ஈக்களின் தலைவன் (Lord of the Flies)

ஓர் உலகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. அதன் இடையில் போர்க்காலக் குடிகள் வெளியேற்ற நடவடிக்கைப்படி பிரிட்டனிலிருந்து பள்ளிப் பையன்களை அழைத்துச் செல்லும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு யாருமற்ற ஒரு தீவில் விழுகிறது. அதிலிருந்து தப்பிய சிறுவர்கள் உயிர் பிழைத்து வாழ வேண்டித் தங்களை ஒரு சமுதாயமாக அமைத்துக் கொள்வதில் ஏற்படும் பரிதாபமே ஈக்களின் தலைவன் என்ற கதையாக உருவெடுத்துள்ளது.

முதலில் குழு இரண்டாகப் பிரிகிறது. சின்னஞ்சிறுவர்கள்- ஏறத்தாழ ஆறு வயது அளவினர் “சிறியோர்”; பத்துப் பன்னிரண்டு வயதுவரை இருந்தவர்கள் “பெரியோர்”. ரால்ஃப் என்பவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவன் சந்தோஷமாக விளையாடுங்கள், உயிர்தரித்திருங்கள், எப்போதும் இடைவிடாது ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கச் செய்யுங்கள் என்று மூன்று விதிகளைத் தருகிறான். எப்போதும் ஒரு தீ எரிந்து கொண்டிருந்தால் ஏதேனும் கப்பல் அதைப் பார்த்து நிற்கலாம் என்றும் அவன் கூறுகிறான். அவனது தோழன் பிக்கி என்பவன் உதவியோடு அவன் தங்குமிடம் அமைப்பு, துப்புரவு போன்றவற்றிற்கான விதிகளை நிறுவ முனைகிறான். அனைவரையும் ஓரிடத்திற்கு அழைப்பதற்கு அவர்களுக்கு ஒரு சங்கு கிடைக்கிறது. தீயை உண்டாக்க பிக்கியின் கண்ணாடி பயன்படுகிறது. ஆக ஒருவிதமான ஜனநாயகம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. தலைமை ஏற்பதற்கான இரண்டு அடையாளங்கள் ரால்ஃபுக்குக் கிடைத்துவிட்டன.

ஆனால் குழுவில் அவனுக்கு எதிரியாக ஜேக் என்பவன் இருக்கிறான். தப்பிய சிறுவர்களில் பாடற் குழுவினர் சிலரை அவன் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறான். ஆக இரண்டு “கட்சிகள்” ஏற்பட்டு விட்டன. நாகரிகத்தின் பக்கம் ரால்ஃபின் பையன்களும், காட்டுமிராண்டித் தனத்தின் பக்கம் ஜேக்கின் பையன்களும் உள்ளனர். ஏறத்தாழ இந்தியாவின் இருபெரும் கட்சிகள் நமக்கு நினைவுக்கு வரவில்லையா?

ஜேக்கின் குழுவினர், ஏதோ ஒரு புராண கால விலங்கு தீவிலிருப்பதாக ஒரு கதையை உருவாக்குகின்றனர். இடையில் ஓர் இரவில் தீவுக்குமேல் நடந்த வான்வழிச் சண்டை ஒன்றில் ஈடுபட்ட ஒருவன் பாராசூட்டில் குதிக்கிறான். குதித்தவன் இறந்துவிட மலையுச்சியில் அந்த பாரசூட் இறங்குகிறது. பகலில் பாராசூட்டின் உருவம் காற்றில் எழுந்து உட்கார்வது போலும், பிறகு அமிழ்வது போலும் தோன்றுகிறது. அதைத் தொலைவிலிருந்து பார்த்து புராண விலங்கென்று ஏற்கும் ஜேக்கின் குழுவில் பெரும்பான்மையினர் சேர்கின்றனர். இக்காலத்திலும் மூட நம்பிக்கையின் பக்கம் எந்தக் கட்சி இருக்கிறதோ அதுவே வெற்றி பெறுகிறதல்லவா?

விலங்குத்தனமான ஜேக்கின் குழுவினர் தங்களைப் பழங்குடி மக்களாகவே கருதிக் கொண்டு, முகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டு, அவர்கள் போலவே நடனமாடுகின்றனர். அவர்கள் ஒரு பன்றியைக் கொன்று அதன் தலையை ஒரு கொம்பில் நட்டு அதை விலங்குக்குப் படைக்கின்றனர்.

ரால்ஃபின் குழுவின் சைமன் என்ற சிறுபையன் இருக்கிறான். தங்குமிடங்களை மேற்பார்வை பார்க்கும் பணியோடு சிறுவர்களை மேற்பார்வை செய்யும் காரியத்தையும் அவன் கவனித்து வருகிறான்.

பின்னர் தனது தனியிடத்தில் அவன் தனது மனமயக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் கொம்பில் செருகப்பட்ட பன்றியின் தலை ஈக்களின் தலைவனாகத் தோன்றுகிறது. அந்தத் தலை அவனுடன் பேசுகிறது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தீமையின் குறியீடாக அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் விலங்கு என்று ஒன்று தீவில் இல்லை, மாறாக, ஒவ்வொரு பையனின் ஆழ்மனத்திலும் இருக்கின்ற விலங்குதான் அது. மேலும் சைமன் மனிதனின் ஆன்மாவைக் குறிக்கும் குறியீடு என்றும், அதனால் மற்றப் பையன்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என்றும் முன்னுரைக்கிறது. இதைக் கனவுபோலக் கண்டுணரும் அவன் மயக்கமடைகிறான்.

பிறகு அவன் மலைமீது சென்று பாரசூட்டைக் கண்டு உண்மையை அறிகிறான். இரவில் ஜேக்கின் குழுவினர் நிகழ்த்தும் காட்டுமிராண்டி ஆட்டத்திற்கு இடையில் அவன் வந்து சேர்கிறான். அவர்கள் சைமனையே புராண விலங்கு என்று நினைத்துக் கொன்று விடுகின்றனர்.

இப்போது பிக்கி உள்பட மூன்று பையன்கள் மட்டுமே ரால்ஃபுடன் உள்ளனர். ஜேக்கின் குழுவினர் பிக்கியின் கண்ணாடியைத் திருடிச் சென்று விடுகின்றனர். அதனால் தீவில் தீயை எழுப்ப இயலாமல் போகிறது. ஒரு கப்பலையும் அதனால் எல்லாரும் தவற விடுகின்றனர். மூட நம்பிக்கை அடிப்படையிலும், பன்றிக்கறியை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தும் அநேகமாக எல்லாரையுமே தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான் ஜேக்.

தன் கண்ணாடியைக் கேட்க பிக்கியும் அவன் நண்பர்களும் ஜேக்கிடம் செல்லும்போது, ஜேக் கூட்டத்தின் ஒரு பையன் அவன்மேல் ஒரு பாறையைத் தள்ளிக் கொன்றுவிடுகிறான். ரால்ஃபை விட்டுவிட்டு பிற இரு பையன்களையும் ஜேக் கைப்பற்றுகிறான்.

ரால்ஃபைத் தேடும் ஜேக்கின் குழுவினர், அவனை விரட்டுவதற்காகக் காட்டின் ஒரு பகுதியையே பற்றவைத்து விடுகின்றனர். நல்ல வேளையாக அந்தப் பெரும் தீயைக் கப்பல் ஒன்று காண்கிறது. அதிலிருந்து பிரிட்டிஷ் கப்பல் தலைவன் ஒருவன் இறங்கிவருகிறான். காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட பையன்களின் கையில் சாவதற்கிருந்த ரால்ஃபை அவன் காப்பாற்றுகிறான். என்ன நடக்கிறது என்று அவன் விசாரிக்கும்போதுதான் அந்தப் பையன்களுக்குத் தாங்கள் ஒரு நாகரிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஞானம் உறைக்கிறது. அனைவரும் தலையைக் குனிந்து அழுகின்றனர்.

நம் நாட்டின் இன்றைய நிலையை வில்லியம் கோல்டிங் எதிர்நோக்கி எழுதியதுபோல இருக்கிறது. நாகரிகமடைந்த மக்களின் மனங்களிலும் தேங்கியிருக்கும் கொலைவெறி, பிறரை மூட நம்பிக்கையின் பெயரால் சரணடைய வைத்தல், அடிப்படையான தீமை ஆகியவர்களை இச் சிறுவர்களின் கதை வாயிலாக எடுத்துக் காட்டுகிறது லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ்.

ஈக்களின் அரசன் – லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ் என்பது பைபிளில் சாத்தானைச் சேர்ந்த, அடுத்த நிலையிலுள்ள பேயைக் குறிக்கப் பயன்படும் சொல். சில சமயம் சாத்தானின் உருவமாகவும் பீல்சிபப் கருதப்படுகிறான். பேருண்டி கொள்ளுதலின் (gluttony) உருவமாகவும் இருக்கிறான். பேருண்டி என்பது உணவு உண்பதை மட்டுமல்லாமல் பணம் உள்ளிட்ட எந்தப் பொருளையும்  தனக்கெனப் பேராசையுடன் சேர்த்துவைத்துக் கொள்ளும் பண்பையும் குறிக்கிறது.

இந்த நாவலை எழுதிய வில்லியம் கோல்டிங் (1911-1993) ஆங்கில நாவலாசிரியர். இந்த நாவல் 1954இல் வெளியானது. 1983இல்அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. பிறகு சர் பட்டமும் பெற்றார். ஒருவகையில் இந்த நாவல் மனித சமூகத்தின் மீது அவருக்கிருந்த அவநம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது.

இலக்கியம்