அச்சம்

இந்துமதத்தை ஒற்றைத்தனமான ஒரு பொருளாகக் காண்பதற்கு முக்கிய ஆட்சேபணை, இந்துக்கள் யாவரும் எதை நம்புகிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதைச் சொல்லமுடியாத தன்மை ஆகும். எது இந்துச் சிந்தனை அல்லது இந்துச்சிந்தனை அல்ல என்று சொல்லவோ, யாராவது வெகுதொலைவு சென்று ஒரு விளக்கத்தின் எல்லையை மீறமுயலும்போது தடுக்கவோ ஒரே ஒரு நிறுவனரோ, நிறுவனமோ (ஒற்றை மரபு ஒன்றை வலியுறுத்தும் விதமாக) இந்துமதம் என்பதில் இல்லை. முக்கியமான பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் யாவுமே-மரக்கறி உணவு, அகிம்சை, ஏன், சாதி கூட, விவாதத்திற்குரிய பொருள்கள்தானே தவிர விதிகள் அல்ல. அதிகாரபூர்வ விதித்தொகை (கேனன்) என ஒன்று இந்துக்களுக்கு இல்லை. ஐரோப்பியர்-அமெரிக்கர் முன்னுரிமைப்படுத்திய பகவத்கீதை போன்ற நூல்கள்கூட எல்லா இந்தியர்களாலும் உயர்வாக என்றைக்கும் மதிக்கப்பட்டதில்லை. இந்துக்களின் சில குழுவினர்க்கு சில நூல்கள் முக்கியமானவை, மற்றவர்களுக்கு அவை பிரதானமல்ல. ஆழ்வார் பாடல்களோ பசவரின் வசனங்களோ மீராபாயின் பஜன்களோ அந்தந்தப் பகுதிக்கு உரியவைதானே தவிர எல்லா இந்துக்களுக்கும் உரியவை என்றோ யாவரும் அறிந்தவை என்றோ சொந்தம் கொண்டாட முடியாது. இதைத்தான் இந்துமதத்தின் பன்முகத்தன்மை என்கிறோம். இன்று இதை ஒற்றைத் தன்மை கொண்டதாகச் சுருக்குகின்ற போக்கு முனைப்பாகக் காணப்படுகிறது. இதுதான் நமக்கு அச்சமூட்டுகிறது.

தினம்-ஒரு-செய்தி