(“ஆங்கில நோயாளி “அல்ல)
ஆங்கிலேய நோயாளி என்பது மைக்கேல் ஓன்டாட்ஜீ என்ற நாவலாசிரியர் 1992இல் எழுதிய நாவல். இவர் இலங்கையில் பிறந்த கனடா நாட்டவர். உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர்.
கதையின் பின்னணி, வட ஆப்பிரிக்காவிலும் இத்தாலியிலும் நடக்கும் உலகப் போர். கதை தொடர்ச்சியாகச் சொல்லப்படாமல் முன்னும் பின்னும் மாறிமாறி நான்-லீனியராகச் சொல்லப்படுகிறது. நாவல் முழுவதும் பல வேறு ஞாபகங்களின் கொலாஜாக (ஒட்டிணைப்புகளாக) அமைந்து போர், தேசியத்தன்மை, அடையாளம், இழப்பு, காதல் போன்ற பல விஷயங்களைப் பேசுகிறது.
கதையின் பாத்திரங்கள் ஒருவர்க்கொருவர் தொடர்பற்ற நான்கு பேர். 1945இல் ஓர் இத்தாலிய நாட்டு வில்லாவில் (கன்னிமாடம்-வில்லா சான்கிராலாமோ) வசிப்பவள் இளம் கனடா நாட்டு நர்ஸ் ஹானா. ஜெர்மானியர்கள் பின்வாங்கும்போது எல்லா இடங்களிலும் வெடிகளைப் புதைத்துச் சென்றிருக்கிறார்கள். மற்ற நர்ஸுகள் ஓடிவிட்டாலும் அவள் மட்டும் தன் நோயாளியுடன் தங்கியிருக்கிறாள். அந்த நோயாளி விமானம் எரிந்து விழுந்தபோது உடல்முழுவதும் கரிந்து உருத்தெரியாமல் போனவன். அவனுடன் அவள் ஒரு கேரவானில் வந்தாலும், அவனை இடம்பெயர்க்க முடியாமையால் கன்னிமாடத்தில் தங்குகிறாள். அவன் ஆங்கிலேயன் என்று நினைக்கிறாள். அவனுடைய ஒரே சொத்தான ஹெரோடோடஸின் வரலாற்றுக் கதைகளைப் படித்துக் காட்டுகிறாள். அவன் அவ்வப்போது நினைவுவந்து தன் பழைய கதைகளைச் சொன்னாலும் அவனுக்குத் தன் பெயர் மறந்து போய்விட்டது.
ஒருநாள் ஹானாவின் தந்தையின் பழைய நண்பன் கேரவாகியோ (இத்தாலிய-கனடியன்) அவளைத் தேடி வருகிறான். வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரர்களுக்காகப் பணிபுரிந்தவன். ஜெர்மானியர்களிடம் அவன் பிடிபட்டபோது அவன் கட்டைவிரல்களை வெட்டிவிடுகிறார்கள். நான்குமாதம் ஒரு மருத்துவமனையில் குணம் பெற்று வந்தபோது ஹானாவைப் பற்றி கேள்விப்பட்டு அவளை வந்து அடைகிறான்.
ஒருநாள் அந்த வில்லாவின் பழைய பியானோ ஒன்றை ஹானா வாசிக்கிறாள். இசைக்கருவிகளிலும் வெடிகுண்டுகளை மறைத்துவைப்பது ஜெர்மானியர் வழக்கம். அதனால் அதைச் சோதிப்பதற்காக இரண்டு பிரிட்டிஷ் படைவீரர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் சீக்கியன் (கிர்பால் சிங், சுருக்கமாக கிப்). கிப் வில்லாவின் குண்டுகளை நீக்க அங்கேயே தங்குகிறான்.
ஆங்கிலேய நோயாளிக்கு நினைவு வந்து தன் பழைய கதையைச் சொல்கிறான். பிரிட்டிஷ்காரர்களுக்காக வட ஆப்பிரிக்கப் பாலைவனத்தை ஆராய்ந்து நிலப்படம் வரைந்து கொண்டிருந்தவன். பெயர் (லாஜ்லோ டி) அல்மாசி. ஹங்கேரி நாட்டுப் பிரபு. ஒருசமயம் ஜெஃப்ரி கிளிப்டன், அவன் மனைவி கேதரீன் என்பவர்கள் அவனோடு இணைகிறார்கள். கேதரீனோடு அவனுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படுகிறது. விரைவில் கேதரீன் விலகிவிட்டாலும், அவள் கணவன் கண்டுபிடித்து விடுகிறான். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெஃப்ரி அல்மாசிமீது விமானத்தை மோதிக் கொல்ல நினைக்கிறான். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவனே இறந்துபோகிறான். கேதரீன் படுகாயமடைகிறாள். அல்மாசிக்கு காயமில்லை. காதரீனைக் காப்பாற்ற எண்ணி ஸ்விம்மர்ஸ் குகையில் அவளை ஒளித்து வைக்கிறான். நான்கு நாட்கள் பாலைவனத்தில் நடந்து அடுத்த நகரத்தை (எல் தாஜ்) அடைந்தபோது தன் பெயர் காரணமாக ஆங்கிலேயர்களாலேயே ஒற்றன் எனக் கைதுசெய்யப் படுகிறான். கேதரீன் இறந்துபோகிறாள். அல்மாசி பிறகு விடுதலை செய்யப்படுகிறான்.
கேதரீனைத் தேடிவந்த அல்மாசி, மணலில் புதைந்திருந்த ஒரு விமானத்தில் அவள் உடலை ஏற்றிச் செல்ல நினைக்கிறான். பறக்கும்போது விமானம் எரிந்து போகிறது. அல்மாசியின் உடல் முழுவதும் கரிந்துபோகிறது. அப்போது பெடூயின் இனத்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்கள்.
அல்மாசியைப் பற்றி கேரவாகியோவுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அவன்மீது சந்தேகம். ஆனால் உடல்கரிந்த நிலையில் அவன் இன்னான் என நிரூபிக்க முடியவில்லை.
கிப், பிரிட்டிஷ் படையில் வெடிகுண்டு நீக்கும் ஏவலாளனாகப் பணிபுரிகிறான். சஃபோக் பிரபு என்பவரின்கீழ் பயிற்சி பெற்றவன் அவன். அவர்கள் குடும்பம் இறந்துபோன பிறகு அவன் இத்தாலிக்கு வருகிறான். கருப்பனாகவும் இந்தியனாகவும் வெடிகுண்டு நீக்குபவனாகவும் இருந்ததால் அவனை வெள்ளையர் அவமதிக்கின்றனர். முதலில் ஹானாவும் வெறுத்தாலும் பிறகு அவனும் ஹானாவும் காதலர்கள் ஆகின்றனர்.
விரைவில் ஹானாவின் இருபத்தோராம் பிறந்த நாள் வருகிறது. எல்லாரும் கொண்டாடுகின்றனர்.
இந்த நான்கு பேரும் தங்கள் தங்கள் ஊரிலிருந்து போரினால் இடம் பெயர்ந்து மிகத் தொலைவில் இருப்பவர்கள். அந்தக் கைவிடப்பட்ட வில்லாவில் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
கிப்பும் ஓரளவு சுகமாகவே நாட்களைக் கழித்து வருகிறான். அந்தச் சமயத்தில் திடீரென வானொலி வாயிலாக அமெரிக்கர்கள் ஜப்பானில் அணுகுண்டு போட்ட செய்தி வருகிறது. வெள்ளையர்கள்மீது நன்னம்பிக்கை வைத்திருந்த கிப்புக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அணுகுண்டு வீச்சு ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை எனக் கருதுகிறான். கேரவாகியோவும் அமெரிக்கர்கள் ஒரு வெள்ளையர் நாட்டின்மீது நிச்சயமாக குண்டு போட்டிருக்க மாட்டார்கள் என்கிறான். குண்டுபோட்ட வெள்ளையர்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய நோயாளியைக் கருதி தனது துப்பாக்கியால் அவனைச் சுடுவதற்குத் தயாராகிறான். ஆனால் மனமின்றி, தனது மோட்டார் சைக்கிலில் அங்கிருந்து ஓடிமறைகிறான். பிறகு அந்த வில்லாவுக்கு அவன் திரும்பி வரவேயில்லை. (பிறகு அல்மாசி இறந்து போகிறான், ஹானா மருத்துவக் கேரவானில் தன் பணிக்குத் திரும்பிவிடுகிறாள்.)
பல ஆண்டுகள் கழித்து, காட்சி மாறுகிறது. கிப் இந்தியாவில் இருக்கிறான். அவன் இப்போது ஒரு டாக்டர். சொந்தமாகக் குடும்பம். சிரிக்கும் அழகான மனைவி. அவன் வாழ்க்கை நிறைவுபெற்று விட்டது. ஆனால் அவ்வப்போது ஹானாவுக்கு என்ன நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டே இருக்கிறான்.
ஓன்டாட்ஜீ ஒரு கவிஞர், நம் சமகால நாவலாசிரியர். கொழும்பில் 1943இல் பிறந்தவர். இந்த நாவலுக்கு புக்கர் பரிசு, கவர்னர் ஜெனரல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் கிடைத்துள்ளன. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.