வாக்களிப்பது கட்டாயமா….?

voting-1
ஆட்சியைப் பிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, ஆட்சிக்கு அவ்வளவாகச் சம்பந்தமில்லாத இடைத்தேர்தலோ, ஊராட்சி மன்றத் தேர்தலோ எதுவானாலும் நம் ஊடகங்கள் அனைத்தும்-சொல்லும் சேதி அனைவரும் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பது நம் கடமை என்பதுதான்.

இதில் மட்டும் கருத்து வேறுபாடே இல்லை- “வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றும் “வாக்களிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை வரை தரலாம்” என்றும் ஊடக மக்கள் பிரதிநிதிகள் முழங்குகிறார்கள்.  ஏன் வாக்களிக்கவேண்டும்? அதுவும் கட்டாயமாக? பெரிய கட்சிகளான ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலுமே நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வாக்க ளிக்க வேண்டிய அவசியம் என்ன? லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுவாங்குபவர் ஒருவராவது உண்டா?. ஒரே ஒரு ஊழல்புகார் அல்லது கொலை கொள்ளைக் குற்றம், அல்லது வேறு குற்றங்கள் இல்லாத சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டா?

நீதிமன்றங்களுக்கு,ம் லோகாயுக்தா மன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கும் வெட்க மில்லை?

சரி, பெரிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய்? சின்னக் கட்சிகளுக்குப் போடு. அல்லது சுயேச்சைகளுக்குப் போடு என்பார்கள் நம் மக்கள் பிரதிநிதிகள். இவர்களுக்கு ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்யப்போகிறார்கள்? ஒன்று: மாறிமாறி இது ஆட்சியமைக்குமா, அது ஆட்சியமைக்குமா என்ற நிலை வரும்போது விலைபோவார்கள். தங்களை அதன்மூலம் வளப்படுத்திக்கொள்வார்கள். அல்லது எதுவும் செய்ய இயலாமல் வக்கற்ற நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். சட்டமன்றத்துக்காவது போவார்களா, ஏதாவது சட்டம் வரக் கூடுமானால் கையைக்கூட உயர்த்துவார்களா என்பதே சந்தேகம்தான்.

இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக் கும்போது “வாக்களி, வாக்களி” என்று ஏன் கேட்கிறார்களோ ? ஒருவன்-நல்லது செய்வேன் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட முடியும்£? முதலில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்குங்கள், அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தம் செய்யுங்கள்.  பிறகு “வாக்களியுங்கள்’ என்று கேளுங்கள்..

அவ்வளவு வேண்டாம். சரிவரச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று ஒரு எளிய சட்டம் கொண்டு வாருங்களேன் பார்க்கலாம்-பிறகு நாங்கள்  கட்டாயம் வாக்களிக்கிறோம்..

“இந்தத் தேர்தலில் நிற்பவர்கள் எவருமே எனக்குப் பிடிக்கவில்லை, நான் வாக்களிக்கமாட்டேன்” என்றால் ஒரு படிவம் கொடுத்துப் பூர்த்திசெய்யச் சொல்லி, முகவரி எழுதச்சொல்லி, கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள்.  (இதெல்லாம் தெரிந்து கொண்டவுடனே நம் அரசியல் தலைவர்களும் காவல்துறையினரும்  ஒன்றுசேர்ந்து நீ தீவிரவாதி என்று முத்திரை குத்தி அடித்துநொறுக்கி சிறையில் தள்ளுவார்கள்) எப்படி வாக்களிப்பது மறைவாக வைக்கப் படுகிறதோ அதுபோல விருப்பமின்மையையும் மறைவாக வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்புறம் வாக்களிக்க மக்கள் ஏன் தயங்குகிறார்கள், பயப்படு கிறார்கள்?

அதாவது, வாக்களிக்கும் எந்திரத்தில், வாக்காளர் பட்டியலுக்கு பொத்தான் விளக்கெல்லாம் தயாரிப்பதுபோலவே, எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கும் ஒரு பொத்தான் பொருத்துங்கள். அதனால் என்ன இழப்பு?

எத்தனை கோடிரூபாய்கள் ஒருநாள் பாராளுமன்றத்திற்கு, ஒருநாள் சட்ட சபை நடத்துவதற்குச் செலவாகின்றன? எவ்வளவு இலவசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் மன்றத்திற்கு வர வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா? மன்றத்தை ஒழுங்காக நடத்தவிடவேண்டும் என்று ஒரு சட்டம் உண்டா?

ஆக மக்கள் நாயகத்தைக் கொல்வது வாக்களிக்க விருப்பமில்லாதவர்களா, அரசியல்வாதிகளும் தேர்தல்  அவர்கள் அடிவருடிகளுமா?


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 2

kannaki-cooking
கேள்வி: தமிழரின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பது அரசியல் சாராத இயக்கங்களால் முடியுமா?   செல்வன், சென்னை

பதில்:
 அரசியல் என்ற சொல்லின் அர்த்தத்தைக் குறுக்கிப் பார்ப்பதால் கேட்கப் படும் கேள்வி இது. எங்கே, எதில் அரசியல் இல்லை? இன்னொருவர் பண்பாடு நம் மீது சுமத்தப்படுவது அரசியல் செய்கை இல்லையா? அது என்ன கள்ளமற்ற, குழந்தைத்தனமான செயலா? ஆதிக்கத்துக்கான செயல்தானே?
அதுபோல அதிலிருந்து, நம் பண்பாட்டை நாம் மீட்டுருவாக்கம் செய்வது, காப்பாற்றுவது என்பதும் அரசியல் செய்கைதான். அதில் சந்தேகம் என்ன?
நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும், பேசும் எல்லாப் பேச்சுகளிலும் நுண்அரசியல் கலந்திருக்கிறது. நேரடி அரசியல் பங்கேற்பிலிருந்து வித்தியாசப்படுத்த, நுண்அரசியல் என்ற சொல் கையாளப்படுகிறது.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி என்ற உதாரணத்தையே எடுத்துக்கொள்வோமே. அதில் முக்கால்வாசி ஆங்கிலமும் கால்வாசித் தமிழும் ஒருவர் கலந்து பேசுகிறார் என்றால் அவரது இயல்பு, பின்னணி, நோக்கம் இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அவர் ஒரு பணக்காரராக, அல்லது உயர்மத்தியத் தர வகுப்பு சார்ந்தவராக இருப்பார். அவருக்குத் தமிழ் பற்றிப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது. ஏதோ கலப்புத் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவதோடு சரி. அதையும்கூட இப்போது பலர் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பேச்சு பழகவேண்டும், அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக வீட்டிலும் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மொழித் தூய்மை பற்றியோ கலப்பு பற்றியோ கவலை கிடையாது. சுருக்க மாகச் சொன்னால் தமிழ்ப்பண்பாடு பற்றிக் கவலை கிடையாது. ஏதோ படித்தார்கள், நல்ல ஊதியம் வாங்கிப் பிழைக்கிறார்கள்- அவ்வளவுதான். ஆகவே தங்கள் பிள்ளைகளை அவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைக்கமாட்டார்கள். அப்படிப் படித்தால் நல்ல வேலை கிடைக்காது, வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாது அல்லவா? அவர்கள் ஊதிய உயர்வுக்கெல்லாம் போராட மாட்டார்கள். தாங்களே உயர் அதிகாரிகளாக இருப்பதால் இன்னும் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசியே முடித்துக்கொள்வார்கள்..

இத்தகைய மேட்டுக்குடி மனப்பான்மையைத்தான் இவர்கள் தங்களோடு பழகுபவர்களுக்கும்-அவர்கள் கீழ்மத்தியத் தர வகுப்பினராக இருந்தாலும் பரப்புவார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா? இதை எப்படி ஒழிப்பீர்கள்? ஆகவே அரசியல் இயக்கங்களால் மட்டுமே நமது பண்பாட்டை மீட்க முடியும். வேண்டுமானால் நுண்அரசியலோடு நிறுத்திக்கொள்கிறேன் என்று கூறுங்கள். அதுவும் வெளிப்படையான அரசியலுக்குச் சில சம்பவங்கள் நிகழும்போது இட்டுச் சென்றுவிடும்தான். வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பெரியாரே அந்தந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அல்லவா?

கேள்வி: மதுரை மீது மாலிக் கபூரின்  படையெடுப்புக்குப் பிறகு சரண் அடைந்த வீர பாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் நிலை என்ன?  மதுரை பொற் குவியல்களை மாலிக் கபூர் கொள்ளை அடித்துச் சென்ற பிறகு ஏற்பட்ட தட்டுப்பாடு பஞ்சத்தில் இருந்து மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் (தமிழர்களின் தற்போதைய நிலை) தமிழர்கள் உயர முடியுமா? அதற்கு என்ன வழி? மௌ.வினோத் குமார்

பதில்- இந்தக் கேள்வி பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடியவரை பதில்சொல்ல முயற்சி செய்யலாம்.

மாலிக் காபூர் கொள்ளையடித்துச் சென்றபிறகு தமிழ்நாடு பாலைவன மாயிற்று. இன்னும் இரண்டு முறை- 1314இல் குஸ்ரூகான் என்பவன் படையெடுத்தான், 1323இல் உலூஸ்கான் படையெடுப்பு நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். உலூஸ்கான் பின்னால் முகமது பின் துக்ளக் ஆனான். அசன்ஷா என்பவனிடம் ஆட்சியை விட்டுச் சென்றான். முஸ்லிம்கள்தான் மதுரையில் 1344வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள், இருந்தாலும் நான்காம் சுந்தரபாண்டியன் 1320 வரையிலும், நான்காம் வீரபாண்டியன் 1347 வரையிலும் உயிரோடிருந்தார்கள் என்று தெரிகிறது. இதுபற்றித் தேவையானால், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பாண்டியர் வரலாறு என்ற நூலைப் பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் பாண்டிய பரம்பரையினர் தலைக்கோட்டைப் போர் வரை (கி.பி.1565) வாழ்ந்திருந்தார்கள், விசயநகரப் பேரரசுக்குச் சிற்றரசர்களாக இருந் தார்கள் என்று தெரிகிறது. (உங்களுக்குத் தேவைப்பட்டால் 1309 முதல் 1565 வரை குறுநில மன்னர்களாக இருந்த பாண்டிய மன்னர்களின் பட்டியலைத் தர இயலும்.)

1336இல் விசயநகரப் பேரரசு ஆந்திரத்தில் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குள் ளாகவே முதலாம் புக்கன் மதுரையின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். பிறகு தமிழகத்தில் விசயநகர ஆட்சிதான். அவன் படையெடுப்பு பற்றி அவன் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூல் நன்றாக விளக்குகிறது.

பாளையக்காரர்களான கட்டபொம்மு போன்றவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் பெயரில் பாண்டியன் இருந்தாலும் அவர்கள் பாண்டியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்ல.

கடைசியாக, இன்றைய தமிழர்கள் முன்னேறுவதற்கு வழிகேட்கிறீர்கள். மொழியுணர்வும் இனவுணர்வும் எந்த மக்களுக்கும் இன்றியமையாதவை. அவற்றை வளர்ப்பது ஒன்றுதான் நாம் எதிர்காலத்தில் இருப்பதற்கான ஒரே வழி. இல்லையென்றாலும் இருக்கமுடியும் -எந்த அடையாளமும் அற்றவர்களாக.

மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் நம்மைவிட தேர்ந்த மொழி யுணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் காணமுடியும். அவர்கள் இனத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் கட்சிகளை, பிற பிரிவினைகளை மறந்து ஒன்றாக நிற்கிறார்கள். தமிழர்கள்?  மூன்று ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் கூடி நம் இனத்தவரைக் கொலைசெய்ததை வேடிக்கை பார்த்த மாபெரும் இனமல்லவா நாம்? அந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இன்றுவரை தில்லி அரசு ஆதரவாக இருக்கிறதே, அதற்கு ஆதரவாக இங்கே ஊடகங்கள் இருக்கின்றனவே,  நமக்கு இன உணர்வு இருக்கிறதா?

கேள்வி: நிலம் வகைப்படுத்தலும், பிரிவுகளும் மற்ற எந்த நாகரிகங்களிலும் இல்லாத வகையில் தமிழர்கள் பகுத்தது வியப்பாக உள்ளது. அரப்பா நாகரிகத்தின் தொடராக நம் இனத்தை அடையாளம் காண எந்த வகையான தொன்மச் சான்றுகள் நம்மிடம் உள்ளன? மொழி தவிர்த்து வாழ்வியல் முறைகளில் ஒப்புமை உள்ளதா என்பதுதான் கேள்வியின் நோக்கம். கோவிந்தராஜ், அம்பத்தூர்

பதில்: இவை இரண்டு தனித்தனிக் கேள்விகள். நிலத்தைத் திணைகள் அடிப்படையில் வகைப்படுத்தலும் அதிலுள்ள துறைகளும் வேறு எந்த நாகரிகத் திலும் காணப்படாத, தமிழர்களுக்கே உரிய தனித்த முறை. இது வியப்புக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் இந்த திணை துறைப் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. சங்க இலக்கியம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நு£ற்றாண்டு அளவிலிருந்து எழுதப்பட்டது என்பதால், அதற்கு முன்னரே இந்த முறை உருவாகியிருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் முதல் முதலில் நாம் காண்பது சங்க இலக்கியம் என்றால், அது மிகச் செம்மையான கூறுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செம்மை அப்போதுதான் தோன்றுகின்ற இலக்கியத்திற்கு இருக்கமுடியாது. ஆகவே சங்க இலக்கியம் தோன்றுவதற்குக் குறைந்தது ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமையாவது தமிழ்மொழிக்கும் இலக்கியங்களுக்கும் இருந்திருக்கவேண்டும் என்பது நியாயமான யூகம். அதாவது கி.மு. 1200 அளவுக்கு நியாயமாகத் தமிழ் மொழியின் பழமை யைக் கொண்டு செல்ல இயலும்.

கி.மு. 1500 அளவில் வடமேற்கு ஐரோப்பா-இன்றைய காகசஸ்-யூரல் பகுதியிலி ருந்து ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது. சிந்துவெளி நாகரி கத்தை ஆரியர்கள் அழித்தார்கள் என்று முன்னர் கூறினார்கள். இப்போது அந்தக் கருத்து மாறியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3000-2000 காலப் பகுதியைச் சேர்ந்தது. அது தட்பவெப்ப மாறுதல்களால் அழிந்ததாக இன்று கருதுகிறார்கள். இப்படிப் பார்த்தால், நாம் ஒரு கேள்விக்கு விடைகண்டாக வேண்டும்.

கி.மு. 2000 அளவில் மறைந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், கி.மு. 1000 அளவில் தோன்றிய தமிழர் நாகரிகத்திற்கும் எப்படித் தொடர்புப்படுத்துவது?

இப்படித் தொடர்பு படுத்துவதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால இடைவெளி. இன்னொன்று ஆயிரம் மைல் இட வேறுபாடு.

இந்த இரண்டையும் மிகச் சரியாக நிரப்ப நம்மிடம் சான்றுகள் இல்லை. கி.மு. 1000க்கும் கி.மு. 2000க்குமான கால இடைவெளியும் வடக்கு-தெற்கு என்ற இட இடைவெளியும் நிரப்பப்படத் தக்க சான்றுகள் கிடைத்தால்-இதுவரை கிடைக்க வில்லை-நாம் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், தமிழ் நாகரிகம்தான் என்று அடித்துக்கூற முடியும். இல்லாதவரை சந்தேகம்தான்.

இந்த இடைவெளியைத்தான் வடநாட்டு இந்துவெறியர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆரியர் வருகை சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவோ பின்னால் என்ற போதிலும் அது ஆரிய நாகரிகமே என்று சான்று களையெல்லாம் திருத்தி வரலாறு எழுதுகின்றனர். (சான்றாக, சிந்துவெளி நாகரி கத்தில் பசு-எருது முத்திரைகள் உள்ளன. அவை இறைவனைப் போன்ற ஒருவர் அருகில் உள்ளன. அதனால் பசுபதி ஈசுவரருடைய முற்காலச் சித்திரிப்பு, திராவிடம் சார்ந்தது என்றார்கள். இந்துவெறியர்கள், அவற்றைக் குதிரை முத்தி ரைகளாகப் படம்வரைந்து அதை ஆரிய நாகரிகத்தினது என்று சித்திரிக்கின்றனர். குதிரைகள் ஆரிய நாகரிகத்தில் உண்டு. அஸ்வமேத யாகம் செய்தவர்கள் அல்லவா அவர்கள்?) அதனால் ஆரிய நாகரிகமே காலத்தினால் முந்தியது, அதன் தொடர்ச்சியே இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்-தமிழ் நாடு உட்பட-உள்ள நாகரிகம் என்று நிலைநாட்டுவது அவர்கள் நோக்கம். அவர்கள் இப்படிச்

செய்தது, இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இதற்கான இணையதளங்களில் இந்தச் சான்றழிப்புகளைக் காணலாம்.

இப்போது கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு வரலாம். தமிழர் திணை-துறைப் பகுப்புக்கு நேரடியான சான்றுத் தொடர்ச்சி சிந்துவெளிநாகரிகத்திலிருந்து கிடைக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தை நாம் சேர்ந்தவர்கள் என்றாலும் இல்லை என்றாலும், திணை-துறைப் பகுப்பு நமக்கே உரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

கேள்வி:  மார்ட்டின் வீலர் காலத்திற்குப் பின் தமிழகக் கரையோரம் மற்றும் கரைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு முடக்கப்பட்டது. இது தொடர்ந்திருக்கு மானால் நமது தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்குமல்லவா? பாண்டியன், மதுரை

பதில்: மார்ட்டின் வீலர் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை நடத்தியவர். சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்த நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா, லோத்தல், ரூபார், ராக்கிகடி, காளிபங்கன் முதலிய பல இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஆஃப்கானிஸ்தானத்திலிருந்து குஜராத் வரை நீளும் நாகரிகப்பகுதி இது. இதை ஆரம்பித்து வைத்தவர் சர் ஜான் மார்ஷல். 1930-40களில், இந்தியா சுதந்திரம் பெறும்வரை அகழ்வாராய்ச்சிக் குழுவில் இருந்தவர் மார்ட்டிமர் வீலர். லோத்தல் இன்றும் குஜராத்தில் உள்ளது. மிச்சப் பகுதிகள் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் உள்ளன. 2010இல் சட்லெஜ் பகுதியில் சிந்துவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தாமிர உருக்குச் சாலை (கி.மு.5000 அளவிலானது) மூழ்கிப்போயிற்று. இப்போது இந்து வெறியர்கள், ரிக்வேதத்தில் உள்ள நதிஸ்துதி சூக்தம் என்பது சிந்துவெளி நாகரி கத்தில் எழுதப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்ட்டிமர் வீலர்தான் சிந்துவெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு களை ஆராய்ந்து ஆரியர்கள் இந்த நாகரிகத்தை அழித்தவர்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்த அகழ்வா ராய்ச்சியின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதால் தொல்லியல் ஆய்வில் இந்தியர்களுக்கு ஆர்வம் குறைந்துபோயிற்று.

இந்தத் தொல்லியல் ஆய்வு தொடர்ந்திருக்குமானால் சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழ் நாகரிகத்தையும் இணைக்கும் சங்கிலிக்கான சான்றுகள் கிடைத்திருக்கலாம் என்பது யூகம்தான். உறுதியாகச் சொல்லமுடியாது. மேலும், சுதந்திரமடைந்தபின் இதில் ஈடுபட்ட தொல்லியலாளர்கள்-சிகாரிபுரம் ரங்கநாதராவ் போன்றவர்கள் அது ஆரியநாகரிகம் என்று நிரூபிக்க முனைந்தார்கள். எனவே பயன் கிட்டி யிருக்குமா என்பது சந்தேகம்தான்.

கேள்வி: கவிதை வடிவம் சிதைந்தது, புதுக்கவிதை என்ற வடிவம் வந்ததாலா அல்லது மக்களின் இலக்கண அறிவு குறைந்ததாலா? சேது, புதுக்கோட்டை

பதில்: புதுக்கவிதை என்ற வடிவம், உரைநடை பரவியதன் விளைவாக ஏற்பட்டது. தமிழைவிட ஆங்கிலத்தில் உரைநடை முன்னமே தோன்றிவிட்டதால், புதுக்கவிதை வடிவம் ஆங்கிலத்தில், ஒரு நு£ற்றாண்டுக்கு முன்னமே தோன்றி விட்டது. இது உலகமெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு மாற்றம். இதற்கு மக்களின் இலக்கண அறிவின் குறைவைக் காரணம் சொல்லமுடியாது.

நாயக்கர் காலத்திலிருந்து சிற்றிலக்கியங்கள் புராணங்கள்தான் தமிழில் தோன் றின. அவை கற்பனை வறட்சியையும், வடநாட்டுக்கதைகளின் தழுவலையும் கொண்டிருந்தன. ஆனால் நல்ல யாப்பில்தான் எழுதப்பட்டன. இவற்றைக் கவிதைகள் என்று சொல்லவே முடியாது. ஏனெனில் கவிதைக்குரிய உயிர்ப்புத் தன்மை இவற்றில் இல்லை.

யாப்பில் எழுதிவிட்டால் மட்டும் கவிதையாகாது. அது வெறும் செய்யுளா கவே நிற்கும். யாப்பு என்பது செங்கல்லை வைத்துக் கட்டடம் கட்டுவது போன்றது. அது கலையழகுமிக்க நேர்த்தியான கட்டடம் ஆகப்போகிறதா, எவ்விதச் சிறப்புமற்ற குட்டிச்சுவர் ஆகப்போகிறதா என்பது கட்டுவோனின் கலைநோக்கினைப் பொறுத்ததுதானே? அதுபோலத்தான் யாப்பும். அதைக் கம்பரைப்போல, பாரதியைப் போல, பாரதிதாசனைப்போல, செம்மையாகப் பயன்படுத்தினால் நல்ல கவிதையும் ஆகும். தெருவுக்குத் தெரு நம்நாட்டில் கவிஞர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு எழுதுபவர்கள் கையில் குட்டிச்சுவரும் ஆகும்.

புதுக்கவிதையும் அதுபோலத்தான். அதுவும் நல்ல கவிஞர்களிடம்தான் உயிர் பெறும். கலையாகும். எவர் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைத்தால் உரைநடைக் குட்டிச்சுவர்கள்தான் மிஞ்சும். எல்லாப் புதுக் கவிதைகளையுமே கவிதைச் சிதைவுகள் என்று பார்க்கலாகாது. ஆழ்ந்த உணர்வுகளை எழுப்புகின்ற சிறந்த புதுக்கவிதைகளும் உள்ளன.

ஆனால், புதுக்கவிதை யாப்பினைக் கைவிட்டதால், நல்ல உணர்வைத் தரக்கூடிய ஒரு சிறந்த கருவியை இழந்துவிட்டது என்பது உண்மை. கவிதையின் பொருளுக்கு யாப்பின் இசைநயம் அனுசரணையாக இருந்து உயிர் தருகிறது, அந்தக் கவிதைப் பொருளைச் செழுமையாக்குகிறது. கம்பரின் பல கவிதைகள், மிகச் சிறப்பாகக் கவிதைப்பொருளுக்கு அனுசரணையாகச் சந்தத்தைப் பயன்படுத்தக்கூடியவை.


தற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்

Pooranachnadran.k
(தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பு
 குறித்து சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பன்முகத் திறன் கொண்டவருமான பேராசிரியர் க. பூரணச் சந்திரன் அவர்களிடம் நேர்காணல் கண்டோம். பல தளங்களில் சிறப்பான ஆழ்ந்த அறிவு ஞானம் கொண்டுள்ள இவர் ஆங்கிலத்தில் இருந்து பல சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆண்டின் (2012)சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆனந்த விகடன் இவரைத் தெரிவு செய்துள்ளது. மொழி பெயர்ப்பு குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.)
சிறகு- நீங்கள் எப்போது முதல் மொழி பெயர்க்கத் தொடங்கினீர்கள்?
பூரணச்சந்திரன்-
 நான் 1982இல் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். மொழிபெயர்த்த முதல் நூல் “ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 365 நாட்கள்” என்ற மருத்துவ நூல். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். கலைச் சொற்களையும் நிறைய உருவாக்கியிருக்கிறேன். இதைத் தமிழுக்கு நான் செய்த கொடையாக நினைக்கிறேன். உதாரணமாக இன்று தொடர்பியல் துறையில் பயன்படும் பின்னூட்டம் என்ற சொல் முதன் முதலில் 1989இல் நான் உருவாக்கியதுதான். மேலும் தமிழில் அமைப்பியம், பின் அமைப்பியம், பின் நவீனத்துவம் சார்ந்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். அதுவும் திறனாய்வுத்துறையில் கலைச்சொல் உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது.

சிறகு- நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்யும் புத்தகங்களை உங்களின் விருப்பத்தின் பேரில் அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்வீர்களா?

பூரணச்சந்திரன்- இதுவரை நானாகத் தேர்ந்தெடுத்ததில்லை. எனது பதிப்பாளர்கள் -அடையாளம், காலச்சுவடு, எதிர்வெளியீடு போன்றோர் எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைத்தான் செய்கிறேன். ஆனால் என்னுடைய கருத்தியலுக்கு உடன்பாடாக அவை இருந்தால் மட்டுமே செய்வேன் என்ற நிபந்தனையை முதலிலேயே சொல்லி விடுகிறேன். இப்படி அவர்களிடம் புத்தகத் தேர்வை விடுவதற்குக் காரணம் என்ன வென்றால், சந்தைநோக்கு அவர்களுக்கு உண்டு. எந்தப் புத்தகம் விற்கும் விற்காது என்ற கணிப்புகள் அவர்களிடம் உண்டு. அவற்றில் எனது கருத்தியலுக்கேற்ப நான் தேர்வு செய்துகொள்கிறேன்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தால் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- ஆங்கிலத்தில் உள்ள பல நல்ல இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அப்படிச் செய்யக்கூடியவர்களும் நிறைய இருக்கிறார்கள். நான் சிறப்பாகக் கவனம் செலுத்த விரும்பும் துறை, திறனாய்வும் இலக்கியமும். திறனாய்வு அதிலும் மிகப் பெரிய துறை. அதற்கான கலைச்சொற்களே தனியாக உள்ளன. ஆங்கிலத்தில் திறனாய்வாளர்கள் எழுதுவதைப் புரிந்துகொள்வதே கடினம். அந்த அளவுக்குத் தனித்த திறனாய்வு நடையை உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு யாராவது தொடர்ந்து பண உதவி செய்தால் நான் ஆங்கிலத்தில் உள்ள சிறப்பான திறனாய்வு நூல்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பேன். உதாரணமாக பார்த், லக்கான், டெரிடா, ஃபூக்கோ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

சிறகு- தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எந்தப் புத்தகத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- சங்க இலக்கியங்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார்கள். ஏ.கே. இராமானுஜனின் மொழிபெயர்ப்புகள் சிறப்பானவை. ம.லெ. தங்கப்பாவும் நல்ல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வளம் குன்றாமல் பெயர்த்துள்ளார். மிகவும் கடினமான பணி இது. பிற சிலர் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளுக்கு ஏராளமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஏனென்றால் இலக்கியத்தன்மையை அவை சரிவரக்  கொண்டுசெல்லவில்லை. கம்பர் மிக அற்புதமாக, உணர்வுகளுக்கு ஏற்ற சந்தத்தைக் கையாள்பவர். அதை மொழிபெயர்ப்பில் கொண்டுசெல்லவே முடியாது. எனவே மொழிபெயர்க்கும்போது கதையம்சம் சென்று சேர்கிறதே அல்லாமல் இலக்கியத்தன்மை சென்று சேர்வதில்லை. திருக்குறள் மிக அற்புதமான இலக்கியம். ஆனால் நான் சந்தித்த வடநாட்டவர்கள் எல்லாம் இதில் என்ன இருக்கிறது? வெறும் அறிவுரைதானே என்று கேட்டிருக்கிறார்கள். நான் அதிகம் உழைத்து மொழிபெயர்க்க விரும்புவது திருக்குறளை, அடுத்து குறுந்தொகையை. அண்மைக்கால இலக்கியங்களை -நாவல், சிறுகதை போன்றவற்றை ஆங்கிலத்தில் பெயர்ப்பது எளிது.

சிறகு-1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது குறைந்த அளவு பக்கங்களாக வெளியிடுகிறார்கள். இது தவறில்லையா?

பூரணச்சந்திரன்- தவறில்லை. ஆங்கிலத்தில் தழுவல் பதிப்பு, சுருக்கப்பட்ட பதிப்பு (அடாப்டட் வெர்ஷன், அப்ரிட்ஜ்ட் வெர்ஷன்) என்றெல்லாம் உள்ளன. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர்ஃபீல்டு நாவலை முழுமையாகப் படித்தேன். ஆனால் அதன் தழுவிய, சுருக்கப்பட்ட பதிப்பை ஆங்கிலத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே சுமார் 100 பக்க அளவில் படித்துவிட்டேன். ஆங்கிலத்தில் இப்படி புகழ்பெற்ற எல்லா நாவல்களுமே சுருக்கப்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. குறிப்பாக ஈ.எஃப் டாட் என்பவர் பெயர், பிளாக்கி அண் சன்ஸ் என்ற பதிப்பகம் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. தமிழில் நாம் அதைப்போல் செய்ய வேண்டும். உதாரணமாக பொன்னியின் செல்வன் கல்கியின் புகழ்பெற்ற சரித்திர நாவல். இது ஏறத்தாழ 2000 பக்கம். இதை 150 பக்க அளவில் சுருக்கினால் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நல்ல தமிழ் உணர்வு வளரும்.

சிறகு- தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது குறைவாக இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?

பூரணச்சந்திரன்- முக்கியமாக இரண்டு காரணங்கள். தமிழ் பழமை வாய்ந்த மொழி. அதன் இலக்கியங்களை-கம்பராமாயணம் போன்றவற்றை- சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான காரியம். நம் தமிழருக்கே பழந்தமிழ் இலக்கியம் புரிவதில்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பதை பற்றி நினைத்துப்பாருங்கள். பிறமொழிக்காரர்கள் தான் தமிழிலுள்ள இலக்கியத்தை அவரவர் மொழியில் பெயர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேற்கத்திய அறிஞர்கள் தமிழ் செம்மொழி சிறந்த மொழி என்று ஏற்றுக்கொண்டார்கள் என்றால், இலக்கியத்தைப் படித்து அவ்விதமாக ஏற்கவில்லை, திராவிட மொழிகளில் மூத்தமொழி தமிழ் என்பதால் ஏற்றார்கள். இடைக்கால, பிற்கால, சிற்றிலக்கியங்கள் யாவும் வடமொழிக் கதைகளை உட்கொண்டவை. அவற்றை மொழிபெயர்த்தால் என்ன பயனளிக்கும் என்பதும் சந்தேகம். அண்மைக்கால இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. யார் யார் பரிசு வாங்குகிறார்களோ அவர்களை எல்லாம் சிறந்த ஆசிரியர்கள் என்று கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். உதாரணமாக அகிலன் ஞானபீட பரிசு வாங்கினார். அவருடைய நூல்களை எல்லாம் மொழிபெயர்த்தார்கள். அதுபோல பிற சாகித்திய அகாடெமி போன்ற பரிசு வாங்கியவர்களின் நூல்களையும் மொழிபெயர்க்கிறார்கள். பரிசுபெறாத நல்ல ஆசிரியர்களின் நூல்களை விட்டுவிடுகிறார்கள். இது தமிழில் இருக்கும் பிரச்சினை. பழந்தமிழ் இலக்கியத்தை இலக்கியச்சுவையோடு மொழிபெயர்ப்பதற்கோ சரியான ஆட்கள் இல்லை.

அண்மைக்கால இலக்கியத்தில் தமிழிலிருந்து தரமுள்ளவர்களைவிட தரமற்றவர்களை அதிகமாக மொழி பெயர்க்கிறார்கள். இது பிறமொழியாளர்கள் மத்தியில் தமிழைப் பற்றி ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தும்.

ஒரு வங்காளி நாவலை நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன் என்றால் எனக்கு வங்காளம் தெரியவேண்டும். தமிழ் தெரியவேண்டும். மேலும் மொழி பெயர்ப்பவன் இலக்குமொழியாளனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். தமிழிலிருந்து வங்காளிக்குப் பெயர்க்க வேண்டும் என்றால் பெயர்ப்பவன் வங்காளியாக இருக்கவேண்டும். ஆனால் வங்காளிக்குத் தங்கள் மொழிதான் உயர்வு, பிற தாழ்ந்தவை என்ற எண்ணம். அதனால் அவர்கள் மொழிபெயர்க்க வருவதில்லை. தமிழிலிருந்து இந்திக்குப் பெயர்க்கவேண்டும் என்றால் இந்தி மொழிக்காரர்களாக இருந்தால்தான் சிறப்பாகச் செய்வார்கள். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை. காரணம், இந்தி தேசிய மொழி. நாம் பிறமொழிகளைப் படிக்கவேண்டியதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு. நாம்தான் இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு என்றெல்லாம் நல்ல இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் செய்திருக்கிறோமே தவிர அவர்கள் அப்படிச் செய்யவில்லை. (சாகித்திய அகாதெமி மொழி பெயர்ப்புகளை பார்த்துவிட்டுத்தான் இதைச் சொல்கிறேன்), இதனால் தமிழின் சிறந்த படைப்புகள் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோளாறு. இந்தியாவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22. இவற்றில் ஒன்றை மட்டும் தேசியமொழி என்ற தகுதி கொடுத்துப் பிறவற்றை கவனியாதுவிட்டால், அவை வளர்வதில்லை. குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளைப் படிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மையை அரசியல் சட்டம் உருவாக்கி இருக்கிறது. அதனால் வடநாட்டுக்காரர்கள் தென்னிந்திய மொழிகளைப் படிப்பது குறைவு. அதிலும் தமிழ்தான் வடமொழிச் சார்பு மிகக் குறைவானது. அதனால் இதைப் படிப்பது மிகவும் குறைவு. மலையாளம் போன்ற மொழிகளில் சமசுகிருதக் கலப்பு ஏராளம். நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப போன்றவற்றை ஏற்றதோடு சம்புகாவியம் போன்ற வடமொழி இலக்கிய வகைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு அயலான மொழி. இந்திய மொழிகளிலேயே வடநாட்டுக்கு மிகக்குறைவாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழ்தான். இதற்குக் காரணம் வடநாட்டவரின் குறுகியநோக்கம்.

சிறகு– மொழிபெயர்ப்புத் துறை இணைய தளத்திற்குப் போகிறதா? அதற்குத் தனியான இணைய தளம் இருக்கிறதா?

பூரணச்சந்திரன்- இருக்கிறது…

சிறகு- மொழி பெயர்க்கும்போது ஒரு படைப்பின் மூலம் சிதைந்து விட வாய்ப்பு உண்டல்லவா?

பூரணச்சந்திரன்- மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். மூலமொழியைப் போலவே இலக்குமொழியும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். நல்ல ரசனை வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தால்தான் நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்கும். இன்றைக்கு இருககும் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழி அறிவும் ரசனை யும் போதிய அளவு இருப்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஸ்பானிய மொழிக் கதைகளை ஆங்கில வாயிலாகத் தமிழில் மொழிபெயர்க்கிறார், ஆனால் அவருடைய ஆங்கிலத்தகுதி, மேற்கத்திய கலாச்சார அறிவு பற்றி எனக்குச் சந்தேகம். அதனால் சரிவர இல்லை எனத் தோன்றுகிறது. ஜெர்மானிய இலக்கியங்களை-முக்கியமாக பிரெஹ்டின் நாடகங்களை 1970களிலேயே தமிழில் மொழிபெயர்த்தார்கள். ஆனால் எந்த மொழிபெயர்ப்புமே சரியாக வாசிக்கப்படும் அளவுக்கு இல்லை. இலக்கியமாகத் தமிழில் வரவில்லை. இந்தக் குறைபாடுகள் இன்றி மொழிபெயர்க்கவேண்டும்.

சிறகு- மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வார்த்தையாக அல்லது ஒரு பத்தியை படித்துவிட்டு அதன் கருத்தை உள்வாங்கி மொழிபெயர்ப்பீர்களா? எப்படி?

பூரணச்சந்திரன்- ஒவ்வொரு வார்த்தையாக மொழிபெயர்ப்பது முடியவே முடியாத காரியம். ஆங்கிலத்தில் கருத்துகள் வாக்கியமாக இடம்பெறும் முறை வேறு, தமிழில் வேறு. இந்தியில் வேறு. ‘The man who is there’  என்ற ஆங்கிலத் தொடரை அங்கே உள்ள மனிதர் என்று தமிழில் பெயர்க்கலாம். வார்த்தை வார்த்தையாக மனிதர் யார் இருக்கிறார் அங்கு என்று பெயர்க்க முடியாது. பொதுவாக மொழி பெயர்ப்பாளர்களாகிய நாங்கள் நூல்முழுவதையும் படித்துவிடுவோம். பிறகு பெயர்க்க வேண்டிய பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டு, வாக்கியம் வாக்கியமாக மொழிபெயர்ப்போம். சிலபேர் கடினமான வாக்கியங்களைத் தாண்டிப்போய்விடுவார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. முழுவதையுமே மொழிபெயர்ப்பதுதான் என் வழக்கம்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து மட்டுமா அல்லது வேறு மொழிகளில் இருந்தும் நீங்கள் மொழி பெயர்க்கிறீர்களா?

பூரணச்சந்திரன்- பொதுவாக இதுவரை பதிப்பகத்தார்கள் என்னிடம் ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நிறைய மொழிகளைப் படிக்க முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எதில்வேண்டுமானாலும் பெயர்க்க இயலும்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 1

597px-My_impression
கேள்வி 1. விரிச்சி கேட்டல் என்ற பண்டைய பழக்கம் இன்றைய சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒப்பானதா? காலக்கணிப்பு என்பது பிற்கால சங்க இலக்கியமான கணியன் பூங்குன்றனார் போன்றவர்களிடமும் இருநத வழக்கம் இல்லையா?

காசி விசுவநாதன், துபாய்
விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள். அதாவது, நாம் ஏதாவது ஒரு செயல் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலையோடு வீட்டு வாசற்படியை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கிறோம். தெருவில் யாரோ ஒருவன் இது முடியவே முடியாது என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டு போகிறான். நாம் உடனே மனம் துணுக்குறுகிறோம். பதிலாக, அவன் நிச்சயமா நல்லபடியா எல்லாம் நடக்கும்பா என்று சொல்லிக்கொண்டுபோவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது நம் மனம் மகிழ்ச்சிடைகிறது. இதுதான் விரிச்சி கேட்டல். இது ஒரு மூடநம்பிக்கை தான். இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான மூடநம்பிக்கை என்று ஆறுதல் அடையலாம்.
இது இக்காலச் சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒத்ததல்ல என்பது நான் விளக்கியபோதே தெரிந்திருக்கும். ஏனென்றால் இதில் ஜாதகம் எழுதுவது, அதை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பது, நல்லநாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைப் பார்ப்பது என்பதெல்லாம் கிடையாது.
“பிற்கால” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிய வில்லை. சங்க இலக்கியம்தான் தமிழில் முற்பட்டது, மூத்தது. கமில் சுவலபில் போன்ற உலகப் பேராசிரியர்கள் எல்லாம்கூட சங்க இலக்கியம் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமசுகிருதம், பிராகிருதம், பாலி போன்ற மொழிகளைத் தவிர இந்தியாவில் தமிழ் மட்டுமே இருந்தது. அக்காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளோ, குசராத்தி, வங்காளி போன்ற வடஇந்தியமொழிகளோ எவையும் தோன்ற வில்லை. தமிழைச் செவ்வியல் மொழி என்பதற்கு இது முக்கியக் காரணம்.
சங்க இலக்கியம் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக்காலமாவது பரப்பளவு உடையது. அதாவது ஒரே ஆண்டிலோ, ஒரு பத்தாண்டிலோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல அது. கி.மு. 300 வாக்கில் தொடங்கப்பட்டிருக்கலாம். கி.பி.200 வரை எழுதப்பட்டிருக்கலாம். அதில் கணியன் பூங்குன்றனாரை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக ஏசுநாதர் காலத்தை ஒட்டி இருக்கலாம். (தனித்தனிப் புலவரின் காலத்தை மதிப்பிடுவது கடினம், என்றாலும் சிலர் செய்திருக்கிறார்கள்.)
கணித்தல் என்பது கணக்கிடுதல். வானத்தின் நட்சத்திர, கோள் (கிரக) அமைப்புகளைக் கணக்கிடுபவர் என்பது இச்சொல்லின் பொருள். அதாவது இக்கால வழக்கில் சொன்னால், ஒரு வானியலாளர். சோதிடர் அல்ல. தமிழ் மக்கள் அக்காலத்தில் வானியலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம். பார்ப்பனர்கள் என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமானால், பிரம்மத்தைத் தேடுகிறார்களோ இல்லையோ, பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 3. தமிழிசை இயக்கம் தவற விட்ட பாதை என்ன? ஏன் தமிழர்களின் செவ்வியல் இசை வடிவமான கருநாடக இசை என்பதை-கர்நாடிக் என்ற இசைத்திருட்டினை மீட்டெடுக்க முடியவில்லை? 
கார்த்திகேயன், கலிபோர்னியா
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் தொட்டே தமிழ் இசைக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ்ப் பண்கள் (இராகங்கள்) பலவற்றைக் குறித்துள்ளன. பழந்தமிழ் நாட்டில் குழல், யாழ், தண்ணுமை (மிருதங்கம்) உட்படப் பல இசைக்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் இலக்கிய, கல்வெட்டு, பிற உரைநடைக்குறிப்புகள் சான்றுகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ பதிநான்காம் நூற்றாண்டில் சாரங்க தேவர், பின்னர் வேங்கட மகி காலம் தொடங்கி, தமிழிசை கர்நாடக இசையாக மாறியது. இவர்கள் எல்லாம் கன்னடர்கள், தெலுங்கர்கள். அவர்கள் தமிழ் இசையைக் கர்நாடக இசையாக மாற்றி, இராகங்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத்து, நூல்கள் எழுதிவிட்டார்கள். ஏனென்றால் அது விஜயநகரப் பேரரசின் காலம். தமிழ் ஆட்சியாளர்கள் இல்லை. இருந்த குறுநிலத் தமிழ் மன்னர்களாவது அபாயத்தை உணர்ந்து தமிழ் இசை பற்றிய நூல்களைத் தமிழ்இசை வாணர்களை வைத்து எழுதச் செய்திருக்கவேண்டும். அவ்வளவு நோக்கம் அவர்களுக்கு இல்லை. இடைக்கால வரலாற்றை விரிப்பது பதிலைப் பெரிதாக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
1930களில் தமிழிசை இயக்கம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்கள் பலரால் உருவாக்கப் பட்டது. தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ள பலர்-தண்டபாணி தேசிகர், இலக்குமணப் பிள்ளை போன்ற பலர் இதில் இணைந்தனர்.
ஆனால் தமிழிசை இயக்கம் ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1. தமிழிசை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீதிக்கட்சியைச் சேர்ந்த வர்கள். பச்சையாகச் சொன்னால், செட்டியார்கள், பிள்ளைமார்கள், முக்குலத் தோர் இத்தியாதி. அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற நிலையில், நீதிக்கட்சி செய்யும் எந்த முயற்சியும் காங்கிரஸுக்கும், இந்திய தேசியத்திற்கும் எதிரானதாகவே நோக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கம் பெரிய ஆதரவு பெறவில்லை. குறிப்பாகப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். காங்கிரஸ் பெரிய அளவில் பார்ப்பன இயக்கம்தான். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், கல்கியும் சத்தியமூர்த்தியும் மட்டுமே. பாரதியாருக்குத் தமிழ் இசையில் ஆர்வம் உண்டு. ஆனால் அவர் 1921இலேயே மறைந்துவிட்டார்.
2. இதை ஏற்ற நீதிக்கட்சிப் பெரும்தனக்காரர்கள், அடித்தட்டுவரை தமிழிசை இயக்கம் பரவுவதற்கான முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. மாநாடுகள் போட்டார்கள், சில கச்சேரிகள் நடத்தினார்கள், பத்திரிகைகளில் ஆதரவுக்கட்டுரைகள் எழுதினார்கள்-அவ்வளவுதான். உண்மையில் தமிழிசை சற்றேனும் பரவியது என்றால் காரணம் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகர்களால்தான். அவர்கள்தான் பொதுமக்களிடம் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சென்றார்கள். பொதுமக்களுக்கு இசையின் வரலாற்றிலோ, கோட்பாடுகளிலோ என்ன அக்கறை இருக்கமுடியும்?
3. மிக முக்கியமான கோளாறு, திராவிட இயக்கத்தவர் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. தி.க. எந்தக் கலையிலுமே ஆர்வம் காட்டியதில்லை. தி.மு.க. திரைப்படத்திலும், நாடகத்திலும் ஆர்வம் காட்டியதுபோல, தமிழிசையிலும் ஆர்வம் காட்டியிருந்தால் ஓரளவேனும் அது பிழைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடக்கத்தில் பாரதிதாசன் போன்றோர் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் கைவிட்டுவிட்டார்கள். திரைப்படப் பாடல்களின் திசை வேறாகப் போய்விட்டது. பொதுவுடைமை இயக்கத்திலும் பட்டுக்கோட்டை ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நல்ல பாடல்கள் எழுதியவர். வேறு ஒருவரும் கிடையாது.
4. பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் ஆற்றல் வாய்ந்த கவிஞனாக வந்தவர் கண்ணதாசன். ஆனால் அவருக்குக் கொள்கை எதுவும் கிடையாது. அதிகபட்சம், அவர் கண்ணனுக்கு தாசன்தான். கண்ணா கண்ணா என்று மறுபடியும் தெய்வப் புலம்பல்.
இப்படி எத்தனையோ காரணங்கள்.

கேள்வி 4. பரதவர் கலை என்ற பரதக்கலை, பின் நாட்களில் எவ்வாறு பரத நாட்டியம் என மாற்றம் பெற்று, ஒரு சாதி அமைப்பிற்கு மட்டுமே சொந்த மானது? அதனைப் பரத்தையர் கலை என்ற அவலம் வந்ததற்குக் காரணம் என்ன?

காந்திராஜ், வட கரோலினா 
அ. எல்லாச் சொற்களையும் வடமொழிச் சொற்கள் என்றாக்கி, அதற்கு ஒரு காரணத்தை அல்லது கட்டுக்கதையைச் சொல்லிவிடுவதில் பார்ப்பனர்களுக்கு நிகர் இல்லை. அப்படித்தான் பரதவர் கலை (பேச்சுத் தமிழில் பரதவக் கலை>பரதக்கலை) என்பதற்கும் ப-என்றால் பாவம், ர-ராகம், த-என்றால் தாளம், “பாவமும் ராகமும் தாளமும் நிரம்பியது பரதம்” என்றாக்கிவிட்டார்கள். உண்மையில் அப்படித்தான் என்றாலும், அது பாராதாக் கலை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்? (ஒருவேளை வடமொழியில் நெடில்களை எல்லாம் விட்டுவிடவேண்டுமா?)
ஆ. இதெல்லாம் பின்னால்தான். இம்மாதிரிக் காரணங்கள் கண்டுபிடிக்கும் முன்பே அது பார்ப்பனர்க் கலையாக உருமாற்றம் அடைந்துவிட்டது. அதற்கு முன்பு அதை இசைவேளாளர்களும் தாசிகளும்தான் காப்பாற்றிவந்தார்கள். இராஜராஜ சோழன் சோழநாட்டில் பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதும், அவற்றில் கணிகையர்களைப் பாட்டுப்பாடுவதற்கும் நாட்டியமாடுவதற்கும் நியமித்தான். அதற்காகவே முன்பு சிற்றளவில் இருந்த பரத்தையர்களை தேவதாசிகள் (தேவரடியார்கள்-இது இப்போது வழக்கில் தேவடியா என்று வசைச்சொல்லாக மாறிவிட்டது) என்று பெரியதொரு சாதியாக மாற்றிக் கோயிலுக்குக் கோயில் அனுப்பினான். இது நடந்தது கி.பி. பதினோரம் நூற்றாண்டில்.
இ. இவர்கள் தேவர் அடியார்களாக இருந்ததெல்லாம் சிறுகாலம்தான். பிறகு இயல்பாகவே அவர்கள் பெரியமனிதர்களுடைய, அதிகாரிகளுடைய, ஆதிக்க சாதியினருடைய (பார்ப்பனர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், இத்தியாதி) வைப்புகளானார்கள். (1950கள்வரை கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவருக்கும் வைப்பாட்டிகளாக தாசிகள் உண்டு. அவர்களுக்கு அதில் மிகவும் பெருமை. அக்காலத்து ஜமீன்தார், மைனர்களுக்கும் தாசிகளிடம் போய்வருவது மிகப் பெருமை.) ஆகவே இறைவனுக்குரிய கலை, பெரிய மனிதர்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. அதற்குப் பெயரும் பரதவர் கலை என்பதிலி ருந்து சதிர்க்கச்சேரியாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரதநாட்டியம், சதிர் என்ற பெயரில்தான் அறியப்பட்டது.
ஈ. இசை, நாட்டியக் கலையோடு அன்றிலிருந்து சம்பந்தப்பட்டது நாதசுரமும் பெரிய மேளம் எனப்படும் தவிலும். நாதசுரத்தை ஊத மூச்சுப்பிடிக்கவேண்டும். தவில் அடிக்க கைகளில் வலு வேண்டும். அந்த ‘தம்’-மும், வலுவும் இல்லாததால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள்.

கேள்வி 5. சங்க இலக்கியங்களின் காலநிலை குறித்து விளக்கம் தேவை.

சுப்பிரமணி, சென்னை 
முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இயற்றப் பட்டது சங்க இலக்கியம். இதற்கு ஆதாரங்களை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் (மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றில்) காணலாம். அகச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. புறச்சான்றுகளாகக் கிடைப்பவைதான் முக்கியமானவை. அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்.
அ. சங்ககாலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்) கிரேக்கர், ரோமானியர் பெரிய அளவில் தமிழகத்தோடு கப்பல்களில் வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ், பிளைனி, தாலமி எழுதிய நூல்கள் ஆகியவற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் கிரேக்க, ரோமானியக் (இவர்களை யவனர் என்பது தமிழ் வழக்கம்) காசுகள்-குறிப்பாக கி.மு.வில் இருந்த அகஸ்டஸ் சீஸரின் காசுகள் புதுச்சேரி அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களுக்கு யவனர் குற்றேவல் செய்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆ. தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பவை தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சொற்றொடர் அமைப்புகள், செய்திகள் ஆகியவை அக்காலத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிநடை, செய்திகள் ஆகியவற்றுடன் ஒத்துச் செல்கின்றன.
இ. சங்ககால நகரமான பூம்புகார் கடலடியில் இன்றும் மறைந்து கிடக்கிறது. 1980 கள்வரை கடலில் அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் காவிரி கடலில் கலக்குமிடத்துக்கு அருகில் கடலுக்கடியில் மிகப்பெரிய நகரம் ஒன்று இருப்பதைக் கண்டு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் பணம் இல்லை என்ற நொள்ளைச் சாக்கு காட்டி அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது.
இதுபோல இன்னும் ஏராளமாகக் கூறலாம். எதற்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படிப்பது நல்லது.


தமிழ் மலர் 2010

தமிழ் மலர் 2010

கோவை ஞானி அவர்கள், 2010இல் ‘தமிழ் மலர் 2010 ‘என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். கி.பி. 2000ஆம் ஆண்டில் காலச்சுவடு அமைப்பு ‘தமிழ் இனி’ என்ற பெரும் கருத்தரங்கினை நடத்தி, அதில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் ‘தமிழ் இனி 2000’ என்ற பெரிய தொகுப்பு நூலாக வெளியிட்டது. ஞானியின் இந்த முயற்சி அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது, அதுபோல ஒன்றைத் தாமும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கோவை செம்மொழித் தமிழ் மாநாடு நடக்கப்போகின்ற நிலையில் அதற்கு எதிர்வினையாகத் தம்மால் இயன்ற முயற்சியைச் செய்ய வேண்டுமென்ற ஞானியின் பேரார்வத்தையும் இம் மலர் காட்டுகிறது.

பெரும்பொருட்செலவில் அது நடக்கப்போகின்ற நிலையில், ஞானி, குறைந்த பொருட்செலவில், கட்டுரை களை வருவித்துத் தொகுத்துத் தந்துள்ளார். பாராட்டுக்குரிய முயற்சி, சிறந்த கட்டுரைகளைத் தாங்கிய அருமையான தொகுப்பு. இந்த மலரை வெளியிட்டபின் இதற்கென ஒரு சிறியவிழாவினையும் இலக்கியக் கருத்தரங் கினையும் ஏற்பாடு செய்து அந்த முயற்சியை அவர் நிறைவுசெய்தார். தமிழ் ஆர்வமுள்ள நண்பர்கள் யாவரும் இந்த தமிழ்மலர் 2010ஐ வாசிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

(நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது எழுதப்படும் கட்டுரை அல்ல இது. 2010இல் தமிழ்மலர் வெளியீட்டு விழாவிலே படிக்கப்பட்ட கட்டுரை. ஆகவே இதில் சொல்லப்படுபவை அப்போதைய 2010 நிலை பற்றிய கருத்துகள். முதலில் ஒரு புறவுரை.)

[புறவுரை:  தமிழ் மலர் 2010 தக்க நேரத்தில்தான் வெளிவருகிறது. ஏறத்தாழ சென்ற வருடத்தின் (2009) பாதிப்புகளை ஓரளவு தமிழ் மக்கள் சற்றே மறந்திருக்கும் வேளையில் சிங்கள அதிபர் தில்லிக்கு வந்துவிட்டார். பற்றுள்ளோர் சிலர் கருப்புக்கொடியேனும் காட்டினார்கள். மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து, பின்னும் இலட்சக்கணக்கான தமிழர் இரும்புவேலிகளுக்குள் அடைபட்டுத் தவிக்கும் வேளையில், அரசியல் தீர்வே கிடையாது என்று அந்தக் கொலைகாரன் மறுத்துவிட்டநிலையில், அக்கொலைகாரனிடமே நம் தமிழகத் தலைவர் இலங்கைத் தமிழர்களைக் ‘காப்பாற்று, காப்பாற்று’ என்று மனுக்கொடுக்கிறார் இன்னும். நம்மால் வாயால் சிரிக்கமுடியவில்லை. இந்த நிலையில் செம்மொழி மாநாடு அடுத்த பத்துநாட்களில் நிகழ இருக்கிறது.

செம்மொழி என்ற அறிவிப்பு வந்தபோதே நமக்கு அதன் பின்னணியில், அந்த ‘மத்திய அரசாங்க விருது’ அளிக்கப்பட்டதில் உடன்பாடில்லை. ஞானி உடனே எதிர்ப் புத் தெரிவித்தார் என ஞாபகம். நான் என்னுடைய ‘இந்திய மொழிகள்’ என்ற நூலில் தெரிவித்த கருத்தைச் சொல்லிச் சற்றே ஆறுதல டைகிறேன். “ஆயிரம் ஆண்டுப் பழமைதான் செம்மொழித் தன்மைக்குக் காரணம் என்றால் பல மொழிகள் தமிழோடு போட்டிக்கு வந்துவிடும். நியாயமாகவே ஆயிரம் ஆண்டு வரலாறு உடைய தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் எங்களுக்கும் செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று கேட்கக்கூடும். இறுதியில் செம்மொழி என்பதற்கான அர்த்தமே அபத்தமாகிவிடும்” (ப.136) என்று அந்நூலில் ஆறாண்டுகளுக்கு முன் எழுதினேன். அக்கூற்று இப்போது பலித்து விட்டதா இல்லையா?

சுமார் 40-45 ஆண்டுக்குமுன் தி.மு.க. என்னை தீவிரமாக பாதித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது செம்மொழி மாநாட்டைக் கூட்டுபவர் வசனம் எழுதிய ‘அவன் பித்தனா’ என்ற திரைப்படத்தைப் பார்த்த ஞாபகம். அதில் கடைசியாகக் கதாநாயகர், இலட்சிய நடிகர் இராசேந்திரன், ‘இன்னின்னவற்றையெல்லாம் இலட்சியத்திற்காக, பொது நன் மைக்காகச் செய்தேன், நான் பித்தனா’ என்று அடுக்கிக் கொண்டே போய், ‘அட பைத்தியக்கார உலகமே’ என்று முடிப்பார். இன்று அந்த வசனகர்த்தா தமது வசனத்தை மறுபடியும் கண்டிப்பாக மீண்டும் படித்துப்பார்க்க வேண்டும். எவைஎவை யெல்லாம் சமூக அநீதி என்று அவரால் கண்டிக்கப் பட்டனவோ அவையெல்லாம் இன்று அவராலே மிகத் திருத்தமாகச் செய்யப்பட்டுவிட்டன. அவர் தாம் பித்தரல்ல, தமிழ்மக்கள்தான் பைத்தியங் கள் என்று நிறுவுவதில் உலகளாவிய வெற்றி கண்டுவிட்டார். இதைத்தான் காலத்தின் கோலம் என்பதா? (1914-பின் குறிப்பு: அவருக்குப் பின் வந்தவர் தமிழ் மக்களை இன்னும் அதிக பைத்தியக்காரர்கள் ஆக்குவதில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது.)

இதை இங்கே நான் நினைக்கக் காரணம், இப்போதைய பின்னணி மட்டுமல்ல. நம் தமிழ்த்திரைப்படங்கள் ஒரு போதும் திரைப்படங்களாக இருந்ததில்லை. பழங்காலத்தில் அவற்றில் சில இலக்கிய வெளிப்பாடுகளாக இருந்தன. இலக்கியம் என்ற தலைப்பு அவற்றில் ஒன்றை நினைக்கத் தூண்டியது-அவ்வளவுதான். மற்றப்படி, செம்மொழி மாநாட்டின் வன்மை மென்மை பற்றித் ஞானி விமர்சித்த சிந்தனைப்பகுதிகள், ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர்களின் கருத்துரைகள் ஆகியவை பொருத்தமே.

இதுவரை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஏழு மாநாடுகள் நடந்துள்ளன. இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு 1968இல் நான் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது. எனது ஊரான வேலூருக்குச் சென்னை வெகுதொலைவில் இல்லை. அதை வேடிக்கை பார்க்கப்போனேன். பல தமிழ் அறிஞர்களை தூரத்திலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேளிக்கைகளையும் சிலை திறப்புகளையும் பார்க்கும் பாக்கியமும்கூட. அடுத்தடுத்த மாநாடுகள் நிகழ்ந்தபோது நான் தமிழ் ஆசிரியனாகிவிட்டபோதிலும் ஒன்றிலும் நான் பங்கேற்றதில்லை. ஆறாம் மாநாடு மதுரையில் நடந்தபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு சென்றோம். அப்போதுதான் அறிஞர் எஸ் ஆர் கே, கைலாசபதி, சிவத்தம்பி, கவிஞர் அக்னிபுத்திரன் போன்றோரை முதன்முதல் சந்தித்தேன். ஏழாம் மாநாடு நினைவில் புகவேயில்லை. எட்டு பெரும் வெறுப்பை உண்டாக்கியிருந்தது. விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கையில் இப்போது நிகழ்கிறது ஒன்பதாம் திருவிழா-செம்மொழி மாநாடு என்ற பெயரில். இதற்குத் தமிழ்மலர் 2010 போன்றதொரு எதிர்வினை தேவைதான்.]

இந்தத் தொகுப்புநூலை ஞானி நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். முதற் பகுதியில் அவருக்குப் பிடித்தமான தமிழியக்கம், தமிழ் நாகரிகம் பற்றிய சிந்தனைகள் அடங்கியிருக்கின்றன. அதில் 22 கட்டுரைகள் உள்ளன. பகுதி இரண்டில் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. மூன்றாம் பகுதியில் கவிதைகளும், நான்காம் பகுதியில் நூல்கள் அறிமுகமும் உள்ளன. இவற்றுடன் ஆர்வலர்கள் சிலரின் நினைவுக்குறிப்பு களும் உள்ளன. இம்மலரில் வெளிவந்துள்ள இலக்கியக் கட்டுரைகள் பற்றி மட்டும் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.

இலக்கியக் கட்டுரைகள் என்ற தொகுப்பில்,
1 தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் (மருதநாயகம்),
2 தொல்காப்பியம்-எடுத்துரைப்பியல் நோக்கு (பஞ்சாங்கம்),
3 அகப்பாட்டின் கவிதைக்கோட்பாடு (குளோரியா சுந்தரமதி),
4 அமைப்பியல்வழி சங்கப்பாடல்களை அணுகுதலின் தேவை (விஷ்ணுகுமா ரன்),
5 மரபியலும் சொருகியலும் (இரணியன்),
6 குறுந்தொகை ஆய்வுகள் இதுவரையும் இனியும் (அறவேந்தன்),
7 வெட்சியும் முல்லையும் (சிலம்பு நா. செல்வராசு),
8 கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை (மணியன்),
9 தமிழின் செவ்வியல் மரபுத்தொடர்ச்சி (நளினிதேவி),
10 புலம்பெயர் இலக்கியம் (பூரணச்சந்திரன்),
11 பின்காலனியப் புலப்பாடுகளும் மட்டுப்பாடும் (சபா. ஜெயராசா),
12 தமிழில் இரண்டு உலக நாவல்கள் (யமுனா இராசேந்திரன்),
13 நவீனத் தமிழ்த் திறனாய்வாளர்கள் (வேணுகோபால்),
14 தமிழ்ச் சிற்றிதழ்கள் 2009 (கோவைவாணன்),
15 ஞானியின் மாயக் கம்பளம் (செந்தமிழ்த் தேனீ)
ஆகிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் பற்றி மிகுதியாகப் பேசுகிறது. அவை பற்றி ஏழு கட்டுரைகள். நவீன இலக்கியம் பற்றி நான்கு கட்டுரைகள் உள்ளன. சிற்றிதழ்கள் பற்றி ஒன்றும், பொதுவான நோக்கில் ஒன்றும் உள்ளன.

{இறுதிக்கட்டுரையாக (15) அமைந்துள்ள ‘ஞானியின் மாயக்கம்பளம்’ என்பது இலக்கியக்கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட இயலாத ஒன்று. அது தன் அனுபவத்தைப் பேசும் கட்டுரை. படைப்பிலக்கியப் பாங்கில், பாராட்டு நோக்கில் அமைந்தது. கடைசியில் ஞானியை நெடியோனாகிய மாயக் கண்ணனின் அவதாரமாக்கி விடுகிறார் கட்டுரையாசிரியர் செந்தமிழ்த்தேனீ. கடவுளே இல்லை, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை என்றெல்லாம் கேள்வியெழுப்பிய ஞானியையே கடவுளாக்கி விசுவரூபம் எடுக்கவைத்தி ருப்பது அதிசயம்தான். ஆனால் ஞானியைக் கடவுளாக்குவதற்கு முன்பு நிச்சயமாகக் கார்ல் மார்க்ஸையும் இன்னும் பலரையும் கடவுளாக்கினால்தான் முடியும். செந்தமிழ்த் தேனீ போன்றவர்கள் பலர் இருந்தால் எதிர்காலத்தில் கார்ல் மார்க்ஸுக்கும் ஊருக்கு ஊர் கோயில் தென்படலாம்.}

(14) தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிக் கோவைவாணன் எழுதியிருப்பது கட்டுரையல்ல. சிறு நினைவுக்குறிப்பு. ஏறத்தாழ அறுபத்தைந்து வயதுள்ள யாவருக்கும் குறைந்தது ‘எழுத்து’ காலத்திலிருந்தேனும் சிற்றிதழ்களின் வரலாறு தெரியும். சிற்றிதழ்களின் வன்மை மென்மைகள் சாதனைகள் தோல்விகள் போன்றெல்லாம் ஆராய்ந்திருந்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் சிற்றிதழ்களுடனாவது ஒப்பிட்டுச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொதுவாகப் பிற கட்டுரைகள் தங்கள் இலக்கை எட்டியுள்ளன.

(9) நளினிதேவி சொல்லவருவதை மிகவும் கஷ்டப்பட்டு, கஷ்டப்படுத்திச் சொல்கிறார். இன்னும் எழுத்தில் எளிமை கூடவேண்டும். அவர் கூறும் சில விஷயங்கள் விவாதத் திற்குரியவை. சான்றாக, (ப.283) இளங்கோவடிகளைப் பற்றிப் பேசும்போது “அரசியல் பிழைத்தோருக்கு மக்கள் போராட்டம் மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்று தீர்வு கூறியுள்ளார் இளங்கோவடிகள்” எனவரும் பகுதியைக் காட்டலாம். பொதுவா கப் பெரியாரியத்தையும் சமதர்மத்தையும் வலியுறுத்தும் கட்டுரை.

(11) சபா. ஜெயராசாவின் கட்டுரையிலும் விஷயம் போதாது. கட்டுரை முடிவுபெறவே இல்லை என்று அதன் வடிவம் காட்டுகிறது. இன்னும் நிறையச் சொல்லக்கூடிய தலைப்பு அது. குறிப்பாக காயத்ரி ஸ்பீவக்கின் முறையியல் பற்றி நிறைய விமரிச னங்கள் இன்று எழுந்துள்ளன.

(5) ‘மரபியலும் சொருகியலும்’ போன்ற கட்டுரைகள் இன்று தேவைதானா? தொல்காப்பியத்தில் இடைச்செருகல் உள்ளது என்ற கருத்து ஏறத்தாழ 1920-30களில் முன்வைக்கப்பட்டது. உண்மையிருப்பினும் இந்தக்கருத்தை எத்தனைகாலம் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? ஏற்கெனவே கிடைக்கும் சான்றுகள் தெளிவற்ற நிலையில், தொல்காப்பியத்தில் இடைச்செருகல் இருப்பதை மூலப்பிரதித் திறனாய்வு மூலம் மட்டுமே உறுதிப்படுத்தமுடியும். புதிய ஓலைச்சுவடிகள் கிடைக்காத நிலையில் இது இயலாதது. பொதுநிலையில்-நமது தமிழ்ஆர்வ மிகுதியினால், மரபியலில் இடைச்செருகல் உண்டு என நாம் ஏற்றாலும், அயல்நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற இடங்களிலிருந்தும் வாசிப்போர் ஏற்கமாட்டார்கள். மீண்டும் மீண்டும் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில்தான் இது முடிவடையும்.

(8) கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை-அல்ல, கபிலர் அகவல் தரும் சாதிஎதிர்ப்புச் சிந்தனை என்று தலைப்பு அமைந்திருக்கவேண்டும். மணியன் எழுதிய கட்டுரையில் கபிலர் அகவல் மூலத்தையும் தந்து தமதுநோக்கை வெளிப்படுத்தியுள்ளார். அது மிகப் பிற்கால நூல். ஆனால் சாதி எதிர்ப்பைத் தெளிவாக முன்வைக்கும் நூல். இப் பாட்டைக் கூறுபவர் எவர் என்னும் கேள்வி சிந்திக்கத்தக்கது.

(10) புலம்பெயர் இலக்கியம் பற்றிய சிந்தனை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் ஆழமாகத் தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்படவில்லை. எனது கட்டுரை இத்துறை பற்றிய ஓர் அறிமுகமாக அமைந்திருக்கிறது. புலம்பெயர் இலக்கியம் பற்றி விவாதிக்க நிறைய மொழிபெயர்ப்புகள் நம்மிடையே தேவை. இலங்கையைச்சேர்ந்த சிவானந்தனின் கீலீமீஸீ னீமீனீஷீக்ஷீஹ் பீவீமீs நாவலையும்கூட நாம் ஆங்கிலத்தில்தான் வாசிக்கவேண்டியிருக்கிறது. எண்பதுகளின் ஈழப்போராட்டம் பற்றிய மிக முக்கியமான நாவல் அது.

[தமிழ் ஆய்வின் குறைபாடுகள் இத்தொகுப்பிலும் நன்றாகவே வெளிப்படுகின்றன:
நன்கு வாசிக்காமலே பொதுநோக்கில் கட்டுரை எழுதுதல்,
தரவுகளைச் சரிவரத் தராமை,
தகவற்பிழைகள்,
குழுமனப்பான்மையோடு சிலரை மட்டும் மேற்கோள் காட்டுதலும் வலியுறுத்தலும், முன்னரே ஒரு துறையில் எழுதப்பட்டவற்றை மறந்து இன்று எழுதப்படுவனவற்றைப் புதிதாகச் சொல்கிறது எனப் பாராட்டுதல்,
அவசரக்கோலத்தில் போதிய தரவுகளின்றி எழுதுதல்,
அதிகமாக எழுதி வெளியிட்டு அங்கீகாரம் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுதல்
எனப் பல குறைகள் தமிழ்ச் சூழலில் உள்ளன. இப்படி எழுதுபவர்களிலும் சிலர் என் மாணவர்கள், நண்பர்கள், மதிப்புக்குரியவர்கள். ஆனால் ஆய்வு என்பதன் புறநோக்கு அடிப்படையை அவர்கள் மறந்து விடுகிறார்களே என்பது வேதனைப்படுத்துகிறது.
இலக்கியம் படிப்பவனுக்குப் பரந்த வாசிப்பு இல்லாமல் இருக்கலாம். அது குறையல்ல. விமரிசகனுக்குப் பரந்த வாசிப்பு தேவையெனினும் தான் எடுத்துக்கொண்ட இலக் கியம் பற்றிய அறிவே மிகுதியாக இருக்கலாம். அதுவும் தவறல்ல. ஆனால் ஆராய்ச்சித் துறையில் வருபவன், தனக்கு முன் அத்துறையில் என்ன சாதனைகள் நிகழ்ந்துள்ளன, என்ன என்ன கூறப்பட்டுள்ளன என்பனவற்றை முற்றிலும் நன்கு வாசித்தறிந்த பின் னரே ஆய்வில் ஈடுபட முடியும். இல்லாவிட்டால் ஆய்வுகளே பயனற்றுப் போய்விடும். தமிழ்ச்சூழலில் பெருமளவு இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.]

(13) வேணுகோபாலின் கட்டுரை முதலில் வரலாற்றுப் பாங்கிலும் பின்னர் ஞானி பற்றிய பகுதிக்கு வரும்போது முற்றிலும் புகழ்பாடும் நோக்கிலும் அமைந்துள்ளது. அப்பகுதியைக் குறைத்திருக்கலாம். அல்லது வன்மை மென்மைகளைப் பேசியிருக்க லாம். இந்த மலர் ஞானிக்குப் பாராட்டு மலர் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பெரிய மாநாடு (செம்மொழித் தமிழ் மாநாடு) நிகழப்போகும் சூழலில் அதற்கு நியாயமான, அறிவார்த்தமான எதிர்வினை என்றே கருதுகிறேன்.

(2 & 3) பஞ்சாங்கம், குளோறியா சுந்தரமதி ஆகியோரின் கட்டுரைகள் நன்கு அமைந்திருப்பினும் முன்னர் தங்களால் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்ட கருத்து களையே மீண்டும் கூறியிருக்கிறார்கள். சுந்தரமதி புதியதாக எதையும் கூறவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இன்னும் பலநோக்குகளில் ஆராயவேண்டும் என்பதே கட்டுரை கூறவிரும்புவது என்று முடித்துவிடுகிறார். பஞ்சாங்கம் தொல்காப் பியக் கருத்துகள் சிலவற்றை அமைப்பிய, குறியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

(6) அறவேந்தனின் கட்டுரை இன்னும் ஆழமாக அமைந்திருக்கலாம். குறுந்தொகை ஆய்வில் இதுவரை வெளிவந்த நூல்கள், நல்ல கட்டுரைகள் ஆகியவற்றைப் பட்டிய லிட்டுக் கூறியிருந்தால் சிறப்பு. பின்வருவோர்க்கு-குறிப்பாக ஆய்வு மாணவர்களுக் குப் பயன்படக்கூடியதாக அமைந்திருக்கும். குறுந்தொகையின் ஈற்றடிகள் போன்ற என்னுடைய முன்னோடியான கட்டுரையை அவர் குறிப்பிடவில்லை. அவர் பாராட் டும் பாலசுப்பிரமணியன் நூலின் கருத்துகளும், தலைப்பும்கூட (கட்டுடைத்துக் கோர்த் தல்) எனது பழையதொரு நூலின் தலைப்பை (கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும்) ஒட்டியிருக்கிறது என்பதையும் கூறியிருக்கலாம். வரலாற்று ஆய்வைப் பற்றியே (மௌரியர்/பாடலிபுத்திரம்) இறுதியில் பேசியுள்ளார். அதனை எத்தனையோ அறிஞர் கள் செய்திருக்கிறார்கள். சான்றாக, தமது ஆய்வேட்டில் அறிஞர் பே.க. வேலாயுதம், நந்தர் காலத்தின்பின் மௌரியர் காலத்தில் அமைந்த தமிழக மூவேந்தர் கூட்டணி, அக்கூட்டணி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் நூற்றாண்டு நிலைத்திருந்த தன்மை, பின்னர் அது வலுவிழந்தமைக்கான காரணங்கள் என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்திருக் கிறார். ஏறத்தாழ சங்ககாலத்தின் வரலாற்றைச் சிறப்பாகக் கட்டமைத்துக் காட்டியவர் களில் அவர் ஒருவர். ஆனால் பாவம், அவர் எந்தக்குழுவிலும் இல்லை என்பது அவர் செய்த பாவம்!

(7) பெருங்கற்படைக் காலத்தோடு சங்ககாலத்தை இணைத்துப்பார்க்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது. சிலம்பு நா. செல்வராசு ‘வெட்சியும் முல்லையும்-பெருங்கற்படைக் கால இலக்கிய மரபுகள்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். வெட்சியோ முல்லை யோ குறிஞ்சியோ கரந்தையோ-எதுவாயினும் இவை தொல்காப்பியரால் உண்டாக்கப் பட்ட-அல்லது அவருடைய காலத்திற்கு முன்னரே உருவாகியிருந்த இலக்கிய மரபுகள். இவை காலத்தால் பிற்பட்டவை. தமிழ்மொழி மிகச் செம்மையடைந்த பிறகு, தமிழர் கள் நன்கு நாகரிகம் பெற்ற பிறகே உருவானவை. பெருங்கற்படைக்காலம் (மெகாலிதிக்) என்பது காட்டுமனிதர்களுடைய காலம். நாகரிகம் பெறாத காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருங்கற்காலம் கி.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் முடிந்ததாகக் கருதலாம். அடுத்த பத்து நூற்றாண்டுகளில் தமிழனும் தமிழும் செம்மை பெற்றதன் விளைவே தொல்காப்பியமும் சங்கஇலக்கியமும் என்பது எனது கருத்து. செல்வராசு கூறுவதுபோல கி.மு.9க்கும் கி.மு.3க்கும் (sic-கி.மு. 9ஆம் நூற்றாண்டுக் கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பதே இப்படிக் குறிப்பிடப் பட்டிருக்கிறது)-வெட்சி முல்லைக் காலமாக ஏற்க இயலவில்லை. நான் வரலாற்ற றிஞன் அல்ல; அதனால் இதை அறிஞர்களின் ஆய்வுக்காக விட்டு விட்டு மேற்செல்கிறேன்.

(1, 4 & 12) இப்போது மூன்று கட்டுரைகளே-மருதநாயகம், விஷ்ணுகுமாரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடையவை எஞ்சியிருக்கின்றன. இவை மூன்றும் இந்நூலில் சிறந்தவை.

(4) விஷ்ணுகுமாரனின் கட்டுரை ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுடையது. அமைப்பியத்தை ஒரு தத்துவமாகவும் கற்கமுடியும். ஒரு ஆய்வுவழிமுறையாகவும் காணமுடியும். இங்கு அமைப்புவழி ஆய்வினைப் புறநானலூற்றினை ஆராயப் பயன் படுத்திக் காட்டியிருக்கிறார். அந்நூலின் தொடர்களை வைத்துப் பதினாறு அமைப்பு களுக்குள் அடக்கலாம் என்கிறார். இம்மாதிரி அமைப்புசார் ஆய்வுகளை ஏ,கே, இராமானுஜன், குளோறியா சுந்தரமதி, ஆலிஸ், (இவர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்றோர் செய்துகாட்டியுள்ளனர். சங்கப்பாக்களைக் கட்டுடைப்போர் எதிர்நிலையிலும் செய்துள்ளனர். இதனை ஏற்கெனவே நாட்டார் வழக்காற்றியலில் பாளையங்கோட்டை சேவியர் கல்லலூரியினர் செய்து காட்டியுள் ளனர். பொதுவாகத் தத்துவநோக்கில் அணுகி வன்மை மென்மை என்று செல்லாமல் ஓர் ஆய்வு நெறிமுறையாக அவர் காட்டியிருப்பதை நமது மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும். ஆய்வுக்குத் தெளிவானதோர் வழிமுறை சொல்ல வேண்டிய அவசியம் இன்று மாணவர்களிடையே உண்டு. சங்க இலக்கிய ஆய்வினை இவ்வாறு பலவழிகளில் முன்னெடுத்துச் செல்லலாம்.

(1) தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் கட்டுரை மதிப்பிற்குரிய பேரா சிரியர் மருதநாயகம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதனை நன்கு கற்றுணர மிகப் பரந்த மேற்கத்தியத் திறனாய்வு வாசிப்பும் ஆழ்ந்த தொல்காப்பிய அறிவும் தேவை. ஒரு பருந்துப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல். அதன் முதல் ஐந்து இயல் கள் எடுத்துரைப்பியல் பற்றியவை. கடைசி நான்கு இயல்களில் விடுபட்ட சில அழகி யல் கோட்பாடுகளையும் மரபையும் பற்றிச் சொல்கிறார்.

செவ்வியம், ரொமாண்டிசிசம் என்னும் உலகளாவிய இருவகை மரபுகளில் தொல் காப்பியம் செவ்வியமரபைச் சார்ந்தது என்பதை முதலில் எடுத்துக்காட்டுகிறார் மருதநாயகம். இது பாராட்டுக்குரியது. தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தி யது என்பது ஆசிரியரின் கருத்து. தொல்காப்பியம் சங்ககாலத்தை ஒட்டி அதன் இறுதியில் எழுந்தது என்று வைத்துக்கொண்டாலும், இக்கருத்து தேவையான ஒன்றே. இது கைலாசபதி போன்றோரின் கருத்துக்கு எதிரானது. கைலாசபதி The Tamil Heroic Poetryயில் சங்க இலக்கியம் வாய்மொழி மரபுசார்ந்த செவ்வியநிலை பெறாத வெளிப்பாடு என்றே கருத்துரைத்திருக்கிறார். சங்கஇலக்கியத்தை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான பாக்களின் தொகுப்பாகக் காணும் நாம், அதுவரையில் தமிழ்மரபு வெறும் வாய்மொழி-பாண மரபாகவே இருந்தது என்று நினைப்பது சாத்தியமில்லை. தொல்காப்பியத்தில் செவ்வியற்கூறுகள் உள்ளன என்பது தமிழின் பழஞ்செம்மை நிலையை உணர உதவும்.

பிறகு டி.எஸ்.எலியட் கூறிய ‘அப்ஜெக்டிவ் காரலேடிவ்’ என்ற வெளிப்பாட்டு முறை சங்கப்பாக்களில் சிறப்புற அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனை சங்கப்பாக்கள் உதாரணவழி விளக்கியிருப்பின் நன்றாக இருந்திருக்கும். (இது பற்றி முதன்முதலில் எழுத்து இதழிலேயே எழுதிவிளக்கியவர் சி.சு. செல்லப்பா).

பிறகு பிரவுனிங்கின் நாடகத்தனிமொழி பற்றிச் சொல்லிவிட்டுக் கவிஞனின் ஆளுமை பற்றிப் பேசமுனையும்போது டி.எஸ். எலியட் அக்கருத்தைப் பெறக் காரணமாக இருந்த எஃப். எச். பிராட்லிக்கும் அவரது உடனடி அனுபவம் என்னும் அகவய மெய் யியற் கருத்துக்கும் சென்றுவிடுகிறார்.
தொல்காப்பியம் குறிப்பிடும் சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாத கவிதை முறைக்கு ஒப்பேயில்லை. சங்கப்பாக்களின் நாடகத்தன்மை வாய்ந்த படைப்பு முறையை பிரவு னிங்கின் ஃப்ரா லிப்போ லிப்பிக்கும் எலியட்டின் ப்ரூஃப்ராக்கிற்கும் ஒப்பிட்டுப் பாராட்டுவது சிறப்பு. பிரவுனிங்கின், எலியட்டின் பாக்கள் பெயர்சுட்டப்பட்ட தனி மனிதனின் நாடகப்பாங்கான வெளிப்பாடுகள். ஆனால் சங்கப்பாக்கள் இவற்றிற்குக் காலத்தில் எவ்வளவு முந்தியவை? பிரவுனிங் படைத்த சகோதரர் லிப்பி பற்றிப் பின்னரும் பேசியிருக்கலாம்-கலைபற்றிய பிரச்சினைகளுக்காக (கவிதை-அறமுரைத் தலுக்கா, மகிழ்வூட்டலுக்கா என்பதைப் பற்றிப் பேசும்போது) இக்கவிதைக் கருத்தை விவாதித்திருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும்.

அகப் பாக்கள் அகவய அனுபவங்களைச் சித்திரிப்பவை என்பதைவிட ஒரு மரபைக் கைவிடாமல் போற்றுபவை என்பதுதான் சிறப்பு. அகவய அனுபவங்கள் நோக்கமாக இருந்திருப்பின் காதல் கொள்ளும் சமயம்தொடங்கி அதிகபட்சமாக முதல்குழந்தை யைச் செவிலி காணவரும் காலத்தோடு ஆண்-பெண் அனுபவங்களை வரையறைப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
தமிழ்க் கவிஞர்கள் எளிய இயற்கைக் காட்சியுருக்களைப் பயன்படுத்த வல்லவர்கள் என்பது தெளிவு. அதனை விளக்க, பழங்கால ஐரோப்பிய வழக்கமான தீமீணீக்ஷீதீணீவீtவீஸீரீ என்பதை ஷேக்ஸ்பியர் சிறப்பாகக் கையாண்டுள்ளதனோடு ஒப்பிட்டுக்காட்டுகிறார். கடைசியாகக் கவிதை எவ்வாறிருக்க வேண்டும் என்பது பற்றியும் கவிதைமொழி பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ள அளவைகள் ரிச்சர்ட்ஸ் தொடங்கி அண்மைக் காலப் புதுத்திறனாய்வாளர்கள் கூறியுள்ளவற்றிற்கு ஒத்துச் செல்லுதலை ஆசிரியர் எடுத்துக் காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளது.
புதுத் திறனாய்வாளர்களின் ஆய்வுமுறைக்கு ஒத்த “நோக்கு” என்ற கருத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி முதன்முதலில் அழுத்திக் கூறியவர் தமிழண்ணல் என்பது என் ஞாபகம்.

மருதநாயகத்தின் கட்டுரையின் கருத்துகள் பல்வேறு சமயங்களில் பலரால் முன்னரே சொல்லப்பட்டவை என்றாலும், தொடர்ச்சியான நோக்கில் தொல்காப்பியத்தின் பல்வேறு கூறுகளையும் விட்டுவிடாமல் அவை தொடர்பான ஆங்கிலத் திறனாய்வுக் கருத்துகளை ஒப்பிட்டுச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளது.
போகும் போக்கில் சங்க இலக்கியத் தலைவர்கள் யாவரும் வீரர்கள், தலைவியர் யாவரும் அழகியர் என்று ஒரு கருத்தைச் சொல்கின்றார் ஆசிரியர். சங்க இலக்கியத்தைப் படித்தபோது இவ்வாறான ஓர் உணர்வு எனக்கு ஏற்படவில்லை. தலைவன் வீரனோ, வியாபாரம் செய்பவனோ-தலைவி அழகானவளோ அழகற்றவளோ அவர் களுக்கிடையிலான அன்பு வாழ்க்கைதான் அதில் பேசப்படுகிறது. பெரும்பாலான தலைவன் தலைவியர் மேல்தர வாழ்க்கையைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். மீண்டும் இப்பண்பும் செவ்வியத்தன்மைக்கே இட்டுச் செல்லக்கூடியது.
(ஓர் அடைப்புக்குறி இடப்படாமை (ப.209) பொருள்மயக்கத்தைத் தோற்றுவித்து விடுகி றது. The Well Wrought Urn  என்ற தொடர் அடைப்பில் இருக்கவேண்டும். இல்லை எனில் அதுஒரு கவிதையின் பெயர் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.)

ஆகவே கடைசிநோக்கில் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கே இந்தக் கட்டுரை பயன் தருவதாகிறது. ஆங்கிலம் அறியாதவர்களுக்கும் பயன்தருமாறு எழுதினால் நலம் பயக் கும். உதாரணமாக கிளெந்த் புரூக்சின் ‘தி வெல்ராட் அர்ன்’ நூலையோ (குறிப்பாக paradox கவிதையின் உயிர் என்று விளக்கும் அதன் முதல் இயல் முக்கியமானது), நீண்ட கவிதை என்பது இருக்கவே இயலாது என்று வாதிடும் எட்கர் ஆலன்போ-வின் ‘தி ஃபிலாசஃபி அவ் காம்போசிஷன்’ என்னும் கட்டுரையையோ மொழிபெயர்த்து அளிப்பது நம் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.

மேலும் சில அடிக்குறிப்புகள் தந்திருந்தால் ஆய்வாளர்க்கும் மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். உதாரணமாக “புளூம்பீல்டு, சாம்ஸ்கி போன்றோரின் கவனத்தை தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் ஓரளவு கவர்ந்தன” என்று கூறுகின்றார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில் என்ற குறிப்பைத் தருவது நன்று. அதேபோலத் தமிழில் முதன்மையாக எழுதுவோரின் நூல் தலைப்புகளை ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்புகளாகக் குறிப்பிடாமல் (வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல் போன்றோரின் நூல்கள்) தமிழ்த் தலைப்புகளிலேயே குறிப்பிட்டிருக்கலாம் (The Tamil Concept of Love என்பதைவிடத் ‘தமிழ்க்காதல்’ நூல் பலருக்கும் அறிமுகம்).

மருதநாயகத்தின் கட்டுரை எழுத்துப்பெயர்ப்பிலும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. பிரா லிபோ லிபி (Fra Lippo Lippi), புரூச்சு (Brooks), சான்சன் (Johnson), ரிச்சர்ட்சு (Richards) போன்ற எழுத்துப்பெயர்ப்புகள் சற்றே சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. டகரத்திற்குப் பக்கத்தில் வரும் சகரத்திற்கு ஒலிப்பற்ற ஒலியே உண்டு. அதை ஸகரமாக ஒலிக்கஇயலாது. (Richards in English becomes Richardchu in Tamil). (குறிப்பாக சுயேச்சை-சுய+இச்சை போன்ற சொற்களை யெல்லாம் ‘சுயேட்சை’ என எழுதுகின்ற தற்கால நிலையையும் இன்று கருதுகிறேன்.) அறிஞர்கள் கூடி தமிழில் ஒலிபெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஓர் ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும். இப்படிப் பொதுநிலையில் செய்யவேண்டியவை எத்தனையோ உள்ளன. இவற்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களோ, அடுத்தபத்துநாட்களில் நிகழவிருப்பது போன்ற அறிஞர்கள் கூடும் மாநாடுகளும்தான் செய்ய இயலும். மாறாக இவை என்ன செய்கின்றன?

(12) கடைசியாக யமுனா ராஜேந்திரனின் கட்டுரை. ‘வரலாறும் கருத்துலகமும்-தமிழில் இரண்டு உலக நாவல்கள்’ என்பது அவரது தலைப்பு. இன்று தமிழிலும் பிறநாட்டு வாழ்க்கையை மையமாகக்கொண்டு நாவல்கள் என எழுதப்படுகின்றன. தமிழ்நாட்டிலி ருந்து போலந்திற்கு ஆசிரியப் பணிக்கெனச் சென்ற இந்திரா பார்த்தசாரதியும் தமிழவ னும் அப்படிப்பட்ட இரண்டு நாவல்களை (ஏசுவின் தோழர்கள், வார்ஸாவில் ஒரு கடவுள்) எழுதியிருக்கிறார்கள். இரண்டிற்கும் கால இடைவெளி இருபதாண்டுகள். முதல் நாவல் 1987இலும், அடுத்தது 2007இலும் வெளியாகியிருக்கின்றன. இரண்டிற் கும் இடைப்பட்ட காலவெளியில் சோவியத் அமைப்பு வீழ்ந்து விட்டது. போலந்து கம்யூனிசத்திலிருந்து விடுபட்டு ஐரோப்பியக் கூட்டணியில் சேர்ந்து விட்டது.

இந்த இரண்டு நாவல்களையும் பற்றிக் கருத்துரைக்கவரும் யமுனா ராஜேந்திரன், வேறு ஐந்து தென்னாசிய நாவல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறார். இவை, அருந்ததிராய் எழுதிய God of  Small Things, பங்கஜ்மிஸ்ரா எழுதிய The Romantics, அரவிந்த அடிகா எழுதிய The White Tiger, மைக்கேல் ஒண்டாட்ஜி எழுதிய Anil’s Ghost, சிவானந்தன் எழுதிய When Memory Dies ஆகிய நாவல்கள். சுருக்கமாகக் கூறினால், இவற்றுள் அருந்ததி ராயின் நாவலும், சிவானந்தனின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்நிறுத்தி எழுதப்படாதவை, கலைத்தன்மை கூடியவை. மைக்கேல் ஒண்டாட்ஜியின் நாவலும் ஓரளவு அப்படிப்பட்டதுதான். அடிகாவின் நாவலும் பங்கஜ் மிஸ்ராவின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்னிறுத்தி எழுதப்பட்டவை, கலைத்தன்மை குறைந்தவை என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு.

அருந்ததி ராயின் God of Small Things, கேரள சிரியக் கிறித்துவ வகுப்புக்குடும்பம் ஒன்றின் அதிஉயர் சாதி ஒழுக்கம், அதில் சாதிக்கலப்பு ஏற்படுதல், அதன் காரணமாக அடித்தட்டு மக்கள் கொல்லப்படுவது, அக்குடும்பத்தில் ஏற்படும் தளர்ச்சி, பின்வரும் தலைமுறைகள்-குறிப்பாக இரட்டையர் இருவர் வாழ்க்கை நாசமாகிப்போவது என்பதையெல்லாம் சித்திரிக்கிறது.

பங்கஜ் மிஸ்ரா எழுதிய நாவலில் கிராமத்தில் பிறந்த பிராமண இளைஞன், வாரா ணசியில் தன் வாழ்க்கையை நிறுவிக்கொள்ளமுற்படும்போது தற்செயலாக ஏற்படும் மேற்கத்திய மக்களின் தொடர்பு, அவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு, பின்னரும் அவன் நிலைபெறாமல் தன்வாழ்க்கையைத் தேடி அலைதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

அரவிந்த அடிகா எழுதிய நாவலில் ஒரு கீழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவன் பிழைப்பிற் காக தில்லிவந்து டிரைவராக வேலை செய்யும்போது தனது எஜமானனையே கொன்று விட்டு அவன் பணத்தைக் கவர்ந்து பெங்களூருக்கு வந்து ஒரு பெரு முதலாளி ஆகிவிடுகிறான். இந்தியாவுக்கு, பெங்களூருக்கு வரும் சீனப்பிரதமருக்குத் தன் வாழ்க்கையைக் கடிதமாக எழுதுகிறான்.

மைக்கேல் ஒண்டாட்ஜி சிங்களர். அவர் கதாபாத்திரங்களும் சிங்களர்களே. அனில் என்ற பெண்-நீச்சல் வீராங்கனை-புலம்பெயர்ந்து மேற்கில் வளர்ந்து ஈழத்திற்குத் தொல்பொருளாய்வாளராகத் திரும்புகிறாள். தற்செயலாக அவள் கண்டெடுக்கும் ஒரு எலும்புக்கூடு யாருடையது என்ற ஆராய்ச்சி அரசியல் தலைமையை பாதிக்கக் கூடியது என்பதனால் இடைஞ்சலுக்கு ஆளாகித் தன் நண்பனின் உதவியால் தப்பிச் செல்கிறாள். இதில் சிங்களருடைய நோக்கில் ஈழத்துப்போர் நோக்கப்படுகிறது.

சிவானந்தனின் நாவல் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் அவலத்தைப் பேசும் நாவல். அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை ஈழப்போராட்டம் இதன் பின்னணியாக அமைந்திருக்கிறது.

இந்த நாவல்கள் அனைத்திலும் மேற்கு-கிழக்கு வாழ்க்கை ஊடாட்டம் பிரதானம் பெறுகிறது. இன்று போலந்து நாவல்கள் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்படும் நிலையில், இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் ஆகியோரின் நாவல்கள் தமிழில் எழுதப் பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை என்றாலும் அவையும் ஐரோப்பாவில் பல மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

இவை இரண்டுமே சுய அனுபவம் இன்றி-போலந்து மக்களின், குறிப்பாக அவர்களில் அடித்தட்டு மக்களைப் பற்றிய நேரடி அனுபவம் இன்றி ஒரு பொதுப் பார்வை யில் எழுதப்பட்டதால் கலைத்தன்மை குறைந்து காணப்படுகின்றன என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு. இவற்றிலும் இந்திரா பார்த்தசாரதியின் நாவல், தமிழவனின் நாவலைவிடச் சற்றே மேலானது என்ற அளவில் அவருடைய மதிப்பீடு அமைந்துள் ளது. இதனைச் சற்றே இடைஞ்சலான மொழியில்-பற்பல விஷயங்களுக்கிடையே சொல்லி முடித்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவருடைய மதிப்பீடுகள் ஏற்புடை யவைதான்.

தமிழிலக்கியம் பற்றிய ஒரு முழுப்பார்வையை தமிழ்மலர் தொகுப்பிலுள்ள கட்டுரை கள் அளிக்கவில்லை. இடைக்கால இலக்கியங்களில் கபிலர் அகவல் தவிர ஏனைய வை பற்றிக் குறிப்புகள் கூடக் கிடையாது. குறிப்பாகக் காப்பியங்கள் பற்றியோ பக்தி இலக்கியம் பற்றியோ எந்தக் கட்டுரையும் இல்லை என்பது வருத்தம் தருவது. விமரிசனங்கள் அல்லது ஆய்வுரைகள் பாராட்டாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றி நுணுக்கமான கருத்தளிப்பு கள் உள்ளன. பிற சில இலக்கியப்பகுதிகள் தொடப்பட்டுள்ளன. நூல் அரங்கும், நினைவுக் குறிப்புகளும் வரலாற்று நோக்கில் எதிர்கால நோக்கர்களுக்கும், ஆய்வாளர் களுக்கும் பயன்படக்கூடியவை.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


வேர்களின் பேச்சு

வேர்களின் பேச்சு

(இந்தப் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுப்பு 2009இல் அடையா ளம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தபோது எழுதிய மதிப்புரை.)

meeranநாஞ்சில்நாடு தமிழுக்கு வழங்கியிருக்கும் சிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவல் வழி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘சாய்வுநாற்காலி’ போன்ற நாவல்களை எழுதியவர். சாகித்திய அகாதெமி உட்படப் பல பரிசுகளைப் பெற்ற இவரை அறிமுகம் செய்யத் தேவை யில்லை. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘வேர்களின் பேச்சு’. முன்னர் ஆறு சிறுகதைத் தொகுப்புகளாக வெளி வந்தவை.

தமது எழுத்துகளில் மீரான் ஒரு பெரிய ஜாலமே செய்கிறார். என்ன அற்புதமான கவிதை ததும்பும் நடை! பல கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளன. மீரானின் சிறுகதைகளில், நாவல்களைவிட மலையாளக் கலப்பு குறைவு. முஸ்லீம்களின் வட்டாரமொழிக் கலப்பு உண்டு. ஆனால் அது எவ்விதத்திலும் இக் கதைகளின் சுவாரசியத்தைக் குறைக்கவில்லை.

மீரான் பெரிய உலகளாவிய பிரச்சினைகளில் ஈடுபடுவ தில்லை. தமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அறவே எழுது வதில்லை. தமது கிராமம். அதில் வசிக்கும் முஸ்லீம் மக்கள். அவர்கள் படும் பாடு, அவர்களின் மூடநம்பிக்கைகள். அவ்வளவு தான் அவரது உலகம். அவர்களைப் பற்றிய மிக நுட்பமான பதிவுகளை அளிக்கிறார். மீரானிடம் ஒரு ரொமாண்டிக் தன்மையும் இருக்கிறது. பழையதன் மீதுள்ள நாட்டம், தீமைகளுக்குத் தண் டனை காத்திருக்கிறது என்ற நம்பிக்கை. அவ்வப்போது வேடிக்கை யாக பேய்கள், ஜின்களும் வருகின்றன. மனிதர்களுக்கு புத்தியும் சொல்கின்றன பேய்கள்!

அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆதரவற்ற மனிதர்களின்-ஆனால் இச்சமூகத்தின் வேராக இருப்பவர்களின் உணர்ச்சிகள் அவரை பாதிக்கின்றன. அதைத்தான் அவர் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்: வேர்களின் பேச்சு!

தமது சமூகத்திற்கு வெளியே சென்று அவர் எழுதியுள்ள கதைகள் மிகக் குறைவு. அவற்றில் குறிப்பிட வேண்டிய முக்கிய மான கதை ‘மிஸ்டர் மார்ட்டின்’. எவ்வளவு நைச்சியமாக நமது கிராமங்களின் உள்ளே நுழைகிறார்கள் உலக முதலாளிகள் என் பதை அழகாக வெளிப்படுத்தும் கதை. ‘ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்’ மிக மென்மையாக நமது நகர்ப்புற மனப்பான்மை யால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைப் பதிவுசெய்யும் கதை.

சிறிய வெற்றிகளில் அகமகிழ்ந்து போய்விடாமல் மிகச் சரியான முறையில் பதிவு செய்தலும் தகவல்கள் மீது துல்லிய மான கவனம் செலுத்துதலும் மீரானை மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆக்கியிருக்கின்றன. தொடக்க காலத்தில் அவர் முஸ்லிம் இதழ்களிலேயே எழுதிய சிறுகதைகளிலும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கறை-குறிப்பாக வேறு வழியின்றிப் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறுவர் சிறுமியரைப் பற்றிய கவனம் ஆழமாக வெளிப்படுகிறது.

சற்றுப் பிந்திய கதைகளில் முதியவர்கள் ஆதரவின்றிப் படும் வேதனைகளும், நடுத்தர வயதுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கப் படும் அவதிகளும், சிறியவர்கள் தங்களை ஆளாக் கிய முதியவர்கள் மீது காட்டும் அவமதிப்புகளும் போன்ற விஷயங்கள் முதலிடம் பெறுகின்றன. சமயமோதல் பற்றிய குறிப்பு அபூர்வமாக ஓரிரண்டு கதைகளிலேயே வருகிறது. மற்றப்படி மீரான் காட்டும் இஸ்லாமிய சமூகத்தினர், தாங்கள் சிருஷ்டித்துக் கொண்ட ஒரு வட்டத்திற்குள் அதன் படிநிலைகளுக்குள் ஏற்றத் தாழ்வுகளுக்குள் வெந்து நொந்துகொண்டோ சந்தோஷமாகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற சமயத்தினர் பற்றிய பதிவுகள் மிகக் குறைவு என்றாலும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முஸ்லிம் முதியோர் மீது காட்டும் பரிவு ஓரிரு கதைகளில் மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலக் கதைகள் சில மிதமிஞ்சிய உணர்ச்சியைக் கையாண்டாலும், ஒரு செய்தியாளனின் பார்வையில் கதையைச் சொல்கிற மீரானின் நடை, பிரச்சின களைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாத ஒரு சமூகத்திற்குள் நுழைந்து அவர்களின் வாழ்க்கைகளைச் சந்திக்கும் அனுபவத்தைச் சிறப்பாகத் தருகிறார் முகமது மீரான். அடையாளம் பதிப்பகம் மிகச் சிறப்பான கட்டமைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஓர் அருமையான பங்களிப்பு.


மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

ஞானி தமிழுலகில் ஏறத்தாழ முப்பதாண்டுகளாகத் திறனாய் வாளராக இயங்கி வருபவர். படைப்புலகிலும் அவர் சில காரியங் களைச் செய்துள்ளார் என்ற போதிலும் அவை முக்கியமானவை அல்ல என்று கருதுகிறேன். ஆனால் திறனாய்வுலகில் அவரது சாதனை என்றும் நிற்கக்கூடியது. அத்திறனாய்வுகளுக்கெல்லாம் அடிப்படையாக அவருக்கு ஓர் தனித்த அழகியல் பார்வை இருக்கிறது. அது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாக இருப்பதால் அதனைப் பற்றிய கட்டுரையாக இது அமைகிறது.

அவரது பார்வைகள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடாக இருப்பத னால் ஞானியின் அழகியல் கொள்கை அல்லது விமரிசனக் கொள்கை பற்றி நான் இதுவரை எதுவும் எழுதியது கிடையாது. பொதுவாக அவருடைய அழகியல் என்பது மார்க்ஸிய சித்தாந்த எல்லைக்குள் இயங்குவதால் அதனை ‘மார்க்ஸிய அழகியல்’ என்பதற்குள் அடக்கலாம். ஆனால் அது பிற மார்க்ஸியவாதிகள் முற்றிலும் ஏற்கக் கூடிய அழகியலும் அல்ல.

ஞானி எங்குநல்லது காணப்படினும் அதை எடுத்துக்கொள்ளும் ஒரு விமரிசகர். நமது சித்தர் மரபிலிருந்து நாம் நமக்கென்ற பார்வைகளைப் பெறவேண்டும் என்பார். அதேசமயம் பக்தி இலக் கியத்தையும் பாராட்டுவார். பொன்னீலன் போன்ற மார்க்ஸிய நோக்குடைய எழுத்தாளர்களையும் பாராட்டுவார். ஒருபடி மேலேசென்று ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் படைப்பு களைப் புறக்கணிக்கக்கூடாது என்பார். இவையெல்லாம் கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றவை. அவர்களது கட்சி சார்ந்த அழகியலுக்குப் புறம்பானவை. எங்கு நல்லது காணினும் எடுத்துக்கொள்ளக்கூடிய இத்தகைய பார்வையை ‘எக்லெக்டிக்’ என்பார்கள். இந்த எக்லெக்டிக் பார்வை மார்க்ஸிய அழகியலுக்கு முரணானது எனக் கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் நூல்களில் ஞானிக்கு முக்கியத்துவம் தந்தது கிடையாது.
மார்க்ஸிய அழகியல் என்ற பெயரில் ஞானி உட்படப் பலர் நூல் கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றின் ஆதாரக் கருத்துகளைத் தொகுத்து நோக்கி ஞானியின் அழகியல் பார்வை அவற்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதைப் பார்ப்பது நலம். எனவே அடிப் படையாக இங்கே சில செய்திகளைத் தொகுத்துக் கொள்வோம்.

மார்க்ஸ்-ஏஞ்சல்ஸ் எழுத்துகளில் கலை பற்றி முறையான கொள்கை எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இருவருமே தங்கள் இளமை தொடங்கி வாழ்நாள் பூராவும் கலையில் பேரளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் எழுத்துகளில் ஆங்காங்கு காணப்படும் குறிப்புகளால் அறியலாம். அண்மைக் காலத்தில் பலரும் இத்தகைய குறிப்புகளைத்தான் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்திவந்துள்ளனர். குறிப் பாக, ஆங்கிலத்தில் ஆர்வன் (1973), லய்ங் (1978) ஆகியோரின் நூல்கள் இதற்குத் துணைபுரிகின்றன.

மார்க்ஸ்-ஏஞ்சல்சின் அழகியல் பொதுவாக அவர்களது இலக் கியப் பார்வையின் விளைவேயாகும். அவர்கள் படித்த இலக்கியங் களில் நாடகங்களும் அடங்கும். எனினும் இவை அழகியல் கொள்கையாக உருப்பெறக்கூடிய அளவுக்கு ஒருசீர்த்தன்மை உடையனவாக இல்லை. அவையும் பெரும்பாலும் உள்ளடக்கம் தொடர்பானவையாகவே இருப்பதால் பிற்காலத்தில் மார்க்ஸிய இலக்கிய விமரிசனம் முழுமையுமே உள்ளடக்கத் தொடர்பாக மாறிப்போயிற்று. வடிவத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வில்லை. 1945வரை மார்க்ஸ்-ஏஞ்சல்சின் கடிதங்கள், அவர் களது அழகியல் கருத்துகள் ஆகியவை தொகுத்துத் தரப்படவே யில்லை. இதனால் அவர்களது பார்வைகளையும் பின்வந்த திற னாய்வாளர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏஞ் சல்ஸ் மறைந்து ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் சென்ற பிறகே மார்க்ஸ்-ஏஞ்சல்ஸுடைய அழகியல்கருத்துகள் ஒருவாறாகத் தொகுக்கப்பட்டுத் திறனாய்வுக்கெனப் பயன்படுத்தப்படலாயின. இருந்தாலும் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கவேண்டு மென்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி முதலாகவே முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. மெரிங் (1893), பிளஹெனாவ்(1912) ஆகியோர் செய்த முயற்சிகளை இங்கே குறிப்பிடலாம்.

பிந்தைய மார்க்ஸிய எழுத்தாளர்கள் செய்த முயற்சிகளின் சாரத் தினை ‘யதார்த்தத்தை வடிவமைத்தல்’ என்ற தொடருக்குள் அடக்கிவிடலாம். இதற்கு அடிப்படையாக அமைவது மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயங்கியலுமாகும். இவற் றைப் பின்பற்றினால் யாரும் இலக்கியப் படைப்புகளையோ அவற் றின் அழகியலையோ பொருளாதார வரலாற்றுமைய வாதத்திற் குள் முடக்கிவிடமுடியாது. என்றாலும் எப்படியோ பின்னாளைய இலக்கியப் படைப்புகளும் விமரிசனங்களும் மார்க்ஸிய அடிப்படை யிலான ஓர் அறவியல் பிரசாரத்திற்குள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலும் வர்க்கப் பார்வை, யதார்த்தத்தை மீள்படைப்புச் செய்தல் என்ற அளவிலேயே மார்க்ஸியப் படைப் புலகம் முடங்கிவிட்டது.

1840களில் பாட்டாளிவர்க்கத் தலைமை என்பதைச் சிந்திக்கத் தொடங்கிய நாள்முதல் வர்க்கப்பார்வை என்பது முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாகிவிட்டது. உண்மையில் வர்க்கச் சமன் மைகள் (Class Equivalents) என்னும் விஷயம்பற்றி முதலில் பேசிய வர்கள் மார்க்ஸோ ஏஞ்சல்ஸோ அல்ல. பிளெஹனாவ்தான் இக் கொள்கையை உருவாக்கினார். இளம் ஹெகலியர்கள் வெளிப் படையாகவே அரசியல் பிரசாரத்தைத் தங்கள் படைப்புகளில் வைத்தபோது அவை வரலாற்று உணர்வுடையவை என்ற காரணத்தினால் மார்க்ஸ் ஓரளவு ஏற்றுப் பாராட்டவும் செய்தார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் வர்க்க உணர் வைத் தாண்டி ஒரு பிரபஞ்ச ஒத்துணர்வுத் தன்மைக்குச் சென்று தங்கள் படைப்பினை மேம்படுத்த முடியுமா என்பதில் மார்க்ஸுக்குப் பெரும் ஐயப்பாடு இருந்தது. வர்க்க உணர்வைத் தாண்டியும் பிரபஞ்ச ஒத்துணர்வோடு படைத்த பால்ஸாக் மாதிரியான எழுத் தாளர்களை அவர் பாராட்டத் தயங்கவில்லை. மாறாகத், தங்கள் வர்க்க மூலங்களைத் தாண்டி வெளியே வராமல், சமத்துவம் சகோதரத்துவம் என்று பெயர் பண்ணிப் படைத்த எழுத்தாளர்களை -உதாரணம் யூஜின் சூ போன்றவர்கள் – எள்ளி நகையாடத் தயங்க வில்லை.

பின்னாளில் வர்க்க இணைவுகள் பற்றிய பார்வைகள் எழுத்தாள ருக்கு எழுத்தாளர் வேறுபடத்தொடங்கின. பக்தின் முன்வைத்த தீவிர மனிதமையவாதம் (Humanism), புரட்சியை வலியுறுத்தியது. அதேசமயம், அவருக்கு முப்பதாண்டுகள் கழித்து லூசியன் கோல்ட்மன் முன்வைத்த ‘மரபுவழி அமைப்பியம்’ என்னும் கொள்கை ஒரு வர்க்கத்தினரின் உலகப்பார்வை என்பதை அடிப் படையான இலக்கிய அளவுகோலாகக் கொள்கிறது. 1930களில் போல்ஷ்விக் விமரிசனங்களில் ஓர் எழுத்தாளரின் வர்க்க அடிப்ப டையே இலக்கியத்தின் வர்க்க அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட பார்வைகள் வர்க்கச் சமன்மைகள் என்னும் பார்வை யை வெறுமனே பெயரளவுக்குப் பயன்படுத்துகின்றன. ஆனால் இதே பார்வையை சார்த்தர், ஃப்ளாபேரின் வர்க்கக் கல்வி பற்றிய நூலில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

துண்டுதுண்டாக உள்ள இந்தக் குறிப்புகள், பலவேறு விதமான அழுத்தங்களும் நிலைப்பாடுகளும் மார்க்ஸிய அழகியல் கொள்கை யில் உருவாக வழிவகுத்துள்ள்ன. பொதுவாக நோக்கினால் மார்க்ஸின் எழுத்துகளை வைத்து ஓர் மனிதமைய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கலை என்பது படைப்புச் சக்தி யுள்ள ஓர் உழைப்பு (creative labour). பிற அந்நியப்படாத உழைப்புக ளிலிருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. கட்டடக் கலை ஞனையும் தேனியையும் தொடர்புபடுத்தி மார்க்ஸ் தமது மூல தனம் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் பேசுகிறார். இங்கு கட்டடக் கலைஞனை அவர் உதாரணம் தந்தது, அவனுக்குப் பிரதானம் தரவேண்டும் என்ப தற்காக அல்ல. மனித உழைப்பாளி ஒருவன் என்ற அளவிலேயே அங்கு அந்த உதாரணம் அளிக்கப் படுகிறது. அந்நியமாகாத எந்த உழைப்பும் படைப்பாற்றல் கொண் டதே ஆகும் என்பது மார்க்ஸின் கருத்து. மார்க்ஸின் இந்த அற்புதமான கருத்து, கலையினை அதன் மாயத் தன்மையினின்றும் விலக்கி, வரலாற்றுப் பூர்வமாக அதை நம்மை நோக்கவைத்து, பிற செயல்களிலிருந்து கலைச்செயல் உயர்ந்ததோ மாறுபட்டதோ அல்ல, அனவைர்க்கும் அது இயல்பாகக் கைவருவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

முதலாளித்துவ அமைப்பில் பிற உழைப்புகளைப் போலவே கலை யும் மேலும் மேலும் அந்நியமாக்கப்படுகிறது என்பதை இப் பார் வையின் ஓர் உபதேற்றமாக நாம் கொள்ளலாம். கலை என்பது ஓர்விலைப் பண்டமாக மாறிவிடுகிறது. கலைஞனும் ஓர் சுரண்டப் படும் தொழிலாளியாகி, படைப்பின்மீது தனக்குள்ள உரிமையை இழந்துவிடுகிறான். பிற தொழிலாளரைப் போலவே உபரிமதிப்புக் கெனப் படைக்குமாறு தூண்டப்படுகிறான். ”முதலாளித்துவ முறை, சிலவித ஆன்மிகப் படைப்பு முறைகளுக்கு எதிரானது – உதாரண மாகக் கவிதையும் கலையும்” என்று மார்க்ஸ் சொல்வதை நாம் இங்கு மனத்திற் கொள்ளலாம். முதலாளித்துவத்தின் கீழ் கலை எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதை அவர் விளக்குகிறார்:

(முதலாளித்துவ நோக்கில்) “ஐந்து பவுண்டு காசுக்காக சுவர்க்கநீக் கம் படைத்த மில்டன் ஓர் உற்பத்தித் திறனற்ற தொழிலாளி. ஆனால் அதேசமயம் தொழிற் சாலையில் உற்பத்தி செய்வது போலத் தன் முதலாளிக்காகப் படைப்புகளை உற்பத்தி செய்து தள்ளும் ஓர் எழுத்தாளன் உற்பத்தித் திறன்மிக்கவன்-ஏனென்றால் அவன் படைப்பு ஆரம்பத்திலிருந்தே மூலதனத்தினால் உருவாக் கப்பட்டு அந்த மூலதனத்தினை மேலும் பெருக்க உதவுகிறது. தனது மனநிறைவுக்காகப் பாட்டுகளைப் பாடும் ஒருபாடகி உற்பத் தித்திறன் அற்றவள். ஆனால் அவளே ஒரு முதலாளியால் வேலைக்கு ஏற்கப்பட்டு முதலாளி சம்பாதிப்பதற்காகப் பாடினால், அவள் உற்பத்தித் திறன் கொண்டவளாகிவிடுகிறாள். ஏனென்றால் அவள் மூலதனத்தை உருவாக்குகிறாள்.”

இவை மார்க்ஸின் வார்த்தைகள். மார்க்ஸுக்குப் பின்னர் கலாச் சாரத் தொழிற்சாலை என (உதாரணத்திற்கு அடார்ணோ, ஹார்க் ஹைமர் போன்றோர் சொல்வது போல) கலைத் தொழிலைச் ‘சிதைத்து’ முதலாளித்துவத்தின் கீழ் விலைப்பொருளாக மாற்று வதைப் பகுப்பாய்வு செய்து கூறுவதே மார்க்ஸியக் கலைக் கொள்கை ஆயிற்று.

தேவை-உற்பத்தி என்னும் பொருளாதார விதிக்கேற்பக் கலைப் பண்டங்கள் வியாபாரப் பொருட்களாக மாற்றப்பட்டு விடுவதோடு மட்டுமல்லாமல், அவை முதலாளிக்கெனவும் அரசாங்கத்திற்கென வும் பிரசாரம் செய்வதற்கே ஆளாக்கப்பட்டுவிடுவதால் ஒத்துச் செல்லும் குணம் கொண்டவையாகவும், கூறியதையே திரும்பக் கூறுவனவாகவும் மாறி, அரசாங்கத்திற்குத் தேவையான ‘அமைதி’ யை மக்கள்பால் உருவாக்குவதற்கே அவை பயன்படுவன ஆகி விடுகின்றன.

விலைப்பொருள் பற்றிய மார்க்ஸின் கொள்கையிலிருந்து ‘வரலா றும் வர்க்கஉணர்வும்’ என்ற தமது கட்டுரையில் ஜார்ஜ் லூகாச் தமது கலைக்கோட்பாட்டினை உருவாக்கினார். முதலாளித்து வத்தின்கீழ் பொருளுறவாக்கப்பட்டு துண்டுதுண்டாகச் சிதிலமாகிப் போகின்றன மனித வாழ்க்கையும் அதன் அனுபவங்களும் என்ப தை அவர் காட்டுகிறார். சமூக, பொருளாதார உறவுகளைப் புரிந்து கொள்ளப் பொருளுறவாக்கப்பட்ட மனத்தினால் முடியாது என்ப தையும் அவர் விளக்குகிறார்.

தமது வாழ்நாள் முழுவதும் ஓர் இலக்கியக் கொள்கையை உரு வாக்கப் பாடுபட்ட லூகாச்சின் எழுத்துகளில் முழுமை என்பது ஓர் மையஇடத்தைப் பெறுகிறது. மேலோட்டமான தோற்றங்களுக்கு அப்பால் சென்று சமூக முழுமையை அதன் அடிப்படையான முரண்பாடுகளோடும் கண்டறிந்து வெளிப்படுத்துவதே பேரிலக்கி யம் என்பது லூகாச்சின்கொள்கை. இங்கு முழுமை, பேரிலக்கியம் என்று சொல்லப்படும் கருத்துகளுக்குச் சற்று நாம் பின்னால் வருவோம்.

இக்கொள்கையோடு தொடர்புடையது யதார்த்தவாதக் கொள்கை. வகைமாதிரியான கதைமாந்தர்களைக் கொண்டு முழுமையைப் படைத்துக்காட்டுவது நல்லதொரு யதார்த்த இலக்கியத்தின் பணி என்பார் லூகாச். மார்க்ஸியத்தை நிறுவிய மற்ற அறிஞர்களின் ஆதரவை இந்த யதார்த்தக் கொள்கை பெற்றது. மேலும் இதற்கு ஆதாரமாக 1880களில் ஏஞ்சல்ஸால் எழுதப்பட்ட இரு கடிதங்கள் அமைந்தன என்பதால் இக்கொள்கைக்கு ஆதரவு உறுதி பெற்றது. இக்கடிதங்களில் வெளிப்படையாக அரசியல் பிரசாரம் செய்கின்ற இலக்கியத்தை மறுத்து ஏஞ்சல்ஸ் எழுதியிருக்கிறார். அவ்வகை இலக்கியங்களை tendency literature என்று கூறி அவர் புறக்கணிக் கிறார். இதற்கு மாற்றாக அவர் வைப்பதுதான் சரியான யதார்த்த இலக்கியம் என்பது. இதிலும் அரசியல் அணுகுமுறை விவாதிக் கப்பட்டாலும் அது வெளிப்படையான பிரசாரமாக அமைவ தில்லை.

”எவ்வளவுக்கெவ்வளவு ஆசிரியனின் கருத்துகள் உள்ளாழத்தில் மறைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு ஓர் கலைப்படைப்புக்கு அது நல்லது. ஆசிரியன் கருத்துகள் வெளிப்படையாக இல்லாவிட்டா லும் அவன் குறிக்கும் கருத்துகள் பகுப்பாய்வில் வெளிப்படவே செய்யும்.”
(ஏஞ்சல்ஸ், மார்கரெட் ஹார்னசிற்கு எழுதிய கடிதம், 1888).
அவர் உதாரணம் காட்டும் எழுத்தாளர் பால்ஸாக்.

”இன்னும் சிலகாலங்களில் அழிந்தொழியுமாறு சபிக்கப்பட்டு விட்ட பிரபுத்துவ வர்க்கத்திற்கு அனுதாபம் காட்டும் ஒரு லெஜிடிமிஸ் டாக பால்ஸாக் இருந்தபோதிலும் அவர் நம்மை மிகு வியப்புக்குள் ளாக்கக்கூடிய ஃபிரெஞ்சு சமூக வரலாற்றைப் படைத்துக் காட்டு கிறார்” என்று அவரைப் பாராட்டுகிறார் ஏஞ்சல்ஸ்.

”வகைமாதிரியான கதைமாந்தர்களால் சமூக அமைப்பினை அதன் வர்க்கமுரண்பாடுகளோடு சேர்த்துத் துல்லியமாகப் படைத்துக் காட்டுவது யதார்த்தவாதம்”
என்னும் கொள்கை இதனால் மார்க்ஸியத்தின் மையஅழகியல் கொள்கையாகிவிட்டது. இன்னும் விரிவாக நோக்கினால், கலைக ளுக்கும் அவை உற்பத்தியாகின்ற சமூக அமைப்புகளுக்குமான உறவைப் பற்றிப் பேசும் கொள்கைகள் யாவிற்கும் அடிப்படையாக அமைவது மார்க்ஸ் 1859இல் Critique of Political Economy என்னும் பிரதிக்கு எழுதியமுன்னுரை. அதில்தான் அடிக்கட்டுமானம் மேற் கட்டுமானம் பற்றிய கருத்து இடம்பெறுகிறது. மேற்கட்டுமானத் தின் பகுதியாகவே அழகியல் அதில் சொல்லப்படுகிறது. வர்க்க முரண்பாடுகள் மோதிக்கொண்டு வெளிவரும் கருத்துருவ வடிவ மாகவும் அது குறிப்பிடப்படுகிறது.
பிளெஹனாவின் எழுத்துகளிலும் ‘கலை தனது காலத்தின் கருத் துருவ வெளிப்பாடு’ என்னும் கருத்து நன்கு வெளிப்படுகிறது. “சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பே கலையும் இலக்கியமும்” என்பது அவர் கூற்று. இம்மாதிரிப் பார்வை, கலையைச் சமூக உறவுகள், வர்க்க அமைப்புகள் இவற்றின் பிரதிபலிப்பாகக் குறுக்கி விடுகின்றது. ஆகவே கலை என்பது சமூகத்தின் பொருளியல் தன்மைகளால் உருவாக்கப்படுவதாகவும் குறுக்கப்படுகிறது. ‘கருத் துருவத்தின் வெளிப்பாடே கலை’ என்பதை இன்னும் சிக்கலான முறையில் விளக்கி அண்மைக்காலத்தில் லூசியன் கோல்ட்மன் போன்றவர் கள் எழுதியுள்ளனர்.

இக்கொள்கையிலிருந்து சற்றே மாறுபட்டதொரு பார்வை, புரட்சிக் குக் கலை நிலைக்கள ஆற்றலாகும் தன்மையினையும் கலைஞ னுக்கு இருக்கவேண்டிய ஈடுபாட்டினையும் வலியுறுத்தி எடுத் துக்காட்டுகிறது. முன்பே ஏஞ்சல்ஸ் மிகச் சரியாகவே நேரடிப் பிரச்சாரத்திற்கும் யதார்த்த வகையிலான, மறைமுகமான படைப் புகளுக்குமான வேறுபாட்டினை எடுத்துக்காட்டியிருந்தபோதும், கட்சி மார்க்ஸியர்கள் எவ்வாறோ தீவிர நேரடிப் பிரசாரத்திற்கான ஒரு கொள்கையை மார்க்ஸ்-ஏஞ்சல்சிடமிருந்தே உருவாக்கியி ருக்கிறார்கள் என்பது விநோதம். ‘கட்சியின் சேவைக்காகவே கலை செயல்படவேண்டும்’ என்று லெனின் போன்ற மேதையும் ஒரு சமயம் கூறியிருக்கிறார். ஆயினும் அவரது டால்ஸ்டாயின் கலை பற்றிய விவாதங்களை வைத்து நோக்கும்போது இது அவரது மெய்யான கருத்தென்று தோன்றவில்லை.
மனிதர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள், அரசியல்மாற்றத்தில் மனிதப்பிரக்ஞை முக்கியப் பங்காற்றுகிறது என்னும் மார்க்ஸியக் கொள்கை அடிப்படையில் மயகாவ்ஸ்கி, பிரெஹ்ட், பெஞ்சமின் முதல் கோடார்ட், பாசோலினி முதலான இருபதாம் நூற்றாண்டுத் திரைப்பட இயக்குநர்கள் வரை பலர் புரட்சிகர அழகியல் செயல்முறைக்கான வழிவகை ஒன்றைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சோவியத், சீன அடிப்படையில் அமைந்த சோஷலிஸ யதார்த்த வாதமானாலும், மேற்கத்திய யதார்த்த வாதமானாலும், அல்லது வேறுவித யதார்த்த வாதங்களானாலும், யதார்த்தவாதம் என்பது மார்க்ஸிய அழகியலின் மையக்கொள்கையாகவே ஆகிவிட்டிருக் கிறது. லூகாச்சுக்கும் பிரெஹ்டுக்கும் நடந்த விவாதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்த இலக்கியம் இருபதாம் நூற் றாண்டுக்குப் பொருந்தாது என்றார் பிரெஹ்ட். மனித உணர்வை தீவிரப்படுத்தும் சக்தியை அது இழந்துவிட்டதே காரணம். ஆக இங்கு, கலை துல்லியமான விமரிசனயதார்த்த நிலைப்பாட்டில் சமூகத்தைப் படம்பிடிப்பதுமுக்கியமா, அல்லது கலையின் புரட் சிக்கான ஆற்றலை வைத்து அதன் மதிப்பைத் தீர்மானிப்பதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்வி, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், வடிவவியல் நோக்கில் எழுதப்பட்ட கலை – அதாவது முன்னணிக் கலைக்கும் பழைய வடிவத்திலான கலைக்குமான முரண்பாட்டை விவாதிக்கும் விவாதமாக மாறிப்போயிற்று. இத னால் யதார்த்தவாதக் கொள்கைமீது பெருந்தாக்குதல்கள் முன் வைக்கப்பட்டன. நவீனத்துவ நோக்குக் கொண்டவர்கள், யதார்த்த வாதக்கலை, செயலூக்கமற்ற, சமூகத்தில் போதிய விமரிசனமற்ற ஒரு பங்கேற்பை முன்வைக்கிறது என்றார்கள்.

யதார்த்தக் கலை முன்வைக்கும் அழகியல், ஒருசீர்த் தன்மை யுடைய, முழுமை என்பதை வலியுறுத்துகின்ற, ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற எடுத்துரைப்புத்தன்மை வாய்ந்தது. ஆகவே பிரதிபலித்தலில் நிஜமான முரண்பாடுகளையும், எதிர்வுகளையும் அது சரிவரக் கொண்டுவர இயலுவதில்லை. உலகத்தைத் தனது எடுத்துரைப்பில் மீள்கட்டமைப்புச் செய்யும்போது செயற்கையான தோர் ஒருமைப்பாட்டினை உருவாக்கி அது வாசகர்களை மயங்க வைக்கிறது. ஆனால் நவீனத்துவப் பிரதி, பிரதிகளைச் சிதைத்தல், பிற குறுக்கீடுகள் போன்றவை வாயிலாக முரண்பாடுகளைக் கைப்பற்றிக் காட்டவும், உள்மறைந்திருப்பனவற்றையும் அமை தியில் ஓய்ந்துகிடப்பனவற்றையும் பேசவைக்கவும் முயற்சி செய்கிறது. நாவல் போன்ற யதார்த்த உரைநடைப் படைப்புகளையே பாராட்டிய பெரும்பான்மை நோக்கிற்கிடையே கவிதையின் பிறப்பு பற்றியும் இயல்புகள் பற்றியும் எழுதிய கிறிஸ்டஃபர் காட்வெல் லின் ‘மாயையும் மெய்ம்மையும்’ (Illusion and Reality) முக்கியமான நூலாகிறது.

நவீனத்துவப்போக்கு, குறிப்பாக பியர் மாஷரி, ரோலான் பார்த், ஜூலியா கிறிஸ்தவா போன்ற குறியியலாளர்கள் கருத்துகள் வாயிலாக முழுமைபெற்றது. கலையைக் கருத்தியலாகப் பார்க்கும் நோக்கு மேற்கத்திய மார்க்ஸிய அணுகுமுறையில் மட்டுமல்ல, முந்தைய கிழக்குஜெர்மனி, பிளவுபடாத சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் பார்வையிலும் புதுமைகளை ஏற்படுத்தியது.
முக்கியமானஅர்த்தத்தில் இன்றும் கலை என்பது கருத்துருவக் கருவியாகப் பார்க்கப்பட்டாலும், இன்று அது சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக மட்டும் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதில்லை. மாறாக, கருத்துருவத் தொடர்புறுத்தக்கருவி/வடிவம் ((art as mediated instrument or form) என்பதாக நோக்கப்படுகிறது. குறிப்பாக, கலை இலக்கிய வடிவங்களும், அவற்றில் கருத்துருவத்தைக் குறியமைக்கும் செயல்பாடுகளும் அவற்றிற்குரிய மரியாதையோடு
கவனிக்கப்படுகின்றன. இந்நோக்கை உருவாக்குவதில் அமைப்பியம், குறியியல் ஆகியவற்றின் செல்வாக்கு இணையற்றது. அதேபோல ரஷ்ய வடிவவியல்வாதிகள் மீதான கவனக்குவிப்பும் பல நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. மேலும் கலை இலக்கியத் தின் உற்பத்தி, இயல்புகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதில் அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள், முறைகள் போன்றவற்றின் பங்கும் இன்று நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வெளியீட்டாளர்கள், இலக்கிய மன்றங்கள், அரங்குகள், விமரிசகர்கள் போன்ற நேரடி ஊடகர்களின் செய்கைகள் இப்போது ஓரளவேனும் ஆராயப்படுகின்றன. இவற்றை முன்பு எவரும் கருத்தில் கொண் டதே இல்லை. மேலும் கலையுருவாக்கத்தில் இன்று வாசகர்ககள் பார்வையாளர்களின் பங்கேற்பும் ஆக்கமும் குறித்தும் ஆராயப் படுகின்றது.

இந்த நோக்குகளுக்கு ஆதாரமும் மார்க்ஸ் ‘க்ருண்டிஸ்’ நூலுக் கான முன்னுரை அறிமுகத்தில் கூறிய ‘நுகர்வுதான் உற்பத்தி யைத் தூண்டுகிறது’ என்ற கருத்தேயாகும். மார்க்ஸிய மரபுக்குள் வராத பொருள்கோள், குறியியல், ஏற்பழகியல் போன்ற துறைகள் கலாச்சாரப் படைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றைப் பொருள் கொள்வதிலும் ஆழ்ந்த நுண்ணோக்குகளையும், அவற்றை ஆராய் வதற்கான கருவிகளையும் அளித்துள்ளன. ஒரு படைப்பின் அர்த்தம் என்பது அதற்குள் உறைவதல்ல, அது வாசகர்களைச் சார்ந்த ஒன்று என்ற முக்கியமான அறிவும் இவற்றால் ஏற்பட் டுள்ளது. இன்னும் அரசியலுக்கும் அழகியலுக்குமான பொருத்தப் பாடு பற்றிய விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அவையனைத்திற் கும் மேற்கூறிய யதார்த்தவாதம் சம்பந்தமான விவாதங்களுடன் தொடர்பு உண்டு.

இம்மாதிரி விவாதங்கள் ரேமண்ட் வில்லியம்ஸ் (தன்னைக் கலாச்சாரப் பொருள்முதல்வாதி என்று கூறிக்கொண்டவர்), டெரி ஈகிள்டன் போன்றோர் நூல்களில் நன்கு ஆராயப்பட் டுள்ளன.
கலை இலக்கியங்களின் உள்ளடக்கமோ, அவற்றின் வடிவமாற்றங் களோ மட்டும் கலையைப் புரட்சிகரமானதாக மாற்றிவிட முடி யாது. பெஞ்சமின் சொன்னதுபோல, கலைப்படைப்பு உற்பத்தியை அரசியல்செயல்பாடாகவும் செயல்படுமுறையாகவும் மாற்றினால் தான் கலையைப் புரட்சிகரத்தன்மை வாய்ந்ததாக மாற்றஇயலும். மேற்கண்ட யதார்த்தவாதத்தின் ஏற்புடைமை, அமைப்பியம், நவீ னத்துவம், பின்நவீனத்துவம் ஆகியவற்றை ஏற்பதன் தேவை போன்றவற்றைக் குறிப்பிடும் ஞானி, வால்டர் பெஞ்சமினுடைய நிலைப்பாட்டைக் குறிப்பிடவோ ஏற்கவோ இல்லை.

இந்தவிதத் தில் ஞானி கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் போல மரபுரீதியான தொரு நிலைப்பாட்டில்தான் நிற்கிறார். வால்டர் பெஞ்சமின் போன்ற மேற்கத்திய மார்க்ஸியர்களின் கோட்பாடுகளுக்கு மாறாக, அவர் மாசேதுங்கின் கொள்கைகளுக்குச் சென்று கீழை மார்க்ஸி யம் என்ற ஒன்றினை வலியுறுத்தத் தொடங்குகிறார். (இதனை உருவாக்கியதில் அறிஞர் எஸ்.என். நாகராஜனுக்கு முக்கியப்பங்கு உண்டு). நமது நாட்டின் ஆன்மிக மரபுகள் போன்றவற்றையும் ஏற்றுக்கொண்டு, நமது மண்ணுக்கேற்ற தனித்ததொரு மார்க்ஸி யத்தினை உருவாக்கவேண்டும் என்கிறார். அந்தந்த மண்ணுக் கேற்ற வகையில் மார்க்ஸியம் உருவாக வேண்டும் என்பதை நாம் ஏற்கமுடியும். ஆனால் மார்க்ஸியத்திற்குள்ளாகவே பல சிக்கல்கள் உள்ளன.

மார்க்ஸியம், மனிதத்துவத்தின் வளர்நிலையில் மனிதனின் அறி வாற்றலை மதித்துப்போற்றும் மனிதமையத் தத்துவமாக எழுந்த ஒன்று. மனிதமையவாதத்தின் உடன்பாடான நல்ல அம்சங்களை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டார் எனப் பொதுவாகச் சொல்லலாம். அதன் மோசமான அம்சங்களை முதலாளித்துவம் ஏற்றுள்ளது. இயற்கையோடு மனிதன் போராடி, அதைக் கட்டுப்படுத்தித்தான் வாழமுடியும் என்பது மார்க்ஸிய சித்தாந்தத்திலும் உள்ளது. முதலாளித்துவமோ, ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என எல்லாவற்றையும் இடைவிடாது சுரண்டுகிறது. சுரண்டலை மார்க்ஸியம் எதிர்த்தாலும் மனிதமையத் தத்துவத்தி லிருந்து விலகவில்லை.
நாம் ஆன்மிகம் என்று பேசும்போது மனிதமையத்தினைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறோம்.

மனிதமையம் என்பதுதான் மானிடச் சிந்தனையின் வீழ்ச்சி. மேற்கத்திய நாகரிகத்தின் சுரண் டல் பார்வை பைபிளிலிருந்து தொடங்குகிறது. ஆண்டவர் எல்லா வற்றையும் மனிதனின் நுகர்வுக்காகவே படைத்தார் என்று மனிதன் பிற ஜீவராசிகள், தாவரங்கள் அவை சார்ந்துள்ள இயற் கைப் பின்புலம் எல்லாவற்றையும் எல்லையற்றுச் சுரண்டத் தொடங்கி விட்டான். மனிதன்
எல்லாவற்றையும் அனுபவித்து,நுகர்ந்து வாழ்வதில் தவறில்லை. ஆனால் தன் சிந்தனையாற்றலால், பிற உயிர்கள், இயற்கை யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலால், தனது பேராசையால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கான மூலவளங்கள் யாவற்றையும் இரண்டே நூற்றாண்டுகளில்-வித்து அழித்து உண்ட உழவன்போல -அழித்துவிட்டான். இயற்கையை மனிதன். பத்தொன்பதாம் இருப தாம் நூற்றாண்டுகளில் அறிவியலின் பெயரால் எல்லையற்றுச் சுரண்டியதன் விளைவே இன்று தண்ணீருக்கும் உணவுக்கும் பெரும்பான்மை மக்கள் அலையும் நிலையும் இன்றைய இயற் கைச் சீற்றங்களும். அகழ்வாரைத் தாங்கும் எல்லையற்ற பொறுமை கொண்ட பூமிக்கும் சீற்றம்வ்ந்துவிடுகிறது, சுரண்டல் எல்லையற்றுப் போகும்போது.

எனவே மனிதமைய வாதத்தைத் தகர்த்து, மார்க்ஸியத்தில் மனிதமையமற்ற ஒரு நிலைப்பாட்டினைக் கொள்ள வேண்டும். அமைப்பியம், பின்னமைப்பியம் தொடங்கி வளர்ந்துவரும் கோட்பாடுகள் யாவுமே மனிதமையமற்ற நிலைப்பாடுகள்தாம். ஆனால் மேற்சொன்னவாறு மனிதமையத்தைத் தகர்த்து, இயற்கையை மையத்தில் வைக்கும் கோட்பாடுகள் அல்ல அவை. மாறாக, மனிதமையத்தைத் தகர்த்து, மனிதனின் ஆக்கங்களில் ஒன்றான மொழியை மையத்தில் வைக்கின்றன.

இன்றைய சுற்றுச்சூழல்விமரிசனம், தலித்திய, பெண் ணிய விமரிசனங்கள் ஆகியவை இயற்கைமையக் கோட்பாடு களாக அமைகின்றன, அமையவேண்டும். இதனை மார்க்சியம் ஏற்க வேண்டும். ஒருவகையில் காந்தியடிகள் முன்பே சொன்னது போல, கனரகப் பெருந்தொழில்களால் மனிதகுலத்துக்கு நன்மை யில்லை. (காந்தியடிகள் கனரகப்பெருந்தொழில்களுக்குக் கூறிய தை இன்றைய கணினித்தொழில்களுக்கும் பொருத்திப் பார்க்க லாம்). அதற்காகக் குடிசைத் தொழில்களை நம்பியும் இனி வாழ்வ தற்கில்லை. பிற உயிர்கள் யாவற்றையும் அழித்துவிட்டு மனித இனம் மட்டுமே எல்லையற்றுப் பெருகிப்போய் 800 கோடிக்கும் மேல் பூமியில் வாழும்நிலையில், குடிசைத்தொழில்களாலும் அவை சார்ந்த நிலவுடைமைச் சமூகத்தாலும் பயனில்லை. வரலாறு என்றும் பின்னோக்கிச் செல்வதில்லை. அப்படியானால், எப்படிப் பட்ட தொழில்கள் வேண்டும், எப்படிப்பட்ட வளர்ச்சி வேண்டும் என்பது இன்றைய அடிப்படையான கேள்வி. இத்தகைய கேள்விகளுக்குச் சரியான விடை காணாமல் (விடை காணாவிட் டாலும் சரியான நோக்காவது தேவை) வெறுமனே இலக்கியம் பற்றிப் பேசிவிட இன்று முடியாது. மாவோவின் தத்துவத்திலும் மனிதமையவாதம் அடிப்படையாக இருக்கிறது என்பதே கீழை மார்க்ஸியத்தை நாம் முழுதும் ஏற்றுக்கொள்ளவும் தடையாக உள்ளது.

எனவே இன்றைய மார்க்ஸியம், மனிதமைய வாதத்தினை விட்டு விட்டு, பிரபஞ்சவாதத்தை ஏற்று, பிற உயிர்களின் இணக்கத்தோடு மனிதன் வாழும்வகையைப் பேசவேண்டும். இதற்கு வள்ளலார் போன்றவர்களின் கொள்கைகள் ஓரளவு துணைபுரியக்கூடும். ஞானி கூறுவதுபோல நமது சித்தர் தத்துவங்கள் இதற்குப் பயன் படக்கூடும். கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் வாய்பாடுபோல மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சிசெய்தல் என்பதை மட்டுமே பேசிக்கொண்டி ருக்கிறார்கள்.

முதலாளித்துவம் எல்லைமீறிய வளர்ச்சி பெற்றுப் பன்னாட்டு முதலாளித்துவமாக, எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள் ளும் ஒற்றையாதிக்க முதலாளித்துவமாக வளரும் என்று மார்க்ஸ் எதிர்நோக்கவில்லை. எனவே அவரது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயிருக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும்கூட ஒற்றை யாதிக்கப் பன்னாட்டு முதலாளித்துவத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரஷ்யா வீழ்ந்து விட்டது, “எங்கள் ஒற்றை உலகம் மட்டுமே நிலைத்திருக்கிறது” என்று அமெரிக்கா கொக்கரித்ததுபோல இன்று “மார்க்ஸியம் அழிந்துவிட்டது, எங்கள் ஏகபோக முதலாளித்துவம் மட்டுமே உல கத் தத்துவம்” என்றுசொல்லி முதலாளித்துவம் கொக்கரிக்கிறது. இந்த நிலையை எதிர்கொள்ளப் புரட்சி என்பது சாத்தியமா, மக்களை ஒன்று திரட்டுதல், ஒற்றை நோக்கின்கீழ்த் திரட்டுதல், நிறுவனமாக்கல் என்பவற்றிற்குள்ளாகவே மேற்கத்திய மார்க்ஸி யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த சக்திகள் செயல்பட வில்லையா, ஆதிக்கம் ஏற்படவில்லையா என்பன பின்நவீனத்து வம் கேட்கும் அடிப்படைக்கேள்விகள். எனவே மார்க்ஸ் ஒன்றரை நூற்றாண்டிற்குமுன் உறுதிபடக்கூவியது போல ‘உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்று நாம் கூவ முடியவில்லை. சந்தேகம் எழுகிறது. ஒற்றைத்தத்துவத்தின்கீழ் இலட்சக்கணக்கான மக்கள் திரளும்போதே ஆதிக்கம் என்பதும் உருவாகிவிடுகிறது.

ஒரு ரசமான விவாதம் நடைபெற்றதை எடுத்துக்காட்டலாம். இது எவ்விதம் இன்று மார்க் ஸியக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பது பற்றியதுதான். தொலைக்காட்சிக்கு ஒரு பெரும் பார்வையாளர் பின்புலம் இருக்கிறது, மேலும் பல பிரெஹ்டிய உத்திகளையும் புதுமையாக்கங்களையும் அதில் எளிதாகக் கையாள இயலும், அதனால் முற்போக்குக் கருத்துகளைத் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்ற கருத்து ஒரு சாராரிடம் உள்ளது. மற்றொரு சாரார், தொலைக்காட்சி ஊடகத் தையும் அதன் பெரும் ஜனரஞ்சகசக்தியையும் மார்க்ஸியக் கருத் துப் பரப்பலுக்கும் புரட்சிக்கும் சாதகமாகக் கட்டமைக்கவே இய லாது, ஏனெனில் அங்கு தொழில் சார்ந்த, அமைப்புசார்ந்த சுதந்தி ரம் அறவே கிடையாது. அம்மாதிரி ஊடகங்களை ஆட்சிசெய்யும் பெருமுதலாளிகள் இதற்கு ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே சிற்றளவாக இருந்தாலும் திருப்பக்கூடிய ஒரு பார்வையாளர் குழுவுக்காகவே வீதிநாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாகச் சுதந்திரமான கருத்துகளை முன்வைக்கலாம் என்று கருதுகின் றனர்.

இது ஒருபுறமிருக்க, இன்று மார்க்ஸியத் தத்துவத்திற்குள்ளாக வே சில குறுக்கீடுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப்பெண்ணியத்தின் பங்களிப்பு. மார்க்ஸியத்திற்குள்ளும் செயல்படும் ஆணாதிக்கப் போக்குகளைப் பெண்ணிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றை மேற்கத்திய மார்க்ஸியம் இன்று ஏற்றுள்ளது. இதே போல இன்று அவ்வளவாகச் சக்தியுடன் இல்லாவிட்டாலும், கருப்பினக் கொள்கை என்பது சிலகாலம் வலிமையோடு செயல் பட்டுள்ளது. நமதுநாட்டில் கருப்பினக்கொள்கையின் நிழல்போல உருவானது தலித்தியக் கொள்கை எனலாம். முன்பெல்லாம் நம்நாட்டுக் கட்சிசார்ந்த மார்க்ஸியர்கள் வர்க்கபேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயம் அமையும்போது தானாகவே சாதியும் அழிந்து போய்விடும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். சமூக மாற்றத்துக்கான ஒரு கூறாக அதையும் பார்க்கவேண்டும் என்ற ஞானம் இப்போது சிலகாலமாகத்தான் உருவாகியிருக்கிறது. இதில் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் பங்களிப்பு சிறப் பானது. இன்று தலித்தியம், பெண்ணியம் ஆகிய கொள்கைக ளோடு மார்க்ஸியம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தான் கருதும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் போராடமுடியும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. ஞானியும் இத்தகையதொரு நோக்கினைத்தான் தமது விமரிசனங்களில் வலியுறுத்தி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது.

மார்க்ஸிய அழகியல், காலங்காலமாக நமது நாட்டில் வலியு றுத்தப்பட்டுவரும் அழகியல் மதிப்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப் படையையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது. இது நாம் க்டைசி யாகச் சிந்திக்கவேண்டிய முக்கியமான விஷயம். கலைகள் மட்டு மல்ல, கலைகள் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் விமரிசகர் களும், சார்பியல் நோக்கிலேயே காணப்பட வேண்டும். இந்த ஞானம் இங்கு (தமிழ்நாட்டில்) ஓரளவு உருவாக (எதிர்மறைக்) காரணமாக இருந்தவர், அந்தக் காலத்திலேயே மார்க்ஸுக்குக் கல் லறை கட்டிய வெங்கட் சாமிநாதன். ஏனென்றால் அவர் ‘பாலை யும் வாழையும்’ ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ என்றெல்லாம் தமிழினத்தின் அழகியல் வறட்சி என்னும்நோக்கினை முன்வைக்கப் போய்த்தான் பலரும் அதற்கு எதிர்வினை புரியவும், அதற்கு எதிரான பார்வைக் கோணத்தில் சிந்திக்கவும் தொடங்கினர். ஞானியும் அதனைச் செய்துள்ளார். மேற்குநாடுகளில் அமைப்பியத்தாலும் மறுவாசிப்புக ளாலும் இத்தகைய நோக்குகள் உருவாயின. இங்கு தலித்தியம் இத்தகைய மறுவாசிப்புகள் பலவற்றை முன்வைத்துள்ளது. இவற்றின் வாயிலாக மரபுசார்ந்த கலைபற்றிய, அழகியல்பற்றிய பார் வைகள் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. அண்மைக்காலம்வரை அழகியல் பற்றிய மீள்நோக்கு உருவாகவே யில்லை. லூகாச் போன்றவர்களும் ஒரு மரபான உயர்கலைப் பார்வையையே கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எஃப்.ஆர்.லீவிஸ் கூறிய உயர்மரபுக் கலை போன்ற பார்வையாகவே அது இருந்தது. இப்போது இம்மாதிரிப் பார்வைகள் மாறிவருவது வரவேற்கப்படவேண்டியது. இதில் ஞானியின் பங்களிப்பு கணிசமானது.

இங்கு ஞானிக்கு முன்னும் அவரது சமகாலத்திலும் தமிழு லகில் மார்க்ஸிய விமரிசன முன்னோடிகளாக அமைந்தவர்க ளைப்பற்றியும் கொஞ்சம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு பரந்த பார்வையுடன், பாரதி, கம்பன் முதலாக எல்லா இலக்கியங்களையும் இரசனைநோக்கில் பாராட்டியவர் ஜீவா. ஒரு விமரிசகர் என்று மதிப்பிட இயலவில்லை என்றாலும், ஜீவா மார்க்ஸிய விமரிசனத்துக்கு ஒரு நல்ல தொடக்கம் என்ப தில் ஐயமில்லை.

ஜீவாவைத் தொடர்ந்து முக்கிய இடம் வகித்தவர் நா. வான மாமலை. ‘ஆராய்ச்சி‘ என்ற இதழை நடத்தி மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை அணுகக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிய வர். அவரது ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’ போன்ற நூல்களைப் படிப்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமே ஏற்படும். இன் றும் அவர் பெயரைச் சொல்ல தி.சு. நடராஜன், முத்துமோகன் போன்றவர்கள் இருக்கிறார்கள். எஸ்.தோதாத்ரி, வெ. கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கொஞ்சம் மிகையாகவே அவரது பாடங்க ளைக் கையாண்டு நிறைய வாங்கிக்கட்டிக் கொண்டவர்கள். ஜீவா, வானமாமலை போன்றோரைப் பின்தொடர்ந்து பலர் மார்க்ஸிய விமரிசகர்களாக ஆயினர். ச.செந்தில்நாதன், ஆர். கே. கண்ணன், முத்தையா போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. செந்தில் நாதனின் ஆரம்பகாலப் படைப்பான ‘தமிழ்ச் சிறுகதை விமரிசனத்’ தைப் படித்தபோது வெறும் வறட்டுவாதமாகவே காட்சியளித்தது. முக்கியச் சிறுகதைப் படைப்பாளிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம், மௌனி போன்றோரை அவரால் சரிவர அணுக முடியவேயில்லை. ஆர்.கே. கண்ணனின் பாரதி பற்றிய நூல் ஒரு சரியான பார்வையைத் தந்தது. இந்தப் பாரம்பரியம் – கட்சி சார்ந்த ஒன்று, இப்போது மக்கள் கலைஇலக்கியக் கழகத்தின் மருதை போன்றவர்கள் வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கிய இலங்கை விமரிசகர்களையும் குறிப்பிடவேண்டும். க.கைலாசபதி அவர்களுள் முக்கியமானவர். க. கைலாசபதியின் விமரிசனமும் சரியான பாதையில் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஒருகட்டுரையில் க.நா.சு.வையும் கைலாசபதி யையும் ஒப்பிட்டபொழுது ‘கைலாசபதி சரியானஆய்வுமுறையைக் கையாண்டு தவறான முடிவுகளுக்கு வந்தார், க.நா.சு.வோ எந்த ஒரு முறையும் இன்றி சரியான முடிவு களைக் கூறினார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அக்கருத்தில் இன்றுவரை மாற்றமில்லை. கா. சிவத்தம்பியின் சிறுகதைபற்றிய நூலைத் தவிரப் பிறஅனைத்தும் இலக்கியவரலாறு, நாடகக்கலை தொடர்பானவை. எந்த மதிப் பீடுகளையும் நேராக முன்வைப்பன அல்ல. இவர்கள் இருவரைத் தவிர ஏ.ஜே. கனகரட்ணா, நுஃமான் போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஏ.ஜே.கனகரட்ணா ‘எழுத்து’ பத்திரிகையிலேயே மௌனி வழிபாடு குறித்து எச்சரித்தவர். நுஃமான் வெங்கட் சாமி நாதனுக்கு எதிராக எழுதிய விமரிசனம் இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது.

தமிழவனும் முதலில் மார்க்ஸிய விமரிசகராகத்தான் தொடங் கினார். ஆனால் ‘படிகள்’ பத்திரிகையின் ஆரம்பகாலத்தில் அவர் ஒரு நவமார்க்ஸியராக மாறி, பிறகு அமைப்பியம் பற்றி எழுதலா னார். ஆனால் அமைப்பியத்தையோ பின்னமைப்பியத்தையோ அவர் ஜீவனோடு புரிந்துகொண்டாரா என்பது ஐயமே. அல்தூசர் தவிர ஏனைப் பின்னமைப்பியவாதிகளோடு அவருக்கு மானசீக மாகத் தொடர்பில்லை என்றே சொல்லலாம். அவற்றைச்சரிவர விமரிசனத்தில் அவரால் நடைமுறையில் கையாளவும் இயல வில்லை. எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற சிலரும் மார்க் ஸிய விமரிசகர்களாகத் தொடங்கி வெவ்வேறு பாதைகளில் இன்று பயணம் செய்கின்றனர்.

இப்படித் தமிழ் மார்க்ஸிய விமரிசனப் பாரம்பரியத்தை ஒரு நோட்டம் விடும்போது சரியான திறனாய்வாளர்களாகவும், மார்க் ஸிய விமரிசனம் என்ற களத்தில் முனைப்போடு தொடர்ந்து இயங்கியவர்களாகவும்- ஞானி ஒருவரைத் தவிர வேறெவரையும் காணமுடியவில்லை. எல்லாவகை இலக்கியங்களையும் ஏற்று ஆராயும் பரந்தமனப்பான்மையில் அவரை ஜீவாவின் வாரிசாகக் காணலாம் என்று தோன்றுகிறது.

ஞானியை எனக்கு முதலில் அறிமுகம் செய்துவைத்த நூல் அவரது சிறு வெளியீடான ‘கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை’ என்பது. அந்த நூலிலேயே இந்திய ஆன்மிகத் தத்துவங் களுடன் இணைந்து மார்க்ஸியம் இந்த மண்ணுக்கேற்றபடி மாறி வேர்பிடிக்கவேண்டும் என்ற அவா காணப்படுகிறது. ஞானக் கூத்தன், கலாப்ரியா போன்றவர்களை அவர் அந்நூலில் விமரி சனம் செய்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது. ஏறத்தாழ அதேசமயத்தில் ‘பிரக்ஞை’ பத்திரிகையில் அவர் எழுதிய சில கட்டுரைகள் எனக்குள் மிகுந்த பாதிப்பினை உண்டாக்கியவை. காரணம், அடிப்படையில் ஆங்கில இலக்கியம் படித்து புதுவிமரிச னத்தையும் ஓரளவு அமைப்பியத்தையும் அக்காலத்தில் கற்றி ருந்த எனக்கு மார்க்ஸிய விமரிசனப்பார்வை பற்றிய அடிப்படைப் புரிந்துகொள்ளலை உருவாக்கியவை ஞானியின் கட்டுரைகள்தான். இதற்குப் பிறகுதான் லூகாச், காட்வெல், வால்டர்பெஞ்சமின், பிரெஹ்ட் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

ஞானியின் குறைகளாக நாம் நோக்க வேண்டியவை சில உண்டு. அவர் சிறுகதை பற்றிய ஆய்வில் தீவிர அக்கறை காட்ட வில்லை. பொதுவாகக் கவிதைகள், நாவல்கள் பற்றியே அதிகம் எழுதியுள்ளார். புனைகதைகளில் நாவலுக்குள்ளஇடம் தனியானது. பழங்காலக் காவியங்கள்போல இன்று மனித வாழ்க்கையின் பன்முக வீச்சுகள் அத்தனையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வடிவம் நாவல்தான். அதனால் ஞானி நாவலில் மிகுதியான அக்கறை காட்டுகிறாரோ என்றுதோன்றுகிறது. ஆனால் தமிழில் நாவல் பற்றி மிகுதியாக எழுத ஒன்றுமில்லை என்பது என் கருத்து. எந்த அழகியல் அளவுகோல்களை வைத்துப் பார்த்தாலும், தமிழ்நாவல்கள் சர்வதேசஅழகியல் தரத்தினையோ இந்திய அளவி லான தரத்தையோ கூட எட்டவில்லை.

தமிழ்ச் சிறுகதைகள் விதிவிலக்காக, மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளன. அவற்றைப் போதிய அளவு ஞானி ஆராயாதது மிகப் பெரிய குறை எனத் தோன்றுகிறது. கவிதை இலக்கிய ஆய்வில் குறையில்லை. கவிதைகள் காலங்காலமாக எல்லாமொழிகளிலும் இருந்து வருபவை. உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்படுபவை. எனி னும் பக்தி இலக்கியத்தை இன்னும் நன்றாக ஆராயவேண்டும். தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதியை பக்தி இலக்கியம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பக்திப்பாக்களில் பல உயர்ந்த சிந்தனை கள் வெளிப்பட்டிருந்தாலும், அவற்றில் எதிர்மறைக் கருத்துகளும் உள்ளன. மேலும் அவை பாடல் தன்மை கொண்டவை. பாடல்கள் சிறப்பாக அமைந்தாலும் கவிதையாக மாட்டா. அவற்றிற்கு இசை என்ற ஊன்றுகோல் வேண்டும். மேலும் கூறியதுகூறல் பாடல்க ளில் மிகுதி. தேவாரத்தைப் படிப்பவர்கள் என்னதான் உருகி உருகிப் படித்தாலும் திரும்பத்திரும்ப சிவபெருமான் முப்புரத்தை அழித்ததும், கயிலையை எடுத்த இராவணனுக்கு அருள் செய்ததும் போன்ற ஒரேவிதமான வருணனைகளில் சிக்கி அவஸ்தைப்பட வைக்கின்றன. ஒரு பேரிலக்கியத்திற்கான செறிவும் பன்முகத்தன் மை யும் வாழ்க்கை பற்றிய நோக்குகளும் பக்தி இலக்கியத்தில் உண்டா என்பது தெரியவில்லை. உணர்ச்சிவெள்ளம்தான் பெருக் கெடுத்து ஓடுகிறது. இலக்கியத்திலே உணர்ச்சிதான் பிரதானம் என்ற கோட்பாடு உருவாக பக்தி இலக்கியங்கள்தான் வழிவகுத் துத் தந்தன. இம்மாதிரியான விஷயங்களை ஞானி எடுத்துக்காட்டி யிருக்கிறாரா என்பது சந்தேகமே. ஒருவகையில் ஞானியின் விமரிசனமும் வடிவநோக்கினைவிட உள்ளடக்கத்துக்கே முதன் மை தருவதாக அமைவதால் இத்தகைய சிக்கல்கள் எழுகின்றன.

மேலும் எல்லாவற்றையும் பாராட்டிவிடும் பரந்த மனப்பான்மை ஞானிக்கு உண்டு. வல்லிக்கண்ணனோடும், ஓரளவு தி.க. சிவ சங்கரனோடும் அதனால் ஞானியை ஒப்பிடத் தோன்றுகிறது. இங்கு வெளிச்சம் தொகுதிக்கு அவர் எழுதிய ஆர்வக்கோளாறான முன்னுரை போன்றவை நினைவுக்கு வருகின்றன. இன்றுவரை வானம்பாடி இயக்கம்பற்றி மிகையான மதிப்பீடுகளும் எதிர்மறை மதிப்பீடுகளும்தான் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சரியான பார் வையில் அதனை மதிப்பிட்ட நூல் இதுவரை தோன்றவில்லை. வானம்பாடி இயக்கம் பற்றிய மதிப்பீடுகளை ஆரம்பித்து வைத் தவரும் ஞானிதான். மார்க்ஸியத்தின்மீதுள்ள அளவில்லாப்பற்றும் தமிழமீதான ஆர்வமும் அவரைப் பலசமயங்களில் தவறான முடிவுகளுக்குத் தள்ளுகின்றன.

மேலும் ஞானியின் மொழிநடை பற்றியும் குறிப்பிட்டாகவேண் டும். தெளிவான, எளிய, ஆற்றொழுக்கான, எதிரிலிருப்பவரை நேராக விளித்துப் பேசும் நடை ஞானியினுடையது. ஆனால் கூறியது கூறலும் சொற்களை விரயமாக்குதலும் மிகுதி. செறிவு என்பது அடியோடு கிடையாது. இதனை அவரது குறையாகக் கூறவும் இயலவில்லை. பார்வையற்ற நிலையில் வாயினால் சொல்லிப் பிறர் எழுதவேண்டிய நிலை ஏற்படும்போது இது தவிர்க்கப்படமுடியாதது என்றாலும், எதிர்வரும் வாசகர்கள், எழுதி யவரைப் பார்க்கமாட்டார்கள், எழுத்தை மட்டுமே பார்ப்பார்கள் என்பதனால் இதனைக் கூற நேர்கிறது.

ஞானியின் அழகியல்பார்வை சிறப்பானது. பாசிஸத்தை எந்த ரூபத்திலும் எதிர்க்கின்ற, பன்முகநோக்குகளுக்கு இடம் தருகின்ற, மேற்கத்திய ஆதிக்கப்போக்குக்கு எதிரான, கீழைமார்க்ஸியத்தோடு இணைந்த நோக்கு அது. நவீன இலக்கிய, திறனாய்வு இயக்கங்க ளையும் புறக்கணிக்காமல் உள்வாங்கி ஏற்கின்ற தன்மை கொண் டது. எவ்வளவு தடைகள் வந்தபோதும் மானிடம் வெல்லும் என்ற நன்னோக்கும் கொண்டது. அதேசமயம் மனிதனின் இன்றைய வாழ்நிலை பற்றிய ஆழ்ந்த கவலைகளும் கொண்டது. பெண்ணி யம், தலித்தியம், சுற்றுச்சூழல் திறனாய்வு போன்ற இயக்கங்கள் முன்வைக்கும் எதிர்நிலைப்பாடுகளையும் உள்வாங்கி, ஏற்று, மேலும் போராடவேண்டும் என்ற கருத்தினைக் கொண்டது. ஒரு நிலையிலும் அறிவுத் தேட்டத்தில் தேங்கிவிடாதது-இத்தகைய தொரு அறிவியல்பூர்வமான வழியையே மார்க்ஸ் இன்று இருந்தால் ஆதரிப்பார் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

 

 

 


மனக்கோட்டை

மௌனியின் ஒரு சிறுகதை-மனக்கோட்டை

மௌனியின் கதைகள் பிரசித்தமானவை. தங்கள் உள்ளத்துக்ள்ளேயே உணர்ச் சிகளை அழுத்திக் கொள்பவர்கள் மௌனியின் கதாபாத்திரங்கள் என்பது போன்ற குறிப்புகள் திரைப்படங்களில்கூட வரத்தொடங்கிவிட்ட காலம் இது. மொத்தம் இருபத்திரண்டு கதைகளே எழுதிய மௌனி பலவகைகளில் தம் கால எழுத்துகளை மீறி ஒருவகையான புகழைப் பெற்றுவிட்டார். இங்கு அவரது கதையான மனக்கோட்டை பற்றிச் சற்றே நோக்கலாம். இக்கதை தெரிவிக்கும் அடிப்படையான விஷயங்கள் மூன்று.

1. தமிழ் எதிர்ப்பும் திராவிட எதிர்ப்பும்
2. தடைசெய்யப்பட்ட பாலுறவு
3. அத்வைத தத்துவம்

இது மௌனியின் கதைகளில் மிகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. இக்கதையின் பாலியல் தளமே இதற்கு ஒரு “பயங்கரத்தின் கவர்ச்சி”யினை அளிக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு பெண்ணைத் தேடுகின்ற கதை. ஆனால் கதை யை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது வேதாந்தத் தளத்தில் இயங்குவது போலத் தோற்றம் தருகிறது. தெளிவாக உருப்பெறாத மூன்றுபேர் இக்கதையில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். சேகரன்-சுமி-சங்கர் என்னும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவைச் சொல்லுவதாக இக்கதை அமைகிறது. சுமி என்பவள் சங்கரின் தங்கை. சேகரன் சுமியைக் காதலிக்க சங்கரே து£ண்டு கோலாக இருக்கிறான்.

கதைப்பின்னல் பின்வருமாறு அமைகிறது. சேகரன் என்பவன் தனது நண்பன் சங்கர் இறந்துவிட்டான் என்பதை அறிந்து அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலி ருந்து விடுபட ஒரு மலைக்கோட்டையைப் பார்க்கச் செல்கிறான். சங்கரின் கடைசிக் கடிதம் அவனது “தங்கை சுமியுடன் அவன் (சேகரன்) பேசி அவன் (சங்கர்) பார்க்கவேண்டும்” என்பதாக இருக்கிறது. இதுவரை சுமி இறந்துவிட்ட செய்தி சேகரனுக்குத் தெரியாது. இக்கடிதம் சங்கர் வீட்டிற்குச் செல்லும் ஆவலை அவனுக்குள் உண்டாக்குகிறது. ஆனால் சங்கர் இல்லாமல் அவன் வீட் டிற்குச் சென்றால் அங்கு தன்னை எவரும் அறியமாட்டார்கள் என்பதனாலும், தற்சமயம் சங்கர் வீடு எது என்பது தனக்குத் தெரியாது என்பதனாலும் சேகரன் சங்கர் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினாலும் அதைத் தவிர்க்கிறான். எனவே வழியில் ஒரு மலைக்கோட்டை தென்படும்போது அங்கே இறங்கிவிடுகிறான். மலைக்கோட்டையைச் சுற்றிவந்த பிறகு மாலையாகிவிடுகிறது. தங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறான். அங்குத் தற்செயலாக அவன் மழைக்காக நிற்கச் செல்லும் வீடு சங்கரின் இன்னொரு தங்கையான சசி என்பவள் வீடாக அமைந்துவிடுகிறது.

இக்கதையின் வாயிலாக ஒருசேர இரண்டு விஷயங்கள் விமரிசனம் செய்யப்படு கின்றன. மலைக்கோட்டையைக் காணும்போது தற்கால அரசியல் விமரிசனத்துக் குள்ளாகிறது. சங்கரின் வீட்டினரைச் சந்திப்பதன் வாயிலாக ஒடுக்கப்படட ஒரு பாலியல் தளம்-தகாத பாலியல் உறவைச் சித்திரிக்கும் களம் கதைக்குள் வருகி றது.
மலைக்கோட்டை, “பருவகால வித்தியாசத்திலும் பார்ப்பவர் மனநிலையோடு கலந்து வெவ்வேறுவகைக்குக் காண எண்ணிலாச் சாயை கொண்டதாக” அமைந் திருக்கிறது. இங்கு ஒரு கவித்துவமான வருணனை இடம் பெறுகிறது. மலைக் கோட்டையைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது “நடுப்பகல் சரிவுகண்டுவிட, எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்துக் கானல் சலனத்தில் தெரிந்தன”.

இரவு நேரத்தில் ஆங்காங்கே தெரியும் குன்றுகளைப் பார்க்கின்ற அவனுக்கு அது தேவ அசுர யுத்தத்தினை நினைவூட்டுகிறது. தேவர்கள் என மௌனி இங்குச் சொல்வது ஆரியர்களையும் அசுரர்கள் என்று அவர் குறிப்பிடுவது திரா விடர்களையும் என்பது ஓரளவு வெளிப்படையாகவே தெரிகிறது. அங்குள்ள கோயிலைப் பார்க்கும்போது “பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்து விட்டு எதிரிகளை முறியடிக்க விநோதமான குறுக்குப் பாதைகளை வெகு யுக்தி யுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீரச் சக்ரவர்த்தி” என்னும் நையாண்டியில் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கட்டிய சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இச்சக்ரவர்த்தி, தோற்றுப்போன பிறகு தனது நிலை மறந்து மக்களுடன் மக்களாக ஜேஜே கோஷம் போட்டுக்கொண்டு வந்து கோட்டையை அடைந்து அந்த மக்களால் மீண்டும் தலைவனாக்கப்படுகிறான். மீண்டும் நையாண்டி தொடர்கிறது. அந்த அரசன், அவன் தகப்பன், அவன்-அவன் மகன் இவன் எனக் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தது, இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது, அது இது எல்லாமும் மனப்பிராந்தி யில் சரித்திரமாகிவிட, கற்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது. இதில் குறிப்பாகச் சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கேலி இருப்பது தெளிவு. தமிழ்நாட்டு வரலாற்றையே மூன்று வரிகளில் அடக்கி அதுவும் மறந்துவிட்டதாகவும் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார் மௌனி. தமிழின் எழுச்சியையே ஒரு மனப்பிராந்தி என்கிறார். தமிழர்கள் கடல்வாணிகம் செய்ததையும் தமிழ் வளர்த்ததையும் நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர தீட்சிதர் போன்ற பார்ப்பன ஆசிரியர்களே விதந்து எழுதியிருக்க, அதை ஏற்றுக்கொள்ள வும் இந்த மௌனியின் பார்ப்பன மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தமிழ் மக்களின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்ப தைத் தெரிவிக்க மௌனியின் இந்த ஒரு பகுதி போதும்.
தேவ அசுர யுத்தம் பற்றிய நினைவு வரும்போதுதான் இந்த அரசனுடைய தோல் வியும் நினைவுக்கு வருகிறது. தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி பெற்றது போலவே ஆரியர்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதையும் இந்தக் கோயில்கட்டிய திராவிட அரசனின் தோல்வி தெரிவிக்கிறது. (ஒருவகை யில் நாம் இந்தத் தொன்மத்தை நீட்டிக்கொள்ளலாம். தேவ அசுர யுத்தத்தில் அசுரர்களை ஏமாற்றித் தாங்கள் மட்டுமே அமுதம் உண்ட தேவர்களைப் போலவே தமிழகத்திலும் பிறரை ஏமாற்றித் தாங்களே வெற்றி பெற்றுவிட்டார் கள் ஆரியர்கள் என்பதையும், அவர்களது சூழ்ச்சிகள் இன்றுவரை வென்று வருகின்றன என்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம்.) கதைக்கிடையில் “ஆர்ப்பாட்டமாக, தமுக்கடி தமாஷாவாக, அபத்தமாக, அல்பசித்தியாக” திராவிட இயக்க முயற்சிகள் நோக்கப்படுகின்றன. வெளிப்படையாகவே கேட்கிறார் மௌனி: “இரவின் அந்தகார இருளைக் காண ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?” என்று.

கதையில் பிரச்சாரம் வந்துவிட்டால் அது இலக்கியமாகாது என்று குரைக்கும் பல விமரிசகர்கள் கதைக்குத் தொடர்பே இல்லாத இந்தப் பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்து மௌனியை எப்படிப் பாராட்டுகிறார்கள்? ஒருவேளை மார்க்சியத்தையும் திராவிட இயக்கத்தையும் பெரியாரியத்தையும் அம்பேத் கார்இயத்தையும் மறுப்பது, கேவலமாக எழுதுவது பிரச்சாரம் ஆகாது போலும்!

உண்மையில் மௌனியின் கதைகள் அனைத்தும் பிரச்சாரங்களாக-அப்பட்ட மான வைதிக நோக்கின் ஆதரவுகளாக வெளிப்படுபவைதான்.

மௌனியின் கதைகளில் மழை ஒரு முக்கியமான நிகழ்வு. மழை பாலியல் உறவின் குறியீடாகவே மௌனியின் கதைகளில் இடம்பெறுவதைப் பல ஆண்டு களுக்கு முன்பே விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நனையாமலிருக்க ஒரு பங்களா வாசலில் ஒதுங்குகிறான் சேகரன். அப்போது இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி அவனைக் கூர்ந்து நோக்குகிறாள். தன்னை யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத நிலையை மனவேதனையாகக் கண்ட அவன், “அப்பெண்ணின் கணவருக்குப் பின்னால் தன் பார்வையில் பட அவள் எப்போது வந்தாள் என்பதை கவனிக்கவில்லை.” அதேசமயம் அவள் கணவரும் “நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்பது புரியவில்லை” என்று தொடங்குகிறார். “உங்களுக்கு உங்கள் நண்பர் சங்கரை நினைவிருக்கிறது” என்று எப்படி அவர் இவனை அடையாளம் கண்டார் என்பதே புரியவில்லை நமக்கு. இதுவரை கதையில் அவன் என்றே சொல்லப்பட்டு வந்த அவன் இப்போது சேகரனாக மாறுகிறான். அவனது தன் வரலாற்றில் சங்கர் அவன் தங்கை சுமி ஆகியவர்களுடனான அவனது உறவு இப்போது முன்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் முன்பே சங்கரின் கடித வாயிலாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. “என் கற்பனையில் பிறந்து அவர்கள் மனத்தில் நீ வாழ்வது எவ்விதமோ தெரியவில்லை” என்று அவன் எழுதியிருக்கிறான். சங்கரின் கற்பனையில் பிறந்தவன் சேகரன் என்றால் அவன் இதுவரை எப்படி வாழ்ந்தான், எப்படி மலைக்கோட்டையைப் பார்வையிட்டான், எப்படி மழையில் நனையாமலிருக்க வீட்டிற்குள் வந்தான்? இதுதான் மௌனியின் அற்புதமான “உன்னதமான பாஷை.”
சங்கரின் இறப்பைச் சேகரனுக்கு அவன் தங்கை கணவர் சொல்கிறார். தெற்கிலி ருந்து வடக்கே ஏதோ ஒரு படிப்புக்குச் சென்றவன், ஒரு சுரங்கக் கம்பெனியில் உயர்பதவி வகித்து பூமிக்கு இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தைப் பார்வை யிடும்போது ஏதோ விஷம்தீண்டி இறந்துவிடுகிறான் சங்கர். ஆனால் உண்மையில் கதையை நடத்திச் செல்லும் சேகரனுக்கு சங்கர் இறக்கவில்லை. சங்கர், அவனது தங்கை சுமி ஆகியோர் நினைவாகவே அவன் வாழ்ந்து கொண் டிருக்கிறான். சங்கர் தனக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அனுமானிக் கும் அவன் பிறகு வாயிலைத் தாண்டி படிகளைத் தாண்டி கதவையும் தாண்டி-எல்லாவற்றையும் “தாண்டிக்” கடந்து சென்றுவிடுகிறான். இவ்வளவுதான் கதை.

கதையின் இந்த இறுதிப்பகுதி முக்கியமானது. சங்கரும் அவன் தங்கை சுமியும் பிரிக்க இயலாமல் சங்கரின் நினைவில் வாழ்பவர்கள். ஆனால் சங்கரோ அவர் கள் நினைவில் தான் வாழ்வதாக நினைக்கிறான். இதுதான் கதையின் முக்கியச் செய்தி. அதாவது உயிரோடிருப்பவனாகிய இவன் நினைவில் அவர்கள் வாழ, இறந்துவிட்ட அவர்கள் நினைவில் இவன் வாழ்வதாக ஒரு சுழற்சியில்-விஷச் சுழலில் சிக்குகிறது கதை. இச்சுழற்சி, இக்கதா பாத்திரங்களின் உடனிருப்பை முற்றிலுமாக மறுக்கிறது. மேலும் சங்கரின் கனவாகத் தன்னைக் கருதிக்கொள் ளும் சேகரன், சுமி நாடிச் செல்லும் கனவும் தானே என்பதாக முன்னாலே வருகிறது.

கதையில் சேகரன் சுமியைத் திருமணம் செய்துகொண்டதற்கான குறிப்பு எதுவும் இல்லை. என்றாலும் இருவருக்குமிடையிலான ஈர்ப்பு, மிக நுட்பமாகச் சொல்லப் படுகிறது. சேகரனை அவள் கதவிடுக்கில் நின்று பார்த்ததையும், அவனைக் குறித்து அழகாகப் புரிந்துகொண்டவளாக இருந்ததையும் சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறான். சுமிக்கும் சேகரனுக்கும் சங்கருக்கும் இடையிலிருந்த உள்ளார்ந்த பாலியல் ஈர்ப்பைச் சொல்ல முனையும் ஆசிரியர், தம்மையறியாமலேயே தடை செய்யப்பட்ட பாலியல் உறவுக்குள் சென்றுவிடுவதால் அதைத் தவிர்கக்வேண்டி மூவரையும் உடலற்றவர்கள் ஆக்கிவிடுகிறார். சங்கரின் இறப்போடு தன் இருப்பும் கூடச் சந்தேகம் கொள்வது சரி என்று நினைக்கிறான் சேகரன். மேலும் சங்கரின் பேச்சில் தன்னைத் தான் பார்ப்பதாகவும் கருதுகிறான். இம்மா திரிப் பல்வேறு குறிப்புகள் சஙகரையும் சேகரனையும் ஓர் உடலின் இருவேறு உருக்களாகவே காட்டுகின்றன. அதாவது அவன் ஒரு பிளவுபட்ட ஆளுமை (ஸ்ப் ளிட் பெர்சனாலிட்டி) கொண்டவன். பிறருடன் அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது இன்னொரு சுயம் கனவுகாணத் தொடங்கிவிடுகிறது. “அநேக மாணவர் மத்தியில் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது அவனை (சங்கர்) அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூடப் படமுடியாத வகையில் அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம். அவசியமானால் பார்வை கொள்ளக் கூடிய விதத்தில் அவன் எங்காவது பகற்கனவு கண்டுகொண்டிருப் பான்”. ஒரே உடல், ஆனால் ஓர் உரு அண்ணனாக இயக்கம் கொள்கிறது, மற்றொரு உரு காதலனாக, சங்கராக இயக்கம் கொள்கிறது.
சேகரன் என்னும் இவனது பெயரே, முதன்முதலில் இவன் மழைக்கு ஒதுங்கும் வீட்டின் சொந்தக்காரர், சங்கரின் தங்கை கணவர் சொல்வதாகத்தான் வருகிறது. கதையில் இவன்தான் உண்மையிலேயே சங்கரின் நண்பன் சேகரன் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. மௌனியின் எழுத்து இந்தத் தகாத பாலியல் உறவுச் சிக்கலை உருவெளித் தளத்திற்கு மாற்றி மறைக்கவே கோட்டை யைப் பார்க்கும் நிகழ்ச்சி நுழைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் தங்கை இடையிலான பாலியல் தொடர்பு சமூகத்தடைகளில் முக்கிய மான ஒன்று. இதனைத் தாங்கமுடியாமல்தான் சங்கர் இறந்துவிடுகிறான். அவனுக்குப்பின் அவன் தங்கையான சுமியும் இறந்துவிடுகிறாள். இதைச் சொல்வதே ‘மனக்கோட்டை’ கதை. மௌனியின் நினைவுச்சுழல் என்னும் கதையும் இதேபோன்ற தடுக்கப்பட்ட பாலுறவு அடிப்படையிலேயே அமைந்திருப் பதையும் விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தடைசெய்யப்பட்ட பாலுறவுக் கதை, வெளிப்படையாகத் தோன்றாமலிருக் கவே
சேகரன் மலைக்கோட்டையைக் காண்பதையும் பிறகு வெளிப்படையான அரசியல் விமரிசனத்தையும் வைக்கிறார் மௌனி. அதுமட்டுமின்றி மூன்று பேரையும் மன வுருக்களாகவே மாற்றிவிடுகிறார். அதாவது தடைசெய்யப்பட்ட பாலியல் உறவுக் கதையை மறைப்பதற்காக அரசியல் விமரிசனமும் வேதாந்தமும்! இது மௌனியின் முக்கியமான ஒரு முகம்.


‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி

‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி – ஒரு பார்வை

கௌதம சித்தார்த்தனின் ‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதியில் பதினொரு சிறுகதைகள் இருக்கின்றன. இந்த மண்ணின் அசலான சாயல் இரு கதைகளில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு கதை-‘மண்’-இந்தப் புத்தகத்தின் மூன்றில் ஒரு பங்கினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இன்னொன்று ‘தொப்புள் கொடி’.

இரண்டுமே யதார்த்தமான கதைசொல்லல் முறையில் அமைந்தவைதான். கதைகளின் தீவிரம் உடனே வாசகரைத் தொற்றுமாறு அமைந்துள்ளது. முன்தலைமுறை விமரிசகர்கள் சொல்லுவதுபோல, ஆசிரியரின் தரிசனம் வெளிப்படுமாறு அமைந்துளளன. பிற கதைகளில் ஆசிரியருக்கு ஓர் மன நெருக்கடி இருக்கிறது-யதார்த்த முறையில் கதையைச் சொல்லலாகாது, போஸ்ட் மாடர்னிச அல்லது மந்திரயதார்த்த முறையில் என்று சொல்லலாமா-ஏதோ ஒரு செயற்கையான புதிய முறையில் ரொமாண்டிக் பாணிக் கதைகளைச் சொல்லவேண்டும் என்று நினைத்து வெளிப்படுத்தும் நெருக்கடி. பொதுவாகக் கலை என்பது-தான் செய்யப்பட்ட ஒன்று என்பது-வாசகருக்கு வெளிப்படாமல் இருக்கும்போதுதான் சிறப்புப்பெறுகிறது.

‘ஒழிக உங்கள் துப்பாக்கிகள்’-முதல் கதை. உருவச் செம்மை அமையவில்லை. அன்போ, படைப்பாற்றலோ-ஏதோ ஒன்றை மலராக உருவமைத்துக்கொண்டு அது துப்பாக்கி ஆவதாக எழுதுகிறார். ஆனால் அந்தப் பூ எப்படித் துப்பாக்கி ஆயிற்று? அதுதானே கதையாக முடியும்? ‘அவன் செத்துப்போனான்’ என்றால் அது செய்தித்தாள் செய்தி. ‘ஏன் செத்தான்’ என உணர்வுபூர்வமாக விவரித்தால் அது கதை. மேலும் இந்த மாற்றம் ஏற்படப்போகிறது என்பதற்கான முன்னறிகுறிகளும் கதையில் இல்லை. “அந்தக் குழந்தை என் அருகாமையில் வந்தது….அதைப் பிடிக்க, அது பதறி யோட….அந்தக் காட்சி ஒரு தலைசிறந்த சிருஷ்டி” என்கிறான் கதைசொல்லி. இப்படி உணர்பவனின் பூ எவ்விதம் துப்பாக்கி ஆகமுடியும்? பூ துப்பாக்கி ஆயிருந்தால் இம் மாதிரி நினைப்புக்கு இடமே இல்லை.

இரண்டாவது கதை, ‘நுனி மீசையில் திறந்துகொள்ளும் சிரிப்பு’. பால்ய காலக் காதலைப் பற்றிய சாதாரணமான கதை. “நித்யத்துவம் கவிந்த அதே முகம். வாழ்வின் அர்த்தம் பூரணத்துவம் அடைந்துவிட்ட உன்னத கணங்கள் அவள் உடம்பெங்கும் ஒளிர்ந்தன. தனது ஜீவித ரகசியத்தை மறைத்துவைத்திருக்கும் உள்முகம் நோக்கி ஓடி னான்….” இக்கதையின் இறுதியில் ஒரு பகுதி இது. நித்யத்துவம், உன்னதம், வாழ்வின் அர்த்தம், பூரணத்துவம், ஜீவித ரகசியம்….என வெற்றுச்சொற்கள். மேலும், ஆசிரியர் தான் பின்பற்றுவதாகக் கூறுகின்ற பின்நவீனத்துவத் தன்மைக்கு முற்றிலும் எதிரான வையும்கூட. இலட்சியவாதச் சிந்தனைக் குப்பை. இதுதான் கௌதமனின் சிக்கல். பச்சைப்பறவையோ, சிவப்பு வயல்களோ இம்மாதிரி வண்ண வருணனைகள் பதிவு நவிற்சித்தன்மையைக் காட்டுபவை.

மூன்றாவது கதை, ‘முகம்’. நல்ல நவீனத்துவப் பிரதி ஆகும் தன்மைகள் இதில் உள்ளன. ஆனால் இதுவும் சரிவர உருப்பெறவில்லை. ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே ந. முத்துசாமியின் கதை ஒன்றில், ஒருவன் திடீரெனத் தன்னை ஒரு spectre ஆக உணர்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவ்வாறே கண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்தும் போகிறான். அக்கதையின் நவீனத்துவமும் முழுமையும் வாய்ப்பது அரிது. காரணம், நவீன வாழ்க்கையான நகர வாழ்க்கை, இம்மாதிரி சிதிலமான பிரமைகளை உருவாக்க முடியும். ‘முகம்’ கதையின் நாயகன், தனது கிராமத்திற்கு (ரஜனிகாந்த், விஜய்காந்த் பாணியில் கிராமத்தில் நிறைய சேவை வேறு செய்திருக்கிறான்) சென்றவுடனே அவனது இழந்த முகம் திரும்பக்கிடைத்துவிடுகிறது. ‘இயற்கைக்குத் திரும்பு’ அல்லது ‘கிராமத்திற்குத் திரும்பு’ என்ற எளிய செய்தியைக் கொண்ட கதை இது.

‘தரிசனம்’ அடுத்த கதை. ஒரு தப்பிப்புப் பாணிக் கதை. சாதாரணமாகக் கணவர்களின் தான் எப்படி மனைவிமார்களை மிரட்டுகிறது என்பதை ஓரளவு இயல்பாகச் சொல்லு கிறது. ஆனால் ஜெயித்தால் முத்தம் தருவது போன்ற சினிமாத்தனமான செயல்கள் இதைக் கெடுக்கின்றன.

‘கனவு-ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்’ என்பது ஐந்தாவது கதை. நான்கு கனவுகள். ஃப்ராய்டிய மணம் மாறாமல் எல்லாமே ஆண்குறி மையப்பட்டவையாக அமைந்திருக் கின்றன.

ஆறாம், ஏழாம் கதைகள்தான் முன்பே கூறிய ‘மண்’ணும் ‘தொப்புள்கொடி’யும். தொப்புளான் என்ற ஆட்டக்கலை வாத்தியார். அவருடைய கலை பிடிக்காமல் முதல் மனைவி ஓடிப்போய்விடுகிறாள். இரண்டாவது மனைவி வாயிலாகப் பிறந்த பிள்ளை யிடம் பாரம்பரியமாக வந்துவிட்ட அந்தத் திறமையைப் பார்த்துவிட்டு நெஞ்சு துடிக்கிறார் அவர். கதை நன்றாக வந்திருக்கிறது.

‘மண்’ என்றுதான் இந்தச் சிறுகதைத் தொகுதிக்குப் பெயர் வைத்திருக்கவேண்டும். அண்மைக்காலத்தில் படித்த சிறந்த கதைகளில் ஒன்று ‘மண்’ என்று எளிதாகவே சொல்லி விடலாம். கிராமப்புறங்களில் நமது பெண்களுக்குச் சாதிக்கட்டுப்பாடுகளின் பெயரால் இழைக்கப்படும் எத்தனையோ கொடுமைகளில் ஒன்றை மிக அழகாக ஆவேசத்தோடு சொல்கிற கதை இது.

எட்டாவது கதை ‘பலிபீடம்’. ஒருவகையில் ஏழாவது கதையின் தொடர்ச்சி. ‘மண்’ கதையில் ஆணாதிக்க மமதையின் உருவமாகப் படைக்கப்பட்ட ஜமதக்னி முனிவர்; பலிபீடத்தில் ரேணுகா, தேவியாக மாறிய தொன்மம்; கதையாகியிருக்கிறது. கதையின் ஆகிருதியை மீறிய சொல்நடை பெரிய இடறலாக அமைகிறது.

‘சாத்தாவு’ (குட்டிச்சாத்தான்) அடுத்த கதை. சாத்தானை அடிமைப்படுத்தி வைத்திருந்த மூதாதையின் முடிவு பற்றியது.

” ‘மூன்றாவது சிருஷ்டி’ தொகுப்பில் ‘சாபம்’ கதையில் மூட நம்பிக்கை எனக் கிண்டலடித்திருந்த என் அம்மாவின் குறிசொல்லலை, ஐந்து வருடங்களுக்குப் பின்னான என் எழுத்து வீச்சு அற்புத மரபாகக் கணித்தது” என்கிறது சித்தார்த்தனின் முன்னுரை. இது பார்வைக்கோளாறுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மூடநம்பிக்கையாக இருந்தது, இப்போது அப்படி இல்லாமல் போய்விடமுடியுமா? அக்கால சமய, சமூகப் பின்னணியில் இப்படித்தான் மக்கள் வாழ்ந்திருக்கமுடியும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? அற்புத மரபாகக் கணிக்க முடியுமா? இம்மாதிரி நிலவுடைமைக்கால சமூக மதிப்புகள் தங்கள் ஆதிக்கத்தினால் நம்மை எவ்வளவு சீரழித்துள்ளன? அவற்றைக் கட்டுடைக்காமல், ஏற்றுக்கொண்டு பாராட்டுவது ஒரு பிற்போக்கு வாதியாகவே ஆசிரியரைக் காட்டுகிறது.

இறுதியாக, ‘பச்சைப் பறவை’, ‘வெற்றுவெளி’ ஆகிய இருகதைகள் இருக்கின்றன. ‘வெற்றுவெளி’, புதுமைப்பித்தனின் ‘ஞானக்குகை’ கதையை நினைவூட்டுகிறது. அதன் அர்த்த விசாலமில்லை. முற்றுப்புள்ளியில்லாமல் எழுதிச் செல்வது ஒரு விளையாட்டு. இந்த மாதிரி விளையாட்டுகளுக்குப் பழங்கவிதைகளில் பஞ்சமா என்ன? நாகபந்தம் ரதபந்தத்திலிருந்து யமகம் திரிபு மடக்கிலிருந்து நிரோட்டகப் பாக்கள் வரை எத்தனை விளையாட்டுகள்? இம்மாதிரி விளையாட்டுகளை இலக்கியமாகக் கணிக்கமுடிந்தால், ‘வெற்றுவெளி’யும் அப்படியே.

தமிழில் தொன்மங்கள் குறைவு. அதனாலேயே சமஸ்கிருதப் புராணக்கதைகள் இங்கே ஆட்சிசெய்கின்றன என்று தோன்றுகிறது. பச்சைப் பறவையிலும் ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு புராணிகமும், ஒரு காதல் கதையும். எந்த விதத்திலும் வாசகருக்கு எவ்வித சலனத்தையும் உருவாக்க இயலாத கதைகள் இறுதி இரண்டும் என்று சொல்லலாம்.

நம் நாட்டில் யதார்த்தப்பாணியில் மிக நன்றாக எழுதக்கூடியவர்கள், ஏனோ ஃபேஷன் எனக்கருதி வேறு பாணிகளைப் பின்பற்றி வீணாகிவிடுகிறார்கள். இதற்குக் கோணங்கியை நல்ல உதாரணமாகச் சொல்லமுடியும். அவரது ‘மதினிமார்கள் கதை’ எழுப்பிய பாதிப்பினைப் பிறகுவந்த சிறுகதைத்தொகுதிகள் எழுப்பமுடியவில்லை. சித்தார்த்தனும் அவரைப்போலவே செயல்படுகிறார். மேலும் இந்தப் புத்தகத்தின் முன்னுரை ஒரு மிதமிஞ்சிய ‘தானை’ (ஈகோவைக்) காட்டுகிறது. ‘உரையாடலுக்கப்பால்’ எனக் காணப்படும் தலைப்பில் வரிக்கு வரி, நான், நான், நான், …. “பத்துவருடங்களுக் குப் பிறகு தொகுப்பாக வெளிவரும் என் எழுத்துகளினூடே துலங்கிநிற்கும் காலப் பிரக்ஞையை கவனிக்கவேண்டும்…”  “சரித்திரத்தின் திருகுவழிப் பாதையினூடே உள்ளோடிய என் கதைமொழி தமிழின் புதுமலர்ச்சியை வெளிப்படுத்தவல்ல ஜீவத் துடிப்புடன் விரிவுபெற்றது….”  பத்தாயிரம் பாட்டெழுதித் தமிழில் பாரகாவியம் படைத்த கம்பர்கூட இப்படிப் பெருமை பேசியதில்லை.

உண்மையில் இக்கதைகள் யாவற்றிலும் திரும்பத் திரும்பவரும் ஒரே மாதிரிப் படிமங் கள், வரிகள், சொற்கள் ஆகியவை நமக்கு அலுப்பூட்டுகின்றன. திரும்பத் திரும்ப வரும் சொற்கள், எழுத்துகள் பற்றி வரும் குறிப்புகள்… எழுத்தும் ஒருவகையில் நடிப்பைப் போன்றதுதான். ஒரு நல்ல நகைச்சுவை நடிகன், தான் சிரிக்காமல், பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கிறான். அதுபோலத்தான், ஒரு நல்ல எழுத்தாளனும் ‘என் எழுத்து இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. மாறாக, அவன் எழுத்து செய்யவேண்டிய பணியைச் செய்கிறது. செய்யவேண்டும்.

கடைசியாக, கௌதம சித்தார்த்தனின் கதைப் பொருள்கள் யாவும் ரொமாண்டிக் தன்மை கொண்டவை. பழமையைப் பாராட்டுவது, கிராம வாழ்க்கையின் மூடத்தன்ங்களையும் பாராட்டுவது போன்றவை வெற்றுக்கனவுத் தன்மை கூடியவை. இம்மாதிரிக் கனவுத்தன்மை, நவீன எழுத்துமுறைக்கு முற்றிலும் மாறானது. இதனை அவர் விட்டு வெளியேறினால், பிறகு நாம் அவரது “அக்குளில் முளைக்க இருக்கும் புதுவிதச் சிறகு எழுத்தைப்” பற்றிப் பேசலாம்.


தொல்காப்பிய நோக்கில் வக்ரோக்தி

தொல்காப்பிய நோக்கில் வக்ரோக்தி

கவிதைமொழி பற்றி அண்மைக்காலத்தில் மிகுதியாகச் சிந்திக்கப்பட்டுள்ளது. கவிதை என்பது மொழியை மிகுந்த பிரக்ஞையுடன் கையாளுவதாகும். சாதாரணப் பேச்சுமொழிப் பயன்பாட்டிலி ருப்பதை விட அல்லது உரைநடைப் பயன்பாட்டிலிருப்பதை விட கவிதையில் மொழி மிகவும் அமைப்புற்றதாக உள்ளது. கவிதை மொழி என்பதை மிகவும் விரிந்துபட்ட ஒரு மொழி என்றும் தொடர்புகோளின் எல்லா மூலவளங்களையும் ஒருங்கே கையாளு கின்ற மொழி என்றும் சொல்லலாம். கவிதைமொழி பற்றி மேற் கத்தியவர்கள் சிந்தித்தவைகளை வெளிப்படுத்தும் ஆயிரக்கணக் கான நூல்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் பல கொள்கையாளர்கள் கவிதைமொழி பற்றிச் சிந்தித்துள்ளனர். நமக்குத் தொல்காப்பியம் ஒன்றே பழங்காலக் கொள்கைகளை எடுத்துக்காட்டக்கூடிய ஒரே சான்றாக, அரும்பேறாக உள்ளது.
தொல்காப்பியம் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாக இருந்தபோதும் அண்மைக்காலத்தில் சிந்திக்கப்படுபவை போன்ற கவிதைக்கொள்கைகள் பலவற்றை நேரடியாகவும் மறை முகமாகவும் முன்வைக்கிறது. பொருளதிகாரம் கவிதைமொழியை எவ்விதம் கையாளுவது என்பதற்கான விதிகளை வகுத்துரைப்பதற்காகவே எழுதப்பட்டது. கவிதை உருவாக்கம் பற்றிக் குறிப்பிடும்போது தொல்காப்பியர்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல்சான்ற புலனெறி வழக்கம் என்கிறார்.
மேலோட்டமாக இக்கூற்று யதார்த்தத்திற்கு அப்பாலுள்ள புனைந்துரை, யதார்த்தத்திற்கு இயைந்த வழக்கு ஆகியவற்றைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆழமாக நோக்கினால் இது இருவகையான கவிதைச் செயல்முறைகளைக் குறிப்பிடுகிறது. நாடகவழக்கு என்பது இயல்புநவிற்சிக்கு மாறான எழுத்து முறையைக் குறிப்பிடுகிறது. உலகியல் வழக்கு என்பது இயல்பு நவிற்சிக்கு இயைந்த எழுத்துமுறையைக் குறிப்பிடுகிறது.
செய்யுள்தாமே இரண்டென மொழிப (1384)
என்னும் தொல்காப்பியர் கூற்றும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. “பொருளுணர்த்தும் முறையால் செய்யுள் இரண்டு வகைப்படும். அதாவது நேரடியாகப் பொருளுணர்த்தலும் குறிப்பாற் பொருளுணர்த்தலும்” என்று இதற்கு உரைதருவர். ‘குறிப்பாற் பொருளுணர்த்தல்’ என்பதை விட, நேரான மொழியால் அல்லாமல் பொரு ளுணர்த்தலும் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அதாவது
-நேரடியாகப் பொருளுணர்த்தும் செய்யுள்
-சுற்றிவளைத்துப் பொருளுணர்த்தும் செய்யுள்
எனச் செய்யுள் இருவகைப்படும் என்று தொல்காப்பியர் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது வகை, அழகுபடுத்தி – அலங்கார மொழியால் சுற்றிவளைத்துச் சொல்வதன் வாயிலாக அமையும் செய்யுள் எனப் பொருள்படும்.
மேற்சுட்டிய ‘உலகியல் வழக்கு’ என்பதோடு
உண்மை செப்பும் கிளவி (1153),
கிளந்தாங்கு உரைத்தல் (1157),
வழக்கு வழிப்படுத்தல் (1163)
வாய்மை கூறல் (1183)
என்பது போன்ற இடங்களிலெல்லாம் நேரடிக் கவிதை முறையை யே தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆனால் பிற இடங்களிலெல்லாம் அவர் மறைமுகக்கூற்று (அல்லது கோணல்கூற்று அல்லது நேரல் கூற்று) முறையையே வலியுறுத்துகிறார்.
தொல்காப்பியருக்கு ஒத்த கருத்து அவருக்குப் பின் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த குண்டகர் என்ற சமஸ்கிருத இலக்கியாசிரியரிடம் காணப்படுகிறது. அவர் எழுத்துமுறைகளை ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி (இதற்கு ‘அதிசயோக்தி’ என்றும் பெயர்) என இரண்டாகப் பகுக்கிறார். இவற்றுள் வக்ரோக்தி பற்றி விரிவாகப் பேசுகிறார். அவருடைய முக்கியமான நூல் ‘வக்ரோக்தி ஜீவிதம்’ என்பது.
இயல்பான எழுத்து அல்லது பேச்சுமுறை ஸ்வபாவோக்தியின் பாற்படும். ஸ்வப வோக்தி (ஸ்வபாவ + உக்தி) அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்து முறை வக்ரோக்தி எனப்படும். வக்ரோக்தி என்பது வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற் கூற்றுமுறை (நேரல்கூற்று, மறைமுகக்கூற்று, கூடமான முறை யில் கூறும் கூற்று) எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றிவளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும்.
சாதாரணமொழியை விட வேறுவிதமாக மொழியைவளைத்துக் கையாளும்போது அவ்விதம் கையாளுவது மிகுந்த பயன் அல்லது விளைவைத் தருவதாக அமைந்து விட்டால் அது வக்ரோக்தி எனப்படுகிறது.
தொல்காப்பியர் கூறும்,
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறுபொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும். (1456)
என்பது வக்ரோக்தியின் பாற்படக்கூடிய சிந்தனையே. மேற்காட்டியது இலக்கணை பற்றிய நூற்பா.
அங்கதம் பற்றிக் கூறும்பொழுதும் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இரண்டாகப் பகுப்பார் தொல்காப்பியர். செம்பொருள் அங்கதம் என்பது நேரடி வசை. அதில் சுற்றிவளைத்துச் சொல்லுதலோ குறிப்புப் பொருளோ இல்லை. ஆங்கிலத்தில் லாம்பூன் எனப்படும் வகையைச் சேர்ந்தது இது. பழிகரப்பு அங்கதம் என்பது மறைமுகமான சொற்களால் கேட்பவன் உய்த்துணருமாறு கூறப்படுவது.
இவற்றால் பிற்கால சமஸ்கிருதக் கொள்கையாளர்கள் போன் றே அவர்களுக்கெல்லாம் முற்பட்ட தொல்காப்பியருக்கும் நேரடிக் கவிதை, மறைமுகக்கவிதை என்னும் இருவகைகளில் நம்பிக்கை இருப்பது தெளிவாகும். ஆங்கில நூலார் மறைமுகக்கவிதை என்பதை oblique poetry என்பர்.
குண்டகர், மஹிமா பட்டரைப்போல த்வனிக் கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அவர் தமது வழியில் கவிதை உருவாக்க அடிப்படையைக் கூறுகிறார். தொல்காப்பியர் த்வனிக் கொள்கையை உடன்படுபவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். உள்ளுறை, இறைச்சி போன்ற த்வனிப் பொருள்களை வலியுறுத்தல் தொல்காப்பியரிடம் காணப்படுகிறது. இருப்பினும் எல்லாக் கவிதைகளும் த்வனிப் பொருள் உடையனவாக இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. ஆனால் நேரடியான கூற்று முறை கொண்ட கவிதைகளும் மறைமுகக்கூற்றுமுறை கொண்ட கவிதைகளும் உண்டு என்பதைச் சொல்லும் முறையில் குண்டகரை ஒத்த (அவருக்கு முன்னோடியான) சிந்தனையாளர் ஆகிறார். தொல்காப்பியர் தமது கொள்கையை விரிவாக்கிக் ‘கற்பனையின் வெளிப்பாடு என்பதே வக்ரோக்திதான்’ எனக் கூறவில்லை. மேலும் குண்டகர் வக்ரோக்தியின் விளைவு ரஸம் என்று கூறி, அதனை ரஸக்கொள்கையோடு இணைக்கிறார். ஆனால் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலின் அடிப்படைகள் வேறாக இருக்கின்றன.
தமிழ்க் கோட்பாட்டின்படி, மறைமுகக் கவிதை என்பதை நேரல் கூற்றுமுறைக் கவிதை என்பதோடு குறிப்புணர்த்தும் கவிதை என்றும் சொல்லலாம்.
நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிட தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டி
உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல்
மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரியவாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்
ஒன்றிடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி (1142)
என்னும்போது குறிப்பாற் புலப்படுத்தலே அன்றிக் கூடமாகச் சொல்லுதலும் விவரிக்கப் படுகிறது.
‘கனவும் உரித்தால் அவ்விடத்தான’ (1143) என்னும்போதும் மறைமுக வெளிப்பாடே சொல்லப்படுகிறது. கனவு என்பதே தன்னுணர்வற்ற ஒரு வெளிப்பாட்டு முறை என்று சர்ரியலிசக் கொள்கையாளர்கள் போன்றோர் ஏற்பர்.
என் உற்றனகொல் இவையெனச் சொல்லுதல் (1149),
நெஞ்சொடு உசாவுதல் (1150),
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த அன்னவை பிறவும் (1156)
போன்ற நூற்பாக்களும் சுற்றிவளைத்துச் சொல்லுதல் என்னும் கருத்தை உணர்த்து கின்றன.
உண்டற்குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே (1159)
என்பதும் மறைமுக வெளிப்பாடே ஆகும்.
சமஸ்கிருதக் கொள்கையாளர்களில் வக்ரோக்தி பற்றிய சிந்த னையை பாமகர், தண்டி, குண்டகர், போஜர் போன்ற ஆசிரியர் களின் நூல்களில் காணலாம். பாமகர், தண்டி காலத்திற்கு (கிபி ஒன்பதாம் நூற்றாண்டு) முன்பிருந்தே இது அறியப்பட்டிருந்தது எனக் கருதலாம். பாமகர் உயர்வு நவிற்சி அல்லது அதிசயோக்தியைப் பற்றிப் பேசும்போது அதிசயோக்தியின் இன்னொரு பெயர் தான் வக்ரோக்தி என்பதுபோல எழுதுகின்றார்.
“எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இது. அவற்றிற்கு அழகைத் தருவது. ஆகவே கவிஞர்கள் கண்டிப்பாக முயன்று அடையவேண்டியது. காரணம், இது இன்றி எந்த அணி யும் இல்லை” என்பது அவர் கூற்று. தண்டியும் ஸ்வபாவோக்தி தவிர ஏனைய எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக வக்ரோக்தியைக் குறிப்பிடுகிறார். ஸ்லேஷத்தை (சிலேடையை) அதன் முக்கிய வெளிப்பாடாகவும் குறிப்பிடுகிறார்.
இதற்கு மாறாக வாமனர், உருவகம் என்பதே வக்ரோக்தி என்னும் கொள்கையினராகக் காணப்படுகிறார். ஆனந்த வர்த்தன ரின் த்வன்யாலோகத்தில் வக்ரோக்தி பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அவருக்கு உரை எழுதிய அபிநவ குப்தர், வக்ரோக்தியை ‘உத்க்ருஷ்ட சங்கடனம்’ என்று குறிப்பிடுகிறார். இச்சொல்லுக்கு ‘நிறைவுற்ற ஒரு படைப்பு உத்தி’ என்று பொருள். எனினும் குண்டகர், போஜர் இருவரையும் தவிரப் பிற அனைத்து ஆசிரியர்களும் வக்ரோக்தியை ஒரு சப்தாலங்காரம் என்றே கருதியுள்ளனர். (அதாவது ஒலியின் அடிப்படையில் அமையும் அணி).
தொல்காப்பியருடைய நோக்கில் கூற்று என்பது கவிதையை வெளிப்படுத்தும் முறை. வாசகர் கவிதையைக் கற்கும் முறை என்றும் கொள்ளலாம். நாடக மாந்தரின் (தலைவன், தலைவி, செவிலி, தோழி போன்றோருடைய) கூற்றினை அவர் கிளவி என்றும் கிளத்தல் என்றும் சொல்வார். எனவே தொல்காப்பியர் ‘கிளத்தல்’ என்னும் சொல்லைத் தவிரப் பிற சொற்களைப் பயன்படுத்துமிடங்களை (கூற்று போன்ற சொற்களைப் பயன்படுத்துமிடங்களை)க் கவிதை வெளிப்பாட்டினைக் குறிப்பனவாகக் கருதி ஆராய்தல் நாம் அவரது கவிதைக் கொள்கையை இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.
பாமகர் கூறும் ஒரு சில கருத்துத் துணுக்குகளை எடுத்தே குண்டகர் வக்ரோக்தி என்னும் கொள்கையாக உருவாக்கியிருக்கிறார். கவிதையின் இயல்பும் வெளிப்பாடும் வக்ரோக்தியே என்பது அவர் கருத்து. கவிதைமொழி பற்றிக் குண்டகர் போல ஆழமாகச் சிந்தித்தவர் எவருமில்லை என்றே கூறலாம்.
திகைப்பூட்டும் புதிய மொழி அல்லது மொழி விலகல் (deviations of language) என்னும் கருத்தைத்தான் அவர் வக்ரோக்தி என்பதன் வாயிலாக முன்வைக்கிறார். குறிப்புமொழி என்று தொல்காப்பியர் கூறுவதையும், வக்ரோக்தி என்று குண்டகர் கூறுவதையும் மேற் கத்தியக் கவிதை மரபிலுள்ள விலகல் என்னும்கருத்துடன் ஒப்பி டலாம்.
அரிஸ்டாடில் காலத்திலிருந்தே மேற்கத்தியக் கவிதையியலில் விலகல்தான் கவிதை மொழியினை உருவாக்குவது என்னும் கருத்து ஏற்கப்பட்ட ஒன்றாகும். “கவிதையில் அதீத கவர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான மொழிச்சிந்தனை” என்று வக்ரோக்தியை குண்டகர் விவரிக்கிறார்.
‘லோகாத்தர சமத்காரகாரி, வைசித்ரிய சித்தயே’
சாதாரண மொழி வெளிப்பாட்டிலிருந்து மாறுபட்டதொரு கவர்ச்சி மிக்க வெளிப்பாட்டின் காரணமாகத்தான் கவிதையின் ஆன்மா உருவாகிறது என்பது குண்டகர் கருத்து.
கவிதைமொழி, பேச்சுமொழியினின்றும் வேறுபட்டது, அது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, சாதாரணமொழி குறைந்த அழுத்த மின்சாரம் போன்றது என்பது வடிவவியல் திறனாய்வாளர்களின் கருத்து இதனை ஒட்டி குண்டகர் கருத்துகள் அமைகின்றன. தொல்காப்பியர் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவரது கருத்துகளும் இதனை ஒத்தவையே.
விலகல் என்பது ஒரு பிரதியைப் புரிந்துகொள்வதில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சாதாரணத் தொடர்புகோள் முறையிலிருந்து மாறுபடுவது ஆகும். இலக்கண விதிகளை விட்டுவிடுதல் வாயிலாக அது நிகழலாம். அவற்றின் விதிகளைப் பயன்படுத்தலில் மாற்றங்கள் செய்வதன் வாயிலாக வும் நிகழலாம். அல்லது புதிய விதிகளை உருவாக்குதல் வாயிலாகவும் நிகழலாம். மொழியின் எல்லாத் தளங்களிலும் அது நிகழும். கவிதையின் எல்லாச் சிறப்பான கருவிகளும் விலகலை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளன என்கிறார் லெவின் என்னும் ஒப்பியல் ஆய்வாளர்.
லெவின் இரண்டு வகை விலகல்களைக் குறிப்பிடுகிறார்.
அகவிலகல், புறவிலகல் என்பன அவை.
கவிதையின் பின்னணியிலிருந்தே எழும் விலகல் அகவிலகல் ஆகும். கவிதைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஓர் ஒழுங்கின் அல்லது விதியின் அடிப்படையில் எழும் விலகல் புறவிலகல் எனப்படும்.
அவர் இன்னோரிடத்தில் நிச்சயமான, நிச்சயமற்ற விலகல்கள் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இதைத்தவிர வேறு தளங்களிலும் விலகலை நாம் பொருத்திப் பார்க்க முடியும. தொடர் இணைப்பு முறையில் ஏற்படும் விலகல் (syntagmatic deviation), தேர்வு அடிப்படையில் ஏற்படும் விலகல் (paradigmatic deviation) என்றும் பொருத்திப் பார்க்கலாம். தொடர் இணைப்பு விலகலில் தொடரமைப்பு முறை விலகலுக்குள்ளாக்கப் படுகிறது.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
என்பது விலகலே.
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
என்பதும் விலகலே. இவை வார்த்தைத் தேர்வு குறித்த விலகல் கள்.
கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
என்பதும்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்
என்பதும் தொடர்இணைப்புமுறை விலகல்கள்.
வடிவப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட இலக்கியங்களைப் படிப்ப தற்குத் தொல்காப்பியரின் குறிப்புமொழி, வக்ரோக்தி, விலகல் போன்ற கருத்துகள் மிகவும் உதவுவன.
கவிஞன் முயன்று உருவாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வில கல்கள்தான் சிறப்புப் பெறும். ஞாபக எல்லைகள், கவனச் சிதறல் கள், கவிதைப் பொருளிலிருந்து கவனத்தை விலக்கும் தாவுதல் கள், தவறுகள் போன்றவை விலகல்களாகக் கருதப்படமாட்டா. கவிதை மொழியில் விலகல் என்பது “மூன்றாம் பிறையின் வளைவு போன்றது, நாய்வாலின் வளைவு போன்றதல்ல” என்பர்.
உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே (1163),
ஒருபாற் கிளவி ஏனைப்பாற்கண்ணும்
வருவகைதானே வழக்கென மொழிப (1165)
என்றெல்லாம் வழக்கின் ஆதிக்கத்தைத் தொல்காப்பியர் வலியு றுத்துவது விலகலை மனம்போனபோக்கில் கையாளக்கூடாது என்னும் எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.
கவிதை மொழியை பிறவகை மொழிப் பயன்பாடுகளிலிருந்து எந்த அளவு சரியான விலகல்களை மிகுதியாகப் பெற்றிருக்கிறது என்பதனால்தான் சிறப்புப் பெறுகிறது. விலகல்கள் என்பது தொடர் அமைப்பு அல்லது சொல் தேர்வு இவற்றில் ஏற்படும் மாற்றங் களை மட்டும் குறிக்காது. நாம் எதிர்பாராது அமைக்கும் அமைப் புத் தேர்வுகளிலிருந்து விலகும் தன்மைகளையும் இச்சொல் குறிக் கும். உதாரணமாக, ஓ ஹென்றி யின் கதைகள் சிறப்புப் பெறுவது அவற்றின் விலகல் தன்மை கொண்ட முடிவுகளால்தான்.
குறிப்பாகச் சில கவிதைக் கூறுகள் பிரக்ஞை பூர்வமாக விலக லுக் குள்ளாக்கப் படும்போது அவற்றை முன்னணிப்படுத்தல் என்று குறிப்பிடுவார் ழான் முகராவ்ஸ்கி என்னும் வடிவவியல் திறனாய்வாளர்.
சாம்ஸ்கி கூறும் ஆழ்அமைப்பு, மேற்புற அமைப்பு என்னும் கருத்துகளும் இரு வகை விலகல்களை நமக்கு இனம் காட்டுவ தாக அமையும். மோசமான அல்லது எளிய கவிதைகளில் மேற்புற அமைப்பு மட்டுமே விலகலுக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால் நல்ல கவிதைகளில் ஆழ் அமைப்பே விலகலுக்குள்ளா கிறது என்று சொல்லலாம்.
குண்டகர் வக்ரோக்தியை ஆறுவகைகளாகப் பிரிக்கிறார்.
ஃ அசைகளின் சேர்க்கையில் ஏற்படும் வளைவுகள்,
ஃ அடிப்படைச் சொற்களின் பயன்பாட்டில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வேற்றுமை வடிவம் ஏற்ற சொற்பயன்பாட்டில் ஏற்படும் நெளிவு கள்,
ஃ வாக்கியப் பகுதிகளில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வாக்கியங்களில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வாக்கியச் சேர்க்கைகளில் உருவாகும் கவிதையமைப்பில் ஏற்ப டும் சுழற்சிகள்
என்பன அவை. இவை ரஸம், த்வனி ஆகியவற்றையும் வக்ரோக் தியின் எல்லைக்குள் கொண்டு வந்துவிடுகின்றன. இவ்விதம் பார்க்கும்போது
இறைச்சிதானே பொருட்புறத்ததுவே (1175)
இறைச்சியுட் பிறக்கும் பொருளுமாருளவே (1176)
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே (1188)
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க்கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே (1221)
முன்ன மரபின் கூறுங்காலை (1244)
என்னும் நூற்பாக்களில் கூறப்படுவனவும், கூற்றெச்சம், குறிப்பெச் சம் என்றெல்லாம் தொல்காப்பியர் குறிப்பிடுவனவாகிய குறிப்பு மொழிகளும் உறுதியாக வக்ரோக்தியில் அடங்குவனவே என லாம்.
விலகல் என்னும் கருத்தைவிட வக்ரோக்தி தெளிவானதும் குறுகியதும் சுருக்கமானதும் ஆகும். காரணம், இந்தியக் கவிஞர்கள் பெரிதும் மரபுக்குக் கட்டுப்பட்டவர்கள். மரபை மீறித் தன்னிச்சையாகப் படைப்பது என்பதை இந்தியக் கவிஞர்களிடம் காண்பது அரிது. விலகல் என்பது ஒட்டுமொத்தமான இலக்கணமற்ற தன் மைகளையும் ஏற்பிலாத் தன்மைகளையும் குறிக்கின்ற ஒரு சொல்.
விலகல் என்பது ஒரு விதி அல்லது ஒழுங்கு என்பதன் அடிப்படையாகப் பிறப்பது. எது விதியோ, அதை மீறுவதுதான் விலகல். ஆனால் எது விதி என்பதை மொழியில் வரையறுத்துச் சொல்ல முடியாது என்பதுதான் இதிலுள்ள சிக்கல். மக்கள் பேச்சுமொழி அமைவுகளின் எண்ணிக்கையைப் (frequency) பொறுத்து விதி என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சில மொழியிய லாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ரிஃபாத்தர் (கவிதையின் குறியியல் என்னும் பிரபலமான நூ லை ஆக்கிய ஃபிரெஞ்சுமொழித் திறனாய்வாளர்) என்பவர் கவி தையின் சூழலைப் பொறுத்து விதி என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் விதி என்பதே இலக்கணக் காரர்கள் மனத்தில் செயற்கையாக உருவான ஒன்று என்ற கருத்தும் உண்டு. மக்களின் உண்மையான பேச்சு என்பது சமயத்தில் எந்தவித விதியையும் மீறிச்செல்லக் கூடியது.
மேலும் விலகல் என்பது வடிவம் சம்பந்தமான ஒன்றாகவே மேற்கத்திய விமரிசனத்துறையில் கொள்ளப்படுகிறது. ஆகவே பொருளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படு வதில்லை. ஆனால் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும் வக்ரோக்தி என்பதும், தமிழில் சொல்லப்படும் குறிப்புமொழி என்னும் கருத்தும், பொருளுக்கு முக்கியத்துவம் தருவதால் விளைபவை. வெறும் வடிவத் தோற்றங்களை மட்டுமல்ல. இவற்றிலும் தொல்காப்பியர் கூறும் குறிப்பு, வாசக எதிர்வினையை அடிப்படையாகக் கொண்டது என்னும் முறையில் சிறப்பானது.
வக்ரோக்திக் கொள்கையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. பாமகரும் குண்டகரும் அவர்களது கோட்பாடுகளில் ஸ்வபாவோக் திக்கு இடமே அளிக்கவில்லை. ஆகவே சிலவகைக் கவிதைக ளுக்கு அவர்கள் கொள்கை போதுமானதன்று. கவிச்செயல்பாடு (கவி-வ்யாபார) என்பதாகவே குண்டகர் வக்ரோக்தியை வருணிக் கிறார். கவிதை உருவாக்கமும் நேர்த்தன்மை அற்றதாக்கலும் வக்ரோக்தியும் ஒன்றெனவே அபிநவகுப்தரும் கருதுகின்றார். குணங்களின் வித்தியாசங்களும் அலங்காரங்களின் வித்தியாசங்களும் கவிதைச் செயல்பாட்டில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்பவை அமைகின்றன என்பதும் அவர் கருத்து.
குண்டகர், ‘கற்பனையின் விளைவே வளைத்தல்-வடிவங்களை அமைத்தல்’ (வக்ர-கவி-வ்யாபார) என்கிறார். கற்பனையின்றிச் சாதாரணமொழிக்கும் கவிதைமொழிக்கும் வேறுபாடில்லை. மேலும் அவர், கற்பனை பற்றிப் பேசிய பத்தொன்பதாம் நூ ற்றாண்டு ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்கள் போன்றே ‘கற்பனை மேதைமையின் வெளிப்பாடு’ என்கிறார். விலகலைக் கையாள ஒரு கவிஞனுக்குப் போதிய காரணம் இருக்கவேண்டும். கவிதை யின் மையக்கருத்துக்கு உகந்தவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவ தற்கே வக்ரோக்தி பயன்படவேண்டும்.
பழங்காலக் கோட்பாட்டின்படி ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி என்ற இரண்டின் பாற்பட்டதாகக் கவிதைமொழி கருதப்பட்டது. ஆனால் இக்காலப் பின்னமைப்புவாதக் கருத்துகளின்படி எல்லா மொழியும் அணியலங்காரங்களுக்குட்பட்ட மொழியே. இயல்பான மொழி என்பதே கிடையாது.
உவமப்பொருளின் உற்றது உணரும்
தெளிமருங்குளவே திறத்தியலான (1241)
இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப (1249)
வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் (1253)
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே (1259)
போன்ற நூற்பாக்களால் தொல்காப்பியர் உவமையை அடிப்படை அலகாகக் கொள்வதைக் காணலாம்.
இக்கால மேற்கத்திய இலக்கியக் கொள்கையின்படி உருவகம் என்பதே அடிப்படை அலகாகக் கொள்ளப்படுகிறது. காரணம், நாம் சிந்திப்பது உருவக அடிப்படையில்தான். உவமை என்பது மொழி யில் செயற்கையாகச் செய்யப்படுவதே.
தமிழ்ப் பண்பின் அடிப்படைத் தன்மை எங்கு நல்ல கொள்கை இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளுதல். திருக்குறளாசிரியரும் இந்த அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளார். தொல்காப்பியரும் இவ்வாறே கவிதைக் கொள்கையில் செயல்பட்டுள்ளார். இது நல்லதுதான் என்றாலும், கருத்து வளர்ச்சிக்கு இடம்தராது. சமஸ் கிருதக் கொள்கையாளர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டத னால்தான் கவிதைக் கொள்கை பலவாகக் கிளைத்து வளர முடிந்தது.
இதுவரை நோக்கியவற்றால், தொல்காப்பியரது மொழிபற்றிய சிந்தனைக்கும், சமஸ்கிருத வக்ரோக்திச் சிந்தனைக்கும், மேற்கத் திய நடையியலாளர்களின் விலகல் என்னும் சிந்தனைக்கும், வடிவவியலாளர்களின் முன்னணிப்படுத்தல் என்னும் சிந்தனைக் கும் வடிவ அடிப்படையில் வளைத்துக்கூறல், அழகுபடுத்திக் கூறல், புதுமையாக்கிக் கூறல் என்னும் விதங்களில் ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பதை அறியலாம்.
ஆனால் விலகல் என்னும் கொள்கை, மொழியில் காணப்படும் எவ்வித மாற்ற்த்திற்கும் உடன்படுவதால் அது மிகப் பொதுவா னது. முன்னணிப்படுத்தலும் வக்ரோக்தியும் மொழியை மாற்றுவதை முதன்மையாகக் கருதுவன. இவை பொருளமைப் பின்மீது போதிய கவனம் செலுத்துகின்றன. தொல்காப்பியரது மொழிக்கொள்கை, வடிவச் செம்மை அல்லது மாற்றத்தைவிட பொருளமைப்பினை வலியுறுத்துவது என்பதோடு வாசக எதிர் வினைக் கொள்கை சார்ந்தது என்பதும் தெளிவாகிறது.

—–