ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2
(இந்தக் கட்டுரையின் முதல் பகுதி சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டது. இது இரண்டாவது பகுதி.)

விளம்பரங்கள்

“சிவப்பழகு பெறப் பயன்படுத்துங்கள் ஃபேர் அண்ட் லவ்லி கிரீம்” என ஒரு கம்பெனி விளம்பரப்படுத்துகிறது. “பொன்னிறமான அழகுக்கு ரெக்ஸோனா” என்று அந்த சோப் விளம்பரம் சொல்லுகிறது. இவை விளைவிக்கும் மனப்பாங்கு, இவற்றின் அடிப்படையிலுள்ள கருத்துருவம் என்ன? ஏன் சிவப்பழகு? ஏன் பொன்னிறமான உடல்? கருப்பு அழகில்லையா? இந்தியா போன்ற வெப்பமான ஒரு நாட்டில், உடலுழைப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான மக்கள் எப்படி சிவப்பாக, பொன்னிறமாக இருக்க முடியும்? சிவப்பழகு என்பது ஒரு உடலுழைப்பற்ற மேல்தட்டு வர்க்கத்தின், பார்ப்பனீயத்தின் கருத்தாக்கம். இதன் அடிப்படையிலும் சாதியமைப்பே உள்ளது. அது தொலைக் காட்சி வாயிலாக, பத்திரிகைகள் வாயிலாக, வானொலி வாயிலாக எல்லார்மீதும் திணிக்கப்படுகிறது.
**********************************************************************
நான்கு சாதிகளுக்கும் நான்கு வர்ணங்கள் கற்பிக்கப்பட்டன. பிராமணர்களுக்கு வெள்ளை, சத்திரியர்களுக்கு மாநிறம், வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் கருப்பு. ஆரியர்கள் தூய வெள்ளையாக இல்லாவிட்டாலும, நல்ல நிறம் கொண்டவர்களே. தாசர்களும் தஸ்யூக்களும் கருப்பு நிறத்தவர்கள்.
-ரோமிலா தாப்பர், பாரம்பரியம் முதல் அரசு வரை, ப.44
——————————————-

ஏங்க, உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொல்றேன். போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னுதானே சொல்றேன்….
அப்படி என்னம்மா விசேஷம் இதயம் நல்லெண்ணெயிலே?
அதில காரல் இல்ல, கசப்பில்ல, கொலஸ்டிரால் இல்ல. அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், ம், போய் வாங்கிட்டு வாங்க….
-இதயம் நல்லெண்ணெய், டிவி-வானொலி விளம்பரம்
************************************************************************************

இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தைச் சற்றே கவனிப்போம். அது என்ன சொல்கிறது? “ஏங்க உங்களைத் துவைச்சுப்போடுங்க, சமைச்சுப்போடுங்கன்னா சொன்னேன்?” இந்தக் கேள்வியின் தொனி என்ன? ‘உங்களை என்ன பெண்கள் வேலை அல்லது அசிங்கமான வேலைகளையா செய்யச் சொல்கிறேன்?’ இதை ஒரு பெண் தன் கணவனிடம் சொல்வதாகக் காட்டுகிறது விளம்பரம். அப்படியானால், ஓர் ஆடவன் சமைத்தல், துணி துவைத்தல் முதலியவற்றைச் செய்வது ஏற்கப்படாத விஷயம். இப்படிக் கூறுவது ஆதிக்கக் கலாச்சாரம். மேலும் இந்தத் தொனி விளம்பரத்தின் கடைசிவரை (பொம்பளைங்க சமாச்சாரம்) வரை தொடர்கிறது.
வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் ஆண் (வண்ணான்), தெருவைச் சுத்தம் செய்யும் ஆண் (தோட்டி) தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்படுகிறான். இதே துணி துவைத்தல், சுத்தம் செய்தல் போன்றவற்றை வீட்டிற்குள் செய்யும் பெண்ணும் தாழ்த்தப்பட்டவளாக நடத்தப்படுகிறாள். துணிதுவைப்பது, சுத்தம் செய்வது போன்றவை, சாதி அல்லது பால் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலைகளாக்கப் பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளை ஆண்கள் செய்வது சகஜம். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில் பெண்மணிகள் போர்வீராங்கனைகளாக மாறியதைக் கண்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக விதித்துள்ள உயிரியல் சார்ந்த பொறுப்புகள் அன்றி வரையறுத்த பணிகளை விதித்தது யார்? இந்த விளம்பரம் பெண்ணின் வரையறுக்கப்பட்ட பணிகள் வீட்டில்தான் என்கிறது. இவ்வளவு படித்தவளாகக் காட்டப்படும் இந்தப் பெண்மணி (நல்லெண்ணெயில் கொலஸ்டிரால் இல்லை என்பதை அறிந்தவள்) தானே போய் அதை வாங்கிவரத் தெரியாதவளா? கணவனிடம்தான் வாங்கிவரச் சொல்லவேண்டும். அதுதான் பெண்ணுக்கு அழகு. பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடம். மேலும் இதயம் நல்லெண்ணெயில் என்ன குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்வதுகூட “பொம்பளைங்க சமாச்சாரம்”. (இதை ஒரு பெண்ணே கூறுகிறாள்). சமைத்துப் போட்டதை நாக்கை நீட்டிக்கொண்டு குற்றம் குறை சொல்லிவிட்டுச் சாப்பிட்டுப் போவதுதான் “ஆம்பளைங்க சமாச்சாரம்” போலும். (இந்த விளம்பரத்தில் ஒரு தவறான முன்வைப்பும் இருக்கிறது. இதயம் நல்லெண்ணெயில் மட்டும்தான் கொலஸ்டிரால் இல்லை என்பதில்லை, எந்த நல்லெண்ணெயிலுமே அது இல்லை.)

இவ்வளவு கலாச்சார வரையறைகளை-ஒரு நிலவுடைமைச் சமூகம் வரையறுத்த மதிப்புகளை-ஆண்மை வீட்டிற்கு வெளியே) பெண்மை (வீட்டிற்கு உள்ளே) என்பதற்கான கருத்துருவங்களைக் கொண்டிருக்கும் விளம்பரம் இது. எல்லாக் கலாச்சாரச் சாதனங்கள் வாயிலாகவும் தமிழ்நாட்டில் விஷம்போலப் பரப்பப் படுகிறது. இந்த நாட்டின் அரசாங்கம் உண்மையில் சமத்துவத்திலோ பெண்களின் முன்னேற்றத்திலோ நம்பிக்கை கொண்டதாக இருந்தால் இதனை எல்லா வெகுஜன சாதனங்களிலும் அனு மதிக்கலாமா? இதுபோன்றவற்றை அரசாங்கம் அனுமதிப்பதற்குக் காரணம், இவை தரும் பணம். வருமானம். அதாவது அரசாங்கம் ஒரு முதலாளியாகச் செயல்படுகிறது. பொதுமக்கள் நன்மையைவிட பணத்தையே பெரிதாகக் கருதுகிறது. தனக்குப் பணத்தை வாரி இறைக்கக்கூடிய முதலாளிகளின் சார்பில் நிற்கிறது. இவ்வாறு முதலாளிளின் சார்பாக, நிலவுடைமை மதிப்புகளின் சார்பாக, பெண்ணடிமைத் தனம், சாதி முதலியவற்றின் சார்பாக இயங்கும் இந்த அரசாங்கம், பெரும்பான்மை யோராக உள்ள ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது நேசமாக நடந்துகொள்ளும் என்று யார்தான் நம்பமுடியும்?

இன்னும் ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே செல்வோம். லியோ டாய்ஸ் விளம்பரம் இது. இதில் ஆண்குழந்தைகளுக்கு வேறு விளம்பரம், பெண் குழந்தைகளுக்கு வேறு.
ஆண்குழந்தைகளின் விளம்பரத்தில்: சுடுகின்ற வீரர்கள், தப்பிக்கும் வாகனங்கள், ஓடுகின்ற கார்கள், இப்படி சுமார் ஒரு நிமிட நேர விளம்பரத்தில் ஆறேழு கட் செய்யப்பட்டு துடிப்புடன் இணைக்கப்பட்ட காட்சிகள்.
பெண் குழந்தைகளுக்கான விளம்பரத்தில்: ஒரு அழகான பெண் பொம்மை, நன்கு அலங்கரிக்கப்பட்டு, ஆடம்பரமாக, கையில் ஒரு குழந்தை பொம்மையுடன், மெதுவாகத் தன் அழகுத் தோற்றத்தைக் காட்டுவதுபோலத் திரும்புகிறது. இதில் ஒரு கட் கூடக் கிடையாது. மென்மை இனிமை மெதுத்தன்மை. இந்த இரு விளம்பரங்களையும் பார்க்கின்ற சிறார் மனத்தில் என்ன விளைவுகளை இவை ஏற்படுத்தும்? ஆண்கள் என்றால் துடிப்பு, ஓட்டம், துப்பாக்கி, சண்டை, அட்வென்ச்சர். பெண்கள் எனறால் மென்மை, அலங்காரம், அழகு, கவர்ச்சி. இந்திய சினிமாவிலும் இதே மதிப்புகள்தான் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றில் கவனிக்க வேண்டியது இதுதான். எப்படி வெகுஜனக் கலாச்சார சாதனங்கள், விளம்பரங்கள், ஏற்கெனவே சமூகத்தில் ஏற்கப்பட்ட மதிப்புகளை இன்னும் ஆழமாக ஏற்கும் வகையில் மக்களிடம் பரப்புகின்றன என்பது. ஜனநாயகம் என்று சொல்லப்படும் போர்வையில் இவற்றால் வெளிப்படுத்தப்படுவன ஜனநாயக, சமத்துவ மதிப்புகள் அல்ல. முதலாளித்துவத்தின், சாதியத்தின், அதிகாரத்தின், பணபலத்தின் மதிப்புகள்தான் இவை. ஜனநாயகம் என்பது பணபலம், சாதிபலம், அதிகாரபலம் என்பதை மறைமுகமாக மக்களை ஏற்கவைக்கும் முறை இது. இவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மக்களுக்கு தேர்தல்சமயத்தில் புழங்கும் கருப்புப் பணமோ, தேர்தலில் பணக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் பெறுவதோ, ரௌடியிசம் இவற்றால் வலிமை பெறுவதோ எப்படித் தவறாகத் தோற்றமளிக்கும்? இதெல்லாம் இயற்கைதானே என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆதிக்கக் கலாச்சாரத்தின் மோசமான அம்சமே இதுதான். ‘நாம் பார்க்கும் உலகம்தான் இயற்கையானது’ என்ற கருத்துக்கு ஆட்படுவது. வாழ்க்கையில் நாம் காணும் ஏற்ற்த் தாழ்வுகள், வர்க்க வேறுபாடுகள், கொடூரங்கள் யாவும் இயற்கை நியதி, இவற்றை எதிர்த்து நாம் ஒன்றும் செய்ய இயலாது, ஏற்றுக் கொள்வது நம் தலைவிதி என்னும் மனப்பான்மையை ஆதிக்கக் கலாச்சாரம் உருவாக்குகிறது.
1. இதனால் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சமூகநீதிக்காகப் போராடும் குணம் அறவே அற்றுப்போகிறது.
2. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அதற்குப் பழமொழி சொல்வார்கள். பணக்காரன்தானே தேர்தலில் நிற்க முடிகிறது என்றால், ‘ஐந்து விரலும் ஒன்றாகவா இருக்கிறது, விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்’ என்பார்கள். லஞ்சம் வாங்குகிறார்களே எல்லாவற்றுக்கும் இது தவறல்லவா என்றுகேட்டால், ஆமாம், ‘தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா’ என்று அதையும் ஏற்றுக்கொண்டு ஒரு பழமொழி சொல்வார்கள்.

தகவலளிக்கும், பயனளிக்கும் விளம்பரங்களால் தீமையில்லை. வணிக விளம்பரங்க ளே அவற்றின் கவர்ச்சியாலும் மனத்தை பாதிக்கும் தன்மையாலும், நம்மால் ஆராயப் படவேண்டியவை. சாதாரணமாக, ஒரு வணிக விளம்பரம், விற்பனைப் பொருளைப் பற்றிய உண்மையைத்தான் கூறவேண்டும். ஆனால் இன்றைய வணிக விளம்பரங் களில் நியாயம் இலலை. முதலாளித்துவக் கருத்தியலே அவற்றில் வெளிப்படுகிறது என்பதோடு அவை விளம்பரம் செய்யும் பொருள்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையற்றவை.
வெகுஜனச்சாதனங்கள் விளம்பரங்களையே முற்றிலும் சார்ந்துள்ளன. தாங்கள் பிழைத்தாக வேண்டுமெனில், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முதலாளித்துவ நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் காசு அடிக்க வேண்டும், பொதுமக்களை அவற்றின் நுகர்வோராக மாற்றவேண்டும். இதற்குப் பத்திரிகைகளும் விதிவிலக்கில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை விளம்பரங்கள் வெகுஜனச் சாதனங்கள் ஊனமுறாது தாங்குவதற்குரிய அளவிலேயே பயன்படுத்தப்பட்டன. இன்று இந்த நிலை மாறி, விளம்பரங்கள் இல்லாமல் எந்த வெகுஜனச் சாதனமும் இயங்க முடிய்£து என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இவை நாடும் விளம்பர முதலாளிகளை எந்தப் பத்திரிகையும் தொலைக்காட்சியும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆகவே முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள், ஊடகங்கள் என்று அனைத்துமே ஒருசில முதலாளிகளுக்காக இயங்குபவை ஆகிவிட்டன. பொதுவுடைமை நாடுகளில் அரசாங் கத்தின் வாய்க்கருவியாக மட்டுமே ஊடகங்கள் இயங்குகின்றன என்று குறை கூறினார்கள் முன்பு. அரசாங்கத்தின் வாய்க்கருவியாக இயங்குவதே தவறு என்றால் சுயநலம் மிக்க ஒரு சில முதலாளிகளுக்காக இயங்குவது மட்டும் நியாயமா என்ற கேள்வியை அவர்கள் யோசித்துப்பார்க்கட்டும். ஒருசில முதலாளிகளின் கைப்பாவையாக அரசாங்கம் இயங்குவதைத்தான் இவர்கள் சுதந்திரம் என்கிறார்கள்.

——————————————
நம் நாட்டில் எந்த மோசமான திரைப்பட நடிகரும் நடிகையும் எந்த நிமிடத்திலும் ஒரு அரசியல் தலைவராகலாம். ஒரு பத்திரிகையும் நடத்தலாம். ஒன்று அல்லது சில தொலைக்காட்சிச் சேனல்களைத் தங்களுக்கெனத் தொடங்கி நடத்திக்கொள்ளலாம். அரசியல், திரைப்படம், பத்திரிகை உள்ளிட்ட பிற ஊடகங்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாமல், ஒரே நோக்கம் கொண்டு, சமூகத் தின் தாழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோ திகளின் கூட்டுச் செயல்பாடுதான் நம் அரசாங்கம் என்று சொல்லலாம். அதனால் அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிறர் தங்களை எதிர்க்காமல் இருக்கக் காவல் துறையை மட்டும் தங்கள் வயப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.
மனித மேம்பாடும் கலைத்தொடர்புப் பணியும் என்ற கட்டுரை.
———————————–

விளம்பரங்கள், மக்களின் நோக்கங்களையும் வாழ்க்கை மதிப்புகளையும் பெருமளவில் பாதிக்கின்றன. நமது வாழ்க்கையிலேயே விளம்பரப் பாணியிலான பேச்சு பழகிவிட்டது. பெரும்பத்திரிகைகளில் வரும் புனைகதைகள், நவீன விளம்பரத்தின் பாணியையும் தந்திரங்களையும் மிகுஉணர்ச்சியையும் பயன்படுத்துகின்றன. எந்தப் பொருளை அல்லது செயலை விவரிப்பதானாலும், கவர்ச்சியான, மேலோட்டமான, இனிமையான, கிளிப்பிள்ளை வாய்பாட்டுத் தொடர்களைப் பயன்படுத்திச் சொல்வது பழக்கமாகிவிட்டது. இவை திரும்பத்திரும்பப் பயன்படுத்தித் தேய்ந்துபோன சொற்களையும் தொடர்களையும் (அவற்றிற்கடியில் அதே அளவு தேய்ந்துபோன சிந்தனைகளையும்) கொண்டவை. அதனால் மக்களின் சிந்தனையை மழுங்கடித்துப் புதிய விதங்களில் சிந்திக்கவிடாமல் செய்துவிடுகின்றன.

இம்மாதிரி நடை அரசியலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேடைப்பேச்சு என்று கவர்ச்சியான ஒன்றாக மாறியதோ அன்றே சிந்தனைக்கு மோசம் வந்துவிட்டது. அரசியல் பேச்சுகளிலும் தாய்க்குலம், ரத்தத்தின் ரத்தம், உடன்பிறப்புகள், அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம், நீ கோடு போட்டால் நான் ரோடு போடுவேன் போன்ற வண்டவாளத் தொடர்களைக் காணலாம். திரைப்படப் பாடல்களிலும் இத்தகைய தேய்ந்துபோன விஷ(ய)ங்களே பயன்படுத்தப்படுகின்றன.

காதல், நட்பு, சகோதரத்துவம், தாய்மை, இன்பம், மகிழ்ச்சி, இனக்கவர்ச்சி போன்றவை பற்றிய சில விஷயங்களையே திரும்பத்திரும்பக் கூறி விளம்பரம் இவற்றைப் பொருள் களின்மீது திணிக்கிறது. குறிப்பிட்ட ஒரு ஆடையை அணிந்தால் கணவன் மனைவி அன்பு பெருகும்; குறிப்பிட்ட கடையில் பொன்னகை வாங்கினால் அவர்கள் நெருக்கம் மிகுதியாகும்; (இதற்கு ஏற்கெனவே வாழ்க்கையையும் பொன்னையும் சம்பந்தப் படுத்திச் சொல்லப்படும் கருத்துகள் அரணாக உள்ளன); குறிப்பிட்ட ஷேவிங் கிரீமை அல்லது செட்டைப் பயன்படுத்தினால்தான் மனைவியின் காதல் பெருகும்; குறிப்பிட்டதொரு பற்பசையைப் பயன்படுத்தினால்தான் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்; இதுபோல் எல்லாம் விளம்பரங்கள் மனித உறவுகளைச் சிறுமைப் படுத்துகின்றன. குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணம் வைப்பதற்காக ஒரு மனைவி கணவனை நேசிக்கிறாள் என்பதோ, ஒரு குறிப்பிட்ட கடையில் வாங்கிய சேலையை அணிந்ததற்காகக் கணவன் மனைவியை விரும்புகிறான் என்பதோ எவ்வளவு கேவலமானவை? இம்மாதிரி விளம்பரங்கள் காதல் கொஞ்சல்களுடன், ஆண்பெண் நெருக்கக் காட்சிகளுடன், அந்தரங்கமான பேச்சுகளுடன், பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்கி, மக்களின் ஆழ்மனத்தைச் சென்று அடைகின்றன. குழந்தைகளின் நாப்கின் (தேவையா?), சோப்பு போன்றவற்றை விற்பதற்கும் பெண் ணின் கவர்ச்சி தேவைப்படுகிறது.

இம்மாதிரி ஆடம்பரப் பொருள்களும், அவற்றை ஒட்டிய செயற்கையான கொஞ்சல்க ளும், சேட்டைகளும் முனகல்களும் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது போலவும், இல்லாவிட்டால் வாழ்க்கை சாரமற்றது என்பதுபோல வும் ஒரு கருத்து பார்ப்பவர் மனத்தில் தோற்றுவிக்கப்படுகிறது. நமது வாழ்க்கையைத் தலைகீழாக்கி, வாழ்க்கைக்காகப் பொருள்கள் என்பது போய், வணிகப் பொருள்களுக் காகவே வாழ்க்கை என்பதுபோன்ற ஒரு பிரமையை இவை உண்டாக்குகின்றன.

பெண்கள் வெகுஜனச் சாதனங்களால் முற்றிலும் தவறான பயன்பாட்டுக்கு உட்பட் டுள்ளனர். விளம்பரங்களில் வரும் பெண்கள் கவர்ச்சியுடனும் அழகுடனுமே இருப்பர். அநேக விளம்பரங்கள் திரைப்பட நடிகர் நடிகையரை இதற்காகவே பயன்படுததுகின் றன. இவ்வாறு காட்டப்படுவதன் அர்த்தம், பெண்கள் உடல் அழகினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறார்கள் என்றும், கவர்ச்சி மட்டுமே ஆண்கள் உலகில் பெண்களுக்கு மதிப்பினைப் பெற்றுத் தரும் என்றும் வலியுறுத்துவதற்கே ஆகும். பெண் நுகர்ச்சிப் பொருளாக மட்டுமே படைக்கப்பட்டவள் என்னும் கருத்து இதன்மூலம் நிலைப்படுத்தப் படுகிறது. மீறிச் சென்றால், பெண்கள் குடும்பத்திற்கு உட்பட்ட அளவில் மட்டுமே காட்டப்படுவர், அப்போதும் கவர்ச்சியாகவே. சான்றாக இடுப்புவலிக்குத் தடவும் கிரீமுக்கு விளம்பரத்தில் வரும் மனைவி எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறாள் பாருங்கள்.

பெண்கள் விளம்பரங்களில் விஞ்ஞானிகளாகவோ, ஆசிரியர்களாகவோ, சமூகப் பணியாளர்களாகவோ, நல்ல தாய்மார்களாகவோ கூட வெகுஜனச் சாதனங்களில் காட்டப்படுவதில்லை. அதிக பட்சம் சோப்புக்கும் கிரீமுக்கும் குழந்தை உணவுக்கும் டாக்டர் வேஷம்போட்டுக்கொண்டு கவர்ச்சிப் பெண்கள் வருவார்கள். சமூகத்தில் உண்மையில் பெண்கள் இயங்கக்கூடிய துறைகளைக் காட்டினால் அவர்கள் கவர்ச்சி யை வியாபாரமாக்க முடியாது என்பது காரணம்.

அழகு சாதனப் பொருளாயினும், வீட்டு உபயோகப் பொருளாயினும் (ரீகல் சொட்டு நீலம் முதல் வாஷிங் மெஷின் வரை) பெண்கள் நுகர்வோராக மட்டுமே விளம்பரங் களில் இடம்பெறுவர். இது சமூகத்தில் பெண்கள் நுகர்வோராக மட்டுமே உள்ளனர், (அதாவது செலவு வைப்பவர்களாக மட்டுமே உள்ளனர்), ஆக்குவோராக படைப்பவர் களாக இல்லை என்ற இன்னொரு காலங்காலமான மாயையை நிலைப்படுத்துகிறது. உண்மையில் பார்த்தால், சமூகத்தில் ஆண்கள் உழைப்பைப் போலப் பன்மடங்கு செய் தும், அவர்களைக் காட்டிலும் குறைந்த கூலி பெற்று, அல்லது கூலி பெறாது, சுரண்ட லுக்கு உட்படுத்தப்படுபவர் பெண்களே ஆவர்.
1930ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆங்கிலஇலக்கியத் திறனாய்வாளர் எஃப். ஆர். லீவிஸ், “விளம்பரங்கள் மலிவான, எந்திரரீதியிலான உணர்ச்சித் தூண்டல்களை உருவாக்கி, மிக எளிய முயற்சியால் கிடைக்கும் உடனடி இன்பங்களை மட்டுமே நாடவைக் கின்றன” என்று சாடினார்.

விளம்பரங்கள் மோசமான உணர்ச்சித்தூண்டல்களையும் தரம் தாழ்ந்த மொழியையும் உருவாக்குகின்றன. மக்களுடைய உணர்ச்சித் தேவைகளைச் சுரண்டிப் பிழைக்கின்றன.
பேராசையையும் போலித்தனமான வாழ்க்கையையும் மேல்நாட்டு வாழ்க்கையைப் பார்த்து காப்பி அடிப்பதையும் உருவாக்குகின்றன.
மென்மையான உணர்வுகளைக் கொன்றுவிடுகின்றன.
விமரிசன பூர்வமாக வாழ்க்கையை நோக்கவிடாமல் செய்கின்றன
என்பது லீவிசின் கருத்து. அவர்கூறிய இக்கருத்துகள், விளம்பரங்களுக்கு மட்டுமின்றி, பொதுவாக வெகுஜனச் சாதனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
———————-
“விளம்பரங்களின் வடிவம், உள்ளார்ந்த கட்டளைகள், து£ண்டுதல்களை நம்பியிருக்கி றது. இவை நம் சிந்தனையைக் கட்டுப்படுத்தி, ஒரே பாணிக்கு மாற்றிவிடுகின்றன. ளிம்பரங்களில் காணும் பொருள்களைக் கொண்ட போலியான ஒரு உலகில் மனிதனை வாழவைத்து, நிஜவாழ்க்கையை வெறுப்புடன் நோக்கச் செய்கின்றன. ஆடம்பரமான, பணக்காரத்தனமான வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகளைத் தங்கள் காட்சிப்படிமங்கள் மூலம் உருவாக்குகின்றன. இதனால் போலியை நிஜமாகவும், நிஜத்தைப் போலியாகவும் நம்பவைக்கின்றன.”
-மார்ஷல் மெக்லு£ஹன், தொடர்பு மொழியாக விளம்பரம் என்ற நு£லில்.
———————————–

சமூகம்