சில நாட்களுக்கு முன்னால் இந்துத்துவ அமைப்புகள் ஒருவாரத்துக்கு மாட்டுக்கறியோ பிற அசைவ உணவுகளோ உண்ணலாகாது, கடைகளை மூடவேண்டும் என்று வேண்டின. ஜைனத் திருவிழா ஒன்று செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்றது காரணமாம். இதையொட்டி, சில தொலைக்காட்சி சேனல்களில் தனிப்பட்ட உணவுப் பழக்கங்களையும் முறைகளையும் தடைசெய்யலாமா கூடாதா என்றெல்லாம் விவாதங்களும் நடந்தன.
மாட்டுக்கறி உண்பது கூடாது என்று 1976இலேயே குஜராத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. காரணம், இந்துத்துவ அமைப்புகள், வேதக் கலாச்சாரத்தில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்றும், பசுவதை கூடாது என்றும் இருப்பதாகக் கட்டிய கட்டுக்கதைதான். அண்மையில் மாட்டுக்கறி சாப்பிட்டதாகச் சொல்லி முஸ்லிம்களைக் கொலைசெய்த செய்தி ஒன்றும் வெளிவந்துள்ளது.
ஆனால் உண்மை வேறு. ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம். ரிக்வேதத்தில் 1028 பாக்கள் உள்ளன. இவை பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
“வேதமக்கள் கால்நடைகளை யாகத்தில் பலியிட்டு அவற்றைச் சாப்பிட்டனர் என்றாலும் தங்கள் செல்வமாக அவற்றைக் கருதினர். நிச்சயமாகவே அவர்கள் காயடித்த எருதுகளின் மாமிசத்தை உண்டனர். முதலில் யாகத்துக்காகவும், பிறகு இப்போது மக்கள் பிக்மாக்(BigMac) எனப்படும் மாட்டுஇறைச்சிஉணவை (மெக்டொனால்டு கடைகளில் விற்கப்படும் ஹாம்பர்கர் வகை வேகஉணவு) எந்தக் காரணங்களுக்காக உண்கிறார்களோ அதே காரணங்களுக்காக-சுவைக்காகச் சாப்பிட்டனர். (குறிப்பு: இந்தியாவில் இப்போது பிக்மாக்குகள் ஆட்டிறைச்சியில் செய்யப்படுகின்றன).
அவர்கள் எருதுகளை யாகத்தில் பலியிட்டனர். (இந்திரன் இருபது எருதுகளின் அல்லது நூறு எருமைகளின் இறைச்சியைச் சாப்பிட்டு, சோமபானங்களை ஏரிஏரியாகக் குடித்தான்.) பசுக்களைப் பெரும்பாலும் பாலுக்காக வைத்துக் கொண்டனர். ஒரு பாட்டு பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்கிறது (7.87.4), (அதாவது, ரிக்வேதம், ஏழாம் மண்டலம், 87ஆம் பாடல், வரி 4). ஆனால் மற்றொரு பாட்டு, திருமணக் காலத்தில் கட்டாயம் ஒரு பசு கொல்லப்பட வேண்டும் (10.85.13) என்கிறது. ஒரு பாட்டு (10.91.14), நன்கு வளர்க்கப்பட்ட ஆனால் கன்றுபோடாத பசுவை யாகத்துக்கான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கிறது. பிற பாடல்கள், தேவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அவியுணவாகப் பசுக்களைச் சொல்கின்றன, பிறகு அவற்றை மக்கள் உண்ணவேண்டும் என்று சொல்கின்றன. வழக்கமான உணவுகளாகிய பால், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள், கோதுமை, பார்லி இவற்றோடு, ஆடுகள், மாடுகள், செம்மறிகள் ஆகியவற்றின் இறைச்சியையும், கடைசி யாக சுராபானம் அல்லது மதுவைச் சிறப்பான சந்தர்ப்பங்களில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் மேற்கண்ட ரிக்வேதப் பாக்கள் சொல்கின்றன.
(ஆதாரம்: வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு’ (2009) என்னும் நூல், இயல் 5.)
வேதத்தில் இப்படியெல்லாம் இருக்கும்போது அதைத் தங்கள் மூலநூல் எனப் போற்றியவாறே அதற்கு எதிராகவும் எப்படி இவர்களால் நடந்துகொள்ள முடிகிறது? காந்தியைப் போற்றி காந்தி ஜெயந்தியைக் கொண்டாடிக்கொண்டே, உள்நாட்டு விவசாயத்தையும் வியாபாரத்தையும் அழித்து, (காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக) அமெரிக்க முதலீட்டுக்குக் கையேந்தும் அரசியல்வாதிகள்தானே இவர்களின் தலைவர்கள்? இவர்கள் வேறென்ன செய்வார்கள்?