என்னிடம் முதன்முதலாக பிஎச்.டி. பட்டத்துக்கு ஆய்வுசெய்தவர்களில் ஒருவர் திருமதி பகவத்கீதா. அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் (2007) ‘அதிர்வுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். அத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவுமே அநேகமாக நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்தவை. அத் தொகுப்பிற்கென ஒரு விமரிசனத்தினை நான் அளிக்கவேண்டுமென்றும் தான் அதனை அத் தொகுப்பில் சேர்த்து வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். நான் அத்தொகுப்பிற்கென அளித்த சிறிய விமரிசனம்தான் இக்கட்டுரை. பொதுவாக நான் எவரது நூலுக்கும் முன்னுரை அளிப்பதில்லை. பெரும்பாலும் அவர்களும் கேட்பதில்லை, அல்லது கேட்டு வாங்கினாலும் வெளியிடுவதில்லை. கருத்தியல்கள் பொதுவாக ஒத்துப்போவதில்லை, என் எழுத்தில் காரம் சற்றே கூடுதலாக இருக்கிறது என எத்தனையோ காரணங்கள். பகவத்கீதாவின் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவர் நூல் வெளிவந்தது. ஆனால் நான் தந்த என் முன்னுரையோ விமரிசனமோ இடம் பெறவில்லை. (என்றாலும் இன்றைய சூழலுக்கேற்ற சில கருத்துகள் அந்த விமரிசனத்தில் இடம் பெற்றிருந்ததால் அதனை இங்கு வெளியிட முனைகிறேன்.)
‘அதிர்வுகள்’ தொகுப்பில் திருமதி பகவத்கீதாவின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. சில பத்திரிகைகளிலும், சில ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன. முதலில் நாம் எங்கு எழுதுகிறோம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் எழுத்தின் தலையெழுத்தை முதலில் தீர்மானிக்கப்போவது.
பகவத்கீதா எனது அன்புக்குரிய மாணவர். முதுகலைப் பட்டப்படிப்பிலும், பிறகு முனைவர் பட்ட ஆய்விலும். எனவே ஒரு விமரிசகன் என்ற முறையில் எனது பணி கடினமாகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் கருத்து. ஆனால் ஒரு விமரிசகன் என்ற முறையில் எனது கருத்துகளைச் சொல்லியும் ஆகவேண்டும். விமரிசகர்களும் நல்லனவற்றை மட்டுமே கூறவேண்டும், குறைகளைச் சொல்லக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கப்படுத்திப் பாராட்டவும் வேண்டும்-அதேசமயம் குறைகளையும் தீர்க்கமாகச் சொல்லியாக வேண்டும் என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்?.
கதைகளில் அழகியல் முக்கியம். அதைவிட அவை ஏற்படுத்தும் மனநிலை, கருத்தியல் சார்பும் முக்கியம். இந்தக் கதைகளின் பொதுவான கருத்தியல், ஏற்கப்பட்ட ஜனரஞ்சகக் கருத்துகள் என்ற தளத்தை தாண்டிச் செல்லவில்லை. கடவுள் என்ற கருத்தாக்கம் முதலாக, தாய்மை, கவித்துவம், எழுத்தாளர் தன்மை போன்றவை பற்றியெல்லாம் இதில் கதைகள் உள்ளன. இவை பற்றிப் பல புராணிகங்கள் (தொன்மங்கள், கட்டுக்கதைகள்) இன்றைய சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மக்களிடம் என்ன விளைவுகளை உருவாக்குகின்றன, அவற்றை நாம் ஏற்கிறோமா அல்லது மறுக்கிறோமா என்பன அடிப்படையான பிரச்சினைகள்.
கடவுள் தனது சாயலில் மனிதனைப் படைத்தார் என்பது பொதுவாகச் சொல்லப்படும் விஷயம். (படைத்தார் என்பதிலேயே கடவுள் ஓர் ஆண் என்ற குறிப்பும் அடங்கியிருக்கிறது. கடவுள் ஏன் ஓர் ஆணாக இருக்கவேண்டும்? ஏன், மனித வடிவில்தான் இருக்கவேண்டும்?) மனிதன் தனது சாயலில் கடவுளைப் படைத்திருக் கிறான். அதனால்தான் கடவுளுக்கும் குடும்பம் கூத்தியார் பிள்ளைகுட்டி அவர்களுக்குள் போட்டி பொறாமை சண்டை எல்லாம் இருக்கிறது. நம் திரைப்படத்தில் கடவுளர்கள் எல்லாரும் வந்து கல்வியா, செல்வமா, வீரமா என்று சண்டை போடுகிறார்கள். கடவுளின் பிள்ளைகள் மாம்பழத்துக்குச் சண்டைபோடுகிறார்கள். (பாவம்!) தீயவர்களைக் கொல்ல வந்த பெண்கடவுள் அருமையாக ஒரு ஆபாச நடனம் ஆடிவிட்டுச் சூலத்தால் குத்துகிறார். ‘கடவுளுக்குக் குறை இருப்பதால் வணங்காமல் போகிறோம்’ (அதுபோலத் தாயையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வணங்கவேண்டும்) என்பதில்) என்று ஒரு கதையில் ஆசிரியர் சொல்கிறார். இதில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது? கடவுளிடம் காணப்படும் குறைகள் எல்லாம் மனிதனின் குறைகள்தானே?
ஏற்கும் கருத்துகளை அப்படியே சொல்வதற்கு எழுத்தாளன் தேவையில்லை. எழுத்து நாம் ஏற்கும் விஷயங்களிலுள்ள உள்வயணங்களை-உட்குறிப்புகளை எடுத்துக்காட்டுவதன் மூலமாக ஓர் அதிர்ச்சியை நமக்குள் உருவாக்கவேண்டும். எழுத்தின் நோக்கம் அதுதான்.
ஒரு கதையில் சங்கராச்சாரியாரைக் கைதுசெய்ததைக் கண்டனம் செய்கிறார் பகவத்கீதா. நெற்றிக்கண்ணைக் கடவுளே திறந்தாலும் குற்றம்செய்திருந்தால் குற்றம் தான். அப்படியிருக்கும்போது சங்கராச்சாரியார் மட்டும் என்ன விதிவிலக்கு? சிவனே பிராமணர் கனவில் வந்து நந்தனை எரித்துத் தூய்மைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னாலும் குற்றம்தான், வாலியை இராமனே மறைந்துநின்று கொன்றாலும் குற்றம்தான். பெரியவர்கள் தங்கள் செயலால்தான் பெரியவர்களாக வேண்டுமே தவிர ‘நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவன்’ என்று தம்பட்டமடிப்பதன் மூலமாக அல்ல. இன்றும் செயலினால் கீழ்ப்பட்டு தண்டனையும்கூடப் பெற்றுவிட்ட சிலர், தங்களை தெய்வம் என்று தாங்களே பாராட்டிக்கொள்வதும், தாங்கள் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பிறரைப் போராடத் தூண்டுவதுமாக இருக்கிறார்கள் என்பது விசனத்துக்குரியது.
தமிழ்ச்சூழலில் அதிகமாகப் புராணிகப்படுத்தப்பட்டுள்ள இன்னொரு முக்கிய விஷயம் தாய்மை. எல்லாப் பாலூட்டிகளும் பத்துமாதங்களோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சுமந்துதான் பெறுகின்றன. உடலாசை உயிர்களின் இயல்பாக இருக்கிறது, அப்படித்தான் பிள்ளைபெறுவதும். இதில் என்ன பெருமை இருக்கிறது? நவீன உலகத்தில் மலம்கழிப்பதே கடினமாகிவிட்டபோது பிள்ளைபெறுவது மட்டும் இயல்பாகவா இருக்கும்? ஒரு பசுவோ ஆடோ இயற்கையாகக் குட்டிபோடுவது போன்ற விஷயத்தை நாம் செயற்கையால் ஊதிப் பெரிதாக்கி அதில் என்னவோ தியாகம் இருப்பதாகக் கட்டிவிட்ட கற்பனைதான் தாய்மை. அம்மா என்பது திரையுலகம் ஊதிப் பெருதாக்கிவிட்ட ஒரு கற்பனை விஷயம். “அம்மா என்றால் அன்பு”. ஒரு தாய் பத்துமாதம் சுமப்பதன் மூலம் தியாகம் செய்கிறாள் என்றால் கோடிக்கணக்கான பாலூட்டி விலங்குகளும் தினம்தினம் தியாகம்தான் செய்கின்றன.
அல்லது தாய்மை என்பது அன்புதான் என்றால், (ஆண்கள் எல்லாருமே அரக்கர்கள் என்று வைத்துக் கொண்டாலும்) உலகத்தில் சரிபாதி பெண்களாக இருக்கும்போது, உலகமே அன்புமயமாக இருக்கவேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு இல்லை? பெண்களின் அன்பும் சுயநலம் சார்ந்ததுதான். சுயநலம்சார்ந்த எதிலும் மேன்மையில்லை. ‘அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்’ என்றார் வள்ளுவர். அறத்திற்கு மட்டுமே அன்பு துணை செய்வதல்ல, மறத்திற்கும் (கொடுமைகளைச் செய்வதற்கும்) அதுதான் துணை. மருமகளை மாமியார் கொடுமைப் படுத்துவதற்கும் மகன்மீதுள்ள அன்பே காரணம். ஹிட்லரின் ஆஷ்விச்சில் யூதர்களைப் படுகொலை செய்ததற்கும் தன் இனத்தின்மேல் கொண்ட அன்பே காரணம். ஈழத்தில் தமிழர் களைப் படுகொலை செய்ததற்கும் இனத்தின்மீதும் மதத்தின்மீதும் உள்ள அன்பே காரணம். ஹிந்து ராஷ்டிரம் உருவாகவேண்டும் என்று முஸ்லிம்களைப் படுகொலை செய்வதற்கும் அதுவே துணை. ஒரு சாதி மலம்சுமக்கவேண்டும் என்று கட்டளை யிடவும் சாதியன்பே துணை. எல்லா பாசிசத்திற்கும் அடிப்படை ‘அன்பு’ தான். ‘தியாகம்’தான். இதுதான் இன்று கூர்மையாக, விமரிசனத்தோடு நோக்கப்பட வேண்டியது. அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல.
கவிதை, கவிஞர் என்பவை பற்றியும் தமிழில் நிலவும் கருத்துகள் சரியானவை அல்ல. திரைப்படத்திற்குப் பாட்டுக்கட்டும் வியாபாரிகளைக் கவிஞர்கள் என்று நான் சொல்வதில்லை. கவிதை என்பது சிச்சுவேஷனுக்கு எழுதுவதும், மெட்டுக்குச் சொற்கற்களை வைத்து அடுக்குவதும் அல்ல. இது சின்னவயதில் பள்ளிகளில்-கல்லூரிகளில் கவிதைப் போட்டி நடத்தவேண்டுமானால் உதவலாம். கவிதை என்பது உள்ளத்தின் உண்மை யளியிலிருந்து பிறக்கவேண்டியது. ‘எந்த சிச்சுவேஷனுக்கும் எழுதத் தயார்’ என்பவன் ‘எதையும் விற்பேன்’ என்று சொல்லும் வியாபாரிதான். எந்தத் தலைப்பிலும் பேசத்தயாராகும் பட்டிமன்றக் காரன்தான். இதை உணர்ந்து எழுதியிருந்தால் கதையாக இருந்திருக்கும். இல்லை யென்றால் அது பாட்டுவியாபாரி களைக் கவியரசுகளாகப் பார்க்கும் ஜனரஞ்சகக் கருத்தாக்கத்திற்குத் துணைபோவ தாகவே அமைகிறது.
அதுபோலவே சைக்கியாட்ரி-ரிக்ரஷன் (வயதில் மூத்த நபரை 16 வயதுக்குக் குறைவாகக் கொண்டு செல்வது) என்பதெல்லாம் சினிமாத்தனமான கற்பனை. இன்றைய உளமருத்துவம் ஹிப்னாடிசத்தையெல்லாம் நம்புவதில்லை. அவையெல்லாம் பேராசைகாலஜி என்ற துறைக்குரியனவாக ஒதுக்கப்படுகின்றன.
எல்லாவற்றையும் ஒருவன் தானே அனுபவித்து உணர்ந்தால்தான் முடியும் என்பதும் சரியல்ல. ஒரு கதை அரவாணி ஒருவரின் துன்பத்தைப் புரிந்துகொள்ள ஒருவனோ அவனது மகனோ அரவாணியாக இருக்கவேண்டும் என்கிறது. அப்படித் தேவையில்லை. தீயில் கையைவைத்தால் சுடும் என்பதைக் குழந்தை அறிய சுயஅனு பவம் தேவையாகலாம். ஆனால் வளர்ந்த நிலையில் அப்படி அல்ல. அங்குதான் ஒத்துணர்வு (empathy)என்பது வருகிறது.
ஒத்துணர்வு இருப்பதால்தான் தன் வாழ்க்கையில் மிகத் தூய்மையானவனும் குற்றங்களைப் பற்றிக் கதை எழுத முடிகிறது. பெண்களைப் பற்றி ஆண்களும், ஆண்களைப் பற்றிப் பெண்களும் கதையெழுத முடிகிறது. சிலர் “தலித்துகளின் அனுபவங்கள் பிறருக்குப் புரிவதில்லை, அதனால் அவர்கள்தான் தங்கள் அனுபவங் களை எழுதவேண்டும்” என்பது போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள். அப்படி யானால், முதலாளிகளைப் பற்றி முதலாளிகள்தான் கதை எழுதவேண்டும், குழந்தை களைப் பற்றிக் குழந்தைகள்தான் கதை எழுதவேண்டும், தொண்ணூறு வயது கிழவியைப் பற்றி அவள்தான் எழுதவேண்டும். வேறு வழியில்லை.
பிறகு இருக்கவே இருக்கிறது. இருமை எதிர்வுகளை வைத்துக் கதை உண்டாக்குவது. உதாரணமாக, எழுத்தில் எழுதுவது ஒன்று; அதைக் கடைப்பிடிக்காமல் வாழ்க்கையில் வேறுவிதமாக நடந்துகொள்வது என்பது ஒரு கதையில் காணப்படும் இருமை எதிர்வு. இம்மாதிரிதான் இருமை எதிர்வுகளை வைத்துக் ‘கதை பண்ணுவது’ பொதுவாக நிகழ்கிறது. இது அனுபவவீச்சை பாதிக்கக்கூடியது.
எழுத்தாளன் அபரிமிதமான ஒத்துணர்வு-‘எம்பதி’ உடையவன். அதாவது அவனது எழுத்துகள் பிறரது இடத்தில் தன்னை வைத்துப்பார்ப்பதால் உருவாகின்றன. எனவே எந்த ஒரு விஷயத்திற்குள்ளும் ‘புகுந்து’ பார்க்கவேண்டும்.
கடைசியாகப் பெண்கள்-ஆண்கள் பற்றிய இருமை நிலை. பல கதைகளில் இது கருப்பொருளாகி இருக்கிறது. நமது சமூகம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. உண்மைதான். ஆனால் அது ஆண்களையும் அடிமைப்படுத்தித் தான் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘ஆணியம்’. என்றைக்கு சங்கக் கவிஞன் ‘ஆடவனுக்கு வினைதான் உயிர், பெண்களுக்கு ஆண்கள்தான் உயிர்’ என்று சொன்னானோ, அன்றைக்கே ஆணியமும் பெண்ணியமும் உருவாக வழிசெய்து விட்டான். பெண்களுக்கு அடிமைத் தனம் இருப்பதுபோலவே ஒருவிதப் பாதுகாப்பும் இருக்கிறது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு வேலையில்லாவிட்டாலும் திருமணம் செய்துவிடலாம். காப்பாற்றுவது கணவன் பொறுப்பு என்று சொல்லிவிடலாம். ஆனால் வேலையில்லாமல் ஓர் ஆண் திருமணம் செய்துகொள்ளமுடியுமா? இருபது வயது இளைஞர்கள் பலபேர் வேலை கிடைக்கவில்லை என்று வீட்டில் வசவு வாங்குவதனால் எவ்வளவு மனச்சோர்வு அடைகிறார்கள் (சிலர் தற்கொலையும்கூடச் செய்துகொள்கிறார்கள்) என்பது எனக்குத் தெரியும். இது ஆணின் தலைமேல் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனச் சுமையின் ஒருபகுதி.
பெண் எப்படிச் சமூகச்சூழ்நிலையின் கைதியாக இருக்கிறாளோ அப்படித்தான் ஆணும். எனவே உண்மையாகப் பெண்ணியம் சார்பாக நிற்பவர்கள், ஆணின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களாகவும் இருக்கவேண்டும். எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்கள், சாதிஒழிப்பு வாயிலாக ஒடுக்குபவர்களின் விடுதலைக்கும் காரணமாக இருக்கவேண்டுமோ அப்படி.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனரஞ்சகக் கருத்துகள்(doxa) என்பவற்றின் மாயையிலிருந்து பகவத்கீதா முதலில் விடுபடவேண்டும் என்பது எனது கருத்து. அப்படி யிருப்பின் அவரது எழுத்தின் கனமும் வேகமும் வலிமையும் கூடும்.
அடுத்ததாகக் கொஞ்சம் சொற்பிரயோகத்திலும் கவனம்தேவை. நானின், என்னின் போன்ற சொற்கள் இக்கதைகளில் மிகுதியாக வருகின்றன. இன் உருபு படர்க்கையோடுதான் சேரும் இயல்புடையது. இராமனின், சீதையின், வீட்டின், நாயின்-இவை எல்லாம் சரி. உன்னின், என்னின்-என்றால் இடிக்கிறது. எழுத்தாளர் களின் கவனம் சொற்களில் அதிகமும் தேவை.
கதைகள் வாழ்ககை அனுபவத்திலிருந்து பிறக்கவேண்டும் என்றால் அந்த அம்சம் இந்தக் கதைகளில் குறைவாகத்தான் காணப்படுகிறது. பொதுவாகத் தமிழாசிரியர்கள் கதை எழுதுவது சரிப்பட்டு வருவதில்லை. ஒரு காரணம், அவர்கள் சில ஒழுக்கமதிப்புகளைச்-சமூகக் கட்டுப்பாடுகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள். எனவே அவற்றிற்கப்பால் அவர்களது சிந்தனை செல்வதில்லை. இரண்டாவது, பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவம் வகுப்பறைகள் சார்ந்தது. மூன்றாவது வகுப்பறைகளில் அவர்களது விரிவுரைகள். பழகிப்போன அந்தச் சொற்பெருக்கம், சொற்களைப் பொருளறிந்து ஆற்றலோடு கையாளும் தன்மையைக்குறைத்து நீர்த்துப்போக வைத்துவிடுகிறது.
இன்னும் ஆழமாகச் சிந்தித்து, ஆழமாக உணர்ந்து, ஆழமாகத் தனது அனுபவங்களில் மூழ்கி, பகவத்கீதாவின் எழுத்துகள் வெளிப்படவேண்டும். எழுத்துத் துறையில் எதிர்காலத்தில் அவர் இன்னும் ‘ஆழமாக வேர்விட’ எனது வாழ்த்துகள்.
(2007இல் என் மாணவர் ஒருவரின் கதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை.)