ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

[குழுப்பாடகர்கள் ஆறுபேர் (கோரஸ் எனப்படுவோர்) இரண்டு கதவுகள் வழியாகவும் வருகின்றனர்]

கோ1– தங்கமும் நிழலும் பூரணமாகத் ததும்பும் டெல்ஃபி நாட்டில் கடவுள் பாடும் பாடல்தான் என்ன?

கோ2– சூரிய ஒளிக்கற்றை வீசும் நாடு தீப்ஸுக்கு அசரீரி சொன்னதுதான் என்ன?

கோ3– பயம் என்னைப் பல கூறுகளாக்குகிறது. இதயத்தின் வேர்கள் விதிர்விதிர்க்கின்றன.

கோ4– ஓ குணமாக்கும் கடவுளே, உன் சக்தி என் நினைவுக்கு வருகிறது. உன் தண்டனை எவ்விதம் வரும்?

கோ5– சட்டென மாறும் மேகம் போலவா? இல்லை, நீடித்த இரவின் இருள் போலவா?

கோ6– சொல், எங்களிடம் சொல், நன்னம்பிக்கையின் குழந்தையே, அசரீரியே, தங்கக் குரலே, சொல்.

கோ1– அறிவுக் கடவுள் அதீனாவைப் பிரார்த்திப்போம். அவளது சகோதரி ஆர்ட்டெமிஸை வணங்குவோம். அப்போலோவையும் துதிப்போம்.

கோ2– எங்கள் துயர்களுக்கு எதிராகப் பாய்ந்து இருளை அகற்றி விரைவில் அமைதியைக் கொடுங்கள்.

கோ3– எங்கள் கஷ்டங்களுக்கு எல்லை எல்லாமல் போய்விட்டது.

கோ4– பாதிக்கப்பட்ட எம்மை உறவினர்கள், எம் மக்கள் பாராமலே போகின்றனர்.

கோ5– மரணத்தோடு போராடுபவன் எந்தச் சுயநினைவுமே இல்லாமல் ஆகிவிடுகிறான்.

கோ6– செழுமையான நிலங்களில் விளைச்சலே இல்லை.

கோ1– தாங்க முடியாத வலியால் துடிக்கிறது தாய்க்குலம்.

கோ2– நெருப்புத் துண்டங்களிலிருந்து பறக்கும் பொறிகள்போல், வானில் சிறகடித்துப் பறக்கம் பறவைகள்போல், எங்கள் வாழ்க்கை மரணத்தில், மாலைக்கடவுள் நாட்டின் விளிம்பில், நிற்கிறது.

கோ3– கொள்ளை நோய் தீயாய்க் கொழுந்துவிட்டு எரிகிறது.

கோ4– கல்லில் அடித்த சிலைகளாக இறந்து கிடக்கும் குழந்தைகள்.

கோ5– மாரடித்துப் பிலாக்கணம் சொல்லிக் கதறியழும் கிழவிகள்.

கோ6– கடவுளின் பொன்னிறக் குழந்தையே! சூரிய தேவனே! நீயேனும் எங்களுக்குக் கருணை காட்டு.

கோ1– கத்தியின்றி நடக்கும் யுத்தம் இது. நாங்களோ கேடயமின்றி இருக்கிறோம்.

கோ2– அழுகைக்குரல் மட்டும் என்றைக்கும் அடங்குவதே இல்லை, கடவுளே!

கோ3– எங்களைக் கொள்ளையிடும் முற்றுகையால் முழுகடிப்பவனை அப்படியே தூக்கிக் கடலில் எறி, கடவுளே!

கோ4– இடிக்கடவுளே, எங்கள எதிரியின் தலையில் ஆயிரம் இடிகளைச் செலுத்து.

கோ5– சூரிய தேவனே, உன் ஒளிக்கணைகளை எங்கள் எதிரிமேல் செலுத்து.

கோ6– ஆர்ட்டெமிஸ் தேவியே, உன்னால் அவன் வேட்டையாடப் படட்டும். எங்கும் மகிழ்ச்சி பிறக்கட்டும்.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: இதுதான் உங்கள் பிரார்த்தனை என்றால் நிறைவேறட்டும், அது. நான் சொல்வதற்குச் சற்றுச் செவிசாயுங்கள். இந்த நெருக்கடிகள், தீமைகள், விரைவில் தீரப்போகின்றன. இதுவரை நடைபெற்ற கதைகள் எனக்குத் தெரியாதது போலவே குற்றங்களும் எனக்குத் தெரியாமல் போய்விட்டன. கொலையாளியைக் காட்டும் துப்பு சீக்கிரம் துலங்கிவிடுமா? நண்பர்களே, இவையெல்லாம் நடந்து முடிந்தபின் வந்தவன் நான். இதன்மூலம் தீப்ஸ் நாட்டு மக்கள் எல்லோருக்கும் நான் அறிவிக்கிறேன்: “லேயஸ் எப்படி இறந்தார் என்பது தெரிந்தவர் எவராயினும் பயமில்லாமல் தபன்வாரிசு இல்லாமல் போயிற்றே!

நான் லேயஸுக்கு மகனாக இருந்து பழிவாங்குவேன். அவருக்காகப் போராடுவேன். இந்தப் போராட்டத்தில் என்னோடு சேர்ந்துகொள்ளாத சிறிய உள்ளங்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க முடியாது. அவர்களும் பிள்ளையின்றித் தவிப்பவர்கள் ஆகட்டும்! பெருந்துயரில் விழுந்து மீளாது அவர்கள் துனபுறட்டும்!

பாடற்குழுத் தலைவன்: மன்னா, சத்தியப் பிரமாணம் எடுத்தவன் நான். மன்னரின் மரணத்திற்கு நான் காரணமில்லை என்பதால் மன்னரைக் கொலைசெய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது.
தேடு என விதித்தான் கடவுள். ஏன் கொலைசெய்தவனின் பெயரை அவன் தெரிவிக்கவில்லை?

ஈடிபஸ்: நல்ல கேள்வி. ஆனால், கடவுள், மனிதனுக்கு இவ்வளவுதான் என்று கருணையைப் படியளக்கிறான். அதற்குமேல் ஒரு துளிகூட நம்மால் அடையமுடியுமா?

பா.கு.தலைவன்: இதற்கு இன்னொரு வழி இருக்கிறதே.

ஈடிபஸ்: சொல் உடனே. எந்த வழியானாலும் சரி.

பா.கு.தலைவன்: அப்போலோவின் கோவிலில் முக்காலமும் அறிந்த ஞானி, ஜோசியம் சொல்லுபவர், கடவுளின் பூரண அருள் பெற்றவர் டைரீசியஸ். அவரை அணுகினால் அனைத்து விஷயமும் தெரிந்துவிடும் ஈடிபஸ்.

ஈடிபஸ்: இது தெரியாமல் நான் நேரத்தை வீணடிக்கவில்லை. கிரியோன் இதைப்பற்றிச் சொன்னான். டைரீசியஸை அழைத்துவர நான் ஆட்களை அனுப்பி யிருக்கிறேன். இரண்டு முறை. ஆச்சரியம், அவர் இன்னும் வந்து சேரவில்லை.

பா.கு.தலைவன்: அப்படியானால், அந்த இன்னொரு செய்தி-பழைய செய்தி-இனிமேல் பயனற்றது.

ஈடிபஸ்: என்ன செய்தி அது? நான் எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

பா.கு.தலைவன்: மன்னர் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி.

ஈடிபஸ்: தெரியும், ஆனால் அதற்குச் சாட்சி இல்லை.

பா.கு.தலைவன்: கொலை செய்தவனுக்குத் துளி பயமிருந்தாலும், இத்தனை நேரம் உன் சாபங்கள் அவனைச் சரணடைய வைத்திருக்கும்.

ஈடிபஸ்: இந்தப் படுகொலையைச் செய்தவன் சாபங்களுக்குப் பயப்படுவான் என்று எனக்குத் தோன்றவில்லை.

(குருட்டு ஞானி டைரீசியஸைக் காவலாளி ஒருவன் அழைத்துவருகிறான்)

பா.கு.தலைவன்: மனிதர்களிலே மனத்தில் உண்மை ஒளி கொண்டவன், புனிதமான ஞானி, டைரீசியஸ். இவரால் மட்டுமே மன்னரைக் கொன்ற குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியும்.

ஈடிபஸ்: டைரீசியஸ்! மண்ணுலகம், விண்ணுலகம் இவ்விரண்டின் இரகசியங்களையும் அறிந்து கற்றடங்கிய மெய்ஞ்ஞானியே! உங்கள் கண்கள் பழுதுபட்டிருந்தாலும் இந்த நகரம் கொள்ளை நோயால் நாறிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கொள்ளை நோயிலிருந்து எங்களை உங்களால் மட்டுமே காக்க முடியும்.

தூதுவர்கள் சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லேயஸ் மன்னரைக் கொன்றவனைக் கண்டுபிடித்து தண்டித்தால் நாட்டைப் பீடித்த கறை நீங்கும் என்று அப்போலோ கோயில் அசரீரி சொன்னது.

பறவைகளை வானில் பறக்கவிட்டோ, வேறு எந்தத் தீர்க்கதரிசனத்தாலோ, இந்த நாட்டைக் கொள்ளைநோயிலிருந்து காப்பாற்ற முடியுமா?
எங்களை நான் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டேன். துயரில் துவண்டு கிடப்பவர்க ளுக்கு உதவிசெய்வதைவிட வேறு ஒரு பெரிய கடமை இருக்கிறதா?

டைரீசியஸ்: உண்மையை அறிவதால் உதவியற்றபோது, அவ்வுண்மையின் ஒளி பயங்கரமாகவே தெரியும். அதனால்தான் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உம்…. நான் வந்திருக்கவே கூடாது.

ஈடிபஸ்: நீங்கள் ஏன் இப்படி வருத்தம் கொள்கிறீர்கள்? உங்கள் கண்கள் ஏன் இப்படி இரக்கமற்றுப் போகவேண்டும்?

டைரீசியஸ்: என்னைத் திரும்பிப் போகவிடு…. உன் விதியை நீ அனுபவி. என் விதியை நான் அனுபவிக்கிறேன். அதுதான் நல்லது. நான் சொல்வதை ஏற்றுக்கொள்.

ஈடிபஸ்: உங்கள் நாட்டின்மீது இரக்கம் அற்றிருக்கிறது உங்கள் செய்கை. பேசமாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

டைரீசியஸ்: பேச்சு என்று வந்தால்-உன் பேச்சுதான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும் இல்லை, மென்மையாகவும் இல்லை. இருந்தாலும் நான் தெளிவோடு இருக்க விரும்புகிறேன்.

ஈடிபஸ்: கடவுளின் பெயரால் நாங்கள் உங்களிடம் மன்றாடுகிறோம்….

டைரீசியஸ்: நீங்கள் அனைவரும் அறியாமையில் உழல்பவர்கள். நான் அறிந்ததை உங்களிடம் சொல்லக் கூடாது. என் மனத்தில் கிடந்து என்னை வாட்டும் அது அப்படியே இருக்கட்டும்.

ஈடிபஸ்: என்ன! உங்களுக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டீர்களா? நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று போய்விடுவீர்களா?

டைரீசியஸ்: என்னை வருத்திக்கொள்வதோ, உன்னையும் வருத்துவதோ என் விருப்ப மல்ல. ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறாய்? உன்ன என்னை வற்புறுத்த இயலாது.

ஈடிபஸ்: பொல்லாத கெட்ட கிழவர் நீங்கள்! உங்கள் மனம் கல்லைவிட இறுகிப் பாறையாகக் கிடக்கிறது. கல்லும் இளகும், மனத்தில் உங்களுக்கு உணர்ச்சிகளே இல்லையா?

டைரீசியஸ்: என்னை உணர்ச்சிகள் அற்றவன் என்கிறாய், உன் உணர்ச்சிகளை நீ அறிந்தால்…..

ஈடிபஸ்: ஏன், என்னைப்போல யார் மக்களுக்காக உணர்ச்சியில் தத்தளித்து அழுவார்கள்? நகரம் நாறிக் கொண்டிருக்கிறது, நீங்கள் தலைக்கனம் பிடித்து ஆடுகிறீர்கள்!

டைரீசியஸ்: நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒன்று நடந்தே தீரவேண்டும் எனில் அது ஆகவேண்டியதுதான்…. நான் சொல்லாவிட்டால்தான் என்ன?

ஈடிபஸ்: உண்மையை நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

டைரீசியஸ்: இல்லை, நான் சொல்லுவதற்கில்லை. நீ எவ்வளவு கோபம் கொண்டாலும் சரி.

ஈடிபஸ்: கோபம் கொள்வதா? கோபம் வராமல் என்ன செய்யும்? எனக்கு இப்போது புரிகிறது…. நீங்கள்தான் இதை திட்டமிட்டுச் செய்தீர்கள். நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்த ஆள். அல்லது இந்தக் கொலையைச் செய்ய வைத்தீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டின் மாசு, விஷம், பாவமூட்டை…..

டைரீசியஸ்: அப்படியா, மிகவும் சரி. நான் உண்மையைச் சொல்வதானால், நீ உன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். இன்றுமுதல் நீ என்னுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது….. சரி, சொல்லிவிடுகிறேன்…. இந்த நாடு இப்படி நாறிக் கொண்டிருப்பது உன் செயலினால்தான்.

ஈடிபஸ்: என்ன துணிச்சல் உனக்கு? இப்படித் துடுக்குத் தனமாகப் பேசிவிட்டு நீ தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறாயா?

டைரீசியஸ்: நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். ஆனால் உண்மைதான் என்னை இந்நேரம் இங்கே கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஈடிபஸ்: உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் முட்டாள் தந்திரமில்லையா இது?

டைரீசியஸ்: என்னைப் பேசவைத்தது நீ. நான் சொல்லவே கூடாது என்றுதான் இருந்தேன்.

ஈடிபஸ்: அதற்காக, என்ன சொல்லுகிறீர்கள்? சொல்வதை இன்னும் ஒருமுறை தெளிவாகச் சொல்லுங்கள்.

டைரீசியஸ்: ஏற்கெனவே சொன்னது தெளிவாக இல்லை? மறுபடியும் வேறு சொல்ல வேண்டுமா?

ஈடிபஸ்: புரியவில்லை எனக்கு. சொல்லுங்கள் இன்னொரு முறை.

டைரீசியஸ்: நான் சொல்கிறேன், நாம் தேடிக்கொண்டிருக்கிற அந்தக் கொலைகாரன் நீதான்.

ஈடிபஸ்: இருமுறை அவமானப் படுத்திவிட்டீர்கள். அதற்கு தண்டனை இல்லாமல் போகாது.

டைரீசியஸ்: நீ இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பேசு. கோபம் கொள்ளும் அளவுக்குத் துணிவிருக்கிறதா உனக்கு?

ஈடிபஸ்: நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லை.

டைரீசியஸ்: உனக்கு நெருக்கமானவர்களோடு மகா பாவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடிபஸ்! தீமையை உன்னால் காணமுடியவில்லை….

ஈடிபஸ்: உங்களால் எவ்வளவு நேரம் இப்படி உளறிக் கொண்டிருக்க முடியும்?

டைரீசியஸ்: உண்மைக்குச் சக்தி இருக்குமானால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்.

ஈடிபஸ்: உண்மைக்குச் சக்தி இருக்கிறது, ஆனால் உங்களுக்கு இல்லை. உங்களுக்குப் பார்வையில்லை, அறிவில்லை, புத்தியில்லை, பைத்தியக்காரக் கிழவர் நீங்கள்.

டைரீசியஸ்: நீதான் பைத்தியக்காரன். என்னை நீ சபிக்கிறாற்போல், உன்னை வெகுசீக்கிரம் எல்லாரும் சபிக்கப்போகிறார்கள்.

ஈடிபஸ்: அமாவாசையில் பிறந்தவரே! உம்மை நான் தண்டிக்காமல் விடுகிறேன். இந்தச் சூரியனறிய, பூமியறிய உம்மை ஒரு நாய்கூடச் சீண்டாது.

டைரீசியஸ்: சரிதான், நீ எனது விதியைச் சமைப்பவன் அல்ல. என் வாழ்வு உலகை ஆட்டுவிக்கும் அப்போலோ விதிக்கும் விதி.

ஈடிபஸ்: சொல்லும்! நீர் இப்போது சொன்ன அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணகர்த்தா யார்? கிரியோனா, அல்லது வேறு யாராவதா?

டைரீசியஸ்: கிரியோனைக் கண்டு நீ பயப்படத் தேவையில்லை. உனது அழிவை நீயே பின்னிக்கொண்டிருக்கிறாய்.

ஈடிபஸ்: செல்வம், பலம், அரசதந்திரம், அரியணை! இன்றைக்கு எல்லாரும் கண்டு ஆசைப்படுகிறார்கள். ஒரு காலத்தில் அரியணை நான் கேட்காமலே எனக்குக் கிடைத்தது. ஆனால் இன்று இதற்காகப் போட்டி, பொறாமை. கிரியோன் பதவிக்காக என்னை அழிக்கப் பார்க்கிறான். ஒரு உதவாக்கரை ஜோசியனை, காசு பொறுக்கியை, நயவஞ்சகப் பூசாரியை, என்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான் கிரியோன். இவனைவிட என்னால் நல்லபடியாகவே ஜோசியம் சொல்லமுடியும்.

சொல்லும், உம் உதடுகள் முணுமுணுக்கும் மந்திரங்கள் எப்போதேனும் உண்மையை நெருங்கியிருக்கின்றனவா? ஸ்பிங்ஸ் இந்த நாட்டைச் சின்னாபின்னம் செய்துகொண்டி ருந்தபோது நீர் எங்கிருந்தீர்? ஸ்பிங்ஸின் புதிர்கள் எவனோ ஒரு வழிப்போக்கனால் தீர்க்கப்படுவதற்கு உரியவை அல்ல. அதற்கு ஆற்றல் வாய்ந்த நான் தேவைப்பட்டேன்.

உம்முடைய பறவைச் சகுனமும், பயனற்ற மந்திரங்களும் அதை அசைக்கக்கூட முடியவில்லையே!

அந்த நேரம் ஈடிபஸ் என்ற எளிய மனிதன் நான் வந்தேன். பறவைகள் மந்திரங்கள் எவையுமே இல்லாமல், ஸ்பிங்ஸை வெற்றிகொண்டேன். என்னைநீரும் உம் தோழன் கிரியோனும் அழிக்கப் பார்க்கிறீர்கள். நீர் வயதானவர் ஆனதால் உம்மை விட்டுவிடு கிறேன்.

பா.கு.தலைவன்: இருவர் பேசியவையும் கோபத்தில் எழுந்த வார்த்தைகள். கோபம் நமக்குத் தேவையில்லை, ஈடிபஸ்! கடவுள் சித்தத்தை நாம் நிறைவேற்றுவது எப்படி? அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

டைரீசியஸ்: நீ அரசன். ஆனால் விவாதம் என்று வந்தபிறகு நானும் மனிதன்-நீயும் மனிதன். நான் கடவுள் அப்போலோவின் அடிமை. உன் கூலியாள் அல்ல. எனக்குக் கிரியோனும் தேவையில்லை, எவனும் தேவையில்லை. கேள்:

நான் குருடன் என்று கிண்டல் செய்கிறாய். இரண்டு கண்ணிருந்தும் நீதான் குருடன். உன் வாழ்வின் அவலத்தை அறிய உன்னால் இயலவில்லை. யார் வீட்டில் யாரோடு வாழ்கிறாய் என்ற அவலத்தை அ றிய உன்னால் முடியவில்லை. உன் தந்தை யார்? தாய் யார்? சொல்ல முடியுமா? நீ அவர்களுக்குச் செய்த குருட்டுத்தனமான பாவங்கள் சாட்டைகளாக மாறி உன்னை உயிருள்ளவரை அடித்துக் கொல்லும்.
அப்போது நீ அழும் கூக்குரல் ஒலி உலகமுழுவதும் கேட்கும்.

நீ குழந்தையாகத் தவழ்ந்த கீதெய்ரான் மலை அந்தக் கூக்குரலை எதிரொலிக்கும்.

நீ தீப்ஸுக்குள் நுழையும்போது பாடினார்களே, திருமணப்பாடல்-அதன் அர்த்தத்தை நீ அப்போது அறிவாய். இன்னும் இனிமேல் நீ அறியப்போவது-இப்போது புரிந்து கொள்ள முடியாதது-உன்னை உன் குழந்தைகளின் மத்தியிலே ஒருவனாகக் கொண்டு நிறுத்தும்.
சபி. கிரியோனைச் சபி. என்னைச் சபி. வெகு சரி. கோபப்படு. உயரத்திற்குச் சென்று விட்ட நீ அதல பாதாளத்தில் தூக்கி எறியப்படப் போகிறாய்.

ஈடிபஸ்: உன்னிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க வேண்டுமா? அழிந்து போ! இந்த இடத்தைவிட்டுப் போய்விடு! என் கண் முன்னால் நிற்காதே.

டைரீசியஸ்: நீ கூப்பிட்டாய், நான் வந்தேன். இல்லாவிட்டால் நான் வந்தே இருக்க மாட்டேன்.

ஈடிபஸ்: கூப்பிட்டேன், ஆமாம். இப்படிப் பிதற்றிக் கொட்டவா? இப்படி உளறி நீ என்னையும் உன்னையும் முட்டாளாக்கவா?

டைரீசியஸ்: முட்டாளா? உன் பெற்றோர் என்னைப் பற்றி மிக உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்.

ஈடிபஸ்: மறுபடியும் என் பெற்றோர்கள்! நில்லும், என் பெற்றோர்கள் யார்?

டைரீசியஸ்: இன்று உனக்கு ஒரு தகப்பனார் கிடைப்பார். இதே நாள் உன் இதயத்தையும் உடைத்தெறியும்.

ஈடிபஸ்: சிறுபிள்ளைத்தனமான புதிர்கள். மீண்டும் அர்த்தமற்ற உளறல்கள்.

டைரீசியஸ்: ஒரு காலத்தில் புதிர்களுக்கு விடை காண்பதில் ஈடு இணையற்றவனே நீதானே!

ஈடிபஸ்: உம் விருப்பப்படி கேலி செய்யும், ஆனால் உண்மை என்னவோ அதுதான்.

டைரீசியஸ்: உண்மை! அதுதான் உன் அழிவைக் கொண்டுவருவது.

ஈடிபஸ்: உண்மை-அதுதான் இந்த நகரத்தைக் காப்பாற்றக்கூடும் என்றால்?

டைரீசியஸ்: (சேவகனிடம்) தம்பி! கொஞ்சம் கையைக்கொடு. போகலாம்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) ஆமாம், இந்த ஆளைக் கூட்டிப்போ.
(டைரீசியஸிடம்) நீர் இங்கிருக்கும்வரை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. போம்! எங்களை அமைதியாக இருக்கவிடும்!

டைரீசியஸ்: சொல்லவந்ததைச் சொல்லிவிட்டுத்தான் போவேன் நான். உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?
(பாடற்குழுவை நோக்கி) நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் இந்த மனிதன்-மகா பாவி, லேயஸைக் கொன்றவன், தீப்ஸில்தான் இருக்கிறான். நீங்கள் வேறுநாட்டவன் எவனோ என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் அவன் தீப்ஸைச் சேர்ந்தவனே என்பது தெரியவரும்.
தெரியவரும் விஷயத்தால் உங்கள் மனம் இன்னும் அல்லல்படும்.
இன்று பார்வையுள்ளவன் அவன், ஆனாலும் அவன் குருடாகப் போவான்.
பணக்காரன் இன்று அவன். ஆனால் பரம தரித்திரனாகப் போவான்.
இந்த விநோத உலகத்தைக் கைத்தடியால் தட்டித்தட்டிச் சப்தம் எழுப்பியவாறே வளையவரப் போகிறான்.
தன்னைப் பெற்றவளுக்கே கணவனாகவும் ஆகப்போகிறான்.
கைகளில் தந்தையின் ரத்தத்துடன் அவள் படுக்கைக்கே வந்தவன் அவன்.

இவை போதும். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் கூறியவற்றில் தவறு கண்டால் எனக்கு தீர்க்கதரிசனம் இல்லை என்று நீங்கள் இகழலாம்.

(சேவகன் முன் செல்ல, டைரீசியஸ் வெளியேறுகிறான். ஈடிபஸ் அரண்மனைக்குள் செல்கிறான்.)

கோ1– டெல்ஃபி நகர மலைப் பாறைகள் என்றோ நடந்த அரசப் படுகொலையை இன்று கிளறுகின்றன. ரத்தம் படிந்த கையை இன்னும் மறந்துவிடவில்லை.

கோ2– கொலையாளியின் நேரம் வந்துவிட்டது. இடிமுழக்கங்களோடு, மின்னல்களின் சாட்டையோடு, பெருங்காற்றுகளோடு. அப்போலோ அவனைத்துரத்துகிறான்.

கோ3– ஐயோ, பெருங்காற்றுகள்! ஓலமிடும் காற்றுகள் அவனைத் தேடுகின்றன.

கோ4– பார்னாசஸ் மலையில் பனிப்புயல் தொடங்கிவிட்டது. அது அந்த ரகசிய மனிதனின் கண்களை வேட்டையாடுகிறது.

கோ5– அவன் காட்டில் அலைந்தாலும், எல்லாம் அவனைத் துரத்துகின்றன. பேரழிவு அவனைத் தேடுகிறது. ஓடுவது எதற்கு உதவும்?

கோ6– பூசாரியின் பறவைகள் சொல்லிய உண்மை….

கோ1– குருட்டு ஞானி சொல்லிச் சென்றவை….

கோ2– கறைபடிந்த கையைக் கழுவுவது எங்கே….

கோ3– கழுவினால் ஆறுகள்கூட அசுத்தமாகிவிடுமே….

கோ4– எங்கள் மனங்கள் கலங்குகின்றன….

கோ5– ஆன்மாக்கள் வழிதவறிய பறவைகள் போல….

கோ6– நியாயமும் அறியாது நிலையும் தெரியாது கலங்குகின்றன….

கோ1– சொல்லப்பட்ட கதைகளின் உண்மையைக் கடவுளர்கள் மட்டுமே அறிவர்.

கோ2– இந்த ஞானி ஒளியை தரிசித்தாலும் இருட்டையே உரைக்கிறான்.

கோ3– அறியப்படாத நெருடல்களுக்கு நீதி வழங்குவது எங்ஙனம்? அவன் கூறிய வற்றில் நம்பிக்கை வைப்பது எங்ஙனம்?

கோ4– ஞானிகளின் கைகள் ஊடாகவே ஞானம் மாறிமாறிச் சென்று கண்ணாமூச்சி காட்டுகிறது.

கோ5– இந்த ஞானி சொல்லிவிட்டதால் எங்கள் தலைவன் குற்றவாளி என நாங்கள் நம்பவேண்டுமா?

கோ6– எங்கள் தலைவன் அந்தப் பிணப்பாடகியை எதிர்கொண்ட விதம் அறிவோம். இவன் கூறுவதெல்லாம் பொய்கள்.

நாடகம்