மெக்சிகோவைச் சேர்ந்த நாவலாசிரியர் கார்லோஸ் ஃபுவெண்டஸ் (Carlos Fuentes). அவரது முக்கிய நாவல் “ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம்”. 1960-70கள் இடையில் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஒரு பெருவளர்ச்சி, அல்ல, பெருவெடிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர்கள் கார்லோஸ் ஃபுவெண்டஸ், ஜூலியோ கோர்த்தஸார், ஜோர்ஹே லூயி போர்ஹே, காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் ஆகியோர். மெக்சிகோவின் 1910 புரட்சியைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த சமூக வரலாற்று நாவல் இது, நனவோடை உத்தியை முதன்முதலாகக் கையாண்ட நாவலும் இதுதான் என்பார்கள்.
ஆர்ட்டெமியோ குரூஸ் என்பவன் கதைத்தலைவன். 71 வயதாகும் அவன் மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் நினைவுகளில் இருபதாம் நூற்றாண்டு மெக்சிகோ சித்திரமாகிறது. மெக்சிகோ புரட்சியில் பங்கெடுத்த ஒரு சிப்பாய் அவன். அப்புரட்சி நிலச்சீர்திருத்தம், நில மறுபங்கீடு பற்றியது. ஏராளமாக நிலத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்குத் தருவது. 1920களில் அப்புரட்சி வெற்றியடைந்தாலும் தொடர்ந்து 1942 வரை சண்டைகள் நடக்கின்றன. புரட்சி கீழ்த்தர குழுச்சண்டைகளாக மாறிப் போகிறது.
புரட்சி நிறைவுற்ற பின்னர் பணத்தைக் குவிப்பது ஒன்றே குரூஸின் வாழ்க்கையாகிறது. எவ்வளவு ஊழல்மிக்க எந்தத் தீயவழியாக இருந்தாலும் தனது இலக்கினை அடைவதற்குக் கையாளுகிறான் குரூஸ்.
கதையின் பிற்பகுதியில் குரூஸ், ஒரு பண்ணை அடிமைப் பெண்ணுக்குத் தகாத வழியில் பிறந்தவன் என்பது தெரியவருகிறது. குரூஸ் பிறந்தவுடனே அவன் தாய் அடித்துத் துரத்தப்படுவதால், அவனை அவனது மாமன் லூனரோ வளர்க்கிறான். லூனரோ இறந்த பிறகு புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்கிறான் இளைஞனான குரூஸ். பின்னர் விவசாயிகளுக்குத் தேவையான நிலம் கிடைக்கிறது. ரெஜினா என்ற பெண்மீது காதல் கொள்கிறான். ஆனால் அவள் தூக்கிலிடப்படுகிறாள்.
ஒரு குழுவில் போரிடும்போது குரூஸ் கான்சாலோ பெர்னால் என்ற இளம் அதிகாரியுடன் சிறைப்படுகிறான். அவனிடமிருந்து அவன் வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை எல்லாம் அறிகிறான். பெர்னால் மரண தண்டனை அடைகிறான். குரூஸ் மன்னிக்கப் படுகிறான். பெர்னாலைக் காப்பாற்ற இவன் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
தன்னுடன் சிறையிலிருந்த பெர்னாலை ஏமாற்றி அவனிடமிருந்து பெற்ற தகவல்களை வைத்து அவன் சகோதரியை பிளாக்மெயில் செய்து திருமணம் செய்து கொள்வது குரூஸுக்குத் தவறாகத் தெரியவில்லை. காதலற்ற திருமணமாக இருந்தாலும், கேடலினா பெரிய நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதாலும் இத்திருமணத்தில் ஈடுபடுகிறான். கேடலினாவின் தந்தை டான் பெர்னால் இறக்கும்போது அவனுக்கு எல்லாச் சொத்தும் (பெரும்பாலும் அது நிலமாக இருக்கிறது) வந்து சேர்கிறது.. புரட்சிப் போராட்டத்தில் எப்படிப்பட்ட சுயநலவாத, பழிக்கு அஞ்சாத பணக்காரர்களை எதிர்த்துப் போராடினானோ அதேபோன்ற ஒருவனாக இவனே இப்போது மாறிவிடுகிறான்.
குடும்பத்தின் சொத்துகளைத் தனது பதவி, ஏமாற்றுகள், ஊழல்களால் அதிகரிக்கிறான். பிறகு மெக்சிகோவின் செய்தித்தாள் ஒன்றை வாங்கி, அதன் வாயிலாகத் தன் அதிகாரத்தை நிறுவுகிறான். அவனுடன் ஒத்துழைக்காத அரசியல் நபர்களின் கெளரவத்தைக் கெடுத்து அவர்கள் தொழில்களைப் பாழடிக்கிறான். இயற்கை வளங்களை அமெரிக்காவுக்கு விற்கும் ஊழல் தொழிலதிபர்களுக்குக் கருவியாக இருக்கிறான்.
அவனது மகன் லாரன்ஸோ. அவன்மீது அவன் தாய் கேடலினா பாசமாக இருக்கிறாள். அவனுக்கு 12 வயதாகும்போதே தாயிடமிருந்து பிரித்து கோகுயா என்ற இடத்திலுள்ள குடும்ப நிலத்தை மேற்பார்வை செய்ய மகனை அனுப்புகிறான். 17 வயது ஆகும்போது தனது இயல்பான லட்சிய சுபாவத்தின்படி அவன் பாசிசவாதிகளை எதிர்க்க ஸ்பெயினுக்குச் செல்கிறான். அங்கு போரில் அவன் கொல்லப்படுகிறான். குரூஸுக்கு தெரஸா என்ற மகள் மட்டுமே எஞ்சுகிறாள். மரணப்படுக்கையிலும் தன் உயிலின் இருப்பிடத்தைப் பற்றித் தவறான தகவல்களை மனைவிக்குத் தருகிறான். காரணம், தன் மகளால் பயனில்லை என்று தன் பெரும்பாலான சொத்துகளை அவனது காரியதரிசி பாடிலாவுக்கு அளித்திருக்கிறான்.
செயல்களுக்கு மனிதர்களைத் தூண்டுகின்ற இலட்சியவாதத்தின் சக்தி போகப்போக மங்குவதைப் பற்றி இந்த நாவல் சொல்கிறது. அந்த ஒளியில் மெக்சிகோ புரட்சியின் வரலாற்றை வைத்துப் பார்க்கிறது. இலட்சியவாத மதிப்புகளை இளமையில் கொண்டிருந்த குரூஸ், தனிப்பட்ட ஆதாயத்துக்காக எதையும் செய்யும் ஒரு தீய முதியவனாக மாறுகிறான். மரணப் படுக்கையில் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அவன் “சாதனைகள்” யாவும் பயனற்றவை என்ற உண்மைக்கு அவன் கண்கள் திறக்கின்றன. அவனது வாழ்க்கைக்கு அர்த்தமளித்தவை என்று அவன் நினைத்த அதிகாரம், ஆதிக்கம், பணம், பெண்கள் யாவும் இறுதியில் அவன் ஆன்மாவைக் களங்கப்படுத்தவே உதவியிருக்கின்றன.
அவன் வாழ்க்கை முழுவதுமே மரணப்படுக்கையில் அவன் கண் முன்னால் வந்து போவதாகக் கதை அமைகிறது. பலவேறு நடைகளைக் கலந்து ஃபுவெண்டஸ் கையாளுகிறார். தன்மைக் கூற்றாகவும், படர்க்கைக் கூற்றாகவும் பல பகுதிகள் மாறி மாறி அமைகின்றன. அவை திரும்பத்திரும்ப நனவோடையாக மாறுகின்றன. அவனது சிதைந்த ஞாபகங்கள் வாயிலாக ஒரு தனிமனிதனின் சிதைவை மட்டும் ஃபுவெண்டஸ் காட்டவில்லை, ஒரு புரட்சிக்காரனின் இலட்சியங்கள் சிதைவதைக் காட்டுகிறார், ஒரு தேசத்தின் இலட்சியக் கனவுகள் கருமையடைவதைக் காட்டுகிறார்.
ஒன்றிய அரசு முதலாக நம் நாடு நெடுகிலும் பல்வேறு மாநிலங்களிலும் நிறைந்திருக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடமாக அமையக் கூடிய நாவல் இது. தங்கள் தனிப்பட்ட செயல்கள் என்று அவர்கள் நினைப்பவை உண்மையில் நம் நாட்டின் சமூக வரலாறும்தான். மரணப் படுக்கை வரை செல்லாமல் சற்று வழியிலேயே தங்கள் உண்மையான சாதனை என்ன என்பதை அவர்கள் நிதானமாக நினைத்துப் பார்த்தால் தங்கள் இருப்பின் அர்த்தத்தை அவர்கள் உணர முடியும்.த