இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி முக்கியமானது. நெல்லிலிருந்து அரிசி குற்றும்போது உமி கிடைக்கிறது. ஆசியாவில் உற்பத்தியாகும் 770 மில்லியன் டன் உமியில் 120 மில்லியன் டன் இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. உமியின் வர்த்தகப் பயன்பாட்டை விவசாயிகள் அறியாததால் இது வேளாண் கழிவாகக் கருதப்படுகிறது. உமியை எரிப்பது, அல்லது குப்பைக் கழிவாகக் கொட்டுவது என்ற நடைமுறையே உலகில் நிலவுகிறது. உமியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. பருவநிலை கெடுவதற்கு இது காரணமாகிறது. உமியைத் திறந்தவெளியில் கொட்டினால், அல்லது குவித்துவைத்தால், பொது சுகாதாரம் கெடுகிறது.
உமியை வீணடிப்பதற்குப் பதிலாக கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தலாம்.
# உயிர்த்திரள் ஆற்றலை ( biomass power) உற்பத்தி செய்யும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்க உமியைப் பயன்படுத்தலாம்.
# உமியைத் தாவரங்களின் அடிப்பகுதியில் குவித்து வைத்தால் களைகள் உருவாவதைத் தடுப்பது, மண்ணின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைக் குறைப்பது போன்ற நன்மைகள் கிட்டும். அவை சிதைவடையும்போது மண் வளம் செழிக்கும்.
# உமியை வைத்து உயிரி-எதேனால் (bio-ethanol) தயாரிக்க முடியும். உயிரி-எத்தனால் எதிர்காலத்திற்கான மாற்று எரிபொருட்களில் முக்கியமானது. உமியிலிருந்து செலவு அதிகமின்றி உயிரி-கார்பன் தயாரிக்க முடியும். கழிவுநீர் சுத்திகரிப்பில் இந்தக் கார்பனைப் பயன்படுத்த முடியும். உமியைப் பல்வேறு வாயுக்களாக மாற்றும்போது கார்பன் மானாக்சைட், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய மூன்றையும் சமையல் வாயுவுக்கு மாற்றான எரிபொருட்களாகப் பயன்படுத்த முடியும்.
உமிச் சாம்பலின் பயன்கள் :
# உமியின் சாம்பலில் கணிசமாக உள்ள கார்பனிலிருந்து திறன்சேர் கரி (activated charcoal) தயாரிக்க முடியும்.
# உமிச் சாம்பலிலிருந்து பொசோலனா சிமெண்ட் தயாரிக்க முடியும். வர்த்தக சிமெண்ட் துகளின் அளவு 35 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது 1/1000 மில்லிமீட்டர் ) இருக்கும். பொசோலனா சிமெண்ட் துகளின் அளவு 25 மைக்ரான்கள்தான். கான்க்ரீட் இடைவெளிகளை நிரப்ப வர்த்தக சிமெண்டைவிட பொசோலனா சிமெண்ட் மேலானது. மலிவானதும் கூட
# எஃகுத் தொழிலில் சூடான செங்கற்கள் (furnace bricks) தயாரிக்க உமிச்சாம்பல் பயன்படுகிறது. இந்த செங்கற்கள் 1450 டிகிரி சென்டிகிரேட் வரை உள்ள மிக அதிக வெப்பநிலையைக் கூடத் தாக்குப் பிடிக்க முடியும்.
# சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உமிச்சாம்பலைப் பயன்படுத்த முடியும். மின்சாரத்தின் உதவியின்றி உமிச் சாம்பலைப் பயன்படுத்தி அசுத்தமான குடிநீரைச் சுத்திகரிக்க முடியும். உமிச் சாம்பலைப் பயன்படுத்தி வளர்ப்புப் பிராணிகளுக்குப் படுக்கைகள் தயாரிக்க முடியும். உமிச்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, சல்பர் டையாக்சைடை உறிஞ்சக்கூடியது. அதை நிலக்கரி கொதிகலனில் கந்தகநீக்கியாகக் பயன்படுத்த முடியும்.
பூமி சூடேறுவதைத் தடுக்க இன்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டத்தில் இருக்கும் நமக்குப் பசுமை ஆற்றலைப் பெறுவதற்கு உமியும் அதன் சாம்பலும் கைகொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதிகம் செலவு வைக்காத எளிதில் கிடைக்கும் இப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வோம்.
(ஆதாரம் : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் அனு பிரியா மின்ஹாஸ், டாக்டர் சஞ்சீவ்னா குமாரி எழுதிய கட்டுரை, தமிழில் பேரா. ராஜு, நன்றி முதுவை ஹிதயத்)