2017 பொங்கலுக்குப் பிந்திய வாரம் தமிழ்நாட்டு, இந்திய மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாரம். உலகம் எத்தனை எத்தனையோ போராட்டங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் தன்னெழுச்சியாக, எந்தக் கட்சியின் பின்புலமும் இன்றி, எந்தப் பெரிய கோடீஸ்வரர்களின் ஆதரவும் இன்றி ஓர் இனத்து இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக, பண்பாட்டுக்காகத் திரண்டெழுந்த இந்த நிகழ்வு, அதிலும் மிகப் பொறுப்பாக அறவழியில், மிக அமைதியான முறையில் நடைபெற்று வருவது உலகத்துக்கே ஒரு முன்மாதிரி. உண்மையில் தமிழக இளைஞர்கள் உலகத்துக்கே முன்மாதிரியாகப் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருப்பதுபோல இப் போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும் குறிப்பாக தமிழகத்தில் சினிமாத் துறையும் அரசியலும் பின்னிப் பிணைந்து விரவிக் கிடப்பதால் ஒரு சில கருத்துகளைக் கூற முனைகிறேன்.
படத்தில் அம்மனாக நடித்துவிட்டுத் தனக்கு எல்லா சக்திகளும் ஆற்றலும் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் நடிகையைப் போல இன்று தமிழகத் திரை நட்சத்திரங்கள் நடந்துகொள்கின்றனர். இதற்கு முன்மாதிரியாக, இது போன்ற ஒரு மாயையை உருவாக்கியவர் மறைந்த எம்.ஜி.ஆர். இன்றுவரை சூப்பர் சூப்பர் ஸ்டார்களெல்லாம் மிகக் கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டம் அவர்களுக்குத் தங்கள் நிலையை உணர்த்தியிருந்தால் மிக நல்லது. அவர்களும் ஒரு தனியார் கம்பெனி அலுவலர் போன்றவர்கள்தான், தங்கள் நடிப்பு தங்கள் பிழைப்புக்கானது, அதற்குமேல் ஒன்றுமில்லை என்பதை அவர்கள் உணர்வது நல்லது. இது தெரியாமல் ஊடகங்களில் ஆட்டமாக ஆடி வாங்கிக் கட்டிக் கொள்ளும் நடிக நடிகையர்களையும் பார்க்கிறோம்.
இதேபோல்தான் தமிழக அரசியல்வியாதிகளும்-சாரி, அரசியல்வாதிகளும். சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குச் சொத்துச் சேர்த்துக்கொள்வதையும், கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதையும் தவிர வேறு எதையும் தமிழக மக்களுக்காக என உருப்படியாகச் செய்யவில்லை. இதில் மற்ற மாநிலத்திலும் அப்படித்தானே இருக்கிறார்கள் என்றெல்லாம் உதாரணம் காட்டிப் பேசத் தேவையில்லை. இனிமேலாவது ஒரு தூய்மையான அரசியலுக்கு நம் அரசியல்வாதிகளும், முக்கியமாக அதிகாரிகளும் துணை செய்தால் நல்லது.
போராட்டத்தில் மாணவர்கள் மிக எச்சரிக்கையாகவே அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தவிர்த்திருக்கிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது. மக்களின் போராட்டத்தைத் தாங்கள்தான் உருவாக்கி விட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்திப் பின்னால் வாக்குப் பொறுக்க வழிவகை செய்துகொள்வார்கள் இவர்கள்.
எப்படியோ, தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி.
மத்திய அரசும் இந்தப் போராட்டத்தினால் தமிழக மக்கள் சக்தியை உணர்ந்து இனிமேலாவது தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்காமல் பொறுப்பாக நடந்துகொண்டால் நல்லது. தமிழகம் முன்னேறினால் அதுவும் இந்திய மக்களின் முன்னேற்றம்தானே என்பதைக் குறுகிய கட்சிக் கண்ணோட்டமின்றிப் புரிந்துகொள்வது எல்லாக் கட்சிகளுக்கும் பயனளிக்கும்.