தேவையையே தோற்கடித்துவிடும். அதில் தவறாகச் சேர்க்கப்பட்ட நல்ல கவிதைகளின் மதிப்பையும் அழித்துவிடும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிடம் இத்தகைய ஆக்கப்பணிகளை எதிர்பார்க்கும் காலம் இன்னும் வரவில்லை. இவ்வகையில் க்ரியா வெளியிட்ட பதினொரு ஈழக் கவிஞர்கள் தொகுப்பு கவனத்தில் வைக்கவேண்டியது.