அநேகமாக எல்லா நகர்ப்புறப் பிள்ளைகளும் ஆங்கில (அதிலும் பெரும்பாலும் சிபிஎஸ்இ) வழிக்கல்வி பெறும் நாளாகிவிட்டது. (என் வீட்டு வேலைக்காரியின் பேரன் பேத்தி மகரிஷி பள்ளியில் படிக்கின்றனர்.) ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அந்நியரைக் குறிக்கத் தெரிந்த உறவுச் சொற்கள் இரண்டே இரண்டுதான்—அங்கிள், ஆண்ட்டி. எட்டுவயதுக் குழந்தை எழுபது வயதுக் கிழவனான என்னைப் பார்த்து அங்கிள் என்றும், 67 வயதான என் மனைவியைப் பார்த்து ஆண்ட்டி என்றும் விளிக்கும்போது தமாஷாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் தாத்தா வயது என்னை விட மிகக் குறைவு. வேறுவிதமாக விளிக்க அவர்களுக்குத் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை. நன்மங்கலத்தில் ஒரு பையனை “என்னை அங்கிள் என்று கூப்பிடாதே, தாத்தா என்று கூப்பிடு” என்று சொன்னதற்கு அவன் தாத்தாவிடம் ஏதோ போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விட்டான். அதிலிருந்து எப்படியோ போய்த் தொலையட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
எங்கள் காலனியில் ஒரு எல்கேஜி குழந்தையை பஸ்ஸில் கொஞ்சம் தொலைவில் இறக்கிவிட்டுவிட்டார்கள். வீடு தொலைவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டிருந்த பைக்-காரன் ஒருவன் அவள் கழுத்து செயினைத் திருடிக் கொண்டு போய்விட்டான். (நல்லவேளை, வேறு எதுவும் செய்யவில்லை.) அது அழுதுகொண்டே வந்து, “அந்த பைக் அங்கிள் செயின் எடுத்துப் போய்ட்டா” என்றது. திருடனுக்கு வந்த மரியாதை!