இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியம் என்றால் என்ன?

(இந்தக் கட்டுரை, 1984இல், பதினாறாம் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மலரில் வெளியானது. முதன்முதலாக நான் அமைப்பியக் கருத்துகள் அடிப்படையில் எழுதிய கட்டுரை இது. எழுதப்பட்ட அக்காலத்தில் இக்கட்டுரை அவ்வளவாக கவனம் பெறவில்லை என்பது குறை.)

‘இலக்கியம்’ என்பதற்கு இதுவரை எத்தனையோ விளக்கங்கள் காலந்தோறும் இடந்தோறும் தரப்பட்டு வந்துள்ளன. நம் யாவர்க்குமே இலக்கியம் என்றால் என்ன, அது எது என்று தெரியும். ஆனால் யாவரையும் திருப்திப்படுத்தக்கூடிய் அளவில் இதுவரை எந்த விளக்கமும் அமையவில்லை என்றே கூறலாம்.

இதுவரை கூறப்பட்டுவந்த விளக்கங்களை நாம் இரண்டுவகைகளில் பகுக்கலாம்.

1. இலக்கியம் என்பது ஒருவகைப் புனைந்துரைத்தல் (ஃபிக்ஷனலைசேஷன்) என்று கூறுபவை.

2. இலக்கியம் என்பது அழகியல் இன்பம் தரும்வகையில் அமைக்கப்படும் மொழியமைப்புமுறை (ஈஸ்தடிகலி ப்ளீசிங் லாங்வேஜ் ஸ்ட்ரக்சர்) என்று கூறுபவை.

முதல்வகை விளக்கத்தில் புனைந்துரைத்தல் என்பது விரிவான பொருளில் ஆளப்படுகிறது. இதில் பிளேட்டோ கூறிய போலச்செய்தல் (இமிடேஷன்) முதல், கோல்ரிட்ஜ் கூறிய கற்பனை (இமேஜினேஷன்) வரை, அனைத்தையும் அடக்கி விடலாம். இலக்கியம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பு போன்ற விளக்கங்களும் இதில் அடங்கிவிடும்.

இரண்டாவது வரையறை, மொழியமைப்பு முறைக்கு முதன்மை – வடிவத்திற்கு முதன்மை – தருவது. தமிழில் இலக்கியத்தைக் குறிக்கும் பழைய பெயர்களான செய்யுள்,  பனுவல்,  நூல்  போன்றவை இக்கருத்தை உட்கொண்டுள்ளன.

முதல்வகை விளக்கம் செயல்படும் முறைக்கு முக்கியத்துவம் தருகிறது. இரண்டாவது விளக்கம், செய்யப்பட்ட விளைவுக்கு முக்கியத்துவம் தருகிறது.

ஒரு கருத்தை, ஒரு பின்னணி தந்து, வடிவம் ஏற்கவைத்து, அர்த்தமுள்ளது ஆக்குவதற்குச் செய்யும் பணிதான் புனைவு என்பது. எனவே புனைவை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தில், வரலாறு, தன்வரலாறு, பயண இலக்கியம் போன்றவற்றை அடக்கமுடியாது. இவற்றில் புனைவு இல்லை.

இரண்டாவது வகை விளக்கத்திலோ, துணுக்குகள், சிலேடைகள், கூர்மையாகச் செயல்படுமாறு தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் போன்றவையும் அடங்கிவிடும். ஆகவே இந்த விளக்கங்கள் எவ்வகையிலும் இலக்கியம் என்ற ஒன்றை மட்டுமே அடக்கக்கூடிய தன்மை பெற்றிருக்கவில்லை. ஆகவே புது விளக்கம் தேவையா கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளும் திறனாய்வாளர்களும் இவ்விரண்டையும் இணைத்தோ, அல்லது இவ்விரண்டிற்கும் நடுநிலை வகித்தோ இவற்றை ஏற்றுவந்துள்ளனர் (எடுத்துக்காட்டு, ரெனி வெல்லக், நார்த்ராப் ஃப்ரை) என்பதும் இவற்றின் போதாமையைக் காட்டுகிறது.
இவ்வாறு இடர்ப்படும் நிலை தேவையில்லை என்கிறது, நவீன திறனாய்வு வளர்ச்சி. இன்றைய திறனாய்வாளரான டேவிட் லாட்ஜ், மொழியியல் அடிப்படையில், இலக்கியம் என்பது ஏற்புடைய ஒழுங்கான முன்புலஆக்கத்தை (அல்லது முன்னணிப்படுத்தலை) உட்கொண்ட ஒன்று என்று விளக்குகிறார். பின்புலம்  அல்லது பின்னணி (பேக்கிரவுண்ட்) என்பது நாம் அனைவரும் அறிந்தது. இலக்கியப் படைப்பிலும், பொதுவான பேச்சுமொழி, ஏற்புடைய இலக்கிய மரபு இவை பின்புலமாக அமைந்துள்ளன. பின்புலத்திற்கு மறுதலை முன்புலம் (ஃபோர்கிரவுண்ட்).

முன்புலஆக்கம் (ஃபோர்கிரவுண்டிங்) என்பது பின்புலத்தில் நிறுத்துவதற்கு பதிலாக முன்னணியில் ஒன்றை நிறுத்துவதாகும். இலக்கிய மொழியை இலக்கியமல்லாத மொழியின் பின்னணி கொண்டே அறிகிறோம்.

வழக்கமான முறையில், எதிர்பார்க்கக்கூடிய முறையில் அமையும் மொழியமைப்பில் நம் கவனம் செல்லுவதில்லை. அதன் பொருள் மட்டுமே விரைந்து உணர்கிறோம். இது பின்னணி மொழி. இதற்கு மாறாக, அழகான அல்லது மாறுபட்ட அமைப்பால் நம் கருத்தை உணர்த்தவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் உருத்திரிபே (இண்டென்ஷனல் டிஸ்டார்ஷன்) முன்புல ஆக்கம் என்பது. முன்புல ஆக்கம், முன்கூறிய இருவகைப் பின்னணிகளுக்கும் மாறுபட்டது மட்டுமன்றி, ஒரு இலக்கியப் படைப்பிலே பொதுநிலையில் உருவான மொழியியல் கூறுகளுக்கும் மாறுபட்டு அமையும்.

முன்புல ஆக்கம்தான் மொழியமைப்பை வேறுபடுத்துகிறது. ஆகவே இதுவும் இலக்கியத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாகாது. நம்முடைய அன்றாடப் பேச்சிலும், சிலேடைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அறுவைஜோக்குகள், முரண், அங்கதம் ஆகியவற்றை உண்டாக்குவது இதுவே. ஆனால் இவற்றில் ஒழுங்கான அமைப்பு முறை இல்லை. ஆகவே எங்கே ஒழுங்கான (சிஸ்டமேடிக்), ஏற்புடைய முன்புல ஆக்கம் செய்யப்படுகிறதோ அங்கே இலக்கியம் உருவாகிறது.

அமைப்பியலாளரான ரோமன் யாகப்சன் என்பவரும் இலக்கியத்துக்குப் புதுவிளக்கம் தருகிறார். எந்தக் கலைப்படைப்புமே தன்னைப் பற்றியதுதான் என்பது அவர் கருத்து. கலைப்படைப்பு என்பது ஒருவித தொடர்புமுறை (கம்யூனிகேஷன் ப்ராசஸ்). எந்தத் தொடர்புமுறைக்குமே சொல்பவர், கேட்பவர் என இருவர் வேண்டும். மேலும் இருவருக்கும் பொதுவான ஒரு சூழல் (காண்டெக்ஸ்ட்), பொதுவான ஊடகம் (கோட்), பொதுவான இணைப்பு (காண்டாக்ட்) இவையும் வேண்டும். உணர்த்தப்படும் செய்தி, விஷயம் (மெசேஜ்) ஆகும். இலக்கியமும் ஒருவகை விஷயமே. விஷயங்கள் ஆறுவகையில் அமையலாம் என்கிறார் அவர்.
1. பொருள் அடிப்படையிலான விஷயம் – சூழலை மையமாகக் கொண்டது
2. உணர்ச்சி அடிப்படையிலான விஷயம் – சொல்பவரை மையமாகக் கொண்டது
3. து£ண்டல் அடிப்படையிலான விஷயம் – கேட்பவரை மையமாகக் கொண்டது
4. தொடர்பு உண்டாக்கல் அடிப்படையிலான விஷயம் – இணைப்பை மையமாகக் கொண்டது
5. தெளிவுறுத்தல் அடிப்படையிலான விஷயம் – பயன்படுத்தும் மொழிச்சொற்க ளை மையமாகக் கொண்டது
இவை ஐந்திலிருந்தும் மாறுபட்டு தன்னிடமே ஈர்க்கும் சக்தியுள்ள விஷயம் இலக்கியம் என்கிறார் யாகப்சன்.
6. இலக்கிய அடிப்படையிலான விஷயம் – தன்னையே மையமாகக் கொண்டது

இப்படிப்பட்ட விளக்கம், உருவவியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதாரணநிலையிலிருந்து விலகிய, அசாதாரண அமைப்புக் கொண்டவற்றையே (டீவியண்ட் ஃபார்ம்) இலக்கியமாக ஏற்பது. ஆனால் எல்ல இலக்கியங்களும் அசாதாரண வடிவம் கொண்டவை அல்லவே? நடப்பியல்சார் இலக்கியங்கள் இவ்விளக்கத்தின்கீழ் வருவது கடினம். எனவே இவ்விளக்கமும் பூர்த்தியானதாக இல்லை. டேவிட் லாட்ஜின் விளக்கமே இதைவிடப் பொருந்தியதாக உள்ளது.

அமைப்பியல்சார் விளக்கங்கள் இவற்றின் குறைகளை நீக்குகின்றன. அமைப்பியலில் இலக்கியத்தைப் பிரதி (டெக்ஸ்ட்) என்றும், விஷயம் (டிஸ்கோர்ஸ்) என்றும பிரிக்கிறோம். இலக்கியப் பிரதி என்பது ஒரு இலக்கியப் படைப்பு பெற்றிருக்கும் மொழியடிப்படையிலான வடிவம். அப்படைப்பில், மொழி செயல்படும் முறையை இலக்கிய விஷயம் (லிடரரி டிஸ்கோர்ஸ்) என்கிறோம்.

ஒரு படைப்பு, பிரதி என்ற முறையில் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கா விட்டாலும், இலக்கிய விஷயம் என்ற முறையில் நிச்சயமாக வேறுபட்டிருக்க வேண்டும் என்பது அமைப்பியலாளர் கருத்து. அதாவது வெளிப்படையான முன்புலஆக்கம் இல்லாவிட்டாலும் உள்ளமைவான முன்புலஆக்கம்தான் இலக்கியப் படைப்பை பிற ஆக்கங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

இங்கு இலக்கிய விஷயம் என்பது வெறும் உள்ளடக்கத்தை மட்டும் குறிப்பதன்று. மார்க்சியவியலாளர்கள், பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்தின் மேலாக உள்ள மேற்கட்டுமானங்களில் ஒன்றே இலக்கியம் என்று கொள்கின்றனர். இப்போது இந்த நிலைப்பாடு கேள்விக்குரியதாக்கப் பட்டுள்ளது. பண்பாடு என்ற அடிக்கட்டுமானத்தின் ஒரு வெளிநிலை (மேனிஃபெஸ்டேஷன்) மொழி என்றும், மொழி என்ற அடிப்படையின் மேற்கட்டுமானமே இலக்கியம் என்றும் கொள்ளலாம். ஆனால் அதேசமயம், ஓர் இலக்கியப் பிரதி ஒரு சமூகச் சூழலின் அழுத்தத்தால் வெளிப்படும் எழுத்துமுறை என்பது இங்கே மறுக்கப்படவில்லை. ஆனால் இலக்கியப் பிரதி என்பது மார்க்சியக் கருத்துருவாக்க நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் இங்கு ஆளப்படுகிறது.

ஓர் இலக்கியப் பிரதி எழுதப்படட நிலையில் முழுமை பெற்ற ஒன்று என்று மரபான கருத்துகள் சொல்கின்றன. ஆனால் அமைப்பியலாளர் அவ்வாறு கூறுவதில்லை. இலக்கியப் பிரதிகள், இலக்கியமாகப் படித்தல் என்ற செயலுக்கு உட்படும்போதுதான் முழுமை பெறுகின்றன. இச்செயல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பதை உள்ளடக்கியது. இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது புனைவாக ஏற்றுக் கொள்ளுதல் என்பதை உட்கொண்டது. அதாவது, உ. வே. சா. வின் மீனாட்சிசுந் தரம் பிள்ளை சரித்திரத்தை, சரித்திர விஷயத்திற்காக அன்றி, இலக்கியமாகப் படித்தல் என்ற நிலைக்குட்படுத்தும்போதுதான் அது இலக்கியம் ஆகின்றது. இலக்கியப் படிப்புக்குட்படாத எந்த நு£லும் இலக்கியம் ஆகாது.

இந்த நிலைப்பாடு இலக்கியம் என்ற கருத்தை விளக்கினாலும, வேறு ஒரு புதிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இலக்கியம் என்பது முன்புல ஆக்கம் கொண்டது; படிப்புச் செயலினால் முழுமை அடைகிறது என்றால் முன்புல ஆக்கம் செய்யப்பட்டு, இலக்கியப் படிப்பினை எதிர்நோக்கி வெளியிடப்படும் எந்த நூலும் (தரம் பற்றிய கருத்தின்றி) இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றாகிறது. ஆனால் உ. வே. சா. வின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற நூல்கள், வெளிப்படையான முனபுலஆக்கமோ இலக்கியமாகப் படிக்கப்படும் எதிர்பார்ப்போ இன்றி வெளியிடப்பட்டிருப்பினும், அவை இலக்கிய அந்தஸ்தை அடைந்துள்ளன. மேற்கூறிய கருத்தடிப்படையில், இவை முதல்நிலையில் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலை ஒரு தீவிரமான குறையைக் காட்டுகிறது. அதாவது தரமற்ற கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றையும் இலக்கியமாக ஏற்றலும், பிற அறிவுத்துறை நு£ல் கள், சிறந்த இலக்கியத் தரம் பெற்றிருப்பினும அவற்றை இலக்கியப் படிப்புக்கு ஈடுசெய்யும் இரண்டாம் தர நிலையிலேயே இலக்கியமாகக் கொள்ளலும் என்பது அந்தக் குறை. ஆகவே அமைப்பியலாய்வுகளில் தரமதிப்பீடு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனால் இந்த பயம் தேவையில்லை என்று தோன்றுகிறது. இலக்கியப் பிரதி முழுமை பெற இலக்கியப் படிப்பு என்பதைப் பூர்த்திசெய்யும் நூல்களே இலக்கியமாக அமையும். இலக்கியப் படிப்பு என்பது நுகரும் அழகியலின் விளைவாக எழுந்துள்ள பொழுதுபோக்குப் படிப்பு அன்று. அல்லது ஒரே ஒரு நூலை மட்டுமே படித்துவிட்டு அபிப்பிராயங்களை உருவாக்குவதன்று. இலக்கியப் படிப்பு முழுமை பெற்றதாக உருவாகாத நிலையில் தவறான மதிப்பீடுகளுக்கு அழைததுச் செல்லும். கல்வித்துறை ஆய்வுகளில் இன்று காணப்படும் தவறான மதிப்பீடுகள் இலக்கியப் படிப்புப் பயிற்சி இன்மையாலும ஏற்படுபவை.

பார்வை நூல்கள்

1. The Modes of Modern Writing-David Lodge, 1977.      2. ஸ்ட்ரக்சுரலிசம்-தமிழவன், 1982

 

திறனாய்வு