நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 7

1378158449993
கேள்வி: தமிழ்நாட்டில் பட்டிமன்றங்கள் பல நடக்கின்றன. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 
பட்டிமன்றம் போன்ற பாணியில் இலக்கிய விவாதங்களை நடத்துவது இந்திய மொழிகள், கலாச்சாரங்கள் பலவற்றிலும் உண்டு. குறிப்பாக, உருது, இந்தி போன்ற மொழிகளில் இதை நன்றாக நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பட்டிமன்றங்கள் சற்றே வேறுபட்டவை, விசித்திரமானவை. ஒன்று, இது திராவிடக் கட்சிகளால் ஆரம்பித்து, ஆதரிக்கப்பட்டது- ஓர் அரசியல் விளைவு என்பது.
ஆரம்பத்தில் பட்டிமன்றம் பெரிய நன்மையாகவே இருந்தது. சாதாரண மக்கள் பேசும் உரிமை பரவலாக இல்லாத ஒரு நாட்டில், பட்டிமன்றம் ஒரு ஜனநாயக அமைப்பாகவே- பலருக்கும் பேசும் வாய்ப்புத் தருகின்ற அமைப்பாகவே முதலில் செயல்பட்டது. யாரோ முன்பின் தெரியாதவர்கள்-வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்- வந்து தங்கள் கருத்துகளை மேடையில் வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக நடைமுறையைப் பிரபலப்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள அரட்டை அரங்கம் போன்றவை முதலாக நீயா-நானா வரைகூட அப்படித்தான்.
இப்போது பட்டி மன்றம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லை. எண்பது தொண்ணூறுகளிலிருந்த வரவேற்பு இப்போது அவற்றிற்கு இல்லை. யாரோ ஒரு சிலர்-பாப்பையா, லியோனி போன்றவர்கள் பழம் புகழில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு பதிலாக வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டன. பட்டிமன்றம் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மிகப் பிரபலம் அடைந்திருந்த ஒன்று.

இதுவும்கூட ஆரம்பத்தில் ஒருமாதிரியாக இலக்கியக் களமாகத்தான் தொடங்கியது. பலர், பட்டிமன்றத்தின் முதல் தலைப்பே “கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா” என்று கூறுவார்கள்.

ஆனால் பிற்காலத்தில் இது வெறும் காட்சி ஆகிவிட்டது. செயற்கையான தலைப்புகள், அலங்காரப் பேச்சுமுறை, வெறும் நகைச்சுவைக் களஞ்சியமாக-நகைச்சுவைகளின் தொகுப்பாக ஆக்குதல்-கைதட்டல் வாங்குவதற்காகவே பேசுதல்-கருத்துகளுக்கு முக்கியத்துவமின்மை போன்ற தன்மைகள் அவற்றின் இலக்கியப் பண்பையும் விவாதத் தன்மையையும் இல்லாமல் செய்து கேளிக்கை ஆக்கி விட்டன. நான் முதலிலிருந்தே பட்டிமன்றத்தை எதிர்த்தவன். அதற்குக் காரணம், அதன் கோமாளித்தனமோ செயற்கைத்தன்மையோ கூட அல்ல. எந்தப் பிரச்சினையையும் அது நோக்கும் தன்மைதான்.

பட்டிமன்றம், எந்தப் பிரச்சினையையும் (இலக்கியம், சமூகம் சார்ந்த எதுவா யினும்) இரண்டு எதிரெதிர் முனைகளாக- அமைப்புவாதத்தில் துருவ எதிர்வுகள் அல்லது இருமை எதிர்வுகள் (binary opposites என்று சொல்வார்கள்-அப்படிப் பகுத்துப் பார்க்கிறது. இது ஒரு கோளாறான பார்வை. உதாரணமாக நன்மை-தீமை என்று இரண்டு எதிரெதிர் முனைகளில் சமுதாயத்தில் காணும் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியுமா?  வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா? இடையில் எத்தனை விதமான சாம்பல்நிறச் சாயைகள் இருக்கின்றன? இதுவா-அதுவா என்று பார்ப்பதே தவறான முறை. ஏனென்றால் இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் அவற்றிற்கு உள்ளேயோ வெளியேயோ ஏராளமான நிலைப்பாடுகள் உண்டு. பட்டிமன்றத்தின் அடிப்படையே இரண்டு அணிகள், ஒரு தலைவர். இரண்டு அணிகள் இரண்டு எதிர்முனைகளை எடுத்து வாதிடுகின்றன. ஆனால் விஷயமே இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையில்தான் இருக்கிறது.

அதனால் அறிவைக் குறுக்குதல், எளிமைப்படுத்திப் பிரச்சினைகளை நோக்குதல் என்ற அடிப்படைத் தவறுகள் பட்டிமன்றத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது என் அபிப்பிராயம்.

கேள்வி: நடிக நடிகையர்கள் அரசியலில் பெரிய தலைவர்கள் ஆகின்றார்களே, அது சரிதானா?

பதில்: ஜனநாயகம் என்றால் மக்கள் ஆட்சி. மக்கள் எல்லாருக்கும் அந்த ஆட்சியில் பங்கேற்கச் சரிசமமான உரிமை உண்டு என்பதுதான் அதன் பொருள். நடிகர்களும் நடிகைகளும் மக்கள்தானே? அந்த வகையில் அவர்களும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கவோ கட்சிகள் வைக்கவோ தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவோ நாட்டை ஆளவோ உரிமை உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அயல்நாடுகளிலும் இப்படி நடிக நடிகையர் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் நடிக நடிகையர் பங்கேற்பதில் ஒரு பெரிய ஆதாயம் அவர்களுக்கு இருக்கிறது. தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்று பரவலான ஒரு விளம்பரம்-அல்லது பங்கேற்பவர்களைப் பற்றிய ‘பிம்பம்’(இமேஜ்) ஒன்று தேவையாக இருக்கிறது. பழங்காலத்திலும் இன்றும் பலருக்குச் சமூகத் தொண்டின் வாயிலாகவோ, சமூக அக்கறை சார்ந்த உழைப்பின் வாயிலாகவோ, பெரிய பதவிகள் வாயிலாகவோ அந்த பிம்பம் ஓரளவுக்கு ஏற்படுகிறது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற பிம்பத்தினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (நான் காமராஜர் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றிக்கூடச் சொல்ல வரவில்லை. பல ஊர்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ், அதில் இருந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பல பஸ் முதலாளிகளும் பணக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.)

சினிமா நடிகர்களுக்கும் நடிகையர்களுக்கும் இந்த பிம்பம் ஏற்கெனவே தயாராக, கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அவர்களைத் திரையிலும் விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் பார்த்துப் பார்த்து அவர்களைக் குடும்பத்தில் ஒருவராக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த பிம்பத்தை அவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஒரு தொகுதியில் யாரோ ஒரு குப்புசாமி நிற்பதற்கும் ஒரு நடிகர் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இது சமமற்ற போட்டி. நடிகர் ஏற்கெனவே முக்கால்வாசி தூரம் ஓடி வெல்லும் நிலையில் இருக்கிறார். எதிர்ப்பவரோ ஆரம்பத்திலிருந்து ஓடியாக வேண்டும். எனவே நடிகர்கள் தங்களுக்கு உரியதல்லாத ஆதாயத்தை அடைகிறார்கள். அது அவர்கள் தொழிலினால் கிடைத்தது. ஒரு எழுத்தருக்கோ விவசாயிக்கோ அதிகாரிக்கோ தொழில்ரீதியாகக் கிடைக்காத விளம்பரம் திரைப்படத் துறையில் கிடைக்கிறது. திரைப்படமும் ஒரு தொழில்தானே? இப்படிப்பட்ட முன் தயாரித்த விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொள்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.

மறுபடியும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு கேவலம் இருக்கிறது. இது நடிக நடிகையர்களுக்குத் திரைப்படத் துறையில் அளிக்கின்ற பட்டம். இதை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதே நமக்குத் தெரிவதில்லை (மக்கள் எந்தப் பொதுக் கூட்டத்திலும் அல்லது அமைப்பிலும் வழங்கியதில்லை). எந்தப் புரட்சியையும் பார்க்காமலே, பங்கேற்காமலே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எந்த இராணுவத்தையும் கண்ணாலும் காணாமலே தளபதி, இளைய தளபதி, கேப்டன் போன்ற பட்டங்கள். இவையெல்லாம் நடிகர்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்குகின்றன. மேலும் காமிரா என்பது ஒரு பொய் சொல்லும் கருவி என்பதையே அறியாத மக்களுக்கு சினிமாவில் முன் வைக்கப்பட்ட கருத்தெல்லாம் உண்மை என்று தோன்றுகிறது. சில பெயர்கள்கூட பிம்பத்தை உருவாக்குகின்றன. ஒரு நடிகர் திருச்சிக்குத் தான் படித்த கல்லூரிக்கு வந்தபோது மாவீரன் என்ற அடைமொழியோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சரித்திரப் பெயருக்குரியவர் மாவீரன்தான். ஆனால், அந்தப் பெயரை உடைய நடிகரும் மாவீரன் ஆகிவிடுவாரா?

இது தமிழகத்தில் மட்டுமே உள்ள கேவலம். பிற நாடுகளில் ரீகன் ரீகன்தான். ராஜ்கபூர் ராஜ்கபூர்தான். மாவீரன் ரீகனோ புரட்சிச் சிங்கம் ராஜ்கபூரோ அல்ல. ஒரே விதிவிலக்கு ஆந்திராதான். அங்கேதான் கிருஷ்ணபகவானாகவும் இராமனாகவும் நடித்த என்.டி.ஆரின் பிம்பத்தை நிஜவாழ்க்ககையிலும் நம்பி வணங்கி ஓட்டுப்போட்டனர். உண்மையில் எந்தக் கடவுளாவது வந்து தேர்தலில் நிற்க முடியுமா என்ற சிறிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லை.

இது அவரவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. என்டிஆருக்குப் பிறகு அவருடைய மகனும் அரசியலில் தந்தையின் பிம்பத்திலேயே வெற்றிபெற்று விட முடியும். எம்ஜிஆருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள்கூட ஆட்சிசெய்யமுடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிக நடிகையர் அவர்கள் துறையில்- நடிப்பில்-வேண்டுமானால் திறன் உடையவர்களாக இருக்கலாம் (இதையும் உறுதிப்படச் சொல்லமுடியாது). ஆளுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட சினிமாக் காட்சிகளில் தவிர, நிஜமாகவே சமூகத்தைப் பற்றிய அக்கறையை எங்கேயாவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா? சமூகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்ன? எந்தச் சமூகப் போராட்டத்திலாவது ஈடுபட்டார்களா என்பது பற்றியெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.


ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

Catch22

ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

இது ஒரு அமெரிக்க நாவல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருக்கும். என் நண்பர் ராஜன் குறை ஒரு நாள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். படித்துப்பாருங்கள், ரொம்ப நல்ல புத்தகம் என்றார். ஆனால் அப்போது ஏதோ வேலைகள். ஏறத்தாழப் பத்துநாட்கள் கழித்து அவரிடம் படிக்காமலே திரும்பக் கொடுத்தபோது என்னை மிகவும் கேவலமாகப் பார்த்தார். சரி, சமயம் வாய்க்கும்போது படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். சில ஆண்டுகள் கழித்துத்தான் படிக்கமுடிந்தது.
மிகச் சிறப்பான சமூக அங்கதம், நையாண்டி, கேலி. கதையின் சூழல்கள் மிகவும் அபத்தமான நிலைகளுக்கும் மிகமோசமான துன்பியல் நிலைகளுக்கும் இடையில் ஊடாடுகின்றன. கதையைச் சொல்பவன், யோசேரியன் என்ற விமானப்படைக் கேப்டன்.
கேட்ச்-22ஐத் தமிழில் தர்மசங்கடம் என்று சொல்லலாம். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்று சிலசமயம் நமக்குத் தோன்றும், ஆனால் அதைச் செய்யவே முடியாதவாறு அந்த அபத்தமான சூழல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையை கேட்ச்-22 எனலாம். உதாரணமாக, நான் அடிக்கடி என் கண்ணாடியைத் தொலைத்துவிடுவேன். அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போது தான் அடுத்தவரி படிக்கவோ எழுதவோ முடியும். ஆனால் அதைத் தேடுவதற்கே கண்ணாடி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால் தேடுவதற்குக் கண் தெரியாது. என்ன செய்வது? இது ஒரு கேட்ச்-22 சூழல் எனலாமா?
இந்த நாவலின் அபத்தமும் அப்படித்தான். அந்த படைத் தளபதி, தன் வீரர்களை மேலும் மேலும் மோசமான போர்ச்சூழல் பறத்தல்களில் ஈடுபடுத்துகிறார். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தான் ஒரு பைத்தியம் என்று நம்பவைத்துவிட்டால் இராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். ஆனால் ஒரு பைத்தியம் என்று ஒருவன் விண்ணப்பிக்கும் செயலே அவன் பைத்தியம் அல்ல என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவன் விடுவிக்கப்பட மாட்டான். மாறாக மேலும் மேலும் போரில் ஈடுபடுத்தப்படுவான்.
ஏறத்தாழ காஃப்காவின் கதைத் தன்மைகளைக் கொண்ட நாவல். நம் காலத்தின் அதிகாரஆட்சியின் மிகமோசமான குணங்களை இந்த நாவல்போல் எதுவும் விமரிசனம் செய்ததே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இதைத் தயவுசெய்து படித்துப்பாருங்களேன். இம்மாதிரி தீர்க்கமாகச் சமகால விஷயங்களை விமரிசனம் செய்கின்ற நாவல் எதுவும் தமிழில் வெளிவரவில்லையே என்பது என் மனக்குறை.


இதென்னய்யா, ஜுஜுபி மேட்டர்…

chennai-dialects
மொழியில் ஆர்வம் கொண்டவன் என்ற முறையில் சென்னைத் தமிழ் எனக்கு மிகுந்த சுவையைத் தருகிறது. பலர் அதை இழித்தும் பழித்தும் பேசியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷைக்கென்றே சில பக்கங்கள், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது வியப்பாக இல்லையா?

மொழிகள் எவ்வாறெல்லாம் கலப்பு அடைகின்றன என்பதை ஆராய்பவர்களுக்குச் சென்னைத் தமிழ் ஒரு வரப்பிரசாதம். பம்பாயில்-குறிப்பாக பாலிவுட் (இதுவே தனிச் சிறப்புள்ள ஒரு சொல்தான்) பகுதியில் பேசப்படும் மொழி பம்பையா என்றே அழைக்கப்படுகிறது. அதுபோல மீன் பிடிப்பவர்களும் ரிக்க்ஷாக்காரர்களும் நிறைந்த வடக்குச் சென்னைச் சேரிமொழி சென்னைத் தமிழ் (மெட்ராஸ் பாஷை) என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
(குறிப்பு 1: சேரி என்பதைக் கீழ்ச்சாதி மக்கள் தங்கியிருக்கும் இடம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை-சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம் என்று அர்த்தம். பழந்தமிழில் பார்ப்பனச் சேரி போன்ற சொற்கள் புழங்கியுள்ளன. புதிய சேர்ந்து வாழும் இடமாக அமைக்கப்பட்ட பகுதி புதுச்சேரி எனப்பட்டது. இப்படித் தமிழகத்தில் பல சேரிகளைப் பார்க்கலாம். மலையாளத்தில் இது ஸேரி (வடஸேரி, செங்கணாஸேரி… என்று புழங்குகிறது.)
(குறிப்பு 2: இம்மாதிரிச் சொற்கள் காலப்போக்கில் இழிவான அர்த்தத்தைப் பெறுவதை மொழி வரலாற்றாசிரியர்கள் இழிபொருளாக்கம் என்கிறார்கள். உதாரணமாக சேரி என்ற சொல். நல்ல அர்த்தத்தைப் பழங்காலத்தில் பெற்றி ருந்த இந்தச் சொல் இப்போது இழிவழக்காக ஆகிவிட்டது. அதேபோலத்தான் நாற்றம் என்ற சொல். நாற்றம் என்றால் பழந்தமிழில் நறுமணம். இப்போது துர் நாற்றம்தான்! சென்னை மொழியில் கப்பு. இன்றைய தமிழில் நாற்றம் மிகுந்த நங்கையின் கூந்தல் என்று வருணிக்க முடியுமா, பாருங்கள்!)
நமது தொலைக்காட்சிகள், திரைப்படங்களும் சென்னை மொழியைப் பிரபலப் படுத்துகின்றன. உதாரணமாக, இது “ஜுஜுபி மேட்டர்பா” என்பார்கள். இதென்ன ஜுஜுபி? சின்ன விஷயம் என்று பெரும்பாலும் இது பொருள்படுகிறது, ஆனால், அதற்கு மேலும் இருக்கிறது.
கொஞ்சநாளைக்கு முன்னால் ஒரு வடநாட்டு மருத்துவப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சி வைட்டமின் அதிகமாகத் தேவை, நிறைய பழங்கள் தரவேண்டும் என்று சொல்லி, தரவேண்டிய பழங்களில் ஒன்றாக ஜுஜுபி பழம் என்பதைக் குறிப்பிட்டிருந்தது. ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு. உடனே அர்த்தத்தைத் தேடத் தொடங்கினேன். ஜுஜுபி என்றால் இலந்தைப் பழம்.

ஒரு விஷயத்தை இலந்தைப் பழ மேட்டர் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் தான் என்ன? எனக்கு உடனே பணமா பாசமா என்ற பழைய திரைப்படத்தில் வரும் “எலந்தப் பயம், எலந்தப் பயம்…செக்கச் செவந்த பயம்…இது தேனாட்டம் இனிக்கும் பயம்” என்ற ‘அற்புதமான தேனிசைத் தமிழ்ப்பாடல்’ (சொற்கள் எனது என்று யாரும் தயவு செய்து சண்டைபோட வேண்டாம், கலைஞர், ராஜ், மெகா தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பயன்படுத்தியவை) நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இரட்டை அர்த்தம் தொனிப்பது. ஜுஜுபி மேட்டர்பா என்று ஒருத்தர் சொல்வதில் அந்த விஷயத்தின் சின்னத்தனம், சின்னத்தனம் (சின்னமாக இருக்கும் தன்மை) இரண்டுமே வெளிவருகின்றன என்பதுதான் முக்கியம்.
ஜுஜுபி என்ற சொல் கிரேக்கச் சொல்லாம். zizuphus என்ற சொல்தான் ஜுஜுபியாகத் திரிந்தது என்று சொல்கிறார்கள். அந்தக் கிரேக்கச் சொல்லுக்கும் இலந்தைப் பழம் என்றுதான் அர்த்தம்.
இதேபோல ஒருவர் ‘கில்மா மேட்டர்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெண் தன் காதலனோடு உல்லாசமாக இருந்திருக்கிறாள். அதைத்தான் அவர் கில்மா மேட்டர் என்றார். விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷை என்பதைப் பற்றிய பதிவு, ‘அது சுத்தமான தமிழ்ச் சொல்’ என்று பறைகிறது. கில்மா என்று பெண்கள் இப்போது பெயர் வைத்துக்கொள்கிறார்கள். கில்மா என்று பெயர்கொண்ட-திரைப்படத்தைப் பற்றிய-சில இணையதளங்களும் இருப்பதாக அறிகிறேன். ஆகவே கில்மா என்றால் சினிமா என்றுதான் நான் நினைத்திருந் தேன். இன்னொரு இணைய தளம், அதுவும் பெண்ணைக் குறிக்கும் கிரேக்கச் சொல் என்று தெரிவிக்கிறது. Gilma is a Greek feminine name which means, “A beautiful young woman, dedicated and full of life.” சென்னை மொழியிலும் அது பெண்ணைப் பற்றிய விஷயம்தான்-ஆனால் மோசமான விஷயத்தை மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள் என்பது அதன் பிரயோகத்திலிருந்து தெரியவருகிறது.

பலபேர் சொல்திரிபுகளையும் மெட்ராஷ் பாஷையில் அடக்குகிறார்கள். அது எனக்கு உடன்பாடல்ல. அது கிளைமொழி உச்சரிப்பு பற்றிய ஆய்வில் வரவேண்டியது. உதாரணமாக, ‘வீட்டருகில்’ என்று சென்னைவாசிகள் சொல்லமாட்டார்கள். ‘ஊட்டாண்ட’ என்பார்கள். (மறுபடியும் ஓர் அருந்தமிழ்ப் பாடல்-”வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்”). வீடு என்ற சொல், ‘வ’கரம் உதடு ஒட்டும் எழுத்தாக இருப்பதால் இன உதடு ஒட்டும் எழுத்தான ‘உ’ஆகிறது. அதனால் வீடு, ஊடு (அல்லது வூடு) ஆகிறது. வூடு+அண்(¬)ட=
வூட்டாண்ட. வீடு, அண்டை இரண்டுமே தூய தமிழ்ச் சொற்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
கடைசியாக ஒரு குறிப்பு. சிலபேர், ஒரு சமுதாயத்திலுள்ள உயர்ந்த விஷயங்க ளைப் பேசுவது மட்டுமே கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சமுதாயத்திலும் நன்மையும், தீமையும் உண்டு. எல்லாவற்றையுமே பேசுவதுதான் நிஜமான பண்பாடு. பைபிளில் அந்தக் காலத்திலேயே கே ((gay -ஓரினச் சேர்க்கையாளர்கள்) ஆசாமிகள் இருந்ததையும் அதுமட்டும் மிஞ்சிப்போனதனால் அந்த ஊரே அழிக்கப்பட்டதையும் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்தது, அக்கால யதார்த்தம். அவர்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுவது பின்வந்தோருடைய மன ஆறுதலுக்கான தீர்ப்பு.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 6

aa
கேள்வி: துரை என்பது தமிழ்ச்சொல்லா? மக்கள் எந்தக் காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்?

பதில்:
 துரை என்ற சொல்லின் மூலம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல் ஐரோப்பியர்கள் நம் நாட்டில் வந்தபிறகுதான் புழக்கத்திற்கு வந்தது. மேலானவர், பதவியில் உயர்ந்தவர் என்ற பொருளில் பொதுவாக ஆங்கிலேயர்களையும், குறிப்பாக அதிகாரிகளையும் துரை என்று அழைப்பது பழக்கமாக இருந்தது. பிறகு அது மக்களின் சிறப்புப் பெயராகவும் காலப்போக்கில் (துரை, துரையரசன், துரைராஜ், பெரியதுரை, தருமதுரை, தம்பிதுரை என்பவை போல) மாறிவிட்டது. இந்தப் பெயர்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு காணமுடியவில்லை.
கேள்வி: ஆன்மிகத்தில் அத்வைதம், துவைதம் என்று கூறுகிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
பதில்: 
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பவை நம் இந்தியத் தத்துவத்தில் வழங்கும் சொற்கள். ஆன்மிகம் வேறு, தத்துவம் வேறு என்பது என் கருத்து. இந்த மூன்று தத்துவங்களுமே தென்னாட்டில் ஏற்பட்டவை. அத்வைதக் கொள்கையை உருவாக்கியவர் ஆதிசங்கரர். அவர் பிறந்த இடம் இன்று கேரளாவில் உள்ள காலடி என்ற ஊர் (அக்காலத்தில்-கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அது தமிழகம்). விசிஷ்டாத் வைதக் கொள்கையை உருவாக்கிய இராமாநுஜர் திருப்பெரும்புதூரைச் சேர்ந்தவர். துவைதக் கொள்கையை உருவாக்கிய மத்வர், உடுப்பியைச் சேர்ந்தவர்.
அத்வைதம் என்பது ஒருமைக் கொள்கை ((monism). அ+த்வைதம். இரண்டு அல்லாதது, ஒன்று, என்பது பொருள். த்வைதம் என்பது இருமைக் கொள்கை (dualism). சுருக்கமா கச் சொல்வதானால், பழங்காலத்தில் ஆன்மாவும் (அதாவது உயிர்களும்) இறைவனும் (தத்துவச் சொல்லாடலில் பிரம்மம்) ஒன்றா, வெவ்வேறா-குறிப்பாக ஜீவன்கள் முக்தி அடைந்தபின் இறைநிலை அடைகின்றனவா, அல்லது இறைவனுக்கு வேறான நிலை யில் உள்ளனவா என்ற கேள்வி பற்றி யோசித்ததன் விளைவு இவை. இறைவனும் ஆன்மாக்களும் வெவ்வேறு அல்ல (இறைவன் பரமாத்மா, மனிதன் ஜீவாத்மா) என்பது அத்வைதம். இவை வெவ்வேறானவை (ஒன்றல்ல, இரண்டுதான்) என்பது துவைதம். மேற்குநாட்டிலும் ஒருமைக்கொள்கை, இருமைக் கொள்கை உண்டு. spirit and matter இவை ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி அது.

கேள்வி: பார்ப்பன வெறுப்பு தமிழ்நாட்டில் ஏன் ஏற்பட்டது? – சதாசிவம், பெங்களூர்

இந்தக் கேள்வி தவறு. பார்ப்பன வெறுப்பு ஏற்படவில்லை, பார்ப்பனிய வெறுப்புதான் ஏற்பட்டது. பார்ப்பனியம் என்பது ஒரு தத்துவம், கொள்கை. அதைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லாச் சாதியினருமே கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவராகப் பிறந்தும், வாழ்க்கையில் முன்னேறிவிட்ட பிறகு இன்றைய பார்ப்பனர்களைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சாதி மக்களையே இழிவாக நோக்கும் தலித்துகளும் பார்ப்பனியத்தில் திளைப்பவர்கள்தான். பார்ப்பனர்களைப்போலவே தங்களுக்குக் கீழுள்ளவர்களை இழிவாக நினைக்கின்ற வேளாளர்கள் போன்ற சாதியினரும் பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள்தான்.
எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் மேல்-கீழ், உயர்ந்த-தாழ்ந்த என்ற வேறு பாடு இல்லையா என்று பலர் கேட்கிறார்கள். பிற மதங்களில் இல்லையா என்ற கேள் வியையும் எழுப்புகிறார்கள். இதற்கு விடை எளியது. பிற நாடுகளிலும், பிற மதங்களி லும், ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது பிறப்பினால் ஏற்படுகிறது என்றும் அப்படிக் கடவுள் (பிரம்மா) எழுதிவைத்தார் என்றும் நியாயப் படுத்துவது இந்து மதத்தில் மட்டுமே நிகழ்கிறது. இதுதான் பார்ப்பனியம். இப்படிப் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு உண்டு என்றால் இந்த மதத்தில் இருப்பதற்கு நாம் வெட்கப்படுகிறோம்.


தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை

Music-e1339701935618-1024x707
திரைப்படப் பாடல்கள் எல்லாம் கவிதை என்று எத்தனையோ பேர்-கல்லூரிப் பேராசிரியர்கள், நன்கு கற்றவர்கள் உள்பட-நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள்மேல் தப்பில்லை. காலம் காலமாக நாம் இலக்கியத்தை-செய்யுள் வடிவில் எழுதப்பட்டதை எல்லாம் பாடல் என்றே சொல்லி வந்திருக்கிறோம். உதாரணமாக “இந்தச் சங்கப்பாடல் கடினமாக இருக்கிறது” என்போம்.

ஆனால் பாடல் வேறு, கவிதை வேறு. இது காலம்காலமாக-நான் ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் கருத்து. அது மட்டுமல்ல, செய்யுள் என்பதும் வேறுதான். ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகள் முன்னால் இந்தப் பிரிவுகளுக்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலக் கல்வி வளர்ந்து, ஆங்கில முறையைப் பின்பற்றி நாம் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றெல்லாம் ஆளத்தொடங்கிய பிறகு, முன்புபோலப் பேசினால் அர்த்தமில்லை.

முதலில் செய்யுள் என்ற சொல். இதை நாம் உடன்பாடாகவோ (பாசிடிவாகவோ), எதிர்மறையாகவோ (நெகடிவாகவோ) எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் என்றால் செய்யப்பட்ட ஒன்று என்று அர்த்தம். அது கவிதையாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம், புதுக்கவிதையாகவும்கூட இருக்கலாம். ஆனால் பொதுவழக்கின்படி, யாப்பின்படி அமைந்த, கவிதையாகாமல் போய்விட்ட ஒன்றிற்குத்தான் செய்யுள் என்று பெயர்.

அண்ணன்  என்பவன்  தம்பிக்கு  மூத்தவன்

திண்ணை  என்பது தெருவிலே  உள்ளது

கண்ணன்  என்பவன்  கண்ணிரண்டு  உள்ளவன்

வெண்ணெய்  என்பது  பாலினில்  விளைவதே.

இது செய்யுள் என்பதற்கு பேராசிரியர் கைலாசபதி தந்த எடுத்துக்காட்டு. இதில் யாப்பு மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்று நமது நண்பர்கள் கருதமாட்டார்கள் என்பது நிச்சயம்!

கவிதை என்பது ஓர் அனுபவத்தை மனத்திற்குள் விதைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒன்று. அது யாப்பில் அமைந்திருக்கலாம், யாப்பில் இல்லாமலும் இருக்கலாம். யாப்பில் இல்லாததைப் புதுக்கவிதை என்றும் மற்றதை மரபுக் கவிதை என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மிகச் சிறிய கவிதை இதோ-

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.

வருகிறோம்-போகிறோம் என்ற இருமை எதிர்வையும், இருப்பதற்கென்றுதான்-இல்லாமல் என்ற முரண்பாட்டையும் பாருங்கள். எவ்வளவு அற்புதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறது!

இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது பாட்டு. பாட்டு, இசை என்ற கைத்தடி இல்லாமல் நடக்கமுடியாது. ஸ்வரம் மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்வரங்களால் ஆன ராகத்தைப் பாட்டு கொண்டிருக்கவேண்டும், லயம் என்ற தாளத்திற்கேற்ப அது நடக்கவேண்டும்-அதாவது பாடப்பட வேண்டும்.

கவிதை பாடப்படவேண்டிய அவசியம் இல்லாதது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் கவிதையை-இது நிச்சயம் கவிதை-எந்த ராகத்தில் பாடுவது? பாடுவதுதான் தேவையா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கக்கவிதையை எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் பாடுவது? இவற்றைப் படித்து அனுபவிப்பது, உணர்வதுதான் முக்கியம்.

திரைப்படப் பாடல்கள் எல்லாம் பாட்டுகள்தான். பாட்டுகளில் வார்த்தை இல்லாத இடத்தை லாலாலாலா, ராராரீரீ, டபக் டபக்கு டபக்குதான், சிங்கிரி சிச்சான் சிச்சான் ங்ங்கொய்யா என்று எதையாவது போட்டு நிரப்பிவிடுவார்கள். பழைய பாகவதர்கள் என்றால் ஆலாபனையிலேயே இழுத்துவிடுவார்கள். ஆக, இசைக்காக, தாளத்துக்காக எழுதப்பட்டதைப் பாட்டு என்கிறோம். பழைய காலத் திலேயே ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆளுங்கோ ரவுண்டானா அசந்துட்டா டஹல்தானா என்று திரைப்படப் பாட்டு எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையதாஸ்.

ஆகவே பாட்டு வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்று தெரிந்து கொள்வது நல்லது. பாட்டு எழுதுபவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. லிரிசிஸ்டு என்பார்கள் ஆங்கிலத்தில். பொயட் என்று அந்தஸ்து தரமாட்டார்கள். நம் ஊரில்தான் பாட்டு எழுதுபவன் எல்லாருமே கவிஞன் என்று போட்டுக்கொள்கிறான்.

நாம் இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களுடனே வாழ்ந்து திரைப் படப் பாடல்களுடனே சாகிறோம். குழந்தை பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே சினிமாப்பாடல் பழக்கமாகிவிடுகிறது.

பாட்டு கவிதை இல்லை என்று சொன்னதால் கெட்டது என்று அர்த்த மில்லை. நம் திருவையாற்றில், பிறகு சென்னையில் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய சங்கீதத் திருவிழா நடத்துகிறார்களே, எதற்கு? எல்லாம் தியாகராஜ சுவாமிகள் செய்த தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு (பாடல்களுக்கு)த்தான்.

அப்பர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி, வள்ளலார் வரைக்கும் இறைவன்மீது பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வள்ளலார் கீர்த்தனைகளும் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதி தாசன் இசையமுது இயற்றியிருக்கிறார். இவையெல்லாம் நல்ல பாட்டுகள் (அதாவது ஏதோ ஒரு இலட்சியத்தைக் கொண்டு அமைந்த பாடல்கள்) என்று சொல்லலாம். இலட்சியமில்லாத பாட்டுகளையும், பாட்டு எழுதுபவன் வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத பாட்டுகளையும் நான் மோசமான பாட்டுகள் என்பேன்.

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஆகா, என்ன அற்புதமான வரிகள், எவ்வளவு அற்புதமான கருத்து என்று பாராட்டத் தொடங்கிவிடுவீர்களே? இதை எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியும்.

இது உண்மையான, இலட்சியப் பாட்டு என்றால், அந்தப் பாடலாசிரிய ருக்கு வானம் என்ற போதிமரம் நாளும் தந்த சேதி என்ன? கோடிகோடியாகக் குவித்துக்கொள், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதா? இந்த ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள், நன்றாக இவர்களை எந்த உருவகத்தையாவது போட்டு ஏமாற்று என்பதா? அதனால்தான் இதுபோன்றவற்றைப் போலிப்பாட்டுகள், ஏமாற்றுப் பாட்டுகள், வணிகப்பாட்டுகள் என்கிறோம். அந்த நேரக் கவர்ச்சிதான் இதற்கெல் லாம் முக்கியம். அதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் மிக முக்கியமான குணம், பெண்    அடிமைத்தனத்தை உருவாக்குவது. சிறு குழந்தை முதலாகவே திரைப்படப் பாடல்கள் மனத்தில் நம்மை அறியாமல் பதிந்து நம்மை ஆட்சிசெய்துகொண்டே இருப்பதால், பெண் அடிமைத்தனம்-அதாவது பெண்களை அடிமைகளாக நினைப்பது, இரண்டாந்தர மனிதர்களாக நினைப்பது என்ற பண்பு ஆண்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பெண்களுக்குத் தங்கள் அடிமைத்தனத்தை இது இயல்பானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

இதற்கு விதிவிலக்கான திரைப்படப்பாடல்கள் மிகக் குறைவு. ஒரு சதவீதம் தேறுவதுகூடக் கடினம். உதாரணத்திற்கு சில பாடல்களை நாம் பார்க்கலாம். நான் எங்கள் காலத்திலிருந்து (ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) எங்களை பாதித்த-நல்ல இனிமையான பாடல்கள் என்று கருதப்பட்டவற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

1968இல் வெளிவந்த ஒரு பாட்டு-நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்….என்று செல்வது. உங்களில் பலபேருக்குத் தெரியும் இது.

பலபேர் இது ஒரு நல்ல காதல்பாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு காதலன் தன் காதலியைக் கேள்வி கேட்பது போலவும், காதலி அதற்கு விடை சொல்வதுபோலவும் அமைந்திருக்கிறது. காதலன் கேட்கிறான்-

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளைகொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார்?

(இதையெல்லாம் இந்தக் காதலனே செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம், இது மரபாம்.) அந்தக் காவியக் காதலி அவ்வளவு சுரணை உள்ளவள் அல்ல. அவள் சற்றும் கோபமில்லாமல் சொல்கிறாள்-

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்கிறாள். உண்மை கூறவாம், நினைத்துப்பாருங்கள், எவ்வளவு மோசம் என்று.

இன்னும் பழங்காலப் பாட்டு ஒன்று.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

பெண்ணுக்குச் சிந்திப்பதற்கும் தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிமை கொஞ்சம்கூட இல்லையா?

முதல்வராய் இருந்த ஒரு நடிகரின் பாட்டுகளில் பெண் அடிமைத்தனம் மிகப் பச்சையாகவே இருக்கும். ஒரு திரைப்படத்தில் வரும் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே-இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே” என்ற பாட்டைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். அல்லது “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாட்டைக் கேட்டுப்பாருங்கள். இதில் புரட்டிப்பார்ப்பது, பள்ளியறை என்ற சிலேடை (இரண்டு அர்த்தம் தொனிக்கும் சொற்கள்) வேறு.

இப்படி புத்தகம், கித்தகம் என்ற நல்ல சொற்கள்கூட இல்லாமல்போய், இப்போது சினிமாப் பாட்டுகளில் பெண்ணைக் கட்டையாக்கி, ஃபிகர் ஆக்கிவிட்டார்கள். சற்றும் கூச்சமில்லாமல் நாட்டுக்கட்டே நாட்டுக்கட்டே என்று பெண்ணை விளிக்கிறான் ஆண். பெண்ணும் சற்றும் தயக்கமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். போய் உண்மையாகவே கிராமத்தில் விளித்துப்பாருங்கள். விளைவு என்னவென்று தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பொது இடத்தில்- ஏற்றுக்கொள்ளும், பாடும் மனம்-திருவிழாவில் ரிகார்டு போடும் மனப்பான்மை எப்படி உண் டாயிற்று? அதுதான் ஈவ்டீசிங் முதலிய கொடுமைகளுக்குக் காரணம். இப்படிப் பாடல் எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.


சுயநல அரக்கன் (சிறுகதை)

ஆஸ்கார் ஒயில்டு  –  தமிழில் க.பூரணச்சந்திரன்

garden
(சிறந்த கூர்மதியாளர். ஆஸ்கார் ஒயில்டு, டப்ளின் நகரில் 1854இல் பிறந்தார். நாவல்கள், கட்டுரைகள் முதலியன தவிர Importance of being Earnest போன்ற நாடகங்களை எழுதினார். சிறுவர்களுக்காக Happy Prince போன்ற சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு சிறுகதை)

ஒவ்வொரு நாள் மாலையிலும், பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது சிறுவர்கள் அந்த அரக்கனின் தோட்டத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம்.

மென்மையான பசும்புல் தரைகொண்ட பெரிய அழகான தோட்டம். ஆங்காங்கு புற்களின் மத்தியில் நட்சத்திரங்கள் போல் சிறிய பூக்கள். பன்னிரண்டு பீச் மரங்கள். வசந்த காலத்தில் இளஞ்சிவப்பிலும் முத்துநிறத்திலும் பூக்கும். இலையுதிர்காலத்தில் பழங்கள் நிறைந்திருக்கும். மரங்களில் பறவைகள் அமர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டையும் நிறுத்திவிட்டு அந்தப் பாட்டுகளைக் கேட்பார்கள். “ஆஹா, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் அரக்கன் திரும்பிவந்தான். தனது நண்பனான கார்னிஷ் ராட்சஸ னைப் பார்க்கச் சென்றிருந்தான் அவன். அப்படியே ஏழாண்டுகள் அவனுடன் தங்கி விட்டான். ஏழாண்டுகளில் அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அவனது உரையாடுவது மிகக்குறைவு. தனது மாளிகைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வந்தபோது தனது தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று சீறும் குரலில் கத்தினான். பிள்ளைகள் ஓடிப்போய்விட்டார்கள்.

“என் தோட்டம் எனக்கு மட்டும்தான்” என்றான் அரக்கன். “எல்லோருக்கும் இது புரியும். இதில் என்னைத் தவிர வேறு எவரும் விளையாட அனுமதிக்கமாட் டேன்” என்றான். அதைச் சுற்றி ஒரு உயர்ந்த சுவரை எழுப்பினான். ஒரு அறிவிப்புப் பலகையை அதில் தொங்கவிட்டான்.

அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

மிகவும் சுயநலம்பிடித்த அரக்கன்தான் அவன்.

பிள்ளைகளுக்கு இப்போது விளையாட வேறு இடம் இல்லை. தெருக்களில் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் அவை புழுதியாகவும் கூர்கற்களோடும் இருந்தன. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. தங்கள் பாடங்கள் முடிந்தபிறகு அந்தச் சுவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். உள்ளேயிருக்கும் அழகான தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள். “எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்” என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தம் வந்தது. நாடு முழுவதும் சிறிய மலர்களும் சிறிய பறவைகளும் தென் பட்டன. சுயநல அரக்கனின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. சிறுவர்கள் இல்லாததால் அதில் பறவைகள் சென்று பாட அக்கறைகொள்ளவில்லை. மரங்களும் பூக்க மறந்துவிட்டன. ஒருமுறை ஓர் அழகான பூ, புற்களுக்கு மத்தியிலிருந்து தலையை நீட்டியது. அறிவிப்புப் பலகையை அது பார்த்ததும் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் தரைக்குள் தூங்கப்போய்விட்டது. கடுங்குளிரும் உறைபனியும் மட்டுமே அங்கு சந்தோஷமாக இருந்தன. “வசந்தம் இந்தத் தோட்டத்தை மறந்து போய்விட்டது. எனவே இங்கே வருஷமுழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்” என்றன அவை. உறைபனி தன் பரந்த வெண்மையான போர்வையால் புற்களை மூடியது. கடுங்குளிர் எல்லா மரங்களையும் வெள்ளி நிறமாக்கியது. பிறகு அவை வாடைக்காற்றைத் தங்களோடிருக்குமாறு அழைத்தன. அதுவும் வந்தது. அது கம்பள மேலாடையை அணிந்திருந்தது. தோட்டத்தில் நாள் முழுவதும் சுற்றிக் கூச்சலிட்டது. புகைபோக்கிகளைக் கவிழ்த்தது. “மிகவும் சந்தோஷமான இடம்”. “நாம் ஆலங்கட்டி மழையையும் ஒரு சுற்று வந்துபோகச் சொல்லலாம்” என்றது. பனிக்கட்டி மழையும் வந்தது. தினசரி மாளிகையின் கூரையில் மூன்று மணிநேரம் அடிஅடி என்று அடித்தது. பெரும்பாலான பலகைகள் பெயர்ந்தே விட்டன. பிறகு அது தோட்டத்தில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சுற்றிச்சுற்றி ஓடியது. சாம்பல் நிற உடையை அணிந்திருந்தது அது. அதன்மூச்சே பனிக்கட்டிபோல் இருந்தது.

தன் ஜன்னலருகே அமர்ந்து குளிர்ந்த வெண்ணிறத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுயநல அரக்கன், “ஏன் வசந்தம் வர இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று புரியவில்லையே” என்று சொல்லிக்கொண்டான். “அன்றாடத் தட்பவெப்ப நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.”

ஆனால் வசந்தமும் வரவில்லை, கோடையும் வரவில்லை. இலையுதிர் காலம் எல்லாத் தோட்டங்களுக்கும் பொன்னிறக் கனிகளைக் கொடுத்துச் சென்றது, ஆனால் இந்தத் தோட்டத்தில் ஒன்றுமில்லை. “ரொம்பவும் சுயநலக்காரன்” என்று அது சொல்லியது. அதனால் எப்போதுமே அங்கு பனிக்காலமாக இருந்தது. வாடைக்காற்றும் ஆலங்கட்டி மழையும் வெண்பனியும் உறைபனியும் மரங்களினூடே சந்தோஷ தாண்டவம் புரிந்தன.

snow-landscapes-
ஒருநாள் காலை. அரக்கன் தன் படுக்கையில் கண்விழித்துப் படுத்திருந்தான். ஓர் இனிய இசை கேட்டது. அரசனின் சங்கீதக் குழுவினர் அந்த வழியாகச் செல்கிறார்கள் என்று நினைத்தான். கடைசியில், அவன் ஜன்னலுக்கருகில் பாடிய சிறு லின்னட் பறவைதான் அது. ஆனால் அவன் தன் தோட்டத்தில் பறவைகளின் பாடலையே கேட்டுப் பலகாலம் ஆனதால் அவனுக்கு உலகிலேயே மிகச் சிறந்த இசை அதுதான் என்று தோன்றியது. உடனே ஆலங்கட்டி மழை அங்கு நடனமிடுவதை நிறுத்தியது. வாடைக்காற்று ஓலமிடுவதை நிறுத்தியது. திறந்த ஜன்னலின் வழியே ஒரு இனிய வாசம் வந்தது. “கடைசியாக வசந்தம் வந்துவிட்டது” என்று நினைக்கிறேன் என்றான். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து வெளியே நோக்கினான்.

அவன் கண்ணுக்குத் தென்பட்டது என்ன?

மிக ஆச்சரியமான ஒரு காட்சி. சுவரிலிருந்த ஒரு சிறிய ஓட்டையின் வழியாகச் சிறார்கள்  உள்ளே வந்துவிட்டார்கள். மரக்கிளைகளின் மீது அவர் கள் உட்கார்ந்திருந்தார்கள். காணமுடிந்த ஒவ்வொரு மரத்தின் கிளையிலும் ஒரு குழந்தை. மரங்களுக்குத் திரும்பக் குழந்தைகள் வந்தது பெரும் சந்தோஷம். அவை தங்களைப் பூக்களால் அலங்கரித்துக் கொண்டன. தங்கள் கிளைகளைக் குழந்தைகளின் தலைகளைச் சுற்றி மென்மையாக வீசின. மகிழ்ச்சியோடு பறவைகள் சுற்றிப்பறந்து கூச்சலிட்டன. புற்களின் இடையே இருந்து சிறுபூக்கள் சிரித்தன. மிக அழகான காட்சி, ஆனால் ஒரு மூலையில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. தோட்டத்தின் தொலைதூர மூலை அது. அங்கே ஒரு சிறுபையன் நின்றிருந்தான். மிகச்சிறியவனாக இருந்ததால் மரத்தின்மீது அவனால் ஏறமுடியவில்லை. அழுதுகொண்டே அதைச் சுற்றிச்சுற்றி வந்தான். பாவம், அந்த மரத்தில் மட்டும் வெண்பனியும் உறைபனியும் தங்கியிருந்தன. வாடைக்காற்று அதைச் சுற்றி வீசி ஓலமிட்டது. “சின்னப் பையா, ஏறு” என்றது மரம். தன்னால் இயன்ற அளவு கிளைகளைத் தாழ்த்தியது. ஆனால் பையன் மிகச் சின்னவன்.

அதைப் பார்த்து அரக்கனின் உள்ளம் நெகிழ்ந்தது. “எவ்வளவு சுயநலத்தோடு இருந்துவிட்டேன்” என்றான். “ஏன் இங்கே வசந்தம் வரவில்லை என்று இப்போது புரிகிறது. அந்தப் பையனை மரத்தில் அமர்த்துவேன். சுவரை இடித்துத் தள்ளுவேன். இந்தத் தோட்டம் என்றைக்கும் என்றைக்குமாகப் பிள்ளைகளின் விளையாட்டுக் களமாக இருக்கும்.” தான் செய்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்தினான் அவன்.

கீழே இறங்கிவந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் அவனைப் பார்த்ததும் சிறுவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். மீண்டும் தோட்டத்தில் வாடைக்காலம்தான். அந்தச் சின்னஞ் சிறுவன் மட்டுமே ஓடவில்லை. அவன் கண்களில் நீர்நிறைந்து பார்வையை மறைத்திருந்தது. மெதுவாக அவன் பின்னால் சென்ற அரக்கன் கையில் மென்மையாக அவனைத் தூக்கி ஒரு கிளையில் அமரவைத்தான். மரம் உடனே பூத்துக்குலுங்கியது. பறவைகள் அதில் அமர்ந்து பாடின. சிறுவன் தன் இருகைகளையும் அரக்கனின் கழுத்தைச்சுற்றி வீசிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். அரக்கன் முன்போல் இல்லாததைக் கண்ட பிற சிறார்களும் திரும்ப ஓடிவந்தார்கள். அவர்களுடன் வசந்தமும் வந்தது. “சின்னப் பசங் களே, இனிமேல் இது உங்கள் தோட்டம்” என்றான் அரக்கன். பெரிய கடப்பாறை எடுத்துச் சுவரை இடித்துத் தள்ளினான். பகல் பன்னிரண்டு மணிக்கும், மக்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது, மிக அழகான தோட்டத்தில் அரக்கன் சிறுவர் களோடு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடினார்கள். இருட்டும் நேரத்தில் அரக்கனிடம் விடைசொல்லிக்கொண்டுபோகச் சிறுவர்கள் வந்தார்கள்.

“உங்கள் சின்னஞ்சிறு தோழன் எங்கே? நான் மரத்தில் ஏற்றி உட்கார வைத்தேனே, அவன்” தன்னை முத்தமிட்டதால் அந்தச் சிறுவனை அரக்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் அவர்கள். “அவன் போய்விட்டிருப்பான்.”

“நாளைக்கு நிச்சயமாக அவனை வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்றான் அரக்கன். ஆனால் பிள்ளைகளுக்கு அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவனை இதற்குமுன்னால் பார்த்ததும் கிடையாது. அரக்கனுக்கு வருத்தமாக இருந்தது.

ஒவ்வொரு மாலையும், பள்ளிக்கூடம் விட்டபிறகு, பிள்ளைகள் வந்து அரக்கனோடு விளையாடினார்கள். ஆனால் அரக்கன் நேசித்த அந்தச் சின்னஞ்சிறு வன் வரவேயில்லை. எல்லாச் சிறுவர்களுடனும் அரக்கன் மிக அன்பாக இருந்தான். என்றாலும் தன் முதல் தோழனுக்காக அவன் ஏங்கினான். அவனைப்பற்றி அடிக்கடி பேசினான். “அவனைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறிவந்தான்.

ஆண்டுகள் சென்றன. அரக்கனுக்குத் தள்ளாமல் போய்விட்டது. வலிமை குறைந்துவிட்டது. சுற்றிவிளையாட முடியவில்லை. பெரிய சாய்வுநாற்காலியில் அமர்ந்து சிறார்கள் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். தனது தோட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டான். “என்னைச்சுற்றி அழகான பூக்கள் பல இருக்கின்றன. ஆனால் சிறுவர்கள்தான் மிக அழகான பூக்கள்.”

ஒரு பனிக்காலத்தில் காலை எழுந்து உடை உடுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னனலின் வழியே பார்த்தான். இப்போது அவனுக்குப் பனிக்காலம் என்றால் வெறுப்பு இல்லை. வசந்தம் ஓய்வெடுக்கும் காலம் அது, அவ்வளவுதான். பூக்களும் ஓய்வெடுக்கின்றன.

திடீரெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான், மறுபடி பார்த்தான். மிக ஆச்சரியகரமான காட்சிதான் அது. தூரத்து மூலையில் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பூத்துக்குலுங்கியது. அதன் கிளைகள் பொன்னிறம். வெண்நிறப் பழங்கள் அவற்றிலிருந்து தொங்கின. அவன் நேசித்த சின்னஞ்சிறுவன் அதன்கீழ் நின்றுகொண்டிருந்தான்.

பெரும் சந்தோஷம் கவிய, அரக்கன் படிகளில் இறங்கி தோட்டத்திற்குள் புல்தரையில் விரைந்து ஓடினான். சிறுவன் அருகில் சென்றான். மிகநெருக்கத்தில் வந்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. “உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆணிகள் குத்திய காயங்கள். அதேபோல் இரு பாதங்களிலும்.

“உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” கத்தினான் அரக்கன். “சொல். என் பெரிய வாளை எடுத்துச் சென்று அவனைக் கொன்றுபோடுகிறேன்.”

“இல்லை” என்றான் குழந்தை. “இவை அன்பின் காயங்கள்.”

“யார் நீ?” என்றான் அரக்கன். ஒரு விசித்திரமான பயம் அவனுக்குள் ஏற்பட்டது. குழந்தையின் முன்னால் மண்டியிட்டான்.

சிறுவன் அரக்கனைப் பார்த்து முறுவல் செய்தான். “ஒருசமயம் உன் தோட்டத்தில் என்னை விளையாட அனுமதித்தாய் நீ. இப்போது என்னுடன் என் தோட்டத்திற்கு- விண்ணுலகிற்கு நீ வா” என்றான்.

மாலையில் சிறுவர்கள் விளையாடத் தோட்டத்திற்குள் ஓடிவந்தபோது, அரக்க னின் உடல் அந்த மரத்தடியில் வெண்ணிறப் பூக்களின் போர்வையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.


சிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை

classroom
ஆதித்யா தொலைக்காட்சியில் ஒரு வேடிக்கை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அவர் தன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தில் “அரிசி எங்கிருந்து வருகிறது?” என்று கேட்கிறார். பல பேர்- சுமார் இருபத்தைந்து முப்பது வயது முதல் பதினைந்து வயதுப் பிள்ளைகள் வரை கூடியிருக்கிறார்கள்-அது தொழிற்சாலையில் செய்யப்படுகிறது, மரத்தில் காய்க்கிறது, என்பது மாதிரி பதில் சொல்கிறார்கள். (கொஞ்சம் பெரியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான் அது நெல்லிலிருந்து வருகிறது, நெல் பயிரிடப் படுகிறது என்ற மாதிரி சரியான பதில் சொல்கிறார்கள்.)

“பாரதியார் யார்?” என்று கேட்கிறார் நம் கேள்வியாளர். இந்தியாவின் ஜனாதி பதியாக இருந்தவர் என்று பதில் வருகிறது. நம் பிள்ளைகளின் கல்வியை அளவிட இந்த நிகழ்ச்சியை விடச் சரியான ஒரு அளவுகோல் கிடையாது. நம் கல்வி முறை பற்றித் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

ஏறத்தாழ ஆறாண்டுகள் பள்ளியிலும், முப்பத்திரண்டு ஆண்டுகள் கல்லூரி யிலும், ஓரிரண்டாண்டுகள் பல்கலைக்கழகத்திலும் என்று ஆசிரியப்பணி புரிந்ததன் காரணமாக இன்றைய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வித் திட்டம் போன்றவை பற்றி நன்றாகவே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை முன்னிட்டுச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, எனது ஆசிரிய வாழ்க்கையை மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறேன்.

இன்றைய கல்வி சமூகத்துக்கோ, தனிப்பட்ட மனித வாழ்க்கைக்கோ பயன் படுவதாக இல்லை. அறமதிப்புகள், வாழ்க்கை மதிப்புகள் போன்றவை பற்றி இன்றைய கல்விக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை. மனிதர்களைப் பிழைப்புக்குப் பாடுபடும் எந்திரங்களாக மாற்றவே இது உதவி செய்கிறது.

சின்னஞ்சிறுவர்களை திருச்சியைச் சேர்ந்த கிராமப்புறப் பகுதியில் ஒரு முறை கேள்வி கேட்டேன். (கொஞ்சம் செம்மைப்படுத்தியிருக்கிறேன்)

நீ என்ன ஆக விரும்புகிறாய்?

மருத்துவர் அல்லது பொறியாளராக.

எதற்காக?

நிறையப் பணம் சம்பாதிப்பதற்காக.

நிறையப் பணம் சம்பாதித்த பிறகு?

வசதியோடு சந்தோஷமாக இருப்பதற்காக.

பிறகு?

அவ்வளவுதான். அப்புறம் என்ன?

இந்தக் கூற்றுகளில் காணப்படும் சில உள் விவகாரங்களைப் பார்ப்பது அவசியம். அதெப்படி ஒருவனுக்கே மருத்துவனாகவும் பொறியியல் துறையில் செல்லவும் ஏற்புடைமை இருக்கும்? இரண்டுமே இல்லாமல் வேறு துறையில் செல்லும் பொருத்தப்பாடும் இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுடைய ஆளுமையும் ஒவ்வொரு விதமானது.

தனிப்பட்ட நோக்கில் பார்த்தால், ஆளுமையை உருவாக்குவதுதான் கல்வி. சமூக நோக்கில் பார்த்தால், சமூகத்தில் அமைதியாக வாழ்வதற்கு உதவுகின்ற அறமதிப்புகளை, அன்புமயமான மனப்பான்மையைத் தரவேண்டியது கல்வி. பிழைப்புக்கு வழிசெய்வது என்பது கல்வியின் ஏதோ ஒரு கூறு மட்டுமே.

உளவியலில் மனப்பாங்குகள், திறன்கள்  பற்றி நிறையப் பேசுவார்கள். ஏன் ஒருவன் தன் மனப்பாங்கிற்கும் திறமைக்கும் ஏற்ப ஓர் ஓவியனாகவோ கலைஞனாகவோ பத்திரிகைகாரனாகவோ விவசாயியாகவோ அறிவிய லாளனாகவோ தச்சனாகவோ ஆகக் கூடாது? சில சிறுவர்களுக்குக் கைவினைகளில் திறன் இருக்கலாம். சிலருக்கு அருவமான சிந்தனைத் திறன் இருக்கலாம். சிலருக்குப் பருமையான பொருட்களைச் செய்வதில் ஆர்வம் இருக்கலாம். எல்லாவற்றையும் புறக்கணித்து மனிதர்களை வெட்டிச் செதுக்கி மருத்துவராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதில் என்ன லாபம்?

இன்னும் அடிப்படையாக, எல்லாருமே பணம் சம்பாதிக்கும் வேலைகளில்(!) ஈடுபட்டுவிட்டால், உணவு எப்படி வரும்? நீர் எப்படிக் கிடைக்கும்? உணவின்றி எப்படி உயிர்வாழ முடியும்?

இவையெல்லாம் இன்றைய கல்வித்திட்டம் (curriculum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது) பாழாகிவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. (பாடத்திட்டம் (syllabus) என்பது வேறு. அது ஒவ்வொரு பாடத்திலும் என்ன படிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் செயல்.)

இன்று கற்பிக்கும் முறைகள் எப்படி இருக்கின்றன?  எப்படியாவது மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு ஒரு 1100 மதிப்பெண்ணாவது வாங்கிவிடவேண்டும். புரிந்து கொண்டு படிக்கத் தேவையில்லை. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடை எழுதி விட்டால போதும். அதற்கு நிறைய மனப்பாடம் செய்யவேண்டும். அதற்குப் பயிற்சி அளிக்க எத்தனையோ தனி வகுப்புகள்,  கற்பித்தல்  முறைகள். பழங்காலத்தில் பாடம் நடத்துதல், போதித்தல் (teaching) என்று சொல்வார்கள். இப்போது ‘teaching’ போய் ‘coaching’ வந்து விட்டது. ஒரு விளையாட்டு வீரனுக்கு, நடிகனுக்கு, சர்க்கஸ்காரனுக்குப் பயிற்சி அளிப்பதுபோல, பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் பிறகு கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் பயிற்சி (coaching).

ஒரு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நிலையைச் சிந்தித்தால் பாவமாக இருக்கிறது. காலையில் 6 முதல் 7 வரை வேதியியலில் பயிற்சி(tuition), 7 முதல் 8 வரை இயற்பியலில், காலை எட்டு முப்பதிலிருந்து மாலை ஐந்தரை வரை பள்ளியில் ‘Coaching’. மாலை 6 மணி முதல் 8 மணிவரை கணக்கு பயிற்சி. 8 முதல் 9 வரை உயிரியலில் பயிற்சி. வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்ற பிற பாடங்களைப் படிக்கத் தேவையில்லை. விளையாட்டு தேவையில்லை, உடற்பயிற்சி தேவையில்லை, உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டிய கல்விகள்- உணவு, சுகாதாரம் போன்றவை பற்றித் தேவையில்லை, அற மதிப்புகள் பற்றிய கல்வி தேவையில்லை.

our-education-system1
பாடத்தை நடத்துவதோ புரிந்துகொள்வதோ கிடையாது. மாதிரித் தேர்வுகள் எழுதி எழுதி என்ன கேள்வி தேர்வில் கேட்டாலும் எந்திரத்தனமாகச் சரியான விடையளிக்கும் ஒரு எந்திர மனிதனாக மாணவன் மாறிவிடவேண்டும். நிறைய மதிப்பெண் வாங்கவும் வசதியான வாழ்க்கை வாழவும் கனவு காணவேண்டும். அவற்றை வாங்கத் தயங்கினால், முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது நன்மையை மட்டும் சிந்தியுங்கள்( positive thinking) -”உன்னால் முடியும் தம்பி” என்ற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இருக்கவே இருக்கிறார்கள் அப்துல் கலாம் முதல் நித்யானந்தா வரையிலான போதகர்கள்.

இப்படிப்பட்ட கல்வி யாருக்குப் பயன்படுகிறது? பெரிய முதலாளிகளுக்கு. அவர்கள் கொள்ளையடிப்பதற்கு. அவர்கள் தூக்கி எறியும் எச்சில்களை இந்தக் கல்வி முறையில் படித்தவர்கள் பொறுக்கித் தின்பதற்கு. உலகத்தை அழிப்பதற்கு.

இப்படிப்பட்ட கல்வியின் விளைவுதான் மனிதத்தன்மையற்ற பெரிய தலைவர்கள்- மன்மோகன் சிங்குகள் உருவாகுவதற்கு வழிசெய்கிறது. வெளிநாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டை விலைபேசுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. நம் நாட்டு மக்கள் செத்தாலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழிவிட வேண்டும். அந்நிய முதலீடு வேண்டும். அதுதான் வளர்ச்சி. இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற கல்வி பெற்றதனால்தான் கூடங்குளம் போன்ற அணு உலைகளின் அபாயங்களைப் பற்றி நன்கறிந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வசதியான வாழ்க்கைக்கு கனவு காணச்சொல்லிச் சின்னஞ் சிறுவர்களைத் தூண்டுகிறார்.

ஆசிரியர்களும் இப்படிப்பட்ட பயனற்ற அறமதிப்புகளற்ற கல்விமுறைக்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். மாணவர்களுக்கு டியூஷன் நடத்திக், கொள்ளையடித்தது வரை லாபம் என்ற வியாபார மனப்பான்மைக்கு உட்பட்டுவிட்டார்கள்.

பழங்காலத்தைவிட இப்போது நன்றாகப் பாடம் நடத்தும் திறன் பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனிப்பயிற்சி நடத்தும் வாழ்க்கை முறைக்கு ஒருவகையில் தள்ளப்படுகிறார்கள். அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஓரளவு ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் ஐந்தாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம் வரைதான் ஊதியம். வேறு வேலை கிடைக்காதவன்தான் இந்த வேலைக்கு வரமுடியும்.

தேர்வு, அதற்கு வினாத்தாள் தயாரிக்கும் முறை, திருத்தும் முறை போன்றவையும் சீர்கெட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துவதற்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் பணி கேவலமானது. ஒரு நாளுக்கு ஒருவர் முப்பது விடைத்தாள் வரைதான் நியாயமாகத் திருத்தமுடியும். ஆனால் அரசுத்தேர்வு மையங்களிலேயே எழுபது முதல் நூறுவரை திருத்தச் சொல்லுகிறார்கள். திருத்தும் ஆசிரியர் படிக்காமலே எல்லாவற்றிற்கும் நாற்பது, நாற்பது, நாற்பது என்றே பெரும்பாலும் மதிப்பெண் அளித்துச் செல்கிறார். இந்தத் திருத்தும் நாடகத்தில்தான் நான் 1100 வாங்கினேன், நான் முதல் இடம் பெற்றேன், நான் 1150 வாங்கினேன் என்று பிரதாபம் வேறு.

அரசு பள்ளிகள் மேல் முற்றிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு பள்ளிகளை விட மோசமாக நடத்தப்படுகின்ற நிறுவனங்களில் குழந்தையை சேர்ப்பதற்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று கட்டணம் தரத் தயாராக இருக்கிறார்கள். இது நமது மக்களின் மனக்கோளாறு.

கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது. இன்றைய கல்வியின் ‘தாதா’க்கள் (இதுதான் சரியான சொல்-இதை நாகரிகமாக கல்வித் தந்தை, தாளாளர் என்று சொல்லிக்கொள்வார்கள்) எல்லாம் கள்ளச்சாராய வியாபாரிகளாகவோ, கருப்பு சந்தைக்காரர்களாகவோ, கள்ளக்கடத்தல் ரவுடிகளாகவோ, கட்சிக்கு விலை போய் மலிவாக நிலங்களை வளைத்துப்போட்டவர்களாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உயர்ந்த மதிப்புகள் பற்றியோ உயர்ந்த வாழ்க்கை பற்றியோ ஒன்றும் தெரியாது. எப்படியாவது நிலங்களைக் கொள்ளையடித்து, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரியபெரிய கட்டிடங்களைக் காட்டி நிறைய கேபிடேஷன் தொகை வசூல் செய்வார்கள். இதைத்தவிர அந்த கட்டணம் , இந்த கட்டணம் என்று ஏராளமாக மாணவர்களிடம் பிடுங்கிக்கொண்டு முன்கூறியபடி எந்திரங்களை  உருவாக்குவார்கள். இந்த மாணவர்களுக்கு நம் சமூக அமைப்பு, பொருளாதாரம், கிராமப்புற வாழ்க்கை முறைகள், கலாச்சாரம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. சிறுவயதிலேயே வெளிநாட்டு கலாச்சாரத்தில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அந்நியமானவர்கள் இவர்கள்.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே-எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பல்கலைக்கழகம்-அந்தக்கால விலைவாசிப்படி இருபதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவப் படிப்புக்கு இடம் அளித்தது. அப்புறம் நான்காண்டுகள் அந்தப் பையன் படிப்பதே இல்லை. பயிற்சி மருத்துவர் ஆக இருக்கும் சமயத்தில் கட்டு போடவும் ஊசிபோடவும் ஸ்டெதாஸ்கோப்பில் துடிப்புப் பார்க்கவும் கற்றுக் கொண்டால் தீர்ந்தது. வெளிவந்த பிறகு, இருக்கவே இருக்கிறார்கள்-மருத்துவப் பிரதிநிதிகள்-தலைவலி முதலாக புற்று நோய் வரை என்ன மருந்துகள் கொடுப்பது என்று பட்டியலைக் காட்டி சாம்பிளும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு இருக்கவே இருக்கிறார்கள் பொதுமக்கள், அவர்கள் மீது மாற்றி மாற்றி மருந்துகொடுத்துச் சோதனை செய்துவிட்டால் போயிற்று. நோயாளி செத்துப்போனால், எல்லாம் கடவுள் செயல், விதி, மருத்துவர் என்ன கடவுளா-எத்தனை தப்பிப்பு சாத்தியங்கள்? அப்புறம் இருக்கவே இருக்கின்றன, இன்றோ, மருத்துவத்தை விலைபேசும் பெரிய பெரிய மருத்துவமனைகள். நீங்கள் சாதாரணத் தலைவலி என்று போனாலும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவச் சோதனைகள் நடத்திவிடுவார்கள்.

நமது மருத்துவக் கல்லூரிகளில் விடுதிகளில் போய்ப்பார்த்தால் டாக்டர்கள்மீது உள்ள நம்பிக்கை முற்றிலும் போய்விடும். குடித்துவிட்டு, போதைமருந்து ஏற்றிக் கொண்டு உருண்டு கிடப்பவர்கள் சிலர். பெண்களோடு சுற்றுபவர்கள்…எல்லோருமே இப்படியா என்று தயவு செய்து உருப்படாத கேள்வி கேட்காதீர்கள். இப்படிப்பட்ட கேள்விகேட்டுத்தான் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை ஒன்றுமே செய்ய இயலாமல்போய் இன்றைக்கு ஊழல் என்றால் பதினைந்து லட்சம்கோடி, இருபத்தைந்து லட்சம் கோடி என்றுபோய் நிற்கிறது.

ஒரு ஊரில் இப்போது இருபது பொறியியல் கல்லூரி இருந்தால், நான்கு கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. இப்போது பி.ஏ. பொருளாதாரம், வரலாறு போன்ற படிப்புகள் காணாமல் போய்விட்டதைப்போல, எதிர்காலத்தில் கலைக் கல்லூரிகளே காணாமல் போய்விடலாம். கலைக்கல்லூரிகளும்-பெயர்தான் அப்படி-எல்லாம் கணிப்பொறித்துறையிலும் எம்.பி.ஏ. படிப்பிலும்தான் மாணவர் களை ஈர்க்கின்றன. நமது பல்கலைக்கழகங்கள், அவற்றில் அளிக்கப்படும் மேல்படிப்புகள், பிஎச்.டி. ஆராய்ச்சிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத் தனிக்கட்டுரையே எழுதவேண்டும். அவற்றைப்பற்றிப் பிறகு பார்க்கலாம்.

இந்த மாதிரிக் கல்வி முறையில், சமூக அக்கறை, நமது கலாச்சாரத்தைப் பற்றிய அக்கறை, தாய்மொழி மீதான அக்கறை இவற்றிற்கெல்லாம் எங்கே இடம் இருக்கிறது?  ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் கம்பெனிப் பொறியியலாளருக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, உலகம் வெப்பமாதல் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருக்கு அது தேவையுமில்லை. போனவருடத்தைவிட இந்த வருடம் வெப்பம் கூடுதலா? வீட்டில் குளிர்சாதன போட்டுக்கொள். அவ்வளவுதான் அவருக்குத் தெரியும்.

முற்றிலும் வாழ்க்கை வணிகமயமாக்கப்பட்டு வீணாகப்போனது ஓரிரண்டு தலைமுறைகளின் வரலாறு.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 5

11619999906_32821ccb1c
கேள்வி : அந்தக் காலத்தில் பொதுமக்கள், புலவர், அரசர் எல்லாம் ஒரே தமிழில்தான் பேசினார்களா? அருண்குமார் – நாமக்கல்

பதில்:சாத்தியமே இல்லை. எந்தக் காலத்திலும் பொதுமக்களின் பேச்சுமொழி வேறு, புலவர்களின் செம்மையான இலக்கிய மொழி வேறு. அரசர்கள் புலவர்களிடம் உரையாடும்போது செந்தமிழில்தான் பேசவேண்டும். மக்களிடம் குறைகேட்கும் போது அவர்கள் மொழியிலேயே பேசியாக வேண்டும்.
சமஸ்கிருதத்தில் மிருச்சகடிகம் (மண்ணால் செய்யப்பட்ட சிறிய தேர்) என்ற நாடகம் இருக்கிறது. அதில் புலவர்கள், அரசர்கள், உயர்குலத்தோர் பேசும் வசனங்களில் மட்டும் சமஸ்கிருதமும், பொதுமக்கள் பேசும் வசனங்களில் பிராகி ருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதான் இயல்பான நிலை.
பொதுமக்களின் மொழிதான் உண்மையான மொழி. இயக்கமுள்ள மொழி. மாறு கின்ற மொழி. புலவர்களின் மொழி செம்மொழியாக இருந்தாலும், அது காலத்தில் உறைந்துபோய்விட்ட மொழி. அதை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது. புலவர்கள்கூட வீட்டில் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் செம் மொழியிலா பேசமுடியும்? அப்போது இயல்பான பேச்சுத் தமிழைத்தான் பயன் படுத்தியிருப்பார்கள்.

கேள்வி :தமிழ் இலக்கியம் பெரும்பாலும் சமணத்தைத் தழுவி உள்ளதே? நாகராஜன் – சென்னை

பதில்: அப்படியில்லை. தமிழில் மிகுதியான நூல்களுக்குரிய பெருமை சைவத்திற்குத் தான் உண்டு. அடுத்த நிலையில்தான் சமணம் வரும். மூன்றாம் நிலையில் வைணவமும், நான்காவதாக பௌத்தமும் வரும். அண்மைக்காலத்தில் கிறித்துவ  நூல்கள் மிகுதியாக இயற்றப்பட்டுள்ளன. எனவே இப்போது மூன்றாம் நிலையில் கிறித்துவ நூல்களே இருந்தாலும் இருக்கலாம். ஏனோ தெரியவில்லை, முஸ்லிம்கள்தான் இதில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்படி நோக்கும்போது இதில் அண்மைக்கால இலக்கியத்தைச் சேர்க்கக்கூடாது. ஏனென் றால் அண்மைக்கால-நவீன இலக்கியத்தின் தன்மை சமயம் சார்ந்தது அல்ல.

சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது, வடநாட்டிலிருந்து வந்த வைதிகக் கருத்துகளும், சமணசமயமும் ஒரே சமயத்தில் தமிழ்நாட்டில் பரவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சமணப்புலவர்கள் பலர்- உலோச்சனார் போன்றவர்கள் சங்க இலக்கியத்தில் கவிதை படைத்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில்

-சங்க காலத்து நூல்களுக்குச் சமயம் இல்லை, கற்பிக்க இயலாது.

-பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மை (திருக்குறள் உட்பட) சமணச் சார்புடையவை.

-தொல்காப்பியம் சமண நூல்.

-ஐம்பெரும் காப்பியங்கள், சமண-பௌத்த நூல்கள் கலந்தவை. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண நு£ல்கள். மணிமேகலை, குண்டல கேசி  இரண்டும் பௌத்த நூல்கள்.

ஆபரணங்களைப் பெயர்களாகக் கொண்ட முதல் தொகுப்பான இந்தப் பழந்தமிழ்க் காப்பியங்களில் எவையுமே சைவ, வைணவ நூலாக இல்லை என்பதை நோக்கவேண்டும்.

மிகுதியான இலக்கண நூல்களும், நிகண்டு நூல்களும் சமணப்புலவர்கள் செய்தவையே. தமிழில் தொடக்ககாலத்தில் மிகுந்த பங்களிப்புச் செய்தவர்கள் சமணர்கள். ஆனால் வைதிக சமயங்களால் சமணம் அழிந்தபிறகு,  அவர்கள் பங்களிப்பு குறைந்துபோயிற்று. ஆனாலும் நூல்களைப் படியெடுத்து வாழ்க்கை வைபவங்களில் தருகின்ற தங்கள் பழக்கம் மூலமாக அவர்கள் சிலப்பதிகாரம் போன்ற நூல்களைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

கேள்வி : தமிழகத்தில் சமணம் எப்பொழுது பரவியது? மீனாட்சி ராஜன் – செய்யாறு

பதில்:முன் கேள்வியிலேயே ஓரளவு பதில் இருக்கிறது. சமணமதத்தை நிறுவிய மகாவீரர் கி.மு. 599இல் பிறந்து கி.மு.527இல் மறைந்ததாகச் சொல்கிறார்கள்-அதாவது கி.மு. ஆறாம் நு£ற்றாண்டு. ஏற்கெனவே ஒரு கேள்வியில் நான் குறிப் பிட்டிருந்ததுபோல, கி.மு. 1500வாக்கில் வடநாட்டுக்கு வந்த ஆரியர்களும் மெதுவாகப் பரவி தெற்கில் வந்துசேர ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே அவர்களில் ஒருபகுதியினர் ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் தமிழகத்துக்கு வந்திருப்பார்கள். சமணர்களும் அவர்களோடு சேர்ந்தே தமிழகத்துக்கு வந்திருக் கலாம். அல்லது ஒரு 25 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் வந்திருக்கலாம். எப்படியானாலும் சமணர்கள் கி.மு. நான்காம் நு£ற்றாண்டு அளவிலேனும் (அதாவது கடைச்சங்கத் தொடக்கக்காலம்) தமிழகத்திற்கு வந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்போதிருந்து சமணம் தமிழகத்தில் பரவியது. ஆனால் வைதிக சமயமோ, சமணமோ எதுவாயினும் அவ்வளவு வேகமாகச் சங்க காலத்தில் பரவவில்லை. ஏறத்தாழ கிறித்துவுக்கு ஓரிரு நு£ற்றாண்டுகள் கழித்துத்தான் இவை வேகமாகப் பரவவும் செய்தன. தங்களுக்குள் போரிடவும் தொடங்கின.

கேள்வி : சங்க இலக்கியத்தில் தலைவன் பரத்தை வீட்டிற்குச் செல்வது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழன் அன்றிலிருந்தே ஆணுக்கான தனிமனித ஒழுக்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையா? – முருகேசன் – மாயவரம்

பதில்: உண்மை அதுதான். உலகத்தில் எந்த நாட்டிலுமே தொடக்கத்தில் தாய்வழிச் சமூகம் என்பது இருந்ததாகச் சொல்கிறார்கள். இதற்குப் பல ஆதாரங்களும் உண்டு. தாய்வழிச் சமூகம் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூக மாக மாறியது. தந்தைவழிச் சமூகம் என்பது பெண்களை அடக்கியாளுகின்ற ஆண்தலைமைச் சமூகம்தான்.

புராதனப் பொதுவுடைமைச் சமூகம்தான் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்க முடியும். எப்போது சொத்துடைமையும் அடிமை முறையும் உருவானதோ, அப்போதே பெண்களுக்குச் சனியன் பிடித்துவிட்டது. தன் சொத்தைத் தன் மக்களுக்கே தரவேண்டும் என்பதற்காகக் கற்பு என்ற கருத்து உண்டாக்கப்பட்டது. அதன்வாயி£கப் பெண் அடிமையாக்கப் பட்டாள். இதைப்பற்றிப் பெரியார், பெண் ஏன் அடிமையானாள் என்று ஒரு சிறிய நல்ல புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார். காலம் செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் இறுகின.

பரத்தையர் ஒழுக்கத்திற்கு ஒருவித சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. தந்தைவழிச் சமூகம் உருவான காலத்திலிருந்தே எல்லா நாடுகளிலும் பரத்தைமை இருந்துதான் வருகிறது. அக்காலச் சமூகம் போர்ச்சமூகம். ஆண்கள் எல்லாம் போருக்குச் செல்வார்கள். செல்பவர்களில் எத்தனை சதவீதம் திரும்பிவரு வார்கள் என்று தெரியாது. முழுதும் அழிந்துபோகவும் கூடும். எனவே ஆண்க ளின் எண்ணிக்கை குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது, அதனால், பரத்தைமை உருவானது என்று சிலர் சொல்கிறார்கள்.

பழங்காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனுக்கும் அவன் வீரர்களுக்கும் முதல் வேலை எதிரிநாட்டுப் பெண்களைக் கைப்பற்றுவதுதான். பல சமயங்களில் அவர்களை அரண்மனை போன்ற இடங்களில் பணிப்பெண்களாக வும் அடிமைகளாகவும் அமர்த்திக்கொள்வார்கள். வடநாட்டில் பர்தா முறை தோன்றியதற்கு முஸ்லீம்களின் படையெடுப்பு முக்கியக் காரணம்.

சங்க இலக்கியங்கள் ஆணுக்குத் தனி உரிமையே தருகின்றன. அவன்தான் குடும்பத் தலைவன் என்பதால் தலைவி அவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண் டும். அவள் செய்யக்கூடியதெல்லாம் கொஞ்சம் மறுப்பது, கொஞ்சம் ஊடல் கொள்வது அவ்வளவுதான்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 4

aaa959
கேள்வி: சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாய் விளங்கும் ஆன்மிக வாதிகள் சொல்லும் இராமர்பாலம் பற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு பாலம் அங்கு இருக்குமாயின் குமரிக்கண்டம் கடலடியில் மறைந்த பிறகு கட்டப்பட்டிருக்குமா? விளக்கம் தேவை. (இன்றைய தலைமுறையேனும் தெளிவுறப் புரிந்துகொள்ளவேண்டும்) சுவாமிநாதன் திருமுல்லைவாயில்

பதில்
: நமக்கு அறிவியல் மனப்பான்மை முதலில் தேவை. கட்டுக்கதைகளிலிருந்து மெய்ம்மைகளை வேறுபடுத்தி அறிய இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசியல்வாதிகள், வேண்டுமென்றே இதில் குட்டைகுழப்புகிறார்கள்.

இராமன், அவன் வாழ்ந்தது, பாலம் கட்டியது எல்லாம் கட்டுக்கதை. ஒவ்வொரு மதத்திற்கும் கட்டுக்கதைகள் உண்டு. இராமன் என்பவன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டுக்கொண்டுவந்தான் என்பது இந்துமதத்தின் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதைகளுக்கும் மெய்ம்மைக ளுக்கும் சம்பந்தமில்லை. (உதாரணமாக, சிந்தித்துப்பாருங்கள், இராமனின் தந்தை தசரதன் பல லட்சம் ஆண்டுகள் பத்தாயிரக்கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தானாம். இது சாத்தியமா?  உண்மையில் நடக்கக்கூடியதா? அவன் தேவர்களுக்காக சம்பராசுரன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றானாம்…)

குமரிக்கண்ட நிகழ்வு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போது மனித இனம் தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறி. எனவே குமரிக்கண்டம் போன்றவற்றை கட்டுக்கதைகளோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கடற்பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாகவும் சில ஆழமின்றியும் தானாகவே அமைந்திருக்கின்றன. பூமியில் மேடு பள்ளங்கள் இல்லையா? மலைகள், பள்ளத் தாக்குகள் இல்லையா? அப்படித்தான் கடலின் பரப்பிலும். அவற்றில் ஆழங் குறைந்த பகுதியைப் புராணங்களோடு இணைத்து அது ஆதாம் கட்டிய பாலம், இராமன் கட்டிய பாலம் என்று கட்டுக்கதை ஆக்கிவிடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள வள்ளிமலைஎன்ற ஊரில் இன்னும் பல இடங்களில்-சற்றே பாறைகள் மஞ்சளாக இருந்தால் வள்ளியம்மை முருகப்பெருமானோடு மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்று கதை கட்டியிருப்பார்கள். அது போன்றதுதான் இதுவும்.

சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பது அறிவியல் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு அது என்ன எதிர்விளைவு ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டியது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே சேது சமுத்திரத் திட்டமும் உடன் பாடில்லை. மனிதன் இயற்கையை ஒட்டி, அதனோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமே தவிர இயற்கையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சிசெய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சுனாமிகள்தான் மிஞ்சும்.

கேள்வி : மொழிக்கலப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஏற்படுவதாக இருந்தாலும், தமிழில் மட்டும் அது விரைவாகவும் திட்டமிட்டும் நடப்பதாகப் படுகிறதே, மொழிக்கலப்பைத் தவிர்க்க வழி என்ன? – கண்ணன், சேலம்

மொழிக்கலப்பு எல்லா மொழிகளிலும் நிகழ்வது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படியானால் தமிழில் மட்டும் அது எப்படி நடவாமல் போகும்? எங்கெல்லாம் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஒன்றுசேர்ந்து பழகவேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மொழிகள் இரண்டிலுமே கலப்பு ஏற்படும்.

தமிழில் மொழிக்கலப்பு விரைவாக நடக்கிறது என்பது யூகம். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் திட்டமிட்டு நடக்கிறது என்று நமக்குத் தோன்றுவதற்குப் பின்வரும் காரணங்கள் அமைகின்றன.

இந்தியாவில், சமசுகிருதக் கலப்பில்லாமல் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றுதான். பிற திராவிட மொழிகளும்கூட சமசுகிருதக் கலப்பினை வெவ்வேறு அளவில் ஏற்றுக்கொண்டு அது இயற்கை என்று கருதிவிட்டன. மொழிக்கலப்பு இயற்கை என்பதை ஏற்காதவர்கள் தமிழ்பேசுபவர்களில் மட்டுமே இருக்கிறார்கள். சமசுகிருத, இந்தி, வடநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாம் தமிழில் வடமொழிக்கலப்பு கூடாது என்கிறோம். இது அரசியல் பிரச்சினை. மொழிசார்ந்த பிரச்சினை அல்ல. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை இருந்து இந்தியின் ஆதிக்கமோ, சமசுகிருத ஆதிக்கமோ இல்லை என்றால் நாம் மொழிக்கலப்பைப் பெரும்பாலும் எதிர்க்கமாட்டோம்.

ஏறத்தாழ கி.பி.1310 முதலாகத் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், வடநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் கள், பிறகு கடைசியாக ஐரோப்பியர்கள் ஆகியவர்களால் ஆளப்பட்டது. சுதந்திர மடைந்த பிறகும் நாம் சுதந்திரமாக இல்லை. ஆதிக்கத்தில் பிறமொழியினர் இருக்கும்போது, நமது மொழி எப்படி வளரும்? அவர்கள் மொழி நமது மொழி யுடன் அதிகமாகக் கலக்கும் சாத்தியமே அதிகம்.

தமிழ்நாட்டில் பிறமொழியினர் ஆண்டதால் தமிழ்நாடு முழுவதும் பிறமொழி யினர் தமிழர்களுடன் கலந்து வாழ்வதைப் பார்க்கலாம். மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் எல்லா கிராமங்களிலும் உள்ளனர். நாயுடுகள், நாயர்கள், ஒக்கலிகர்கள் என இவர்கள் பட்டியல் நீளும். ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ பிற மாநிலங்களிலோ இப் படிப்பட்ட பிரச்சினை இல்லை. எல்லையில் மட்டுமே ஓரளவு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் ரெட்டியாரோ நாயுடுவோ இல்லாத கிராமம் ஏது? அவர்கள் பல தலைமுறைகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தங்கள் மொழி யையே பேசுகிறார்கள். இவர்களைத் தமிழர்கள் என்பதா, அயலார்கள் என்பதா? எங்கள் கிராமத்தில்கூட நிலையாக வாழ்ந்து சொந்த நிலங்களில் விவசாயம் செய்துவருபவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என்றே சொல்லுகிறார்கள். வீட்டில் அதில்தான் பேசுகிறார்கள். வடமாவட்டங்களின் முஸ்லிம்களும் (சென்னை, ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி,…) அப்படித்தான். அவர்கள் வீட்டில் உருதுதான் பேசுகிறார்கள். வெளியில் வந்தால் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள்.

அண்மைக்காலத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அதன் கலப்பு மிகுதியாகிறது. செயற்கையான கலப்பு என்று நாம் சொல்லக்கூடியது ஆங்கிலக் கலப்பைத்தான். ஆங்கிலத்தைக் கலந்து பேசாவிட்டால் அது சரியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அந்த மோகம் இருக்கிறது. அதற்கு மேல், கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்து வளர்ச்சி. தொலைக் காட்சிகள் திட்டமிட்டே மொழிக்கலப்பை வளர்க்கின்றன. அவர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். 90 சதவீதம் கிராமப்புறப் பெண்கள் பார்க்கக்கூடிய சமையல் நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்து நடத்துகிறார்கள். குழம்பு, சோறு, எல்லாம் மறைந்து கிரேவி, நான், புடிங் போன்ற சொற்கள் சமையல் நிகழ்ச்சிக்குள் வந்துவிட்டன. காய்கறிகளின் பெயரைக்கூட அவர்கள் தமிழில் சொல்வதில்லை. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் அப்படித்தான். பிறமொழிகளில் இவ்வளவு மோசமான நிலை இல்லை.

செயற்கையான மொழிக்கலப்பை மட்டுமே நாம் தவிர்க்கவேண்டும். எனவே ஆங்கிலக்கலப்பையும், வடநாட்டுப் பண்பாடு திட்டமிட்டுச் சுமத்தப்படுவதால் புகும் இந்திக்கலப்பையும் மட்டும் நாம் சற்றே தீவிரமாக நிராகரித்தால் போதுமா னது. நல்லது. தேவையானது.

கேள்வி :. தமிழகம் இப்போதிருப்பதைவிட அகன்ற நிலப்பரப்பு உள்ளதாகத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதே? – முகம்மது யூசுப், துபாய்

பதில்: ஆமாம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியும், கிழக்கில்-மேற்கில் கடல்களும் தமிழகத்துக்கு அக்கால எல்லைகள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகம் என்பது தொல்காப்பியம். இப்போதிருக்கும் வங்காள விரிகுடாவும், அரேபியக் கடலும் கிழக்குக் கடல், மேற்குக் கடல் என்றே அக்காலத்தில் (குணகடல், குடகடல் என்றும்) வழங்கப்பட்டன.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். அக்காலத்தில் சாலை வசதிகள் கிடையாது. எங்கு பார்த்தாலும் காடுகள். இப்போதுபோல எல்லா நிலமும் விவசாய நிலங்களாகவோ, குடியிருப்பு மனைகளாகவோ பழங்காலத்தில் இல்லை. பொது விளக்குகள் கிடையாது. வேக மான வாகனப் போக்குவரத்து  எதுவுமே கிடையாது. மலையாள மொழி அப்போது தோன்றவில்லை. அதனால்  இன்றிருக்கும் கேரளா அப்போது சேர நாடாகவே- தமிழ்நாடாகவே இருந்தது. வடக்கிலும் வேங்கடம் வரை தமிழ் தான் இருந்தது. அதற்கும் அப்பால் வடக்கில் இருந்தவர்கள் வடுகர் (வடக்கு நாட் டவர்) என்றழைக்கப்பட்டார்கள். மேற்கிலும் மைசூர் வரை தமிழ்நாடுதான். அது எருமைநாடு என்று தமிழ் இலக்கியங்களில் வருகிறது. மைசூர் என்பது மஹிஷ + ஊர். மஹிஷம் (வடமொழி) என்றால் எருமை. எருமையூரை, மஹிஷ ஊராக மாற்றி, மைசூராக இப்போது ஆக்கிவிட்டார்கள். அதேபோல கொங்குநாடு என்பது பிற்காலப் பல்லவர்  காலத்தில் கங்க நாடாக மாறிவிட்டது. இப்படி எத்தனையோ மாற்றங்கள். இப்போதிருக்கும் மங்களூரிலிருந்து நேர் கிழக்காகத் திருப்பதி வரை ஒரு கோடு கிழியுங்கள். அதற்குத் தெற்கே உள்ளதெல்லாம் பழங் காலத் தமிழ்நாடுதான். அப்போது வடுக மொழி இருந்தது. கன்னட மொழி உருவாகவில்லை. வெம் + கால் + ஊர் = வெங்காலூர் (மேற்கத்தியச் சீமையி லிருந்து கீழே இறங்கி வந்தால் வெம்மையான காற்று வீசும் ஊர் என்று அர்த்தம்)

என்ற பெயர்தான் இப்போது பெங்களூர் ஆகியிருக்கிறது. பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பேச்சு மொழியில் அவ்வளவாக வித்தியாசம் கிடையாது. (சென்னைத் தமிழுக்கும் கோவைத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்கூடக் கிடையாது.) எழுத்து மொழிதான் வேறுபட்டுவிட்டது.

இதற்குமேல் இன்னொரு குறிப்பு: வடவேங்கடம் தென்குமரி என்பதிலுள்ள தென் குமரி-அது குமரிமுனை அல்ல, பழங்காலத்தில் குமரிக்கண்டம் இருந்தது, அதில் குமரி ஆறு ஓடியது, அந்தக் குமரி ஆற்றைத்தான் தென்குமரி என்ற சொல் குறிக்கிறது என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், அப்போதிருந்த தமிழகத்தின் பரப்பு எவ்வளவு இருக்கும்?

கேள்வி : கலிங்கத்துப் பரணி கற்பனையால் எழுதப்பட்ட இலக்கியமா? இல்லை உண்மையில் நடந்தனவற்றின் தொகுப்பா? – செந்தில் குமார், சென்னை

பதில்: கற்பனையும் உண்மையும் அற்புதமாக இணைக்கப்பட்ட ஒரு படைப்பு கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் முதல் குலோத்துங்க சோழ  அரசன், காஞ்சி புரத்தில் தன் அரண்மனையில் வந்து தங்கியிருந்து, அங்கிருந்து தன் படைத்தலைவன் கருணாகர பல்லவனைக் கலிங்கத்துக்குச் சென்று போரிட்டு வருமாறு கூறுகிறான். கருணாகர பல்லவனும், அவ்வாறே ஒரு பெரும் படையுடன் கலிங்கத்துக்குச் சென்று அப்போதிருந்த கலிங்க மன்னர்களைத் தோற்கடித்து (வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் தனித்தனி அரசர்கள் அப்போது) திறை செலுத்தச் செய்து வருகிறான். இது வரலாற்றுச் செய்தி.

கடுங்கோடை காலம். எங்கும் உணவின்றி, பேய்கள் பசியால் வாடுகின்றன. அவை தங்கள் தலைவியான காளியிடம் முறையிடுகின்றன. அவள், இப்போது கலிங்கத்தில் பெரும் போர் நடக்கிறது. அந்தப் போர்க்களத்திற்குச் சென்றால் உங்களுக்குத் தேவையான இரத்தக்கூழும் நிணமும் கிடைக்கும், உங்கள் பசி தீரும் என்று சொல்லி அவற்றை அனுப்புகிறாள். அவ்வாறே அந்தப் பேய்கள் கலிங்கப் போர்க்களத்திற்குச் சென்று உணவருந்திப் பசி தீர்ந்து காளியை வாழ்த்துகின்றன. இது சுத்தமான கற்பனைப் பகுதி.

இன்னொரு சிறிய கற்பனைப் பகுதியும் கலிங்கத்துப் பரணியில் உண்டு. போர்க்களத்திலிருந்து  திரும்பி வருகின்ற வீரர்கள் நள்ளிரவிலோ, விடியலுக்கு முன்னரோ கண்ட நேரத்தில் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். அப்போது வாயிலைத் திறக்குமாறு அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் வேண்டு கின்றனர். மனைவியர் எவ்விதம் கணவன் மார்களின் காதலுக்கு ஏங்கியிருந்தார் கள், இப்போது எவ்விதம் நடந்துகொள்கிறார்கள் என்பது கடைதிறப்பு என்ற முதற்பகுதியில் வரும் ஒரு சிற்றின்பச் சுவை மிக்க கற்பனைப் பகுதி.

ஒரு வரலாற்றுப் போரையும் ஒரு பேய்க்கதையையும் இணைப்பது எவ்வளவு வித்தியாசமான கற்பனை?

கேள்வி : சங்க இலக்கியங்களில் உள்ள தமிழ் தமிழ் மொழியா என்னும் அளவுக்கு உள்ளது. வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. அவைகள் வேறு ஏதோ மொழிக்காக தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருக்கின்றன. அந்த வார்த்தைகள்தான் அக்காலத்தில் வழக்குச் சொல்லாக இருந்தனவா? இல்லையெனில் புலவர்கள் தங்கள் பழமையை வெளிப்படுத்த அத்தகைய சிக்கலான சொற்களைக் கையாண்டுள்ளார்களா? – பாண்டியன் – ராமநாதபுரம்

பதில்: உண்மையில் தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறைவு, மிகக் குறைவு. சங்க இலக்கியம் படிக்கும்போது  நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மொழியைப் படிக்கிறீர்கள். மொழி காலத்தாலும் இடத்தாலும் வேறுபடக் கூடியதுதானே?  ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் படித்தபோது இருந்த பல வார்த்தைகள் இப்போது புழக்கத்தில் இல்லை. அப்போது இருந்த பெரியவர்களுக்கு- அவர்கள் இருந்தால்- இப்போது உள்ள தமிழ் சுத்தமாகப் புரி யாது. ஐம்பதாண்டுகளிலேயே இவ்வளவு மாற்றம் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தமொழி எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்?

உங்களுக்கு ஒரு சில மொழிகளேனும் நன்றாகத் தெரிந்தால் இந்தக் கேள்வியே எழாது. ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும்- ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமே (சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது சுத்தமாகப் புரியாது. அவ்வளவு மாற்றம். பிற எல்லா மொழிகளுமே அப்படித் தான். சமசுகிருதம் ஒன்றைத்தான் செயற்கையானதாக, உச்சரிப்பு மாறாததாக வைத்திருக்கவேண்டும் என்று “செம்மைப்படுத்தியதால்” அது மாறாததாக ஓரள வுக்கு இருக்கிறது. அதே சமசுகிருதத்தின் பேச்சுமொழி வடிவமான பிராகிருதம்-இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்தது-அபபிரம்சமாக உரு மாறி, குஜராத்தி, மராட்டி, வங்காளி, இந்தி என்பதுபோல பல மொழிகளாக மாறிவிட்டது. இவற்றோடு எல்லாம் ஒப்பிடும்போது தமிழின் மாற்றம் மிகக் குறைவு. இன்றைக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புரிகிறதே. (கேளிர் என்பது மட்டும் சற்றே கடினமான சொல்.) அல்லது செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன என்றால் புரிகிறதே. அதனால் உங்கள் கூற்று ஓரளவு உண்மை. உங்கள் பிற கேள்விகளுக்கு பதில்கள்.

1. தமிழ்ச் சொற்கள், தமிழுக்காக மட்டுமே உருவானவைதான். வேறு எந்த மொழிக்காகவும் அல்ல. இதுதான் எந்த மொழிக்குமே உள்ளது.

2. அந்தச் சொற்கள்தான் அந்தக் காலத்தில் வழக்குச் சொற்களாக இருந்தன.

3. புலவர்கள் செயற்கையான பழந்தமிழில் எழுதினால் நிற்காது. இந்தக் காலத்தில்கூடப் பெருஞ்சித்திரனார் போன்ற சிலர் அக்கால வழக்கைக் கையாண்டு கவிதை எழுதிப்பார்த்தார்கள். ஆனால் அவற்றைப் படிப்போர் இல்லை. எந்தக் காலமாக இருந்தாலும், அந்தந்தக் காலத்துப் பேச்சுமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதினால்தான் மக்கள் படிப்பார்கள்.


நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 3

c03115lb
கேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£? மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா?  செ.ராஜ்குமார் சென்னை

பதில்:
 இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ஏன் அப்படி? உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள்? தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும்? உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.

எந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது.  இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.

கேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே? தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது? சரவணன், மேட்டூர்

பதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.

சமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.

சங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.

சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.

வடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.

இந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலாம்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.

சமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.

உதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.

கேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்னஅதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன? கிருஷ்ணன், சென்னை

பதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.

1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)

2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும்? மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.

4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.

5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.

6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்களை சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.

7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.

இப்படி இன்னும் பலப்பல……

தமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள்,  இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது? (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)

அறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள்? நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது? நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன? சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது  ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.

கேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையேஅது கடினம் என்றால்வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன? செந்தில் குமார், மதுரை

பதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.

இதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.

வெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது? பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தானான/ – /தானான/

தானான/ தானான/ தானான/ தானான/

தானான/ தானான/ தான்.

என்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள்! (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).

அல்லது,

தானன / தானன / தானன/ தானன /

தானன / தானன / தானன / – / தானன /

தானன / தானன / தானன / தானன /

தானன / தானன / தான்.

தானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /

தனதம் / தனதம் / தனதம் / தனதம் /

தனதம் / தனதம் / தனம்.

இவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.

கேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும்,சித்தமருத்துவம் தமிழிலும்ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதேஇப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே? குமார், கலிபோர்னியா

பதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.

1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.

2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா? எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.

3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.

4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.

5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

வடநாட்டில்-பீகாரில் கூட கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பல கருத்துகள்  தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.