ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 3
கிரியோன்: தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸ் என்மேல் குற்றச்சாட்டுகளை மழையாகப் பொழிந்து வருகிறான். இவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கநான் கோழை அல்ல. என் கௌரவம் பாதிக்கப்படும்போது கத்தி உறையில் உறங்கிக் கொண்டிருக்காது. அரசுக்கு, சக மனிதர்களுக்கு, என் நண்பர்களுக்கு, நான் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.
பா.கு.தலைவன்: இவை கோபத்தில் சொன்னதாக இருக்கலாம். உதட்டிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள். உள்ளத்திலிருந்து அல்ல.
கிரியோன்: பூசாரியைப் பொய்சொல்லச் சொன்னது நான் என்று ஈடிபஸ் குற்றம் சாட்டியது உங்கள் காதில் விழவில்லை?
பா.கு.தலைவன்: விழுந்தது. ஆனால் அது கடுமையாகச் சொல்லப்பட்டதல்ல.
கிரியோன்: அவன் கண்களை நீ கவனித்தாயா? குழப்பத்தில் தவித்துக்கொண்டு பைத்தியக்காரன் போல் இல்லையா?
பா.கு.தலைவன்: தெரியவில்லை. பெரியோர்களின் நடத்தையை எடைபோடக்கூடிய தகுதி எனக்கில்லை. அதோ அரசர் வருகிறார்.
(ஈடிபஸ் நுழைகிறான்)
ஈடிபஸ்: திரும்பி இங்கே நுழைய உனக்கு என்ன தைரியம்? கொலைகாரா! வெட்க மில்லாமல் என் வீட்டுக்கு வருகிறாய். சதி செய்து என்னைக் கொன்று அரியணையை நீ கைப்பற்ற நினைப்பது எனக்குத் தெரியாதா? உன் மாய்மால ஜாலங்களைப் புரிந்து கொள்ளாமல் போக நான் என்ன மடையனா? என்னால் அரியணைகளை வெற்றி கொள்ளமுடியும். விலைக்கு வாங்கவும் முடியும். உன்னால் இந்த இரண்டுமே முடியா தவை.
கிரியோன்: நீ பேசி முடித்துவிட்டாய் அல்லவா? நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உண்மை என்ன என்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.
ஈடிபஸ்: நன்றாகப் பேசுகிறாய். ஒரே ஒரு உண்மைதான் உண்டு. அதை உன் போன்ற எதிரியிடமிருந்து அறிந்துகொள்ள முடியாது.
கிரியோன்: இதை நான் அல்லவா சொல்ல வேண்டும்!
ஈடிபஸ்: என் குற்றச்சாட்டை உன்னால் மறுக்கவியலாது.
கிரியோன்: அறிவுக்கு எதிராகப் பிடிவாதமாக இருப்பது என்று தீர்மானித்துவிட்டாய்.
ஈடிபஸ்: உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாம், ஆனால் தண்டிக்கப்படக்கூடாது என்று நினைத்தால் நீ முட்டாள்.
கிரியோன்: சரியாகச் சொல், நான் என்ன துரோகம் செய்தேன்?
ஈடிபஸ்: அந்த சூனியக்காரப் பூசாரியை அழைத்துவந்தாய்.
கிரியோன்: ஆம், அவர் வந்தது நல்லதுதான்.
ஈடிபஸ்: சரி, இப்போது லேயஸ் பற்றிச் சொல். லேயஸ் எப்போது…..?
கிரியோன்: லேயஸ் பற்றி இப்போது எதற்கு?
ஈடிபஸ்: லேயஸ் மறைந்துபோய் எவ்வளவு நாளாகிறது?
கிரியோன்: நீண்ட நெடுங்காலம்.
ஈடிபஸ்: இந்தப் பூசாரி அப்போதும் இருந்தானா?
கிரியோன்: இருந்தார், அப்போதுமே பெருமை மிக்க ஞானியாய்.
ஈடிபஸ்: அப்போது என்னைப் பற்றி அவன் என்ன சொன்னான்?
கிரியோன்: எதுவுமே சொல்லவில்லை. அதுவும், என்னிடம்.
ஈடிபஸ்: லேயஸ் இறப்புப் பற்றி நீ ஒரு விசாரணை நடத்தினாயாமே?
கிரியோன்: ஆனால் அதில் ஒன்றும் தெரியவரவில்லை.
ஈடிபஸ்: என்னைப் பற்றி அப்போது எதுவும் பேசாத பூசாரி, இப்போது மட்டும் ஏன் உளறுகிறான்?
கிரியோன்: தெரியாது. நான் தெரியாத விஷயங்களில் தலையிடுவதில்லை.
ஈடிபஸ்: உனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும், அதை மட்டும் சொல்லிவிடு.
கிரியோன்: என்ன அது? எனக்குத் தெரிந்த விஷயம் உனக்கும் உரியதுதான்.
ஈடிபஸ்: அந்தப் பூசாரி உன்னைச் சேர்ந்தவன் இல்லை என்றால், லேயஸைக் கொன்றவன் நான் என்று குற்றம் சாட்டமாட்டான்.
கிரியோன்: அப்படி அவர் சொல்வதன் நியாயம் உனக்குத்தான் தெரியும், என்னைவிட. இப்போது நான் சில கேள்விகளைக் கேட்கலாமா?
ஈடிபஸ்: கேள், நான் ஒன்றும் கொலைகாரன் இல்லை.
கிரியோன்: அப்படியானால், இதோ என் கேள்விகள். நீ என் சகோதரியை மணந்தாய் அல்லவா?
ஈடிபஸ்: உண்மைதான்.
கிரியோன்: அவளோடு சேர்ந்து இந்த நாட்டை ஆள்கிறாய் அல்லவா?
ஈடிபஸ்: அவளது தேவைகளுக்கு நான் என்றுமே குறைவைத்ததில்லை.
கிரியோன்: இந்த நாட்டில் உனக்கும் அவளுக்கும் அடுத்தநிலையில் இருப்பவன் நான்தானே? பிறப்பால், தகுதியால், உங்களிருவருக்கும் சமமானவன்தானே? சந்தேகமில்லையே?
ஈடிபஸ்: அதனால்தான் நீ சதிகாரன் ஆனாய் என்கிறேன்.
கிரியோன்: இல்லை. எனது கோணத்திலிருந்து சற்றே சிந்தித்துப் பார். என்னைப்போல் சக்திபடைத்தவன் எவனாவது பதவி வெறிபிடித்து, து£க்கத்தை இழப்பதற்கு அலைவானா? எனக்கு உன்னளவு மதிப்பும் அதிகாரமும் உள்ளது. ஆனால் பொறுப்புகள் எதுவுமே இல்லை. நான் ஏன் உன்னை அழிக்கவேண்டும்? பொறுப்புகளற்ற, தொல்லை கலவாத இன்பம் எனக்கிருக்கிறது. நான் பைத்தியக்காரனல்ல, அவற்றை இழக்க.
இப்போதுள்ளதைவிட, எனக்கு கௌரவங்கள் எதுவும் தேவையில்லை.
என்னை யாவரும் போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள்.
உன்னிடம் காரியம் ஆகவேண்டியவர்களும் என்னையே அணுகுகிறார்கள்.
இந்தக் கவலையற்ற இன்பத்தைவிட்டு, அரசனாகி, உன்போல் அவதிப்படவா விரும்பு வேன் நான்?
மேலும் ஒன்று – தெளிந்த உள்ளம் தீமை செய்யாது. நான் கலகக்காரனல்ல.
நான் சொல்பவற்றை நீ வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்.
டெல்ஃபியின் செய்தியை நான் சரியாகத்தான் தந்தேனா என்று கேட்டுக்கொள்.
டைரீசியஸுடன் சேர்ந்து சதிசெய்ததாக ருசுவானால், எனக்கு மரண தண்டனையே விதி. ஆனால் அதற்குமுன் சான்றுகளோடு நிரூபி.
நல்லவர்களைப் புரிந்துகொள்ள நாட்கள் பல ஆகும். சதி புரிபவர்கள் இரண்டொரு நாட்களில் பிடிபடுவார்கள்.
பா.கு.தலைவன்: நன்றாகச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவெடுப்பது புத்திசாலித் தனமல்ல.
ஈடிபஸ்: ஈடு இணையற்ற இரட்டை வேடம். இவன் என்னைவிட்டுத் தொலைந்தால் நல்லது. இங்கு நின்று என் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள வேண்டுமா?
கிரியோன்: சரி, உனக்கு என்னதான் வேண்டும்? என்னை நாடுகடத்த வேண்டுமா?
ஈடிபஸ்: இல்லை, எனக்குத் தேவை உன் மரணம். ராஜத் துரோகத்தின் பரிசு என்ன என்று மக்கள் அறியவேண்டும்.
கிரியோன்: என்மேல் நம்பிக்கை இல்லையா?
ஈடிபஸ்: எதற்காக நம்புவது உன்னை?
கிரியோன்: அப்படியானால் நீ ஒரு முட்டாள். நியாயம் என்பதை நினைத்துப் பார்க்காதவன்.
ஈடிபஸ்: பரவாயில்லை. ஆனால், நீ தீமையின் முழுவடிவம்.
கிரியோன்: நீ சொல்வது தவறாக இருந்தால்?
ஈடிபஸ்: அப்போதும் அரசன் நான்தான்.
கிரியோன்: மோசமாக ஆட்சிசெய்பவனை விலக்கிவிடலாம்.
ஈடிபஸ்: ஐயோ, இது என் நகரம். நகரம் என்னவாகும்?
கிரியோன்: இது என்னுடைய நகரமும்தான்.
பா.கு.தலைவன்: மேன்மை தாங்கிய அரசர்களே! சற்று அமைதியாக இருங்கள். அரசி ஜொகாஸ்டா அந்தப்புரத்திலிருந்து வருகிறாள். உங்களிருவரையும் தேடித்தான். உங்கள் சண்டை அவளால் தீரும்.
(ஜொகாஸ்டா வருகிறாள்)
ஜொகாஸ்டா: அறிவு குழம்பிய மனிதர்களே! இதென்ன கூச்சலும் குழப்பமும்? நம் தீப்ஸ் நாட்டை நரகம் விழுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, சொந்தப் பிரச்சினைக் காகச் சண்டையும் சச்சரவும்!
(ஈடிபஸிடம்) வா, உள்ளே போகலாம்.
(கிரியோனிடம்) கிரியோன், நீ போ. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இப்படி ஒரு உலக மகா யுத்தம் வேண்டாம்.
கிரியோன்: ஒன்றுமில்லாததா? சகோதரி, உன் கணவன் என்னை நாடுகடத்த அல்லது சாகடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.
ஈடிபஸ்: பெண்ணே, அவன் சொல்வது சரிதான். என்னைக் கொலைசெய்யும் முயற்சி யில் அவன் பிடிபட்டுச் சரியாக மாட்டிக்கொண்டிருக்கிறான்.
கிரியோன்: இல்லை, உண்மையில் உனக்கு நான் கெடுதல் நினைத்திருந்தால் எனக்குக் கொடுமையான சாவு வரட்டும்!
ஜொகாஸ்டா: ஈடிபஸ், இவனை நம்பு. இவன் இட்ட சத்தியத்தை நம்பு. எனக்காக, இந்த மக்களுக்காக.
பா.கு.தலைவன்: மன்னா, உன் அரசி சொல்வதைக் கேள். உன் மனத்தை அவளுக்குச் சொல்.
ஈடிபஸ்: நான் இப்போது என்னதான் செய்ய?
பா.கு.தலைவன்: கிரியோனை மதி, நம்பு. அவர் என்றும் முட்டாள்தனமாகப் பேசிய தில்லை. இப்போதோ சத்தியமே செய்திருக்கிறார்.
ஈடிபஸ்: நீங்கள் கேட்பதன் விளைவென்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
பா.கு.தலைவன்: தெரியும்.
ஈடிபஸ்: அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
பா.கு.தலைவன்: இந்த அளவு சத்தியம் செய்யும் நண்பனை, வெறுப்பினால், ஆதாரமின்றி, தண்டிக்கலாகாது.
ஈடிபஸ்: உங்கள் இந்த முடிவு, எனக்குத் தீமையைத்தான் உண்டாக்கும்.
பா.கு.தலைவன்: உனக்கு நாங்கள் தீமை நினைத்தால் வானில் எரியும் கதிரவன் சாட்சியாக நாங்கள் அழிந்துபோவோமாக! தீப்ஸ் நாட்டு வறண்ட நிலங்கள் எங்கள் உள்ளங்களை வலிவிழக்கச் செய்திருக்கின்றன. இப்போது உங்கள் இருவர் கெட்ட ரத்தமும்.
ஈடிபஸ்: சரி, போகட்டும். உங்கள் வருத்தத்திற்காக அவனை நான் விட்டுவிடுகிறேன். சாக வேண்டுமெனில் நானே சாகிறேன். அல்லது தீப்ஸை விட்டுப் போகிறேன். உங்கள் வருத்தமே அவனது பேச்சைவிட என்னை பாதிக்கிறது.
கிரியோன்: கோபத்தில் கோரம். விட்டுக்கொடுப்பதில் அதைவிட மகா கோரம்.
ஈடிபஸ்: இங்கிருந்து போகிறாயா, இல்லையா?
கிரியோன்: உனக்குத்தான் உண்மை தெரியவில்லை. இந்த நகரம், இந்த மக்கள் என்னை நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் நான்நேர்மையானவன். நீ மட்டும்தான்….
(கிரியோன் போகிறான்)
பா.கு.தலைவன்: அரசியே, நீ ஈடிபஸை உள்ளே போகச் சொல்லவில்லையா?
ஜொகாஸ்டா: முதலில் என்ன நடந்தது இங்கே என்று சொல்லுங்கள்.
பா.கு.தலைவன்: சாட்சியங்களின்றி, மனத்தில் சந்தேகம். முடிவு, பொய்யான குற்றச் சாட்டுகள்.
ஜொகாஸ்டா: இருவர் பக்கத்திலுமா?
பா.கு.தலைவன்: இருவர் தரப்பிலும்தான்.
ஜொகாஸ்டா: என்ன பேசிக்கொண்டார்கள்?
பா.கு.தலைவன்: நடந்தது நடந்துபோயிற்று. நாம் பட்ட துன்பங்கள் போதாதா?
ஈடிபஸ்: இந்த உங்கள் அமைதி எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது நாட்டை?
பா.கு.தலைவன்: நாங்கள் உன்னை மதிக்காவிட்டால் எங்களைப் பைத்தியங்கள் என்றே கருதவேண்டும். முன்பு ஒருமுறை புயல்வீசியபோது உன் வலிமை எங்களைக் காப்பாற்றியது. இப்போதும் அடிக்கும் புயலிலிருந்து எங்களைக் காப்பாற்று.
ஜொகாஸ்டா: கடவுள் சாட்சியாக எனக்குச் சொல், ஈடிபஸ். ஏன் இந்த ஏராளமான கோபம்?
ஈடிபஸ்: இந்த ஜனங்கள்மேல் நம்பிக்கை வைத்துப் பயனில்லை. நீ ஒருத்திதான் என் நம்பிக்கைக்கு உரியவள். அதனால் சொல்கிறேன். கிரியோன் எனக்கு எதிராகச் சதி செய்கிறான்.
ஜொகாஸ்டா: விளக்கமாகச் சொல்லேன்.
ஈடிபஸ்: லேயஸைக் கொன்றவன் நான் என்று பழிபோடுகிறான்.
ஜொகாஸ்டா: ஆதாரம் இருக்கிறதா? அல்லது வெறும் செவிவழிச் செய்திதானா?
ஈடிபஸ்: யாரோ ஒரு பாழும் பூசாரியைக் கொண்டுவந்து ஏதோ ஒரு கதைகட்டுகிறான்.
ஜொகாஸ்டா: அமைதியாக இரு ஈடிபஸ். இதற்கு அலட்டிக்கொள்ளாதே. ஜோசியத் துக்கு அவ்வளவு மதிப்பு ஒன்றும் இல்லை. பலவேளைகளில் ஜோசியம் பொய்தான். ஓர் ஆதாரம் சொல்கிறேன் கேள்.
லேயஸுக்கு அசரீரி ஒன்று கேட்டது. தனது மகனாலேயே கொல்லப்படுவான் என்று. ஆனால் நடந்தது என்ன?
லேயஸ் ஒரு முச்சந்தியில் யாரோ முகம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார். அவரது குழந்தையோ பிறந்த மூன்றாம் நாளே கணுக்கால்களில் துளையிடப்பட்டு தனியாக மலைப்பகுதியில் சாகுமாறு விடப்பட்டது.
ஆக, அப்போலோ சொன்ன மாதிரி, அசரீரி சொன்ன மாதிரி, தன் குழந்தையால் லேயஸ் இறக்கவில்லை. இதுதான் ஜோசியம், இதுதான் பூசாரியின் தகுதி!
இவர்களுக்குப் போய் நாம் பயப்படவேண்டாம். கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்ச வேண்டும்.
(ஈடிபஸை உற்றுநோக்கி) ஆமாம், ஏன் இப்படி முகம் வியர்க்கிறாய் நீ?
ஈடிபஸ்: இரு இரு. நிழலாடும் ஏதோ நினைவுகள் என்னை வழிமறிக்கின்றன. நீ இப்போது சொன்னவை என் இதயத்தை உறைய வைக்கின்றன.
ஜொகாஸ்டா: எந்த நினைவுகளைச் சொல்கிறாய் நீ, ஈடிபஸ்?
ஈடிபஸ்: லேயஸ் மூன்று சாலைகள் கூடுமிடத்தில்-முச்சந்தியில் கொல்லப்பட்டார் என்றா சொன்னாய்?
ஜொகாஸ்டா: ஆம், அப்படித்தான் மற்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அதுதானே எனக்குத் தெரியும்?
ஈடிபஸ்: இது நடந்தது எங்கே?
ஜொகாஸ்டா: அந்த இடத்தை ஃபோகிஸ் என்கிறார்கள். டெல்ஃபிக்கும் டாலியாவுக்கும் தீப்ஸ் நகரச் சாலை பிரியும் இடம்.
ஈடிபஸ்: எப்போது நடந்தது?
ஜொகாஸ்டா: நீ இங்கு வந்து அரியணையில் அமர்வதற்குக் கொஞ்சகாலம் முன்னால்.
ஈடிபஸ்: ஆஹா, கடவுள் பின்னும் வலை விநோதமானது.
ஜொகாஸ்டா: நீ ஏன் அதற்கு வருத்தப்படுகிறாய், ஈடிபஸ்?
ஈடிபஸ்: இரு இரு சொல்கிறேன். கொலை நடந்தபோது அவருக்கு என்ன வயது? பார்க்க எப்படி இருப்பார் அவர்?
ஜொகாஸ்டா: நல்ல உயரம் அவர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையில் வெள்ளைமுடி தோன்றியிருந்தது. உருவத்தில் உனது சாயலும் இருந்தது.
ஈடிபஸ்: எனது அறியாமைக்காக நான் சபிக்கப்பட வேண்டும்!
ஜொகாஸ்டா: என்ன என்னவோ பேசுகிறாயே, உன்னைப் பார்க்கவே என் உடல் நடுங்குகிறது அரசே!
ஈடிபஸ்: குருட்டுப் பூசாரி குருடன் இல்லையென்று தோன்றுகிறது. எனக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியவேண்டும்….
ஜொகாஸ்டா: என்ன தெரியவேண்டும்? என்றாலும் நீ கேட்பது பயமாக இருக்கிறது.
ஈடிபஸ்: லேயஸுக்குப் பாதுகாப்பாக எத்தனைபேர் சென்றார்கள்? கொஞ்சம் பேர்தானா?
ஜொகாஸ்டா: ஐந்துபேர் போனார்கள். அதில் ஒருவன் தண்டோரா போடும் அறிவிப்பாளன். தன் ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றார் அவர்.
ஈடிபஸ்: ஐயோ, எனக்கு இப்போது புரிகிறது எல்லாம். இப்படி நடந்த செய்தி உனக்கு எவ்வாறு கிடைத்தது?
ஜொகாஸ்டா: தப்பிவந்த சேவகன் ஒருவனால். தப்பிவந்தது அவன் ஒருவன்தான்.
ஈடிபஸ்: இன்னும் அவன் இங்கு இருக்கிறானா?
ஜொகாஸ்டா: நீ அரசனாகப் பதவி ஏற்ற சமயம்தான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. உன்னைப் பார்த்துவிட்டு அவன் என்னிடம் ஓடிவந்தான். என் கைகளைப் பற்றி அழுதான். தன்னை எங்காவது தொலைது£ரத்திற்கு அனுப்பிவிடுமாறு மன்றாடி னான். நானும் கருணையினால் அவன் கேட்டதை நிறைவேற்றினேன்.
ஈடிபஸ்: அவனை இப்போது உடனே அழைக்கமுடியுமா?
ஜொகாஸ்டா: முடியும். ஆனால் எதற்காக?
ஈடிபஸ்: எதையும் யோசிக்காமல் நான் என்னென்னவோ செய்திருக்கிறேன். அவனோடு கொஞ்சம் பேசவேண்டும்.
ஜொகாஸ்டா: உனக்குத் தேவையென்றால் வரச்சொல்கிறேன். ஆனால் உனது பயம் என்ன? எனக்குச் சொல்லக்கூடாதா?
ஈடிபஸ்: உன் உரிமையல்லவா அது? ஆனால் இப்போது தீய சகுனங்கள் புலப்படு கின்றன. நான் மனக்கிளர்ச்சியின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறேன். யாரோடாவது நான் பேசித் தெளிவு பெற்றாகவேண்டும்.
காரிந்த் அரசர் பாலிபோஸ் என் தந்தை. தாய் டோரிய இனம். மெரோபே என்று பெயர். ஒருநாள் ஒரு விசித்திரம் நடந்தது. என் அரண்மனை விருந்தில் ஒரு குடிகாரன், “நீ உன் தந்தையின் மகன் அல்ல” என்று ஏளனம் செய்தான். கோபம் குமுறும் நெஞ்சத்தோடு என் பெற்றோர்களை இதுபற்றிக் கேட்டேன்.
“போடா முட்டாள்!” என்று கேலி செய்தார்கள் என்னை.
எனினும் மனதின் ஒரு மூலையில் இந்தச் சந்தேகம் உறுத்திக்கொண்டே இருந்தது. கொந்தளிப்பு அடங்காமல் ஒருநாள் டெல்ஃபி கோயிலுக்குச் சென்றேன். என் கேள்விக்குப் பதில் சொல்லாத கடவுள், அந்த அசரீரி, வேறு எதையோ உளறிக்கொட் டிற்று. “என் தந்தையை நானே கொல்வேன்….” “என்னுடைய தாயுடன் நான் மலர் மஞ்சத்தைப் பகிர்ந்துகொள்வேன்…” “எவரும் வெறுக்கும் பிள்ளைகளைப் பெறு வேன்…,” இப்படி.
ஜொகாஸ்டா: அப்புறம்?
ஈடிபஸ்: காதைப் பொத்திக்கொண்டு இத்தீமைகள் நிகழமுடியாத எந்த நாட்டிற்குப் போகலாம் எனத் தவித்து ஓடினேன். தீப்ஸின் வரவேற்கும் கை வானில் தெரிந்தது. வழியில் நடந்ததைச் சொல்கிறேன் கேள்.
மூன்று சாலைகள் சந்திக்கும் ஓரிடத்தில், தண்டோரா போடுபவன் ஒருவன் ரதத்தின் வருகையை அறிவித்தான்.
ரதத்தில் நீ கூறிய அதே தோற்றமுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவருடைய குதிரைக்காரன் இழிவான மொழிபேசி என்னை ஒதுங்கச் சொன்னான். கோபமுற்று எழுந்த நான், கையிலிருந்த கழியால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனையும், ரதத்தில் அமர்ந்திருந்தவரையும், மற்றவர்களையும் அடித்து சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்தேன்.
ரதத்தில் வந்தது லேயஸாக இருந்தால்…?
என்னைவிட மனம் மறுகுபவன் வேறு யார்?
அத்தனை கடவுள்களும் என்னைச் சபிக்கும்.
இது உண்மையான பட்சத்தில் யாவரும் என்னை வெறுத்து ஒதுக்குவார்கள்.
இது நானே எனக்கு வருவித்துக்கொண்ட தீமை.
நினைத்துப் பார், ஜொகாஸ்டா.
உன் கணவரைக் கொன்ற கைகளினாலேயே உன்னைத் தொட்டிருக்கிறேன்.
என்ன அவலம் இது? நான்தான் தீமையின் உருவம். ஐயோ, என் தந்தையைக் கொல்லக்கூடாது, தாயை விட்டு ஓடிப்போகவேண்டும் என்று நினைத்து வந்து இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேனே….
என்னைப் படைத்த கடவுள், எனக்கு இப்படி விதித்த கடவுள்…. கொடுமையானவன்.
கடவுளே, நான் தண்டனை பெறும் நாளை என் கண்ணில் காட்டிவிடாதே. மாறாக என்னை மனித குலமே காணாமல் போக்கிவிடு.
பா.கு.தலைவன்: அரசே, இந்தச் செய்தி கேட்டு நாங்களும் துயரம் கொள்கிறோம். எனினும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. தப்பிவந்த சேவகனைக் கேட்கவேண்டியது பாக்கியிருக்கிறதே.
ஈடிபஸ்: எனக்கும் அது ஒன்றைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை.
ஜொகாஸ்டா: அவன் வந்தால் என்ன? அதனால் உன் நம்பிக்கை எப்படி பலம்பெறும்?
ஈடிபஸ்: இந்தக் கொலையைப் பற்றி நீ சொன்னதும் அவன் சொன்னதும் ஒத்திருந்தால் நான் தொலைந்தேன். இல்லையென்றால்….
ஜொகாஸ்டா: கொலையைப் பற்றி நான் என்ன சொன்னேன்?
ஈடிபஸ்: யாரோ முகம் தெரியாதவர்கள் பலரால் லேயஸ் கொல்லப்பட்டார் என்றாய். அந்த இடையனும் அதையே சொன்னால் அரசரைக் கொன்றவன் நானல்ல. ஆனால் ஒரே ஒருவன்தான் எல்லோரையும் தாக்கிக் கொன்றான் என்று அவன் சொன்னால் சாட்சியம் என்னைப் பார்த்து விரல் நீட்டும்….
ஜொகாஸ்டா: நிச்சயம் அவன் பலபேர் என்றுதான் சொன்னான். ஆனால் அவனுக்கு இப்போது அதெல்லாம் ஞாபகம் இருக்குமா? செய்திகளைச் சற்று மாற்றிச் சொல்லி விட்டால்….?
அப்போதும் ஜோசியம் பொய்யே. தன் குழந்தையாலேயே லேயஸ் இறப்பார் என்ற அசரீரி வாக்கு அபபோதும் நிரூபிக்கப்படாது. யாரோ ஒருவனான…காரிந்த் நகரத்தவ னான நீ…லேயஸைக் கொன்றாய் என்றுதானே ஆகிறது?
பாவம்…என் முதல் குழந்தைதான் செத்துப்போயிற்று.
இனிமேல் நான் ஒருகணமும் ஜோசியம், குறி, அசரீரி இவற்றை நம்பமாட்டேன்.
ஈடிபஸ்: நீ சொல்வது சரிதான். என்றாலும் யாராவது போய் அந்த உன் பழைய சேவகனை-ஆடுமேய்ப்பவனை அழைத்துவந்தால் இந்த விஷயம் முடிந்துவிடும்.
ஜொகாஸ்டா: இதோ யாரையாவது அனுப்புகிறேன். உன் சஞ்சலங்களில் குறுக்கிட்டு நான் அதிகப்படுத்த மாட்டேன். நிச்சயமாக இந்த விஷயத்தில் உன் எண்ணப்படிதான் நடக்கும்.
(இருவரும் அரண்மனைக்குள் போகின்றனர்)
கோ1– நாம் பயணம் செய்யும் பாதை தனிவழிப்பாதை
கோ2– சரியான வழிகள் இங்கே வணங்கப்படுமாக
கோ3– பிரபஞ்சத்தின் நியாயங்கள் சொர்க்கத்திலிருந்து கிடைத்தவை
கோ4– அவை வெறும் ஞாபகங்களின் அடிமை அல்ல
கோ5– அவை து£க்கத்தில் தொலைந்துபோய்விடுபவை அல்ல
கோ6– காலத்தைக் கடந்து நிற்பவை, மறைவானவை
கோ1– தற்பெருமையில் பிறப்பதுதான் கொடுங்கோல்
கோ2– பொறுப்பில்லாத்தனம் கொடுங்கோலனின் இலக்கணம்
கோ3– படாடோபம் அவன் நம்பிக்கைக்கு உருத்தருவது
கோ4– அப்படிப்பட்டவன் உண்மையில் பலசாலி அல்ல:
கோ5– அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி எழும்
கோ6– நாட்டிற்குப் போராடுபவரைக் கடவுள் காத்து நிற்பார்
கோ1– வெறுப்பும் அடங்காமையும் பணிவின்மையும் உலகில் மிகுந்தன
கோ2– அவை கடவுளின் புனித சட்டத்தைக் குலைக்கின்றன
கோ3– தன்னிடமே அனைத்துச் சக்திகளும் இருப்பதாகக் கருதுகிறார்கள்
கோ4– அந்த மனிதர்கள் விதியின் வலையில் வீழ்ந்து துன்புறுவார்கள்
கோ5– புனிதமான விஷயங்களில் எவரும் குறுக்கிடாமல் இருப்பாராக!
கோ6– இல்லையெனில் கடவுளின் வீழ்த்தும் இடி அவர்களைக் கொல்லும்
கோ1– டெல்ஃபியின் மந்திரச் சொற்கள் பொய்யாகிப் போகுமா?
கோ2– கடவுளர்கள் இனிமேல் புகழப்படப் போவதில்லையா?
கோ3– நீ உலகுக்குத் தலைவன் எனில், கடவுளே! உன் தராசில் இதை எடையிட்டுப் பார்!
கோ4– எங்கள் தலைவர்கள் உன் ஆணையை, டெல்ஃபியின் தீர்க்கதரிசனத்தை இகழ்கிறார்கள்
கோ5– அவர்களது இதயங்கள் அறியாமையில் மூழ்கியிருக்கின்றன
கோ6– கடவுளர்மீது மரியாதை செத்துப்போனது.