ஒருவன் (மெரீனா கடற்கரையில் என்று வைத்துக் கொள்ளுங்கள்) நடந்து கொண்டிருந்தான். காலில் ஒரு பாட்டில் தட்டுப்பட்டது. எடுத்துத் திறந்து பார்த்தான். (பட்டணத்தில் பூதம் போல, புகை, பிறகு) ஆனால் தோன்றியது, பூதம் அல்ல, அனுமான். “என்னை வெளியே விட்டாய். உனக்கு ஒரே ஒரு வரம்தான் தரமுடியும். என்ன வேண்டும் சொல்” என்றது அனுமான். “எனக்கு விமானத்தில் செல்லப் பிடிப்பதில்லை, கடல்குமட்டல்நோய் வேறு. நான் இலங்கைக்குப் போகவேண்டும். இராமஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டிக்கொடு” என்றான் அவன். “ஏம்பா, எவ்வளவு கான்கிரீட், எவ்வளவு இரும்பு உருக்கு செலவு? எப்படி கர்டர்களை கடல் ஆழத்திற்கு இறக்கி நடுவது? எவ்வளவு தொலைவு? வேறு எதையாவது கேள்” என்றது அனுமான். “சரி, அப்படியானால் ஒன்று செய். எனக்கு மூன்று முறை திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது. என் மனைவிகள் நான் அவர்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் அழுகிறார்கள், ஏன் சிரிக்கிறார்கள், ஒண்ணுமில்லை என்கிறபோது அவர்கள் மனசில் என்ன இருக்கிறது…இதெல்லாம் தெரிந்துகொள்ள வழிசெய்” என்றான் அவன். உடனே அனுமான் கேட்டது: “சரி சரி, இலங்கைக்குப் போகும் பாலத்தில் எத்தனை லேன் வேண்டும்? இரண்டா, நாலா? எவ்வளவு நேரத்தில் வேண்டும்?”
இப்படித்தான் இராமர் பாலம் முதன்முதலில் கட்டப்பட்டதாம்.