உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.  

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.   

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.  

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”   

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”       

இலக்கியம்